You are here
WOLF GANG STREECK 2 நேர்காணல் 

மார்க்ஸின் எழுத்துகள் – நேர்காணல் – தமிழில் : கமலாலயன்

முன் எப்போதையும் விட இன்றுதான்
அதிகமாகப் பொருந்துகின்றன – வுல்ஃப்காங் ஸ்ட்ரீக்

நேர்காணல் :
ஜிப்சன் ஜான் மற்றும் ஜித்தீஷ் பி.எம்.

புதிய தாராளமயவாத முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் உலகின் முன்னணி விமர்சகர்களுள் வுல்ப்காங் ஸ்ட்ரீக்கும் ஒருவர். ‘நியு லெப்ட் ரெவ்யு’-இதழுக்காக 2014-இல் இவர் எழுதிய ‘முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும் ?’ என்ற கட்டுரைக்காக சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவர். இக்கட்டுரை மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டபின், புத்தக வடிவிலும் வெளியானது.

முதலாளித்துவத்தின் தற்போதைய செல்நெறித் தடத்தை மிக ஆழ்ந்த கவனத்துடன் பகுப்பாய்வு செய்து வருகிறவரான ஸ்ட்ரீக், “ஜனநாயகத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையே நடைபெற்ற திருமணம், இரண்டாம் உலகப் போரின் நிழலில் பொருத்தமேதும் இன்றி இணைக்கப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி.

அந்தப் பொருந்தாத் திருமணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . நிதித்துறைப் பகுதியின் அத்துமீறல்களை ஒரு காலத்தில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஒழுங்காற்றுமுறை நிறுவனங்கள் தகர்ந்து நொறுங்கி விட்டன. பனிப் போர் (COLD WAR) முடிந்த போது முதலாளித்துவத்தின் இறுதி வெற்றிக்குப்பின், சந்தைகளின் தாராளமயமாக்கலைப் பின்னுக்குத் தள்ளி பழைய நிலைக்குத் திருப்பும் அளவுக்குத் திறனுடைய அரசியல் முகமை ஏதும் அப்போது இல்லை.

சரிந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வளர்ச்சி, விரல்விட்டு எண்ணத்தக்க சில தனிநபர்களின் ஆளுகை, சுருங்கிப் போய்க் கொண்டிருக்கும் பொது நடவடிக்கைகளுக்கான வெளி, நிறுவனமயமாகிப்போன ஊழல், சர்வதேச ரீதியிலமைந்த அராஜகம் ஆகிய அம்சங்களால் வரையறுக்கப்பட்டதாக நமது உலகம் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நோய்களைத் தீர்க்கக்கூடிய மருந்து எதுவும் இப்போது நம் கைகளில் இல்லை என்கிறார்.

முதலாளித்துவத்தின் சமீபத்திய வரலாற்றுப் பூர்வமான நடவடிக்கைப் பதிவுகளின் அடிப்படையில், இனிவரும் காலத்தில் நாம் எதிர்பார்க்கக் கூடியது என்னவாக இருக்கப்போகிறது என்று உலகத்தை எச்சரிக்கிறார் : வரப் போவது ஒரு நீண்ட, வலிமிகுந்த, திரளுறும் சீரழிவாக இருக்கும்: தீவிரமடைந்து வரும் முரண்பாட்டு உரசல்கள், நிச்சயமற்றதும், எளிதில் உடைந்து நொறுங்கிப் போகும் பலவீனமானவையுமான தன்மைகள், 1930-களின் உலகளாவிய பொருளாதாரச்சிக்கலைப் போன்ற அளவுக்கு அதே பரிமாணத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழக்கூடிய ‘இயல்பான விபத்துகள் ‘ ஏற்படக்கூடிய நிச்சயமான சாத்தியக்கூறுகள் – இப்படியானவையே வரக்கூடும்.

மூலதனம், உழைப்பு இவற்றுக்கிடையே நிலவும் ஒரு பகைமைக்குத் தீர்வாக அமையக்கூடியது ஒரு மையநிலைப்பாட்டு சமூக ஜனநாயக நிலையே என்று ஸ்ட்ரீக் முன்னதாக நம்பியிருந்தார் . இந்தத் தீர்வு முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தொழிற்படக்கூடியதாய் இருந்திருக்கும். ஆனால், புதிய தாராளவாத முதலாளித்துவம், மூலதனத்திற்கும், உழைப்புக்கும் இடையேயான அந்த அடிப்படையான பகைமைவாதத்தை மறுபடியும் முன்னுக்குக் கொண்டுவந்து விட்டது. இதன் காரணமாக இந்த அமைப்புமுறையின் முன்னணி விமர்சகர்களுள் ஒருவராக ஸ்ட்ரீக் மேலெழுந்து வந்திருக்கிறார்.

(உலகளாவிய பொருளாதார) இணைப்புச் சங்கிலிகளைத் துண்டிக்க வேண்டுமென்ற முழக்கத்தை சுவீகரித்துக் கொண்டிருப்பவரான இவர் சொல்கிறார்: எவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உள்நாட்டு அரசியல் சமூகங்களின் கைகளில் கட்டுப்பாட்டு அதிகாரம் திரும்பப்பெறப்பட வேண்டியது அத்தியாவசியம். இதன் பொருள், உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டின் மீது நிலவும் பன்னாட்டுப் பெருவணிக நிறுவனங்கள் அல்லது உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் சர்வாதிகாரப் பிடியை முடிவுக்குக் கொண்டு வருவது என்பதே. அதற்குப் பிறகுதான் அங்கே ஜனநாயகம் நிலவும்.

