You are here
Melum Sila Sorkal கட்டுரை 

மேலும் சில சொற்கள் – நவநீதன்

ஒரு எழுத்தாளனின் உள்ளக்கிடங்கில் எப்போதும் இச்சமூகத்திற்கு சொல்லக்கூடிய, அதனோடு உரையாடல் நடத்தக்கூடிய எண்ணற்ற சங்கதிகள் என்றுமே நிரம்பியிருக்கும். தனது படைப்பின் வழியேயும், உரையாடல்களின் வழியேயும் அதை அவன் பகிர்ந்துகொள்கிறான். அப்படியாக நடத்தப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பே மதுசுதன் அவர்கள் தொகுத்து இந்த நேர்காணல்கள். அனலி பதிப்பம் வெளியிட்டுள்ள புத்தகம் பேசுது, தீக்கதிர், இளைஞர் முழுக்கம் போன்றவற்றில் வெளியான நேர்காணல்களைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளனர் படைப்பு உருவாக்கப்பட்ட காலத்தையும் நேர்காணல் கண்ட காலத்தையும் இணைக்கும் ஒரு கண்ணியாக கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன. நேர்காணலில் பங்குபெற்ற எழுத்தாளுமைகளின் படைப்பை வாசிக்க ஒரு உந்துதலை தருகிறது என்பதே இத்தொகுப்பின் சிறப்பாகும்.

‘உம்மத்’ நாவலின் மூலம் உலகில் தமிழ் இலக்கியம் பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா ஸயித் தனது நாவல் குறித்த அனுபவங்களையும், போருக்கு பின்னான இலங்கையின் அரசியல் சூழலையும் பகிர்ந்து கொள்கிறார். போருக்குப் பின்னர் சமூக வாழ்வானது தீராத வடுக்களை தீட்டிச்சென்றதே வரலாறு நமக்கு தந்த அனுபவம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. மழைக்குப் பின்னான தூவானம் போல போர் தூவிச்சென்ற துயரங்கள் விடுதலையை கனவாக ஏந்தி சமர்க்களம் புகுந்த முன்னாள் போராளிகளின் வாழ்வைப் புரட்டிப் போட்டன. முக்கியமாக பெண் போராளிகள் மீதான சமூகப் புறக்கணிப்பும், குடும்ப உறவுகளின் புறக்கணிப்பும் அவர்களின் வாழ்வை மேலும் வலியின் வாழ்விடத்திலேயே இருத்தி வைத்திருப்பதை ஸயித் விவரிக்கிறார்.

ஒரு எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் முழு விழுமியங்களை உட்கிரகித்து அதன்மூலம் அதன் எதிர்காலத்தைக் கணிப்பவன். இதை தனது பெத்தவன் நாவலின் மூலம் நிரூபித்தவர் இமையம். எழுத்தாளர் இமையத்தின் பதில்கள் பல்வேறு உரையாடலையும் திறந்துவிட்டுள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் தனது படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்கள் ஆக்குவதின் காரணத்தை இமையம் வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் ஓயாமல் பேசுகிறார்கள் என்ற சமூகக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளும் அவர் அதற்கான உளவியல் காரணிகளையும், குழந்தைகளின் மீது இன்றைய கல்விமுறை செலுத்தும் மனிதத் தன்மையற்ற தாக்குதல்களையும் வேதனையோடு எடுத்துரைக்கிறார்.

தனது கதைக்கான கருக்களாக அவர் கூறும் பதில்கள் எழுதவரும் புதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. தலித்துகளின் வாழ்வைத்தான் உங்கள் படைப்புகள் பதிவு செய்கிறதா என்ற கேள்விக்கு அறச்சீற்றம் கொள்கிறார் இமையம். பிற சமூகங்களின் துயரம் மனித துயரம். தலித்களின் துயரம் மட்டும் என்ன தலித் துயரமா என்ற அவரது பதில் நியாயவாதமானது. ஆண்ட சாதி பெருமை பேசி வீணாவோரில் விளிம்புநிலை மாந்தர்கள் தான் அதிகம். சாதியை வைத்து துயரங்கள் பிரித்து காட்டுவதை மறுக்கும் இமையம் ‘எனது படைப்பு மனிதத் துயரத்தை பேசுகிறது’ என்று குறிப்பிடுவதையே பெருமையாக நினைப்பதாக கூறுகிறார்.

வந்தாரங்குடி நாவலை அடிப்படையாக வைத்து அதன் ஆசிரியர் கண்மணி குணசேகரனின் நேர்காணல் வளர்ச்சியின் பெருங்காற்றில் உழைக்கும் வர்க்கங்களின் வாழ்க்கை கூரை பெயர்ந்தெடுத்து நிர்கதியாக்கப்படுவதை விவரிக்கிறது. அதேநேரம் கோயில்கள் இடிப்பு சம்பந்தமான சில வரலாற்று நிகழ்வுகளுக்கு கண்மணி குணசேகரனின் பதில்கள் ஏற்புடையனவாக இல்லை. நாவல்கள் புனைவானாலும் அதில் வெளிக்காட்டப்படும் உண்மைத் தகவல்கள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே எழுதப்படுவது சிறந்தது.

தனது முதல் நாவலின் மூலமே பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர் சம்சுதீன் ஹீரா. ஒரு வரலாற்று, ஆவணமாகிப்போன ‘மௌனத்தின் சாட்சியங்கள் நாவலை எழுதிய அனுபவத்தை, சந்தித்த பல தரப்பட்ட மனித பிம்பங்களை நேர்காணலில் ஹீரா பகிர்ந்துகொண்டுள்ளார். கோவை நவம்பர் கலவரமும் அதன் தொடர்ச்சியான குண்டு வெடிப்பும் மதவாதக் குழுக்களின் போட்டி என்பதோடு முடிந்துவிடுவதில்லை. அதன் பின்னணியில் உள்ள பொருளாதார ஆதிக்கத்தையும் ஹீரா தனது பேட்டியில் விவரிக்கிறார். பொதுச்சமூகத்தின் மௌனம் பாசிஸ்ட்களுக்கு என்றுமே ஒரு பேராயுதம். தனது தொடர் பிரச்சாரங்களின் ஒரு சங்பரிவார உளவியல் கருத்தாக்கம் அனைத்துத் தளங்களிலும் பரவியுள்ளதை குறிப்பிடும் ஹீரா பண்பாட்டுத் தளத்தில் போரிட வேண்டியதின் அவசியத்தை வழியுறுத்துகிறார்.

‘சாதியும் நானும்’ என்ற கட்டுரைத் தொகுப்பைப் பற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் பேட்டியும், அந்தத் தொகுப்பும் தற்காலத்தில் வாசிக்க வேண்டியதில் முக்கியமானவை. நகரமயமாக்கல் சாதியத்தை ஒழித்துவிட்டதா? இல்லையா என தொடர்ந்து விவாதங்கள் எழுந்துகொண்டேதான் உள்ளது. சாதியத்தின் வடிவத்தை மட்டுமே நகரமயமாக்கல் மாற்றியமைத்துள்ளதேயன்றி அதனைக் கட்டுடைக்கவில்லை என பெருமாள் முருகன் விவரிக்கிறார்.

தெருக்களாக கிராமத்தில் உள்ள சாதியம், ஏரியாக்களாக, அப்பார்மெண்ட்களாக நகர்புறத்திலும் பரிணாமம் அடைந்துள்ளதைத் குறிப்பிட்டுக் கூறுகிறார். சாதி மறுப்புத் திருமணம் செய்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார்.
வரலாற்று நிகழ்வுகளோடு தனது புனைவுகளை நாவலாக வடிக்கும் எழுத்தாளர் இரா. முருகவேள் தனது ‘மிளிர்கல்’ நாவலின் அனுபவத்தையும், அதன் அரசியல், கதாபாத்திரங்களின் தன்மையையும் இந்நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார்.

மனித உளவியலை தனது பெரும்பாலான கதைகளில் கருவாகக் கொண்டு எழுதிவரும் ஜி.கார்ல் மார்க்ஸ் “வருவதற்கு முன்பிருந்த வெயில்” என்ற தனது சிறுகதைத் தொகுப்பினை குறித்து உரையாடுகிறார். துயரங்களுக்கு அளவுகோல் இல்லை. எவ்வகையான துயரமானாலும் அது வலியானதே என்னும் எழுத்தாளர் தனது கதையின் கதாபாத்திரங்களை மனநிலையை நேர்காணலில் விளக்குகிறார்.

Related posts

Leave a Comment