You are here

வாசிப்பாயா… ஆயிஷா இரா.நடராசன்

அன்பார்ந்த குட்டி நண்பர்களே நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கற் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
– ஜவஹர்லால் நேரு (சுதந்திரதின உரை. 1959)

1. அற்புத உலகில் ஆலிஸ் (Alice’s Adventures in wonder land)
உங்களுக்குத் தெரியுமா?? முயல்கள் பூமிக்கு சற்று கீழே பொந்துகளில் தான் வசிக்கின்றன. உங்களைப் போல எட்டு வயது சிறுமி ஆலிஸ் தன் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றபோது தான் அந்த அதிசயம் நடக்கிறது. புத்தாடைகள் உடுத்திய முயல் ஒன்று அவசரமாக ஒரு பொந்தில் ஓடி மறைவதைப் பார்த்தாள் ஆலிஸ். அவள் பொந்தில் எட்டிப் பார்த்து இறங்கிட முயற்சி

அவ்வளவுதான்.. விழுந்தாள் விழுந்தாள்… விழுந்துகொண்டே இருந்தாள் அவள். பல மைல் ஆழம் கொண்ட குழி அது. பொத்தென்று போய் விழுந்தாள். என்ன அதிசயம்! அடி படவே இல்லை. ஆனால் அவள் விழுந்திருந்தது வேறு அதிசய உலகமாக இருந்தது. மாய ஜால மந்திர உலகம்… அங்கே ஆலிஸின் சாகசங்கள் படிக்கப் படிக்க நம்மால் விடவே முடியாத ஆமை, மாயப்பூனை, நீள தொப்பி மந்திரவாதி, சீட்டுக்கட்டு ஹார்டின் மனிதர்கள்…செந்நிற ராணி என அடுத்தடுத்து சுவையான ஆட்களால் தங்களது கற்பனை உலகம் விரிவடையும்.

1865 – ல் லுயிஸ்கரோல் அதை எழுதி வெளியிட்டார். இன்று டி.வி தொடராக சினிமாவாக, வீடியோ கேமாக என பல அவதாரம் எடுத்துள்ள அற்புதப் புத்தகம் இது. ஆலிஸ் அந்த விநோத உலகிலிருந்து மீண்டாளா இல்லையா என்பதே ஒரு திரில்.

2. ஆலிவர் டுவிஸ்ட் – சார்லஸ் டிக்கன்ஸ்
பாவம் ஆலிவர்! அவன் பிறந்த சில நிமிடங்களில் அவனது தாய் இறந்து போனார். அவனைப் போன்ற ஏனைய ஆதரவற்ற குழந்தைகளோடு அவன் அந்த தேவாலய விடுதியில் கிடத்தப்பட்டான். அங்கே அவன் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். பசி அவனைப் பாதி கொல்கிறது. கொஞ்சம் கஞ்சியை கூட கேட்டதற்காக தனிமை சிறையில் தள்ளுகிறார்கள்.

பின் அங்கிருந்து தப்பிய அவன் ஃபேகின் – எனும் கிழவனின் நய வஞ்சக திருட்டுக் கேசிடம் சிக்குகிறான். லண்டனின் கொடிய நிழல் உலகம் விரிகிறது. நடுவில் அவனை ஒரு பெரிய மனிதர் நல்ல மனதோடு ஆதரிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் மீண்டும் திருட்டுக்கூட்டத்திடமே சிக்கிப் பரிதவிக்கிறான். யார் இந்த ஆலிவர். நல்ல மனம் கொண்டு, தவறுகளைக் கண்டு மனம்வாடும் அற்புத சிறுவன் ஆலிவர். தனது தாயின் சகோதரி ரோஸ் மரியாவிடம் எப்படி காலந்தாழ்ந்து பின் வாழ்க்கையால் ஒப்படைக்கப்படுகிறான் எனப்தே இந்த அழகான கதை.

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதி தன் புனைப் பெயரான ‘பாஸ்’ என்ற பெயரோடு தொடராக 1860 களில் வெளியிட்ட அற்புதநூல். ஆலிவர் டுவிஸ்ட் எத்தனை முறை வாசித்தாலும் மனதை ஈர்க்கும் சூப்பர் புத்தகம்.

3. ராபின்ஸன் குரூசோ – டேனியல் டிஃபோ
செம அட்வென்சர்… அதுவும் கடல் சாகசங்கள்.. வாசிக்க வாசிக்க… கடலில் நாமே பயணிப்பது போலிருக்கும். ‘ராபின்சன் கடல் வேண்டாம்… சொன்னால் கேள்’ என்று அம்மா எவ்வளவோ தடுத்தும் ராபின்சன் கப்பலேறிப் போகிறான்.
எத்தனை புயல்கள், சூறாவளிகள்?! கப்பல் கேப்டன் கூட எச்சரிப்பார். ஆனால் ராபின்சன் கேட்டால் தானே? பலவகை அனுபவங்கள்தான் கதை என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை… வாட்? யெஸ்!

கப்பல் கவிழ்ந்து கடும் போராட்டத்திற்குப் பிறகு தனி ஆளாக ஒரு தீவில் கரையேறுகிறான் ராபின்சன். அங்கே யாருமே இல்லை. ராபின்சன் மட்டுமே மனிதன். இயற்கைக்கும் தனி ஒரு மனிதனுக்குமான போராட்டம். யாருமற்ற அந்தத் தீவில் வெறும் கையோடு ராபின்சன் 28 ஆண்டுகளைக் கழிக்கிறான்.. என்ன அற்புதம்??
டேனியல் டிஃபோ அபாரமான எழுத்தாளர். தனது நண்பர் கடல் பயணி அலெக்சாந்தர் ஷெல்கிரிக் என்பவரின் அனுபவங்களையே இந்தப் புத்தகத்தில் பதிவிடப்பட்டதாக வரலாறு சொல்கிறது. 1719 ல் வெளி வந்த பொக்கிஷம். இன்றுவரை பலவகையில் பல மொழிகளில் நம் வாசிப்பு ஆர்வத்திற்கு தீனி போடுவதை நிறுத்தவே இல்லை.

பலவகையில் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் வாசிப்பு தரும். அகமும் அபரிமித கற்பனை விரியும் திரில்லும் வேறு எதிலும் உங்களுக்கு கிடைக்காது படிங்க… ப்ரெண்ட்ஸ்..

4. ஈசாப் – கதைகள் – ஈசாப்
ஈசாப் ஓர் அடிமை. அந்தக் கால கிரேக்கத்தில் கி.மு 620 க்கும் 560 க்கும் இடையே வாழ்ந்தவர். அவர் கதைகளை தன் எஜமான் சமூகத்திற்கு சொல்லி சொல்லி விடுதலை நோக்கிப் பயணித்தாராம். என்ன அற்புதமான கதைகள்.
ஈசாப் விலங்குகள், மனிதர்கள் – என எல்லாவற்றையும் உற்றுக் கவனிப்பதில் வல்லவராக இருந்திருக்க வேண்டும். அவரை அடிமையாக வைத்திருந்தவர்களை வரலாறு மறந்து விட்டது. ஆனால் அடிமையாக அவர் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றார். காரணம், கதை எனும் படைப்பு சக்தி.

ஈசாப் கதைகளின் பெரிய சிறப்பு என்ன தெரியுமா.. கதையின் முடிவில் வரும் ஒரு வரி நீதி. மொத்தம் 725 கதைகள் உள்ளன. உங்களுக்கு எத்தனை தெரியும்? பல சந்ததிகளைக் கடந்து இன்றும் அவற்றை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
“பொன்முட்டை இட்ட வாத்து” ‘நகர எலியை சந்திக்கும் கிராமத்து எலி’ என நம் அன்றாட வாழ்வோடு இணைந்து விட்ட பல கதைகளின் புதையல் இதுதான்.
ஈசாப்பின் கதைகள் அவர் இறந்துபோன மூன்று நூற்றாண்டுகள் கழித்து கிரேக்க மொழியில் முதலில் தொகுக்கப்பட்டன. இன்றும் நமக்கு பல பல மொழிகளில் ஈசாப் கதைகள் கிடைக்கின்றன.

5. கலிவரின் பயணக்கதை – ஜொனாதன் ஷிப்ட்
ஜொனாதன் ஷிப்ட் எழுதி 1726 – ல் வெளிவந்த புத்தகம் இது என்றால் நம்பவே மாட்டீர்கள். இப்போது படித்தாலும் கீழே வைக்கவே முடியாது. இந்த நூல் நான்கு பாகங்களால் ஆனது. லெமுவெல் கலிவர் எனும் ஒரு கப்பல் – டாக்டரின் வினோதமான சாகசங்கள் படிக்க படிக்க அலுக்காது. கப்பல் கவிழ்ந்து லில்லி புடன்ஸ் எனும் தீவில் அவன் கரை ஒதுங்குவது முதல் பாகம். உலகப் பிரசித்தி பெற்ற கதை.

