You are here
vaskodakama கட்டுரை 

வாஸ்கோடகாமா – மயிலம் இளமுருகு

பூமியில் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றொரு பகுதியில் வாழ்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தொடக்க காலத்தில் ஆர்வமற்று இருந்தனர். காலப்போக்கில் நாம் இந்த நாட்டில் வாழ்வதைப் போன்றே வேறொரு நாட்டிலும் மக்கள் இருப்பார்களோ என்ற ஆவல் தோன்றியது. அதன் காரணமாக பிற நாடுகளைக் கண்டறிவதில் விருப்பம் காட்டினர்.மட்டுமன்றி வியாபாரத்திற்காகவும் மற்ற நாடுகளைக் கண்டறிவதில் முனைந்தனர். அதில் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலில் வேட்டை எஸ்.கண்ணன் அவர்கள் தொடக்ககால பயணம், மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி அதனூடாகப் உலகச் சந்தை தோற்றம் போன்றவற்றை சுருக்கமாக கூறியுள்ளார். பிறகு தான் எடுத்துக் கொண்ட பொருளான வாஸ்கோடகாமா குறித்தும் அவருடைய கடற்பயணம் பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளார். சிறந்த மொழியியலாளர் சாம்ஸ்கி கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்போது நடப்பது கலாச்சாரங்களின் போர் என்று சொல்லியுள்ளவை சிந்திக்கத்தக்கவை. நகரமயமாக்கல், உலகமயமாக்கல், சரக்குமயமாக்கல் போன்ற காரணங்களும் கடற்பயணத்தை ஊக்குவித்தன. உலகப்போர்களின் வரலாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாஸ்கோடகாமாவின் கடற்பயணம் வெறும் சாகசத்திற்காகவோ அல்லது ராஜ்ஜியத்தை நிர்மாணிப்பதற்காகவோ நடந்ததல்ல. மாறாக சரக்குகளைக் கைப்பற்றுவதே நோக்கம். சந்தையைக் கைப்பற்றுவதே நோக்கம். இதற்காகவே இமானுவேல் அரசரால் இந்தியா நோக்கி குறிப்பாக கள்ளிக்கோட்டைக்கு கடற்பயணம் மேற்கொண்டு அப்பகுதி அரசர் சாமுத்ரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வருவதற்காக வாஸ்கோடகாமா வை அனுப்பினார். ஒரு சொல் என்ற ஒரே பக்கத்தில் வாஸ்கோடகாமாபற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம் பற்றிச் சொல்லி அவருடைய கண்டுபிடிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தது அருமை. அவர் காலடி வைத்த இடமெல்லாம் இந்தியாவாக இருக்கக்கூடாதா என்று ஏங்கியுள்ளமை, அவருடைய கண்டுபிடிப்பின் மீதுள்ள ஆவலைக் காட்டுகின்றது. இந்தியாவை கண்டுபிடிக்க அவர் மரணம் வரை போராடிப் பார்த்தார். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை.
இந்தியா வளம் பொருந்திய பகுதி என்று கேள்விப்பட்ட அரசர்கள் இந்தியாவிற்கு வழி கண்டறிய முனைந்தனர். பார்த்தலோமியா டயஸ் கி.பி. 1468 இல் பல இடர்பாடுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைவதில் வெற்றி பெற்றார். பிறகு திரும்பி வந்து அரசர் ஜானிடம் இந்தியாவை அடைந்து விடலாம் என்று கூறினார். நம்பிக்கை இருந்ததால் முன்பு வைத்த புயல் முனை என்ற பெயரை நன்னம்பிக்கை முனை என்று மாற்றினார். பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் அவருடைய சொந்த நாட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் இந்தியாவைக் கண்டுபிடித்திடப் போகிறார்கள் என்று போர்ச்சுகல்காரர்கள் கவலை கொண்டனர். அரசர் ஹென்றி நாமே இந்தியாவை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மூன்று கப்பல்களை தயாரிக்க ஆணையிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசர் இறந்துவிட அடுத்து வந்த இமானுவேல் அதனை செயல்படுத்திக் காட்ட பெரும் முயற்சி எடுத்தார்.
சான் ரபேல், சான் கேபிரியல், சான் மிகுயில் என்ற மூன்று கப்பல்களில் கடற்பயணம் மேற்கொள்ள ஆணையிட்டார். முறையே வாஸ்கோடகாமா, அவருடைய தம்பி பாலோ அவருடைய நண்பர் நிக்கோலஸ் கோயில் போன்றோர் மாலுமிகளாக நியமிக்கப்பட்டு இந்தியாவிற்கான கடல்வழி கண்டுபிடிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். கி.பி.1497 ஆண்டு மார்ச் 27 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று லிஸ்பனின் துறைமுகத்திலிருந்து ஆரவாரத்தோடு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று கப்பல்களில் 100 வீரர்கள் மூன்று மாலுமிகள் என கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பிரார்த்தனை செய்த காட்சிகள் அழகாக சொல்லப்பட்டுள்ளன.

