You are here
yuma vasugi நேர்காணல் 

மொழிபெயர்ப்பாளனின் வாதைகள் யாருக்கும் தெரிவதில்லை!

நேர்காணல்: யூமா வாசுகி
சந்திப்பு: கமலாலயன்
ஒளிப்படங்கள்: மாணிக்கசுந்தரம்

அறிமுகம்
ஓவியர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர். இயற்பெயர், மாரிமுத்து. கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் நுண்கலையில் பட்டயம் (Diploma) பெற்ற ஓவியர். இவர் எழுதிய ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ ஆகிய நாவல்கள், வாழ்க்கையின் வலிகளையும் உக்கிரங்களையும் உலுக்கி எடுக்கும் மொழியில் பேசியவை. ‘ரத்த உறவு’ நாவல் 2000மாவது ஆண்டில் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘உயிர்த்திருத்தல்’ இவரது சிறுகதைத் தொகுதி. ‘தோழமை இருள்’, ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’, ‘என் தந்தையின் வீட்டைச் சந்தையிடமாக்காதீர்’, ‘சாத்தானும் சிறுமியும்’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘மரூனிங் திக்கெட்ஸ்’ என்பது, இவர் பத்திரிகைகளில் வரைந்த கோட்டோவியங்கள் அடங்கிய நூல். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். ‘குதிரைவீரன் பயணம்’ எனும் சிறுபத்திரிகையை நடத்திவருகிறார். மலையாள எழுத்தாளர், அமரர் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்டே இதிகாசம்’ எனும் நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி 2007- ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை யூமா வாசுகிக்கு வழங்கியுள்ளது. இனி யூமாவின் நேர்காணல்
உங்கள் இளமைப் பருவத்திலிருந்தே தொடங்கலாமா?
திருவிடைமருதூரில் 1966 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தேன். எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் பட்டுக்கோட்டை. அப்பா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தர். எனக்கு மூத்தவர்கள் மூன்று பேர். வாசுகி என் தமக்கை. பெரியவரான அவர் பெயரில்தான் எழுதிவருகிறேன். அடுத்து இரு அண்ணன்கள். பெரிய அண்ணன் ராமதுரை சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அடுத்த அண்ணன் மாதவன். அப்பாவின் மறைவுக்குப் பிறகு வாரிசு அடிப்படையில் இவருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. சொந்த ஊருக்கே அப்பாவுக்குப் பணியிட மாற்றம் கிடைத்ததால், என் சிறு பிராயத்திலேயே திருவிடைமருதூரை விட்டு பட்டுக்கோட்டைக்கு வந்துவிட்டோம்.
பட்டுக்கோட்டை நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி. அதே ஊரில் உள்ள மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தேன். படிப்பில் முற்றிலும் நாட்டமில்லை. கதைகள் வாசிப்பதில் விருப்பமிருந்தது. அப்போது பட்டுக்கோட்டையில் முகமது காசிம் எனும் நண்பர் (‘பட்டுக்கோட்டை காக்கா’ எனும் புனைபெயரில் அப்போது கதைகள் எழுதிக்கொண்டிருந்தவர்) புக் சர்க்குலேஷன் செய்துகொண்டிருந்தார். நானும் அவருடன் சைக்கிளில் சென்று வீடு வீடாக வார, மாத இதழ்களை வினியோகம் செய்வேன். ஒரு வீட்டில் படித்துவிட்டுக் கொடுத்த பத்திரிகைகளை வாங்கி, வேறு வீட்டில் கொடுப்போம். அவரால் வரமுடியாதபோது நானே பத்திரிகைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் வீடுதோறும் கொடுப்பேன். அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு வேலையாக இருந்தது. மிகவும் ஈடுபாட்டுடன் செய்தேன். இதனால் என்னால் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள முடியாதுபோய்விட்டது. படிக்கவில்லை. தமிழ் தேர்வு மட்டும் எழுதினேன். பிற தேர்வுகளுக்குச் செல்லவில்லை. அதன் பிறகு பல்வேறு வேலைகளுக்கு முயற்சி செய்தேன். பள்ளிவாசல் தெருவில் இருந்த ஒரு பெட்டிக்கடையிலும் சாட்சிநாதன் செட்டியார் வளைவுக்குப் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையிலும் வேலை செய்தேன். ராணுவத்தில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டேன். தேர்ச்சி பெறவில்லை. ஓவியத்தில் ஆர்வம். நண்பர் முகமது யூசுஃபின் அண்ணன் அப்துல் காதர் அவர்கள், விளம்பர போர்டுகள் எழுதும் ஓவியர் ரஃபீக்கிடம் உதவியாளாகச் சேத்துவிட்டார். அவர் போர்டு எழுதும்போது, அவர் பக்கத்தில் பெயின்ட் டப்பாவைப் பிடித்துக்கொண்டு நிற்பதுதான் என் வேலை. பிறகு விஜய் ஸ்டுடியோவில் பணியாளாகச் சேர்ந்தேன். அதன் பிறகு பேராவூரணி மாலி ஸ்டுடியோ. மாலி ஸ்டுடியோவில் சேர்வதற்காகச் சென்றபோது கொஞ்சம் தூரத்தில் ஒரு கட்டடத்தில் பெரிய தீ விபத்து. வானளாவி எழுந்து பரவிய அந்தப் பெருந்தீ நினைவிருக்கிறது. பிறகு, என் பெரியப்பா மகளின் (அக்கா) கணவர் லெட்சுமணன், கும்பகோணத்தில் ஒரு ஓவியக் கல்லூரி இருப்பதாகவும் அதில் சேரவேண்டுமானால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் சொன்னார். ஓவியக் கல்லூரியில் சேரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குப் பாடுபட்டேன். பள்ளியில் எழுதியதற்குப் பிறகு தனித் தேர்வராக இரண்டு முறை எழுதிதான் வென்றேன். ஓவியக் கல்லூரியில் படித்த காலம் ஆறு வருடங்கள். 1984 முதல் 89வரையிலான ஐந்தாண்டுகளில் முடிந்திருக்கவேண்டியது. “நாங்கள் ஐந்து ஆண்டுகள் படிக்கிறோம், அதனால் எங்களுக்கு பட்டயத்துக்குப் பதிலாக பட்டம் கொடுங்கள்” என்று வேலை நிறுத்தம் செய்தோம். அதில் ஒரு ஆண்டு போய்விட்டது.
