You are here
mirdad-book மற்றவை 

சிந்தனை உலகில் முதலும் முடிவுமான ஞானநூல் – கவிஞர் புவியரசு

மிகெய்ல் நைமியின்      மிர்தாதின் புத்தகம்

உலக ஞான நூல்களில் தலை சிறந்ததான இந்தப் படைப்பின் பெயரே, ‘மிர்தாதின் புத்தகம்தான். பத்தாண்டுகளுக்கு மேலாக, வெளிவந்த நாளிலிருந்து அடக்கமான அலையடிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பிற்கு மேலான நூல் இல்லை என்கிறார் ஓஷோ.

நீண்ட ஞான தாகம் கொண்டவர்களின் தவிப்பை நிரந்தரமாகப் போக்கவல்ல சிந்தனைக் களஞ்சியம் இது.  உலகின் படைப்பாளிகள் அனைவரும் தமது மனதின் அடியாழத்தைப் படம் பிடித்துக் காட்டவே ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் தோற்றுப் போனார்கள். இவன் ஒருவன் மட்டுமே அதில் வெற்றி பெற்றான் என்கிறார் ஓஷோ.
இந்த மகத்தான நூலைப் படைத்தது, எந்த இந்திய மகரிஷியும் அல்ல. இதன் ஆசிரியர் ‘மிகெல் நையி’ இவர் லெபனான் நாட்டுக்காரர்! கலீல் ஜிப்ரானின் அருமை நண்பர். ஜிப்ரானின் உழைத்தவர். நைமியின் உறவு இல்லாமற் போயிருந்தால் அவன் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பான். நைமி எழுதியுள்ள ஜிப்ரானின் வாழ்க்கை வரலாறு உலக வாழ்க்கை வரலாறுகளில் தலை சிறந்தது என்கிறார் ஓஷோ.
தனது படைப்பைப் பற்றி மிகெய்ல் நைமி என்ன சொல்கிறார்?
“இதை உங்களால் படிக்க முடியாது!’ அப்படியானால் இவர் எதற்காக எழுதினார்? எப்படி எழுதியிருக்கிறார்? நைமி அரபு எழுத்தாளர். ஆனால் இதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவரது ஆங்கிலம் மிகச் சிக்கலானது. முற்றிலும் மாறுபட்ட சொற்சேர்க்கை, சிக்கலான வாக்கிய அமைப்பு போன்ற பல அம்சங்கள் நன்றாக ஆங்கிலம் படிப்பவர்களையே திணறடிக்கிறது.

Nothing can serve save it be served
by servuing And nothing ean be served
except it serve the serving

இப்படி விளையாடியிருக்கிறார் ஓர் அன்னிய மொழியில் ‘‘பணிவிடைகளால் பணிவிடை செய்தே ஆக வேண்டும் என்றால், எதுவுமே பணிவிடையைக் காப்பாற்றாது, பணிவிடை செய்கிறவருக்குப் பணிவிடை செய்தாலொழிய,
எதற்குமே பணிவிடை செய்துவிட முடியாது.’’ இது அதன் பொருள்.
இன்னொரு வாக்கியத்தையும் பார்த்துவிடுங்கள் ஒரு மாதிரிக்காக
ஆணும் பெண்ணும் வேறெல்ல,. மனிதன் குருமை நஞ்சைக் குடித்துவிட்டான். உள்ளணர்வால் அவன் ஒருமை காணவேண்டும். அப்போதுதான் அனைத்திலும் மேலான சுதந்திரத்தை அவன் பெறுவான் என்பது சுருக்கம்.

