நோபல் பரிசு பெறும் 21ம் நூற்றாண்டு இந்தியர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறார். வி.எஸ்.ராமச்சந்திரன் எனும் விலியனூர். எஸ். ராமச்சந்திரன்… நரம்பியல் விஞ்ஞானி இவரது மனம் மூளை தொடர்பான கோட்பாடுகள் அந்தத்துறையின் ஐன்ஸ்டீன் எனும் மகுடத்தை அவருக்கு பெற்று வந்தன. ‘இது அனைத்தையும் விளக்கி விடுகிறது’ (This explains everything) எனும் தலைப்பில் அறிவியல் அறிஞர் ஜான் ப்ரோக்மன் தொகுத்த 150 கட்டுரைகள் கொண்ட பிரமாண்ட நூலில் இருந்து வி.எஸ்.ஆர்ரின் இந்த கட்டுரையை வழங்குகிறேன். 150 கட்டுரைகளுமே முன்னனி விஞ்ஞானிகள் அறிஞர்கள் எழுதிய பாப்புலர்-சயின்ஸ் வகை சார்ந்த கட்டுரைகளே என்றாலும் மனித மனம் உருவாகும் விதத்தை மரபணுவியலின் முக்கிய கண்டுபிடிப்புகளோடு இணைக்கும் இந்த சிறப்புக் கட்டுரை – டி.என்.ஏ பற்றிய புரிதல் நம்மை எங்கே கொண்டுசெல்லும் என்பதை ஆச்சரியங்களுடன் உள்வாங்க வைக்கிறது. அறிவியல் திருப்பு முனைகளின் வரலாற்றில் பிரமாண்டம் என எதை கருதுகிறீர்கள் என 150 வாழும் அறிஞர்களிடம் கேட்கப்பட்டது. வி.எஸ். ராமச்சந்திரனின் பதில்தான் இந்த அறிய கட்டுரை. – மொ.பெ
மரபணு…. மூளை மென்படலம் மற்றும் மனித மனம்
எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் வரலாற்றின் பிரமாண்டம் எது? மரபணு (டி.என்.ஏ) வின் கட்டமைப்பை தெளிந்தறிந்ததே அது. ஆனால் அதை என் வழியில் மறு-விவரிப்பு செய்ய விரும்புகிறேன். டி.என்.ஏ வின் கட்டமைப்பை தெளிந்தறிந்த அதே முறைப்படி நியூரான்களுக்கும் நமது மனித மன உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பும் ஒருநாள் அறிவியலால் கட்டுடைத்து தெளிவுபடுத்தப்படும். இது பெரிய அனுமானமாக இருக்கலாம். ஆனால் பரிசீலிக்க உகந்ததே என்பதை என்னால் விளக்கமுடியும்.
ஒப்புமைகளின் கூறுகளை தெளிவாக உள்வாங்கி ஆழமான தொடர்புகளை – வெற்று மேலோட்டமான புனைவுகளில் இருந்து வேறுபடுத்தி உணர்ந்து ஆராய்வது பெரும் விஞ்ஞானிகளுக்கே உண்டான சிறப்பு. பிரான்சிஸ் கிரிக்கும் ஜேம்ஸ் வாட்சனம் விதிவிலக்கல்ல. கிரிக் எச்சரித்ததுபோல உயிரியல்துறை பரிணாமவியலின் தற்செயல் நிகழ்வு தொடர்ச்சியாக மட்டுமே விளக்கப்படுவதால் –அதன் பிரமாண்ட கச்சிதத்தை இழக்கநேரிடும். அபாயம் உள்ளது. ‘கடவுள் ஒரு ஹேக்கர்’ அவர் சொன்னார் (என் சக விஞ்ஞானி டான் ஹாஃப்மனிடம்) ‘பல இளம் உயிரியலாளர்கள் எளிமையாக எதையும் விளக்கவேண்டும் எனும் ஓக்கம் ரேஸரால் தங்களது கழுத்தையே அறுத்துக்கொண்டுவிட்ட வரலாறும் உண்டு’ வில்லியம் ஓக்கம் (William Occam) பதிமூன்றாம் நூற்றாண்டில் குறிப்பிட்ட எளிமையாக்க கொள்கையைத்தான் கிரிக் இப்படி குறிப்பிடுகிறார். இருந்தும் மரபியல் சார்ந்த கிரிக்கின் அறிவியல் தீர்வு – பரிணாமவியல் போலவே உயிரியலின் நேர்த்தியான எளிய தத்துவம் ஆகும். நமது மனித மனம் குறித்தும் அதே நேர்த்தி மற்றும் எளிய தீர்வை அறிவியலால் தரமுடியுமா?