நமது கை அளவு – முழம் போடும் சைஸ் மனிதர்கள் வாழும் தீவு. கலீவரை கட்டிப் போடுகிறார்கள். அவன் மயக்கத்தில் இருக்கிறான. நான் மிருகமல்ல கலீவர்’ என முழிப்பு வரும்போது பதறியபடி அறிவிப்பான். அடுத்த ஒரு முழு வருடம் லில்லி புடன்ஸ் எனும் குட்டி மனிதப் பிறவிகளோடு பலவிதமான அனுபவங்கள் சாகசங்கள்… படிக்கப் படிக்க சூப்பராக நாம் அனுபவிப்போம்.

பிறகு இங்கிலாந்து திரும்பும் கலிவர், திரும்பவும் உலகிலேயே மிகமிக பெரிதாக பனைமரம் போல வளர்ந்த மனிதர் வாழும் ஜெயண்ட் தீவில் இந்த முறை சிக்குவான். அந்த பிரமாண்ட பிறவிகளை எப்படிச் சமாளித்தான் என்பது மீதிக்கதை.
கலீவர் பயணக்கதைகளை பலமுறை படமாகவும், கார்டூனாகவும் எடுத்து உலகம் அதைக் கொண்டாடியபடியே இருக்கிறது. கலிவர் லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ கேம் ஆடி இருக்கிறான்.

6. மாபி டிக் – ஹெர்மன் மெல்வைல்
கடல் சாகசக்கதைகளின் பிரியரா நீங்கள்? கண்டிப்பாக மோபி – டிக் நீங்கள் வாசிக்க வேண்டும். அசந்து போவீர்கள். மனிதன் காலகாலமாகவே விலங்குகளை வேட்டையாடி உண்டு வருகிறான். ஆனால், உள்ளதிலேயே ஆபத்தானது திமிங்கிலங்களை வேட்டையாடுவது. திமிங்கல வேட்டைக்காக ஒரு காலத்தில் பசிபிக் பிராந்தியம் முழுதும் பல கப்பல்கள் வலம் வந்தன.

அதில் ஒன்று ‘பெக்கோட்’ எனும் பிரமாண்டமாக்கப்படும். அதன் கேப்டன் ஆஹாப் உடன் பயணிக்கிறான் நமது இஸ்மாயில். பதட்டத்தோடு மனம் திக்திக்கென்று அடிக்க இஸ்மாயில் நமது அந்த சாகசப் பயணத்தின் கதையை வர்ணிக்கிறான். கேப்டன் ஆஹாப் திமிங்கலம் எது கிடைத்தாலும் வேட்டையாட இந்தமுறை கடலுக்கு வரவில்லை. அவன் மோபி டிக் என்று அழைக்கப்பட்ட ஒரு திமிங்கலத்தை வேட்டையாட வந்துள்ளான்.

மோபி – டிக் திமிங்கல வேட்டைக்காரர்களை தாக்கி அழிக்கும் அற்புதத் திமிங்கலம். அதை வேட்டையாடுவதுதான் ஒற்றைக் கால் (ஒரு கால் மரக்கால்) கேப்டன் ஆஹாப்பின் ஒரே நோக்கம். யார் வென்றது என்பதே மீதிக்கதை. 1851 -ல் ஹெர்மன் மெல்வைல் எனும் கப்பல் சிப்பந்தி எழுதிய அற்புத புத்தகமே மோபி – டிக், ‘பெக்கோட்’ கப்பலில் நாம் பிரயாணம் செய்வதுபோல அந்த சாகச அனுபவத்தை தரும் நூல் இது.

7. டான் குவிசாட் – மிக்யுவெல் செர்வான்ட்ஸ்
ஸ்பானிய மொழியில் 1611ல் எழுதப்பட்ட அழகுப் புதினம் வெளிவராத மொழி கிடையாது. அலான்சோ குவிசானோ ஸ்பானிஷ் நாட்டில் கொஞ்சம் தகுதி குறைவான ஆனால் ராஜவம்சத்து மனிதன். ‘நானும் ரவுடிதான்’ என்பதுபோல தானும் பெரிய போர் வீரனே என பில்டப் காட்ட முயற்சி செய்வான்.

அவன் ஏன் அப்படி ஆனான் தெரியுமா? அவனிடம் வீட்டில் ஒரு நூலகம் இருந்தது. அதனால் அவன் சரியாக உறங்குவதே இல்லை. படித்துப் படித்தே அவன் இப்படி போர் வீரனாகி சாகசங்கள் செய்ய முடிவெடுத்து உடன் சாஞ்ச்சோ பான்ஸா எனும் அப்பாவி விவசாயியை இழுத்துக் கொண்டு தனி ஆளாக போருக்கு கிளம்புகிறான். பிறகு சிரிக்காமல் உங்களால் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியாது. சும்மா கொசு கடிப்பதற்கெல்லாம் மன்னரின் கொலைச் சதி என அநியாயத்திற்கு பில்டப் செய்வதை மட்டுமல்ல; ஒரு முடிதிருத்தும் மருத்துவரும் நண்பர்களுமாக குவிசாட்டின் காலாவதியான நூலகத்தின்,தேவை இல்லாத நூல்களை கொளுத்தும் இடம் அதை விட சுவாரசியமானது. உலக சிறுவர் இலக்கியத்தின் மணி மகுடம் இந்த நாவல்.

8. ரிப் வான் விங்கிள்  – வாஷிங்டன் இர்வின்
ஜெர்மனிய நாட்டுப்புற கதை ஒன்றை மையமாக வைத்து ரிப் வான் விங்கிள் எழுதப்பட்டது. ஆனால் 1819ல் எழுதப்பட்ட இந்த கதை ஒரு அழகான அறிவியல் புனை கதை.. அதாவது சயின்ஸ் ஃபிக்ஷன். கூடவே ஒரு கற்பனாவாத உலகம். அதாவது ஃபாண்டஸி – இரண்டும் இணைந்தால் கேட்கணுமா? சுவையோ சுவை.
ரிப் வான் விங்கிள், கேட்ஸ்கில்ஸ் எனும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறான்.

எப்போதும் கரித்துக் கொட்டும் மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் அவன் அடர்காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கே கடல் கொள்ளையன் ஹென்றி ஹட்சனின் ஆவியோடு ஒரு இரவைக் கழிக்க நேர்கிறது. கடற்கொள்ளையனின் ஏனைய சகாக்கள் (அவர்களும் ஆவிகளே) உண்டு குடித்துக் கும்மாளமிட்டு ரிப் வான் விங்கிகளுக்கு வயிறுமுட்ட உணவு கிடைத்து விடுகிறது. அப்படியே மரத்தடியில் உறங்கும் அவன்.. இருபது வருடம் கழித்துதான் விழித்து எழுவான்.

9. டாம் சாயர் சாகசங்கள் – மார்க் ட்வெயின்
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காலாண்டுத் தேர்வு விடுமுறையில் வாசித்த சூப்பர் புத்தகம் டாம் சாயர் சாகசங்கள். தந்திரம், குறும்பு, தப்பித்தல், சேட்டைகள் நம்மை நமது வாழ்வை நியாபகப்படுத்தி விடும். நாமும் அப்படித்தானே. 1876ல் மார்க் ட்வைன், இந்தப் புத்தகத்தை தட்டச்சு செய்தார். அதுவரை எல்லாரும் பேனாவைப் பிடித்து பேப்பரில் எழுதி பிறகு அச்சுக்குத் தருவார்கள். உலகிலேயே முதன் முதலில் தட்டச்சு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாம் சாயர் சாகசங்கள்தான்.

மிஸிஸிப்பி ஆற்றின் கரையில் ஒரு குட்டி ஊரில் வாழும் டாம் தன் நண்பர்களோடு அடிக்கும் லூட்டிதான் கதை. தான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவங்களை ஒரு சுயசரிதைபோல இதில் இறக்கி இருக்கிறார் என்பதே உண்மை. தனது அத்தையான பாலியுடன் வசிக்கும் டாம் சாயர் காம்பவுண்டு சுற்றுச்சுவரான கட்டைகளுக்கு தன் நண்பர்களுக்கு ஆப்பிள் தருவதாக வாக்களித்து உலகிலேயே சுவையான வேலை என ரீல் விட்டு பெயிண்ட் அடிக்கச் செய்வதிலிருந்து பூனை சாகசம் வரை பலவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவம். பிறகு மார்க் ட்வெயினின் மற்ற எழுத்துகளை உங்களால் கைவிடவே முடியாது.

10. மகிழ்ச்சியான இளவரசன் – ஆஸ்கர் வைல்டு
ஆஸ்கர் வைல்டின் பல கதைத் தொகுதிகள் உண்டு. ‘தி ஹாப்பி பிரின்ஸ்’ மற்றும் கதைகள் தொகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்தப் புத்தகம் வெளிவந்த வருடம் 1888. ஆனால் இன்று வரை நம் சிறுவர் வாசிப்பு உலகின் டாப் 10 நூல்களில் இதுவும் ஒன்று.

