You are here
Ruskin Pande நேர்காணல் 

குழந்தைகளின் ரசனை ஒரு சமூகக் குறியீடு – ரஸ்கின் பாண்ட்

இந்தியாவின் தலைசிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளியான ரஸ்கின் பாண்ட் 1934ல் ஒரு பிரித்தானிய விமானப்படை அதிகாரிக்கு பஞ்சாபில் பிறந்தார். தனது பத்து வயதில் தந்தையை இழந்த அவர் சிம்லாவில் பிஷப் காட்டன் பள்ளி விடுதியில் வளர்ந்து சிறுவயதிலிருந்தே எழுத தொடங்கினார். தான் ஓர் இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டவர். தன் பதினாறாவது வயதில் இர்வின் டிவினிட்டி இலக்கியப் பரிசு பெற்றவர். சிறார்களுக்கான இவரது ரஸ்டி கதாபாத்திரம் மிகப் பிரபலம்.
எ பிளைட் ஆஃப் பிஜியான்ஸ், எ ரூம் ஆன் தி ரூஃப் உட்பட சிறார்களுக்கான 50 நூல்களின் ஆசிரியர். 1992ல் சாகித்ய அகாடமி விருதும், 1999ல் பத்மஸ்ரீ, மற்றும் 2014ல் பத்ம பூஷண் விருதும் பெற்றார். ஏகலைவா பதிப்பகத்திற்காக அவர் அளித்த பிரத்யேக நேர்காணல்.
நன்றி: www.ekalvya.com
சந்திப்பு: அரவிந்தன்
தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்.

கேள்வி: எத்தனையோ நாவல்களை, படைப்புகளை நீங்கள் பெரியவர்களுக்காக எழுதி இருந்தாலும் உங்கள் பெயரைச் சொன்னாலே சிறார் இலக்கிய படைப்பாளி என்றே சொல்கிறார்களே?

சிறார் இலக்கியப் படைப்பாளி என்று நான் அழைக்கப்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. பதினாறு பதினேழு வயதில் ‘எ ரூம் ஆன் தி ரூஃப்’ எழுதியபோது பொதுவாக எல்லாருக்குமாகத்தான் எழுதினேன். பல பள்ளிச் சிறார்கள் அதை வாசித்து அதை சிறார் படைப்பாக்கினார்கள். பெரியவர்களுக்கான பொது இதழ்களில்தான் என் படைப்புகள் ஆரம்பத்தில் வெளிவந்தன. சிறார் நூல் தொகுதிகளில் அவை சேர்க்கப்பட்டதால் பள்ளிக் குழந்தைகளுக்கு அவை பரிச்சயம் ஆகின. ஆனால் என் நாற்பதாவது வயதில் சிறார்களுக்கென்றே தனியாக கவனம் செலுத்தி ஆத்திர நதி (தி ஆங்க்ரி ரிவர்) எனும் நூலை படைத்தேன். அது இங்கிலாந்தில் இருந்து வெளிவந்தது. குழந்தைகளுக்காக எழுதுபவனாக மட்டுமே இருக்க எனக்கு விருப்பம். ஆனால் பொது வாசகர்களுக்காக எழுதுவதையும் நிறுத்த முடியவில்லை.