அசுர வேகம், ஆவேசப் போக்கு பேச்சு கவிதை வீச்சு முன் பின்னாய்ப் பின்னப்பட்ட வாக்கிய அமைப்புகள், திகைப்பூட்டும் கற்பனை, அகராதிகளைத் தாண்டிய புதிய பதச் சேர்க்கை, எல்லாம் கொண்டு இது தத்துவ ஞானப் புயலாக, கவித்துவ அடைமழையாக, சூறாவளியாய்ச் சுழன்றடித்து வாசகரை மூச்சுத் திணறச் செய்கிறது.  பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது, இதைப் படிக்கச் சொல்லி சுமார் நூறு பேராசிரியர்களிடம் கொடுக்க அவர்கள் படிக்க முடியவில்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்கிறார் ஓஷோ.

‘‘ இந்த ‘ராஸ்கல்’ இதை எழுதியிருக்காவிட்டால் இதை நான் எழுதியிருப்பேனே’’ என்று
செல்லமாய் ஆதங்கப்படுகிறார் ஓஷோ. இவ்வளவு சிக்கலுடையதாக இருந்தாலும், தமிழில் வந்தவுடன் இதை ஆர்வமாய் வாங்கிப் படித்தவர்கள்,. படித்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும். இதன் பாதிப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டுத்தான் புத்தகத்திற்குள் நான் செல்ல வேண்டும்.
பலர் தம் பிள்ளைகளுக்கு மிர்தாத் என்று பெயர் சூட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பல நிறுவனங்ககள் இந்தப் பெயரில் செயல்படுகின்றன.
ஓர் திரைப்படக் கலைஞர் மிர்தாத், மலைக் காட்டுக்குள் எதையோ தேடிக் காணாமல் போனாள். இதை வாங்குகிறவர்களில் பலர் அய்ந்து அய்ந்து பிரதிகள் வாங்குகிறார்கள். கவிக்கோ, அறிவுமதி, நாஞ்சில் நாடன், நடிகர் சத்யராஜ்…. எனப் பலரும். கவிஞர் ‘லிங்கூ’ லிங்குசாமியிடம் சொன்னபோது, அவர் 60 பிரதிகள் வாங்கி தமது திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தில் வைத்து, வருகிறவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்து வருவதாகக் கூறினார். ‘‘கொடுப்பவருக்கும் வாங்குகிறவருக்கும்
மரியாதை தரும் நூல்’’ என்று அவர் கூறினார்.

ஞானி பகவத் அய்யா இதைப் பாராட்டிச் சொன்னார். மதுரையில் உள்ள ஒரு ஆசிரமத் தலைவர் ‘‘சுவாமி, உங்களைத் தரிசிக்க என் சிஷ்யனோடு நேரில் வரவேண்டும். எப்போது வர?’’ என்று கேட்டு அதிர வைத்தார். சுவாமி, நான் வெறும் மொழி பெயர்ப்பாளன் மிர்தாத் அல்ல என்று சொல்ல, ‘‘அதெல்லாம் பேசப்படாது’’ என்று சொன்னார். பெரும்பாடு பட்டுத் தவிர்க்க வேண்டியதாயிற்று.

மதுரை பாரத் டெயிலர் சண்முகம். ஒரு பஸ் பிடித்து, ஒரு கூட்டம் மிர்தாதிகளோடு வீட்டிற்கு வந்துவிட்டார். பெரியவர்களைத் தவிர, அதிகமாக இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருப்பது இந்தப் படைப்பு,. இதன் மொழி பெயர்ப்பாளன் என்ற முறையில் ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லியே ஆக வேண்டும். புதுவையில், ஓர் இலக்கிய விழா மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன்…
‘இதோ, அமைச்சர் அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்ற அறிவிப்பு என் பேச்சினிடையே குறுக்கிடுகிறது. எனக்குச் சரியான எரிச்சல். “அமைச்சர்கள் கலந்து கொள்கிற கூட்டங்களில் நான் பங்கு கொள்வதில்லை. நீங்கள் ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை?” என்றேன் ஒலி பெருக்கியில். ஆனால், அமைச்சர் வந்தே விட்டார்! ஒரு கையை உயர்த்தியபடி, நான் சொல்வதைக் கேட்டபடி, சிரித்தபடி!
நான் தடுமாறிப் போனேன். சபை நாகரிகம் கருதி, ‘‘அமைச்சர் அவர்களே, நான் சொன்னது, எங்கள் நாட்டில்!’’ என்று சொல்லி, சமாதானப்படுத்தி, சமாளித்து ஒரு நிமிடத்தில் முடித்துவிட்டு அமர்ந்தேன். அமைச்சர் பேச வந்தார்.
“புவியரசு அவர்களே, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். என் மனைவியும் வர இருந்தாள். இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கள் கட்டளை. அதனால் வர முடியவில்லை. சொல்லச் சொன்னாள். அப்புறம் ஒரு நாள் அவளுடன் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். நாங்கள் இருவரும் மிர்தாத் படித்தவர்கள். ‘எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத காற்றைப் போல’ நீங்கள் எழுதியது தானே? நாங்கள் மிர்தாத் படித்தவர்கள்தானே…” என்று சொல்லிவிட்டு மிர்தாத் பற்றியே பேசிவிட்டு, இறங்கிப்போனார்.
அவர் என்ன கட்சி, யார் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மிர்தாத் செய்த அற்புதம் அது.
‘மிர்தாதின் புத்தகம்‘ எதைப் பற்றி? இது சொல்ல வருவது என்ன? ஏன் பலதரப்பு மக்களையும் இது கவர்கிறது? இதில் என்னதான் இருக்கிறது?
‘மிர்தாதின் புத்தகம்‘- ஒரு புதினம். ஹாரி பாட்டர் மாதிரி ஒரு மாயாஜாலக் கதை. அதற்குள்தான் அறிவுப் புதையல். இளைஞன் ஒருவன் மிக உயரமான, செங்குத்தான மலையேறிப் போகிறான். அது நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிகரம் மட்டும் மூழ்காமல் நீட்டிக் கொண்டிருந்த அராரத் மலை.
ஓர் ஊன்று கோலும், ஏழு ரொட்டித் துண்டுகளும் கொண்டு புறப்படும் அவன் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. மலை நெட்டுக்குத்தானது. கரடு முரடானது. எழுந்து விழுந்து, காயங்கள் பட்டு தரையோடு கைகளால் ஊர்ந்து மூச்சுத் திணறி ஒரு குகையை அடைகிறான். அவனது முயற்சிக்குக் காரணம், நோவாவின் கப்பல் கரை தட்டிய இடத்தை அடைவதுதான். மலையேற்றத்தின்போது பல அதிசயங்கள் நிகழ்கின்றன…குகை வாயிலில் மயங்கி விழுகிறான். ஒரு துறவி அவன் மயக்கத்தைத் தெளிவித்து, அவனுக்காக நூற்றைம்பது ஆண்டுகளாக அவர் காத்திருப்பதாகக் கூறுகிறார். அவனிடம் ஒரு புத்தகத்தைத் தருகிறார். அது தான் ‘மிர்தாதின் புத்தகம்.‘ உடனே அவர் கல்லாகிவிடுகிறார்.
அவர் பெயர் சமாதம். நோவாவின் கப்பல் கரை தட்டிய இடத்தில் ஒரு மடாலயம் அமைத்து வாழ்ந்து வந்த மரபினரில் ஒருவர் அவர். அந்த மடத்தில் ஒன்பதுபேர் மட்டும் இருக்கலாம். ஒருவர் மறைந்துவிட்டால், கடவுள்தான் ஒன்பதாவது ஆளை அனுப்ப வேண்டும். அப்படி ஒருவர் மறைந்தபோது, அந்தக் காலத்தில் கதவைத் தட்டியவர் மிர்தாத். ஆனால், அவர் பிச்சைக்காரன்போல் தோன்றியதால் மூத்த துறவி சமாதம் அவரை விரட்ட, மிர்தாத் பிடிவாதமாக இருந்து ஒரு பணியாளராக மட்டும் சேர, அனுமதி பெறுகிறார். அங்கே அவர் மௌனவிரதம் பூண்கிறார்.

ஏழு ஆண்டுகள் கடந்தும், இறைவன் அனுப்பிய ஆள் கிடைக்கவில்லை. அதனால், மிர்தாதையே ஒன்பதாவது துறவியாக ஏற்கிறார்கள். பிறகு மிர்தாத், அடிவாரத்தில் உள்ள மடாலய நிலங்களை அந்தந்தக் குடியானவர்களுக்கே வழங்கிவிடுகிறார். மடாலயத்தில் முணுமுணுப்பு, குழப்பம் ஏற்படுகிறது.

அப்போது, மிர்தாத் தமது மௌனம் கலைத்துப் பேச ஆரம்பிக்கிறார். அவரது பேச்சையும், மற்ற நிகழ்வுகளையும் இளம் துறவி ‘நரோண்டா’ எழுத்தில் பதிவு செய்கிறார். அதுதான் ‘மிர்தாதின் புத்தகம்‘ அவரது அணுகல்… முறை புரட்சிகரமாகவும், முற்றிலும் புதிதாகவும் அமைகின்றது.
பூமியில் தோன்றிய மக்களில் ஆதி மனிதன் நீண்ட காலம் வாழ்ந்தாலும், அவனைவிட அதிக காலம் வாழ்ந்தவன் மெத்தூசலா. இவன் 969 ஆண்டுகள் வாழ்ந்ததாக விவிலியம் கூறுகிறது. இவனுடைய பேரன்தான் நோவா. இவன் காலத்தில்தான் பெரு வெள்ளப் பெருக்கும், அராரத் மலை உச்சியில் கரை தட்டியபின் மடாலயம் அமைத்து வழிவழியாக வாழ்ந்துவந்தார்கள். அந்த மடாலயத்தில் ஒரு துறவியாக வந்து சேர்ந்த

மிர்தாதின் சிந்தனைகளில் சில:
நியாயத் தீர்ப்பு நாள் எதுவெனக் கேட்டால் ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு நியாயத்
தீர்வு நாளே. கடவுள்-மனிதன் என்று இருமைப் படுத்தாதீர்கள். இருப்பதெல்லாம்: கடவுள் மனிதன், அல்லது மனிதக் கடவுள்’ மிர்தாதின் ஆதாம் உண்ட ஞானக்கனி பற்றிய விளக்கம் விவிலியத்திற்கு மாறானது.

‘‘மனிதன் பற்றுகின்ற பொருள்கள் எல்லாம் அவனையே பற்றிப் பிடித்துக் கொள்ளும். பற்று விடுங்கள். பற்றியவை பற்றற்றுப் போகும். கடவுளைத் தேடிச் செல்கிறவன், கடைசியில் கண்டுகொள்வது தன்னைத்தான்!’’ உமக்குப் பொருள்களின் ஆழம், அகலம் தெரியும். ஆனால், உமது சொந்த ஆழ அகலங்கள் தெரியவில்லையே’.
‘‘உங்களை முட்டவரும் மாடு, நீங்கள் மனதில் அழைக்காமல் வருவதில்லை.’’
‘‘அன்பே, வாழ்வின் சாறு. வெறுப்பு, மரணத்தின் கீழ்’’ ‘‘சிறந்த பேச்சு, ஒரு நேர்மையான பொய்! மோசமான மௌனம், ஒரு நிர்வாண உண்மை.

‘‘எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப் போல் திகழுங்கள்.
இவ்வாறான மின்வெட்டுகள் நூல் முழுவதிலும் பளிச்சிடுகின்றன.
இது எந்த மதத்தையும் சாராத பொது
ஞான நூல்!

அதனால்தான் மதவாதிகள் இதைப் புறக்கணித்து விட்டார்கள். எல்லாவற்றையும் மீறி, தன் புதிய சிந்தனைப் போக்கால் மேலே உயர்ந்துவருகிறது. மிர்தாதின் புத்தகம்.

Related posts

Leave a Comment