You are here
Kavipithan மற்றவை 

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன்

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன்

எதிர்பாரா தருணத்தில் மஞ்சள் வெயிலோடு பெய்கிற அபூர்வமான மாலை நேரத்து மழையைப் போல… அந்த ‘கதைத் தாத்தா’ எங்கள் ஊருக்கு வருகிற ஒவ்வொரு முறையும் திருவிழா நாளின் குதூகலத்தோடு கொண்டாடித் தீர்ப்போம்.

வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும், கணுக்கால் தெரிய தூக்கிக் கட்டிய வெள்ளை வேட்டியுமாக தாங்கித் தாங்கி நடந்தபடி… பின்மாலையில்… திடீர் விருந்தாளியைப் போல ஊருக்குள் நுழைவார் தாத்தா. எப்போது வந்தாலும் ஊரின் நடுவில் இருக்கிற ஏட்டுத் தாத்தாவின் வீட்டுத் திண்ணையில் தான் உட்காருவார். அவரைப் பார்த்ததுமே குஷி பிறந்துவிடும் எங்களுக்கு. பள்ளிக்கூடம் போகிற, போகாத எல்லா பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து அவருக்காக சாப்பாடு வாங்க… விளக்குவைத்த பிறகு இரண்டு அலுமினிய குண்டான்களைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஓடுவோம்.

ஒரு குண்டானில் களியும், இன்னொரு குண்டானில் குழம்பும் வாங்கிக்கொள்வோம். கேழ்வரகுக் களி, கம்பங்களி, சோளக்களி என வீட்டுக்கு வீடு அரை உருண்டையோ, கால் உருண்டையோ களியும், ஒரு கரண்டி குழம்பும் ஊற்றுவார்கள். நான்கைந்து வீடுகளில் வாங்கினாலே போதும். களி வாங்குகிற போதே கதைத்தாத்தா வந்திருப்பதை எதிர்ப்படுகிற அத்தனை பேரிடமும் சொல்லிக் கொண்டு ஓடுவோம்.
கீரைக் குழம்பு, பருப்புக் கடைசல், காய்ச் சாம்பார், காரக்குழம்பு என எல்லாவற்றையும் ஒரே குண்டானில் ஒன்றாகவே வாங்கிவருவோம். கருவாட்டுக் குழம்பு மட்டும் தனியாக வாங்கிவரச் சொல்வார். நொய்யரிசி கேழ்வரகுக் களியும், கருவாட்டுக் குழம்பும் அவருக்குப் பிரியமானவை.

அதே திண்ணையில் சம்மணம் போட்டு அமர்ந்து வாழை இலை விரித்து சாவகாசமாய்ச் சாப்பிட்டு, ஒரு பித்தளைச் சொம்பு நிறைய்ய தண்ணீர் குடித்து, இரண்டு மூன்று முறை பெருத்த ஏப்பம் விடுவார். கண்களில் வழியும் அன்பும் திருப்தியுமாய் எங்களைப் பார்த்துச் சிரிப்பார். ஐந்து பைசா, பத்துப் பைசா என நாங்களே வசூல் செய்து ரெட்டியார் கடையில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை வாங்கிவந்து பிரியத்தோடு அவருக்கு முன்னால் வைப்போம். வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்து மென்று, அதன் பின் நிதானமாக புகையிலைக்கட்டை விரித்துத் தட்டி, ஒரு துண்டை முறித்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டு மீண்டும் எங்களைப் பார்த்துச் சிரிப்பார்.

‘பசங்களா… கதய ஆரம்பிக்கலாமா…?’ என்று புகையிலை போதை கண்களில் மின்ன … கடை வாயில் கோடாய் வழியும் சாறைத் துடைத்துக்கொள்வார். ஊர்ப்பெரியவர்களும், பாட்டிகளும், பெண்களும் சற்றுத் தள்ளித் தள்ளி குத்துக்காலிட்டும், கால்களை நீட்டியும் உட்கார்ந்திருப்பார்கள். இளவரசியின் தீராத ஒற்றைத் தலைவலியைத் தீர்க்க… அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலில் பாய்மரக் கப்பலில் ஏறி நீண்ட பிரயாணம் செய்து, திக்கு திசை தெரியாத காட்டில் அலைந்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் வனாந்திரத்தின் நடுவில்…

வானத்துக்கும், பூமிக்குமாக உயர்ந்து நிற்கிற பெரிய்ய்ய்ய இரும்புத் தூணின் உச்சியிலிருக்கிற சஞ்சீவி மூலிகையைக் கைப்பற்றிக் கொண்டு வர இளவரசன் படுகிற துயரங்களை கேட்கக் கேட்க… அந்த வனாந்திரத்தில், தத்தளிக்கும் கடலில், வழுக்கி வழுக்கி விழவைக்கிற தூணின் வழவழப்பில் நாங்களும் மூழ்கிப் போவோம். விரிந்து நீண்டிருக்கிற எங்களின் தெரு கடலாகவும், காடாகவும், முதலைகள் சுழல்கிற அகழியாகவும் உருக்கொள்ளும்.

பேரழகியாய் பொய் வேடம் புனைந்து… பட்டத்து அரசனை மயக்கி, ராணியையும், யுவராஜனையும் சிறைக்குள் தள்ளிவிட்டு சர்வாதிகார ஆட்சி நடத்தும் சூனியக்காரியைக் கொல்ல, சிறையிலிருந்து தப்பி… ஏழு கடல்தாண்டி, ஏழுமலை தாண்டி, இருண்ட குகைக்குள், தங்கப் பெட்டியில் இருக்கும் பச்சைக் கிளியைப் பிடித்து, அதன் கழுத்தைத் திருகும் யுவராஜனின் சாகசங்களில் முட்டிக்கொண்டு வரும் சிறுநீரை அடக்கியபடி…. மெய்சிலிர்த்துக் கட்டுண்டு கிடப்போம்..

இரவின் முன்னேரத்தில் தொடங்கும் கதை பின்னிரவு தாண்டியும் நீளும். தூக்கத்தை மறந்துவிட்டு, கொட்டக் கொட்ட விழித்திருப்போம். கதைத் தாத்தாவுக்கு தொடர்ந்து நீள நீளமான கொட்டாவிகள் வரத் தொடங்கியதும், ‘மீதிக் கதை நாளைக்கு…’ என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்துக்கொள்வார். மனசே இல்லாமல் எழுந்து வீட்டுக்குப் போவோம். பாயில் படுத்துக் கண்களை மூடியதும் அவர் நிறுத்திய இடத்திலிருந்து கதையைத் தொடர்வோம். நாங்களே ராஜ குமாரனாகி மூலிகையைத் தேடி பயணிப்போம். குறுக்கே வரும் பிசாசுகளையும், பூதங்களையும் நீண்ட வாள்களால் குத்திக் கொல்வோம். வெந்நிற இளம் பனங்காயின் தலையை வெகு லேசாகச் சீவித் தள்ளுவதைப் போல எதிரிகளின் தலைகளை சீவி சீவித் தள்ளுவோம்.

பொழுது விடிந்ததும், அவருக்காக ஓடி ஓடி அதே அலுமினிய குண்டானில் கெட்டிக் கூழ் வாங்கிவருவோம். குளித்து சுத்தமாக இருக்கிற பையனை கல் உப்பைப் போட்டுக் கூழை கரைக்கச்சொல்லி, பித்தளை சொம்பில் ஊற்றிக் கொடுப்போம். கடித்துக் கொள்ள மாங்காய் ஊறுகாயும், நார்தங்காய் ஊறுகாயும் அவருக்குப் பிடித்தமானவை. காலையிலும் மதியத்திலும் கூழ் குடித்துவிட்டு ஊர்ப்பெரியவர்களோடு மழை மாரியைப்பற்றி பேசிக் கொண்டிருப்பார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அவரையே சுற்றிச் சுற்றி வருவோம். மீண்டும் இரவில் சாப்பாட்டுக்குப் பின் விட்ட இடத்திலிருந்து கதை தொடரும்.

இப்படி இரண்டு மூன்று நாள்கள் தங்கியிருந்து சில கதைகளைச் சொல்லிவிட்டு வேறு ஊருக்குக் கிளம்பிப் போய்விடுவார். சில நேரங்களில் கதையை முடிக்காமலே, அடுத்த முறை மீதியைச் சொல்வதாக, கதையின் மிக முக்கியமான கட்டத்தில் நிறுத்திவிட்டுத் தன் துணிப்பையோடு கிளம்பி போய்விடுவார். அந்தப் பையில் என்ன இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.

அவர் எங்கிருந்து வருகிறார், என்ன வேலை செய்கிறார், அவரது குடும்ப விவரம் என்ன என்று எதுவுமே எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவர் ஒரு முசல்மான் என்று மட்டும் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள். எப்போதிலிருந்து அவர் எங்கள் ஊருக்கு வரத் தொடங்கினார். எப்போதிலிருந்து அவர் வருவது நின்று போனது என்பது பற்றியெல்லாம் இப்போது எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஆனால் இப்போது அவரைப்போல கதை சொல்லிகள் யாரும் எங்கள் ஊருக்கு வருவதில்லை என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில்… விடியற்காலை நான்கு மணிவாக்கில், எங்கள் வீட்டின் கிழக்கிலிருக்கும் சீகலான் மரத்தில் கரிங்கரிமா குருவிகள் ‘கீக்சு கீச்சு’ என்று பேசத்தொடங்கிவிடும். அதற்கு முன்பே எங்கள் அன்னம்மா பாட்டி எழுந்துவிடுவாள். அப்போது அவளுக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். அவள் வயதொத்த பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சாலம்மா கிழவி, நாணாவரத்தாள், லட்சுமிப்பாட்டி ஆகியோரும் அந்த அதிகாலையில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். எல்லோருமே கணவன்மார்களை பொழுதோடு பாடையிலேற்றி அனுப்பி வைத்துவிட்டவர்கள்.

சுருக்குப் பைகளிலிருந்து காய்ந்த வெற்றிலையைப் பிய்த்து வாயில் போட்டு மென்று, அதனோடு கறித்துண்டுகளைப் போல துண்டாக்கபட்ட புகையிலைக் குச்சியையும், புகையிலையையும் சேர்த்து அடக்கிக்கொண்டு, ஊர்க்கதைகளைப் பேசத் தொடங்குவார்கள். பாட்டியின் பழைய நூல் புடவையை தலைவரை இழுத்து போர்த்திக்கொண்டு, அவர்கள் பேசுவதை அவதானித்துக் கொண்டிருப்பேன்.

கல்யாணத்துக்கு முன்பாக தனது வலது மார்பகத்தில் கரிய முலைக் காம்புக்குக் கீழே ஒரு வேணல் கட்டி வந்தது, கூச்சத்தினால் அதை யாரிடமும் சொல்லாமல் இருந்தது, கட்டி உடைந்து முலையெல்லாம் ரணமாகி அவதிப்பட்டது, சீழ் வைத்து உயிருக்கே உலை வந்துவிடும் என்ற பயத்தில் ஒரு வைத்தியரிடம் போய் ஒரு பக்க ரவிக்கையை மட்டும் திறந்து அதைக் காட்டியது, அவர் மருந்து வைத்துக்கட்டிய பிறகு ரணம் ஆறியது, அந்த முலைக் காம்புக்குக் கீழே அது இன்னொரு காம்பைப்போன்று கருந் தழும்பாய் மாறிப் போனது… என என் பாட்டி ஒரு கதையைப் போல் அந்த நினைவுகளை விவரிக்கையில்… அந்தத் தழும்பின் வடிவமும் நிறமும் எனக்குள் விரிந்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாமையின் மகள் கமலா கல்யாணமே செய்து கொள்ளாமல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொண்டது, கடைசிவரை குழந்தையின் தகப்பன் யாரென்று சொல்லாமலே அவள் செத்துப்போனது… மூலை வீட்டுக்காரி சரோஜாவுக்கு முதல் குழந்தை பிறந்த மூன்றாவது நாளே செத்துப்போனது… சுரந்த பால் வெளியேறாததால் முலைகளில் பால் கட்டிக்கொண்டு உயிர் போகிற வலியில் ராவெல்லாம் புரண்டு புரண்டு அழுதது, மறு நாளிலிருந்து முலைப்பாலைக் கறந்து கறந்து புற்றின் மீது ஊற்றி பாரம் குறைத்தது… என பாட்டிகள் தொடர்ந்து பேசிக்கொள்பவை எல்லாம் மனதுக்குள் காட்சிளாக விரிய விரிய கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

மெட்ராசிலிருந்து வெள்ளைக்கண்ணு ரெட்டியாரின் வீட்டுக்கு வருகிற தனுசு ரெட்டியார் கீழிருந்து மேல் வரை ஒரேமாதிரியாக ஊதிப் பெருத்திருப்பது… அவர் விதவிதமான சத்தங்களோடு குசு விடுவது… அவருக்கு சர்க்கரை என்றொரு புது வகை வியாதி வந்திருப்பது, அவரது மனைவிக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது, அவர்களுக்கு மெட்ராசில் இரண்டு மாடிகள் கொண்ட மெத்தை வீடு சொந்தமாக இருப்பது என்றெல்லாம் சாலம்மாள் கிழவி சொல்லும்போது அந்தக் குசுவின் நாற்றம் என் மூக்கைத் துளைக்கும்.

முன்னிரவு நேரங்களில்… பாட்டியின் சேலை முந்தானையைக் கையில் திருகியபடி அவள் மடியில் படுத்து பல புராணக் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.
ராஜகுமாரன் கதை, மந்திரிமார் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, சத்தியவான் சாவித்திரி கதை என தினமும் ஏதேனும் ஒரு கதையைச் சொல்வாள் பாட்டி.. இப்படி அதிகாலையில் ஊர்க்கதைகள் கேட்பதும், முன்னிரவில் புராணக்கதைகள் கேட்பதும் நான் கல்லூரிக்குள் கால் வைக்கிற வரை தொடர்ந்தது.
எனக்குத் திருமணமாகி, என் குழந்தைகளுக்கு கதை கேட்கும் வயது வருவதற்குள் தனது தொண்ணூற்றி மூன்றாவது வயதில் எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டாள் பாட்டி.