கிரிக் மற்றும் வாட்சன் இருவரும் டி.என்.ஏ மூலக்கூறின் இரட்டைச் சுருள் அமைப்பை பிரித்தெடுத்து வெளிக்கொணர்ந்தவர்கள் என்பதை யாவரும் அறிவார்கள். இதன் வடிவம் ஓர் ஏணியை முறுக்கியது போன்ற எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல் பகுதிய கட்டமைப்பு அதே போல உள்ள மற்றொன்றோடு வளைந்து முறுக்கியபடி இந்த வடிவத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதை நாம் அடைந்த வரலாறு பற்றி சிறிதளவே அறியப்பட்டுள்ளது.
முதலில் கிரிகர் மெண்டல் வழங்கிய மெண்டல் விதிகள் ஜீன்களே மரபுப்பண்புகளை சந்ததிகளுக்கு கடத்துகின்றன என ஜீன் எனும் துகள் குறித்த முதல் அனுமானத்தை வெளியிட்டது. (ஆனால் இன்றும் கூட அது மிக சரியானதொறு அனுமானமாக உள்ளது) பிறகு தாமஸ் மார்கன் வருகிறார். அவரது பழ ஈக்கள் எக்ஸ் கதிர் வீச்சுகளுக்கு உட்படுத்தப்பட்டபோது அவை மரபுப் பிரழ்ந்தவைகளாக (Mutants) மாறுவதை நிரூபிக்கிறார். அந்த மாற்றம் அவைகளின் குரோமசோம்களில் நிகழ்வது ஊர்ஜிதமாகிறது. எனவே மரபு கடத்தல் சம்பந்தமான எல்லா செயல்வேகமும் நடப்பது குரோம்சோம்களுக்கு உள்ளேதான். குரோமோசோம் ஹிஸ்டோன்களையும் டி.என்.ஏக்களையும் உள்ளடக்கியது. இசுட்டோன் அல்லது ஹிஸ்டோன் என்பது டி.என்.ஏவை சுருள்சுருளாக சுற்றி அதை குரோமோசோமாக்கும் ஒருவகை புரதம்.
1928 லேயே பிரித்தானிய நுண்ணுயிரியல் அறிஞர் பிரட் கிரிபித் ஆபத்தற்றவகை பாக்டீரியா, வீரியமிக்க வகை நுண்ணுயிரியால் குறைவெப்பத்தில் அடைக்காக்கப்பட்டு பிறக்கவைக்கப்படும்போது வீரிய உயிரியாகவே மாறிவிடுகிறது. என்பதை நிரூபித்தார். இது ஒரு பன்றிக்குட்டி ஆட்டுக்குட்டி உள்ள அறைக்குள் நுழைந்து இரண்டு ஆட்டுக்குட்டிகள் வெளிவருவதற்கு சமமான ஆச்சரியம் ஆகும். பிறகு இப்படி நடப்பதற்கு டி.என்.ஏ மாற்றமே காரணம் என ஆஸ்வால்டு அவரி நிரூபிக்கிறார்.
உயிரியலில் அமைப்பாக்கம் குறித்த அறிவு அவ்வபோது செயலாக்கம் குறித்த அறிவாக விரிவடைவது வழக்கம்- ஒருவர் மருத்துவ கண்டுபிடிப்புகளின் வரலாறு கடந்து எதையுமே உற்றுநோக்க அவசியமில்லை. அவ்வளவு விரிவாக அங்கே இந்த விஷயம் நடந்துவருகிறது.
கிரிபித் மற்றும் அவரியின் முடிவுகளால் ஈர்க்கப்பட்ட கிரிக்கும் வாட்சனும், மரபுப்பண்பு எனும் புதிரின் விடை டி.என்.ஏ கட்டமைப்பை புரிந்து உணர்தலில்தான் உள்ளது. என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஒருமை கவனக்குவிப்பு அத்திவாசியமானதாக இருந்தது. மூளை இயங்கும் விதம் குறித்தும் அதே நோக்குதல் தேவையாக இருக்கலாம்.
கிரிக் மற்றும் வாட்சன் இருவரும் டி.என்.ஏவின் கட்டமைப்பை கண்டுபிடிப்பதோடு விடவில்லை அதன் முக்கியத்துவத்தையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்கள். மூலக்கூற்று இழைகளுக்கு இடையிலான நிரப்புத்தன்மைக்கும், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான நிரப்புத்தன்மைக்கும் இடையேயான ஒப்புமைகளை அவர்களால் கூர்ந்தாய்வுக்கு உட்படுத்த முடிந்தது. டி.என்.ஏ என்பது என்ன? நமது செல்களின் குரோம்சோம்களில் சுற்றி சுற்றி உள்ளே வைக்கப்பட்டுள்ள சந்ததிக்கான மரபுவழி தகவல்திரட்டு.
இது ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid ) என்று விவரிக்கப்படுகிறது. ஒரு உயிரியின் அமைப்பு வாழ்முறை மற்றும் இன விருத்தியை நிர்ணயிக்கும் மரபியல் சார் தகவல்களை கொண்டது கரு அமிலம். உயிரினங்களின் உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏவில் அடங்கி உள்ளது. உங்களை அனிச்சைமுறையில் சுவாசிக்கவைப்பதும் அதுவே. ‘சிந்திக்க வைப்பதும் அதுவே’ இனப்பெருக்கத்தின் மூலம் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருக்கம் அடைந்து சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. அவை முழுக்கவே தகவல் அல்ல. டி.என். ஏவின் மரபுப்பண்புகளை கடத்தும் பகுதி மரபணு எனப்படும். மற்ற விஷயங்களும் உண்டு. கட்டமைப்பு, தகவல் பயன்பாட்டை ஒழுங்கமைத்தல் என பங்கெடுக்கும் பகுதிகள் அவை.
ஓர் ஏணியை முறுக்கியது போன்ற இரட்டை சுருள் வடிவத்தை கண்டுபிடித்ததோடு அவர்கள் நிறுத்தவில்லை. நியூக்ளியோடைட்களை அவர்கள் விளக்கினார்கள். அடனைன் (A) தைமீன்(T)சைட்டோசைன்(C) மற்றும் குவானின்(G) என்ற நான்கு அடித்தள தாங்கிகள் (Bases) இவை பாஸ்பேட்டால் இணைக்கப்படுகின்றன. ஆதார இழையில் ஒவ்வொரு டி.என்.ஏ மூலக்கூறும் ஒரு லட்சம் முதல் பத்துலட்சம் வரையிலான எண்ணிக்கையில் அணுக்களால் ஆனது. டி.என்.ஏவில் உள்ள புரியிடைத்தூரம் நேனோ அளவுக்கொண்டதாய் இருப்பினும் ஒரு மில்லியன் நியுக்ளியோடைட்களை கொண்டுள்ள பல் பகுதியாக உள்ளது. மனித குரோம்சோம்களில் முதலாவது மட்டுமே 220 மில்லியன் இணைத்தாங்கி (base pairs) களால் ஆனது.
பன்றி பன்றிகளையே ஈணுவதற்கும் அவை ஆடுகளை பிரசிவிக்காமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்பதை இந்த இணைத்தாங்கி இழைகளைக் கொண்டு அவர்கள் விளக்கினார்கள். அந்தக் கணத்தில் நவீன உயிரியியல் பிறந்தது. அதே போலவே கச்சிதமான இயைபுபடுத்தல்கள் மூளையின் கட்டமைப்பிற்கும் மனதின் செயல்பாடுகளுக்கும் இடையேயும் நமது உள்ளத்தின் உருவாக்கத்திற்கும் நியூரான்களுக்கும் இடையேயும் உள்ளது.(நான் இருப்பதைதான் இங்கே குறிப்பிடுகிறேன் ஏனெனில் ‘புதிய புதிர்வாதிகள்‘ என தங்களை அழைத்துக்கொள்ளும் தத்துவவாதிகள் சிலர் இதற்கு நேர் எதிராக அதை கருதுகிறார்கள்.)
மரபியல் வெற்றி வாகை சூடியபிறகு, கிரிக், உயிரியலின் இரண்டாவது பெரும் புதிர் என்று அழைக்கப்படும் ஒன்றின் மீது தன் கவனத்தை திருப்பினார். அதுவே சுய உணர்வு அல்லது உள்ளம் என்பதன் உருவாக்கம் . நிறையபேர் சந்தேகப்பட்டார்கள். நம்பவும் அவர்கள் தயாராக இல்லை. இங்கே லா-ஜோலா நகரின் சால்க் கல்வியுகத்தில் மனித மனம் குறித்து கிரிக் நடத்திய கருத்தரங்க ஆய்வுரை ஒன்றிற்கு நேரில் சென்ற அனுபவம் உண்டு. பேச்சை தொடங்கிய சில விநாடிகளில் ஒருவர் எழுந்து ‘ஆனால் திருவாளர் கிரிக் அவர்களே நீங்கள் முதலில் உள்ளம் என்பதற்கான அறிவியல் – வரையறையை விவரிக்காமல் இந்த விஷயத்திற்குள் நுழையலாமா?’ என கேட்டார். கிரிக் சொன்ன பதில் மறக்கமுடியாத ஒன்று.