அதாவது, உழைக்கும் மக்களின் பரந்து விரிந்த பெரும்பான்மை மக்கள் திரளினால், கூட்டாக முடிவெடுக்கும் செயல்முறையில் பங்கேற்பு என்பது நடைபெறும். அதற்குப் பிறகுதான், முதலாளித்துவத்திற்கு மாற்றாக விளங்கக்கூடிய ஓர் அமைப்பின் வளர்ச்சிக்கான அரசியல், பொருளாதாரப் பரிசோதனைகளைப் பரிசீலிக்க முடியும். ஸ்ட்ரீக்கின் குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள் பின்வருவன: ‘Buying Time:The Delayed Crisis of Democratic Capitalism’, ‘Social Institutions and Economic Performance’ and ‘Reforming Capitalism.’ இந்த நேர்காணலில், ஸ்ட்ரீக் பின்வரும் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசியிருக்கிறார்: முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும், முதலாளித்துவமும் – மனிதத்துவத்தின் எதிர்காலமும், எதிர்ப்பு இயக்கங்களின் வளர்ச்சி, சமூக ஜனாயகத்தின் வரம்புகள் , மார்க்சியத்தின் பொருத்தப்பாடு, ப்ரெக்ஸிட்டின் செய்தி, முதலாளித்துவமும் – பெருந்திரள் மக்களின் எதிர்வினைகளும், ஐரோப்பிய இடதுசாரிகளின் முன்னால் உள்ள சவால்களும் – வாய்ப்புகளும், அகதிகளின் சிக்கல்கள், உலகமயமாக்கலும் – இணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளுதலும், புதிய தாராளமய வாதமும் – அரசும் , உலகளாவிய அசமத்துவத்தின் வளர்ச்சி – ஆகியவை.

இந்த நேர்காணலின் சில பகுதிகள்:
‘நியு லெப்ட் ரெவ்யு’ இதழுக்காக எழுதப்பட்ட உங்களின் 2014-ஆம் ஆண்டுக்கட்டுரையில், முதலாளித்துவத்துக்கு கொள்கையளவிலான ஒரு பிரியா விடையை வழங்கியிருக்கிறீர்கள். இந்த அமைப்பு முறைக்கு ஐந்து சீர்குலைவுகள் நேர்ந்திருப்பதாக நீங்கள் இனங்கண்டறிந்திருக்கிறீர்கள்; அவை:- வீழ்ச்சியடைந்து சரிந்துவரும் வளர்ச்சி, விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிரு தனிநபர்களின் ஆளுகை, பொது நடவடிக்கைக் களத்தின் வறுமை, சர்வதேச ரீதியிலான அராஜகம் – ஆகியவை முதலாளித்துவத்தின் முடிவுக்கு வழிவகுக்கக் கூடியவையாக வருமென்று கூறியிருக்கிறீர்கள். அத்தகைய ஒரு முடிவு எதிர்காலத்தில் நிகழ்ந்தே தீர வேண்டிய ஒன்று என எதிர்பார்க்கிறீர்களா அல்லது நம் முன்னால் உடனடியாக நிகழ்ந்து கொண்டிருப்பது என்று கூறுவீர்களா?

நான் அந்தமாதிரிக் கூறவில்லை. நான் சொன்னது இதுதான்: மேலே குறிப்பிட்ட அந்த ஐந்து போக்குகளும், அவற்றைத் தடுத்து நிறுத்தக்கூடிய எந்த ஓர் ஆற்றலும் காணக்கிடைக்காத ஒரு சூழலில், இனியும் தொடர்ந்து நிகழத்தான் செய்யும். நான் இன்னோர் அம்சத்தையும் சொல்லியிருக்கிறேன். வரலாற்றின் ஓரத்தில் எந்த ஒரு புதிய சமுதாயமும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை; முதலாளித்துவ எதிர்ப்ப்புச் சக்திகளால் மட்டுமே அந்தச் சமுதாயம் நிறுவப்பட முடியும். அது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான். அதற்குப் பதிலாக மிக உயர்ந்த அளவுக்கு ஒரு நிச்சயமற்றதும், சீர்குலைவுத் தன்மை வாய்ந்ததுமான நீண்டதொரு காலகட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். இது ஓர் அசாதரணமான இடைக்காலம்; இந்தக்கால கட்டத்தில், பழைய சமூக ஒழுங்கமைப்பு செத்துப் போய்விட்டது; அதே சமயம் ஒரு புதிய சமூக ஒழுங்கமைப்பு பிறப்பதற்கான ஏற்றதொரு சூழல் நடப்பில் இல்லை. அந்தோனியோ கிராம்சி, தன் ‘தி பிரிசன் நோட்புக்ஸ்’ நூலில் பிரபலமான ஒரு பத்தியில் சுட்டிக்காட்டுவது போல, அத்தகைய ஓர் அசாதாரணமான காலகட்டத்தில் மிக வினோதமான நிகழ்வுகள் பலவும் நடக்கக்கூடும்.

முதலாளித்துவம் ஒரு புள்ளியில் தன் முடிவை எட்டும் வரையில், அது தன் பழைய நிலைக்குத் திரும்பிப் போகும் முயற்சியில் மேன்மேலும் மோசமடையும்; பயன்பாட்டில் இல்லாதது வளர்ச்சியடையாது என்பதால் முதலாளித்துவமும் சுருங்கிச் சீர்குலைவது தொடரும் என்ற வாதத்தை நீங்கள் முன்வைக்கிறீர்கள். மேலும் நீங்கள் கூறுகையில், முதலாளித்துவத்துடன் நாம் முரண்பட்டு மோதவேண்டியதில்லை, மாறாக அதனுடைய ‘இயற்கையான’ மரணம் நிகழ்வதற்கு விட்டு விடலாம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அத்தகைய ஓர் அமைதியான, இயல்பான முறையில் முதலாளித்துவம் தனது முடிவை அடையுமா அல்லது அது மனிதத்துவத்தைப் பேரழிவுக்கு ஆளாக்குமா?

மேற்குறிப்பிட்ட அந்த இடைக்காலம் மிகத்தீவிரமான அளவுக்கு அபாயகரமான ஒரு காலகட்டமாகக் கட்டாயம் இருக்கும். முதலாளித்துவத்துடன் நாம் முரண்பட்டு மோதவேண்டிய தேவையே இருக்காது என்பதல்ல; முதலாளித்துவத்தை விட்டுத் தூர விலகித் தனித்து நிற்பதற்கான கூட்டுச்செயற் திறனை நாம் பெற்றிருக்கவில்லை என்று சொன்னேன். நாம் அத்தகைய திறனைப் பெறவேண்டுமென விரும்புகிறேன். ஆனால், இப்போது முதலாளித்துவம் ஓர் உலகளாவிய ஆட்சியதிகாரம்; அதே சமயம் முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் என்பது தவிர்க்க முடியாத விதத்தில் உள்நாட்டு அளவில்தான் இருக்கிறது . முதலாளித்துவ வளர்ச்சி மேம்பாட்டுச் சக்கரங்களில், மணலை எறிந்து தடை ஏற்படுத்துவதற்கு ( முதலாளிய எதிர்ப்பு அரசியல் சக்திகளால் ) சாத்தியமாகலாம் ; ஆனால், அதற்கு முடிவு கட்டுவதற்கு முடியாமற் போகக்கூடுமென நான் அஞ்சுகிறேன்.

முதலாளித்துவத்துடன் முரண்பட்டு மோதுவதற்கும், அதனுடன் போரிட்டு அதை முறியடிப்பதற்கும் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வோர் முயற்சியும் ஒரு வழியில் அல்லது வேறொரு வகையில் முதலாளித்துவத்தை மேலும் வலிமைப்படுத்துவதிலேயே போய் முடிவதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் வெவ்வேறு பகுதிகளில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராட்டங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? மனித ஆற்றலின் உறுதிப்பாட்டையும், அதன் முகமையையும் பற்றி என்ன சொல்வீர்கள்?

முதலாளித்துவத்திற்கு எழும் எதிர்ப்பு, அது தொடந்து உயிர்வாழ்வதற்கான சக்தியைத் தந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. குறைந்தபட்சம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளிலேனும், எங்கே எதிர்ப்பு இயக்கங்கள் முதலாளித்து வத்துடன் தற்காலிகமாகத் தொழிலாளி வர்க்கத்தை இணக்கமாக நடந்து கொள்ளுமாறு சமரசப்படுத்தி வருகின்றனவோ, போதுமான அளவுக்குப் பல்வேறுபட்ட கோரிக்கைகளை ஒன்றிணைத்து ஒரு முழுமையான கோரிக்கையை முன்வைக்கின்றனவோ அங்கு முதலாளித்துவம் வளர்ச்சியுறுவதைச் சாத்தியமாக்குவதுடன், அது இலாபகரமான நிலைமையில் நீடித்திருப்பதற்கும் அவை உதவுகின்றன. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு நாம் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்பியே தீர வேண்டும்; ஆனால், இப்போதைக்கு உள்நாட்டு மட்டத்தில் மட்டுமே அது சாத்தியமாகும். எல்லா வகையான உள்நாட்டு மட்டத்தில் அமைந்த பரிசோதனை முயற்சிகளை மனித வாழ்க்கையின் முதலாளித்துவமற்ற வடிவங்களிலும், அரசியல் பொருளாதாரத்திலும் மேற்கொள்ளப்படுவதை நாம் கட்டாயம் உற்சாகமூட்டி வளர்த்தெடுக்க வேண்டும்.

மூலதனத்துக்கும், உழைப்புக்கும் இடையே நிலவிவரும் பகைமைக்குத் தீர்வு, மத்தியத்துவப்படுத்தப்பட்ட தாராளவாத, அல்லது, சமூக ஜனநாயக நிலைப்பாடாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கைதான் உங்களிடம் முன்பு இருந்தது. ஒரு பொருளில், முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே அதன் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கைதான் அது. ஆனால், புதிய தாராளமய முதலாளித்துவம், மூலதனத்திற்கும் – உழைப்புக்கும் இடையே நிலவிய அந்தப் பழைய பகைமையை மறுபடியும் முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது. முதலாளித்துவ அமைப்பு முறையின் முன்னணி விமர்சகர்களுள் ஒருவராக நீங்கள் மேலெழுந்து வந்திருக்கிறீர்கள். தாராளவாத அல்லது சமூக ஜனநாயக அரசியல் நிலைப்பாட்டில் என்ன தவறு / பிரச்சனை?