மகிழ்ச்சியோடு புறப்பட்ட வீரர்கள் சந்தித்த நிகழ்வுகள் அருமையாக விளக்கப்பட்டுள்ளன. கடற்புயலைப் பார்த்த வீரர்கள் பின்தங்கி, திரும்பி நம் நாட்டிற்கே சென்று விடலாம் என்று பிடிவாதம் பிடித்தனர். ஆனால் வாஸ்கோடகாமா தான் எடுத்த முடிவில் சிறிதும் மாறுபாடின்றி துணிச்சலாக பதில் கூறி வீரர்களின் மனதை மாற்றி மீண்டும் கடற்பயணத்தைத் தொடங்கினார்.போகிற வழியில் மீண்டும் புயல்வீச ஒரு கப்பல் மிகவும் சேதம் அடைகின்றது. புயலை எதிர்கொள்ளும் முறைகளை எடுத்துக்கூறி பயணத்தை தொடங்குகின்றார். நான் லிஸ்பன் துறைமுகத்தில் இருந்து கிளம்பும் போதே தீர்மானித்து விட்டேன். ஒரு அங்குலம் கூடப் பின்வாங்குவதில்லை என்று வீரர்களுக்கு எடுத்துக்கூறி சோர்வடையும் போதெல்லாம் தக்க அறிவுரையும் கூறி வழிநடத்திய பாங்கு வியக்க வைக்கிறது.
பயணத்தில் மெலிண்டா என்ற பகுதியை அடைந்தனர். அங்கிருந்த அரசர் இம்மானுவேல் அரசருக்கு நாங்கள் கட்டுப்படுகின்றோம் . நட்புடன் இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி பல்வேறு அன்பளிப்புகளைக் கொடுத்து பயணம் சிறக்க வாழ்த்தி வழி அனுப்புகிறார். மேலும் திரும்பி வருகையில் இங்கே வந்து தங்கிவிட்டு செல்லுங்கள் என்றும் கூறுகிறார். மெலிண்டாவின் அரசர் வாஸ்கோடகாமா உடன் வழித்துணையாக தன் தரகர் டிவானி என்பவரை அனுப்பி வைத்தார்.அருமையான உணவு வகைகள், தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். கப்பல்களை சீர்செய்து பயணிக்கின்றனர்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்தியாவின் கடற்கரை தெரிகிறது என்றவுடன் ஆரவாரம் செய்கின்றனர். கடற்கரை தெரிவதைப் பார்த்தவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கடவுளுக்கு நன்றி கூறினர். ஆனால் முதலில் பார்த்தது கண்ணணூர் என்று டிவானி கூறினார். பிறகு இன்னும் 12 மைல் தெற்கே போனால் கள்ளிக்கோட்டையை அடைந்து விடலாம் என்றும் அவர்களை ஆர்வப்படுத்தினார்.
கள்ளிக்கோட்டையைப் பார்த்த வீரர்கள் ஆர்பரித்தனர். இவ்வளவு இன்னல்களைத் தாண்டி உயிர் பிழைத்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசர் சாமுத்ரி அவர்களிடம் எப்படி ஒப்பந்தம் செய்வது என்று யோசித்தனர். மறுநாள் காலையில் கள்ளிக்கோட்டை மீனவர்கள் கடலில் புதிய இரண்டு அந்நிய கப்பல்கள் இருப்பதைக் கண்டு அஞ்சுகின்றனர் . குறிப்பாக அரேபிய வியாபாரிகள் சதித்திட்டம் தீட்டி மன்னரிடத்து வாஸ்கோடகாமா பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களிடத்து நட்பு வைத்துக் கொள்ள தடை ஏற்படுத்துகின்றனர். வீடுகள் அமைந்துள்ள முறை , கப்பல் , துறைமுகம் போன்றவை நூலுள் அழகாக சொல்லப்பட்டுள்ளது.அரேபிய வர்த்தகர்கள் சாமுத்ரி அரசு அதிகாரிகளில் இருவரான கருவூலக்காரர் , கோழில் என்ற நீதித்துறை அமைச்சருக்கும் பணம் கொடுத்து வாஸ்கோடகாமா பற்றி தவறாக அரசரிடம் சொல்ல வைத்து பகையை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தனர்.