இதில் இடம் பெற்றுள்ள இரண்டு கதைகளை நான் எப்போதும் மறவேன். ஒன்று இந்த மகிழ்ச்சியான இளவரசன். அது நிஜ இளவரசன் அல்ல. அவன் அரண்மனையில் சிறைப்பட்டு இருந்த காலத்தில் வெளி உலகமே அறியாததால் எப்போதும் மகிழ்ச்சியான இளவரசனாக அவன் இருப்பான். அவனுக்கு ஒரு பாலத்தின் அருகே சிலை வைப்பார்கள். ஊர் உலகம் சிலையான அவனுக்கு புரிகிறது. அவன் ஏழைகளின் துயரங்களுக்காக… துக்கப்படுவான். ஒரு தூக்கணாங்குருவி அவனுக்கு நண்பனாகிறது. அவன் கண்ணில் படும் ஏழைகள் துன்பப்படுவோர்க்கு உதவிட குருவியை அனுப்புவான்.

மற்றொரு கதை ‘தி செல்ஃபிஷ் ஜெயண்ட்’ சுயநல அரக்கன். குழந்தைகள் மீது எப்படி அன்பு செலுத்துவது என உலகிற்கே சொல்லிக் கொடுத்த கதை அது. இதே தொகுதியில் இடம் பெற்ற ‘நைட்டிங்கேல் பறவையும் ரோஜா’வும் எனும் கதையும் உலகப் பிரசித்தி பெற்றது. உங்கள் பள்ளி நூலகத்தில் இது கண்டிப்பாக இருக்கும்.

11. ஹைடி – ஜொஹானா ஸ்பைரி
பச்சைப் பசேலென்று அடர்ந்து படர்ந்த மலைகளின் சரிவில் குட்டிமானைத் துரத்தியபடி தத்தக்கா பித்தக்கா என ஓடும் சிறுமியை கற்பனை செய்ய முடிகிறதா. அவள் பெயர்தான் ஹைடி. சுவிட்ஸர்லாந்து நாட்டின் எழுத்தாளர் ஜொஹானா ஸ்பைரி எழுதிய ஆல்ப் மலைபிரதேச கதை இது.

பாவம் குட்டி சிறுமி ஹைடி. பெற்றோரை இழந்தவள். அவளது அத்தை ஒருத்தியால் ஹைடி ஆல்ஃப் மலை பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் தன் முரட்டுத் தாத்தாவிடம் வா-ழ அனுப்பப்படுகிறாள். மெல்ல தாத்தாவின் அன்புக்கு பாத்திரமாகிறாள். வாழ்க்கை அவளுக்கு அற்புதமான சாகசங்களை அள்ளித் தருகிறது. ஆட்டுக்குட்டிகள், கொம்பு மான்கள் அவற்றை துரத்தித் திரியும் மலைப்பிரதேச பையன்கள் என தினமும் ஒரு அழகுச் சம்பவம். ஆனால் விரைவில் ஹைடி மலைகளிடமிருந்து பிரித்தெடுத்து பிராங்க்பர்ட் நகருக்கு செல்ல நிர்பந்திக்கப்படுவார்.

நகர வாழ்க்கையை அவள் மனதார வெறுத்து கசப்புடன் காலம் கழிப்பாள். பாவம் மலைகளின் இளவரசியான அவளால் நகரின் முரட்டுத்தனத்தோடு தாக்குப் பிடிக்க முடியாதநிலை. அவள் மீண்டும் தன்னைத் தாலாட்டி வளர்த்த அந்த ஆல்ஃப்ஸ் மலைத் தொடருக்கே திரும்பினாளா என்பதே கதையின் சஸ்பென்ஸ். சுவிஸ் மொழியிலிருந்து ஜெர்மன் மொழிக்கு வந்து, பின் ஆங்கிலத்திலும் வெற்றிவாகை சூடிய அழகான கதை.

12. விஸார்டு ஆஃப் ஓஸ் – எல். பிராங்க் பாவு
மூக்கு நீண்டு பெரிய தொப்பையோடு அதற்கு கீழ் பாதம் மட்டுமே தெரிய வாத்துமாதிரி உள்ள மனிதர்களைக் கொண்ட ஓஸ் தீவு என் பள்ளிப் பருவத்தில் பேசு பொருளால் நண்பர்கள் இடையே நீண்ட காலம் தங்கியது. மிக அழகான கதை. ஒரே புத்தகமல்ல. ஒரு நாவல் தொடர்போல கதை கதையாக தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும் புதையல் இந்த ‘விஸார்டு ஆஃப் ஓஸ், இதன் முதல் தோற்றம் 1900ல் பிராங்க் பாவு (Frank Baum) என்பவரால் ஆங்கிலத்தில் வந்தது என்று இன்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.

வயற்புரத்து சிறுமி டொராத்தி கேல் மாமா ஹென்றியால் வளர்க்கப்படுகிறார். அவர்களது ஊரை சுழன்று எழும் பயங்கர சுழற் சூறாவளி தாக்குகிறது. டொரோத்தியையும் அவளது குட்டி நாய் டொடொவையும் உள்ளே இழுத்துக் கொண்டு வானை நோக்கி சூறாவளி உயர்ந்து பயங்கர வேகத்தில் தூக்கிச் செல்கிறது. அடுத்த நாள் டொரோத்தியும் டொடொநாயும் வினோதமான வாத்து மனிதர்கள் மத்தியில் இருப்பார்கள். அது தான் ஓஸ் தீவு. அற்புதமான சாகசங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. பிராங்க் பாவும் அதன் பின் 18 பாகங்களாக கதையை விரிவுபடுத்தினார். எல்லாமே சூப்பர் கதைகள்.

13. தி ஜங்கிள் புக் – ருட் யார்டு கிப்ளிங்
இன்று திரைப்படமாக திரும்ப எடுக்கப்பட்டு சக்கைப்போடு போடும் ‘தி ஜங்கிள் புக்’ உண்மையில் 125 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கிப்ளிங்கின் சிறார் நாவல். கிப்ளிங் இந்தியாவில் பிறந்தார். வனப்பகுதிகளில் பிரிட்டிஷ் அதிகாரியாக இங்கே பணியாற்றிய தன் தந்தையோடு சுதந்திரமாக குட்டிக் குழந்தையாக இருந்தபோது சுற்றிச் சுற்றி வந்தார் இந்தியாவின் அடர்ந்த காடுகளைத் தனது சாகசபிரதேசமாக ஆக்கிக் கொண்டார்.

அந்த வாழ்வின் வழியே மனதுக்கு தோன்றிய அழகான கதை தான் ஓநாய்க் குடும்பத்தால் வளர்க்கப்படும் மோக்லி எனும் சிறுவனின் பாத்திரம் கதையில் அவன் மட்டுமே மனிதன். மனிதன் காடுகளை எப்படி வென்று சூப்பர் உயிரியாக மாறினான் என்பது இக்கதை வழியே நமக்கு பிடிப்படுகிறது. போலுகரடி, பகீரா கருஞ்சிறுத்தை இவை மோக்லியின் தோழர்கள். ஆனால் அவனை கொன்று தின்னவென்று திரியும் பெரிய வில்லன் ஷெர்கான் எனும் புலி. அந்தப் புலியிடமிருந்து குட்டி சிறுவன் மோக்லி எப்படி தப்புகிறான் என்பதே கதை.

14. அராபிய இரவுகள் (ஆயிரத்தோரு இரவுகள்)
பாலைவனங்களின் வாழ்வைச் சித்தரிக்கும் சூப்பர் கதை புத்தகம் ஒன்று உண்டென்றால் அது அராபிய இரவுகள் தான். உங்கள் பள்ளியின் நூலகத்தில் கண்டிப்பாக இருக்கும். இந்த புத்தகத்தின் அதிசயம் என்ன தெரியுமா? இதை யாருமே எழுதவில்லை. பலர் ஒட்டகப் பயணத்தின் ஊடாக பலரோடு பகிர்ந்த மிக அழகான கதைகளின் தொகுதி தான் இந்த ஆயிரத்தோரு இரவுகள். இக்கதைகள் ஆயிரம் வருடங்களாக உருவாகி எழுத்தில் வடிக்கப்பட்டன என்கிறது வரலாறு.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்‘ கதை எவ்வளவு சுவாரசியமானது. விளக்கை தேய்த்ததும் ஒரு பூதம் நமக்கு எதையும் உதவிட வந்தால் வீட்டுப் பாடத்திலிருந்து பரிட்சை வரை எல்லாமே ஆனந்தமாக மாறும் அல்லவா. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா. அண்டாகாகசம்… சொன்னால் திறக்கும் குகைக்குள் கொட்டிக் கிடக்கும் வைரப்புதையல் வேண்டுமா?  அல்லது, சிந்துபாத்தோடு உலகப் பயணம் மேற்கொண்டு சாகசங்களில் களித்திருக்க வேண்டுமா. ஷா யார் அரசன் அவனது மகாராணி மற்றும் கதை சொல்லி ஷெர்ஷேத் ஆகிய பாத்திரங்களை வாழ்நாள் முழுதும் நாம் மறக்கவே முடியாது.

இந்த பிரமாண்ட புத்தகம் எழுதப்பட்டது அரேபிய மொழியில்தான். ஆனால் உலகின் 1000 மொழிகளில் மீண்டும் மீண்டும் இக்கதைகள் சொல்லப்படுவது எவ்வளவு அற்புதம். எத்தனை கதைகள் உள்ளன தெரியுமா. 1000 கதைகள்.

