சரித்திரம் என்பது நிகழ்காலத்திற்கு முன்னால் நடந்தவற்றை எழுதுவது. அதாவது எது இல்லாமல் போய் விட்டதோ அதைத் தன் அறிவிற்கும், திறமைக்கும் எட்டிய வரையில் மொழியின் வழியாக எழுதுவது. அதற்குக் காரண காரியங்கள் கற்பித்து சொந்த விருப்பம், வெறுப்பின் அடிப்படையில் எழுதப்படுவதால், வாசிக்கப்படுகிறது.
சரித்திரம் எந்த நாட்டைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது; யாரைப் பற்றிச் சொல்கிறது என்பதை விட, யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் எழுகிற எழுத்தாளன் சார்பற்றவன் இல்லை. அவனுக்கு பல விதமான சார்புகள் இருக்கின்றன. தன் சார்பு வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று எழுதுகிறவர்களும், சார்பு நிலைத் தெரியக் கூடாது என்று எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். அதோடு நடந்ததை நடந்தவாறு; கேட்டதைக் கேட்டவாறு திருப்பிச் சொல்லவும், எழுதவும் முடிவதில்லை. பூரணமாகச் சொல்ல மொழியில் சொற்கள் இல்லை. சொற்கள் இருந்தாலுங்கூட அவற்றை எழுதுகிறவன் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு எழுதுவது கிடையாது.
அதுவே ஒரு நிகழ்வைச் சொல்லும் சரித்திர பனுவலை குறைபாடு கொண்டதாக்கி விடுகிறது. அதிகமாக அங்கார சொற்களைக் கொண்டு எழுதினால் நம்பகத் தன்மை இல்லாமல் அடித்து விடுகிறது.
உண்மை என்பதையே சொல்லுகிறது என்ற சரித்திர நூற்களில் சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாமல் மறைத்து இருப்பதெல்லாம், சொல்லப்பட்டதின் வழியாகவே வாசகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். எழுதாமல் விட்டதை எழுதப்பட்டவற்றால் மறைந்து விட முடியாது என்பது எழுதும் போதே எழுதுகிற எழுத்தாளர்களுக்குத் தெரிந்து விடுகிறது. ஆனால், அப்படி அறிகிறவர்கள் அதிகம் கிடையாது என்பதால், தைரியமாகவே பலர் எழுதி கொண்டு வருகிறார்கள்.
நடந்து முடிந்தது தான் சரித்திரம். அதனை நூறு விதமாகச் சொல்லலாம்; விமர்சனிக்கலாம் என்பது மட்டுமல்ல, ஐநூறு ஆயிரம் விதமாகவும் சொல்லலாம்; விமர்சனிக்கலாம். சரித்திரத்தைச் சொல்லும் மொழி – சொல்லப்படும் காலத்தின் வசீகரத்தைக் கொண்டிருக்கும் போது படிப்பதற்கு உவப்பானதாகி விடுகிறது. சரித்திரம் படிப்பதென்பது தன்னைத் தானே அறிந்து கொள்வது தான். புதிய மனிதனுக்குப் பழமையின் தேவை எல்லா காலத்திலும் நிகழ்காலத்திற்கு அவசியமாக இருக்கிறது. அதனைப் பூர்த்தி செய்யவே ஒவ்வொரு தலைமுறையிலும் எழுத்தாளர்கள் சரித்திரத்திற்குப் புதுபுது அர்த்தம் கொடுத்து எழுதுகிறார்கள்.
சேப்பியன்ஸ் – மனித குலத்தின் சுருக்கமான வரலாறு. ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் வாழும் யூதர். பல்கலைக்கழகப் பேராசிரியர். சேப்பியன்ஸை முதலில் தன் தாய் மொழியான ஹீப்ரூவில் எழுதினார். அது 2011 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவர் ஆங்கிலம் அறிந்தவர். ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் சரித்திரம் கற்றவர். 2014 – ஆம் ஆண்டில் சேப்பியன்ஸ் ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆசிரியர் மொழிபெயார்ப்பு. அப்போது அவருக்கு மூப்பத்தெட்டு வயதாகி இருந்தது.
