You are here
ivan-turgenev கட்டுரை 

ரஷ்யாவின் கே.ராமச்சந்திரன் – ச.சுப்பாராவ்

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இருபது கிராமங்கள், ஐயாயிரம் அடிமைகள் கொண்ட ஒரு சிற்றரசியின் மகன் அவர். அந்த சிற்றரசிற்கு வேண்டிய அனைத்தும் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன. தனியாக மருத்துவர்கள் இருந்தார்கள். அரண்மனையில் ஒரு இசைக் குழுவும், நாடகக் குழுவும் இருந்தன. சிற்றரசி தனது தர்பாரில் அமர்ந்து ஆட்சிசெய்தாள். ஒரு எளிய போர்வீரனை அவனது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டு அரண்மனை மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டாள்.

அவரும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பொழுதுபோகாத நேரத்தில் அடிமைப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருந்தார். அடிமைகள் சிற்றரசியின் உத்தரவில்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. உத்தரவின்றி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. நாய் வளர்க்க முடியாது. அவள் உத்தரவின் பேரில் பெற்ற குழந்தையும் பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு விடும். அவளது சிற்றரசிற்குள் போலீஸ் வரக்கூடாது. அனுமதி பெற்று போலீஸ் கமிஷனர் மட்டும் வரலாம். ஆனால் அதுவும் பின்வாசல் வழியாக மட்டும்தான். குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தர பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் ஆசிரியைகள், ஆசிரியர்கள் இருந்தார்கள்.

ஆனால் அந்தக் குழந்தை தனது அடிமை வேலைக்காரர்களிடமிருந்து வாழ்க்கையையும் சேர்த்துக் கற்றுக் கொண்டான். பெரியவனானதும் தன் பங்காக வந்த நிலங்களில் பெரும்பகுதியை அடிமைகளுக்குத் தந்து அவர்களை விடுவித்தான். தனது பங்கு நிலத்தில் அவர்களை குத்தகை விவசாயிகளாக வேலைபார்க்கச் சொன்னான். அவர்களுக்கு வீடு கட்டித் தந்தான். மருத்துவமனை கட்டித் தந்தான். முதியோர் இல்லமும், பள்ளிக்கூடமும் கட்டினான். இந்த சாதனைகள் போதாது என்று டால்ஸ்டாய் போன்ற மிகப் பெரிய படைப்பாளிகளுக்கே வழிகாட்டியாக இருக்கும் மாபெரும் படைப்பாளியாகவும் இருந்தான். அவன்தான் இவான் துர்கனேவ்.

முதல் காதல், ஆஸ்யா, வஸந்தகால வெள்ளம் ஆகிய அவரது மூன்று காதல்கள் காட்டும், துன்பமும், வேதனையும், மகிழ்ச்சியும், உற்சாகமும் கலந்த துர்கனேவின் வாழ்க்கை வரலாறு ‘தி ஜெண்டில் பார்பெரியன்’ என்று வி.எஸ்.பிரிசெட் என்பவரால் மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. துர்கனேவிற்கு ரஷ்ய மொழியில் வாழ்க்கை வரலாறு கிடையாது. ஆனால் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தான் வாழ்ந்த காலத்திலேயே துர்கனேவ் மிகவும் போற்றப்பட்டவர் என்பதால் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்திருக்கிறது, சர். வால்டர் ஸ்காட்டின் நூற்றாண்டு விழாவிற்கு துர்கனேவ் தான் சிறப்பு விருந்தினர் – ஆங்கிலத்தில் அவர் குறித்து ஏராளமான புத்தகங்கள் உண்டு. அவற்றை எல்லாம் படித்து, ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாத பிரிசெட் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.