வாசிப்பிலும் ஓவியத்திலும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
அம்மா, வார, மாதப் பத்திரிகைகள் படிப்பார். அவர் படித்த பிறகு அந்தப் பத்திரிகைகளை எடுத்து நானும் அண்ணனும் படிப்போம். அப்படித்தான் ஆரம்பம். அம்மாவுக்காக நாங்கள் அண்டை வீடுகளிலிருந்து ராணி, குமுதம், ஆனந்த விகடன், பொம்மை, பேசும்படம், இதயம் முதலிய பத்திரிகைகளை இரவல் வாங்கி வருவோம். ராணியில் குரங்கு குசலா, இன்ஸ்பெக்டர் மகன் என்றெல்லாம் எங்களுக்குப் பிடித்த பகுதிகள் வரும். அந்தப் பருவத்தில் ஜெகசிற்பியன், தமிழ்வாணன் , மு.வ., சுஜாதா, கல்கி, சாண்டில்யன், சிரஞ்சீவி, சந்திரமோகன், மணியன், மாயாவி, பி.டி.சாமி ஆகியோரது நாவல்களும் படித்திருக்கிறேன். ஓவியத்திற்கான ஆர்வமும் அம்மா வழியில்தான் வந்தது. அம்மாவின் பெரிய அண்ணன், அமரர் மாயூரம் கல்யாணராமன். இவர் கவிஞர். சமூக சீர்திருத்த நாடகங்கள் எழுதி மேடையேற்றியவர். திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். உள்ளூர் திராவிடர் கழகத்திலிருந்து இவருக்கு ‘அன்பானந்தன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயரில்தான் இவர் இயங்கிவந்தார். எம். ஆர். ராதா, இவரது ‘அறிவுலகம்’ எனும் நாடகத்தை தலைமையேற்று நடத்திக் கொடுத்திருக்கிறார். மாமாவின் வீட்டில், ‘பாலைவனத்து ஒளிவிளக்கு’ எனும் நாடகத்துக்கான பெரிய விளம்பரப் பதாகையை நான் பார்த்திருக்கிறேன். அம்மாவின் சிறிய அண்ணன் அமரர், மாயூரம் பாலசுப்பிரமணியன். இவர், தியாகராஜ பாகவதரை மானசீகக் குருவாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர், ஓவிய ஆசிரியர், ஒளிப்படக் கலைஞர். வீட்டின் ஒரு பகுதியை இருட்டறையாக மாற்றி வைத்திருந்தார். யதார்த்த ஓவியங்கள் வரைவதில் திறமை மிக்கவர். இவர் தன் வீட்டின் திண்ணைச் சுவரை, ஒளிப்படம் எடுப்பதற்கான பின்னணியாக, குளக்கரையும் பூக்களும் தூணுமாக வரைந்து வைத்திருந்தார். திண்ணையில் எந்தக் குழந்தை விளையாடினாலும், “அந்தச் சுவரைத் தொட்டு அழுக்காக்கிவிடாதே!” என்று, வீட்டிலுள்ளோர் கடுமையாக எச்சரிப்பார்கள். ஏனென்றால், அந்தச் சுவரில் அழுக்குத் தடம் படிந்தால், அதன் பின்னணியில் எடுக்கும் ஒளிப்படத்திலும் அந்தத் தடம் பதிவாகிவிடும். யாருக்கும் தெரியாமல் அந்தச் சுவரில் எப்படியாவது பென்சிலால் கீறிவிடவேண்டும் என்பது என் சிறு பிராய லட்சியங்களுள் ஒன்றாக இருந்தது. வீட்டிலுள்ளோர் கொல்லைப்புறத்திலிருந்த ஒரு மதியத்தில் பேரச்சத்துடன் நான் என் நோக்கத்தை நிறைவேற்றினேன். அந்தக் கீறலை, யார் எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று வெகு நாட்கள் பதற்றத்துடன் அவதானித்துக்கொண்டே இருந்தேன். இப்படி ஒன்று நடந்ததை கடைசிவரையில் யாருமே கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால், அந்தக் கீறல் மயிரிழையிலும் நுண்ணியது!
அம்மா, சித்திரப்பூத் தையல் கலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மிக நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்த அலங்கார சுவர் தொங்கல்கள், ஸ்வெட்டர்கள், ஓயர் கூடைகள் என்று இடைவிடாமல் பின்னிக்கொண்டிருப்பார். வயது முதிர்ந்து, பார்வை வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் அவரால் குரோசா ஊசியால் பின்னல் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. அம்மாவின் தம்பி, ராதாகிருஷ்ணன். குத்தாலம் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தப் பின்னணிதான் என்னை ஓவியங்களை நோக்கி இட்டுச் சென்றிருக்கும்.
ஓவியக் கல்லூரியில் உங்கள் ஆசிரியர்களாக இருந்தவர்கள், சக ஓவியக் கலைஞர்களில் முக்கியமானவர்களைப் பற்றி…
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் நான் சேர்ந்தபோது அங்கே முதல்வராக இருந்தவர் சுரேந்திரநாத். அங்கே ஓவியர் மனோகர் அவர்களிடம் முதல் இரண்டு ஆண்டுகள் ஓவியம் பயின்றேன். எனக்கு மூத்த மாணவர்களாக இருந்த பலர் இன்று புகழ்பெற்று விளங்குகிறார்கள். நெய்வேலி செல்வம் இரண்டு ஆண்டுகள் மூத்தவர். அவர் அருமையான ஓவியர். ஆனால், ஒளிப்படக் கலையில் அவர் ஆர்வம் முழுமையாகக் குவிந்துவிட்டது. மயிலாடுதுறை ராஜராஜன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோரெல்லாம் எனக்கு மூத்த மாணவர்களாக இருந்தார்கள்.
‘ரத்த உறவு’ நாவல் வந்தபோது அது வாசகர்களை உலுக்கி அதிரச்செய்த ஞாபகம் இருக்கிறது. படிக்கும்போது பதறிப்போகச் செய்யும் உக்கிரம் மிக்க படைப்பு அது. அதை எழுதியதில் சொந்த அனுபவங்களின் தாக்கம் உண்டா?
அது புனைவும் யதார்த்தமும் கலந்த நாவல். இளம் பிராயத்தின், கடினப்பட்ட ஒரு காலத்தின் பதிவு. தனிப்பட்டதாக மட்டும் அல்லாது, ஒரு பிராந்தியச் சூழலின் விவரணம். கலவரமான சூழ்நிலைகளிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு சிறுவன் புகல் தேடி ஓடுகிறான். முற்றிலும் ஒட்டடை படிந்த அலமாரிக்குப் பின்புற இருட்டில், பல்லிகள் சிலந்திகளுடன் அவனும் பதுங்கி மிரட்சியுடன் பார்க்கிறான். அந்தப் பார்வை என்னுடையது. அந்தப் பார்வையின் நிறமாலையில் புனைவுகள் இணைந்திருக்கின்றன.
ஓவியர் விஸ்வத்தின் ஏற்பாட்டில் லலித் கலா அகாடமியில் ஒரு விழா நடந்தது. அதில் ஓவியர் ஆதிமூலம் கலந்துகொண்டு ரத்த உறவு நாவல் பற்றி கட்டுரை எழுதி வாசித்தார். நடனக் கையெழுத்தில் அமைந்த அந்த அரிய பக்கங்கள், அந்த மிகப் பெரும் ஓவியரை என்றும் நினைவுறுத்தியபடி இருக்கின்றன.
ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறீர்கள். ஓவியர் ஆகாமல் எழுத்து, பத்திரிகை என்று ஆனது எப்படி?
நண்பர் அறிவுச் செல்வன் ஓவியக் கல்லூரியில் என்னுடன் படித்தவர். படிப்பு முடிந்ததும் அவர் திருப்பூருக்குச் சென்று, துணிகளுக்கான சித்திரங்கள் வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அங்கே வந்துவிடும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். எனவே நான் அங்கே சென்று அவருடன் ‘இருந்தேன்’. இருந்தேன்தான், வேலை செய்யவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் அங்கே இல்லை. அவர் எனக்கு நிறையப் புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பார். அவற்றையெல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். வெளியூர் செல்லும்போது நானும் உடன் செல்வேன். அந்த சமயத்தில் திரு பாவைசந்திரன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு, ‘புதிய பார்வை’ இதழ் வெளிவரத் தொடங்கியது. அதை வாங்கிப் படித்தேன். அதன் வடிவமைப்பும் உள்ளடக்கத் தரமும் என்னை மிகவும் கவர்ந்தன. அந்தப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். சென்னைக்கு வந்து பாவைசந்திரனைப் பார்த்து வேலை கேட்டேன். “நீங்கள் பக்க வடிவமைப்பு செய்வீர்களா?” என்று கேட்டார். பக்க வடிவமைப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றாலும், அங்கே வேலைக்குச் சேரவேண்டும் எனும் பேராவலில், “தெரியும்” என்று பொய் சொல்லி சேர்ந்துவிட்டேன். எனக்கு எதுவும் தெரியாது எனும் உண்மையை, சில தினங்களிலேயே அவர் கண்டுகொண்டார். அப்போது அவர் என்னை வெளியேற்றிவிடவில்லை. இப்படிச் சொன்னார்: “உங்களுக்கு வடிவமைப்பு தெரியாததைப் பற்றி ஏதும் கவலைப்படாதீர்கள். வெளியிலிருந்து சில வடிவமைப்பு ஓவியர்கள் வந்து இங்கே பக்க வடிவமைப்பு செய்வார்கள். நீங்கள் அவர்கள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு செய்தால் போதும்.” அவரது இந்த வார்த்தைகள் எனக்குப் பெரும் ஆசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தன. அப்போது அங்கு வந்து பக்க வடிவமைப்பு செய்தவர்களில் ஒருவர், ஓவியர் பாண்டியன். இப்போது ஆனந்த விகடனின் தலைமை வடிவமைப்பாளர். அப்படித்தான் அவர் எனக்குப் பழக்கம். அந்த நேரத்தில் புதிய பார்வையில் உதவி ஆசிரியராக இருந்தவர் தோழர் பா.ஜீவசுந்தரி. பாவைசந்திரன் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். “ஹோட்டல்களில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். வீட்டுக்கு வாருங்கள். பாத்திரங்களும் தேவையான பொருட்களும் கொடுக்கிறேன். சமைத்துச் சாப்பிடுங்கள்” என்று அடிக்கடி சொல்வார். பின்னாட்களில் எனக்கான திருமண ஏற்பாட்டிலும் அக்கறையுடன் ஈடுபட்டவர். எந்தப் படாடோபமும் இல்லாத எளிய ஆன்மா அவருடையது. அதன் பிறகு புதிய பார்வையில் நா. கதிர்வேலன் உதவி ஆசிரியராகப் பணி செய்தார். பெருநகரத்தில் அலைந்து திரியும் நாட்களில் பல முறை, என் மதியப் பொழுதுகளின் கடும் பசித் தழலை தணித்தாட்கொண்டவர் கதிர்வேலன்.
நான் கணையாழியில் சேர்ந்தபோது சி. அண்ணாமலை அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். கணையாழி ஆசிரியர் கஸ்தூரிரங்கனும் சுஜாதாவும் இந்திரா பார்த்தசாரதியும் அருகருகே குடியிருந்தார்கள். கணையாழிக்காக வரும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சுஜாதாவின் மேற்பார்வையும் உண்டு. அப்போது நான் ‘காவடியாட்டம்’ எனும் ஒரு கதை எழுதி கணையாழிக்காகக் கொடுத்திருந்தேன். அதை சுஜாதா படித்துப்பார்த்தார். ஒரு கோயில் திருவிழா பற்றிய கதை அது. அதன் முடிவில் சுஜாதாவுக்கு உடன்பாடில்லை. அதை நான் திருத்திக் கொடுக்கிறேன் என்று சொன்னார். நான் ஏற்கவில்லை. கடைசியில், நான் எழுதிய வடிவத்தில்தான் அந்தக் கதை கணையாழியில் வெளிவந்தது. அந்த மாதத்தில் வந்த சிறந்த கதையாக அதை இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுத்து, பரிசுப் பணமாக ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள். இலக்கியத்துக்காக நான் பெற்ற முதல் பரிசு அதுதான். அந்தக் கொடூரமான கஷ்டகாலத்தில் அந்தச் செய்திதான் எவ்வளவு இனித்தது! ஆழ்வார்பேட்டையிலிருந்து திநகர்வரை மகிழ்ச்சியாக நடந்து சென்று ரயிலில் பழவந்தாங்கல் அறைக்குச் சென்றேன்!
நான் நடத்திய ‘குதிரைவீரன் பயணம்’ சிற்றிதழில் பெருமாள் முருகன் இரண்டு கட்டுரைகள் எழுதினார். ‘பிரம்மரிஷியின் கவிதை ரசனை’ எனும் தலைப்பில், சுஜாதா தனக்குப் பிடித்த கவிதை என்று அடையாளப்படுத்தும் கவிதைகளையும் அவற்றைத் தேர்வு செய்யும் சுஜாதாவின் ரசனையையும் விமர்சித்திருந்தார். அது சுஜாதாவுக்கு முற்றிலுமாகப் பிடிக்கவில்லை. கணையாழி அலுவலகத்தில் என்னைச் சுட்டிக்காட்டி அவர் கஸ்தூரி ரங்கனிடம் சொன்னார்: “இவர் நம்கூடவே இருந்துகொண்டு நமக்கு எதிராகச் செயல்படுகிறார்.” அவர் சொன்னதைக் கஸ்தூரி ரங்கன் சற்றும் பொருட்படுத்தவில்லை. “பெருமாள் முருகன் தன் சொந்தக் கருத்தை எழுதியிருக்கிறார். அதை இவர் வெளியிட்டிருக்கிறார். அதற்கு இவர்களுக்கு உரிமை உண்டுதானே?” என்று சொல்லிவிட்டார். அவர் அப்படிச் சொல்வார் என்று சுஜாதா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நகரத்தில் தினங்களைக் கடத்துவது சிரமசாத்தியமானது. அப்போது இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தி ஒரு கடிதம் கொடுத்தார். திருப்பூர் கிருஷ்ணன் அப்போது தினமணி கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்தார். இந்திரா பார்த்தசாரதி கொடுத்த கடிதத்துடன் நான் சென்று திருப்பூர் கிருஷ்ணனைச் சந்தித்தேன். கடிதத்தைப் படித்த திருப்பூர் கிருஷ்ணன், அவர் பக்கத்தில் அமர்ந்து சித்திரங்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியர் தாமரையிடம் அறிமுகப்படுத்தி வைத்து, படம் வரைவதற்கு ஏதேனும் மேட்டர் கொடுக்கும்படிச் சொன்னார். அப்போது தாமரை கொடுத்த ஒரு கவிதைக்கு நான் படம் வரைந்து கொடுத்தேன். அது எனக்கு ஒரு திருப்பமாக இருந்தது. ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சி, எஸ். சிவக்குமார், சுகதேவ், செல்லப்பா, ராயப்பா, பொன்.தனசேகரன், மனோஜ், ரமேஷ், வடிமைப்பாளர் மோகன் ஃபெர்னாண்டோ ஆகியோர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என் மீது அன்புகொண்டு தினமணி வெளியீடுகளில் நான் படம் வரைவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்கள். பரீக்ஷா ஞானி தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது, என்னை தினமணி நாளிதழ் ஒளிப்படக்காரனாக பணியில் சேர்த்தார். சில காலம் நான் அங்கே பத்திரிகை ஒளிப்படக்காரனாகவும் வேலை செய்தேன். எனக்கு அங்கே வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அங்கே சென்று அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். கஸ்தூரி ரங்கனின் பரிந்துரையின் பேரில், சி.பி. ராமஸ்வாமி ஐயர் பௌண்டேஷன் அலுவலகத்தில் ஓவியனாகவும் சில காலம் பணி செய்தேன்.
அந்தக் காலத்தில் நண்பர் பாண்டியராஜன் (திரைப்படக் கலைஞர், சிறுகதையாளர்), வரைகலையில் நவீன கணினித் தொழில் நுட்பம் கற்றுக்கொள்ளுங்கள், அது உங்கள் ஓவிய வேலைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று வற்புறுத்தினார். இந்த விஷயத்தில் நண்பர் பஷீர் உங்களுக்கு உதவுவார், அவது கணிப்பொறியில் நீங்கள் பயிலலாம் என்றும் வழிகாட்டினார். இந்தத் தேவையின் பொருட்டுதான் நான் பஷீரையும் அண்ணாச்சி வசந்தகுமாரையும் சந்தித்தேன். அவர்கள் இருவரும் ஒரே வீட்டையே தங்கள் பணியிடமாக வைத்திருந்தனர்.
வசந்தகுமாரைச் சந்தித்திருக்காவிட்டால் என் வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கும். பிறகு, பழவந்தாங்கலிலிருந்து புறப்பட்டு ராயப்பேட்டை வந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சேர்ந்து உண்டு முன்னிரவு நேரத்தில் அறைக்குத் திரும்புவதுதான் என் அன்றாட வேலையானது. ஒரு கட்டத்தில் பழவந்தாங்கல் அறையைக் காலி செய்துவிட்டு அவர்களருகிலேயே வசிக்க ஆரம்பித்தேன்.
உங்கள் முதல் கதைத் தொகுப்பை தமிழினி வசந்தகுமார்தான் வெளியிட்டார், அல்லவா?
ஆமாம். இலக்கியத்தின்பாற்பட்ட என் ஈடுபாடு வசந்தகுமாருக்கு மகிழ்ச்சியளித்தது. “நீங்கள் ஏதேனும் எழுதி வைத்திருந்தால் எடுத்து வாருங்கள், படித்துப் பார்க்கிறேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். அது, அவர் ‘தமிழினி’ பதிப்பகம் ஆரம்பித்த நேரம். அவரது இலக்கிய விமர்சனங்கள், அளவுகோல்கள், அவர் மதிக்கும் உலக, இந்திய, தமிழ் இலக்கிய ஆசான்கள், அவர் ரசிக்கும் திரைப்படங்கள் ஆகியன பற்றியெல்லாம் அறிந்திருந்த நான், அவரிடம் என் கதைகளைக் காட்டுவதற்கு அஞ்சினேன். பழவந்தாங்கலில் ஒரு அறையில் இருக்கும்போது நான் சில கதைகள் எழுதி வைத்திருந்தேன்தான்.
அறைக்குள் நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சிகள் இருக்கும். இரவில் நான் எழுத முயற்சி செய்யும்போது அவை குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து அச்சுறுத்தும். இந்த தொல்லைக்காக நான் ஐந்து அல்லது ஆறு கொசுவர்த்திச் சுருள்களைப் பற்றவைத்து அறையைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பிவிடுவேன். ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்து திறந்து பார்க்கும்போது கரப்பான்கள் அறை முழுதும் செத்து நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் கூட்டி எடுத்து தொலைவே கொண்டு சென்று போட்டு வந்து மீண்டும் எழுத அமர்வேன்.
வசந்தகுமாரிடம் என் கதைகளைக் கொடுப்பதற்கு என் அச்சம் இடம் தரவில்லை. அவர் கேட்கும்போதெல்லாம் நான் ஏதேதோ சாக்குப்போக்குகள் சொல்லிச் சமாளித்தேன். ஒரு கட்டத்தில் அவர் நெருக்கிப் பிடித்துவிட்டார். என்னால் திமிறி விடுபட முடியாத நிலை. அடுத்த நாள் என் கதைப் பிரதிகளைக் கொடுத்துவிட்டு காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டேன்.
பட்டுச்சேலைகளின் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் மத்திய அரசு, ஓவியர்களைப் பயன்படுத்திக்கொண்டது. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பட்டுப்புடவை வடிவமைப்பு ஓவியங்கள் வரைந்து கொடுக்கவேண்டும். இதற்கான காலம் ஒரு வருடம் என்று நினைவு. எனக்கு ஒதுக்கப்பட்ட பணி இடம், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கூட்டுறவு பட்டு சொசைட்டி. என் மீதுள்ள பாசத்தின் காரணமாக இந்த நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த ஓவியர் வீர. சந்தானம். முன்னரே அவர் நெசவாளர் சேவை மையத்தில் எனக்குச் சில வேலைகள் அளித்து உதவியிருக்கிறார். எனவே, இந்த புடவை வடிவமைப்பு தொடர்பாக நான் அடிக்கடி காஞ்சிபுரம் செல்வது வழக்கமாக இருந்தது.
காஞ்சிபுரத்திலிருந்து நான் திரும்பிக்கொண்டிருந்தபோது வசந்த குமார் கைப்பேசியில் அழைத்து, “உங்கள் கதைகள் நன்றாக இருக்கின்றன. நாம் இவற்றைத் தொகுத்து நூலாக்கலாம்” என்றார். எனக்குப் பெரும் நிம்மதி. அவர் வெளியிட்ட என் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ‘உயிர்த்திருத்தல்.’ அந்தப் புத்தக உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுத்துக் கொண்ட அதி சிரத்தை… அதை விவரிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு, புத்தக உருவாக்கத்தில் அவரது பாணி தெரியும்.
என் முதல் நூல் என்றால், ‘உனக்கும் உங்களுக்கும்.’ இருபது பக்கமோ, முப்பது பக்கமோ கொண்ட கவிதைத் தொகுப்பு. நண்பர் அறிவுச் செல்வன்தான் அந்தத் தொகுப்பைக் கொண்டு வந்தார். அவரிடமும் அப்போது பணமில்லை. அவர் தன் அக்கா செல்வியின் தங்கச் சங்கிலியை வாங்கி அடகு வைத்து எனக்குப் பணம் கொடுத்தார். நான் அதைக் கொண்டு புத்தகம் அச்சிட்டேன்.
அலைகள் பதிப்பம் சிவம் அவர்கள் வெளியிட்ட நூல்கள் சிலவற்றுக்கு நான் அட்டைப் படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறேன். ஆறு அல்லது ஏழு நூல்களுக்கு வரைந்திருப்பேன். அந்தப் பழக்கத்தில் அவர், கவிதைகள் இருந்தால் கொடு்ங்கள், வெளியிடுகிறேன் என்றார். அப்படித்தான், ‘தோழமை இருள்’ கவிதைத் தொகுப்பு வந்தது. பெருமாள் முருகனும் நானும் அவரது கிராமத்து வீட்டு மாட்டுக் கொட்டகையில், கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்து இரவு வெகு நேரத்துக்குப் பிறகு தூங்கினோம். அந்த இரவைப் பற்றிய கவிதைதான் ‘தோழமை இருள்’. நூலின் தலைப்பும் அதுவே. ‘உயிர்த்திருத்தல்’ என் மூன்றாவது நூலாகும்.
‘ரத்த உறவு’ நாவல் உருவான கதையை அறியலாமா?
பின்னர் எப்போதாவது சிறுகதைகளாக எழுதலாம் என்று நினைத்திருந்த சம்பவங்களை அவ்வப்போது வசந்தகுமாரிடம் சொல்லிக்கொண்டிருப்பதுண்டு. அந்த விஷயங்களின் மீது அவர் ஆர்வம் விழுந்தது. அவற்றையெல்லாம் நாவலாக எழுதுங்கள் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். மிகவும் கடுமையான வலியுறுத்தல். நிர்ப்பந்தம். வரும்போது நாவலுடன் வாருங்கள் என்று அவர்தான் கட்டாயப்படுத்தி என்னை ஊருக்கு அனுப்பினார். அங்கே இருக்கும்போதான எல்லா செலவுகளுக்கும் அவரே பணம் கொடுத்தார். எழுதும்போது எனக்கு ஏதேனும் படிக்கத் தோன்றும் என்பதற்காக, பெரிய பார்சலில் புத்தகங்கள் அனுப்பிவைத்தார். நாவலின் ஒரு பகுதி முடிந்ததும் அதை அவருக்கு அனுப்பினேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனே கிளம்பி பட்டுக்கோட்டைக்கு வந்தார். நாவலுக்குள் வரும் இடங்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்று விரும்பினார். ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினேன். ஒரு மரத்தின் அருகே வரும்போது, மேலே சூரிய வெளிச்சம் ஊடுருவிப் பிரகாசிக்கும் இலைகளை ஒளிப்படம் எடுத்தார். ஏன் இந்தக் காட்சியைப் படமெடுக்கிறீர்கள் என்றேன். க.சீ.சிவக்குமார் ‘மின்னொளிர் கானகம்’ எனும் நாவலுக்கான முயற்சியில் இருக்கிறான். அதன் அட்டைக்காகத்தான் இது என்றார்.
நாவல் முற்றுப் பெற்றதும் அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்தேன். அதை எடிட் செய்தது, அத்தியாயம் பிரித்தது, வடிவமைத்தது எல்லாம் அவர்தான். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ‘மழை’ எனும் காலாண்டு இதழை ஆரம்பித்து என்னை ஆசிரியராக்கினார். என்னை மிகவும் பாதித்த ஆளுமை அவர். எனக்குக் குழந்தை பிறந்தால் அவர் பெயர் வைக்கவேண்டும் என்று விரும்பியிருந்தேன். எனக்கு முன்பாக நண்பர் அறிவுச் செல்வனுக்குத் திருமணமாகியிருந்தது. அவருக்கு இரண்டாவது பையன் பிறந்தபோது, எனது சொற்படி அவனுக்கு வைக்கப்பட்ட பெயர்தான், ‘வசந்த்.’ கவிஞர் பிரான்சிஸ் கிருபாவை வசந்தகுமாரிடம் அறிமுகப்படுத்தினேன். சந்தித்துவிட்டு வரும்போது, “யானை கட்டும் இடத்தில் என்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டாயே, அண்ணா!” என்றார் அவர்.