சேப்பியன்ஸ் என்பது லத்தீன் மொழிச் சொல். அறிவு, ஞானம் என்று பொருள் சொல்லலாம். மனிதர்கள் பற்றிச் சொல்வதால் மேதமைக் கொண்ட மனிதன். மனிதன் தன்னைத் தானாகவே மனிதன் என்று தெரிந்து கொண்டும் தெரிந்து கொள்ளாமலும் செய்த காரியங்கள் பற்றி தெரிந்து கொள்ள வைக்கிறது. எனவே ஹோமோ சேப்பியன்ஸ்.
மனிதன் பூமியில் செய்த காரியங்கள் பற்றி ஆசிரியர் 70,000 ஆம் ஆண்டுகளின் சரித்திரம் பற்றி, ஒரு பத்திரிகை எழுத்தாளர் மாதிரி, சுவாரசியமாகவே எழுதியிருக்கிறார். அதோடு சேப்பியன்ஸ் போது வாசகனுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அதனைத் தெரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார். சேப்பியன்ஸ் வெற்றி என்பது முதலில் சுவாரசியமான மொழியில் தான் இருக்கிறது.
மொழி என்பதே மனிதர்களின் கண்டுபிடிப்புதான். அதனை எழுதும் எழுத்தும் மனிதர்களின் இன்னொரு கண்டுபிடிப்புதான். இவ்விரண்டின் வழியாகவே சேப்பியன்ஸ் மேதமை, காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டது ஒரு மனிதன் மேதமையால் சொல்லப்பட்டது என்பதற்காக அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது இல்லை. இன்னொரு மேதமை கொண்ட மனிதன் மறுக்கலாம்; புதிதாகச் சொல்லலாம். அதுவும் சேப்பியன்ஸ் காரியந்தான். அதைத்தான் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் திருவள்ளுவர். அவர் ஐரோப்பியர்கள் அறியாத ஒரு மொழியில் சொன்னார் என்பதற்காக இல்லையென்றாகி விடாது. ஏனெனில் மேதமை மனிதர்களிடந்தான் இருக்கிறது. அவன் கண்டுபிடித்த மொழியில், சொல்லில் எழுத்தில் இல்லை.
மனிதன் ஒரு விலங்கு; அதுவும் இளைய விலங்கு. அவனை ஹோமோ சேப்பியன்ஸ் என்று சரித்திர ஆசிரியர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மனிதாகிய விலங்கைப் பற்றிச் சரியாகச் சொல்லிவிட முடியாது. சொல்ல முடியாத மனிதன் செய்த கெட்ட காரியங்கள்; நல்ல காரியங்கள் என சிலவற்றைப் பற்றி ஆசிரியர் அழுத்திச் சொல்லாமல் ஆனால் சொல்வதை ஏற்றுக் கொள்ள வைக்கும் தொனியில் தான் புத்தகம் முழுவதையும் எழுதி இருக்கிறார். அது அவர் ஆய்வு முடிவில் இருக்கும் நம்பிக்கை. சரித்திரம் நம்புக்கைக்குள் அடங்கி இருப்பது இல்லை.
70,000 ஆண்டுகளில் மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து இரண்டாவது புலம் பெயர்வு. மனிதன் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிவிட்டான். அதாவது தன்னையும், தான் வாழும் சுற்றுப்புறச்சூழல் என்ன என்பதை அறிந்து கொண்டான். அதனை எதிர்த்தும் – இணைந்து வாழவும் கற்றுக் கொண்டான். வாழ்வதென்பது சாப்பாட்டில் தான் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் மூன்று வேளையோ; ஐந்து வேளையோ புசிக்க வேண்டும். புசித்தால் தான் பசியாறும். பசியாறினால் தான் உடம்புக்கு பலம் வரும், வேட்டையாட செல்ல முடியும். வேட்டை சமூகமாக வாழ்ந்த மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். காட்டுத் தானியங்களாக விளைந்த கோதுமை, நெல்லை வீட்டுத் தானியங்களாகப் பயிரிட ஆரம்பித்தார்கள். நீர் கொண்ட – வளமான பூமியில் நிரந்தரமாகத் தங்கி வேளாண்மை புரிய ஆரம்பித்தார்கள். பசு, எருமை, மாடுகள் வளர்த்தார்கள். கோழி, வாத்துக்கள் குடும்பங்களில் வளர ஆரம்பித்தது. நாய் மனிதர்களோடு சேர்ந்து கொண்டது என்றாலும் சரி; மனிதன் நாயைச் சேர்த்துக் கொண்டான் என்றாலும் சரி. நாய் மனிதனின் பாதுகாக்கும் விலங்கியது. அவளின் குணாதிசயங்களை அறிந்து கொண்டு வாழ்ந்தது. நாய் மனிதனை விட ஒரு லட்சம் மடங்கு அதிகமாக மோப்பச் சக்தி கொண்டது. ஹோமோ சேப்பியன்ஸ் என்று மனிதன் சொல்லும் விலங்குடன் 15,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
சேப்பியன்ஸ் ஆசிரியரான யுவால் நோவா ஹராரி தன் கருத்துகளுக்கு வலுதர தொல்லியல் ஆதாரங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் மனித சரித்திர ஆதாரங்கள் பலவும் பூமியில் புதைந்து கிடக்கின்றன. மனிதர்கள் வாழ்ந்த நகரங்கள், காட்டிய குடியிருப்புகள், மனிதர்கள் அவர்கள் அணிந்திருந்த அணி மணிகள், பயன்படுத்திய பொருட்கள், வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள், களிமண் கட்டிகளில் எழுதிய காப்பியங்கள், சட்டத்திட்டங்கள் என்று பலவற்றையும் அந்த காலத்தின் எச்சமாக மட்டுமின்றி, நிகழ்காலத்தோடு தொடர்ந்து வருவது பற்றியும் அறிந்து கொள்ளும் விதமாகவே சொல்கிறார். சேப்பியன்ஸ் நூலின், இழையறாத அம்சம் சொல்லப்படும் விதந்தான். காலம் ஒவ்வொரு ஆண்டாகவோ ஒவ்வொரு நூற்றாண்டாகவோ சொல்லப்படவில்லை. மேதையான மனிதன் எப்படிச் சொன்னாலும், அதனை சீர்படுத்தித் தெரிந்து கொண்டு விடுவான் என்ற நம்பிக்கையில் கட்டுடைத்து சொல்கிறார். அந்த நம்பிக்கை பெரிய அளவில் வெற்றிப் பெற்று உள்ளது என்பது சேப்பியன்ஸ் பிரதிகள் விற்பனையில் இருந்து தெரிகிறது.
ஒரு நூலின் தரம் பிரதிகள் விற்பனை இல்லை; நூலின் உள்ளே இருக்கும் கருத்து, சொல்லப்பட்ட விதம், மொழி என்றாலும், விற்பனையும் நவீன காலத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சேப்பியன்ஸ் பல ஆண்டுகளாக ஏற்கப்பட்டுள்ள கருத்தான, வேளாண்மையின் வளர்ச்சியே சமுதாயத்தின் உயிர்நாடி. அது சேர்ந்து உழைக்கக் கற்றுக் கொடுத்தது. உணவு தேடியோடுவது அடியோடு தவிர்க்க முடியாவிட்டால், பெரும்பாலானவர்கள் பசையாற வைத்தது. அதற்கு எதிராக வேளாண்மையானது பசியைத் தூண்டிவிட்டதென்று குற்றம் காட்டுகிறார்.
சேப்பியன்ஸில் சொல்லப்படும் மொழியும் எழுத்து பற்றியும் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. மெகோபடோமியா மன்னை ஹம்முராபி ஏற்படுத்திய சட்டங்கள் கி.மு.1776 – ல் பிரகடனப் படுத்தினான். கடவுள் தனக்கு நீதி வழங்கும் அதிகாரம் கொடுத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டான்.
கடவுள் எந்த மனிதனுக்கும் எந்தவொரு அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. ஆனால், சில சேப்பியன்ஸ் தனக்கு மட்டும் அதிகாரத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்கள். சீனாவின் முதல் பேராசான் சீ ஹாண்டாய், தனக்குச் சொர்க்கத்தில் இருந்து சொல்லப்பட்டது என்று சொல்லிக் கொண்டான். எல்லா நாட்டிலும் கொடுங்கோலர்கள் கடவுளையே கெட்டக் காரியங்கள் நடத்த முன்நிறுத்தி விடுகிறார்கள். அதைத்தான், சரித்திரத்தில் நீதிக்கு இடமில்லை என்று சேப்பியன்ஸ் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஹெபர்சன், ‘கடவுள் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி படைத்திருக்கிறார். படைப்பாளர் தான் படைத்தவர்களுக்கு சில அடிப்படையான உரிமைகள் கொடுத்து இருக்கிறார். அது அவர்களுக்கு சுதந்திரம், பூரண மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’ – என்று எழுதி உள்ளதை எளிய முறையில் கேள்விக்கு உள்ளாக்கி, விமர்சனிக்க வைக்கிறார்.
மனிதன் ஹோமோ சேப்பியன்ஸாக இருந்தாலும் கூட, காட்டுமிராண்டித் தனத்தில் இருந்து முழுதாக வெளிவந்து விட்டான் என்று சொல்ல முடியாது. தாமஸ் ஹெபர்சன் அமெரிக்கக் கருப்பர்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை; அடிமைகள் விடுவிக்கப்படுவார்கள் – உரிமை பெறுவார்கள் என்றும் கூறவில்லை. அமெரிக்க சுதந்திரப் போராட்டப் பிரகடனத்தில் கையெழுத்திட்டப் பாதி போர்கள் அடிமைகள் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்பைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது பற்றி சுருக்கமாகத் தான் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. மனிதர்கள் வாழ்க்கையை அது முன்னெடுத்துச் சென்றது.
நெருப்பு என்பது ஒரு சக்தி உண்டாக்கப்படுவது ஒரு சக்தியை அழிக்க முடியாது. ஆனால் மற்றொரு சக்தியாக மாற்ற முடியும். அதைத் தான் ஹோமோ சேப்பியன்ஸ் செய்து வருகிறார்கள். நெருப்பில் பழைய நெருப்பு, புது நெருப்பு என்பது எல்லாம் கிடையாது. நெருப்பு எப்பொழுதும் ஜூவாலை வீசக்கூடியது. கனல் கொண்டு சுட்டுக் கொண்டு இருக்கக் கூடியது. இருட்டை அகற்றி வெளிச்சம் தருவது. தீயாகிய, நெருப்பனது தின்னும் உணவை மென்மையாக்கியது. நிறைய தின்ன வைத்தது. இடும்போர் ஆயுதங்கள் செய்ய உதவியது.; விவசாய கருவிகள் தயாரிக்கப் பயன்பட்டது.
பல சமூகங்களில் தீயை கடவுள் என வழிபட ஆரம்பித்தார்கள்.
சேப்பியன்ஸ் பழங்காலத்தின் மீது புத்தொளி பாய்ச்சுகிறது என்பதால் மட்டும் சிறப்படையவில்லை. பழங்காலத்தின் நிகழ்வுகள் மீது அக்கறைச் செலுத்துவது போல, நவீன காலத்தில் நடந்தவற்றையும் கண்காணித்து விமர்சனம் செய்கிறது. மேலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும், கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம் என்று ஏற்கப்பட்ட வரலாற்று முறையைப் பின் தள்ளிவிட்டு காலம் என்ற ஒன்றையே பிரதானமாக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. எந்தவொரு பேராசானும் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றியதாகவும் குறிக்கப்படவில்லை. சமங்களின் பங்களிப்பு கூட குறைவாகவே சொல்லப்பட்டு இருக்கிறது.
காலம் என்பது தான் முக்கியம். ஆனால், அது உண்மையில் இல்லை. சேப்பியன்ஸான மனிதன் தன் மேதமையால் கட்டமைத்துக் கொண்டது தான். தொழில் புரட்சி ஏற்பட்டப் பின்னர் பெரிய கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போயின. இளைஞர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வெகு தூரத்திற்கு வேலைக்குச் சென்றார்கள். ஆண்கள் மட்டுந்தான் நகரங்களுக்குச் சென்றார்கள் என்பதில்லை. தன் வீட்டு வேலைகள் விவசாய வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் படித்து பட்டம் வாங்கிக் கொண்டு புதியவேலை; புதுவாழ்வு நோக்கி சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல எல்லோர்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. சிலர் நகரத்தில் சீரழிந்து போனார்கள்.