துர்கனேவ் 1818ல் பிறந்தவர். புஷ்கினை நேரில் பார்த்தவர். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர். கோகலின் சமகாலத்தவர். ரஷ்ய எழுத்தாளர்கள் அனைவரும் கோகலின் மேல்கோட்டிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும், கோகல் அன்றைய ஜார் மன்னராட்சியின் கொடூரத்திற்கு, அதன் தணிக்கைக்குப் பணிந்து போனவர்தான். இளவரசரான துர்கனேவ் ஜார் ஆட்சியை தைரியமாக எதிர்த்தவர் என்றாலும், அவரது குடும்பப் பின்னணி காரணமாக அரசு அவர் மீது கை வைக்க அஞ்சியது. கோகல் இறந்த போது, அவருக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதவே அனைவரும் பயந்த போது, துர்கனேவ் துணிந்து எழுதினார். உள்ளுர் தணிக்கைத்துறை அதை தடைசெய்தது. தமது செல்வாக்கில் அதை மாஸ்கோவில் வெளியிட வைத்தார் துர்கனேவ்.

சற்று தாமதமாகத் தெரிந்து கொண்ட அரசாங்கம், துர்கனேவைச் சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின்னும் பல ஆண்டுகளுக்கு அவரது சொந்த ஊரை விட்டு 40 மைல் சுற்றளவிற்கு வெளியே போக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த சிறையில் உடற்பயிற்சிக்காக தனது அறையில் தினமும் 416 முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே தனது சிறுவயது அனுபவம் ஒன்றை கதையாக்கினார் துர்கனேவ். முன்பு குறிப்பிட்ட அந்த நாய் வளர்க்கும் அனுமதி பற்றியதுதான்.

எத்தகைய கல்நெஞ்சனையும் கண்ணீர் விட வைத்துவிடும் மகத்தான சிறுகதையாகிய முமு இப்படித்தான் உருவானது. அதில் வரும் சிற்றரசி அவரது தாயார்தான் என்றாலும், அம்மா மீதான பாசம் காரணமாக என் பாட்டி என்று பொய் சொன்னார் துர்கனேவ். உண்மையில் அந்தக் கதையில் வரும் அடிமை ரஷ்ய தேசம்தான்.

அடிமைகள் மீது அன்பு, இரக்கம் இருந்தாலும் கூட, அன்றைய அரசகுல குணங்கள் இல்லாமலா போகும்? 15வது வயதில் தன்னைவிட பலவயது மூத்த ஒரு வேலைக்காரியைக் காதலித்துக் கர்ப்பமாக்கினார். தாய்க்காரி அரசருக்கான தகுதி தனது மகனுக்கு வந்துவிட்டது என்று மகிழ்ந்து போய் இந்த செய்தியை தனது தோழிகளுக்கெல்லாம் கடிதம் எழுதித் தெரிவித்தாள். ஆனால், விரைவில் துர்கனேவ் மாறிவிட்டார். இருபத்தியைந்து வயது இருக்கும்போது பலீனா கார்ஸியா வியார்தோ என்ற பாடகி மீது காதல் கொண்டார். அவள் மணமானவள். கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் எண்ணமும் அவளுக்கு இல்லை. துர்கனேவ் திருமணம் செய்துகொள்ளாமல், வாழ்க்கை முழுவதும் அவள் பின்னாலேயே திரிந்தார்.

அவள் குழந்தைகளைத் தன் குழந்தையாகவே பாவித்தார். ஒன்றிரண்டு இவருக்கும் பிறந்திருக்கலாம். அச்சமயம் மற்றொரு வேலைக்காரி மூலம் தனக்குப் பிறந்த மகளுக்கு பலீனா என்று தன் காதலி பெயரையே சூட்டி, அவளை தன் காதலி பலீனாவிடம் தந்து வளர்க்கச் சொன்னார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் , அவளது வீட்டிலேயே ஒரு அறையை தனக்குத் தரச் சொல்லி, அவளைப் பார்த்துக் கொண்டே தன் வாழ்நாளைக் கழித்தார். துர்கனேவின் கதைகளில் காதலின் துன்பியல் மிக மிகக் கூர்மையாக வெளிப்படக் காரணம் அவரது இந்த சொந்த வாழ்க்கைச் சோகம்தான்.