இருவரும் பணம் பெற்று கொண்டு முழுமையாக உதவி செய்யாமல் இழுத்தடித்தனர். டிவானி மற்றும் நுனிஜ் இருவரும் இரண்டு முறை வந்து கள்ளிக்கோட்டையை சுற்றி வருகின்றனர். அரசருடனும் பேசுகின்றனர். வாஸ்கோடகாமா வின் அறிவுரைப்படியே அனைத்தும் நடைபெற்றன..தன் தோழர்களிடத்து தக்க நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியதைக் கேட்டு அதன்படியே நடக்கின்றனர்.
பாதுகாப்பு படைத்தளபதி சூழ்ச்சி செய்து வாஸ்கோடகாமா மற்றும் சிலரை மன்னர் அழைத்ததாகக் கூறி கைது செய்தனர். அப்போது கூட வாஸ்கோடகாமா பொறுமையோடு தன் நோக்கத்தை நிறைவேற்றவே விரும்புவதைக் காணமுடிகின்றது. இறுதியில் அரசருக்கு உண்மை நிலை தெரிந்து வாஸ்கோடகாமாவை விடுதலை செய்து கப்பலோடு உரிய சரக்குகளையும், அன்போடு அனுப்பி வைத்தார்.

குழுவினர் மகிழ்வோடு லிஸ்பனுக்கு புறப்படுகின்றனர். ஏற்கனவே சொன்ன மாதிரி மெலிண்டா சென்று அங்கு தங்கியிருந்து பின்னர் தன் தாய்நாடு சென்றனர். ஒரு வருடம் ஏழு மாதம் கழித்து லிஸ்பனுக்குச் செல்லும் வழியில் தன் தம்பி பாலோ நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். சோகத்துடன் தன் நாடு திரும்பிய வீரர்கள் மற்றும் வாஸ்கோடகாமா வை அரசன் இமானுவேல் அன்போடு வரவேற்றார்.இக்காட்சி அழகாகவிவரிக்கப்பட்டுள்ளது. எல்லாரையும் மறந்து பயணம் செய்து மீண்டும் உயிருடன் வருதல் என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஸ்கோடகாமாவின் கடற் சாகசம் 2 வருடம் ஆறுமாதத்தில் நிறைவுற்றது. 100 பேர்களுடன் சென்று மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே உயிருடன் வந்தனர். வந்தவர்களுக்கும் , கடற்பயணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார்க்கும் அதிக பரிசுகளையும், வெகுமதியையும் அரசர் தந்தார். இவ்வாறு தான் கொண்ட நோக்கத்தில் விடாப்பிடியாக இருந்து தன் நாட்டிற்காகவும், புகழிற்காகவும் வாஸ்கோடகாமா செயல்பட்டது வரலாற்றில் முக்கியமானது. இவர் கொலம்பசுக்கு சவாலானவர் என்றும் பெயர் பெற்றார். 1498 இல் கள்ளிக்கோட்டைக்கு வந்தவர் திரும்பிச் சென்று 1502 லிலும் , 1524 இல் வைஸ்ராய் என்ற பட்டத்துடனும் கள்ளிக்கோட்டைக்கு வந்து அந்த வருடமே இறந்தார். பிறகு 14 ஆண்டுகள் கழித்து தன் சொந்த நாடான போர்ச்சுகல்லுக்கு எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டது.
வரலாற்றில் இடம் பெற்ற வாஸ்கோடகாமா குறித்து தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவி செய்கிறது. மிகத்தெளிவான நடையில் ஆசிரியர் இந்நூலை எழுதியுள்ளார். கடற்பயணம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, போராட்ட வாழ்க்கை என பலவற்றை இந்நூல், படிப்பவர் மனதில் ஏற்படுத்தும் என்பது திண்ணம். இந்த நூலை எழுதிய வேட்டை எஸ்.கண்ணன் தான் பெற்ற கடற்பயணம் குறித்தும் நூலில் கூறியுள்ளார். அந்த அனுபவமே இந்த நூலை எழுதத் தூண்டியிருக்கலாம். நூலாசிரியருக்கு பாராட்டுகள் பல. அதே போன்று நன்முறையில் நூலாக்கம் செய்த புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

Related posts

Leave a Comment