சமூகத்திலும், குடும்பத்திலும் பெரிய மாறுதல்கள் இரண்டு நூற்றாண்டுகளில் நிறையவே ஏற்பட்டு இருக்கிறது. அது போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. தாராளமயம், உலகமயம் என்பனவற்றால் நுகர் கலாச்சாரம் பெருகிவிட்டது. பொருட்கள் விற்கும் சந்தைகள் அதிகமாகி விட்டன.
நிகழ்காலத்தைப் பற்றி சொல்கிற ஆசிரியர், அதற்கு முன்பான காலத்தில் கிராமங்கள் எப்படி இருந்தன. குடும்பத்தின் அதிகாரம் முதியோரிடம் இருந்து என்ன செய்தது என்பதையும், நவீன காலத்தில் குடும்பத்தின் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டதால் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளான விமர்சனம் இல்லாமல் சொல்கிறார். நூல் முழுவதற்குமான பொது பண்பாகவே அது இருந்து விடுகிறது.
அரசும், நிர்வாகமும், சந்தையும் மனிதர்களைத் தனி மனிதனாகவே பார்க்கின்றன. அவை ஓர் இளம் குடிமகனிடம், ‘நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள். அதற்காகத் தகுதி உன்னிடம் இருக்கிறது. அதற்கு பெற்றோர்களிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. உனக்கு என்ன வேலை செய்ய முடியுமோ அந்த வேலையில் சேர்ந்து கொண்டு விடு. அதற்குக் குடும்பத்தினர் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்க்காதே. எப்படி உனக்கு வாழத் தோன்றுகிறதோ அப்படியே வாழ். வீட்டிற்கு அடிக்கடி போக முடியவில்லையா, கவலைப் படாதே. நீ உன் குடும்பம்; உறவினர்கள், சமூகம் சார்ந்து இல்லை. அரசும், நிர்வாகமும் உன்னைப் பராமரிக்க இருக்கிறது. நாங்கள் சாப்பாடு போடுகிறோம். தங்க இடம் கொடுக்கிறோம். மருத்துவம் பார்க்கிறோம். கல்வி தருகிறோம். வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். பென்சன், இன்சூரன்ஸ் கொடுத்து பாதுகாக்கிறோம்’ என்கின்றன.
சேப்பியன்ஸ் அதனை ஒரு நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் பிரச்சனையாகவே பார்க்கிறது. சரித்திரம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. எனவே அதற்குக் காலம் கிடையாது. நாடு கிடையாது. அரசியல் கிடையாது. ஏனெனில் அது தகவல் தொடர்பு, போக்குவரத்தால் பொதுத்தன்மை பெற்றுவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் குடும்ப உறவுகள் என்பது சிதைந்து போனதால், தனிப்பட்ட மனிதன் ஆளுமை பெற்றவனாகி விட்டான். அதைச் சார்ந்து அரசாங்கம் இயங்க வேண்டியதாகி விட்டது.
பிரச்சனை என்பது மனிதர்களிடந்தான் இருக்கிறது. 70,000 ஆண்டுகளில் சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னாலும் சரி. பத்தாயிரம், இருபதாயிரம் பக்கங்களில் விரித்துச் சொன்னாலும் சரி, மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
சேப்பியன்ஸ் சமூக, மனித பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்கிற நூலில்லை. பகவான் புத்தர் சொன்னது போல. ‘உனக்கு யாரும் வழிகாட்ட முடியாது. உனக்கு நீயே ஒளியாகவும், விளக்காகவும் இருந்து அறிந்து கொள்’ என்பதுதான். புத்தகம் படித்து ஞானியாகி விட முடியாது. ஞானம் புத்தகத்தில் இல்லை. ஊரெல்லாம் சுற்றி வந்தாலும் ஞானம் கிடைக்காது.