இமயமலை அடிவாரம்.. மலைச்சாரல் உங்களது படைப்புகளின் மையச் சூழல், செர்ரி தாவரங்கள், அணைகட்டுமானத்தால் மனித வாழிடம் அழிதல்.. உங்களது பல கதைகளில் சுற்றுச் சூழல் அரசியலைப் புகுத்தியது ஒரு நோக்கத்தோடு செய்யப்பட்டதா?
அது இயற்கையாக நடந்தது என்றே தோன்றுகிறது. 1946ல் இந்த முசோரி -மலை பகுதிக்கு வாழவந்த நாட்களில் மலையும் இயற்கை சூழலும் என் எழுத்தில் புகுந்திருக்க வேண்டும். நகரமயமாதல் இந்த சிம்லா முழுவதிலுயும் இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த நாட்களில் சுற்றுப்புற சூழல் எனும் சொல்லாக்கமே இருக்கவில்லை. டே ராடூன், சிம்லா என இமயமலை அடிவாரத்தை ரசித்தபடி அதன் அடிப்படைகளோடு கலந்து வாழ்க்கையோடு போராடும் சிறுவன் ரஸ்டி இந்திய சூழலையும் அதிவேகமாக அழித்தொழிப்பதையும் வனப்பகுதிகளின் அளவே குறைந்து வருவதையும் சொல்ல முயன்றது ஒரு வகை ஆழ்மன பதட்டத்தால்தான். தற்போதும் குழந்தைகளிடம் போய் புவி வெப்ப மயமாதலையும், காற்று மாசு படுவதையும் இயற்கை வளங்கள் மாயமாவதையும் குறிப்பிட்டு எழுதுவதில் தவறில்லை என்றே நான் சொல்வேன். என்ன.. அது இயல்பாக எழுத்தில் இழையோடுவது நல்லது. வலிந்து திணிக்கும்போது பாட புத்தகம் போல ஆகி விடுகிறது.

சமீபத்தில் கொல்கத்தாவில் பாடப் புத்தகத்தில் உங்கள் கதைகள் தொடர்ந்து ஆங்காங்கே இடம் பெற்றமைக்காக குழந்தைகளிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தீர்களாமே?
பள்ளிக் குழந்தைகளுக்காக நான் எப்போதுமே வருத்தப்படுகிறேன். சுயதேடல் விருப்பம் கொண்டு அனாயாசமாக ஒரு புத்தகத்தைப் படிப்பது வேறு. பரிட்சையில் கேள்வி கேட்பார்களே என படிப்பது வேறு. பாடப் புத்தகம் வாயிலாகவே என்னைத் தெரியும் என்று அரங்கத்தில் பல குழந்தைகள் சொன்னபோது நான் அவர்களிடம் மன்னித்துவிடுமாறு கேட்டேன்.. ரஸ்கின் பாண்டு அவர்களது சகாக்களில் ஒருத்தர்.. அவர்களது அன்றாடத் தண்டனைகளில் ஒன்றாக ஆகிவிட கூடாது. பாடப் புத்தகத்தில் இடம் பெறுவதால் அவர்கள் விரும்பி வாசிக்கும் ஒரு எழுத்தாளன் எனும் கவர்ச்சி போய் விடலாம். ஆனால் நமது கல்வி முறைக்கு வெளியே நான் அதிகம் வாசிக்கப் பட்டால்தான் மகிழ்ச்சி அடைவேன்.

ஆனால் பெரும்பாலும் உங்களது கதைகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது இல்லை. காரணம் பாண்டசி.. குழந்தைகளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத கற்பனாவாதம் சார்ந்த உங்கள் அணுகுமுறை. பாடப் புத்தக குழுக்கள் அவற்றை அறிவுலகுக்கு பொருத்தமற்ற மூடநம்பிக்கை வரிசையில் சேர்த்து விடுகிறார்கள்.
அதீத கற்பனாவாதம் என்பது குழந்தைகளின் இயல்பான உலகம். ஒரு பேனா பென்சில் கூட ஒரு குழந்தைக்கு ராக்கெட்டாகிறது. நான் சிறுவனாக இருந்தபோது பிளாக் டங்கன், எம்மா ஜேம்ஸ் போன்றவர்களின் பேய்.. ஆவி.. கதைகளை மாயமந்திர வில்லன்களை தான் அதிகம் வாசிப்பேன். அது ஏன் அப்படி குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பது இன்னும் ஆராயப்படாத விஷயம்.

