- சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன் நேர்காணல்
ஜி. செல்வா….
சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட அடுத்த சில தினங்களில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு ரஷ்ய கல்ச்சரல் அகாடமியில் பாராட்டு விழா. வாசலில் நின்றிருந்த எஸ்ராவுக்கு வாழ்த்துக்களை மகிழ்வோடு பரிமாறியவாறே அவரது கையைப் பிடித்துக்கெண்டு,’ ‘‘தோழர் ‘புத்தகம் பேசுது’ இதழ்க்காக உங்களை இன்டர்வியூ செய்யணும் எப்போது சந்திக்கலாம்’’ எனக் கேட்டேன். கேட்ட அடுத்த நொடியில் ‘’நாளைக்கே சந்தித்து விடுவோம்‘’ என உற்சாகமாகச் சொன்னார் எஸ்.ரா.
மதியம் 12.45 மணிக்கு தேசாந்திரி அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அவரது எதிரில் அமர்ந்தவுடன் பேசத் தொடங்கிவிட்டார். ஏதோ ஒரு கோயிலில் பதிவு செய்யப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டதன் காரணமாக வேலையிழந்த கலைஞன் பற்றி எஸ்ரா எழுதியிருப்பது குறித்து கார்த்திக் சொன்னது நியாபகத்திற்கு வந்தது. அதையே உரையாடலுக்கான முதல் புள்ளியாய் முன் வைத்து விருதுப் பெற்ற சஞ்சாரம் நாவலை எழுதத்தூண்டியதற்கான காரணத்தைக் கேட்க, எஸ்ரா சொன்னது:
நான் பொதுவாக எதையும் எழுதுறதுக்காக மேற்கொள்ள மாட்டேன். தெரிந்து கொள்வதற்காக ஒரு விசயத்தை கத்துக்குவேன். தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள நானும் அதன் மாணவனாகி கத்துக்குவேன். அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல இதை ஏன் யாருமே எழுதலனு யோசிப்பேன். அப்புறம் யாராவது எழுதியிருக்காங்களானு பார்ப்பேன். எழுதியிருந்தால் படிச்சு பார்ப்பேன். அப்புறம் இதுல ஏன் இதை எழுதாமல் விட்டாங்கனு ஒரு குறிப்பிட்ட விசயத்தை பார்ப்பேன். அதுக்கப்புறம் தான் அதை எழுதலாம்னு இருப்பேன். எழுதலாம்னு நினைக்கும் போதே எனக்கு ரொம்ப தயக்கம் ஏற்படும். எனக்கு இவ்வளவு தானே தெரியும் அப்புறம் எப்படி எழுதுறதுனு? யாரெல்லாம் இதுக்கு உண்மையா உதவி செய்யிறாங்களோ அவங்களை தேடிப்போய் கேட்பேன். நாதஸ்வர கலைஞர்களை தேடிப்போய் கேட்பது மட்டுமில்லாமல் அவங்கள்ள முக்கியமான ஆளை அழைச்சிட்டு வந்து வாத்திய இசையைக் கேட்பேன். மல்லாரியில் இந்த நடை எப்படி இருக்கும்னு கேட்டால் அவரு இந்த நடை இப்படித்தான் இருக்கும்னு வாசிச்சுக் காட்டுவாரு. அப்பதான் எனக்கு தெரியும். ஓ! இது இப்படித்தான் இருக்கும் போலிருக்கு.
இசை நல்லாயிருக்கு ஆனால் இசை வாசிக்கும் இசைக்கலைஞருக்கு பசிக்குமா பசிக்காதா? பசிக்கும்னா அவன் பசிக்கு நீ என்ன செய்யப் போற? என் நோக்கம் அதான். உன் கல்யாணத்துக்கு வந்து வாசிக்கிறான் ஆனால் அவனுக்கு சாப்பாடு போடுறியா இல்லையா? சாப்பாடு போடுறினா ஏன் அவன் மொத பந்திக்கு வரமாட்டேங்குறான்? அவங்க புள்ளைகள ஏன் வரமாட்டேங்கிறாங்க? அவங்க ஏன் திருமண வீட்டில் சாப்பிட மாட்டாங்க? அப்புறம் அவங்க புள்ளைங்க என்ன படிக்கிறாங்க? அவங்களை பத்தி நீ ஏன் யோசிக்கல? மேடையில் இவ்வளவு பேரை சொல்லுறியே அவங்க பேரை ஏன் சொல்ல மாட்டேங்குற? ஓரமா வந்து வாசிச்சுட்டு அவங்க ஓரமாவே போகனுமா?