துர்கனேவ் காலத்தில் ரஷ்ய இலக்கியத்தில் நாவலுக்கென்று ஒரு இலக்கணம் கிடையாது. அதை உருவாக்கியவர் துர்கனேவ்தான். அவர் காட்டிய ரஷ்ய கிராமப்புறமும், நிலப்பிரபுக்களின் ஆடம்பரமும், போலிவாழ்க்கையும்,ஏழைகளின் துயரமும்தான் செகாவ் காலம் வரை அத்தனை ரஷ்ய எழுத்தாளர்களுக்கும் வழிகாட்டியது. துர்கனேவ் காலத்தில் இருந்த சமகால படைப்பாளியான லெர்மன்தோவும் ஒரு பலப்பரிட்சையில் இறந்து போனார். டால்ஸ்டாயும், தஸ்தயேவ்ஸ்கியும் அப்போதுதான் எழுத வந்திருந்தார்கள்.

இருவருமே துர்கனேவ் மீது ஒரு அர்த்தமற்ற பொறாமை கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் துர்கனேவ் டால்ஸ்டாய்க்கு தன் சக்திக்கு மீறி நிறைய கடன் தந்திருக்கிறார். ‘போரும் அமைதியும்’ நாவலை பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் டால்ஸ்டாய் அதையெல்லாம் தனது இறுதிக்காலத்தில்தான் உணர்ந்தார். துர்கனேவிடம் மன்னிப்புக் கோரினார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் துர்கனேவின் விருந்தினராகத் தங்கியிருந்த போது டால்ஸ்டாய் ‘நீங்கள் ஏன் சமீபத்தில் ஒன்றுமே எழுதவில்லை?’ என்றார். துர்கனேவ் ‘எனக்கு காதல் ஜுரம் ஏற்பட்டால்தான் எழுதுவேன். வயதாகிவிட்டதால் அந்த காதல் ஜுரம் இப்போது வரமாட்டேன் என்கிறது’ என்றார். இரண்டு கிழவர்களும் சிரித்துக் கொண்டார்கள்.

அதேபோல தஸ்தயேவ்ஸ்கியும் தனது டெவில் நாவலில் துர்கனேவைப் போன்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கி அவரை மிகவும் கிண்டல் செய்தார். எழுத்தாளர்களின் பொறாமை உலகளாவியது போலும்! ஆங்கில இலக்கியத்தோடு, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய இலக்கியங்களையும் ஆழமாகப் படித்தவர் துர்கனேவ். பல பிரெஞ்சு எழுத்தாளர்களை ஊக்குவித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். எமிலி ஜோலாவை ரஷ்யாவில் அறிமுகம் செய்தவர். மாப்பஸான், பிளாபர்ட் ஆகியோரின் நெருங்கிய நண்பர். அவர்களது படைப்புகளை ரஷ்யமொழியில் தானே மொழிபெயர்த்தவர்.

‘பெண்களின் காதல் பற்றி எச்சரிக்கையாக இரு. அந்தப் பரவசம் பற்றி எச்சரிக்கையாக – ஏனெனில் அது மெல்லக் கொல்லும் விஷம்’ என்று ஒருமுறை துர்கனேவின் தந்தை அவரிடம் சொல்லியிருக்கிறார். அந்தப் பரவசத்திற்காக அந்த விஷத்தைத் துளித்துளியாக தன் வாழ்வு முழுவதும் பருகிய துர்கனேவ் அதை அப்படியே அள்ளி அள்ளி நமக்கும் தந்திருக்கிறார். 96ன் கே.ராமச்சந்திரனை நினைத்து உருகும் நம் வாசகர்கள் துர்கனேவின் மூன்று காதல் கதைகள் என்ற தொகுப்பையும், முக்கியமாக அவரது வாழ்க்கை வரலாற்றையும் படிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment