You are here
pinju கட்டுரை 

கி.ரா.96: கி.ராவின் “பிஞ்சுகள்” ஒரு சுய புனைவு நாவல் – க. பஞ்சாங்கம்

ஒரு சுய புனைவு நாவல்.

கி.ரா. (1923…) தனது ஐம்பத்து ஐந்தாவது வயதில் எழுதி, கைெயழுத்துப் படியாக இருக்கும் போதே 1978-ஆம் ஆண்டில் சிறந்ததொரு படைப்பு என்று “இலக்கியச் சிந்தனை” பரிசைப் பெற்றது “பிஞ்சுகள்” என்ற குறுநாவல். கி.ரா.வின் எழுத்துப் பயணத்தில் இந்தக் குறுநாவல் குறிப்பிடத்தக்கப் படைப்பு என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் தனது இரண்டாவது மகன் “பிரபு”-வின் சிறுவர் பருவக் குறும்புகளிலும் அவரைப் படிக்க வைத்து எப்படியும் இந்தச் சமூக ஒழுங்கிற்குள் கொண்டு வர ஒரு தந்தை என்ற முறையில் தானெடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிகழ்வுகளிலும் தன்னையும் தன் தந்தையையும் கண்டு வியந்தெழுதிய படைப்பு இது. ஓரளவிற்கு இது தன் வரலாறு சார்ந்த புனைவு. எனவேதான் “எனது குழந்தைப் பிராயத்தில் என்னில் வாழந்த “பிரபு”க்கு” என்று இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
*****
பள்ளிக் கூடத்திற்குப் போகாமல் ஊரைச் சுற்றித் திரியும் இந்தக் குறுநாவலின் கதாநாயகன் வெங்கடேசு, வீட்டுக்குப் பின்னால் இருக்கும், இரவில் படப்புகளுக்குக் காவலுக்காகத் தங்கும் வேலை ஆட்களுக்கான ஓலைக்குடிசையில் வரகு வைக்கோல் போர் மீது சாய்ந்து கொண்டிருக்கிறான். அது ஒரு கடுங் கோடைக் காலம்; எனவே புழுக்கம் அதிகமாக இருக்கிறது. விசிறி வேண்டும்; கிராமத்தில் ஓலை விசிறி உண்டுதான்; ஆனால் அதை நாம்தான் கைவலிக்க எடுத்து வீச வேண்டும்; என்ன செய்வது? ஒன்பது வயது சிறுவன் வெங்கடேசு மூளையில் ஒரு யுக்தி பிறக்கிறது.தன் தலைக்கு மேல் உள்ள முகட்டுக் கம்பில் ஒரு வளமான சேவலைப் பிடித்து வந்து கால்களைக் கட்டித் தலை கீழாகத் தொங்கவிடுகிறான்.

அந்தச் சேவல் தன் சிறகுகளை அதன் வழக்கப்படி வேகமாகப் படபடவென்று அடிக்கும்போது வரும் காற்று அவனுக்குச் சொகமாக இருக்கிறது; இறக்கைகள் ஓய்ந்து விடும்போது, அது ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் அதே வேகத்தோடு விசிறுகிறது. இப்படிப்பட்ட வெங்கடேசு “இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு, தலையை அண்ணாந்து வாய்விட்டு அலைஅலையாகச் சிரித்து ரொம்ப நாட்களாகிவிட்டன”. காரணம் அம்மை நோய்; உடம்பெல்லாம் மண் சிலையில் விழுந்த தூறல் போல தழும்பு; இந்த அம்மை நோயினால் தன் பிரியமுள்ள அம்மா என்கிற தீபம் அணைந்து விட்டது என்று தெரியாமல் வேப்பிலையும் மஞ்சளும் கலந்த ஒரு கசந்த வாடை கொண்ட படுக்கையில் படுத்திருக்கிறான்.

அம்மாவைத் தேடும் அவனுக்கு, “ஊருக்குப் போயிருக்கிறாள்” என்று பொய் சொல்லி அவனுக்குத் தெரியாதபடிக் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுகிறாள் பாட்டி.
இப்படித் தொடக்கக் காட்சியை அமைத்துக் கொண்டு, பிறகு வெங்கடேசு அந்த ஊரின் தெருக்களிலும், ஆறு, குளம், மரம், மலை, காடு என்ற இயற்கைத் தாயின் மடிகளிலும் வாழ்ந்த வாழ்க்கையை கரிசல் காட்டு மொழியில் சொல்லிக் கொண்டே போகிறார் கதைசொல்லி. இவனுக்கு ஒரு நண்பன்; பெயர் செந்தில்வேல்.. காளிக்குப் பூஜை செய்கிறவன். அவனோடு இருந்துவிட்டு வரும்போது மறந்தவாறு நெற்றியில் பூசிய விபூதியை அழிக்காமல் வீட்டுக்கு வந்து விடுகிறான்; இவர்கள் வீடோ தீவிர வைஷ்ணவக் குடும்பம்; விபூதியைத் தொட மாட்டார்கள்; ஏன்; கண்ணால்கூடப் பார்க்கக்கூடாது; சிவன் பெயர் வரக்கூடிய வேலைக்காரர்களைக்கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

சிவன் பெயருள்ள ஊரின் பெயரைக் கூடச் சொல்லமாட்டார்கள்; வேறு மாற்றுப்பெயர் வைத்துக் கொள்வார்கள்; அதன்படிப் பக்கத்திலுள்ள சங்கரன் கோயிலுக்குப் பெயர் அவர்கள் வீட்டில் “ரோட்டூர்” என்பதாகும்; அத்தகைய வீட்டிற்குள் விபூதி நெற்றியோடு ஒரு பையன்; அப்பா கர்ஜனை காதைத் துளைக்கிறது; இடியும் மின்னலும் தாக்குவது போல் இருக்கிறது; அடித்துப் பிய்த்துவிட்டார். அம்மா ஓடிவந்து “ஐயோ என் குழந்தை ” என்று கட்டிப்பிடித்துக் கொள்ளுகிறாள்.அவள் மேலும் அடிகள். எந்த அளவிற்கு மத வேறுபாடுகள் இந்தியச் சமூகத்தின் அடிமனம் வரைச் சென்று குடியேறிக் கிடக்கின்றன அன்றும் இன்றும் என்பதைக் கதை சொல்லி பதிவு செய்கிறார்.

நண்பன் செந்தில்வேல் அப்பாவும் அம்மை நோயினால் கண் இழந்தவர்; அவர் வாசிக்கும் நாயனத்தைக் கேட்பதற்காகவே நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி வெங்கடேசு போய்விடுவான்; அந்த வாசிப்பின் ஓசை இன்பத்தில் உருகிக் கிடக்கும் போது, குருமலையின் நினைப்பும்கூடவே வந்து அதன் பிரமாண்டத்தில் மூழ்கி விடுவான். மலையின் கனத்த மெளனம் ஒரு கவர்ச்சியாய் அவனுக்குள் பரவும்; மலையை எத்தனை தடவை போய்ப் பார்த்தாலும் சரியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான் மிஞ்சும்.

ஒருநாள் படுக்கையில் இருந்து கண்விழித்த போது சோர்வும் சோகமும் தன்னைச் சூழ்ந்திருப்பது போல் உணர்ந்தான்; அதேநேரத்தில் வெளியே இருந்து ஒரு துள்ளும் இன்பக்குரல்; நிற்காமல் வாலை மேலும் கீழும் ஆட்டும் வாலாட்டிக் குருவி. கண்டவுடன் குதூகூலமாகிவிட்டான். இது நம்மூர் பறவை இல்லை; வரத்துப் பறவை என்றும் தெரிந்து கொண்டான்; அந்த அளவிற்குப் பறவைகளைப் பற்றிய ஞானம்; நகரத்தில் ஸ்டாம்பு சேகரிப்பது போல அவன் பறவை முட்டைகளைச் சேகரித்து வைத்துள்ளான்; ஒரு தடவை காக்கா முட்டையைத் தேடி மரத்தில் நிற்கும் போதுதான் வேட்டைக்காரர் திருவேதி நாயக்கரின் நட்பும் கிடைத்தது.

அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தன் இயற்கை குறித்த அறிவை வளர்த்துக் கொண்டான்; அவரிடம் காக்கா முட்டையும் குயில் முட்டையும்தான் என்னிடம் இல்லை என்று சொல்லிக் கொண்டே எல்லா முட்டைகளையும் காட்டினான்.வியந்து போனார் நாயக்கர்; எத்தனைவித முட்டைகள்; எத்தனை சைஸ்கள், எத்தனை நிறங்கள்!

திருவேதிநாயக்கர் மூலம் குயில்களைப் பற்றியும் வல்லயத்தான் பறவை என்ற வேட்டைப் பறவை பற்றியும் தெரிந்துகொண்டான்.மேலும் படைக் குருவிகள், தேன் கொத்தி, மைனாவின் பெருமை என்றெல்லாம் அறிந்து கொண்டான்; காக்கா பிடிக்கக் கழைக்கூத்தாடி செய்யும் தந்திரங்களை எல்லாம் பார்த்து அதிசயித்தான்; இப்படித் தேடித்தேடிக் கற்றுக்கொண்டான். முருங்கை மரத்திற்கு வந்த ஒரு சிட்டுக் குருவியைப் பற்றிப் பேச்சு வரும்போது வெங்கடேசு சொல்லுகிறான்:

“சிட்டுக்கள்ளெதான் எத்தனை வகையிருக்கு… தேன்சிட்டு, தட்டைச்சிட்டு, பூஞ்சிட்டு, பட்டுச் சிட்டு, வேலிச்சிட்டு, முள்ச்சிட்டு, மஞ்சள் சிட்டு, செஞ்சிட்டு, இந்தச் செஞ்சிட்டு அசல் குங்கும நிறத்திலெ இருக்கும். இந்தக் கருஞ்சிட்டு மாதிரி அதுவும் அபூர்வமா எப்பவாவதுதான் வரும். மாமா, இந்தப் பறவைகள்தான் எம்புட்டு அழகா இருக்கு”
இப்படி உணர்ச்சிவசப்படுகிறான் வெங்கடேசு – இப்படிஇவன் பேச்சைக் கேட்ட அவன் நண்பன் அசோக்கின் அண்ணன் மோகனதாஸ் இவனைப் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறான்; “உன்னெப்பத்தி நீ ரொம்பக் கொறைச்சி நினைக்கிறெ” ‘உண்மை அதுல்லெ. ஒன் வயதிலே நா இவ்வளவு விஷயம் தெரிஞ்சவனா இருந்ததில்லெ” என்ற கூற்று வெங்கடேசுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தந்தையிடம் தன் நண்பன் அசோக் போல வெளியூர் போய்த் தங்கிப் படிக்கத் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டான்; தந்தைக்குச் சொல்லி மாளாத மகிழ்ச்சி. பள்ளிக்காடு என்று பேர்பெற்ற பாளையங்கோட்டைக்கு  “ரயில் “ஜிகுஜிகு ஜிகுஜிகு” வென்று போய்க் கொண்டிருக்கிறது” என்று இந்தக் குறுநாவல் முடிகிறது. இந்தக் கிராமம் குழந்தைகளுக்கு வேண்டியதை யெல்லாம் கற்றுக் கொடுத்துவிடுகிறது. நேரு, லெனினைப் பற்றிக்கூட மோகனதாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் சொல்லித் தருகிறது; பல்வேறு குழந்தை விளையாட்டுக்கள், பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டு, பொண்ணை அலங்கரிக்கும் கலை, அசோக் வீட்டில் மாடு மேய்க்கும், திடீர் திடீர் என்று புத்திப் பேதலித்துவிடும் வடிவேல் பாடும்பாட்டு, பக்கத்தூருக்கு ஓடிப்போய் அங்கே போகும் இரயில் பெட்டிகளை எண்ணுவது, பாம்பு ரத்தினம் கக்கும்கதை, புழுதி உண்ணி எனப்படும் குழிநரி விளையாட்டு, அம்மை வந்தவர்களுக்குத் தண்ணீர் ஊற்றி முடிக்கும் சடங்கு, சிவப்பி நாயின் கதை, கல்முட்டை விடும் கோழி, தேள், நட்டுவாக்காலி பற்றிய கதை, மைனா வரிசையாகக் குளிக்கும் காட்சி, தண்ணீர்க் கோழியை எளிமையாகப் பிடிக்கும் வித்தை, மயில் எப்படி சம்சாரிகளுக்குப் பகைப்பறவை என்கிற புரிதல், கோழி, மைனா பேசும் மொழிகள்,ஊமைப்புறா, மரங்கொத்திப் பறவை, நாவல் மரக்கிளையைத் துளைக்கும் கடம்பை வண்டுகள், பிள்ளையார் மேல் மிளகாய் பூசி மழையை வரவழைக்கும் கதை, பூனை குட்டி போடும்போது தன் குட்டியையே திங்கும் செய்தி, ரத்தத்துளி போன்ற ‘இந்திர கோபம்’ என்கிற சிறுசிறு பூச்சிகள் – இப்படியெல்லாம் அமைந்துகிடக்கும் தன் கிராமத்தையே ஞானப் பள்ளிக் கூடமாகக் கொண்டு கற்றுக்கொண்டவன் வெங்கடேசு. கிராமம் மொத்தமும், குளம், ஆறு, மரம், காடு அனைத்தும் அவனுக்கு விளையாட்டு மைதானம்.

