You are here
Book release நிகழ்வு 

சர்க்யூட் தமிழனுக்கு ஒரு சல்யூட் – வை. இராஜசேகர்

கடலூர் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ‘சர்க்யூட் தமிழன்’ நூலை வெளியிட்டபோது

என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் தொடராக எழுதிய, என் இனிய இயந்திரா நான் படித்த முதல் அறிவியல் புனை கதை (Science Fiction)
ஆங்கிலத்தில் எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன், தொடங்கி, ஐசக் அஸிமவ், ஆர்தர் சி.கிளார்க் முதலாக பற்பல அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் எண்ணற்ற படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்றாலும் மொழிபெயர்ப்புகளை தவிர்த்து பார்த்தால் தமிழில் அறிவியல் புனைகதைகள் என்பவை குறைவாகவே உள்ளன. இக்குறையை முதலில் நீக்கியது எழுத்தாளர் சுஜாதா அவர்களே. எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்து அவ்வழியில் 21ம் நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ள முத்து பிரபல எழுத்தாளர் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள்.

இவருடைய ஆயிஷா என்ற குறுநாவலை 1996 ஆம் ஆண்டு கணையாழியிலேயே படித்திருந்தேன். இந்நூலை இருபதிற்கும் மேற்பட்ட பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசளித்துள்ளேன் என்பது உபரி தகவல். தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் என்பது என் உறுதியான எண்ணம்.

ஆயிஷா ஏற்படுத்திய பாதிப்பால் என் நிரந்தர வாசிப்பு வரிசையில் இவருடைய நூல்கள் இடம்பெறத் தொடங்கின. இது யாருடைய வகுப்பறை, இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம், கணிதத்தின் கதை, இயற்பியலின் கதை, ஒளியின் சுருக்கமான வரலாறு, வாங்க அறிவியல் பேசலாம், இந்திய கல்விப்போராளிகள் போன்ற நூல்கள், ஆசிரியர்கள் அறிவியலாளர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்கள். இவர் எழுதி ஏற்கனவே சர்க்கஸ் டாட் காம், டார்வின் ஸ்கூல் மற்றும் வந்தே மாதரம் ஆகிய சிறார்களுக்கான அறிவியல் புனை நாவல்கள் வந்துள்ளன.

சிறுவர் இலக்கியத்திற்காக 2014ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், சிறுவர்களுக்காக 70க்கும் மேற்பட்ட நூல்கள் ஆக்கியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சர்க்யூட் தமிழன்?’ என்னும் இந்நூல், தமிழில் வெளிவரும் முதல் அறிவியல் புனைகதை (Science Fiction – Sci -Fi) முழு தொகுப்பாகும். இதில் பதினொரு சிறுகதைகளும், ஒரு நெடுங்கதையும் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பை படித்தபோது என் பள்ளி, கல்லூரி காலத்திற்கே சென்று திரும்பிய ஒரு திருப்தி.

ராக்கெட்டில் உட்கார்ந்து ஒரு சுற்று விண்ணில் வலம் வந்தது போலவும், அஸிமோவாக மாறி ஒரு ரோபோவை கட்டமைத்தது போலவும் மனம் துள்ளுகிறது.
ஒவ்வொரு கதையிலும் ஒரு அறிவியல் புதிர் முடிச்சு, மனதில் ஒரு மெல்லிய அதிர்வலையை ஏற்படுத்துகிறது. எல்லாக் கதைகளும் எதிர்காலத்தில் நடக்கிறது. அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கும், நம் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு, மனிதநேயத்தையும், கல்வி முறைமைகளையும் நையாண்டி கலந்த நகைச்சுவையோடு கலந்து விருந்து படைத்திருக்கிறார்.