எனது கதைகளின் ஆவி பேய் போன்றவை ஹாஸ்யமான காமெடி விஷயங்கள், அவற்றை அதிகம் சிறார்கள் விரும்பிடக் காரணம் பாதுப்பான பய உணர்வு, அதே சமயம் கொஞ்சம் மனநடுக்கமும் தேவை. பத்து பனிரண்டு வயது இருக்கும். ‘சார்.. உங்களது பேய் உலக கதைகளை நிறைய விரும்பி வாசிக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் பயம் வருகிற மாதிரி எழுதுங்கள் ப்ளீஸ்.. இன்னும் நடுக்கம் போதாது’ என்றார். உண்மைதான். அவற்றில் நேசத்தன்மையே அதிகம் உள்ளது. பல தொலைக்காட்சி பயங்கர பேய்ப் படங்களோடு ஒப்பிட்டால் அவற்றில் பயப்படவைக்கும் தன்மை குறைவு. கற்பனை வளமே அதிகம்.

அதிகக் கற்பனைவாதமான ஃபாண்டஸியில் அறிவியல் தன்மை இல்லை என்கிறார்களே.. அவற்றை குழந்தைகளுக்குத் தருவதில் ஒரு வகை தயக்கம் இருக்கிறது.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

இது கேலித்தனமான முடிவு. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே ஒரு காலத்தில் ஃபாண்டஸியாகத்தான் பிறப்பெடுத்தன என்பதை மறந்து விடுகிறார்கள். ஃபாண்டஸி சற்று தொலைவிலிருந்து ஒரு கருநாகத்தை கண்டு ரசனை கொள்கிறது.

அறிவியல் அதை அருகே சென்று பாகத்தைக் குறித்து, தேவையானால் அறுத்தும் பார்க்கிறது. கற்பனா உலகில் கருநாகம் ஒரு கதாபாத்திரம். அறிவியல் உலகில் அது இயற்கையின் அங்கம். இரு உலகும் என்னைப் பொறுத்தவரை வேறு வேறல்ல. ஒரு குழந்தையின் மனதை சுய கற்பனாவாத கனவுலகமாக படைப்பு மனமாக உருவெடுக்கச் செய்யாமல் நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க முடியாது.

தீண்டத் தகாதவன்’ கதை தான் உங்களது முதல் படைப்பா. ஆரம்ப கால இலக்கிய முயற்சிகள் குறித்து சொல்லுங்கள் சார்!

நான் பிறந்தபோது என் தந்தை ஜாம்நகர் அரண்மனையில் அந்த இந்திய மன்னருக்கு ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர். ஆனால் விரைவில் அவர் ராயல் விமானப் படையில் சேர்ந்தார். டேராடூனில் ஆரம்பத்தில் நான் படித்தேன். பிறகு அவருக்கு புது தில்லியில் ராணுவ முகாம். அங்கே படித்தேன். என் தாயை அவர் பிரிந்தார். தாய் ஒரு பஞ்சாபிய இந்தியரை மணந்தார். நான் என் தந்தையோடே வாழ்ந்தேன். மிக நெருக்கமான உறவு. ஆனால் எனக்குப் பத்து வயதாக இருந்தபோது என் தந்தை மலேரியா நோய்க்கு பலியானார்.

அப்போது சிம்லாவில் பிஷப் காட்டன் பள்ளியில் என் ஆசிரியை வந்து அந்த செய்தியை என்னிடம் பகிர்ந்த நாளை நினைக்கிறேன். மிகத் துயரமான நாள். பிறகு நான் யாருக்குமே தேவைப்படவில்லை. அம்மாவின் புதிய குடும்பத்திற்குள் ஒட்ட முடியவில்லை. ஆனால் விரைவில் என் எழுத்தே என் உலகம். பள்ளியில் எழுதிய கதை தீண்டத்தகாதவன். அது இர்வின் டிவினிட்டி கதை பரிசை வென்றது. பள்ளி முடித்தபோது உயர் படிப்பு என அம்மா என்னை என் அத்தையிடம் சானல் தீவிற்கு (இங்கிலாந்து) அனுப்பினார். இரண்டு வருடங்கள் படித்ததைவிட எழுதியதே அதிகம்.

அப்போது அந்த வயதில் நான் என் வாழ்க்கைக் கதையை, சம்பவங்களை கற்பனை கலந்து என் அப்பாவிடம் பேசிப் புலம்புவது போலவே எழுதிக் கொண்டிருந்தேன். பிரித்தானிய காமன்வெல்த் பரிசுக்காக ‘ரூம் ஆன் தி ரூஃப்’ கதையை அனுப்பி பரிசு கிடைத்தபோது அந்த சொற்ப பணத்தில் கப்பல் ஏறி இந்தியா வந்தேன்.

ரூம் ஆன் தி ரூஃப் (Room on the Roof) நீங்கள் எழுத்தாளராக எப்படி ஆனீர்கள் என்பதைச் சொல்கிறது அல்லவா?
என்னைப் பற்றியதும் கூட, ஆனால் பதினைந்து வயது சிறுவனின் வாழ்க்கை போராட்டம். என் தந்தை பற்றி நிறைய நான் அதில் பதிவு செய்தேன். இந்தியாவில் வாழ பரிதவிக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியச் சிறுவனின் மன உளைச்சலே அந்தக் கதை. சார்லஸ் டிக்கின்ஸ், மார்க் ட்வெய்ன் போன்றவர்களை விரும்பி வாசித்த பாதிப்பு என் இன்றைய கதைகளிலும் உண்டு. ரிச்மல் கிராம்டன் (ஜஸ்ட் வில்லியம்) சார்லஸ் ஹாமில்டன் (பில்லி பண்டர்) போன்றவர்களை வாசிக்காமல் நான் ஒரு எழுத்தாளனாக ஆகி இருக்கவே முடியாது. வாசிப்பு என பெரிய உலகம்.

கதைகள், கவிதைகள், பயணக்கதை, நாவல்கள் மற்றும் சிறார் இலக்கியப் படைப்புகள் என எல்லாவற்றையும் எழுதுகிறீர்கள். உங்களை என்ன வகை எழுத்தாளராகப் பார்க்க விரும்புவீர்கள். நீங்கள் சுய சரிதை வகை கதைகளைக்கூட எழுதி இருக்கிறீர்களே?
நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். குறிப்பாக சமீபகாலங்களில் குழந்தைகள் வாசிக்க விரும்பும் என்ன வகை இலக்கியமும் படைக்க நான் தயங்கமாட்டேன். நான் ஒரு மனக்காட்சி சார்ந்த எழுத்தாளன் என்று தோன்றுகிறது. என் எழுத்தின் அடிப்படை உபகரணம் சொற்கள் அல்ல. என் மனக் காட்சியில் கதையின் முழுமையை ஓரளவு அனுபவித்த பிறகே நான் எழுத்தில் காட்சி ரூபம் தருவேன். சற்றே முதிர்ச்சி பெறாத ஒரு அப்பாவித்தனமான சிறுவன்/சிறுமியின் அகப்பார்வை சார்ந்த! எதையும் ஆச்சரியத்தோடு ரசிக்கும் தன்மை என் எழுத்தின் இன்றியமையாத பகுதி. அந்த அகக் காட்சியாக்கம் முதலில் முக்கியம். பிறகுதான் எழுத்து என்பது. கட்புலனாகாத எந்த விஷயமும் எழுத்தில் விபரீதத்தையே ஏற்படுத்தி விடும் என தோன்றுகிறது. நான் கடித இலக்கியம் கூட எழுதி இருக்கிறேன்.

‘துயர முடிவுகள் கொண்ட கதைகளைக் கொடுத்து என்னைப் பழி வாங்கினாயா?’ என்று உங்கள் கதாபாத்திரம் ரஸ்டி சொல்வான். குழந்தைகளுக்கு சுபமுடிவு கதைகள்தான் பிடிக்கிறதா?
துயரமான முடிவு கொண்ட கதைகள் அதிகம் இல்லை. நமது ஆரம்பகால புராணம், இதிகாசம், அல்லது தொல்லிலக்கியம் என எதுவும் குழந்தைகளை மனதில் வைத்து உருவானது கிடையாது. ஆனால் துயரமான முடிவு இல்லை எனினும் துக்கமும் துயரமும் தரும் பகுதிகள் உண்டு. துன்பம், துயரம், பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாமே உள்ளது தான் வாழ்க்கை. அவற்றையும் குழந்தைகள் உணர வேண்டி இருக்கிறது. சார்லஸ் டிக்கின்ஸ் அதில் வல்லவர். அவரது கதைகளில் குழந்தைகள் இறந்துபோவார்கள். ஆஸ்கர் வைல்டு, ஆண்டர்சன் இவர்களது கதைகளிலும் துயர முடிவுகள் உண்டு. குழந்தைகள் அவற்றை விரும்பி வாசித்தும் நான் பார்த்திருக்கிறேன். மிகுந்த துயரத்தில் இருந்து கொண்டிருப்பதும் பிறகு தானே தந்திரங்கள் மூலம் நலவாழ்வுக்கு திரும்புவதும் கூட அவர்கள் விரும்பி வாசிக்கும் விஷயம். இம்மாதிரி படைப்புகள் அவர்களைப் பதப்படுத்தும், வாழ்வின் மீதான அச்சத்தைப் போக்கும்.

ஆலிஸ் (அற்புத உலகில் ஆலிஸ்). படங்களே இல்லாத கதைப் புத்தகத்தால் என்ன பயன் என்று கேட்பாள் அல்லவா. குழந்தைகள் நூல்களுக்கு படங்களின் அவசியம் பற்றி உங்களது கருத்து என்ன?
ஆரம்ப கட்டத்தில் ஒரு குழந்தையை வாசிப்பிற்குள் கொண்டுவர படங்கள் அவசியம் தேவை. அது கதையை படங்களோடு இணைத்து வாசிக்க உதவும். படக்கதைகள், காமிக்ஸ் இவற்றின் அம்சம் வேறு! அங்கே வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் பார்க்கலாம். சிறார்களின் மூன்று நான்கு வயது வாசிப்பு நூல்களில் படம் அதிகமாகவும் எழுத்துக்கள் மிகக் குறைவாகவும் இருக்கும். இன்று அதுவே டிரண்டாக ஆகி வருகிறது. நிறைய வண்ணங்கள்…! ரொம்பவும் விலை உயர்ந்த காகிதங்கள். இப்படி ஆனால் படம் என்பது குழந்தைகள் புத்தகம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. எனது ‘ரூம் ஆன் தி ரூஃப்’ புத்தகமாய் வந்தபோது படம் எதுவும் கிடையாது. அதுவே இல்லஸ்ட்ரேடட் வீக்லி இதழில் தொடராக வந்தபோது அதற்கு அந்த இதழின் ஓவியர் மாரியோ வரைந்த படங்கள் மிகவும் நன்றாக இருந்தன. பிறகு வந்த புத்தகப் பதிப்புகளில் பென்குயின் இந்தியா அவற்றையும் பயன்படுத்தியது. ஆனால் எனது சில நூல்கள் அப்படி அமையவில்லை. என் சிறார் புத்தகம் ஒன்றிற்கு – படம்வரையக் கற்றுக் கொண்ட ஒருத்தர் என்று நினைக்கிறேன் – வரைந்த அட்டைப் பட ஓவியத்தில், ஒரு நபருக்கு இரண்டு இடது கால்களோடு தீட்டப்பட்டிருந்தது. அப்படி ஆகிவிடக்கூடாது.

உங்களது சிறார் நூல்களை நீங்கள் வயது அடிப்படையில் எழுதுகிறீர்களா? வயது அடிப்படையில் சிறார் இலக்கியத்தை வகைப்படுத்துவது பற்றி உங்கள் கருத்தென்ன?
நான் ஏற்கவில்லை. எனது படைப்புகளை பல வயதுகளில் பல பேர் வாசிப்பதை நான் அறிவேன். பதினாறு வயதில் நீங்கள் வாசித்த ஒரு கதை நாற்பது வயதில் திரும்ப வாசிக்கும்போது வேறு அனுபவத்தை தரும். எனக்கு மனதில் தோன்றும் ஒரு யோசனையை வித்தியாசமாக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எப்படிச் சொல்வது என்பதே என்னைப் பொறுத்தவரை முக்கியம். அதுவே படைப்பாக்கத்தின் அடிப்படை. யார் அதை வாசிப்பது எந்த வயதில், இதை வாசிப்பாளர்களே தீர்மானிக்கட்டும் என்பேன் நான். உண்மையில் கிப்ளிங், பேட்ஸ், மேளகன், டேவிட் பேரி போன்றவர்கள் வயதை முன்னிட்டா எழுதினார்கள். ஒரு சார்லிசாப்ளினை ரசிக்க வயதா பார்க்கப்படுகிறது? இந்த வாதத்தை நான் ஏற்கவில்லை. இன்றைய சிறார்கள் தங்களது கைபேசியில் இணையத்தில் அடையாத ஒன்று உண்டா என்ன?

‘ஹாரி பாட்டர்’ மாதிரி சில நிறுவனங்கள் புதிய வணிக உத்திகளோடு சிறார் எழுத்தாளர்களை உலக கோடீஸ்வரர்கள் ஆக்குவது பற்றி உங்கள் கருத்து என்ன?
எனக்கு ஆட்சேபணை இல்லை. இன்றைய இணைய வாட்ஸ் அப் யுகத்தில் குழந்தைகளை புத்தக வாசிப்பை நோக்கி கொண்டு வந்தாலும் அதை வரவேற்கிறேன். ஹாரி பாட்டர் திரைப்படமான பிறகு அது வாசிக்கப்படுகிறதா.. தெரியவில்லை. மிக அதிக விளம்பரங்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகம் வாங்கித் தருமாறு அடம்பிடிப்பதைக் கண்டேன். அவனுக்கு மூன்று வயது இருக்கும். தந்தை வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொடுத்தார். கண்டிப்பாக அவனால் வாசிக்க முடியாது. விளம்பரத்தால் இதுதான் நடக்கும். உங்களுக்கு எத்தனை பிரதி விற்றது என்பதே தேவை. ஒரு லேட்டஸ்ட் பொம்மை மாதிரி அதை வாங்கி வைத்து இருந்தாலும் உங்களுக்குத் தேவை ஒரு சாதனை விற்பனை. நிஜவாசிப்பு என்பது வேறு…

இன்றும் புத்தகம் தேவையா.. அதாவது அச்சிடுவது? குழந்தைகள் புத்தகம் வாசிப்பதே இல்லை என்கிறார்களே.. டிவி.. கைபேசி இவைதான் அவர்களது உலகமாகிவிட்டதே.?
அந்தக் காலத்தில் மட்டும் எல்லாருமா வாசித்தார்கள்? என் வகுப்பில் நிஜமான வாசகர்கள் நாங்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தோம். தவிர குழந்தைகளின் ரசனையை செதுக்குவது புத்தகமே ஒரு சமூகத்தில் குழந்தைகள் எதை ரசிக்கிறார்கள் என்பது முக்கியமான சமூக குறியீடு (Social Symbol) ஒரு குழந்தை நாயை கொல்வதை ரசிக்கிறதா… டிவியில் யுத்தத்தில் ரத்தம் வழிவதை ரசிக்கிறதா.. ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அது முசுலீமா.. இந்துவா என பாகுபடுத்திப் பார்க்கிறதா.. அப்படி என்றால் இந்த சமூகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லையா. குழந்தைகள் தங்கள் வாழ்வை நேசிக்கவும் நியாய தர்மத்தை, சுயகட்டுப்பாட்டை படைப்பாக்க மன சுதந்திரத்தை அனுபவிக்கவும் உள்ள வழிகளில் புத்தக வாசிப்புதான் சிறந்த வழி என பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. இந்தக் குழந்தைகளில் பலர் படைப்பாளிகளாக வேண்டும். வாசிப்பது ஒரு அட்வெஞ்சர் மட்டுமல்ல, அது ஒருவகை கல்வி, அத்தகைய ஒரு புதையல் – இன்று சந்தையில் கிடைக்கும் எத்தகைய சிறப்பு கவர்ச்சித் தள்ளுபடி’ நுகர்வு பண்டத்தைவிடவும் உயர்ந்தது..!

Related posts

Leave a Comment