கிரிக் சொன்னார்.‘நண்பரே ஒன்றை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உயிரியலின் வரலாற்றில் இப்படி நாம் உட்கார்ந்து உயிர்வாழ்வது என்றால் என்ன என்பதற்கான வரையரை ஒன்றை இதுவரை விவாதிக்கவே இல்லை…. நாங்கள் இரட்டை சுருள் அமைப்பை கண்டுபிடித்தோம்.. ஆனால் அதன் ‘உட்பொருள்’ குறித்த விஷயங்களை எல்லாம் தத்துவ மகான்களான உங்களிடம் விட்டுவிடுகிறோம்’
என்னைப்பொறுத்தவரை கிரிக் மனம் – உணர்வு குறித்த பிரச்சனையை (அது எந்த அர்த்தத்தை கொடுத்தாலும்) தீர்த்து விடுவதில் வெற்றிபெற்றுவிடவில்லைதான். ஆனால் அவர் மிகச்சரியான திசையில் பயணித்தார். அவரை பொறுத்தவரை தன் முதல் வெற்றிமூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டவர். அதாவது உயிரியல் நிரப்புலகில் கட்டமைப்பு குறித்த புரிதலை-செயல்பாடு குறித்த புரிதலோடு ஒப்புமைகள் வழியே அடைந்துகாட்டியவர் அவர். அதே கட்டமைப்பு –செயல்பாடு ஒப்புமையை –மனம் சார்ந்த விஷயத்திலும் அவர் கடைபிடித்தது ஒன்றும் ஆச்சரியமல்ல. அவரும் அவரது புதிய சகாவான கிரிஸ்டாஃப் கோச்சும் மன உருவாக்கத்தை கட்டுடைக்க அதே போலவே யாரது கவனமும் பெறாத தெளிவற்றிருந்த மூளை மென்படலத்தின் மீது கவனத்தை குவித்தனர்.
மூளை மென்படலம் என்பது மூளைக்கோளங்களில் உள்ள இன்சுலார் புறணி எனும் சாம்பல்நிற பகுதியின் மேலுள்ள மென்படலம் ஆகும்.- இது மூளையின் ஒவ்வொரு அறை கோளத்திற்கும் ஒன்று உண்டு. திசுத்துயரியல்படி ஏனைய மூளை உறுப்புகளைவிட மாறான தன்மை கொண்ட பகுதி இது.மற்ற எல்லா மூளைப்பகுதிகளும் விதவிதமாக சிமிக்கைகளை பெற்று அவற்றை முறைப்படுத்தி ஏனைய சிறு பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகொண்டிருக்கும் போது இந்த மென்படலம் ஏறக்குறைய நேர்எதிராக இயக்கப்புறணி முதல் உணர்புறணி வரை அனைத்து புறணிகளோடும் இணைக்கப்பட்டுள்ள படலம் ஆகும். இதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு இவற்றை சற்றே ஒருங்கமைத்து ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், தகவல்கள் மென்படலம் வழியே அலைகளாக கடந்துசெல்லும் போது அதன் நியூரான்கள் என்ன செய்கின்றன என்பது மிக அழகிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த –நமக்கான உள்ளீடுகளை தரமுடியும்.
மனம் –உள்ளுணர்வு சார்ந்த விஷயத்திற்கு இது எப்படி தொடர்புடையதாகும். தத்துவார்த்த பகட்டுவாதங்களை புரந்தள்ளிவிட்டு கிரிக் மற்றும் கோச் இருவரும் தங்களது அப்பாவித்தனமான எளிய ஆர்வத்தோடு இந்த விஷயத்திற்குள் நுழைந்தனர். உள்ளுணர்வு அல்லது மனம் என்பதும் மனித சுயம்(தன் உணர்வு)என்பதும் பலஅடிப்படைகளை கொண்டவை. காலநீட்டிப்பு, சுயசார்பு, சுதந்திர எண்ணம், மறுசுழல் எண்ணமுறை அல்லது சுய-சிந்தனை மற்றும் பல. ஆனால் இவை தனித்தனியானவையாக இருப்பினும் கோர்வைத்தன்மை மிக்கவையாக உள்ளன. பலதரப்பட்ட வேற்றுமைமிக்க உணர்வுகளை நீங்கள் அடுத்தடுத்து அடைகிறீர்கள். எண்ணங்கள், விருப்ப செயல்பாடுகள், நினைவுப்பதிவுகள் எல்லாமே ஒரு கோர்வையின் தொடர்ச்சியாக மனக்கட்டுமானமாக உருவாகிறது. ஒரு பூவின் இதழ்கள் பூ அல்ல என்பதுபோல இது. நம் காலத்தின் தொடர்ச்சி ஆனால் மனம் ‘இப்போது இங்கே’ என நிகழ்காலத்தை தழுவுகிறது. அதை நாம் உணர்வது கூட கிடையாது மன ஓட்டத்தின் இந்த அம்சத்தின் மீது நாம் சந்தேகப்படுவதும் இல்லை. அது அனிச்சையாக நடந்துவிடுகிறது.