இப்பொழுது கையையும் காலையும் கூட வீசி விளையாடுவதற்கும் தடை உணர்வு ஏதும் இல்லாமல் விளையாட்டில் மனம் ஒன்றிப் பந்துகளை வீசுவதற்கும் அடிப்பதற்கும் இடம் அற்ற அந்த நகரத்திற்குள்ளே போகிறான். என்ன ஆவான்? நமது உள்ளம் துடிக்கிறது. தாக்குப்பிடிப்பானா வெங்கடேசு எனப் பதறுகிறது. பாரதியார் தன் “கனவுக்” கவிதையில் கூறுவது போலக் கல்வி என்ற பெயரில் படுகுழியில், ஏறுவதற்கரிய பாதாளத்தில், விலங்கினங்கள் வாழுகின்ற கொடும்குகைக்குள் போகிறானே வெங்கடேசு எனத் தவிக்கும்படியாக நம் நிலை ஆகிறது. இது இந்தப் “பிஞ்சுகள்” எனும் புனைவு தரும் மனநிலை.
*****
ஆனால் நான் இப்பொழுது நினைக்கிறேன். பிஞ்சுகள் நாவலில் வரும் வெங்கடேசு, இளமைக்கால கி.ராவும் அவர் இளையமகன் பிரபுவும் கலந்த ஒரு படைப்பு; கி.ரா.வைப் படிக்க வைக்க அவர் தந்தை எடுத்த முயற்சி தோல்வியுற்றதால் நமக்கு, தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஓர் அற்புதமான அரியதொரு படைப்பாளி கிடைத்தார்; தன் மகன் பிரபுவைப் படிக்க வைக்க தந்தை கி.ரா. எடுத்த முயற்சி தோல்வியுற்றதால் இன்றைக்கு இந்த 95 வயது முடிந்த காலத்தில் தன்னை ஒரு பறவைக் குஞ்சைக் கவனிப்பது போலக் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள ஒருமகன் கிடைத்திருக்கிறார்.

உலகப் பரப்பு முழுவதும் பிள்ளைகளைப் பறக்க விட்டுவிட்டுத் தனிமையில் பெற்றோர்கள் கிடக்கும் நவீன யுகத்தில் இந்தப் பேறு யார்க்குக் கிடைக்கும்? கூடவே பிரபு தந்தைபோலவே கதை புனையவும் தொடங்கிவிட்டார்; தமிழ் இலக்கியத்திற்குக் கி.ரா-வின் வாரிசு என்று ஒருவரும் வந்துவிட்டார். “கரிசல் காட்டு மனிதர்கள்” என்று தொகுப்பே வெளிவந்துவிட்டது; இரண்டாவது தொகுப்பும் தயாராகிக்கொண்டு இருக்கிறது. கி.ரா பெரும் அதிர்ஷ்டசாலி தான்.

Related posts

Leave a Comment