பிறகு நான் பட்டுக்கோட்டை வந்து சில காலம் தங்கியிருந்தபோது, எனக்குத் திருமணமானது. எனக்கு வேலை என்று எதுவுமில்லை என்று அறிந்த பெண் வீட்டார் கொந்தளித்தார்கள். அந்த நேரம் பார்த்து பஷீரும், மோ. சீனிவாசனும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். “சென்னையில் ‘எய்டு இந்தியா’ எனும் ஒரு தொண்டு நிறுவனம் இருக்கிறது. அங்கே ஒரு கார்டூனிஸ்ட் தேவைப்படுகிறார். நீங்கள் வருகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் உடனே ஏற்றுக்கொண்டு மனைவியுடன் சென்னை வந்தேன். ‘எய்டு இந்தியா’வில் எனக்கு ஊதியம் குறைவுதான் என்றாலும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜிசம்பத், எனக்கு மிக சுதந்திரமளித்தார். மிகுந்த தோழமைகொண்டிருந்தார். அறிவுச் செல்வன், தான் இருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில், அண்ணனூரில் வீடு பார்த்துக் கொடுத்தார். அங்கிருந்து ரயிலில் சென்ட்ரல் வந்து, பேருந்தில் ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வருவேன். மிகவும் பொருளாதார நெருக்கடி. அப்போது பஷீரும், சீனிவாசனும் சேர்ந்து பிரிண்டிங் வேலைகள் எடுத்துச் செய்துகொண்டிருந்தார்கள். என் நிலையைப் பார்த்து அவர்கள் என்னையும் தங்கள் தொழில் பங்காளியாகச் சேர்த்துக்கொண்டார்கள். அவர்கள் வேலை செய்வார்கள். அச்சகம் செல்வார்கள். நான் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்குக் கொடுப்பார்கள். அப்படி எனக்கு மாதம் பத்தாயிரம், பதினைந்தாயிரம் பணம் வரும். இப்படிப் பல மாதங்கள் நடந்துகொண்டிருந்தது.
நீங்கள் மொழிபெயர்த்தவற்றுள் உங்களுக்குப் பிடித்தமானதென்று சில இருக்கும் அல்லவா. அப்படியான படைப்புகள் எவை?
நான் விரும்பியே ஒரு நூலை மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். நான் மொழிபெயர்த்த எல்லா நூல்களும் என் அன்பிற்குரியவையே. சில நூல்களை மொழிபெயர்க்க நான் மிகவும் பாடுபட்டிருப்பேன். சிலவற்றில் அந்தளவு கஷ்டம் இருக்காது. மொழிபெயர்ப்பாளனின் வாதைகள் யாருக்கும் தெரிவதில்லை. மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும்போது சில நேரங்களில் மூளைப் பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் தருணங்களும் ஏற்படும். பாறையில் தலையைக் கொண்டு மோதுவதான சூழ்நிலையும் வரும். உண்மையில் நான் சொல்கிறேன், கசாக்கின் இதிகாசத்தை மொழிபெயர்க்கும்போது, சில இடங்களில் எனக்கு ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள உடனடி வழியின்றி மிகவும் துயரடைந்திருக்கிறேன். மிகுந்த கனமும் பொறுப்பும் கொண்ட பணி இது. கலைகளுக்கு விவரணை இல்லை, வரையறை இல்லை. அதைப்போல மொழிபெயப்பு செயல்பாடு என்பது அவரவர் ஆளுமை, அறிவு, அனுபவம், ரசனையைப் பொறுத்தது.
நீங்கள் மலையாளம் கற்றுக்கொள்ள தொடக்கப் புள்ளியாக இருந்தது எது?
ஊட்டியில் இருந்த குரு நித்ய சைதன்ய யதியை சந்திப்பதற்கு ஜெயமோகன் என்னை அழைத்துச் சென்றார். அந்த ஆசிரமத்தில் யதி, ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதியிருந்த நூல்களைப் பார்த்தேன். அவரது ஒரு மலையாள சிறார் நூல் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் பக்க வடிவமைப்பையும் ஓவியங்களையும் தயாரிப்பு நேர்த்தியையும் வியந்து நான் அதன் பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் ஆவலைப் பார்த்து ஜெயமோகன், மலையாளம் கற்றுக்கொள்ளும்படி ஊக்கமூட்டினார். அந்த நேரத்திலிருந்துதான் இதில் திரும்பினேன். எனக்கு முதன் முதலாக மலையாள அகராதி அன்பளித்தவர், மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா.
பேராசிரியர் எஸ். சிவதாஸ் மலையாளத்தில் குழந்தைகளுக்காக ஏராளமான நல்ல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘உமாகுட்டியின் அம்மாயி’, மரணம் எனும் இயற்கை நிகழ்வைப் பற்றி குழந்தைகளுக்கு மிக எளிமையாக உணர்த்தும் நூல். இதுதான் நான் மொழிபெயர்த்த முதல் புத்தகம். இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டது.
பத்திரிகை, ஓவியம், நாவல், சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம் என்று செயல்படுகிறீர்கள். இவற்றுள் எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறீர்கள்?
இந்த வடிவங்களெல்லாம் எனக்கு ஒன்றுதான். இவை எதில் ஈடுபட்டாலும் நான் பெறும் மனநிறைவு, மகிழ்ச்சி ஒன்றுதான். இவற்றோடு என்னைப் பிணைத்துக்கொள்வதன் மூலமாகத்தான் வாழ்க்கையுடனும் இயற்கையுடனும் உறவுகொள்கிறேன். என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். மனதுக்குச் சற்று ஈரம் தேடுகிறேன்.