ஒருங்கிணைந்த அல்லது கோர்வையாக உணர்ந்து தொடர்வது என்பதே மனித மன உருவாக்கத்தின் அடிப்படை இதோ மூளையின் ஒரு அமைப்பு எல்லா ஏனைய மூளை அமைப்புகளோடும் தொடர் – இணைப்பாகி சமிக்கைகள் கட்டளைகளை பெற்று அனுப்பியும் நடக்கும் பணிகளை ஒரு கோர்வையாக்கி ஒருங்கிணைக்கிறது. அதன் இணைப்பாக்கம் வலதுமேல் கதுப்பு (Parietal lobe) வரை உள்ளது. வலது மேல்கதுப்பு என்பது பரந்துப்பட்ட எண்ணங்களின் கூடுகை நடக்கும் இடமாகும். இந்த வலது மேல்கதுப்பு முதல் முன்புற சின்குலேட் புறணி வரை மென்படலம் படர்ந்துள்ளதை காணலாம். முன்புற சின்குலேட் என்கிற மூளையின் பகுதிதான் நமது தன்னிச்சையான சுதந்திர மன செயல்பாடுகளுக்கு (Free will)காரணம்.
எனவே மூளை மென்படலம் அனைத்தையும் உடற்கூறியல் முறைப்படி ஒன்றாக்கி கோர்வையாக குவிக்கிறது. அதையே நமது உள் உணர்வு அல்லது மனம், உளவியல் ரீதியில் செய்கிறது. கிரிக் மற்றும் கோச் இருவரும் இணைந்து இது தற்செயலான விஷயம் எனக் கருதவில்லை. மூளை மென்படலம் (Clanstrum) தான் மனித மனம் உருவாக்கத்தின் மையம். இது கார்டீசிய இரட்டைத்தன்மை எனும் தத்துவவாதிகளின் முத்திரையாக அன்றி –மனித மனம் எனும் இசைக்குழுவின் நடத்துநர்போல செயல்படுவதே யதார்த்தம். இதுபோன்ற குழந்தைத்தனமான புரிதல்களே பெரும்பாலும் பெரிய கண்டுபிடிப்புகளாக பிறகு உருவெடுக்கின்றன.
இதுபோன்ற ஒப்புமைகளே தீவிர அறிவியல் அல்ல என்பது உண்மைதான் ஆனால் ஒரு ஆய்வின் தொடக்கமாக இதை நாம் பயன்படுத்தமுடியும். கிரிக் மற்றும் கோச்சின் இந்த யோசனை மிகவும் நேர்த்தியானது. அது சரியாக இருக்குமேயானால் அவர்கள் உயிரியலின் மிக பிரமாண்ட புதிர் ஒன்றிற்கு விடை கண்டுவிட்டார்கள் என்றே பொருள். அது தவறாக இருப்பினும் உயிரியல் நரம்பியல் எனத்தேடிவரும் மாணவர்கள் அவர்களது வழியை பின்பற்றிட அது உதவும். கிரிக் சொல்வது சரியே என பலமுறை நிரூபணம் ஆகி இருப்பதால் இதை நாம் புறக்கணிக்கவே முடியாது.
2004 ம் ஆண்டு லா-ஜோலாவில் கிரிக்கை அவரது இல்லத்தில் நான் சந்தித்தேன். கலகலப்பான உரையாடலுக்குப்பிறகு அவர் என்னை வழி அனுப்ப வாசலுக்கு வந்தார்… நாங்கள் விடைபெற்றபோது அவர் என்னை நேராகப்பார்த்து கண்சிமிட்டினார்.‘மூளை மென்படலத்தின் விளைவே மனித மனம் ராமா….. மூளை மென்படலம். அங்கேதான் ரகசியம் உள்ளது’ என்றார். ஒருவாரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது.