You are here
Ranangal கட்டுரை 

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘ரணங்கள்’ நாவலின் 320 பக்கங்களையும் படித்து முடித்ததும். இது என்ன? சம்பவங்களின் தொகுப்பாக, இடையிடையில் பின்குறிப்புகளூடாக அந்தந்த காலங்களின் நிகழ்வுகள் குறிக்கப்பட்டு ஒரு ‘முழு நாவல் பேக்கேஜ்’ இல்லாமல் இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கக்கூடும். ஆனால் தோழர் அ.மார்க்ஸ் இந்நாவல் குறித்து தனது முன்னுரையில் கூறியுள்ள ‘இலக்கண’ வரையறையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதை முன்மொழிகிறேன்.
‘நாவல் இலக்கணம், இலக்கியம், இலக்கிய நுட்பம், பாத்திர படைப்பு என்றெல்லாம் நுணுகி ஆராய்ந்து இது ஒரு இலக்கியமாகத் தேறியுள்ளதா இல்லையா எனச்சொல்லும் விற்பன்னர்கள் சற்றே ஒதுங்கிக்கொள்வது நல்லது. உங்களின் இலக்கிய, இலக்கண வரையறைக்குள் இது அடங்காமல் போகலாம். இது எந்த ஒரு தனி மனிதனின் வரலாற்றையும் சொல்லவில்லை. ஒரு ஊரின், ஒரு சமூகத்தின், ஒரு காலகட்டத்தின் வரலாற்றைச் சொல்லுகிறது. புதின வடிவம் என்பது அந்த வரலாற்றைச் சொல்வதற்கு ராஜகுமாரன் தேர்வு செய்துள்ள ஓர் உத்தி, அவ்வுளவுதான்.’

தமிழில் கோவை கலவரங்கள் குறித்த பதிவுகள் மிகவும் குறைவுதான். அதுவும் பல ஆண்டுகாலம் இது குறித்து தோழர்கள் கரீம், சம்சுதின்ஹீரா, பிர்தவ்ஸ் ராஜகுமாரன் போன்ற வெகுசில எழுத்தாளர்களே எழுதிக் கொண்டிருக்கின்றனர். கோவையின் கலவரச்சூழலில் இஸ்லாமியர்களாக வாழ்ந்த, வாழும் இவர்களின் பதிவுகள் மிகச்சிறந்த ஆவணங்கள் இல்லையா? இவர்களின் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் கடந்து வந்த நடுக்கமான சூழலை அந்த வலியோடு பதிவு செய்வது மிகச்சிறந்த இலக்கியம் இல்லையா? இந்த தொடரில் ஏற்கனவே நான் எழுப்பிய கேள்வியை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். தமிழகத்தின் ஆகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள், மேதாவிகள், ஜாம்பவான்கள் இத்தகைய ஆக்கங்களை செய்ய மறுப்பது ஏன்?

இஸ்லாமியனாய் பிறந்த ஒரே குற்றத்திற்காக தவறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணை இல்லாமல், கடுமையாக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, திருமணம் நிறுத்தப்பட்டு, இளைமையை இழந்து, இருபது ஆண்டுகள் சிறையில் வாடிவதங்கி, தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டதால் தன் குடும்பம் நிர்கதியாக்கப்பட்டு இறுதியில் தன் குடும்பத்தையே பறிகொடுத்து, அநாதையாக சிறையிலிருந்து வந்து நடைபிணமாய் வாழும் ஒரு மனிதனிடம் இல்லாத என்ன திருப்பத்தை, சோகத்தை, பதட்டத்தை. மன பிறழ்வை உங்கள் இலக்கியங்களில் நீங்கள் படைத்திட இயலும்? அது சரி! தேர்தெடுக்கப்பட்ட வசீகர வார்த்தையில் படைக்கப்படும் புனைவுகள் நன்றாக விற்பனையாகும் போது இந்த வம்புகளெல்லாம எதற்கு என நினைப்பதும் சரிதான்!

‘ரணங்களை’ முழுமையாக படித்து முடித்ததும் முதலில் தோன்றும் உணர்வு ‘இந்த ஊடகங்களை என்ன செய்ய?’ என்பதுதான். தங்கள் வியாபரத் தேவைக்காவும், பெரும்பாண்மையினரான மக்களிடம் செய்தித்தாளை அல்லது தொலைக்காட்சியை விற்பனை செய்வதற்கும், தங்கள் செய்தி சுவராசியமாக இருப்பதற்கும் அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் இருக்கிறதே, அடடா அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் குறித்தோ, சிதைந்து போகும் வாழ்க்கை குறித்தோ எவ்வித அச்ச உணர்வோ, குற்ற உணர்வோ இல்லாமல் அவர்கள் செய்யும் அயோக்கியதனங்கள் நாவலின் உணர்வில் மிகவும் சிறப்பாக இடம்பிடித்துள்ளது. ‘ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கி, பெருமாள பெத்த பெருமாளாக்கும்’ சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. அப்படிதான் அமீனாவாக மாறிய சம்யுத்தா ‘வெடிகுண்டு அமீனாவாக’ பத்திரிக்கைகளால் மாற்றப்பட்டு பல கதைகள் எழுதப்பட்டு பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டாள். ஆனால் அதற்குள் அவள் பட்ட துயரங்கள் ஏன் எங்கும் செய்தியாகவில்லை?