ஏனெனில் அது வெளியில் கிடைப்பது இல்லை. ஒரு மனிதன் மூளையில் இருப்பது; அகத்தில் இருக்கிறது என்று சொல்வது தான். ஒவ்வொருவரும் தன் மனக் கதவுகளை அகலமாகத் திறந்து வெளியுலகையும் அகவுலகையும் பார்க்க யுவால் நோவா ஹராரி சேப்பியன்ஸ் எழுதி இருக்கிறார். படிக்க வைக்கும் கெட்டிக்காரத் தனமான கருத்து.
சேப்பியன்ஸ் முதலில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. 2011 – ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வெளிவந்தது. 2014 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது. ஒரு சமூகவியல் சரித்திர, தொல்லியல் துளை நூல்கள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் படித்து விவாதிக்கக் கூடியதாக இருக்கும். அது பொது வெளிக்கு வராது. ஆனால் சேப்பியன்ஸ் பொதுவாசகர்கள், அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் படிக்கக் கூடிய சுவாரசியமான நூலாக அமைந்தது. அது சமூகச் சரித்திரத்தை அதிகமாக விமர்சனம் செய்யவில்லை. ஒவ்வொரு காலத்தில் என்ன நடந்தது என்று எடுத்துச் சொல்லி சிந்திக்க வைக்கிறது. அது அறிவைய்ம், அறியாமையையும் சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாமல் விட்டனவற்றையும் அறிந்து கொள்ள வைக்கிறது. அதில் தான் நூலின் வெற்றி அடங்கி இருக்கிறது.
யுவால் நோவா ஹராணி, சேப்பியன்ஸ் நூல் வழியாக பெற்ற அங்கீகாரம், உற்சாகத்தால் Homo Deus, A Brief History of Tomorrow, 21 lessons for the 21st century – என்று இரண்டு நூற்கள் எழுதியிருக்கிறார். இரண்டு முதல் நூலான சேப்பியன்ஸ் தொடர்ச்சி தான். அரசியல், சமூகம், வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய அக்கறையுடன் பேசுகின்றன.
சேப்பியன்ஸ் உலகம் முழுவதிலும் பரந்தப்பட்ட அளவில் வாசகர்களைப் பெற்று இருக்கிறது. ஆங்கிலத்தின் வழியாகப் பிரெஞ்சு, ஹெமர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், சீன, வங்காளி, இந்தி, தெலுங்கு, தமிழ் என்று ஐம்பதற்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
சேப்பியன்ஸ்க்கு எதிரான விமர்சனங்கள் அதிகம் வரவில்லை. இஸ்ரேல் நாட்டு யூதராக இருந்தாலும் பழமையான யூத சமயம் பற்றி அதிகம் எழுதாமல் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றி அதிகமாக ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கேட்டார்கள். அவர் மென்மையாகத் தொனியில் யூத சமயவாதிகள் செய்த, காரியங்களை, 21 Lessons For The 21st Century யில் எடுத்துச் சொல்கிறார். அவர்க்குத் தன் நூற்களில் எதனை முதன்மைப்படுத்தி எழுத வேண்டும் என்று முன் முடிவுகள் இருந்தன. யூத சமூக சரித்திரவாதி என்று பெயரெடுக்க அவர் விரும்பவில்லை. அது ஒரு பொது மனிதனாக – மனித குலத்தின் சரித்திரத்தைத் தன்னளவில் சரியாக எழுதியவன் என்ற பெயர் பெறத்தக்க விதமாகவே எழுதி இருக்கிறார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டியதோ; வாஷிங்டன் போஸ்ட், டம்ஸ், தீ கார்டியன் – பத்திரிகைகள் பாராட்டியதோ சிறப்பாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் படித்துவிட்டு மிகவும் சிறப்பான நூல் என்று மற்றவர்கள் படிக்கச் சிபார்சு செய்த முத்தையா நடராஜன், பெரியசாமி சுபாசு, சேலம் லோகு போன்றவர்களால் தான் புத்தகங்கள் கவனிப்புப் பெறுகின்றன; படிக்கப்படுகின்றன. சேப்பியன்ஸ்குத் தமிழ் ஒரு மொழிபெயர்ப்பு வந்து இருக்கிறது. நாகலட்சுமணனும் மொழி பெயர்த்து இருக்கின்றார்.
கனடா / வான்கூவர்