தினமணியின் சிறுவர்மணியில் நீங்கள் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
வேலை இல்லாமல் இருந்த காலத்தில், நண்பர் நாராயணன் ஆரம்பித்த ‘பாடம்’ மாத இதழில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஆறு இதழ்கள்வரை என் பொறுப்பில் வந்தன. அதன் அலுவலகம் குன்றத்தூருக்கு அருகில் கெருகம்பாக்கம் எனும் ஊரில் இருந்தது. தூரம் மிகவும் அதிகமாக இருந்ததால், எனக்குப் போகவர சிரமமாக இருந்தது. அதனால் அங்கிருந்து விலக நேர்ந்தது. அங்கே நான் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து, நான் ஒரு விலகல் கடிதம் எழுதி நாராயணனிடம் கொடுத்தேன். அதை அவர் ‘பாடம்’ இதழில் பிரசுரித்தார். தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் தமிழ்மகன் எங்கோ அந்தப் பத்திரிகையைப் பார்த்து, அதில் நான் எழுதியிருந்த கடிதத்தைப் படித்திருக்கிறார். படித்த உடனே என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, நாளையே என் சுயவிவரக் குறிப்பைக் கொண்டு வந்து கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே செய்தேன். அவர்தான் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனிடம் என்னை அறிமுகப்படுத்தி வேலைக்கு ஏற்பாடு செய்தார். அங்கே நான் ஓராண்டு காலம் சிறுவர்மணி பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். கி.ராஜநாராயணன், பாதசாரி முதலியோர் அதைப் பாராட்டி எழுதினார்கள். அந்த இதழுக்கு வாசகர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.
தமிழ்நாட்டில் கலை இலக்கியத்தோடு தன்னை முழுமையாகப் பிணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புணர்வுடன் செயலாற்றிவரும் உங்களைப்போன்ற ஒரு சிலருள் சி.மோகன் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமை. அவரைப் பற்றி…
சி.மோகனின் நட்பு என் வாழ் நிலத்தின் தண்ணீர்போல. கலை தொடர்பான என் தகவமைவுகளில் அவர் குறிப்பிடத் தக்க மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார். தியாகராய நகரில் இருக்கும் முன்றில் புத்தகக் கடையில் சி.மோகனைச் சந்தித்தேன். அதற்கு முன்னால், என்னைப் பிறரோடு ஒப்பிட்டுக் குமையும் மனோபாவம் எனக்கு இருந்தது. லௌகீக நிறைவேற்றங்கள் சாத்தியமாகாதது குறித்து உள் நெருக்கடியும் இருந்தது. அகமும் புறமுமாய் என்றும் கலை பாடும் பறவையான அவர் என்னை நிமிர்த்தினார். வேறு எதையும் பொருட்படுத்தாமல் மனம் ஒன்றி இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான கலை நம்பிக்கையை இவர் புகட்டினார். அதன் பிறகுதான் என் ஈடுபாடுகளில் எனக்கு மகிழ்ச்சி விளைந்தது. சி.மோகனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் பேரரிய தருணம்.
கலை நம்பிக்கை என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
இடையறாத கலை ஈடுபாடும் அதைப் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையும்தான் அது. தஸ்தயேவ்ஸ்கி, காஃப்கா, ஹெர்மன் ஹெஸ்ஸே உள்ளிட்ட பல உலக இலக்கியக் கலைஞர்களைப் பற்றியும் அவர்களது நூல்களைப் பற்றியும் சி.மோகனிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். கலைச் சார்புகொண்ட ஒரு மனநிலை எனக்கு இருந்தாலும், அவரது தோழமைக்குப் பிறகுதான் அதன் மேன்மையை உணர்ந்துகொண்டேன். அவரது இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘குதிரைவீரன் பயணம் – சி. மோகன் சிறப்பிதழ்’ வெளியிட்டோம். அவரது, ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ சிறந்த நாவல். அது உரிய அளவு கவனம் பெறவில்லை. பல நல்ல படைப்புகள் இப்படிக் கவனம் பெறாமலேயே போய்விடுவது வருத்தமளிக்கிறது.
அரசியல், இயக்கம் சார்ந்து நின்று இலக்கியம் படைப்பவர்களைப் பற்றி தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் எதிர்மறைப் பார்வை தொடர்ந்து நிலவுகிறதே?
அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. உதாரணமாக, பண மதிப்பு நீக்கம் தொடர்பான பாதிப்புகளும் ரோஹிங்கியா அகதிகளும் குடும்பத்துடன் அகதியாகக் கடல் வழியே தப்பி வரும்போது படகு கவிழ்ந்து இறந்துபோய் கடற்கரையில் தலைகுப்புறக் கிடந்த சின்னஞ்சிறுவன் அய்லானும் பூட்டப்பட்ட அறைக்குள் சோபாவில் அமர்ந்த நிலையில் இறந்துபோய் மாதக் கணக்கில் யாரும் பார்க்காமல் அதே நிலையில் எலும்புக்கூடான பெண்ணுமெல்லாம் படைப்பின் மையம்தான். அவை அவற்றிற்கான தீவிரத்துடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படவேண்டும் என்பதுதான் முக்கியம். அரசியல் பிரக்ஞையுடன் எழுதும் பல எழுத்தாளர்கள் அருமையான பல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். அழகிய பெரியவன் மற்றும் பலரின் கதைகள் அப்படியானவை. எந்த இயக்கத்தையும் சாராத கூத்தலிங்கத்தின் ‘உயிர் நிலம்’ கதையும் மிக முக்கியமாது. இந்தக் கதையைப் பற்றி கணேசகுமாரன் விகடன் ‘தடம்’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இப்படி எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து போராடுவதும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்குவதும் மிகவும் இன்றியமையாதவை. மிக மிகவும் முக்கியத்துவமுடையவை. பெருமதிப்புக்குரியவை. ஆனால், இவற்றிலெல்லாம் கருத்துச் செலுத்தாமல், எதிலும் கலந்துகொள்ளாமல், அபிப்பிராயங்கள் வெளியிடாமல் ஒருவர் தனித்திருந்து நல்ல படைப்புகளை உருவாக்கினார் என்றால் அதுவும் தவிர்க்கவே முடியாத மக்கள் படைப்புதான். எனவே, இயக்கம் சார்ந்து நின்று இலக்கியம் படைப்பவர்களைப் பற்றிய எதிர்மறைப் பார்வை என்பது மேலோட்டமான அணுகுமுறைதான்.
இங்கே பத்திரிகைகளின் போக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா? குறிப்பாக சிறார் இலக்கியங்கள், அவர்களுக்கான பத்திரிகைகள் என்ற அம்சங்களை முன்வைத்து என்ன சொல்கிறீர்கள்?