பல மாதங்களாக கற்பனையில் கதைதிரித்து, பின்லேடன் சித்தப்பா மகன் அளவுக்கு பில்டப் செய்யப்பட்ட பல ‘தீவிரவாதிகள்’ கதை, கஞ்சிக்கு வழி இல்லாத அப்பாவிகள் என விடுதலை செய்யப்படும் போது வெறும் பெட்டிச் செய்தியாக நாலு வரியில் முடிந்துபோவது ஏன்? அவர்கள் நிரபராதிகள் என்று அறிந்த பிறகும் அவர்கள் குறித்த இரக்கம் வராதது ஏன்? இதுதான் நமது தேசத்தின் பொதுப் புத்தியாக இருக்கிறது. இந்த பொதுப் புத்தியைதான் முதலாளித்துவ பத்திரிக்கைகள் மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு வளர்க்கின்றன. இதற்குதான் எல்லா ஊடகங்களுக்குள்ளும் இந்துமத அடிப்படைவாதிகள் திட்டமிட்டு நுழைகின்றனர். ஊடகங்கள் குறித்த விசாரனையை தனியாக நிகழத்தாமல் இந்நாவலில், இக்பால் பாத்திரத்தின் அசைபோடல்கள் மூலம் மிகவும் நுட்பமாக ராஜகுமாரன் நம்மை அசைபோட வைத்துள்ளது நல்ல யுக்தி.

எழுத்தாளன் இக்பால் பாத்திரத்தின் மூலம் இஸ்லாமிய சமூகம் குறித்த பொதுவெளி சமூக கண்ணோட்டத்தை நாவல் முழுவதும் மிகவும் வலியோடு சித்தரித்துள்ளார். காவல்துறையும் ஊடகங்களும் மட்டுமல்ல, சக அரசு ஊழியர்களே எப்படி ஒரு கண்காணிப்பாளராக இஸ்லாமியர்களை கண்காணிக்கின்றனர் என, இக்பாலின் சக ஊழியர்களின் தேர்ந்த உரையாடல்கள் மூலம் புரியவைத்துள்ளார். கோவைக் கலவரங்களும் அவை உருவாக்கிய செய்தி திரள்களும் நாடு முழுவதும் எத்தனை இக்பால்களை திக்குமுக்காட வைத்துள்ளன எனபதை அறியும்போது மனது பதறுகிறது.

தினமும் சாலையோரங்களில் கடைகளை வைத்து, காவல்துறைக்கு மாமூல் கொடுத்து வழ்க்கையை தள்ளும் விளிம்பு நிலை இஸ்லாமியர்களின் வாழ்க்கைப்பாட்டுகான போராட்டம் மிகவும் காத்திரமாக இந்நாவலில் படைக்கப்படுள்ளது. இந்த நாவலை படித்த பின்பு பத்து ரூபாய்க்கு விற்பனையை எதிர்பார்த்து நிற்கும் இந்த இஸ்லாமிய நடைபாதை வியாபாரிகளை பார்த்தால் இனி உங்கள் உடல் நடுங்குவது நிச்சயம். விழித்ததும் ‘யே றெப்பே, இன்னிக்காவது பொழுது நல்லா போகணும், கொஞ்சம் வியாபாரம் நடக்கணும்’ என்று இறைஞ்சும் அப்பாவியான அவர்களின் வாழ்வில் பேரிடியாக வந்த கோவை கலவரங்களின் தாக்கங்களை மிகவும் கவனமாக இந்த நாவல் பதிவு செய்துள்ளது.

இன்னொரு பக்கம் இஸ்லாமிய சமூகத்தில் நடக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்ட நாவல் தவறவில்லை. குறிப்பாக இஸ்லாமிய சமூக திருமணங்களில் பெண்களுக்கு மஹர் கொடுத்துதான் ஆண்கள் திருமணம் செய்யவேண்டும் ஆனால் இப்போதெல்லாம் அது நடப்பதில்லை. வரதட்சணை கொடுமை அங்கேயும் பெண்களை வாட்டி வதைக்கிறது. ‘இறைத்தூதரின் சொல்லையும், செயலையும் நாளும் விடாமல் அமுல்படுத்திக் கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் ஆண் வர்க்கக் கூட்டம் உம்மாக்கள் பின்னாடி நின்றபடி சீர் வரிசைகளை பிடுங்கும்.’

‘நிக்காஹ் செய்ய வரும் ஜமாஅத் நிர்வாகத்தினர் பெண் வீட்டாரிடம் ‘எவ்வளவு சீதனம் கொடுக்குறீங்க..’ என்று கேட்டு தெரிந்துகொண்டு அதற்கு தக்கவாறு பர்சண்டேஞ் போட்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் பள்ளிப்பணம் வசூலித்துவிட்டு, நிக்காஹ் நடத்திய கையோடு முதல் பந்தியில் அமர்ந்து சுடச்சுட பிரியாணி சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். அவர்களின் ஒரே குறி பள்ளிபணம் அதிகமாக கிடைக்கவேண்டும் என்பதுதான். பள்ளிக்கு வரும் வருமானம்தான் அவர்களின் ஒரே இலக்கு. ‘கைக்கூலி வாங்குவது பெரும் பாவம்..’ என்று ஜும்மாவில் மட்டும் இமாம்கள் பயான் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.’ என்று நூர்ஜகான் மூலமாக பேசும் நாவலாசிரியர் பேசுகிறார்.

அதேபோல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் தாக்குதல் எப்படி அப்பாவி இஸ்லாமியர்களை, அவர்களது வாழ்வை சூறையாடுகிறது என்பதை சுட்டினாலும் ஒன்றை அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய சிறுபான்மையினர் கலவரகாலங்களில் அணி சேரும் உணர்வையும், அவர்கள் திருப்பித் தாக்குவதையும் பெரும்பான்மைவாத்துடன் இந்து மத அடிப்படைவாதிகள் அணி திரட்டுவதையும், அதன் அடிப்படையான அவர்களின் இந்துதுவத்தையும் நாம் ஒன்றாக பார்த்துவிட முடியாது. முன்னது தற்காப்புக்கானது, பின்னது தாக்குதலுக்கானது. நேரு சொன்னதைப் போல இந்தியாவில் இந்துத்துவம்தான் பாசிசமாக வடிவெடுக்க முடியும். இஸ்லாமிய உணர்வு அல்ல.

கோவை கலவரக்கால நிலவரங்களின் பல நுட்பமான தகவல்களை திரட்டி நாவலாக்கிய ராஜகுமாரன் கோவை காவலர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து காவல்துறையும், இந்துமத அடிப்படைவாதிகளும் செய்த கலவரங்களையும், அராஜகங்களையும், கொலைகளையும், சொத்துக்கள் சூறையாடல்களையும் மிகவும் நேர்மையோடு பதிவு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி இஸ்லாமியர்கள் மருத்துவமணைக்கு சென்றபோது அங்கு கொலை செய்யப்பட்டதை மனம் பதறும் வகையில் சித்தரித்துள்ளார். ஆனால் கிருத்துவரான செல்வராஜை இந்து என்று கேவலமான பொய்யை சொல்லிதான் இந்துமத அடிப்படைவாதிகள் கலவரங்களை துவக்கியதை சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில் மகாத்மா காந்தியின் படுகொலையின் போது அவரை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதியான, கொலைகாரன் நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைகுத்தி இருந்ததை தேசம் மறந்துவிடவில்லை. இந்துத்துவம் எப்போதும் இரையாடுகளை படுகொலைசெய்ய தப்பான காரணங்களை, அவதூறு பிரசாரங்களையே முன்வைத்து முன்னேறி உள்ளது. அவர்களுக்கு ஒரு பொய் போதும், கலவரங்களை துவக்க. அவற்றை இந்த நாவல் எல்லாப் பக்கங்களிலும் பேசிச்செல்வது சிறப்பானது.

எதிர்காலத்தில் தமிழக சமூக வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் நல்ல ஆவணமாய் திகழும். 250 ரூபாய் விலையுள்ள இந்நாவலை இலக்கியச்சோலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக கோவை மாநகரின் உடலில் மதங்களால் உண்டான கீறல்களின் உண்மையை அறிந்து கொள்ளும் விசாரணையாக நாவல் விரிகிறது. இப்புத்தகத்தின் அட்டையில் ஜெர்மனி எழுத்தாளர் குந்தர் கிராஸ் வார்த்தைகள் அச்சிட்டப்பட்டுள்ளன. கீழ்வருமாறு: ‘கதை என்பது உண்மையை அறிந்துகொள்வதற்கான ஒரு விசாரணை.’

Related posts

Leave a Comment