15. பினோச்சியோ – கார்லோ கொல்லொடி
பினோச்சியோ ஒரு பொம்மை என்றால் நம்புவது கஷ்டம். நாம் எல்லாருமே நம் பொம்மைகளோடு பேசி வளர்ந்தவர்கள்தானே. ஆனால் பொம்மை செய்யும் கடை வைத்திருக்கும் அங்கிள் கெப்பெட்டோ செய்தது அதற்கும் மேல். அவருக்கு பிள்ளைகள் கிடையாது எனவே அவர் தான் செய்த அழகான பொம்மையான பினோச்சியோவை தனது மகனாக தத்தெடுத்து கூடவே வைத்துக் கொள்வார். ஆனால் பினோச்சியோ அவருக்கு அடங்குவதே கிடையாது. பயங்கர சேட்டை. அதைவிட கொடுமை அப்பாவைக் கைவிட்டு சாகசங்களைத் தேடி அவன் கிளம்பிவிடுவான்.

1881ம் ஆண்டு கார்லோ கொல்லாடி இத்தாலிய மொழியில் எழுதிய புத்தகம் இது. இதுவரை 250 உலக மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ளது. வால்ட் டிஸ்னி 1940ல் தொடங்கி ஆறு தலைமுறைகளுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பினோச்சியோவை கார்டூன் கிராஃபிக் படமாக எடுத்து வரலாறு படைத்தார்கள்.
தன்னிச்சையாக இந்த ஆபத்தான உலகில் சுற்றித் திரிந்த பினோச்சியோ ஒரு தேவதையால் காப்பாற்றப்படுவான். மனம் மாறி நல்ல பொம்மையாக அவன் வாழ்ந்து எல்லாருக்கும் உதவி செய்யும் இடம் வாசிக்கவே நன்றாக இருக்கும். பிறகு அவன் பெறும் பரிசுகள் வரம்.

இதெல்லாம் மிக அழகான விஷயங்கள் தனது வளர்ப்புத் தந்தையோடு பினோஜ்சியோ இணையும் இடம் மிக சுவாரசியமானது.
இந்தக் கதையை ஒரு முறை வாசிக்கும் ஒருவர் பிறகு வாழ்நாளில் பொய் சொன்னால் மூக்கு நீண்டு விடும் என்று ரொம்ப வருடங்களாக ஒரு நம்பிக்கை உள்ளது. நீங்களும் பரிசோதித்து பாருங்களேன்.

16. பனி வெண்மை (Snow White) – க்ரிம் சகோதரர்கள்
க்ரீம் சகோதரர்கள் ஜெர்மன் மொழியில் நம் மாதிரி சிறார்களுக்கு ஆயிரம் கதைகளை திரட்டி எழுதிச் சென்றிருக்கிறார்கள். ‘பனி வெண்மை’ என்பது அவற்றின் மிக பிரபலமான அழகான ஒரு கதை.

அந்தக் காலத்தில் மத்திய ஜெர்மனியில் ஒரு பிரபலமான தேசம் இருந்தது. மகாராஜாவின் மகள் தான் இந்த பனி வெண்மை அந்த ராஜியத்திலேயே மிக அழகான பெண். நல்ல மனம் கொண்ட சிறுமி. அவள் அங்கே எல்லாருக்கும் ஃபிரெண்ட் ஆனால் பனி வெண்மைச் சிறுமிக்கு அம்மா கிடையாது. சித்தி தான். அய்யோ கொடுமைக்கார சித்தி. அந்த சித்திதான் அந்த ராஜ்யத்தில் இரண்டாவது அழகு. அதனால் அழகில் முதலிடம் பெற்ற பனி வெண்மைச் சிறுமியை வேட்டையர்களை ஏவி கொலை செய்துவிட சித்தியான மகாராணி உத்திரவு இடுவாள்.

அழகு என்பது கலரில் இல்லை, ஆள் எப்படி இருக்கிறோம் என்பதில் இல்லை. அழகு நம் மனதில் உள்ளது. எனவே அழகு மனம் கொண்ட பனி வெண்மைச் சிறுமியை வேட்டையர்கள் கொல்லாமல் காட்டில் பதுக்குவார்கள். அங்கே மாயக்குள்ளர்களின் ஒரு குகையில் அவள் விடப்படுவாள்.

1812ல் வந்த கதை. பனி வெண்மைச் சிறுமி சாகவில்லை என்பதை அறிந்து சித்தி செய்யும் முயற்சிகளை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது வாசிக்க வாசிக்க செம திரில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டாலும் உலகெங்கும் எது அழகு என விவாதிக்கப்பட்ட சூப்பர் புத்தகம் இது. 114 பக்கம் போவதே தெரியாது. உங்கள் பள்ளி நூலக அலமாரியில் ஆங்கிலத்தில் கண்டிப்பாக இருக்கும். உடனே எடுத்து வாசியுங்கள். பனிவெண்மைச் சிறுமியைக் காப்பாற்றுங்கள்.

17. தி விண்டு இன் த வில்லோஸ் – கென்னத் கிரெஹாம்
விலங்குகளுக்கும் காட்டில் வீடுகள் உண்டு என்பது எவ்வளவு பெரிய விஷயம். எனக்கு அது ரொம்ப காலம் தாழ்த்தி எட்டாம் வகுப்பு முழு ஆண்டு லீவில் தான் தெரிந்தது. காட்டில் மட்டுமல்ல நண்பர்கள்… நம் வீட்டின் தோட்டத்தில்.. ஏன் நம் வீட்டுக்கு உள்ளேகூட குட்டி குட்டியாக நிறைய வீடுகள் உள்ளன தெரியுமா.
ஜெர்ரி எலியை தெரியாதவர் உண்டோ. ஆனால் ஜெர்ரி சுண்டெலியா பெருச்சாளியா..

மூஞ்சூரா என்று நானும் குழம்பியது உண்டு. ‘தி விண்டு இன் த வில்லோஸ்’ படியுங்கள். அய்யோ என சூப்பரான அனுபவம். அகழெலி எனும் பெருச்சாளி வகையில் பிறந்தவர் திருவாளர் மோல் ஜடை எலி. அவரது வீடு மண்ணுக்கு உள்ளே ஒரு பொந்து. தன் வீட்டை தூய்மை செய்ய அவர் படும்பாடு. உங்கள் படிப்பு மேசையை சுத்தம் செய்து எவ்வளவு காலம் ஆகியது.. ச்ச.. நொந்து போக வைக்கும் வேலை அல்லவா.

ஜடை எலியான திருவாளர் மோல் ஒருநாள் வாக்கிங் போகும்போது நதிக்கரையில் திரு ராட்டி ராட் எனும் சுண்டெலியை சந்திப்பார். நட்பின் இலக்கணம் ராட்டிராட். திரு.மோலுக்கு திரு. ராட்டி படகு ஓட்ட சொல்லித்தருவார். தண்ணீர் பயம் போதும். இருவருமாக திருவாளர் தேரை அவர்களை சந்திப்பார்கள். திருவாளர் தேரை மட்டுமல்ல… திரு. பாட்ஜர் எனும் வளைகரடி உட்பட பலரது வீட்டிற்கு அவர்கள் பயணிக்க நாம் நம்மையும் அறியாமல் பலவகை வாழிடங்களை அறிய வாய்ப்பு கிடைக்கிறது.

1908ல் கென்னத் கிரஹாம் எழுதி வெளிவந்த பன்னிரண்டு அத்தியாயம் உள்ள அழகான புத்தகம் படிக்கப் படிக்க ரொம்ப சுவாரசியமான உலகம் நம் கண்முன் விரிந்து நம்மை பரவசப்படுத்தும்.

18. கொடுக்கும் மரம் (தி கிவிங் ட்ரீ)  ஷெல் சில்வர்ஸ்டெயின்
‘தி கிவிங் ட்ரீ’ என்ற இந்த சின்ன கதை எத்தனை வசீகரமானது. ஒரு மரம் அது விதையாக மண்ணில் புதைந்து குட்டிச் செடியாக முளைத்து மண்ணின் சத்து தண்ணீர் மற்றும் சூரிய ஒளியை கலவையாக்கி உணவு தயாரிக்க கற்று வானை நோக்கி பிரமாண்டமாக வளர்ந்து கிளை பரப்பும் என்பது ஒருபுறம். ஒரு மரம் என்னவெல்லாம் தரும்? தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே தரும் பொன்மனம் மரத்திற்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட ஒரு ஆப்பிள் மரம் தான் நேசிக்கும் ஒரு பையனுக்கு என்னவெல்லாம் செய்தது என்பதே இந்த கதை. இக்கதை மரத்தை ஒரு தாயாக, பெண்ணாக பாத்திரப் படைப்பில் நம் மனதைத் தொடுகிறது. பையன் தன் சின்ன வயதில் அதை ஊஞ்சலாக்கி ஆடுகிறான். சறுக்குமரமாக விளையாடுகிறான். ஒரு வயதில் அதன் நிழல் தேடி வாசிக்க வருகிறான் பிறகு நொடிந்து ஏதுமற்று வந்து நிற்கும்போது மரம் தன் பழங்களைத் தருகிறது. எளிதில் விற்றுக் காசாக்கி வாழ்கிறான். இருக்கஇடமில்லை. உடனே அது தன் கிளைகளைத் தந்து வீடு கட்ட உதவுகிறது. பிழைப்பிற்கு என்ன செய்ய என வாடும்போது தன் தண்டை படகாக்கி பக்கத்து ஆற்றில் படகோட்டிப் பிழைக்க அது உதவுகிறது.

