You are here
murkamibook கட்டுரை 

எழுத்து எனும் மராத்தான் – ச.சுப்பாராவ்

அவர் அல்ட்ரா மராத்தான் என்ற 100 கிமீ தூர ஓட்டத்தை ஓடியவர். உலகெங்கிலும் பல மராத்தான்களை ஓடியவர். மராத்தான் அலுத்துப் போனபிறகு, ட்ரைதலான் போட்டிகளில் களமிறங்கியவர். ட்ரைதலான் என்றால் முதலில் ஒன்றரைக் கிமீ நீச்சலடிக்க வேண்டும். அப்படியே நீரிலிருந்து வெளியே வந்து நாற்பது கிமீ சைக்கிள் ஓட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு, சும்மா ஒரு 10 கிமீ ஓடினால் ட்ரைதலான் முடிந்துவிடும். வேறு பத்திரிகைக்கு அனுப்பவேண்டிய விளையாட்டு வீரர் கட்டுரை தவறுதலாக இங்கே வந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் செய்பவரும் ஒரு எழுத்தாளர்தான். புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமிதான் அவர்.

ஓட்டப் பந்தயங்கள் மீதான அவரது பெருவிருப்பத்தையும், அது அவரது எழுத்திற்கு எவ்வாறு துணைபுரிகிறது என்பதையும் மிக அழகாக அற்புதமாக ஆனால் சுருக்கமாக அவர் எழுதியிருக்கிறார். ஓடுவதைப் பற்றிப் பேசும்போது நான் எதைப் பற்றிப் பேசுகிறேன்? – What I talk about when I talk about running? என்ற அவரது வாழ்வின் இரு முக்கியமான பகுதிகளான ஓட்டம், எழுத்து பற்றிய இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, அது ஓட்டம் பற்றியது மட்டும்தானா எழுத்தைப் பற்றியது மட்டும்தானா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

மனிதர்கள் வாழ்வில் நிறைய விஷயங்கள் மிகவும் தற்செயலாகவே நடக்கின்றன. நம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை நன்றாகச் செய்யும் திறமை இருப்பது ஒரு விபத்துப் போல் வெளிப்படும். விடா முயற்சியுடன் அதை வளர்த்துக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அப்படித்தான் மனைவியோடு சொந்தமாக ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்த முரகாமிக்கு திடீரென்று ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நாவல் எழுதுவதற்கு திறமை என்பதெல்லாம் இருக்கிறதா என்பது ஒரு பக்கமிருக்க முதலில் நல்ல பேனா இல்லை. கடைக்குப் போய் கொஞ்சம் பேப்பரும் ஐந்து டாலருக்கு செய்லர் என்ற கம்பெனியின் நல்ல பவுண்டன் பேனாவும் வாங்கினார். எழுத ஆரம்பித்தார். இன்று அவரது நாவல்கள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன.

இப்படித்தான் ஓடவும் ஆரம்பித்தார். மராத்தான் ஓடுவதற்கு உடல்பலமும், குவிந்த கவனமும், விடாமுயற்சியும், தேவை. இந்தப் பயிற்சிகள் தினமும் மணிக்கணக்காக நடக்கும். ஓடிக் கொண்டே அவர் அந்த ஓட்டத்தையும், எழுத்துப் பணியையும் ஒப்பிட்டுக் கொண்டே செல்வார். எழுத்து அவரை ஓடவைத்தது. ஓட்டம் அவரை எழுத வைத்தது. எப்படி என்பதுதான் இந்த சிறு நூல்.

வலி என்பது தவிர்க்க முடியாதது. அந்த வலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா என்பது நம் விருப்பம் சார்ந்தது. அந்த வலிக்குத் தயார் என்பவன்தான் ஓடவும் முடிகிறது. எழுதவும் முடிகிறது. மராத்தான் ஓடுபவர்கள் பயிற்சியின் போது, ஒரு உற்சாகமான கட்டத்தில், இன்னும் சற்று ஓடமுடியும் என்ற நேரத்தில் நிறுத்தி விடுவார்கள். அப்போதுதான் மறுநாள் ஓடமுடியும். எழுத்தும் அதைப் போலத்தான். ஒரு மிதமான கதியில் எழுதிக்கொண்டே சென்றுவிட்டு, ஒரு கட்டத்தில் நிறுத்தினால்தான், மறுநாள் வேலை அதே விதமாக ஓடும். ஹெமிங்வே கூட இப்படித்தான் செய்தார் என்கிறார் முரகாமி.

பொதுவாக மராத்தான் ஓடுபவர்கள் வெற்றி தோல்வி பற்றிக் கருதுவதில்லையாம். இந்த தூரத்தை இத்தனை நேரத்தில் கடந்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொண்டு, அதற்காகப் போராடுவார்கள். ஜெயிப்பார்கள். அவ்வளவுதான். ஒருவிதத்தில் எழுத்தும் அந்தமாதிரிதான் என்கிறார் அவர். எத்தனை பிரதிகள் விற்றன, எத்தனை பரிசுகள் கிடைத்தன என்பதெல்லாம் ஒருபுறமிருந்தாலும், எழுத்தில் நான் இந்தத் தரத்தை எட்டிவிட்டேன். இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்ததை எழுதிவிட்டேன் என்ற பெருமித உணர்வுதான் எழுத்தாளனுக்கு முக்கியம் என்கிறார்.

