You are here
Thirumavelan கட்டுரை 

சபாபதி நாவலரின் ‘திராவிடப் பிரகாசிகை’ – ப. திருமாவேலன்

‘திராவிடம்‘ என்ற சொல் இருந்ததால் அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வயதில் சுத்தமாக எனக்குப் புரியவில்லை. புரியாமல் போனாலும் எது கிடைத்தாலும் வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அப்போது இருந்தது. அந்தப் புத்தகம், ‘திராவிடப் பிரகாசிகை’. எழுதியவர் சிவத்திரு சபாபதி நாவலர். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

‘திராவிடப் பிரகாசிகை என்னும் தமிழ் வரலாறு’ என்பதுதான் நூலின் முழுத் தலைப்பு. தமிழைக் கடவுள் நிலையில் கொண்டு போய் வைக்கும் நூல் மட்டுமல்ல, கடவுளால் உருவாக்கப்பட்டதே தமிழ் என்றளவுக்குச் சொல்லும் நூல் இது.

ஆரிய மொழியும், தமிழ் மொழியும் ஆதிக்கட் பரமசிவனால் தோற்றுவிக்கப்பட்டு நடைபெறுந்தெய்வ மொழிகளாம். ஆரியம் பரமசிவனால் தோற்றுவிக்கப்பட்டு நடக்குந் தெய்வ மொழியென்பது வேதாகமம் முதலிய உரையானவைகளானே
இனிது பெறுதும், தமிழ் அன்னதோர் மாட்சியுடைத் தென்பது எவற்றாற் பெறுதுமெனின்:- ‘தம்மலர் அடி யொண்டியவர் பரவத் தமிழ்ச் சொல்லும் வட சொலுந் தான் நிழற் சேர அம்மலர் கொன்றை யணிந்தவெம் அடிகள் அச்சிறு பாக்கம் தாட்சி கொண்டாரே’’ என்னுந் தமிழ் வேதத் தானும், ‘மாரியுங் கோடையும் வான்பனி தூங்க
நின்றேரியுரியு நின்றங் கிளைக்கின்ற காலத்தே ஆரிய முந்தமி மும் உட்னல் கிக் – காரிகை யார்க்குங் கருணை செய் தானே’’ என்னுந் திருமந்திரத் திருமுறையானும் பெறுதுமென்பது.. இன்னும் தென்மொழி இலக்கணம், ‘குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ எனக்காந்தத்துக் காளிகா காண்டத்துக் காஞ்சிப் புராணத்தும்.

‘‘திராவிடமெனப் பெயரிய மாபாடைக் இலக்கணம் சிவபிரான் அகத்தியனார்க்கு அருளிச் செய்தான்.’ எனக் காந்தத்து உபதேச காண்டத்தும், ‘திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளுங் குன்ற மெறிந்த குமர வேளும் அகத்தியனாரோடு.
தலைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார்’’ என இறையனார் களவியறுரையுள்ளும் வருதலானும், தமிழ்க் கடவுள் மாமொழியென்பது தெற்றென உணர்ந்து கொள்க.
(பக்.கக) (பக்.20)

– என்ற பீடிகையுடன் சபாபதி நாவலர் தொடங்கி இருப்பார். சம்பந்தரும், திருமந்திரமும், காஞ்சிப் புராணமும் தமிழ் மொழி குறித்துச் சொன்னதை வரலாறாக ஏற்றுக் கொண்டு தொடங்கி இருப்பார். அச்சிறுவயதில் எனக்கு மொழிப் பற்று இருந்ததே தவிர, மொழி அறிவு இல்லை. மேலும், பக்தி இலக்கிய ஈர்ப்பும் இல்லை. ஆனாலும் இப்புத்தகம் ஈர்க்கக் காரணம், ஆரியம் மற்றும் திராவிடம் ஆகிய சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருந்ததால் மட்டுமே.

தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வு நூலுக்காக மீண்டும் இப்புத்தகத்தை இரண்டொரு ஆண்டுக்கு முன்னால் வாசிக்கத் தொடங்கினேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பிய பக்கங்கள், இப்போதும் நட்பாய் இருந்தன. பழைய நண்பனைப் பார்த்ததுபோல. அன்று புரியாதவனை இன்று புரிந்து கொண்டதுபோல..

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘நாவலர்’ என்றால் ஆறுமுக நாவலர். அடுத்து அப்பட்டம் பெற்றவர் சபாபதி நாவலர். திருவாவடுதுறையில் பேரவை கூட்டப்பட்டு, இவரது பெரும்புலமை ஏற்றுக் கொள்ளப்பட்டு ‘நாவலர்’ பட்டம் தரப்பட்டது. ஆறுமுக நாவலரைப் போலவே சபாபதி நாவலரும் ஈழத்தவர். யாழ்ப்பாணத்தில் வட கோவை என்ற ஊரில் பிறந்தவர். நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடம் தமிழும், சமஸ்திருதமும் பயின்றவர். ஆறுமுக நாவலர், சிதம்பரத்தில் ‘சைவப் பிரகாச வித்தியாசாலை, என்ற அமைப்பை நிறுவி இளைஞர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். அங்கு ஆசிரியராகப் பணியாற்றியவர் சபாபதி நாவலர். சிதம்பரத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சென்று 12 ஆண்டுகள் இருந்தார்.

தமிழகம் முழுவதும் சென்று தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவை குறித்தும் சைவம் குறித்தும் சொற்பொழிவு ஆற்றினார் சபாபதி நாவலர். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி எங்கு சென்றாலும் இவரையும் உடன் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்ற வைத்தார். ஒரு நாள் இராமநாதபுரம் அரண்மனையின் உயரிய ஆசனத்தில் நாவலரை உட்கார வைத்து மூவாயிரம் வெண்பொற்காசு பரிசளித்தார் பாஸ்கர சேதுபதி. இந்தப் பணத்தை வைத்துத்தான் சென்னையில், ‘சித்தாந்த வித்தியாநு பாலன யந்திர சாலை’ என்ற அச்சகத்தை நாவலர் நிறுவினார்.

‘ஞானாமிர்தம்‘ என்ற இதழையும் நடத்தினார். செந்தமிழ் பரப்பும் மாத இதழ் அது. தமிழ்ப்புலவர் அனைவரும் படிக்கும் இதழாக அது இருந்தது. தமிழ்- _ சைவ நூற்களை எழுதினார். அதில் மிக முக்கியமானது, ‘திராவிடப் பிரகாசிகை எனும் தமிழ் வரலாறு!
இந்நூல் முதல் பதிப்பாக சபாபதி நாவலர் வாழ்ந்த காலத்திலேயே 1899ல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1927ம் ஆண்டு நாவலரின் மருகர் அ. சிவகுருநாதரால் வெளியிடப்பட்டது. மூன்றாம் பதிப்பை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1961ல் வெளியிட்டது. ‘‘பண்டை நக்கீரரின் தனித்தமிழ்ச் சீரிய நடையினையும், பின்றைச் சிவஞான முனிவனாரின் நுண்மாண் அகலப் பெருமித நடையினையும் ஒருங்கு தன்னகத்துக் கொண்டு திகழும் ஒரு பெருநூல் இதுவாகும்‘‘ என்கிறது கழகப் பதிப்புரை.

தமிழ்மொழி வரலாற்று நூல்களில் மிக முக்கிய இடம், ‘திராவிடப் பிரகாசிகை’க்கு உண்டு. தமிழ் மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழியியல் ஆகிய ஐந்து பகுதிகளாகப் பிரித்து நாவலர் எழுதி இருக்கிறார். தமிழின் வளம், இலக்கண நுண்மை, இலக்கியச் செழுமை ஆகிய மூன்றும் கொண்டது. வடமொழி இலக்கிய, இலக்கணங்கள் பயின்றவராக இருப்பதால் இரண்டையும் ஒப்பீடு செய்து கொண்டே போவதும் அதிகம் இருக்கும். 1846 பிறந்த இவர் 1903ம் ஆண்டு மறைந்தார்.

‘‘தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், இலக்கிய மரபினையும் சாத்திர மரபினையும் நல்லாசிரியர் வழிநின்று தெளிதற்குரிய நற்றவ. அறிவு மாட்சியுடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாந்தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ் மொழியினும் பிற மொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தலானும், அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதை நீரார், அவற்றின் மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப் புலமை மாட்சியினையும், அவர் நூலரையின் தாரதம்மிய முறையினையும் வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்கும் கேடு சூழுதலானும், தமிழ் உலகம் மற்றவற்றின் உண்மை தேறி உறுதிப் பயனெய்துதற் பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித் திராவிடப் பிரகாசிகை யென்னும் பெயரினால் இவ்வசனகிரந்தம் இயற்றுவோ மாயினேம் (பக்…..கூ)

என்று தனது நோக்கத்தை நாவலர் கூறியிருப்பார். தமிழ் வரலாறு என்று சொல்லப்பட்டாலும் சைவத் தமிழ் வரலாறு போலத்தான் இந்நூல் இருக்கும். இவர் வாழ்ந்த காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர் ஆட்சி செலுத்திய காலம் மட்டுமல்ல, இரண்டு நாடுகளிலும் தம் சமயம் பரப்ப கிறித்துவ நெறியாளர்கள் அதிகமாய் வலம் வரத் தொடங்கிய காலமும், அவர்களது சைவ எதிர்ப்பை மறுக்க, சைவப் பற்றாளர்கள் தோள் தட்டி நின்றார்கள். அதில் முக்கியமானவர் சபாபதி நாவலர். ‘யேசு மத சங்கற்ப நிராகரணம்‘ என்பது நாவலரால் எழுதப்பட்டு சி.வை. தாமோதரம் பிள்ளையால் பாராட்டப் பெற்றது.

சைவ ஆதரவு மட்டுமல்ல, வைதிகத்தை எதிர்க்கும் சித்தாந்தங்களின் எதிரியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டவர் நாவலர். ‘சிந்தாமணி’யை விமர்சித்து, ‘வைதிக காவிய தூஷண மறுப்பு’ எழுதினார். தமிழையும், சைவ சித்தாந்தத்தையும் இணைப்பது இவரது முதல் நோக்கம். தமிழா, சைவமா என்றால் சைவத்தின் பக்கம் நிற்பதும் இவரது அடிப்படை நோக்கம். இந்தப் புரிதலுடன், ‘திராவிடப் பிரகாசிகையை வாசிக்க வேண்டும். திருவள்ளுவரை சைவ சித்தாந்தி என்றும், தமிழ் சிவஞானபோதத்துக்கு வடமொழி சிவஞான போதமே அடிப்படை என்றும் சொல்வார் நாவலர். இலக்கிய, இலக்கணங்கள் மூலமாக சைவம் நிறுவுதலே இந்நூல் முழுவதும் நடந்திருக்கும்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்நூலைக் கையில் எடுக்கக் காரணம் திராவிடர் – தமிழர் என்ற சொற்போருக்காகவே. ‘தமிழ் வரலாறு’ என்று நேரடியாக பெயர் சூட்டாமல், ‘திராவிடப் பிரகாசிகை என்னும் தமிழ் ‘வரலாறு’ என்று சொல்லக்காரணம், திராவிடம் என்பதே தமிழ் ஆனது என்று அவர் கருதியதால். ‘வடமொழிப் பெயரிட்டார்’ என்கிறது கழகத்தின் பதிப்புரை.

தமிழ், திராவிடமெனும் வடமொழித் ‘திரிபு என்றும்,’ வடமொழிக்காரர்கள் தன்மொழியால் தமிழை அழைக்க திராவிடம் என்றார்கள் என்றும் நூலாசிரியர் சொல்கிறார். அதனால்தான் திராவிடப் பிரகாசிகை என்பதை திராவிடம் தமிழ் என்றும், பிரகாசிகை -விளக்கத்தையுடையது என்றும் பதிப்புரை கூறுகிறது.
தமிழ் என்னும் சொல் வடமொழியில் திரிந்த வடிவமே ‘த்ரமிளம்‘ என்பார் பாவாணர். த்ரமிளம் என்பது பின்பு த்ரமிடம் எனத் திரிந்தது, த்ரமிடம் என்பது சிறிது காலத்தின் பின் த்ரவிடம் எனத் திரியலாயிற்று. இவ்விறுதி வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பது. த்ராவிடம் என்பது தமிழில் திராவிடம் என்றானது என்பதும் பாவாணரின் மொழி அறிவு முடிவு.

திராவிடம் என்னும் பெயர் தமிழையும் தமிழினத்தையும் தமிழ்நாட்டையுமே முதற்காலத்தில் குறித்து நின்றது. தமிழினின்று திராவிட மொழிகள் கிளைத்த பின்பும்,
திராவிடம் என்னும் சொல் தமிழைத் தனிப்படக் குறிக்கும் வழக்கும் கால்டுவெல் காலம் வரை தொடர்ந்து வந்திருப்பதாகத் தெரிகின்றது. (பக்.39 -தேவநேயம் தொகுதி-8)
சபாபதி நாவலரைப் படித்தாலும், தேவநேயப் பாவாணரைப் படித்தாலும் இன்றைய தமிழ்த் தேசியர்களுக்குத் திராவிடம் -தமிழ்ச் சொற்பொருள் நுண்மை விளக்கம் – புரியாது. அவர்கள் வெறும் வார்த்தைகளில் மூளையைத் தொலைத்தவர்கள்!
– முகத்தைத் தொலைப்போம்.

Related posts

Leave a Comment