மிகவும் வயோதிகராகி அவன் உடல் நடுங்க அதனிடம் வரும் இடம் மிக அழகானது. வீடே கைவிட்டதும்கூட வெட்டப்பட்டு வேர் மேல் கொஞ்சமாக காய்ந்து மேடான அந்த மரம். ‘வா.. என்மேல் உட்காரு மகனே’ என்கிறது 1964ல் வெளிவந்த நூல். கதையும் நம்மை ஈர்க்கும் படங்களும் ஷெல் சில்வர்ஸ்டைன் இன்றுவரை பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளது.

19. குட் நைட் மூன் – மார்கரெட் வைஸ் பிரெவுன்
இரவில் தூக்கம் வராமல் ஒரு கதை சொல்லுங்க என்று ஏக்கத்தோடு கெஞ்சும் குழந்தைகளில் ஒருவரா நீங்கள்? கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். இதைக் கையில் எடுத்து உங்கள் அம்மாவோ அப்பாவோ வாசிக்கத் தொடங்கினாலே போதும். கொஞ்சம் நேரத்தில் கொட்டாவி வரும்… பிறகு நிம்மதியான தூக்கம் தான்.

இது இரவில் உறங்குவதற்குத் தயாராகும் ஒரு முயல்குட்டியின் கதை. முயல் குட்டியின் அந்த அழகான மிக சிறிய அறையில் ஒரு ஜன்னல் அதன் வழியாக அமைதியான வானம் தெரிகிறது. அந்த நட்சத்திரம் மொய்த்த வானத்தில் வட்டநிலா. ஆ.. எவ்வளரு அழகு முயல் குட்டிக்கு தூக்கம் சொக்குகிறது.

அதன் அறையில் என்னவெல்லாம் இருக்கும். அதன் பாட புத்தகம், குட்டி வாசிப்பு மேசை லைட், கேரட் ரொப்பிய உணவு மேசை… நம் முயல் குட்டி இந்த ஒவ்வொரு பொருளுக்கும் குட்நைட் சொல்கிறது. அது படுக்கையில் படுத்து தலையணையில் தலை புதைத்து.. கடைசியில் நிலாவுக்கும் குட்நைட் சொல்வதற்குள் தூங்கிவிடுகிறது. தினமும் அப்படித்தான்.

எழுத்தாளர் மார்கரேட் வைஸ் பிரவுன் எழுதிய நூல் இது. அவரது ஓடிப் போன முயல் மற்றும் என் உலகம் கூட நல்ல புத்தகங்கள்தான். கிளமண்ட் ஹார்ட்டின் படங்கள்போதும் அது இன்னும் அழகு கூட்டும், உங்களைத் தூங்கச் செய்யக்கூட ஒரு புத்தகம் உள்ளது என்பது எத்தனை பெரிய விசயம்.

20. வேர் தி வைல்டு திங்ஸ் – ஆர். மாரிஸ் சென்டாக்
வைல்டு என்றால் காடு. மேக்ஸ் அடிக்கடி அங்கே தான் போவதுபோல நினைவுகளில் ஆழ்வான். விலங்குபோல வேடமிடுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அவனிடம் ஒரு ஓநாய் உடை இருந்தது. அதை அணிந்தால் அவனுக்கு வால் மொசு மொசுவென்று பின்னால் சூப்பராக இருக்கும். அவனுக்கு மிகவும் பிடித்தமான உடை அது தான். தலைக்குமேல் தொப்பி ஓநாயின் முகத்தோடு முடியும். மேக்ஸின் நண்பர்களே பொறாமைப்படுவார்கள்.

ஆனால் மேக்ஸ், அம்மா சொற்பேச்சே கேட்கமாட்டான். எப்போதும் மோசமான சேட்டை அவன் உடைக்காத பொருளே வீட்டில் கிடையாது. ஒரு நாள் இரவில் அவனது குறும்புத்தனம் தாங்காமல் அம்மா சாப்பாடு இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படியே உறங்கிய மேக்ஸ் காட்டில் இருந்தான். அங்கே அவனது சாகசப் பயணங்கள்தான் கதை. ஏறத்தாழ தன் மனித மூளை மூலம் அவனுக்கு எல்லா விலங்குகளும் அடிபணியும். அவன் காட்டின் ராஜா ஆகிவிடுவான்.

1963ல் சொற்கள் மிகக் குறைவாகவும் படங்கள் மிக அதிகமாகவும் கொண்ட புத்தகமாக இது வெளிவந்தது. குழந்தைகள் இந்த நூலை பெருவெற்றி பெறவைத்தனர். மாரிஸ் சென்டாக் வரலாற்றில் இடம் பிடித்தார். 1983ல் ஓலிவர் நசென் கதையை ஒப்பரா வகை இசையாக்க வார்னர் பிரதர்ஸ் 2009ல் படமாகவும் ஆக்கியது.
மேக்ஸ் காட்டிலிருந்து அம்மா ஏக்கம் அதிகமாகி மீண்டு தயாராக வைத்திருந்த இரவு உணவை புசிக்கும் இடம் படு சுவாரசியமாக இருக்கும்.

21. ஓநாய்களின் ஜூலி – ஜீன் கிரெய்க்ஹெட் ஜார்ஜ்
உங்களுக்கு எஸ்கிமோ என்றால் யார் எனத் தெரியுமா? அடர்ந்த பனிப் பிரதேசமான வடதுருவ மண்ணில் இக்ளு எனும் பனி வீட்டில் வசிப்பவர்கள்தான் எஸ்கிமோக்கள். பனிச்சறுக்கு வண்டிகள். அவற்றை இழுத்துச் செல்லும் ஜட நாய்கள் பல…. கொம்பு மான்கள் என அவர்களது உலகம் விரிகிறது. அங்கே நமக்கு ஒரு ஃபிரெண்ட். அவள்தான் ஜூலி. அவளது இன்னொரு பெயர் மியாக்ஸ்.

பாவம் ஜூலி. அவளது அம்மா இறந்துவிட்டார். அலாஸ்காவின் வட பனிமலைச் சரிவில் பனிக்கரடிகளோடு மோதி அந்த வேட்டையில் அவர் உயிர் பிரிந்தது. எனவே ஜூலி அவளது தந்தையால் அத்தை மார்த்தாவிடம் அனுப்பப்படுகிறாள். மார்த்தா அவளை ஒரு வேலைக்காரச் சிறுமியாக நடத்துவார். எனவே அங்கிருந்து தப்பி ஓடுவாள் அவள். ஆர்க்டிக் தூந்திர காடுகளில் ஒரு ஓநாய்களின் குடும்பத்தில் அவள் இணைவாள். ஓநாய்க் குடும்பம் ஆரம்பத்தில் ஜூலியை பகிஷ்கரித்தாலும் பிறகு மெல்ல தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்கும், அங்கே அவளது ஜீவ மரணப் போராட்டம் தான் கதை. சூப்பர் திரில்.

1972ல் ஹார்ப்பர் புத்தக நிறுவனம் வெளியிட்ட நூல். ஜான் ஷூனர்தான் ஓவியங்களால் இந்த நூலை மெருகேற்றியவர். நூலாசிரியர் ஜூ கிரெய்க்ஹெட் ஒரு எஸ்கிமோ என்பது ரொம்ப காலம் வெளியே சொல்லப்படவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியும் கூட.

22. ஜேம்ஸ் அண்ட் த ஜெயண்ட் பீச்  – ரோவால்டு தால்
ரோவால்டு தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது கதைகளின் வசீகரம் என்ன தெரியுமா.. மாய மந்திர அம்சத்தோடு சட்டென நிகழும் ஆச்சரிய திருப்பு முனைகள் நம்மை ‘ஐய்யா’ என துள்ள வைக்கும். உள்ளதிலேயே சூப்பர் கதை ஜேம்ஸ் கதை தான். சார்லி சாக்லெக் தொழிற்சாலை செம பேமஸ். அதேபோலத்தான் ஜேம்ஸும் பிரமாண்ட பிளம்ஸ் பழமும் எனும் இந்த புத்தகம் சூப்பர் கதை.

லண்டன் மிருகக் காட்சிச் சாலையிலிருந்து தப்பி வந்த காண்டாமிருகம் முட்டி ஜேம்ஸின் பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள். பிறகு ஸ்பைக்கர் மற்றும் ஸ்பாஞ்ச் ஆகிய அத்தை உறவுள்ள இதயமற்ற பெண்களின் பராமரிப்பில் அவன் தவிக்கும்போது மாயக்குள்ளத் தாத்தா சட்டென தோட்டத்தில் மந்திர சக்தி மிக்க கிரிஸ்டல் கற்களை இது உன்னை காப்பாற்றும் எனச் சொல்லி தருவார். வாங்கிய சற்று நேரத்தில் ஜேம்ஸ் பொத்தென விழுவான் பிளம்ஸ் (பீச்) மரவேரில் கற்கள் சிதறும். மறுநாள் அந்த மர பிளம்ஸ் பழமொன்று மிக பிரமாண்டமாக மரத்தை விட பெரிதாக காய்த்திருக்கும்.