அந்த அதிகாலைகளில் என் பாட்டிகள் அவர்களுக்குள் பேசிக்கொண்ட ஊர்க்கதைகள் தான் இன்று என் கதைகளின் வேர்களாகவும், அவற்றின் கிளைகளாகவும், இலைகளாகவும் வளர்கின்றன. அன்றியும் கதைத்தாத்தா சொன்ன கதைகளிலிருந்தும் ஏதேனும் சில கூறுகள் என் கதைகளில் தலை காட்டிவிடுவதையும் நான் அனுமதிக்கிறேன். ஒரு படைப்பாளி ஆவதற்கான மரபணு மாற்றத்தை என் பாட்டிகளும், அந்தக் கதைத் தாத்தாவுமே எனக்குள் தொடங்கி வைத்ததாக பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது என் அம்மா எழுபதை நெருங்கும் வயதில் வாழ்கிறாள். என் குழந்தைகளும் கதை கேட்கிற வயதில் இருக்கிறார்கள், ஆனால் ஒரு நாளும் தன் பேரன், பேத்திகளுக்காக ஒரு கதையையும் சொன்னதில்லை என் அம்மா. அதிகாலைகளில் சக பாட்டிகளோடு அமர்ந்து வெற்றிலையை மென்றபடி ஊர்க்கதைகளைப் பேசிக் கொள்வதும் இல்லை.

விடியும் வரை தூங்கி, சூர்யோதயம் கடந்து துயில் எழும் என் குழந்தைகள் தொலைக்காட்சிப் பெட்டியில் தான் கண் விழிக்கிறார்கள். இடைவெளியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் தொடர்களே அவர்களை தத்தெடுத்துக் கொள்கின்றன. பிற்பகலில் தொடங்குகிறது அம்மாவின் தொலைக்காட்சித் தொடர் வேட்டை. மிகப் பிரபலமான தொடர்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு அசதியோடும் அலுப்போடும் நடு இரவில் தூங்கப் போகிறாள்.

இதே நிகழ்ச்சி நிரல்கள் தாம் நாட்டின் எல்லா வீடுகளிலும் நிறைவேறுகின்றன. கதை கேட்கிற ஆவலும் குறுகுறுப்பும் இன்றைய குழந்தைகளிடமும் தேய்பிறையாகி வருவதை கவலையோடுதான் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகள் கதைகளாக மட்டுமே நின்று போவதில்லை. அவை குழந்தைகளுக்குள் நிகழ்த்துகிற ரசாயன மாற்றங்கள் ஏராளம்.

போதையின் அதீத சுகத்திலிருக்கும் சில தாத்தாக்கள் அதிசயமாய் எப்போதாவது தம் கதைகளைச் சொல்ல முயல்கிற போது குழந்தைகள் அவர்களை நெருங்குவதில்லை.
ஆக, இன்றைய பேரன்கள் பேரன்களாக இல்லை. பேத்திகளும் பேத்திகளாக இல்லை. அதைவிட முக்கியம்… இன்றைய பாட்டிகளும் பாட்டிகளாக இல்லை.
இந்தியாவின் பாரம்பரியக் கலை என யோகாவை உலகறியச் செய்ய, அதை பிரபலப்படுத்த மெனக்கெட்ட நடுவண் அரசும், மாநில அரசுகளும் பாட்டிகளை மீட்கவும், அவர்களின் கதை சொல்லும் பாரம்பரியத்திற்கு உயிரூட்டவும் ஏதேனும் ஒரு சட்டம் கொண்டு வந்து அமுல்படுத்தினால் கூட நல்லதாக இருக்கும்..

தினசரி மாலையில் ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டை அமுல்படுத்தி, அதை ‘பாட்டிகளின் கதை நேரம்’ என அறிவிக்கலாம். அந்த நேரத்தில் ஒவ்வொரு பாட்டியும் ஒரு கதையையாவது தன் பேரன் பேத்திகளுக்குச் சொல்லியே தீரவேண்டும் என அவசரச் சட்டம் கூட போடலாம். அப்படி கதை சொல்லாமல் சட்டத்தை மீறுகிற பாட்டிகளுக்கு தொலைக்காட்சிகளே இல்லாத தீவில் ஆறுமாதம் வரை கடுங்காவல் தண்டனை கூட விதிக்கலாம். ஏனெனில் குழந்தைகளை மீட்பதற்கு முன்னால் நாம் பாட்டிகளை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

Related posts

Leave a Comment