You are here
Muthusamy Image அஞ்சலி 

கூத்தின் ஞானரதம் – ச. தமிழ்ச்செல்வன்

1936ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகிலுள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தவர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி..இரண்டாமாண்டு இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்துவிட்டார். வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகிலிருந்த மீனவர் குப்பத்தில் வசித்து வந்தார்.பக்கத்தில் விக்டோரியா ஹாஸ்டலில் தங்கி பிரஸிடன்ஸி கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புக்கொண்டு இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சி.சு.செல்லப்பாவின் ’எழுத்து’ இதழே அவருக்கு இலக்கிய ஆசான் என்று அவரே குறிப்பிடுவார்.

“’எழுத்து’ஒரு லட்சியமாக இருந்தது.’எழுத்து’வின் புதுக்கவிதைகள் லட்சியமாக இருந்தன.புதுக்கவிதைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போருக்கு எதிராக ஆயுதம் பூண்டு யுத்தத்துக்குத் தயாராக இருப்பவனைப்போல,மன ஆயத்தநிலை கொண்டிருந்தது.சி.சு.செல்லப்பா என்ற தளபதிக்குப் பின்னே அணிவகுத்து நிற்பதைப்போல இருந்தது.சி.சு.செல்லப்பாவிடம் கேட்ட கதை விமர்சனங்கள் ,அவர் எழுதியதைப் படித்ததை விட நேரில் சொல்லக்கேட்ட விமர்சனங்கள் என்னை மெல்ல மெல்லத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தன”

அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு க.நா.சுப்பிரமணியனிடம் முன்னுரை வாங்க ஆசைப்பட்டு,அவரிடம் எழுதி வாங்கியும்,பதிப்பாளர் அதைப் போட மறுத்ததால் அத்தொகுப்பையே போட வேண்டாம் என மறுத்தவர் ந.முத்துசாமி. ஆகவே மேலும் இரண்டாண்டுகள் தாமதமாகி முதல் தொகுப்பான “நீர்மை” வெளியானது. நண்பர்களோடு செய்த விவாதங்கள், இலக்கிய அரட்டைகள் இவையே தனக்குப் பயிற்சியாக அமைந்ததாகக் கூறுகிறார். சி.சு.செல்லப்பாவுடன் இவருக்கும் இவரது நண்பர்களுக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இவருடைய குழுவினர் “நடை” என்கிற புதிய இதழைத் துவக்கினார்கள்.

நடை, ஞானரதம்,அஃ,எழுத்து ,கசடதபற,கணையாழி போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். புஞ்சை கிராமத்து வாழ்க்கையே அவருடைய எல்லாக் கதைகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டன.
சிறந்த நாடக ஆசிரியராக நன்கு அறிமுகமான பத்மஸ்ரீ திரு.ந.முத்துசாமி நுட்பமான ஒரு சிறுகதையாசிரியர்.30க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.அவருடைய சிறுகதைகளுக்காகத் தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார்.

அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை க்ரியா பதிப்பகம் 1984இல் வெளியிட்டது. சிற்றிதழ்களில் நாடகப்பிரதிகளை எழுதத்துவங்கிப் பின்னர் நாடக இயக்கமாகவே அவர் வாழ்வை அமைத்துக்கொண்டார். ஆரம்பத்தில் `சிம்ஸன்’ டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பின், அமெரிக்காவின் `போர்ட் பவுன்டேசன்’ உதவியுடன் `கூத்துப்பட்டறை’ என்ற நவீன நாடகத்திற்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக் கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு.

1958இல் அவருக்கு அவயாம்பாள் (குஞ்சலி) அவர்களுடன் திருமணம் நடைபெற்றது.அவர்களுக்கு நடேஷ் (புகழ்பெற்ற ஓவியர், அரங்க வடிவமைப்பாளர்), ரவி என்று இரு புதல்வர்கள். 2000ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கி யவர்களுள் இவரும் ஒருவர். இவரது “கூத்துப்பட்டறை” என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இன்றும் இருந்து வருகிறது. அக் 24இல் அவர் மறைந்தார். நாடக உலகிற்கு மிகப்பெரும் இழப்பு.அவருக்கு நம் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

Leave a Comment