ஜேம்ஸ் பழத்தின் உள்ளே சென்று மரவட்டை, வெட்டுக்கிளி என அவனது புதிய பிரமாண்ட நண்பர்களை சந்திக்க நாமும் அவர்களது நண்பராவோம். ரோவால்டுதால் நார்வே நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். ஒரு பீச் (பிலிம்ஸ்) பழத்தில் ஜேம்ஸ் மற்றும் அவனது ஏழு யூச்சி சகாக்களோடு உலகையே சுற்றிவரும் சாகசத்தை 1979ல் எழுதி வெளியிட 1996 அது திரைப்படமாக கூட வந்தது.

23. துப்பறியும் ஹாரியட் – லூயிஸ் ஃபிட்ஹீஸ்
உங்களுக்கும் துப்பறிவது, வேவு பார்ப்பது.. பிடிக்குமா? மர்மமான விஷயங்களைத் துழாவி உண்மை நிலையைக் கண்டறிவது தனிக் கலை. அது ஒவ்வொன்றும் சாகசமே. ஆனால் சிறுமி ஹாரியட்போல எல்லாவற்றையும் துப்பறிவது ஒரு சூப்பர் பொழுதுபோக்கு. ஹாரியட்டிடம் ஒரு டைரி உண்டு. அது தான் கதையின் மைய அம்சம் ஹாரியட் தி ஸ்பை (துப்பறியும் ஹாரியட்) லூயிஸ் ஃபிட்ஹீஸ் எழுதி 1964ல் வெளிவந்தது. இன்றும்கூட சிறார்களின் திரில் பொக்கிஷமாக உள்ளது. பள்ளி முடிந்தால் ஹாரியட் தன் துப்பறியும் வேலையை துடிப்போடு தொடங்கிவிடுவாள்.

தோழியின் தொலைத்தபேனா, நான்கு நாளாக பள்ளிக்கு வராத அறிவியல் ஆசிரியை என அவள் எதையும் விடமாட்டாள். பெரியவளானதும் ஹாரியட் ஒரு எழுத்தாளராக விரும்புவதால் தான் நினைக்கும் எல்லாவற்றையும் அவள் எழுதி வைப்பாள். அப்பாவின் பைக் சாவி, அம்மாவின் ஆபீஸ் பேனா, டீச்சரின் மதிப்பெண் ரெஜிஸ்டர் என ஹாரியட் எது தொலைந்தாலும் துப்பறிந்து விடுவாள்.

ஒரு நாள் ஹாரியட்டின் டைரி காணாமல் போய் விடுகிறது. இந்த இடத்தில்தான் சூப்பர் சுவாரசியம். அதைக் கண்டு பிடிக்கும் அவளது வகுப்பறை சகாக்கள் அதை வாசிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருத்தர் பற்றியும், ஹாரியட் விஷமத்தனமான பல உண்மைகளை எழுதி வைத்திருக்கிறாள். டைரியைத் தேடி துப்பறியும் ஹாரியட் தன் உண்மையான நண்பனைக் கண்டறிகிறாள். பிறகு இருவருமாக துப்பறியும் வேலையை தொடர்வார்கள். 2012ல் துப்பறியும் ஹாரியட் ஒரு கார்ட்டூன் தொடராக எடுக்கப்பட்டு சின்னத்திரை நட்சத்திரமானாள்.

24. கறுப்பு அழகன் – அன்னா ஸிவல்
உலகின் தலைசிறந்த கதைகளில் பிளாக் பியூட்டி (கறுப்பழகன்) ஒன்று. கார், மோட்டார் சைக்கிள், பஸ் என்று எதுவுமே இல்லாத ஒரு காலத்திற்கு உங்களால் போக முடியுமா. என்ன நம்ப முடியவில்லையா? அப்படி ஒரு காலம் சற்றே 100 வருடம் பிந்தியது. இதே சாலைகளில் பிரமாண்ட அழகுடன் குதிரைகள் வலம் வந்தன. கறுப்பழகன் கதை உங்களை அந்த உலகிற்கே இட்டுச் செல்லும்.

வித்தியாசமான புத்தகம். தெரியுமா? ஆமாம் கறுப்பு அழகன் ஒரு குதிரையின் சுயசரிதை. தனது குட்டிகளிலேயே தான் மிகவும் நேசித்த கறுப்பு குட்டிக்கு தாய் குதிரை நேசமான ஒரு அறிவுரை வழங்கும். நீ எங்கே இருந்தாலும் உனக்கு யார் எஜமானாக இருந்தாலும் உன்னால் முடிந்த அளவு மிக சிறப்பான சேவையை செய்ய வேண்டும் என்பதே அந்த அறிவுரை. அந்த அழகுக் குதிரை யார் யாரிடம் எல்லாம் பிறகு விற்கப்பட்டு வளர்ந்து பணிபுரிகிறது என்பதே கதை.

நல்லவர்கள் என்பவர்கள் யார்? நம்மீதும் அக்கறை கொண்ட இளகிய மனம் படைத்தவர்கள் யார்? யார் மிகவும் கொடூரமானவர்கள்? யார் மோசமான எஜமானர்கள். யாரிடம் நட்பு கொள்வது நல்லது? ஆனால் கறுப்பு அழகன் இறுதி வரை தனது தாய் கூறிய அறிவுரையை மட்டும் மறக்கவே மறக்காது.

1877ல் அன்னா ஸிவல் எழுதிய புதினம். அன்னாஸிவல் பிரித்தானிய எழுத்தாளர். கறுப்பு அழகன் (Bleauty) அன்று முதல் இன்று வரை விடாமல் வெளிவந்து விடாமல் முற்றிலும் விற்று விடுகிறது. மொத்தம் 47 உலக மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பலமுறை கறுப்பு அழகன் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இன்னும் கூட குதிரைகளின் உலகம் தனி. பந்தயங்கள் முதல் பொதிசுமப்பது வரை மலைப் பாதைகளில் பயணத்திற்கு உதவுதல், பாலை வனத்தில் பயன்படுதல் வரை குதிரையின் பங்களிப்பு குறையவே இல்லை.

25. கடலுக்குள் 20000லீக் – ஜீல்ஸ் வெர்ன்
என்ன அற்புதம். இன்று வாசித்தாலும் திரில் திகில் குறையாக அறிவியல் கதை இது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடலில் பிரமாண்ட வடிவில் வலம் வரும் அந்த விசேட உயிரினம்பற்றிப் பேசாத ஆள் கிடையாது. பிரயாணிகள் கப்பல், சரக்கு கப்பல், போர் கப்பல்.. எது கிடைத்தாலும் நொறுக்கி ஆட்களைக் கொன்று தின்னும் விநோத உயிரினம் அது.

ஆனால் பியரி ஆரோனாக்ஸ் அதை நம்பத் தயாராக இல்லை ஏனெனில் கடல் பிராந்தியத்தை நன்கு அறிந்த விஞ்ஞானி அவர். அவரோடு அவரது ஆய்வு சகாக்கள் கான்சீல் மற்றும் குட்டி நாட்டு அரசர் நெட்லாந்தும் அரசு தரும் ஆபிரஹாம் லிங்கன் எனும் கப்பலில் கடலுக்கு அந்த விநோத ஜந்துவை தேடி பயணிக்கிறார்கள். 20000 லீக் என்பது அவர்கள் பயணிக்கும் தூரம். அந்த உயிரி அவர்களைத் தாக்குகிறது. அது உயிரியா அல்லது நீர் மூழ்கிக் கப்பலா – அது கப்பல் கொள்ளையர்களின் வேலையா என நாம் திரில் அனுபவத்தில் சிக்குவோம்.

பிரெஞ்சு மொழியில் அறிவியல் கதை வித்தகர் ஜீல்ஸ் வெர்ன். 1870ல் எழுதி வெளியிட்ட சூப்பர் புத்தகம் இது. அந்த வினோத உயிரி ஒரு நீர் மூழ்கித் திருட்டுக் கப்பல்தான். காப்டன் நெமோ தன் போர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாட்டிலஸ் எனும் அந்த கப்பலில் உலகை திருட்டுத்தனமாக வலம் வரும். சூப்பர் வில்லன் அறிமுகமான புத்தகமும் இதுவே. இரண்டாண்டுகளுக்கு பிறகு 1872ல் ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் வெளிவந்தது. பிறகு இன்று வரை சுமார் 100 மொழிகளில் இந்த நூல் வந்திருக்கிறது. இன்றும் சிறார் இலக்கிய சாம்ராஜ்யத்தின் பிரமாண்ட வெற்றி சித்திரமாய் வலம் வருகிறது. கடலுக்குள் 20000 லீக்.

26. வெள்ளிக் கை ஓட்டோ
– ஹாவர்டு பைல்
ஓட்டோ எனும் சிறுவனின் திகில் கதை இது. ஆஸ்திரியா நாட்டு நாவல். ரொம்ப வித்தியாசமானது. ஆரம்பத்தில் பார்த்தோமே ஆலிவர் டுவிஸ்ட். அவனைப் போலவே ஓட்டோ பிறந்த சில மணி நேரங்களில் அவனது தாய் இறந்து விடுவார். அவனது தந்தை ஓட்டோவின் பாதுகாப்பு கருதி அவனை ஒரு தேவாலயத்தின் அனாதை குழந்தைகள் விடுதியில் விட்டு விடுவார். எத்தனை சிரமங்கள் சோதனைகள்.

ஆனால் ஓரளவு வளர்ந்த சிறுவனாக அவன் ஆகும்போது அவனது தந்தை அவனிடம் திரும்பி வருவார். அதற்குள் தன் தந்தையின் இறந்த கால பிரச்சனைகளை ஓட்டோரி அறிந்திருப்பான். ஒட்டோவின் தந்தை பெடரிக் மன்னரை கொலை செய்தவர்களில் ஒருவர். அவரது எதிரிகள் ஓட்டோவை பழிவாங்க துடித்து அவனது வலது கையை வெட்டி விடுவார்கள். துடிதுடிக்கும் ஓட்டோ அந்த மருத்துவ சிகிச்சையின்போது பயமும் தயக்கமும் துரத்தி ஒரு வெள்ளிக் கை பொருத்தப்பட்ட மாவீரனாக எப்படி பிறகு உருவாகிறான் என்பதே மீதிக் கதை.

அவனைக் காப்பாற்ற வரும் ஓட்டோவின் தந்தை அந்த எதிரிகளுடன் சண்டையில் இறந்துபோவார். ஓட்டோ தைரியமானவனாய் ஒரு போர் குணத்தோடு கூடவே தேவாலயம் தந்த பொறுமை இரக்கம் என்ற நல்ல சுபாவங்களோடு அரச அதிகாரியாக நற்பணி செய்பவனாய் வளர்வதே மீதிக்கதை. வீரம் தீரம் என இந்தக் கதையில் எல்லாம் இருப்பதால் இது உலக சிறார்கள் போற்றிய சிறப்பான நாவலாக வெற்றி கண்டது.

27. புதையல் தீவு – ராபர்ட் லூயிஸ் ஸ்டீபன்சன்
உங்களது வாழ்நாளில் வாசிக்காமல் விடக்கூடாது என்று ஏதாவது புத்தகங்கள் இருந்தால் அதில் புதையல் தீவு நூலுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அவ்வளவு பிரபலமான புத்தகம் இது.  ஜிம்ஹாக்கின்ஸ். இது தான் நம் கதாநாயகனின் பெயர். வயது 14. சிறுவன் ஜிம் ஹாக்கின்ஸிடம் ஒரு மேப் சிக்குகிறது. பலரிடம் அதை விற்க அவன் முயல்கிறான். ரொம்ப ஏழை பையன். அம்மா எத்தனையோ வேலை பார்த்தும் சோற்றுக்கே கஷ்டப்படும் சூழல்.

டாக்டர் லிவ்சே மற்றும் அவரது நண்பர் ஸ்கொயர் ஆகியோர் அது புதையல் தீவிற்கான மேப் என்பதை அறிந்து ஒரு கப்பலை வாங்கி பல சிப்பந்திகளை அதில் வேலைக்கு அமர்த்துவார்கள். அம்மா கெஞ்சியதில் ஜிம்மும் அந்த கப்பலில் கேபின் பாயாக வேலையில் சேர்க்கப்படுவான் பயணம் கிளம்பும்.
பாதி பயணத்தில் ஒரு திருப்பம். அந்த கப்பல் சிப்பந்திகள் கடல் கொள்ளையர்கள். கப்பல் சமையல்காரன் ஒற்றைக்கால் ஜான் சில்வர் தான் கொள்ளை தலைவன். அவனது தோள் பட்டையில் ஒரு கிளி இருக்கும். இன்றுவரை ரொம்ப பேமஸாக கொடிகட்டி பறக்கும் வில்லன். அவன் கப்பலை அவர்கள் கைப்பற்றி புதையல் தீவை நெருங்குகிறார்கள்.

புதையல் கிடைத்ததா. ஜிம் ஹாக்கின்ஸின் வாய்மொழியாக சொல்லப்படும் அற்புத கதையை ஆர்.எல்.ஸ்டீபன்சன் 1883ல் வெளியிட்டார். யங் ஃபோக்ஸ் இதழில் தொடராக வெளிவந்தது 36 அத்தியாயங்கள் கொண்ட புதையல் இது.

28. கோடாரி (Hatchet) – காரி பால்ஸன்
காட்டில் தனியாகத் தொலைந்து போவது எப்போதுமே ஒரு சூப்பர் அனுபவம்தான். ஆபத்தானதும் கூட. இந்தக் கதையில் வரும் பிரெய்ன் ரொபேசனின் கதை கொஞ்சம் விசேஷமானது. அம்மா ஒரு ஊரிலும் அப்பா எண்ணெய் வயல்கள் கொண்ட வேறொரு தொலைதூர ஊரிலும் வாழ்கிறார்கள். தன் பதிமூன்றாவது பிறந்த நாளை கொண்டாட அவனது அம்மா அவனை அப்பாவிடம் ஒரு விமானத்தில் அனுப்புகிறார். விமானம் புறப்படும்போது அவனுக்கு அம்மாவின் பரிசாக ஒரு கோடாரி கிடைக்கிறது.

நடுவானில் விமானிக்கு ஹார்ட் அட்டாக். விமானத்தில் இருந்தவர்கள் குதிக்கிறார்கள். பிரெய்ன் தனக்கு தெரிந்தவரை விமான ஒட்டி அறையில் எதை எதையோ செய்து அது நடு காட்டில் தண்ணீரில் ஆற்றில் விழுகிறது. ஒரே ஆளாக அந்தக் காட்டில் அம்மா கொடுத்த கோடாரியோடு பிரெய்ன் கடும் சோதனைகளை ஒவ்வொன்றாக வெல்கிறான் ஓநாய்கள் முதல் கொசுக்கள் வரை பெரிய பூரான்கள் முதல், பாம்புகள் வரை. யானைகள் முதல் கறுஞ்சிறுத்தைகள் வரை. டொர்ணாடோ சூறாவளி முதல் காட்டாற்றுப் பெருவெள்ளம் வரை அவன் எப்படி ஒவ்வொன்றிலிருந்தும் தப்புகிறான் என்பது ரொம்ப சுவாரசியமான கதை.

கொஞ்ச காலத்திற்கு பிறகு அவனுக்கு விமானத்தின் உடைந்த பகுதியான ஒரு வாக்கி டாக்கி அமைப்பு கிடைக்கிறது அது வேலை செய்யவில்லை என கருதுவான். ஆனால் அது அனுப்பும் ரகசிய சமிக்கையை கொண்டு பல வருடங்கள் கழித்து அவனை மீட்டார்கள். மனிதக் கண்டு பிடிப்புகளில் முக்கியமான ஆயுதம் கோடாரி – அது அவனுக்கு மூன்றாவது கைபோல் பயன்படும். 1987ல் வெளிவந்த சூப்பர் புத்தகம் இது.

29 பீட்டர் முயலின் கதை  (The Tale of peter Rabit) – பீட்ரிக்ஸ் போட்டர்
‘பீட்டர் முயல்’ என்பது இன்று இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான அடையாளச் சின்னங்களில் ஒன்று பள்ளிதோறும் பொம்மையாக கார்ட்டூனாக பூங்காக்களில் சிறார் பகுதி என்பதை சுட்டிக் காட்ட சமிக்கையாக இப்படி பல விதமாக அவர்களது வாழ்வின் அங்கமாகி விட்டது. 1902ல் வெளிவந்த திடேல் ஆஃப் பீட்டர் ராபிட் புத்தகமே காரணம். 45 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்த சிறார் இலக்கியம் அது.

திருமதி ராபிட் தன் மகனிடம் சொல்வார் ‘பீட்டர் நீ மெக்ரேகர் தோட்டத்திற்கு மட்டும் கண்டிப்பாகப் போகக் கூடாது’ அதற்கு காரணம் இருந்தது. பீட்டர் முயலின் தந்தை அங்கே சென்று மாட்டிக் கொண்டு திருமதி மெக்ரேகர் அதை முயல் கேக் ஆக்கி எல்லாரும் சாப்பிட்டு விட்டார்கள். ஆனால் பீட்டர் அம்மா சொற்பேச்சை கேட்கவே இல்லை. அவன் மெக்ரேகர் தோட்டத்தில் நுழைந்தது மட்டுமல்ல. அங்கே அவனது சாகசங்களை வாசிக்க வாசிக்க புத்தகத்தைக் கீழே வைக்கவே முடியாது.

அங்கே பீட்டர் முயலுக்கு ஒரு பூனை, காகம், வெள்ளைப் பன்றிக் குட்டி எல்லாம் நண்பராகி விடுவார்கள். பீட்ரிக்ஸ் போட்டரின் முதல் புத்தகம் அது. ஆனால் ஆரம்பத்தில் அதை வெளியிட யாருமே விரும்பவில்லை. அதை அவரே அச்சிட்டு வெளியிட்டபோது அதை குழந்தைகள் விரும்பி வாங்கினார்கள். இன்று வீடியோ கேம், கார்ட்டூன், திரைப்படம் என பீட்டர் ராபிட் எடுக்காத அவதாரம் கிடையாது.