நான் பலமுறை பார்த்துட்டேன். இந்த கலைஞர்கள் எல்லா நேரத்திலயும் பஸ்ல கடைசி சீட்லதான் வாராங்க. ஏன் அவங்களுக்கு கடைசி சீட்டு. அவன் வாழ்க்கை பூராவும் இவ்வளவு பெரிய மேளத்தை தூக்கிக்கிட்டு நாதஸ்வரத்தை தூக்கிக்கிட்டு ஓடி ஓடி பஸ்சில் கடைசி சீட்லதான் உட்காரனும். கூட்டம் வந்தால் இறங்கிடனும். எல்லா நாட்டுப்புற கலைகளை போலவும் இந்த கலையும் கொஞ்ச கொஞ்சமா கைவிடப்பட்டு வருது. ஒருவேளை 2, 3 தலைமுறைக்கு அப்புறம் இதை வாசிக்கிறவங்களின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சி போயிருக்கும். 7 வருஷம் 8 வருஷம் படிக்கணும்னா யார் படிப்பா.? கோவிலூர் மடத்தில் நாதஸ்வரம் பள்ளி இருக்கு அந்த பள்ளிக்கே போனேன்.
கோவிலூர் மடமா? அது எங்கு இருக்கு. நாதஸ்வரத்தை கத்துக்க ஏழு வருடப் படிப்பா? எங்கச் சொல்லித் தர்றாங்க என ஆச்சரியமாக கேட்க…
ப: திருவாடுதுறை, தஞ்சை, காரைக்குடி ஆகிய மூன்று இடங்களில் நாதஸ்வரப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஏழு ஆண்டு படிப்பில் வாய்ப்பாடு கற்கவே இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். கோவிலூர் மடத்து பள்ளியில் இருக்கும் புள்ளைங்க கிட்ட பேசிக் கிட்டு இருக்கும்போது அவர்கள் என்னிடம், ‘‘நாங்க நாதஸ்வரமெல்லாம் கத்துக்குவோம் சார் ஆனால் யார் சார் வேலை கொடுப்பாங்க? எங்களை எங்க வேலைக்கு பணியமர்த்துவீங்க? இருந்தும் எங்களுக்கு இருக்குற ஈடுபாட்டால, ஆசையால இசையை கத்துக்கிறோம்ÕÕ என்றனர். தமிழக அரசு அவங்களுக்கு ஏதாவது சலுகை கொடுக்கலாமே. தமிழ் சமூகம் எதுகெதுக்கல்லாமோ உதவி செஞ்சிருக்கு. இவங்களுக்கு செய்யலாமே அதெல்லாம் தான் என்னை இந்த நாவலை எழுத தூண்டியது.
கே: ‘‘தமிழில் எழுதும் இந்தி எழுத்தாளர், உலக அளவில் தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர்’’ என சா.கந்தசாமி பாராட்டியதை குறிப்பிட்டு அவரது எழுத்துப் பயணம் குறித்து கேட்க
அதை நான் உண்மையாவே உணரக்கூடியவன். டால்ஸ்டாய், தஸ்வாவெஸ்கி ரெண்டு பேரையும் ரஷ்யா எழுத்தாளர்னு சொல்றாங்க… ரஷ்யாங்குறது எவ்வளவு பெரிய நிலப்பரப்பு. எவ்வளவு பெரிய பாரம்பரியம் மிக்க நாடு அந்த நாட்டுக்கே ரெண்டே ரெண்டு பேர் தான் எழுத்தாளர்கள். நாட்டின் அதிபதினு சொன்னால் கூட பரவாயில்லை.
கே: தமிழ் நிலப்பரப்பை மையமாகக் கொண்டு நாவல் எழுதிய நீங்கள் இடக்கை நாவலில் தமிழ் சமூகம் சாராத பகுதியை மையமாக வைத்து எழுதத் தூண்டியது எது?