மலையாளப் பத்திரிகையான ‘மாத்ருபூமி’ வார இதழைப்போல இங்கே வெகுமக்கள் தளத்தில் ஒரு பத்திரிகை வருவதற்கு இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை. வர்த்தக முயற்சியாகவே அவர்கள் மிகத் தரமான வகையில் அந்தப் பத்திரிகையை வெளியிடுகிறார்கள். அபாரமான வடிவமைப்புடன், கருத்தாழ்ந்த கட்டுரைகளுடன், தீவிர கலை இலக்கியச் சார்புடன் அது பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மிகத்தரமான பத்திரிகை. அது மட்டுமல்ல, ‘சந்திரிகா’, ‘மாத்யமம்’, ‘எழுத்து’, ‘பாஷாபோஷிணி’, ‘பச்சைக்குதிரை’, ‘மலையாள வாரிகா’, ‘கலாகௌமுதி’ போன்ற பல பத்திரிகைகளைச் சொல்லலாம். மலையாள நாளிதழ்களின் ஞாயிறுப் பதிப்புகளிலும் நல்ல கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், உலக இலக்கிய விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்தத் தன்மை இன்னும் தமிழில் பரவலாக அறிமுகமாகவில்லை. தமிழ் இந்து, விகடன் தடம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு, வெகுமக்கள் தளத்திலான சீரிய பத்திரிகை செயல்பாடு இன்னும் நமக்கு எட்டவில்லை. இடைநிலை பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும்தான் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன. இங்கே பெரிய பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். துறை சார்ந்த மிகப் பெரிய கிரியேட்டர்கள் அனேகம் அனேகம்பேர் இருக்கிறார்கள். ஏன் நம்மால் இதுபோன்று பத்திரிகை செய்ய முடியவில்லை. மக்கள் ரசனை, போன்ஸாய் மரமாகவே பல்லாண்டுகளாகக் குறுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிறாருக்கான, எல்லா வகையிலும் மேம்பட்ட ஒரு பத்திரிகையை நம்மால் நடத்த முடியாதா? நல்ல விஷயங்களை நம் குழந்தைகள் ஆனந்தமாகப் படிப்பார்கள். வாசிப்பு என்பது அவர்கள் வாழ்வுக்கான உரமாக அமையும். வாசிப்புதான், அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்ளக்கூடிய மனிதர்களாக அவர்களை உருவாக்கும். நமது போதாமை, நமது செயலின்மை குழந்தைகளின் தலையில் பெரும் பாரமாகக் கிடக்கின்றன. அது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி. அற்புதங்களை அவர்களுக்கு அணுக்கமாக்க நம்மால் முடியவில்லை. தாங்கள் இழப்பது இன்னதென்று தெரியாதவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் நமக்குத் தெரியும். இந்த நேரத்தில் துளிர், மின்மினி, தும்பி, குட்டி ஆகாயம், வண்ணநதி, மாயாபஜார் முதலியவை நம்பிக்கை அளிக்கின்றன.
கேரளம் தன் கலைஞர்களைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மலையாள எழுத்தாளர் அமரர் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்டே இதிகாசம்’ நாவலை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, சாகித்திய அகாடமியின் 2017 – ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது பெற்றிருக்கிறீர்கள். எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அந்த நாவலைப் பற்றி…
பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாவலின் இருபத்து நான்காம் பதிப்பை நான் படித்திருந்தேன். இப்போது வாசிக்கும்போதும் கவித்துவமும், பூடகமும், நவீனமும் சற்றும் வெளிறாத சிறந்த நாவல் அது. காலச்சுவடு கண்ணன், இந்த நூலை மொழிபெயர்த்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டபோது மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். புத்தகம் வெளிவந்த பிறகு மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவக்குமார் அதைப் படித்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்த ‘சோஃபியின் உலகம்’ நாவலுக்காக தமிழ்ப்பேராயம் அவருக்கு விருது கொடுத்திருந்த சமயம் அது. அவர் ஒரு நாள் என்னைத் தொடர்புகொண்டு, சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அண்ணாநகர் டவர் பார்க்கில் சந்தித்தோம். “எனக்குக் கிடைத்த விருதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் மொழிபெயர்த்த ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலை நான் படித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதற்கான என் அன்பின் பரிசாக இந்தப் பத்தாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக எனக்குக் கிடைத்த முதல் பரிசு இதுதான்.
‘புத்தகம் பேசுது’ வாசகர்களின் கவனத்துக்கு வரவேண்டும் என்று நீங்கள் வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான். கேரள அரசின் அங்கமான ‘பால சாகித்ய இன்ஸ்டிட்யூட்’ பல்லாண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மிகவும் நல்ல சிறார் நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் மனங்கவரும் தயாரிப்பு நேர்த்தியுடன் வெளியிட்டு வருகிறார்கள். அதைப்போன்றதொரு சிறார் இலக்கியப் பேரமைப்பை அரசு ஏற்படுத்தவேண்டும். அப்படி ஒன்று உருவானால், சமூக மாற்றத்துக்கான அடிப்படைச் செயல்களில் ஒன்றாக அது அமையும்.
மொழிபெயர்க்கும்போது, பல ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். உதாரணமாக ‘கேட்’, ‘கவுண்ட்டர்’ போன்ற பல வார்த்தைகள். இந்த வார்த்தைகள் வரும் இடங்களில் ‘வளாகக் கதவு’, ‘பணி முகப்பு’ என்று, அடிக்குறிப்புடன் பயன்படுத்தினேன். சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ்ச் சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்டிருக்கின்றன. அன்றாடம் அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்கின்றன. பெருமளவு ஆங்கிலத்தின் வழியாகத்தான் அது உலகில் பரவுகிறது. உலகளாவிய தமிழறிஞர் சபை கூடி ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் சரியான, தீர்மானகரமான ஒரு கலைச்சொல்லை உருவாக்கவேண்டும். அரசு அதை ஏற்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். ஊடகங்களும் அந்த வார்த்தைகளைக் கவனப்படுத்தவேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் ஆங்கிலக் கலப்பின் ஆதிக்கம் அதிகமாவதைத் தவிர்க்க முடியாது. புலம்பெயர்ந்த மலையாளிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மொழி அந்நியமாகிவிடக் கூடாது என்பதற்காக கேரள அரசு ‘மலையாளம் மிஷன்’ எனும் திட்டத்தின்படி, புலம்பெயர்ந்த பிரதேசங்களில் இருக்கும் மலையாளிக் குழந்தைகளுக்கு தாய்மொழி போதித்து வருகிறது. மக்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவுடன் இது வெற்றிகரமாக நடப்பதை நாம் நினைவுகூரவேண்டும்.

Related posts

Leave a Comment