You are here
மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! நிகழ்வு 

மறுசுழற்சி செய்! பயன்படுத்து! வீணாக்காதே! – பொன். தனசேகரன்

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா. ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.  “எனக்கு புதிய போர்வை வேண்டும்” என்றார் சீடர் ஒருவர்.
“உனது பழைய போர்வை என்ன ஆனது” என்று கேட்டார் புத்தர். “அது பழையதாகி நைந்து போய்விட்டது. அதனால் அதனை தற்போது விரிக்கப் பயன்படுத்துகிறேன்.” என்றார் சீடர். புத்தர் மீண்டும் கேட்டார். “உனது பழைய விரிப்பு என்ன ஆனது?”
“விரிப்பு பழையதாகி விட்டதால், நைந்து போய்விட்டது. எனவே, அதை வெட்டி தலையணை உறையாகப் பயன்படுத்தி வருகிறேன்” இது சீடரின் பதில்.  “அப்படியானால் ஏற்கெனவே இருந்த தலையணை உறையை என்ன செய்தாய்?” என்று விடாமல் தொடர்ந்தார்.
“பழைய தலையணை உறையை நீண்டகாலம் பயன்படுத்தியதால் அதில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. எனவே, அதை தரையில் கால்மிதியாகப் பயன்படுத்துகிறேன்” என்று தொடர்ந்து பதிலளித்தார் சீடர். இதிலும் புத்தர் திருப்தி அடைந்து விடவில்லை. தொடர்ந்து கேள்வி எழுப்பினார். “பழைய தரைமிதி இருந்திருக்குமே அதை என்ன செய்தாய் என்று சொல்லு?”  சீடர் கையைக் கட்டிக் கொண்டு பணிவுடன் பதில் சொன்னார்: “பழைய தரைமிதி முழுவதுமாகப் பயன்படுத்த முடியாமல் சேதமாகி விட்டது. தொடர்ந்து பயன்படுத்தியதால் அது நூல் நூலாகி விட்டது. அந்த நூல்களைச் சேர்த்து எடுத்து முறுக்கி விளக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன்” அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, சீடருக்குப் புதிய போர்வையைக் கொடுக்க ஏற்பாடு செய்தார் புத்தர்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது. “மறு சுழற்சி செய்! பயன்படுத்து. வீணாக்காதே!” என்று இது நமக்குப் பாடம் சொல்கிறது. இது அரவிந்த் குப்தா அடிக்கடி சொல்லும் கதை இது. யார் இந்த அரவிந்த் குப்தா? கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அறிவியல் விளையாட்டுப் பொருள்களை கண் முன்னே உருவாக்கி, குழந்தைகளுக்குக் கற்றலை இனிமையாக்கி வருபவர். கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தப் பணியை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகிறார்.
இவரது பெற்றோர் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆனால், இவரால் ஐஐடி படிப்பை எட்டிப் பிடிக்க முடிந்தது. 1970களில் கான்பூர் ஐஐடியில் எலெக்ட்ரிக் என்ஜினீயரிங் படித்து முடித்த அவர், டாடா மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இடையில் ஓராண்டு படிப்பதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மத்திய பிரதேசம் சென்றார்.

அங்கு குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றார். அது அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத்தர எளிய விளையாட்டுப் பொருள்களை உருவாக்க நினைத்தார். கிராமங்களில் உள்ள பல பள்ளிகளில் அறிவியல் சோதனைகளை மாணவர்களுக்குச் செய்து காட்ட அறிவியல் கருவிகள் இருக்காது. சாதாரணமாக உள்ளூர்களிலிருந்து கிடைக்கும் பொருள்களிலிருந்தே சிறிய சோதனைகளைச் செய்து காட்ட முடியும். அதற்குத் தேவை அறிவு. முயற்சி. இந்த இரண்டும் அரவிந்த் குப்தாவிடம் நிறையவே இருக்கின்றன.
பழைய செய்தித்தாள்கள், பாட்டில்கள், சைக்கிள் வால் டியூப், பிளாஸ்டிக் பாட்டில்கள், பென்சில், மேக்னெட், தீக்குச்சிகள், வீணாகப் போன காலணிகள், துடைப்பம், நூல், ரீபில், ஸ்ட்ரா, குண்டூசி, கோந்து…இப்படி கையில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு பல அறிவியல் பொருட்களை குழந்தைகளிடம் செய்து காட்டினார். பழைய பேப்பரைக் கொண்டு மடித்து மடித்து பலவிதமான தொப்பிகள் செய்கிறார். அதையே சிறிய டப்பாவாக மாற்றிக் காட்டுகிறார். சிறிய காகித்தை வைத்துக் கொண்டு மடித்து மடித்து புத்தகமாக்கிக் காட்டுகிறார். பயன்படுத்திவிட்டுப் போட்ட டெட்ரா பேக்கிலிருந்து மணிப் பர்ஸ், சிறிய பேட்டரி, சேப்டி பின், மேக்னெட் ஆகியவற்றை வைத்து பல்பை எரிய வைக்கிறார். கையடக்க மோட்டாரை இயங்க வைக்கிறார்.

ஸ்ட்ராவிலிருந்து ஊதினால் காற்றாடி இயங்குகிறது. பெரிய ஸ்ட்ராவை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக வெட்டுகிறார், அதன் இசை மாறிக் கொண்டே போகிறது. தீக்குச்சியுடன் வால் டியூப்பை இணைத்து அணுக் கோட்பாடுகளை விளக்கக் கருவி, இதேபோல கயிறுகளைப் பயன்படுத்தி ஒன்று, பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்தி மற்றொன்று, பழைய ரப்பர் செருப்பிலிருந்து இன்னொன்று.  இப்படி வேண்டாம் என கீழே போடும் பொருள்களிலிருந்தே பல அறிவியல் விளையாட்டுப் பொருட்களை சில நிமிடங்களில் நமது கண் முன்னே செய்து காட்டுகிறார். நம்மையும் செய்து பார்க்க வைக்கிறார். வீணாகக் கிடக்கும் பொருட்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்த குழந்தைகளின் முகங்களில் மட்டுமல்ல, கடந்த காலக் குழந்தைகளான பெரியவர்கள் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. வீண் என்று நாம் தூக்கி எறியும் பொருள்களிலிருந்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலபடுத்துவதே இவரது முழு நேரப் பணியாகி விட்டது.

அவரது எளிமையையும் பழகும் பண்பையும் பார்க்கும் பள்ளிக் குழந்தைகளால் இவரை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. கிராமத்துப் பள்ளிகளுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவரது எளிய உபகரணங்கள் ஓர் அரிய வரப்பிரசாதம். இவரை நேரடியாக அறியாதவர்கள்கூட, இவரது அறிவியல் விளையாட்டுப் பொருள்களைப் பார்த்தால், அவரது ரசிகர்களாகி சொக்கிப் போய்விடுவார்கள்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒர் அறிவியல் கோட்பாடு இருக்கிறது. விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி விளையாடுவதன் மூலம் அந்தக் குழந்தைகளே அந்த அறிவியல் கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். அதுதான் இவரது விளையாட்டுப் பொருள்களின் பின்னே உள்ள அடிப்படை.
இவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான விளையாட்டுப் பொருள்களுக்கு எந்தக் காப்புரிமையும் கிடையாது. பொது நோக்கங்களுக்காக, மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக யாரும் பயன்படுத்தலாம். இவரது இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டிப் புரிய வைக்கலாம். பின்னர், அவர்களைச் செய்ய வைக்கலாம். எப்படியும் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரவலாகக் கிடைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்குவது குறித்த இவரின் புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. இவரது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துப் பயன்பெறுகிறார்கள். இவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்கள் குறித்த விவரங்கள் அவரது இணைய தளத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளன. தமிழிலும் உள்ளது.

யாரும் விரும்பினால், இவர் வெளியிட்டுள்ளவற்றை மொழிமாற்றம் செய்ய உதவலாம். அந்த வீடியோக்களைப் போட்டுப் பார்த்து நாமே செய்து விடலாம். குழந்தைகளிடம் அறிவியலைப் பிரபலப்படுத்தி வருவதற்காக அவருக்கு 1988ஆம் ஆண்டில் தேசிய விருது கிடைத்தது. 2001ல் ஐஐடியின் சிறந்த முன்னாள் மாணவர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அறிவியலைப் பிரபலப்படுத்தியதற்காக 2008இல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாதெமியின் இந்திராகாந்தி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டு குழந்தைகளிடம் அறிவியலை வளர்க்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் அரவிந்த் குப்தா. தனக்குக் கிடைத்த படிக்கும் வாய்ப்பைச் சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அரவிந்த் குப்தாவின் நோக்கம். அவரது இலக்கு அரசுப் பள்ளி மாணவர்கள்தான் என்பதிலிருந்து அவரது நோக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார் அரவிந்த் குப்தா.பல சரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்தது போல இரு பைகள் அவரிடம். அவ்வளவுதான். அதில் சில டப்பாக்கள். அதில் அவர் உருவாக்கிய பொருள்களின் மாதிரிகள். புதிதாகச் செய்து பார்ப்பதற்கான சில பொருள்கள் அவ்வளவுதான். கொஞ்சம் பேச்சு. மற்றதெல்லாம் செயல்.

அவரது செயல்முறை விளக்கங்களைப் பார்த்து வந்திருந்த ஆசிரியர்களும் செயல்பாட்டாளர்களும் மட்டுமல்ல, அவர்களுடன் வந்திருந்த சின்னக் குழந்தைகளும் சில மணி நேரம் தங்களை மறந்து பயிலரங்கில் முழுமையாக மூழ்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் குப்தாவை அறிமுகப்படுத்திப் பேசிய எழுத்தாளர் ஆயிஷா நடராஜனும், அவரது பேச்சில் லயித்துப் போய்விட்டார். இவரிடம் படித்த பாடம் மறந்து போகாது. இதுவே அவரது வெற்றி.

Related posts

Leave a Comment