You are here
iravatham-mahadevan அஞ்சலி 

‘தமிழ் எழுத்துள்ளவரை இறப்பில்லை’ – ஐராவதம் மகாதேவன் – சுந்தர் கணேசன்

நானும் எனது மனைவியும் ஐராவதம் மகாதேவன் அவர்களைக் காண கடந்த 25ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரால் பேச இயலவில்லை. எங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். சைகையால் ஒரு வெள்ளை அட்டையைக் கேட்டார். அதில் “When shall I die? I. M”. (நான் என்று இறக்க வேண்டும்) என எழுதினார். பின் 26.11.2018 என தேதியைக் குறிப்பிட்டார். அந்த அட்டையை என்னிடம் காண்பித்துவிட்டு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு எங்களைக் கையசைத்து வழி அனுப்பி வைத்தார். 12 மணி நேரம் கழித்து 26 ஆம் தேதி காலை இறந்து போனார்.

F.W.எல்லீஸ், ராபர்ட் சீவல் போன்ற அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களுமாக இருந்தவர்கள் வரிசையில் மகாதேவனும் இடம் பெறுவார். மகாதேவனின் தமிழ் பிராமி, சிந்துவெளி குறியீட்டு ஆராய்ச்சிகள் திராவிடவியல் ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய ஆய்வுக் களஞ்சியங்களாகவும் முதன்மை ஆதார நூல்களாகவும் விளங்குகின்றன.

ஐராவதம் மகாதேவன் அவர்கள் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள மணச்சநல்லூரில் பிறந்தவர். புனித ஜோசப் கல்லூரியிலும் பின் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, திருச்சியில் சில காலம் பணியாற்றினார். அப்போது இந்திய ஆட்சிப் பணி தேர்வெழுதி இந்திய அயல்நாட்டுப் பணியில் சேர்ந்தார். இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதன்மூலம் இந்திய ஆட்சிப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

பொள்ளாச்சியில் துணை ஆட்சியாளராக தனது ஆட்சிப்பணியைத் துவங்கிய இவர், பல முக்கியப் பதவிகளில் தலைமைப் பொறுப்பு வகித்தார். 1980ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.  இவரது ஆய்வுகள் கல்வெட்டியலில் தொடங்கின. குகைகளிலும், பாறைகளிலும் எழுதியிருந்த எழுத்துகளை ஆராய்ந்து அவ்வெழுத்துகள் தமிழ் பிராமி எனவும், அவை சங்க காலத்து பழமையானது எனவும் மகாதேவன் கண்டறிந்தார். இவரது முதல் கட்ட ஆய்வுகள் 1961 முதல் 1967 வரை நடந்தன. இவர் தமிழ் ஆய்வாளர்களின் சர்வதேச கூட்டமைப்புடன் (International Association of Tamil Researchers (IATR)) நெருங்கிய தொடர்பிலிருந்தார். சேரர், சோழர்களின் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மெய் எழுத்துகளில் உள்ள புள்ளியைப் பற்றி உலகிற்குத் தெரிவித்தார். தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என கணித்தார். திருக்குறளை மொழிபெயர்த்த F.W.எல்லீஸ் திருவள்ளுவரை சமண முனிவர் என்றே கருதி அவரைப் போற்றும் விதமாக இரண்டு தங்க நாணயங்களை வார்த்துத் தந்தார். இதை உலகிற்கு மகாதேவன் அவர்களே தெரிவித்தார்.

சில காலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தார். மறுபடியும் தமிழ் பிராமி ஆய்வுகளில் இறங்கினார். கல்வெட்டுகளைப் படிமம் எடுக்கும் முயற்சியில் ஐந்து ஆண்டுகள் கடுமையான களப்பணியை மேற்கொண்டார். காஞ்சிபுரம் அருகே தூசி மாமண்டூரில் நரசய்யா, காந்தி ராஜன் ஆகியோருடன் அவர் மேற்கொண்ட கள ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

இவரின் களப்பணிகளின் பலனாக 2003ம் ஆண்டு ‘Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth century A D’ வெளியானது. இந்நூலை க்ரியாவும், ஹார்வேர்ட் கீழையியல் தொடரும் இணைந்து பதிப்பித்தன. இதன் இரண்டாம் பதிப்பை மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. மகாதேவன் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீக மொழிகள் அறிந்தவர். அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்கக்கூடியவர். அவரது ஆய்வுகள் எந்தவித பாகுபாடுகளும் இன்றி அமைந்திருக்கும்.

மகாதேவன் நிறைய சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வர். ஜவஹர்லால் நேரு உதவித் தொகை மூலம் அவர் சிந்துவெளி ஆய்வுகள் மேற்கொண்டதைப் பற்றி ஒரு முறை கூறினார். பல நாட்கள் தேசிய அருங்காட்சியகத்தில் சிந்துவெளி முத்திரைகளை எப்படி கையால் வரைந்து படி எடுத்தார் என்றும், அதை வைத்து ஓவியர்கள் மூலம் முத்திரைகளை எப்படித் தரப்படுத்தினார் என்றும் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் கணினி அறிமுகமான காலத்தில், Tata Institute of Fundamental Research நிறுவனத்தில் உள்ள கணினிகளின் உதவியுடன் சிந்துவெளி முத்திரைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதன் முடிவுகளை ‘Indus Script; Texts, Concordance and tables’ என்ற நூல் மூலம் வெளிக்கொண்டு வந்தார். இந்நூல்1977ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை மூலம் பதிப்பிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தான் முனைவர் கிப்ட் சிரோன்மணி அவர்களை மகாதேவன் சந்தித்தார். கிப்ட் சிரோன்மணி மறைந்தபின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அவரது பெயரில் கிப்ட் சிரோன்மணி நினைவு அறக்கட்டளையை நிறுவினார். இதன் மூலம் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. கிப்ட் சிரோன்மணி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவில் சிந்துவெளி எழுத்திற்கும், தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி மகாதேவன் பேசினார். இதேபோல், ஹீராஸ் பாதிரியார் பெயரிலும் அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

இவர் ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் தினமணியில் ஆசிரியராய் பணியாற்றினார். இங்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். பெரியார் கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினர். தமிழ் ஆய்வாளர்கள் பற்றி தமிழ்மணியில் எழுதினார். ரோஜா முத்தையாவின் பங்களிப்பை பற்றியும் எழுதினார். தமிழ்மணியில் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த ஓவியங்களோடு தமிழ்மணி பலராலும் சேகரிக்கப்பட்டது. மகாதேவனின் தலையங்கம், குறிப்பாக அணுசக்தி பற்றிய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.

நான் அவரை திராவிடவியலின் மணிமகுடம் என்றே கூறுவேன். இவர் தமிழ் பிராமி, சிந்துவெளி எழுத்துகள் இடையே உள்ள தொடர்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, எப்படி தமிழில் இருந்து பல சொற்கள் சமஸ்கிருதத்திற்கு சென்று பின்னர் எப்படி தமிழுக்கு மீளாக்கம் செய்யப்பட்டன என்பதைக் கண்டறிந்தார். இவர் சிந்துவெளியின் திராவிட கருதுகோள் இனி கருதுகோள் அல்ல, அதுவே உண்மை என கூறத்தொடங்கினார். இவர் தமிழை செம்மொழி என அறிவிக்க முனைப்புடன் பணியாற்றினார். புகலூர் கல்வெட்டில் சங்க காலப் பெயர்களைக் கண்டறிந்த பொழுதும், மயிலாடுதுறை அருகே சிந்துவெளி முத்திரையுடன் கற் கோடரி கண்டறிந்த பொழுதும் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார் என்று கண்டவர்கள் கூறுவர்.

இவர் 2010ல் செம்மொழி மாநாடு நடத்துவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்தவர். IATR இந்த மாநாட்டை எதிர்த்தபோது மாநாட்டிற்கு ஆதரவாக இந்து நாளிதழில் கட்டுரை எழுதினார்.இந்த மாநாட்டில் சிந்துவெளி பற்றிய கண்காட்சி நடைபெற வேண்டும் என எண்ணினார். அன்றைய தமிழக அரசு அதை வரவேற்று இடமளித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

2008ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தபொழுது மொகஞ்ஜோ தாரோவின் சிந்துவெளி முத்திரையில் காளைமாடு விளையாட்டு வீரர்களைத் தூக்கி வீசுவது போன்ற முத்திரையை மேற்கோள் காட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டார். உச்சநீதி மன்றம் தடையை நீக்கியது நமக்குத் தெரிந்த்தே.
மகாதேவன் தனது கடைசி நாட்கள் வரை அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை ‘Toponyms, Directions and Tribal names in the Indus Script’. இந்தக் கட்டுரை ஆராய்ச்சியாளர் J. M. கெனோயர் பாராட்டு மலரில் (Fetschrift) 2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்தது. இக்கட்டுரையில் அவர் சிந்துவெளிக் குறியீட்டில் இடப்பெயர்கள், திசைப் பெயர்கள், பழங்குடியினர்களின் பெயர்களைக் கண்டறிந்தார். இக்கட்டுரை திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மகாதேவன் அவர்கள் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் ‘பானைத் தடம்’ என்ற சொற்பொழிவுதான். இந்நிகழ்வு சிந்துவெளி கண்டறியப்பட்டு 94 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதனை அறிய அவனது இறுதிச்சடங்கும் ஒரு விதத்தில் சான்றாக அமையும். இவரது இறுதிச் சடங்கில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு எதிர்முனைக் கருத்துகள் கொண்டவர்களும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் அமைச்சர் திரு. பாண்டியராஜன், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு. க. ஸ்டாலின், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, திராவிடக் கழகத்தைச் சேர்ந்த திரு. கி. வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், பா. ஜ. க.வைச் சேர்ந்த தலைவர்கள், ஆர். எஸ். எஸ். தலைவர்கள், தினசரி நாளிதழ்கள், இதழ்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மகாதேவன் நகைச்சுவை உணர்வு உள்ளவர். கடந்த வருடம் அவரது பிறந்தநாள் அன்று அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் அவரது வயதை சிந்துவெளி எழுத்தைப் போல் இல்லாமல் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வாசிக்கலாம் என்றார். அவர் தனது எண்பத்தியெட்டாவது வயதை அடைந்திருந்தார். பாரதியாரின் ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்பதை ‘காலை எழுந்தவுடன் காபி’ என்று மாற்றி கூறுவார். வருந்துமிடங்களிலும் அவரது நகைச்சுவை உணர்வு குறைந்ததில்லை.

