You are here
Ko Veeraiyan அஞ்சலி 

‘செங்கொடி நெஞ்சம்’ – தோழர் கோ.வீரய்யன் – ச. தமிழ்ச்செல்வன்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒப்பற்ற பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்,விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
காவிரியின் கடைமடைப் பகுதியான நன்னிலம் வட்டத்தில் உள்ள சிற்றூரான சித்தாடியில் 1932ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தவர் தோழர் கோ.வீரய்யன்.அருகமைப்பள்ளி ஏதும் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

உள்ளூர் படிப்பாளி ஒருவரிடம் சில காலமும் திண்ணைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகாலமும் அவருக்குக் கிடைத்ததுதான் கல்வி.பகலில் மாடு மேய்த்து,குளிப்பாட்டி,மாலையில் தீனி வைத்து,மாட்டுக்கொட்டில் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு இரவில் திண்ணைப்பள்ளியில் படிப்பார்.அந்தக் கல்வியை வைத்துக்கொண்டுதான் அவர் இத்தனை நூல்களையும் பின்னர் எழுதியுள்ளார் என்பது மலைக்க வைக்கும் செய்தியாகும்.

எட்டு வயதிலிருந்து மாடுகளை மேய்த்துப் பரமாரித்து வந்த வீரய்யன்,பத்து வயதில் பண்ணை வயலில் அரையாளாக வேலை செய்யத்துவங்கினார். 12 வயதில் ஊருக்கு குடிதண்ணீர் கிணறு கேட்டு ஊர் மக்களிடம் கையெழுத்துப் பெற்று,மனுப்போட்டு நான்கு கேணிகளை ஊருக்குப் பெற்றுத்தந்த நாளில் துவங்கியது அவரது பொது வாழ்வு.அவருடைய உறவினரான திரு.எல்.குப்புசாமி அவர்களின் தூண்டுதலால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்.கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த 1948 காலகட்டத்தில் அன்று தோழர் முகவை ராஜமாணிக்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கட்சிப்பத்திரிகையான ‘உலக அரசியல்’ வார இதழின் சித்தாடி ஏஜண்டாக தனது பொதுவுடமைப் பயணத்தைத் துவக்கியவர் தோழர்.

வீரய்யன்.சித்தாடி,ஆடிப்புலியூர் கிராமங்களை இணைத்து அவர் செயலாளராக இருந்த கிராம முன்னேற்ற சங்கம் துவக்கப்பட்டதும் அமைப்பாளர் என்கிற புதிய பரிமாணத்தை அவர் பெற்றார். இப்படி 15 வயதில் அவர் தூக்கிய செங்கொடியை 2018 நவம்பரில் அவர் இறக்கும் கணம் வரை அவர் நெஞ்சில் சுமந்திருந்தார். அவரைப்பற்றி செங்கொடி இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா எழுதிய வார்த்தைகள் இவை:

“1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது,தோழர் கே.ஆர்.ஞானசம்பந்தம், பி.எஸ்.தனுஷ்கோடி, கோ.பாரதிமோகன் ஆகியோருடன் இணைந்து தோழர் கோ.வீரய்யன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சென்று கடுமையாக உழைத்தார்.

1968 ஆம் ஆண்டின் இறுதியில் வெண்மணிப் படுகொலை நிகழ்ந்த்து.இக்கொடூரமான படுகொலையினால் ஏற்பட்ட நிலைமைகளை மிகத்தைரியமாகச் சமாளித்த தலைமைத்தோழர்களில் இவரது பங்கு பணி உறுதியானது. 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட்து.தோழர் கோ.வீரய்யன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு கட்சிப்பணியாற்ற வேண்டும் எனக் கட்சி முடிவு செய்தது.இம்முடிவினை ஏற்று மாநிலம் முழுவதும் சென்று கட்சிப்பணி ஆற்றினார்.
நாகை சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்றத்தில் உழைப்பாளி மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்த இடைவிடாது உழைத்தார்.தஞ்சைத்தோழர் என்.வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டபோது அதை எதிர்த்த கண்டன இயக்கத்திலும் தோழர் கோ.வீரய்யன் முன்னணியில் இருந்தார். “பள்ளிக்கே செல்லாத தோழர் கோ.வீரய்யன் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்க வரலாற்றையும் விவசாய இயக்கத்தின் வீரவரலாற்றையும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் எழுத்தில் பதிவு செய்து வைத்தார்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் போராட்ட வரலாறு குறித்த அத்தனை தரவுகள்,சிறு பிரசுரங்கள்,நூல்கள்,துண்டுப்பிரசுரங்கள் உட்பட அனைத்தையும் சேகரித்து பைண்ட் செய்து திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நூலகம் அமைத்து அதில் பராமரித்து வந்தார்.அவருடைய இந்த முயற்சிகள் மட்டுமே இன்றும், இனி வரும் காலங்களிலும் தஞ்சை மண்ணின் வரலாறு தொடர்பான தேடல்களுக்கு ஆதாரமாக அமைந்து நிற்கின்றன.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளராக அவர் போகாத கிராமம் இல்லை என்று சொல்லுமளவுக்கு காரைக்கால் முதல் அறந்தாங்கி வரை பரவிக்கிடந்த நிலப்பரப்பெங்கும் நடந்து நடந்தே மக்கள் தொண்டாற்றிய தலைவர் அவர்.உலகளந்தான் என்று ராஜராஜசோழனுக்கு ஒரு பட்டம் உண்டு.உண்மையான உலகளந்தான் தோழர் வீரய்யன் தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மக்களுக்காக நடந்த கால்கள் இன்று நிரந்தரமாகத் துயில் கொண்டு விட்டன.அவர் நடந்து சென்ற பாதையில் அவரின் கால்தடங்கள் கிளப்பிய புழுதிப்புயல் இன்னும் ஓயவில்லை.அந்தப்புயலின் வழிகாட்டுதலில் நாம் தொடர்ந்து பயணிப்போம்.அவர் விட்டுச்சென்றுள்ள பணிகளை முன்னெடுப்போம்.

Related posts

Leave a Comment