ஆங்காங்கே சில அறிவியல் சொற்களை அறிமுகம் செய்து கொக்கிபோட்டுச் செல்கிறார். (எ.டு) சியோல்கோவ்ஸ்கி (Tsiolkovski), காலப்பயணம் (Timetravel), பூட்ஸ்ராப், பால்வெளி மண்டலம் (Milkyway),…… வாசகனை இந்நூலைத் தாண்டியும் கற்கத் தூண்டும் ஆசிரியரின் இந்த உத்தி பாராட்டத்தக்கது. கடினமான சில ஆங்கில அறிவியல் சொற்களுக்கு, அழகான, இணையான இயல்பான தமிழ்ச்சொற்கள் பல கிடைத்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று (எ.டு – Embedded Computer -உட்பொதிகணிணி. system – முறைமை, virtual reality – மெய் நிகர் யதார்த்தம், Digital – எண்ணுரு,….) அட இவ்வளவு எளிமையானதா இது? சபாஷ் ஆயிஷா சார்!
‘டிகிரிகாப்பி’, கதையைப்படித்து, நானும் கண்மூடி என் சிறு வயதிற்கும், அடுத்த நூற்றாண்டிற்கும்(!) ஒரு காலப்பயணம் (Time travel) செய்துபார்த்தேன். போகிற போக்கில்,கும்பகோணத்தையும் இராமானுஜத்தின் கணிதத்தையும் கோர்த்து திகைப்பிலாழ்த்துகிறார்.

‘ஐ… ஜாலி’ கதை நிச்சயமாக எல்லோரையும் ஐ…… ஜாலி என்று சொல்ல வைக்கும். குறிப்பாக மாணவர்களின் கற்பனைக் குதிரையை அசுரவேகத்தில் தட்டிவிட்டிருக்கிறார். அங்கே யாரும் பெரியவர்கள் ஆவதே கிடையாது, பனிமலைகளில் சாக்லேட்தான் உறைந்து கிடக்கும், சமைக்கவே வேண்டாம், சாம்பார், குருமா, ரசம் எல்லாம் தனித்தனி ஓடைகள், அவித்த முட்டை, ஆம்லேட், ஆஃபாயில் எல்லாம் கோழியிலிருந்தே வந்துவிடும். இன்னும் நிறைய நீங்களே படித்துப் பார்த்து மகிழுங்கள்.

தலைப்புக் கதையான ‘சர்க்யூட் தமிழன்’ குறிப்பிட வேண்டிய ஒன்று. இன்றைய கல்வி முறையின் குறைபாட்டால் உண்டாகியிருக்கும் முழுமையுறா பொறியலாளர்களை படம் பிடித்திருக்கிறது. சொந்தமா சிந்திப்பவர்கள், டம்மி பீஸ் அல்ல – பொட்டில் அறையும் வாக்கியம். இவரது அறிவியல் கதைகள் வரட்டு அறிவியல் பேசி நம்மை வெறுப்படிப்பது இல்லை. ஒவ்வொரு கதையிலும் அறிவியலோடு ஒரு சமூகப் பிரச்சினை பிசிறாகத் தெரியாமல் கலந்து கிடக்கிறது. அந்த விஷயத்தில் இன்று அறிவியல் எழுதும் பலரும் இவரிடமிருந்து கற்க வேண்டியுள்ளது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, இன்றைய கல்விமுறை, நாளைய வாழ்க்கைமுறை, தொழில்நுட்பம் & எதிர்காலம் குறித்த சிந்தனை, பயம் உள்ள அனைவரும் கட்டாயம் படித்து யோசிக்க வேண்டிய கதைகள் இவை. ஆம், மறக்க முடியாத கதைகள் – மறக்க முடியாத தொகுப்பு
நான் மட்டும் கல்வி அமைச்சராக இருந்தால், கட்டாயமாக இந்நூலை பள்ளிகளில் துணைப்பாடமாக பரிந்துரைப்பேன். ‘சர்க்யூட் தமிழனுக்கு’ என் சல்யூட்.

Related posts

Leave a Comment