You are here
Yuma Vasugi மற்றவை 

விருது பெறுகிறார் யூமா வாசுகி – சா. கந்தசாமி

இந்திய அரசு இருபத்திரண்டு மொழிகளை இந்திய மொழிகள் என்று அங்கீகாரம் செய்துள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் இல்லாத ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சேர்த்துக் கொண்டு சாகித்ய அகாதமி இலக்கியப் பரிசு. மொழிபெயர்ப்பு பரிசுகள் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு தமிழ் மொழி பெயர்ப்புக்காகப் பரிசு பெறும் மொழி பெயர்ப்பாளர் மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி. அவர் படைப்பு எழுத்தாளர். ரத்த உறவு என்று நாவல் எழுதி பரவலாக மதிக்கப்படுகிறவர். கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் படித்து பட்டம் வாங்கியவர். பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் இருந்து சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் கதைகள் என்று பலவற்றையும் மொழி பெயர்த்து வருகிறார்.
கஸாக்கின் இதிகாசம் என்று மலையாள மொழியில் ஓ.வி. விஜயன் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி மொழி பெயர்ப்பாளர் விருதை பெறுகிறார். ஒவ்வுப் புலாக்கல் வேலுக் குட்டி விஜயன் 1930 ஆம் ஆண்டில் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தார். விக்டோரியா கல்லூரியில் இளங்கலைப் படித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். அவருக்கு அரசியலிலும், சமூகப் பிரச்சனைகளிலும் ஈடுபாடு இருந்தது. பத்திரிகைகளுக்கு கார்ட்டூன்கள் வரைந்தார். புகழ் பெற்ற சங்கர்ஸ் வீக்லி என்ற கார்ட்டூன் பத்திரிகையில் பல ஆண்டுகள் பணி புரிந்தார்.

அவர் தன் முப்பத்தெட்டாவது வயதில் 1968ஆம் ஆண்டில் கசாக்கின் இதிகாசம் என்ற நாவலை எழுதினார். அதனை மாத்ருபூமி என்ற வார இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. கசாக்கின் இதிகாசந்தான் அவரின் முதல் நாவல். நாவல் தொடராக வெளிவந்தபோதே மலையாள வாசகர்களையும், இலக்கிய விமர்சனர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. ஏனெனில் அது வரையில் எழுதப்பட்டு வந்த மலையாள நாவல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தொனியில், மாறுபட்ட நடையில் ரவீந்திரன் என்னும் இளைஞன் வாழ்க்கையை வாழ்க்கையாகவே சொல்லியது. புதிய வரவை மலையாளிகள் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டு அங்கீகரித்தார்கள்.
கசாக்கின் இதிகாசத்தோடு ஓ.வி. விஜயன் ஐந்து நாவல்களையும், பல சிறுகதைகளையும் அரசியல், சமூகக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். ஆனால் அவை எதுவும் முதல் படைப்பான கசாக்கின் இதிகாசத்தின் அளவிற்கு இல்லை. முதல் படைப்பிலேயே தன் படைப்பாற்றலை முழுமையாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். கசாக்கின் இதிகாசம் எழுதப்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகின்றன. மக்கள் வாழ்க்கை முறைகள், அரசியல் சித்தாந்தங்கள், கலை, இலக்கியக் கோட்பாடுகள் மொழி பேசும் விதம், எழுதும் உரைநடை எல்லாம் தன்னளவில் மாறிவிட்டன. அது மலையாள மொழி பேசப்படும் கேரளவிற்கோ அம்மொழியில் எழுதிய விஜயனுக்கோ மட்டுமானதில்லை. எல்லா படைப்புக்களுக்குமானது; எல்லா எழுத்தாளர்களுக்குமானது.
எழுதப்பட்ட மொழியில் பழையதாகி, வசீகரம் கிழக்கும் படைப்புகள் மொழி பெயர்ப்பில் அம்மொழியின் நவீனத்துவத்தில் கால் கொண்டு கவனம் பெற்றுவிடுகின்றன. கசாக்கின் இதிகாசத்தை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ள யூமா வாசுகிக்கு மலையாளம் தாய் மொழி இல்லை. தமிழ்தான் அவருக்குத் தாய்மொழி. தமிழில் இருந்து பிறந்ததுதான் மலையாள மொழி. எனவே அவர் தமிழை பல இடங்களில் மலையாளமாகவே எழுதியிருக்கிறார். மூல படைப்பாளரின் படைப்புக்குள்ளாக இருக்கும் மொழியை அவர் கைப்பற்றிக் கொண்டு மொழி பெயர்த்து இருக்கிறார்.
ரவி இருள் பிரியாத ஒரு காலைப் பொழுதில் பேருந்தில் இருந்து கிராமத்திற்கு வருவதில் தொடங்குகிறது. அவன் பள்ளிக்கூட ஆசிரியன், அவனையும், அவனைச் சுற்றி நிகழும் அரசியல் கலாச்சார, சமூக நிகழ்வுகள்தாம் நாவலில் அடக்கமான தொனியில் சொல்லப்படுகின்றன. அது சொல்லப்படுவதற்கு அப்பால் உள்ள பல கதைகளைச் சொல்கிறது.
ரவியால் தான் பள்ளியில் சேர்ந்து இடத்தில் பணியில் இருக்க முடியவில்லை. அவன் மழை பொழியும் ஒரு நாளில் புறப்பட்டுவிடுகிறான். மழையின் ஊடே நடந்து வருகிறான். அவன் நிகழ்வின் பார்வையாளன். அவன் வாசகர்களையும் தன்னைப் போலவே நிகழ்வுகளைப் பார்த்து நடப்பவைகளை அறிந்து கொள்ள வைக்கிறான். அதாவது நிகழ்வுகளில் உள்ளே வாசகர்கள் பங்கு பெற்றுவிடுகிறார்கள். நாவல் புறத்தில் இருந்து விவரிக்கப்படவில்லை. நிகழ்வுகளில் பங்கேற்று விடுகிறவர்களாக்கிவிடும், சாகத்தைப் புரிந்துவிடுகிறது.
தொடக்கத்திற்கும் முடிவுக்குமான இடைவெளி என்பதே இல்லை. முடிவில் தொடக்கமும், தொடக்கத்தில் முடிவும் இருக்கிறது. அதுதான் கசாக்கின் இதிகாசம்.
திராவிட மொழிகளிலேயே இளைய மொழியும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பேசும் மலையாள மொழியில் கசாக்கின் இதிகாசம் ஓ.வி. விஜயன் இதிகாசம் என்பதற்குப் புதிய பொருள் படைப்பு வழியாகவே தந்திருக்கிறார். அதாவது எல்லா கதைகளும் இதிகாசந்தான்.
தன் எழுபத்தைந்தாவது வயதில் 2005-ஆம் ஆண்டில் மரணமடைந்த ஓ.வி. விஜயன் மாநிலம் கடந்து, மொழியைத் தாண்டி, ஓர் அசலான படைப்பு எழுத்தாளராகவே இருக்கிறார். அதன் காரணமாகவே எழுத்தாளர்கள் மரணமடையலாம்; ஆனால் எழுத்து உயிரோடு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பான கசாக்கின் இதிகாசம் நாவல் தமிழ் நாவல்கள் படிக்கிறவர்களுக்கு பல சாளரங்களைத் திறந்து வைத்திருக்கிறது. அவர்க்குச் சாகித்ய அகாதமி மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கி இருப்பது, ஒ.வி. விஜயனை படித்து அனுபவிக்கச் செய்யும் காரியந்தான். சாகித்ய அகாதமி ஒரு நல்ல காரியத்தைச் செய்து இருக்கிறது என்று பாராட்டவே வேண்டும்.

Related posts

Leave a Comment