தேசிய அரசியல் பொருளாதாரங்களோடு மட்டும் முதலாளித்துவம் தன்னை எவ்வளவு காலம் வரை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறதோ அதுவரை முதலாளித்துவத்தின் இயங்காற்றலுக்கு சமூக ஜனநாயகம் ஒரு பதிலாக இருக்க முடியும் அல்லது அதே நிலையில் அதை எதிர்த்துப் போராடுவதற்கும் முடியும். இப்போது இந்த நிலைமை முடிந்துபோய்விட்டது. கடந்த மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் காட்டுவது இதுதான்: மேற்கத்திய உலகின் மைய – இடதுசாரிக் கட்சிகள் சுவீகரித்துக் கொண்டிருப்பதைப் போன்ற சுதந்திர வர்த்தகமும், சந்தைகளுக்கு ஒழுங்காற்று முறைக் கட்டுப்பாடுகளை விலக்கிவிட்ட சூழலும் சேர்ந்து நமது சமூகங்களைக் கிழித்துத் துவைத்துப்போட்டு விட்டதுடன், பொருளாதார மறு விநியோகத்தின் முகவரான அரசாங்கத்தை இயங்குவதற்குச் சக்தியற்ற ஒன்றாக முடக்கி வைத்துவிட்டது. இன்றைய தினம், உழைக்கும் வர்க்கம் செயற்திறன் வாய்ந்த விதத்தில் சர்வதேச மயமாகியிருக்கிறது; ஆனால், அந்த மட்டத்தில் அமைப்புரீதியாகத் திரட்டப்படுவதற்குச் சக்தியற்றதாயிருக்கிறது. மூலதனத் திரட்சியோ, மிகப்பெருமளவுக்கு சர்வதேச மயமாகியிருக்கிறது. தேசிய வர்க்க சமரசங்களுக்கு உள்ளாகித் தீரவேண்டுமென இனிமேலும் அதை நிர்ப்பந்தப்படுத்த முடியாது.

முதலாளித்துவத்தின் முடிவை உங்களுடைய கொள்கை முன்னறிவிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் சிந்தனையாளரும், உங்களுடைய நாட்டுக்காரருமான கார்ல் மார்க்ஸ் முன்வைத்த தொடக்கநிலை ஆய்வும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட பகுப்பாய்வும் எடுத்துரைத்த முன்னறிவிப்புகளுடன் உங்களுடைய முடிவு பொருந்திப்போவதுடன் அதை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது. சமகாலத்திய வளர்ச்சிப் போக்குகளின் திசைவழியும், விமர்சனப் பூர்வமான ஆய்வுகளும் மார்க்ஸ் மிகப்பெருமளவுக்குச் சரியான நிலைப்பாடுகளை மேற்கொண்டிருப்பதையே நிறுவுகின்றன. இன்றைய நிலைக்கு மார்க்ஸ் எந்த அளவுக்குப் பொருந்துகிறார்?

முன் எப்போதையும் விட, மார்க்சின் எழுத்து, இன்றைய சூழலுக்கு மிக அதிகமான பொருத்தப்பாடு உடையதாகியிருக்கிறது. அவரைச் சரியான முறையில் நாம் படித்தறிய வேண்டுமென்பது கட்டாயம் எனினும் அது பொருந்துகிறது. மார்க்ஸ், தன்னுடைய வாழ்நாளுக்குள் முதலாளித்துவத்தின் முடிவைப் பார்த்துவிட வேண்டுமென்று எதிர்நோக்கினார். அந்தக் காரணத்தினால், அந்த முடிவைத் தாமதப் படுத்தக்கூடியதாக என்ன இருக்கும் என்பதைப் பற்றியும், இடைக்காலத்தில் இந்த உலகம் என்னவாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றியும் ஆராய்வதில் அவர் அதிக அளவுக்குக் கவனத்தைச் செலுத்தவில்லை.

அவருக்குப் பதிலாக, அந்தச் சிந்தனைகளை அவர் வழங்கிச்சென்றுள்ள ஆய்வுக் கருவிகளைக் கொண்டு நாம் மேற்கொண்டாக வேண்டும். மேலும் , நமக்குத் தேவைப்படப் போகிற வகையில் அவற்றை இன்றைய சூழலுக்கேற்பத் தரமுயர்த்திக் கொள்ளவும் வேண்டும். மார்க்ஸ், ஓர் உண்மையின் பக்கம் நம்முடைய கவனத்தைத் திருப்பிப் போயிருக்கிறார்: அது, முதலாளித்துவம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு; அதற்கு ஒரு தொடக்கத்தை அது கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அதற்கு ஒரு முடிவும் இருக்கும் என்பது அந்த உண்மை. அந்த முடிவு, அவர் கண்டறிந்த இலாப விகிதத்தின் வீழ்ச்சி என்ற ஒரு போக்கின் விளைவாக ஏற்படுமென்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால், மூலதனம் – முதல் தொகுதி வெளியாகி நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து நாம் இப்போது பார்க்கும் போதும், அந்தப்போக்கு இன்னும் தன் வேலையைச் செய்யவில்லை என்பதைத்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒன்றிணைப்பின், ஒத்துழைப்பின், நாடுகள் கடந்த சர்வதேசியத்தின், ஜனநாயகத்தின் மண்டலம் என்பதாக முன்னிலைப் படுத்தப்பட்டது. ஆனால், பிரெக்ஸிட் இந்த உரிமைக்கோரல்கள் அனைத்துக்குமே ஒரு பெரும் இடியாக அமைந்திருக்கிறது. இதேபோன்ற வெளியேறல்கள் நிகழ்வதற்கான சாத்தியங்களின் கதைகள் இருக்கவே செய்கின்றன. பிரிட்டனின் வெளியேற்றம் எதைக் குறியீடு செய்கிறது? பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் சித்திரம் என்னவாக இருக்கும்?