மராத்தான் வீரன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் தனிமையில் ஓடிக் கொண்டே இருக்கிறான். யாரிடமும் பேசாமல் பல மணிநேரங்கள் தனியாக இருப்பதற்கே ஒரு பயிற்சி தேவைப்படும். எழுத்தாளனுக்கும் இந்தத் தனிமை அவசியம். யாரிடமும் பேசாமல் நான்கு ஐந்து மணிநேரங்கள் தனது மேஜையில் உட்கார்ந்திருக்க முடிந்தவனே நல்ல எழுத்தாளனாகிறான். உங்களுக்கு இயல்பாக ஓட வருகிறது. விடாமுயற்சியுடன், அதற்கான பயிற்சியுடன் கூர்ந்த கவனத்துடன் ஓடி ஓடி நீங்கள் ஒரு மராத்தான் ஓட்டக்காரனாகிறீர்கள். இப்படித்தான் ஒருவன் எழுத்தாளனாக உருவாகுவதும். உள்ளார்ந்து உங்களுக்குள் எழுதுவதற்கான ஒரு திறமை இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே பயிற்சி மற்றதெல்லாம்.

எத்தனை விலையுயர்ந்த காருக்கும், பெட்ரோல் தேவையல்லவா? அந்தப் பெட்ரோல்தான் திறமை. அந்தத் திறமை மிகவும் குறைவுதான் என்றாலும்கூட அதை நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்தில் மிக கவனத்துடன் செலுத்துவது இரண்டாவது திறமை. முரகாமி தினமும் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு தான் எழுதப் போகும் விஷயத்தின் மீது தனது கவனத்தை முழுமையாகச் செலுத்தி யோசித்தபடியே உட்கார்ந்திருப்பாராம். பெரிய மர்மநாவல் எழுத்தாளரான அவரது நண்பர் ரேமாண்ட் சாண்ட்லர் ஒருமுறை தான் எதுவுமே எழுதாவிட்டாலும் கூட, தினசரி தனது எழுத்து மேஜையில் மூன்று மணிநேரம் உட்கார்ந்து எதைப் பற்றியாவது மிகக் கவனத்தோடு சிந்திப்பது வழக்கம் என்றாராம். முரகாமி அவரிடமிருந்து இந்தப் பழக்கத்தை எடுத்துக் கொண்டார்.

தினமும் மூன்று நான்கு மணி நேரம் இப்படி உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தால், ஒரே வாரத்தில் நீங்கள் களைப்பாக உணர ஆரம்பித்துவிடுவீர்கள் என்கிறார் முரகாமி. உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்பதை இப்படிக் கூறாமல் கூறுகிறார் என்று தோன்றுகிறது. அப்படி களைப்பாக உணராமல் இருக்க, உங்களுக்கு தாங்கும் சக்தி (endurance) வேண்டும். ஏனெனில் ஒரு எழுத்தாளனின் வேலை ஒரு வாரத்தில் முடிவதல்ல. நீங்கள் தினமும் மூன்று, நான்கு மணி நேரங்கள் என்று கவனம் குவித்து ஒரு வாரம் இரண்டு வாரம் என்றில்லாமல் ஒரு வருடம், இரண்டு வருடம் என்று வேலை பார்க்க வேண்டும்.

உண்மையில் நாவல் எழுதுவது என்பது உடல் உழைப்பு சார்ந்த விஷயம்தான். எழுதுவது என்பது மூளை உழைப்பைக் கோருவதாக இருந்தாலும், ஒரு புத்தகத்தை முழுமையாக எழுதி முடிப்பது என்பது உடலுழைப்புதான். பலரும், எழுதுவது என்றால் அது முழுக்க முழுக்க அறிவுசார்ந்த வேலை என்று நினைக்கிறார்கள். உங்களால் ஒரு டீகிளாஸைத் தூக்க முடியும் என்றால் போதும், நீங்கள் 400 பக்கத்திற்கு நாவல் எழுதிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அது அப்படியல்ல. பல மணி நேரம் மேஜை முன் மூளையை ஒரு லேசர் கதிர் போல் கூர்மையாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

உத்திரத்தை வெறித்துப் பார்த்து அதிலிருந்து ஒரு கதையை எடுக்க வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக சரியான வார்த்தைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே செல்ல வேண்டும். உடல் அசையாமல் ஒரே இடத்தில்தான் இருக்கும். நீங்கள் கனமாக எதையும் தூக்க வேண்டாம். ஓட வேண்டாம். குதிக்க வேண்டாம். ஆனால் இந்த அத்தனை வேலையையும் உங்கள் மனது உங்கள் உடலுக்குள் செய்து கொண்டே இருக்கும். இதற்கு உங்களுக்கு அசாத்தியமான உடல் பலம் வேண்டும்.

முரகாமி இதை உணர்ந்தார். மராத்தான் போட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினமும் ஓடிக் கொண்டு இருந்தார். கால்கள் மாறி மாறி வேகமாக அடியெடுத்து வைக்க வைக்க மனம் புதிய புதிய கதைகளை, புதிய புதிய வார்த்தைகளில் கோர்த்துக் கொண்டே இருந்தது.

எழுத்தாளன் என்றால் வேளை கெட்ட வேளையில் தூங்க வேண்டும், வேளை கெட்ட வேளையில் கண்முழிக்க வேண்டும். வேளை கெட்ட வேளையில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அறிவு ஜீவியாக அப்படியே படைப்புகள் நம்மிடமிருந்து கொட்டிக் கொண்டே இருக்கும் என்று நினைக்கும் படைப்பாளிகள் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

Related posts

Leave a Comment