அவரது இதய அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவரைப் பார்க்கச் சென்றோம், அப்பொழுது அவர் சிரித்துக்கொண்டே கூறினார், “கடைசியில், எனக்கும் ஒரு இதயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்”. ஒருமுறை என்னிடம் “நீங்கள் சீக்கிரம் எனது திட்டப்பணிகளை முடித்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் என்னை H-Mail-லில் தான் தொடர்புகொள்ள வேண்டும். நான் நரகத்திற்கு (Hell) செல்வேனா, சொர்க்கத்திற்கு (Heaven) செல்வேனா என்று தெரியாது”, என்று கூறினார்.

நாங்கள் ஒருமுறை ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துகொண்டு இருந்தோம். அப்போது அவர் ஒரு சுவையான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார். அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒருமுறை காந்திக்காக நன்கொடை சேகரித்து அவரிடம் கொடுக்கும் தருணத்தில் காந்தியின் கைகளில் இவரது விரல்கள் லேசாக வருடியதை பெருமிதமாக உணர்ந்ததாக பகிர்ந்து கொண்டார். விடுதலைப் போராட்டத்தின்போது ஒருமுறை சிறையில் அவரது பூணூல் அறுக்கப்பட்டது. அதன்பின் அவர் பூணூல் அணிந்துகொள்ளவில்லை.

மகாதேவன் ஆராய்ச்சி தவிர மற்ற எந்த விசயத்திற்கும் நேரம் செலவிட்டதில்லை. மற்ற ஆய்வாளர்களை ஊக்குவிப்பவர். அனைவரது மின்னஞ்சலுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.  சிந்துவெளி ஆய்விற்காக 2007ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மையத்தை ஏற்படுத்தச்சொன்னார். எந்த ஒரு பாகுபாடுமின்றி ஆராய்ச்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பின் தமிழக அரசு உயரிய விருதான தொல்காப்பியர் விருது வழங்கிக் கௌரவித்தது.

அவர் சிறந்த கொடையாளர். அவரது வீட்டை விற்று வந்த ஐம்பது லட்ச ரூபாய் பணத்தில் அவரது மகனின் பெயரில் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். இதன் மூலம் நாற்பது லட்ச ரூபாயை Vidyasagar Institute of Bio-Medical Technology and Science என்ற பெயரில் நிறுவனம் தொடங்க சென்னை சங்கர நேத்ராலயாவிற்கு கொடுத்தார். இந்த அறக்கட்டளை மூலம் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்து வருகிறது. இதன்மூலம் பல மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இவர் தன் கண்களையும் சங்கர நேத்ராலயாவிற்கு தானம் செய்தார்.

மகாதேவன் தனது இறப்பை எண்ணி என்றும் பயந்ததில்லை. தனது இறப்பு தனது வீட்டில் எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இன்றி அமைதியாக இருக்க வேண்டும் என நினைத்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் அவரது உடல்நிலை சீரடைந்த போது “என் உடல்நிலை முன்னேற்றம் அடைவதை எண்ணி வருந்துகிறேன்” என எழுதிக் காட்டினார். நவம்பர் 26ம் தேதி காலை 4 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது விருப்பப்படி அவர் உடல் எரிக்கப்பட்டு, அவரது சாம்பல் 26 வருடங்களுக்கு முன் அவரது மனைவி கௌரியின் சாம்பல் தூவப்பட்ட இடத்தில் தூவப்பட்டது. அவரது மகன் பேராசிரியர் ஸ்ரீதர் மகாதேவன் அமெரிக்காவில் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) துறையில் பணி செய்து வருகிறார். மகாதேவனின் மூத்த மகன் வழி பேரனும் பேத்தியும் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

பல வருடங்களாக மகாதேவனைக் கவனித்துக் கொண்டவர் திருமதி. லக்ஷ்மி. மகாதேவனின் தேவைகளை அறிந்து அவரின் மகள்போலவும் தாய்போலவும் பார்த்துக் கொண்டவர். பல நேரங்களில் அவருக்குத் தேவையான நூல்களை எடுத்துக் கொடுப்பார். லக்ஷ்மியும் சிந்துவெளி குறியீடுகளைக் கண்டறியும் திறம் வாய்ந்தவர் என்றால் அது மிகையாகாது.

Related posts

Leave a Comment