உங்களின் கடந்த கேள்வியிலிருந்து தொடங்க வேண்டும்; இந்தப் புள்ளியில் இந்தக் கேள்விக்கான பதில் எவர் ஒருவரிடமும் இல்லை. மிகப்பெரிய அரசியல் அலகுகளான சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரப் போக்குகள் என்னென்ன காரணங்களால் எழுந்தனவோ அதே காரணங்களை ஐரோப்பிய ஒன்றிணைப்பின் சிக்கலும் கொண்டிருக்கிறது: மிகப்பெரிய அரசியல் நிறுவமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதிலுள்ள சிரமம்; அல்லது முதலில் கட்டமைக்கப் படுவதிலுள்ள சிரமம்;

வர்க்கங்களுக்கும், பிரதேசங்களுக்கும் இடையே அதிகரித்துக் கொண்டு போகும் அசமத்துவம், தேசிய அரசியல் பொருளாதாரங்களினுள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய சந்தைகளினால் உருவாக்கப்படும் மேற்கண்ட அசமத்துவத்தின் அதிகரிப்பு, அந்தப் பொருளாதாரங்கள் அந்தந்த நாட்டு அரசால் நிர்வகிக்கப்பட முடியாதவையாக ஆக்குவது (அவற்றிலும் குறிப்பாக அவை ஜனநாயகங்களாக நீடித்திருக்கும் வரை); அதோடுகூட, இதே காரணங்களைக் கொண்டுள்ள பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலவும் பிரிவினைவாதப் போக்குகளையும் பார்க்கலாம் . மாபெரும் உச்ச அதிகார அரசுகளின் மீதிருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துகொண்டு வருகின்றனர். மிகப் பெரும் அரசதிகாரப் பகுதிகளுக்குள் அதிக அளவுக்கு சுயநிர்ணய உரிமை படைத்த உள்ளாட்சிப் பகுதிகளுக்கான கோரிக்கையை எழுப்புகின்றனர்.

இவ்வாறு தமக்கான சுயாட்சிப் பகுதிகளை, பெரிய அரசதிகாரப் பகுதிகளுக்குள் மையப்படுத்துதலைத் தகர்ப்பதன் மூலமோ அல்லது அவற்றிலிருந்து இணைப்புகளைத் துண்டித்துக்கொள்வதன் மூலமோ அவர்கள் உருவாக்கிக் கொள்ள முயலுகின்றனர். புதிதாக உருவாக்கப்படும் உச்சநிலை அதிகாரப் பேரரசுகளுக்குள், விரிவாக்கம் பெற்றுள்ள சிறிய அரசுகளை உள்ளடக்கி அவற்றைக் கபளீகரம் செய்வதைத்தான் ஐரோப்பிய ஒன்றிணைப்பு இலக்காகக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் மக்கள் விரும்புவதற்கு நேர் எதிரான முயற்சியாக இது அமைகிறது.

இருபத்திரண்டு ஐரோப்பிய நாடுகளில் பல தலைமுறைக் காலமாக நடைபெற்றிருந்த தேர்தல் முடிவுகளைப் பற்றிய ஒரு ப்ளூம்பெர்க் பகுப்பாய்வு ஓர் உண்மையை வெளிப்படுத்திக் காட்டுகிறது: கடந்த முப்பது ஆண்டுகாலம் முழுவதிலும் எந்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலும் இருந்ததைக் காட்டிலும் அதிகமான அளவுக்கு ஆதரவு இன்றைய வலதுசாரி வெகுமக்கள் மலினவாத கட்சிகளுக்குக் கிடைத்து வருகிறது . புதிய தாராளமயவாத சகாப்தத்தில் எந்த வகையான சமூகவியல் இயங்காற்றல், புதிய பாசிச சக்திகளுக்கு இப்படி ஓர் ஆதரவு பெருகுவதற்குக் காரணமாகியிருக்கிறது? நீண்ட வாள்களின் இரவு விளைவித்த பயங்கரங்களை அனுபவித்திருந்த ஐரோப்பாவுக்கு இது எந்தவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கும்?

எல்லா மலினவாத இயக்கங்களும் வலதுசாரித் தன்மையுடையவை அல்ல; இடதுசாரிகளிடம் இருந்தும் சில இயக்கங்கள் உருவாக்கி வந்திருக்கின்றன. மேலதிகமாக, ஐரோப்பிய அரசியல் அமைப்புகளின் விளிம்புகளின் மீதுதான் உண்மையிலேயே பாசிஸ இயக்கங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் காண்கிறோம். இவ்வாறு சொல்வதன் மூலம் நான் பொருள் கொண்டிருப்பது, ஒரு வசீகரமான ஆற்றல் நிறைந்த – பிற்பாடு ஒரு சர்வாதிகாரியாக உருவாகக்கூடிய தலைவரால் தலைமை தாங்கப்படக்கூடிய கட்சிகளையே. இத்தகைய தலைவர்கள் ஒரு துணை ராணுவப் படையைப் போன்ற தனியார் ராணுவம் மற்றும் காவல்துறைப் படைகளைத் தலைமை தாங்கி வழிநடத்துவார்கள். (இரண்டு உலகப்) போர்களுக்கு இடையிலான கொடிய நிகழ்வுகளை இன்றைய தினம் வரையிலும் நாம் மீண்டும் திரும்ப நிகழ்ந்ததாக ஒருமுறைகூடக் காணவில்லை.

இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிறுவப்பட்டுவிட்ட அரசியல் கட்சி அமைப்புமுறையின் தரப்பில் ஓர் அழமான சட்டபூர்வத் தன்மையிழப்பையே. இந்த இழப்பிலிருந்து இலாபம் அடைவதற்கான ஒரு முயற்சியை மிக வித்தியாசமான சமூக சக்திகள் மேற்கொண்டிருக்கின்றன; வழக்கம்போல புதிய தாராளமயவாத அரசியலுக்கு வலதுசாரி அல்லது இடதுசாரி மாற்றுகளுக்கான ஆதரவு சக்திகளைக் கட்டியெழுப்பும் வேலையையும் செய்து வருகின்றன.