இந்திய எழுத்தாளர்கள் அவங்கவங்க தாய்மொழியில் எழுதுறாங்க. அப்படி எழுதும்போது நம்முடைய நிலபரப்புக்குள்ளயே தான் நம்முடைய படைப்பு இருக்கு. ஆனால் மலையாளத்தில் டில்லியை பத்தி, பெங்களூரை பத்தி, ராஜஸ்தானை பத்தி எத்தனையோ நாவல் வந்திருக்கு. இந்தியில் எல்லா இந்திய மாநிலங்களை பத்தியும் எக்கச்சக்கமான நாவல்கள் வந்திருக்கு. ஒன்னுமில்ல பெங்காலில் இருந்து ஒருத்தர் தூத்துக்குடியை பத்தி ஒரு நாவல் எழுதியிருக்கார். ஆனால் தமிழில் கல்கத்தாவை பத்தி நாவல் இருக்கான்னா இல்லை. ஆனால் கல்கத்தாவில் தமிழ்க்குடும்பங்கள் இருக்காங்க.அலகாபாத்திலும் இருக்காங்க வாரணாசியிலும் இருக்காங்க. ஆனால் தமிழில் அந்த மக்களுடைய வாழ்க்கையை எழுதல. எழுதியிருந்தாலும் குறைவா எழுதியிருக்காங்க.
எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. அந்த ஆதங்கம் தான் ஒரு நாவல் எழுதனும். அந்த நாவல் இந்தியாவுடைய குறிப்பா மத்திய இந்தியாவின் வாழ்க்கையை எழுதனும். ஏன் மத்திய இந்தியா சிறப்பானதுன்னா எல்லாத்துக்கும் அவர்கள் யாரையாவது சார்ந்துதான் இருக்கனும். கடற்கரை இல்லாததனால “உப்புக்குÕÕ கூட அவர்கள் யாரையாவது சார்ந்துதான் வாழணும். ஆனால் மத்திய இந்தியா யார் கையில் இருக்கோ, அவங்க தான் இந்தியாவை ஆளுவாங்க. இந்திய அரசியலே மத்திய இந்தியா கையில தான் இருக்கு. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் இந்திய அரசியலை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான மாநிலங்கள்.
கே: சட்டென வானிலை மாறியதுப் போல் இருந்தது. முன்தினம்தான் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரம் அம்மாநிலங்களிலிருந்து பா.ஜ.க. அரசு மக்களால் விரட்டியடிக்கப்பட்டது. அதே மத்திய இந்தியாவில்தான் அதிகார வர்க்கத்திற்கெதிராக விவசாயிகளின் எழுச்சிமிகுப் போராட்டங்கள் செங்கொடி இயக்கத்தினால் உருக்கொண்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போராட்டங்களின் விளைவாகவே இரண்டு இடது சாரி தோழர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிப் பெற்றுள்ளனர். எஸ்.ரா. சொன்னதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கை பளிச்சென தெரிந்தது.
எஸ்.ரா.பேசிக் கொண்டிருந்தார்:
பழைய இந்தியாவின் மிச்சசொச்சம் அங்க தான் இருக்கு. இன்னொன்னு இந்தியாவில் பேரரசர்கள்னு சொல்லப்பட்டவங்கள்ள முகலாயர்கள் முக்கியமானவர்கள். மத்திய இந்தியாவையும் எழுதனும் அதே நேரத்தில் காலனிஆதிக்கத்தின் துவக்கத்தையும் எழுதணும்னு நினைச்சேன்.அப்போ எனக்கு தோன்றியது ஔரங்கசீப். அவர் காலத்தில் தான் ஐரோப்பியர்கள் உள்ளே நுழைய ஆரம்பிக்கிறாங்க. அந்த புள்ளி தான் இடக்கை.
கலவரம் வந்தால் உடனடியா கல்லெடுத்து எறிவோம். கல்லெடுத்து எறியக்கூடிய மனிதன் கற்காலத்தவனாச்சே! அவன் ஏன் இங்க வந்தான்? கற்காலத்தில் இருந்து எவ்வளவு தூரம் பயணித்து வந்தோம். ஆனால் மனசுக்குள்ள இன்னும் கற்கால தன்மை இருக்கு.
இந்தியாவில் எந்த நூற்றாண்டும் இந்தியாவை விட்டு மறைஞ்சு போகல இந்தியாவின் இந்த இருபதாம் நூற்றாண்டுக்குள்ள ஒன்றாம் நூற்றாண்டும் இருக்கு. ஒரு நூற்றாண்டு முடிவடைந்து மறைந்து போவதில்லை அந்த நூற்றாண்டின் பண்பாட்டு தளங்கள் எல்லாம் அப்படியே இருக்கே. அந்த நூற்றாண்டு எதுக்குள்ளயோ மறைஞ்சு இருக்கு. இன்னும் அந்த நூற்றாண்டின் பழமை அறியாமை மூட நம்பிக்கைகள் இருக்கு.
நகரங்களை விட்டு கீழே போக போக இன்னும் பழைய நூற்றாண்டின் மிச்சங்கள் இருக்கு. இன்னும் சாதியக் கொடுமைகள், தீண்டாமையெல்லாம் இருக்கு. இன்னும் கல்வியறிவு இல்லாத மக்கள் எல்லாம் இருக்காங்க எவ்வளவுக் கெவ்வளவு கீழே போறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு வரலாற்றில் பின்னோக்கி போவீர்கள்.
தற்போதைய இந்தியா எது? நகரங்களை தான் இந்தியான்னு சொல்றோம். நகரம் முன்பு ஓரிடத்தில் இருந்தது இப்போ அப்படி இல்லை; நகரம் மனிதனின் மனதில் இருக்கு. தன்னுடைய உற்பத்திக்கு யாரையாவது சார்ந்திருந்தால் அது நகரம். தன்னுடைய உற்பத்தியை தானே உற்பத்தி செய்தால் அது கிராமம். நகர வாழ்க்கையில் வணிகர்களின் வாழ்க்கை தான் முன் மாதிரியா இருக்கும். எல்லாருமே மனசுக்குள்ள பிசினஸ் மேனா மாறனும்னு ஆசைப்படுவாங்க. ஏன்னா வணிகனுக்கு தான் அதிக பொருள் கிடைக்கும். எதையும் உற்பத்தி செய்யாமல் ஒரு பொருளை வணிகனால் தான் ஈட்ட முடியும். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த செல்வங்களின் பாதி குறிப்பிட்ட சில வணிகர்கள் கிட்டதான் இருக்கும். வணிகம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய புத்திசாலிதனத்தை முதலீட்டா வச்சிருக்காங்க. அவர்கள் முந்தைய கால வணிகர்கள் மாதிரி கடையை வச்சுக்கிட்டு வியாபாரம் செய்யல.
வணிகத்தில் ஏமாற்றுவது என்பது தவறல்ல அது நீதி. அந்த நீதி என்பது இவ்வளவு ஏமாத்தலாம் ஆனால் இவ்வளவு ஏமாத்தக்கூடாதுனு இருக்கு. வணிகர்கள் வேறு விதமான வாழ்க்கை முறையை வாழுறாங்க. அவர்களால் தான் முதன்முதலில் தான் விரும்புகிற உணவை வாங்க முடியும்; சாப்பிட முடியும். உற்பத்தி செய்றவனால அப்படி சாப்பிட முடியாது. உற்பத்தி செய்றவன் கிடைக்கிற உணவை தான் சாப்பிட முடியும். அதனால் தான் உற்பத்தியாளர்களில், ‘‘தனியாக நான் சைவம் மட்டுமே சாப்பிடுவேன்’’ எனும் ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
நாவல் படிக்கும் போது பல பேர் கேட்கிறாங்க “எந்த காலத்தில் சார் நீங்க எழுதுறீங்க? உடனே நான் கேட்டேன். “எந்த காலத்தில் சார் நீங்க வாழுறீங்க? தேதி தான் சார் உங்களுக்கு 2018-_ன்னு காட்டுது. அதுக்காக நீங்க 2018ன் மனிதனா? இல்லையே.
போர்ஹே இந்தியாவை பத்தி எழுதியிருக்கிறார் ஆனால் ஒருமுறை கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. மயானத்தில் இறந்த உடல்களின் பல்லை திருடிட்டு போற ஒரு இனக்குழு இருக்காங்க. அவங்க திருடிப்போன பல்லை தங்கத்தோட விப்பாங்கனு ஒரு கதை எழுதியிருக்கார். அல்முட்டாசீ என்னும் கதை அது. இந்த கதையை அர்ஜெண்டினாவில் வெளியிடுறார் அந்த கதையை சார்ந்த இனக்குழு மகாராஷ்டிரவில் இருக்காங்க. மகாராஷ்டிரவில் அந்த இனக்குழுவில் இருந்து படிச்சு வெளியே வந்த பையன் ஒருத்தன் சொல்றான் எங்களை பத்தி எழுதப்பட்ட கதை ஒன்னு அர்ஜெண்டினாவில் இருக்குன்னு. அவர் இந்தியாவுக்கு வரல இந்தியாவை பார்த்ததே கிடையாது.. (மகராஷ்டிராவில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் இனக்குழுவை கண்டுபிடிச்சு அர்ஜெண்டினாவில் எழுதுறார்.) அவ்வளவு துல்லியமாக இன்னொரு தேசத்தின் வாழ்க்கையை படிச்சு தெரிஞ்சிருக்கார். முக்கியமான சிறப்பு அவருக்கு பார்வையே கிடையாது. பார்வை இல்லாத எழுத்தாளன் அவர். அதேபோல அர்ஜெண்டினாவின் ஒரு பகுதியை அவனுக்கே தெரியாத ஒரு பகுதியை நாமும் எழுதலாம்.
(எழுதணும்னு சொல்லல எழுதலாம்னு சொல்றேன்) அந்த வாய்ப்பை தான் நான் உருவாக்கணும்னு நினைக்கிறேன்.அதுக்கு தான் சர்வதேச இலக்கியங்களை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன்.
……..
வெறும் ஆளா தான் சென்னை வந்தேன். ஓரடி கூட இந்த ஊரில் எனக்கு இடம் கிடையாது எனக்கு தெரிந்ததெல்லாம் என்னுடன் படித்த சில நண்பர்களும் என் கதைகளை வாசித்த சில வாசகர்களும், அப்புறம் எனக்கு விருப்பமான சில எழுத்தாளர்கள் மட்டும் தான். உன் இடத்தை உருவாக்குணும்னு இந்த நகரம் சொல்லுது. இந்த நகரம் என்னை எப்படியெல்லாம் நடத்திச்சுனு ஒரு வருத்தமும் கிடையாது. நடத்துனதுக்கு காரணம் நீ எதுக்கு வந்தியோ அந்த வேலையை செய்; செய்யாட்டி நீ போய்டு. இன்னொருத்தன் வருவான் அவனுக்கு இந்த இடம் கொடு. ஏன்னா சென்னையில் தன் கனவுகளோட வந்தவர்கள் ஏராளம்; அந்த கனவை அடைந்தவர்கள் கொஞ்சம் பேர் தான். அந்த கனவை அடைய முடியாதவர்கள் எல்லாம் வெளியேறிட்டாங்களா வெளியேற மாட்டாங்க இன்னொரு கனவை பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடங்குவார்கள் அந்த கனவு இந்த நகரத்துக்கு வந்த பிறகு தான் வரும்.
ஒருத்தர் ரெண்டு பேர் சாதிச்சாங்க மத்தவங்க எல்லாம் தோத்துட்டாங்களா இல்லை பாதையை மாத்திட்டாங்க. பிடிவாதமாக இதைத்தான் செய்வேன்பவன் அதை மட்டுமே செய்து சாதிப்பான்.
நான் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் என் புத்தகத்தை யாரும் Publish பண்ணல. Publish பண்ணாமல் மட்டுமில்லை ஏன் இந்த மாதிரி புத்தகத்தை எழுதினனு கேலி செஞ்சாங்க. இதை யார் படிப்பா நீங்களே வச்சுக்கோங்கனு திருப்பி கொடுப்பாங்க. ஒரே ஒருத்தர் வெளியிடுறேன்னு சொன்னார் ஆனால் இவ்வளவு பெரிசாலாம் வெளியிட முடியாது நூறு பக்கத்துக்கு மாத்தி கொடுன்னு சொன்னார்.
நண்பர்களோட இணைஞ்சு நானே ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு நானே அதை வெளியிட்டேன். வெளியிடும்போது நான் சென்னையில் கூட இல்லை விருதுநகரில் இருந்தேன். விருதுநகரில் தேடி வந்து படிச்சாங்க. எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்தது பல்கலைக்கழகத்துல பாடமா வச்சாங்க.
அதான் தமிழ் மக்கள் நல்ல புத்தகங்களை யார் வெளியிட்டாலும் யார் எழுதியிருந்தாலும் தேடி வாங்கி படிப்பாங்க.
இப்போ வரைக்கும் யாருமே உபபாண்டவத்தை வெளியிடல முதல் மூன்று பதிப்பை நான் வெளியிட்டேன். நாலாவது பதிப்பிலிருந்து 13வது பதிப்பு வரை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. 14லிருந்து நான் வெளியிட்டேன். அந்த புத்தகத்துக்கு மட்டும் 300லிருந்து 400 கடிதம் வரை வந்தது.
பன்முக ஆளுமை:
என்னுடைய ஆதர்சமான எழுத்தாளர்கள் எல்லாமே பன்முகத்தன்மையுடைய பணிகளை செஞ்சிருக்காங்க… நான் செஞ்சது ரொம்ப ரொம்ப கம்மி. உதாரணத்திற்கு டால்ஸ்டாய் எழுத்தாளராகவும் இருந்திருக்கார். போர் வீரராகவும் இருந்திருக்கார், ஐந்நூறு அறுநூறு ஏக்கர் பண்ணையை நிர்வாகம் செய்திருக்கார். பண்ணையில் ஆட்கள் இருந்த போதே இவரே விவசாயம் செய்திருக்கிறார். குதிரையில் சென்று வேட்டையாடியிருக்கிறார். கட்டுரை எழுதியிருக்கிறார். நாவல் எழுதியிருக்கார். அவருடைய காலகட்டத்தில் சமயப்பிரச்சினைக்காகப் பேசியிருக்கிறார். சமய மறுமலர்ச்சிக்காக வேலை செய்திருக்கிறார். ஏழைக் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் ஆரம்பித்திருக்கிறார். பள்ளிக்கூடம் துவக்கி அவரே இரண்டு வருடம் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பண்ணை அடிமை முறைகளை ஒழிப்பதற்காக போராடியிருக்கிறார்.
மேலும் ரஷ்ய நாட்டில் கிறித்தவ சமயத்தை சாராத இயற்கையை மட்டுமே வழிபடும் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்; அவர்களின் பெயர் டொக்கோபார்ஸ். அம்மக்கள் எந்த கடவுளையும் வழிபட மாட்டார்கள். இயற்கையை மட்டுமே வழிபடுவார்கள். ரஷ்ய அரசு திடீர்னு நீங்க கடவுளை வழிபட்டால் மட்டுமே தான் இங்கே இருக்கணும். இல்லைன்னா நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவு இட்டது. இந்த உத்தரவு வெளியிட்டதும் டால்ஸ்டாய், “அவர்களை வெளியேத்தக்கூடாது அவர்கள் இங்க தான் இருக்க வேண்டுமென அறிக்கை விடுத்தார். ஆனால் அதை அரசு மறுத்தது. அவங்க அத்தனை பேருக்குமே முதன்முதலில் அடைக்கலம் கொடுத்தது கனடா. ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு டொக்கோபார்ஸ் இனம் முழுவதுமே செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் அத்தனை பேருக்குமே டால்ஸ்டாய் ஒருவர் மட்டுமே உதவி செய்தார். அவர்களுக்காக பணம் திரட்டினார். பணம் பத்தாதனால ஒரு நாவல் எழுதி அதில்வரும் பணத்தை தருவதாக சொன்னார். சொன்னபடியே செய்து அந்த பணத்தை அவர்களுக்காக பயன்படுத்தினார்.அந்த நாவல் தான் புகழ்பெற்ற புத்துயிர்ப்பு நாவல்.
உருவ வழிபாட்டை ஒத்துக்காத மக்கள் டால்ஸ்டாய்க்காக சிலை வச்சிருக்காங்க. டால்ஸ்டாய் காலத்தில்தான் சினிமா முதன்முதலில் வருது. கேமராவும் அப்போதுதான் அறிமுகமாவுது. சினிமா முழுமை பெறாத காலகட்டம். அந்த காலத்திலேயே, டால்ஸ்டாய் “சினிமா என்றைக்கு மக்களுடைய கலையா மாறுதோ அப்போதுதான் சினிமா முழுமையானதாக இருக்கும்ÕÕ என
ஒரு ரீலில் பேசியிருக்கிறார். சினிமா பார்க்காத ஆளு தீர்க்க தரிசனமாகவே சொல்றாரே. டால்ஸ்டாய் மாதிரி ஆட்களை படித்தால், டால்ஸ்டாய் மாதிரியான நற்பண்புகளை கத்துக்கிறோம். டால்ஸ்டாய் மாதிரி கதை எழுதுறது மட்டுமில்லை டால்ஸ்டாய் செய்த பணியில் பாதியாவது செய்யணும்.
சிறுகதை இலக்கிய முகாம்:
எழுத்தாளர்கள் மூலமாக முகாம்கள் உலகம் முழுவதும் நடத்தப்படுது. ஒரு எழுத்தாளன்கிட்ட சில இளம் வாசகர்கள், சில விஷயங்களை கேட்க விரும்புறாங்க “இதை எப்படி எழுதுனீங்கÕÕனு… இது ஒன்னும் பெரிய தொழில் ரகசியம் இல்லையே இதையெல்லாம் மறைச்சு வச்சு ஒருத்தர் வேலை செய்றதுக்கு. இந்த துறையில் திறனிருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த மாதிரியான முகாம்கள் நடத்துவதற்கு ஆட்கள் இல்லாததால் வெளியே வராமல் போன எழுத்தாளர்கள் அதிகம். கலை எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது எல்லோரிடமும் சென்றடைய வேண்டும்.
எல்லா விசயங்களையும் ஜனநாயகப்படுத்தனும். ஒருத்தர் விரும்பினால் அவருக்கு எந்த தடையும் இருக்க கூடாது. எழுதி விரும்பினாலும் கத்துக்க விரும்பினாலும் தடையே இருக்கக்கூடாது. ஏன்னா நம்முடைய முந்தைய தலைமுறை. இதுக்காக பெரிய விலை கொடுத்திருக்கு. என் தாத்தா காலத்தில் புத்தகத்தை தொடுறதே பெரிய பாவம்; அவரெல்லாம் படிக்க அனுமதிக்கப்படல… அவருக்கு முந்தைய காலத்தில் படிப்புங்குற பேச்சே எடுக்க கூடாது; நீங்கலாம் படிச்சு என்ன செய்யப்போறீங்கனு கேட்பான். அப்போ படிப்பு கிடையாது. இசை கிடையாது. மேன்மையான கலைகள் எதுவும் அவங்களுக்கு கிடையாது. அப்படினா அவங்களாம் யார்? அவர்கள் மறுக்கப்பட்டவர்கள். எனவே ஜனநாயகப்படுத்துவதனால இந்த கலைகள் எல்லோருக்கும் போய் சேருது. இது தான் கலைஞன் செய்ய வேண்டிய வேலை. ஜனநாயகப்படுத்தப்பட்டால் புது வாசகன் புது எழுத்தாளர்கள் உருவாகுவாங்க.
நான் அரசு பள்ளியில் படித்தவன். அரசு பள்ளிதான் எனக்கு அடிப்படை அறிவை தந்தது. அரசு பள்ளிகள் மூலம் நிறைய எழுத்தாளர்கள் உருவாகிட்டே இருக்காங்க. நீங்க நினைக்கிற எந்த பெரிய கான்வன்ட்லயும் நாங்க படிக்கல. ஆங்கில இலக்கியம் ஏன் படித்தேன். எல்லா நாட்டின் இலக்கியங்களையும் படிக்கிறதுக்காக படிச்சேன்.
நான் தமிழ் எழுத்தாளன் என்னுடைய எழுத்தில் என்னுடைய பேச்சில் என்னுடைய சிந்தனையில் இன்னொரு மொழி வரக்கூடாது வாசிக்குறதுக்கு மட்டும் தான் ஆங்கிலத்தை பயன்படுத்தணும் என்பதில் கவனமாக இருந்தேன்.
எனக்கு சொற்பொழிவு ஆற்ற சின்ன வயசுலயிருந்தே பிடிக்கும். கட்டுரை போட்டியிலும், பேச்சு போட்டியிலும், நான் கலந்துகொள்ளாத போட்டிகளே கிடையாது. எவ்வளவு பெரிய மேடையாக இருந்தாலும் பேசுவேன். கல்லூரிக்காலத்தில் பல்கலைக்கழக விருதுகளை பெரும்பாலும் வாங்கியிருக்கேன்.
ஜெயகாந்தனின் பேச்சினால் ஈர்க்கப்பட்டு எனக்கே உரிய பாணியை கடைபிடிச்சேன். குறிப்பிட்ட காலம் வரையிலும் இலக்கிய கூட்டங்களில் மட்டுமே பேசிட்டு இருந்தேன்.. ஒரு நாள் எஸ்.ஏ.பெருமாள் “பேசுறவன் எந்த கூட்டத்தில் பேசினாலும் என்ன? இலக்கிய கூட்டமும் சரி பொது கூட்டமும் சரி எந்த இடமானாலும் போய் பேசுன்னுÕÕ சொன்னார் அதிலிருந்து எல்லா கூட்டத்திலும் பேச ஆரம்பித்தேன்.
எஸ்.ஏ.பெருமாள், தேவதச்சன். ரெண்டு பேருக்கும் தெரியாமல் என் வாழ்க்கையில் எதுவுமே நடந்ததில்லை. என் பையன் எங்க போனாலும் எனக்கு தெரியும்; அது போல தான் எனக்கு நடந்தாலும் அவங்க ரெண்டு பேருக்கும் தெரியும். இன்னிக்கு சொல்லல நான் பெரிய ஆளா வருவேன்னு என்னை பார்த்த முதல் நாளே எஸ்.ஏ.பெருமாள் சொன்னார், “டேய் நீ மட்டும் ஒழுங்கா படிச்சு ஒழுங்கா எழுதுனனா நீ இன்னொரு ஜெயகாந்தன் மாதிரி வருவடாÕÕனு அன்னிக்கு சொன்னாரு. என்னை சொன்ன மாதிரி பலரை சொன்னாரு ஆனால் சில பேர் தான் அவரை முறையா பயன்படுத்தி முன்னேறுனாங்க.
எஸ்.ஏ.பெருமாள் மேல் ஒரு தீறீவீஸீபீ யீணீவீtலீ வச்சிருக்கேன். அது மாதிரி அவங்களும் எனக்கு தவறா வழிகாட்டியது கிடையாது. அது மாதிரி தான் தேவதச்சன். தேவதச்சன் எஸ்.ஏ.பெருமாள் மாதிரி கிடையாது சலனமே இல்லாமல் பேசுவார்.
எஸ் ஏ பி ஆற்றிய பணிக்கு அவர் அடைந்திருக்க வேண்டிய இடம் வேறு. ஆனால் அதை அவர் எதிர்பார்க்கல. மக்கள் பணியே போதும்னு சொல்லக்கூடியவர். யார் என்னை உருவாக்குனாங்களோ அவங்ககிட்ட நன்றியோடு இருக்கேன். மாணவர்களுக்காக கையெழுத்து பத்திரிக்கை ஆரம்பித்தேன். யார் வேண்டுமானாலும் எழுதலாம்ங்குற அடிப்படையில் ஆரம்பிச்சோம். எனக்கும் சலிப்பு தட்டியிருக்கு. ஆனால் ஏதாவது ஒரு விசயத்தை பார்த்து என் உத்வேகத்தை வளர்த்துக்குவேன்.
இப்படியெல்லாம் இருந்தாலும் இந்த உலகம் மோசமானதில்லை. நிறைய விசயங்களை எளிய மனிதர்களிடமே கத்துக்குறேன்.
இந்த காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டும் புதிய படைப்பாளிகளுடன் துவங்குது.
சங்கர ராமசுப்புரமணியம்னு ஒரு கவிஞர் இருக்கார். இப்போ எழுதும் கவிஞர்களில் எனக்கு ரொம்ப பிடித்த கவிஞர். அது போலவே சபரிநாதன் என்னும் கவிஞர், கந்தர் ஆதித்யன். ஸ்ரீ நேசன்,. இது போல நிறைய இருக்காங்க. கட்டுரையில் சரவணன், அரவிந்தன் (தமிழ் இந்து) சமஸ்,.
நாவல். ரொம்ப குறைவான நாவல்கள் தான் நல்ல நாவலா வெளியாயிருக்கு..எங்க தலைமுறை ஆட்கள் தான் திரும்ப திரும்ப எழுதியிருக்காங்க… கரன்கார்க்கி, லட்சுமி சரவணகுமார், பேட்டை.. ஜே.பி.ஜானக்கியா சிறுகதைகள் சந்திரா என்னும் பெண் எழுத்தாளர். அவங்க நாவல் எழுதுனா நல்லா இருக்கும். சோ.தர்மர். போகன் சங்கர். கார்த்திகை பாண்டியன்
(translate) குப்புசாமி (translate). ஆசை.
தமிழ் துறையில் நான் ஐந்து துறையில் மட்டும் தான் பேசியிருக்கும். எனக்கு அடுத்த தலைமுறைகள் மீது மிகுந்த நம்பிக்கையுடையவன். அவர்கள் செய்யக்கூடியவர்கள். அதுமட்டுமல்ல செய்தும் காட்டியிருக்கிறார்கள் உதாரணமாக ஜல்லிக்கட்டு. அவர்கள் மீது நம்பிக்கையும் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சாதிப்பார்கள். குறிப்பாக இளம்பெண்கள் கூடுதலான காத்திரத்துடன் திறமையுடன் இருக்கிறார்கள். அதனால் அவங்க மேல இன்னும் நம்பிக்கையும் வாய்ப்பையும் கொடுக்கனும்…தற்போதைய இளைஞர்களுக்கு தேடிக்கேட்கும் பண்பு இருக்கு.
1 comment
அருமை