You are here
Puthagam Pesuthu Wrapper தலையங்கம் 

மொத்தத்தில் வாசிப்பே வாழ்க்கை புத்தகங்களே வாசஸ்தலங்கள்

மொத்தத்தில் வாசிப்பே வாழ்க்கை புத்தகங்களே வாசஸ்தலங்கள்

தமிழகத்தில் 100 நூலகங்களில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என்று தமிழகத்தில் நூலகத்துறையை தன் அமைச்சகத்தோடு வைத்திருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். யாழ்ப்பாணம் சென்று லட்சம் புத்தகங்களை யாழ் நூலகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் சிறப்பான சமீபத்திய நிகழ்வான சென்னை புத்தக திருவிழா 2018ன் நிறைவு விழாவில்தான் அவர் யாழ் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் அறிவிப்பை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். என்னதான் ‘வைஃபை” வசதி வந்து கணினியில், பிடிஎப் வடிவத்தில் நூல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டாலும், புத்தக வடிவம் அச்சான நூல் வடிவில் கையில் சுமந்து வாசிப்பதே சிறப்பானது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.. அதனால்தான் யுனெஸ்கோ தொழில்நுட்ப அறிவு பெறுதல் என்பதை கல்வியறிவு பெறுதல் எனும் படிநிலைக்கு அடுத்தபடியாகவே வைக்கிறது.

உலகிலேயே கல்வியறிவு மற்றும் செலவு செய்து தன் வாசிப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பிரஜைகள் அதிகம் கொண்ட நாடு என்று ரேங்கிங் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தியா 164வது இடத்தில் இருந்து 158வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இலங்கை, நேபாளம், ஏன்; பர்மாகூட நமக்கு பல நிலைகள் மேலே உள்ளன. பின்லாந்து முதலிடத்திலும் அமெரிக்காவுக்கு நான்கு படிநிலைக்கு மேலே கியூபா இரண்டாமிடத்திலும் உள்ளன. அதேபோல இந்திய அளவில் கேரள மக்களே வாசிப்பிற்கு அதிக செலவு செய்யும் மக்கள். சராசரியாக மாதம் ரூ.350, கேரள மக்கள வாசிப்பிற்காக செலவு செய்கிறார்கள். எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் எந்தக் கட்சி ஆட்சி என்றாலும் மூவாயிரம் பிரதிகளை அரசு வாங்கி தன் நூலகங்களில் வைக்கிறது.

மக்கள் தங்கள் வாசிப்பு இயக்கங்கள், கட்சி அமைப்புகள் யாவுமே மக்களின் புத்தக வாசிப்பை எப்போதும் ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் அது சராசரி மத்தியதர வர்க்கத்தின் வாடகை ஒண்டுக்குடித்தனமாக இருந்தாலும் 100 புத்தகங்களுக்கு குறையாமல் வைத்திருக்கும் மாநிலமாக கேரளா மிளிர்கிறது. புத்தக வாசிப்பை இயல்பாக இமாச்சல பிரதேச மாணவர்கள் மேற்கொள்ள புக் அவார்டு என்று வாசிக்கும் குழந்தைகளுக்கு அரசின் சிறப்பு விருதும் புத்தகப் பரிசுமழையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் இடது சாரி அரசு ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் பள்ளி நூலகங்களை ஆய்வு செய்ய உள்ளூர் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து குழுக்கள் உருவாக்கப்பட்டன. திரிபுராவில் ஆண்டுக்கு மூன்றுமுறை பள்ளிக் குழந்தைகள் தங்களது வகுப்பு நூலகங்களுக்கு தாங்களே புத்தகங்கள் வாங்கிட பள்ளிதோறும் புத்தகக் காட்சிகள் அறிமுகமாகி இருந்தன.

அன்றாட வேலைப்பளுவிலிருந்து விடுதலை வாசஸ்தலங்களிலோ கேளிக்கை விடுதிகளிலோ இல்லை. அது வாசிப்பின் மூலமே கிடைக்கிறது என மருத்துவ உலகம் சான்றளித்து உள்ளது. பல்வேறு நாடுகளில் வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்ததாக திருப்தி தெரிவித்தவர்கள் யார் என்று பார்த்தால் அதில் 70% பேர் புத்தக வாசிப்பை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக கொண்டிருந்தவர்கள். வாசிப்பே வாழ்க்கை; புத்தகங்களே வாசஸ்தலங்கள்; புத்தகத் திருவிழாக்களே கேளிக்கை மையங்கள். ஒப்பற்ற கொண்டாட்டங்கள். அனைவருக்கும் நன்றி

_ ஆசிரியர்குழு

Related posts

Leave a Comment