வலதுசாரி சக்திகளோடு சேர்ந்து, ஒரு வெகு மக்கள் திரள் இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டு வருவதையும் கூட நாம் பல ஐரோப்பிய நாடுகளில் பார்க்கிறோம். பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில், புதிய தாராளமய வாதத்துக்கும், உலகியல்ரீதியான மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைத் துறந்துவிடச்செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் எதிரான அவருடைய வலிமை நிறைந்த நிலைப்பாட்டுக்குக் குறிப்பிடத்தகுந்த கணிசமான அளவு அரசியல் ரீதியான ஆதரவை ஜெரீமி கோர்பைன் கவர்ந்து ஈர்த்திருக்கிறார். இந்தப் போக்கை கிரீஸ் போன்ற நாடுகளில் நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.
இது எந்தவிதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது? இடதுசாரிகளின் மீள் எழுச்சியின் வெளிப்பாடா இது? ஐரோப்பிய இடதுசாரிகளின் முன்பாக எழும் சவால்களும், இருக்கும் வாய்ப்புகளும் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இங்கே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றிணைந்த ஐரோப்பிய அரசாங்கங்களால் கிரேக்க இடதுசாரி சக்தி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது. அவற்றுள், பிரான்சின் ‘சோஷலிஸ்ட்’ அரசாங்கமும், இத்தாலியின் ‘சமூக ஜனநாயக’ அரசாங்கமும் உள்ளடங்கியுள்ளன. ஜெர்மனியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இப்போது கிரீஸை ஆளும் கட்சியான சிரிசா, பெர்லின் மற்றும் பிரஸ்ஸல்சின் விளையாட்டைத் தான் ஆடிக்கொண்டிருக்கிறது.

ஜெரீமி கோர்பைன் டௌனிங் தெரு (பிரிட்டன் பிரதமர் வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லம்)வுக்குப் போய்ச்சேருவாரா என்பது இனிமேல்தான் பார்க்கப்பட வேண்டிய விஷயமாயிருக்கும். அது நடக்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர் அவர் ஃபிரான்ஸின் ஃபிரான்ஸுவா ஒல்லாட்டை விடவும் கூடுதலான சாதனைகளைச் செய்யக் கூடியவர் என்று நான் நம்புகிறேன். அவர் தேந்தெடுக்கப்பட்ட போது, இடதுசாரிகளின் மாபெரும் நம்பிக்கையாக அவர் இருந்தார் . எந்த வகையில் பார்த்தாலும், ஒரு புதிய ஐரோப்பிய இடதுசாரி இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்குப் புதிய கட்சிகள் தேவைப்படுகின்றன. அல்லது பழைய கட்சிகள் கீழேயிருந்து முற்றிலுமாகப் புரட்சிகரமானவையாக ஆகவேண்டும். கடந்த காலத்திலிருந்து மிக வேறுபட்டவிதத்தில் அவை செயல்பட்டாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக்கட்சிகள் தங்களுடைய தேசிய உழைக்கும் வர்க்கங்களுடன் அவற்றுக்கு இருந்த இணைப்புகளைக் கட்டாயம் மறுபடி கட்டமைத்துக் கொண்டாக வேண்டும்; புதிய நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகளைக் காட்டிலும், மேற்கண்ட தேசிய உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சனைகளுக்கு மேம்பட்ட விதத்தில் கவனம் செலுத்திக் காது கொடுக்கவேண்டும். இந்தப் பணி, குறைந்த கூலிகளைப் பெற்றுவரும் தொழிலாளர்களின் நலன்களோடு மிகுந்த நல்லிணக்கத்தையும், பரிவையும் கொண்டிருப்பதாக உள்ள, புலம் பெயர்தலை ஒழுங்காற்று முறைப்படுத்தும் சட்டத்தையும், வர்த்தகத்தை மேலதிகமாகவும் , மேம்பட்டதாகவும் மேலாண்மை செய்யக்கூடிய நிர்வாக அமைப்பையும் உள்ளடக்கியிருக்கும் ஒன்று. மேலும், செயல்படக்கூடிய ஒரு நல அரசின் தேவையைக் கொண்டதுமாகும்.

போரினால் பெரும் சீரழிவுக்குள்ளாக்கப்பட்ட மேற்காசியப் பகுதிகளில் இருந்தும், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் பெருந்துயருக்கு ஆளாகி இன்னலடைந்துள்ள ஏராளமான மனிதர்களின் புலம் பெயர்தல் பிரச்சனை – அல்லது – ஐரோப்பாவின் ‘அகதிகள் சிக்கல்’ , கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கணிசமான அளவுக்கு உலகளாவிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, சுமார் ஒரு மில்லியன் எண்ணிக்கைக்கும் அதிகமான மக்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஐரோப்பிய அரசியல் நிலவெளியை இந்த வருகைப்பாய்ச்சல் எந்த வகையில் பாதிக்கப்போகிறது? இனவாதம், புதிய பாசிசம், இஸ்லாமோபோபியா – ஆகியவற்றின் வருகையைப் பற்றியும்கூட நீங்கள் கருத்துரைப்பீர்களா?

கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், இந்தவகையான (அகதிகளுடைய) எண்ணிக்கை ஒரு மில்லியனையும் தாண்டி மிக அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. (ஜெர்மனி மட்டுமே 2015-இல் ஒரு மில்லியன் அகதிகளை உள்ளே வர அனுமதித்துள்ளது). இங்கே நாம் விவாதித்துக் கொண்டிருப்பது, முறைப்படுத்தப் படாத புலம் பெயர்தலைப் பற்றி. இது வேறு என்னவெல்லாம் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ, இல்லையோ – அவை ஒருபுறமிருக்க, செல்வவளமிக்க நாடுகளில் மிகக்குறைந்த கூலிக்கு உழைப்பதற்கு முன்வரும் தொழிலாளர் கூட்டத்தை விநியோகித்திருக்கிறது. உணவகங்கள், அமேசான் விநியோக மையங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான ஆண்களையும், பெண்களையும் விநியோக ஊழியர்களாக வேலைகளில் அமர்த்தியிருக்கிறது. இவர்களுக்கு மிகக்குறைவான சமூக, சட்டபூர்வமான பாதுகாப்புதான் இருக்கும். வீட்டு வசதிகள், பள்ளிகள் மற்றும் கல்வி தொடர்பான, ஏன், மதம் சார்ந்த விடுமுறைகள் போன்ற இன்னும் ஏராளமான அம்சங்கள் தொடர்பான முரண்பாட்டு மோதல்களுக்கு இப்பிரச்சனை இட்டுச்சென்றுள்ளது. கிடைக்கும் சித்திரம் மிகக் கலவையானது.

மிக அரிதான நிகழ்வுகளில் ஜெர்மன் முரடர்கள் அகதிகள் வாழும் மையங்களைத் தாக்கியிருக்கிறார்கள். அதே சமயம், ஜெர்மானியரிடையே ஒரு பரந்து விரிந்த இயக்கம், புலம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு உதவுவதற்கான வழிகளை இணங்கண்டறிவதற்கும் முடிந்துள்ளது. மொழிப்பயிற்சி அளித்தல், பள்ளிகளில் சேர்த்தல், சமூக நலச்சலுகைகளைப் பெற்றுத் தருதல் – போன்ற பல்வேறு உதவிகளை இவ்வகையில் செய்ய முடிந்திருக்கிறது. எடுத்துக்காட்டிற்காக, ஜெர்மனியில் உள்ள மிகப்பெரும் எண்ணிக்கையிலான துருக்கிய அகதிகளில் தோராயமாக ஒரு பாதியளவு மக்கள் அமைதியான, ஆக்கபூர்வமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

மற்றவர்கள், ஜெர்மன் சமூகத்திற்கு வெளியேதான் இன்னமும் பெருமளவுக்கு உள்ளனர். ஆயினும், மற்றவர்கள் மிக உத்வேகத்துடன் துருக்கிய சர்வாதிகாரியைத்தான் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஜெர்மன் துருக்கியருக்காகவும் அல்லது துருக்கிய ஜெர்மானி யருக்காகவும் தேர்தல் பேரணிகளை ஜெர்மனியில் நடத்துவதற்கு அவர் அனுமதிக்கப்பட்டாக வேண்டுமெனக் கோரி வருகின்றனர். புலம் பெயர்ந்து வருவதைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியமும் , அதன் உறுப்பு நாடுகளும் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவதால், அரசியல் தட்ப வெப்ப நிலை கடும் உஷ்ணமடைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், மக்கள் தொகை சார்ந்த காரணங்களுக்காகப் புலம் பெயர்தலைத் தமக்குத் தேவைப்படக்கூடிய ஒன்றாகவே கருதுகின்றன. ஆனால், எல்லைகளைத் திறந்து விடுவதென்பது, அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ நிலைத்து நீடித்திருக்க முடியாத நடவடிக்கைகளாக உள்ளன. குறிப்பாக, குறைந்த சம்பளம் பெறும் மக்களுக்கு இவை பிரச்சனைகள் நிறைந்த பகுதிகளாகி வருகின்றன.

பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு புதிய தாராளமய முதலாளித்துவம் எப்படி கடும் துயரத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்பதை நீங்கள் பகுப்பாய்வு செய்தும், விளக்கமளித்தும் கூறியிருக்கிறீர்கள். சமீர் அமின், பிரபாத் பட்நாயக் போன்ற மார்க்சியச் சிந்தனையாளர்கள், நாடுகளின் (குறிப்பாக, தெற்கில்) உலகமயமாக்கலில் இருந்து இணைப்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறுகின்றனர். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவுக்குச் சாத்தியப்படுமோ அவ்வளவுக்குக் கட்டுப்பாட்டை உள்நாட்டு அரசியல் சமூகங்களின் கைகளில் திரும்பக் கொண்டுவந்து விட வேண்டும். அதன் பொருள், உலக வங்கி, அல்லது , பெருவணிகப் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வாதிகார ஆதிக்கம் செலுத்தி வருவதை முடிவுக்குக் கொண்டுவந்தாக வேண்டும் என்பதுதான். அதற்குப் பிறகுதான் அங்கே ஜனநாயகம் நிலவ முடியும். அதாவது , கூட்டான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதில் பெருவாரியான பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் பங்கேற்பு நிலவ முடியும்.

அதற்குப் பிறகுதான், முதலாளித்துவத்திற்கு மாற்றுச் சக்தியாக வளர்ந்து எழக்கூடிய சமூக, பொருளாதாரப் பரிசோதனைகளை நாம் பார்க்கமுடியும்.  உற்பத்தியாளர்கள் – நுகர்வோர் இருதரப்பினரின் கூட்டுறவு அமைப்புகளை உள்நாட்டு வளர்ச்சி மேம்பாட்டு வங்கிகளின் நிதியுதவியோடு நிறுவுவது ஒரு வழி; மற்றொன்று, அடிப்படைக் கல்வி, மற்றும் அத்தியாவசியமான உடல்நலப் பராமரிப் புச்சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வது; பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை முயற்சிகள் சுதந்திரமானவையாக இருப்பது; இன்னும் ஒரு வழி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி நிர்ப்பந்தங்களில் இருந்து மானிய உதவி பெரும் வேளாண்மையைப் பாதுகாப்பது; மற்றும், வேளாண் வர்த்தகம். ஒரு மேம்பட்ட எதிர்காலத்தினுள் நடப்பதற்கான பயணத்தில் அடி எடுத்து வைக்க வேண்டுமெனில், கட்டாயமாக மக்கள் முதலில் தமது சொந்தக்கால்களில் நிற்கவேண்டும்.

சமகாலத்திய விவாதங்களில், ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது: புதிய தாராளமய உலகமயமாக்கல் காலகட்டத்தில் , அரசு நலவாழ்வு நடவடிக்கைகளில் இருந்து ‘ விலகி’ பின் வாங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் புதிய தாராளமய யுகத்தில் அரசின் பொருளாதாரப் பண்பு பற்றி விவரிக்கையில், ‘கடன்கார அரசு’ என்றொரு சொல்லாடலை உருவாக்கி இருக்கிறீர்கள். அதைச் சற்று விரிவாக்கி விளக்க முடியுமா? புதிய தாராளமயத்தின் கீழ், பொருளாதார நடவடிக்கைகளின் விஷயத்தில் எப்படி ஓர் அரசு செயலாற்ற முடியும்?

ஒருபுறத்தில், போட்டித்திறன் வாய்ந்த சந்தைகள், தமது சொந்த வழியில் இயங்குவதற்கு அனுமதித்தாக வேண்டும். இதற்கு, தேசியப் பொருளாதாரங்களை உலகச்சந்தைக்கு அது கட்டாயம் திறந்து விட்டாக வேண்டும். மேலும் தேசியப் பொருளாதாரத்தில் தலையிடுவதிலிருந்து அது விலகிக் கொண்டாக வேண்டும். தனியார் முன்முயற்சிகளை மிக அதிகபட்ச அளவுக்கு அனுமதிப்பதற்காக தேசிய அரசியல் பொருளாதாரத்தைத் தனியார் மயமாக்குவதற்கென திறந்துவிடுவதையும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அது கட்டாயம் செய்தாக வேண்டும். ஆனால், இதன்பொருள், அரசு கட்டாயம் பலவீனமானதாக இருந்தாக வேண்டுமென்பதல்ல.

அதற்குமாறாக, பொதுமக்கள் திரளின் எதிர்ப்புகளிலிருந்து சந்தைச் சக்திகளின் சுதந்திரமான விளையாட்டை அது பாதுகாத்துத்தர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது . இவ்வாறு பாதுகாக்கும்பொருட்டு, சிலசமயங்களில் ஒரு கணிசமான அளவுக்குப் படைபலத்தையும் கூட பயன்படுத்தியாக வேண்டும். எனவே, ஒரு ‘சுதந்திரமான பொருளாதாரம்’ ஒரு வலிமைமிக்க அரசின் தேவையைக் கோரி நிற்கிறது. அந்த அரசு, கீழ்மட்டத்தில் இருந்து ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்தல் சார்ந்த நிர்ப்பந்தங்களில் இருந்து சந்தையைப் பாதிப்பு ஏதுமற்ற வகையில் பாதுகாக்கவல்லதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திலிருந்து ஜனநாயகம் துண்டிக்கப்பட்டபின் புதிய தாராளமய ஜனாயகம் சாத்தியமே. இதைத்தான் நான் ’ ஒன்று சேர்க்கப்பட்ட அரசு’ என்று அழைக்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி, தன்னுடைய ‘இருபத்தோராம் நூற்றாண்டில் மூலதனம்’ – நூலில் உலகின் வெவ்வேறு நாடுகளில் எப்படி வருமானம் மற்றும் செல்வவளத்தின் அசமத்துவம் கணிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். இந்த வளர்ந்துகொண்டே வரும் அசமத்துவத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமான சில நடவடிக்கைகளையும் கூட அவர் முன்மொழிந்திருக்கிறார். அவருடைய பிரதான ஆலோசனை என்பது உலகளாவிய செல்வ வரி அல்லது வளர்ந்து வரும் செல்வ வரி. பிக்கெட்டியின் கண்டறிதல்களின் முக்கியத்துவம் என்ன? புதிய தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் உலகளாவிய செல்வவரி என்ற கருதுகோள் நடைமுறைக்கு வருமா?

பிக்கெட்டியின் மாபெரும் தகுதி என்பது இதுதான்: உயர்ந்தபட்ச அளவுக்கு அதிகரித்து வரும் அசமத்துவத்தை நோக்கிய முதலாளித்துவச் சார்புப் போக்கின் வீச்சை அவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். இதை அவர் செய்திருப்பது அனேகமாக நம்பவே முடியாத அளவுக்குச் செழுமை வாய்ந்த, நன்கு பரிசோதிக்கப்பட்டு அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த தரவுகளை முன்வைப்பதன் மூலமே.

வரலாற்றில் ஆழமாகப் பின்னோக்கிய ஆய்வின் விளைவாக அதிகபட்ச நாடுகளைப் பற்றியவையாகவும், இவற்றை வேறு எவர் ஒருவரும் செய்திராத வகையில் தொகுத்திருக்கிறார். அவை அனைத்தும் ஒரே திசையிலேயே பயணிக்கின்றன. அதைத் தவிர, உலகளாவிய செல்வ வரி விதிப்புக்கு எந்த விதத்திலும் வாய்ப்பு இருப்பதாக நான் பார்க்கவில்லை . காரணம், தொழில்நுட்பரீதியான, அதேயளவுக்கு அரசியல்ரீதியான அம்சங்களால்தான்.
நன்றி : ப்ரன்ட்லைன்,

Related posts

Leave a Comment