பல இடங்களில் இந்தக் கதை நம் சொந்தக் தோட்டத்தில் நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். அந்த ஆற்றல் எழுத்துக்கு மட்டுமே அதாவது அச்சிட்ட கதைக்கு உண்டு.

30. தி சீக்ரட் கார்டன் பிரான்சிஸ் பர்னட் – (The secret Garden)
உங்களுக்கு சிறுமி மேரிலென்னாக்ஸை தெரியுமா. முட்டிக்கு கொஞ்சம் கீழே வரை வரும் சிவப்பு நிறகவுன். மஞ்சள் தொப்பி, முகம் நிறைய புன்னகை – இது தான் மேரி லென்னாக்ஸ். நம்ம ஊராக இருந்தால் அவள் இரண்டாம் வகுப்பு படிக்க வேண்டும். ஆனால் பாவம் மேரி. காலரா நோய் ஊரையே தாக்கியபோது அவளது பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள்.

மேரி பிறகு அவளது மாமா ஆர்ச்சி பால்டு கிரேவன் என்பவரது பொறுப்பில் விடப்படுவாள். அவருக்கு ஒரு மகன். கொலின் என்று பெயர் அவர்கள் ஒரு கூட்டுக்குடியிருப்பில் ஒரு ஒண்டி குடித்தனத்தில் வாழ்வார்கள். ஆனால் அந்த மேன்சனுக்கு பின்னால் ரகசிய கதவு ஒன்றை ஒரு நாள் மேரி கண்டுபிடிப்பாள். கதவு என்று ஒன்று இருந்தால் சாவி என்று ஒன்று இருக்க வேண்டுமே; அந்த இடத்தில் எடுபிடி வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரத் தாத்தாவோடு ரொம்ப ஃபிரெண்டாகும் மேரி அது ஒரு ரகசியத் தோட்டம் என்பதை கண்டுபிடிப்பாள். பத்து ஆண்டுகளுக்கு முன் அது பூட்டப்பட்டது. காரணம்? அது தான் திரில் ஒன்று. பத்தாண்டுக்கு பிறகு யாருமே பராமரிக்காத தோட்டம் என்ன ஆகி இருக்கும். அது தான் திரில் இரண்டு.

மாயமந்திரத் தோட்டமாக அது மாறி இருக்கிறது. என்ன ஒரு சூப்பர் அனுபவம். மேரி அந்த முழு கார்டனையும் மீண்டும் உயிர்ப்பித்து அங்கே வயதானவர்கள் சென்று தன் பொழுதை பலவிதமாக போக்கும் பூங்காவாய்., சக குழந்தைகள் குதூகலிக்கும் அற்புதமாய் மாற்றிவிடும் இடம் என்ன அழகு.

பிரான்சிஸ் ஹட்சன் பர்னட் 1910 அமெரிக்க குழந்தைகள் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதி 1911ல் புத்தகமாக வெளிவந்த கதை இது. இயற்கையின் அழகை வனங்களின் முக்கியத்துவத்தை அனைவரையும் அனுசரித்து வாழும் வாதத்தை இதைவிட சிறப்பாகப் போதிக்க முடியாது.

31. டாக்டர் டூ லிட்டில் – ஹூ. லாஃப்டிங்
எலி, பல்லி, பறவைகள், ஏன் நாய் பூனை முதல் யானைவரை தங்களுக்குள் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள அதனதன் வழியில் ஒரு மொழி உண்டு. அது எலலாமே ஒரு மனிதருக்கு புரிந்து அவற்றோடு உரையாட முடியுமென்றால் அது எவ்வளவு சூப்பராக இருக்கும். விலங்கு உலகோடு இணைந்து அதில் ஒருவராக கலந்தவர் தான் டாக்டர் டூலிட்டில்.

டாக்டர் டூலிட்டிலுக்கு விலங்குகளின் மொழியை பேசவும் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா? அவர் வளர்க்கும் பாலினேசியா எனும் கிளிதான். அவர் ஒரு மனித டாக்டர்தான். ஆனால் அவரது வீட்டில் எப்போதும் விலங்கு விருந்தினர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். சாதாரண முயல் சண்டையிலிருந்து கரடி, குரங்கு மரத்தை பிரித்துக் கொள்வது, யானை ஜோடிகளின் குடும்பத் தகராறு என அவரை தேடி அவை எப்போதும் வருவதால் மனித நோயாளிகள் பயந்து அருவருத்து வருவதை நிறுத்திவிட டாக்டர் டூலிட்டில் தன் செல்வங்களை எல்லாம் இழந்து ஒரு நாள் தன் குரங்கு நண்பர்களின் பேச்சை, அறிவுரையை ஏற்று ஆப்பிரிக்காவுக்கு ஒத்த பைசா இல்லாமல் பயணிக்கிறார்.

ஹூ-லா ஃப்டிங், டாக்டர் டூலிட்டிலின் அனுபவங்களை 13 புத்தகங்களாக எழுதியிருக்கிறார். எல்லாமே அசத்தலாக இருக்கும். இந்த எல்லா கதைகளிலுமே விலங்கு உலகை நாம் நேசிக்கவும் அவற்றின் அன்றாட வாழ்வை உற்றுநோக்குவதன் மூலம் கற்றுக் கொள்ளவும் ஏராளம் இருக்கும். டாக்டர் டூலிட்டில் கதைகள் வாசித்தால் நாம் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி, பூனை, ஆடு கிளி என எல்லாவற்றின் மீதும் நமக்கு ஒரு வகை ஈர்ப்பு வரும்.

இக்கதை கார்ட்டூனாக, திரைப்படமாக, ஏன், ஒரு முறை மேடை நாடகமாகக் கூட அரங்கேற்றப்பட்டதாம் குழந்தைகள் ஒரு நூறு வருடங்களாக இந்தக் கதையை வாசித்தே வருகிறார்கள்.

32. கிறிஸ்துமஸ் கீதம் – சார்லஸ் டிக்கின்ஸ்
பண்டிகைக் கொண்டாட்டம் என்பது குழந்தைகளுக்கு குதூகலம் தான். ஆனால் ஏழைகளுக்கு சந்தோஷத்தை விட செலவு பிடிக்கும் தண்டனையாகவே அது இருக்கிறது. ஊரே கிருஸ்துமஸ் கொண்டாட தயாராகிறது. நம்ம ஊர் தீபாவளி பொங்கல் போல அது. லண்டனில் ரொம்ப விசேஷம்.

ஆனால் எபினேஸர் ஸ்கூர்ஜ் மகா கஞ்சன்.. கருமி.. பணவெறி பிடித்த சுயநலப் பேய்.. பணத்தைத் தவிர அவனுக்கு எதுவுமே முக்கியம் கிடையாது. அவன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால் பிறருக்கு தானம் செய்வதால் என்ன லாபம் என்று பண்டிகையை உதாசீனப்படுத்துவான். அவன் எப்படியோ போகட்டும். ஆனால் அவனிடம் வேலை பார்க்கும் கடும் உழைப்பாளியான டாப் கிராட்சிட் படும் பாடு. வறுமை. பட்டினி அவனது குடும்பம் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து முதலாளி எபினேஸருக்கு எந்த அக்கறையும் இல்லை.

எபினேஸரை நோக்கி வரும் முதல் ஆவி ஜாக்கப் மார்லே. உங்களுக்கு ஆவிகள் மீது நம்பிக்கை உண்டா. இல்லை என்றாலும் நீங்கள் வாசிக்கலாம். மிக மிக சுவை பட சார்லஸ் டிக்கின்ஸ் எழுதி செல்வார். எபினேஸரின் மனசாட்சியே ஆவி மாதிரி வருகிறது என ஒரு இடத்தில் குறிப்பிடுவார். அடுத்து கிறிஸ்துமஸ் நேற்று, கிறிஸ்துமஸ் இன்று கிறிஸ்துமஸ் நாளை எனும் மூன்று ஆவிகள் எபினேஸர் முன் தோன்றி அவனிடம் வேலை பார்க்கும் அப்பாவித் தொழிலாளிகள், உழைப்பாளிகளுக்காக வாதிடுகின்றன.

ஜாக்கப் மார்லே, எபினேஸரின் முன்னாள் தொழில் பார்ட்னர். ‘நீ உன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் பேரழிவு காத்திருக்கிறது என்று எச்சரிக்கும் இடம் சூப்பர். பிறகு அவன் எப்படி மனம் திருந்துகிறான். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நமக்கு மகிழ்ச்சி தரும். பணம் மகிழ்ச்சி தராது என உணர்கிறார். டார்லஸ் டிக்கின்ஸ் 1843ல் கிறிஸ்துமஸ் கரோல் நூலை தொடராக எழுதினார். ஐந்து அத்தியாயங்கள் கொண்ட குட்டிப் புத்தகம். சந்தோஷம் என்றால் என்ன என்று நமக்கு உணர்த்தும் அற்புத நூல் இது.

Related posts

Leave a Comment