You are here
எளிமையும் தியாகமும் மற்றவை 

எளிமையும் தியாகமும் – பாவண்ணன்

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச் சொல்லி, அவ்வரியை எங்கள் மனத்தில் பதியவைக்க ஒரு வகுப்பு நேரம் முழுதும் ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும் தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது.

படிப்பதனால் என்ன பயன் என்னும் கேள்வியை முன்வைத்து ஒருநாள் எங்களோடு உரையாடினார் அவர். “எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப் படிக்கும்போது அந்தச் சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்” என்றார். தொடர்ந்து “நம் மனம் ஒரு பெரிய அணைக்கட்டுபோல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

அப்போதுதான் அவர் ஹென்றி தோரோ என்னும் சிந்தனையாளரைப்பற்றிச் சொன்னார். ஒரே காலகட்டத்தில் இந்த உலகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த தல்ஸ்தோய், காந்தியடிகள், மார்டின் லூதர் கிங் ஆகிய மூன்று மகத்தான ஆளுமைகள் தோரோவின் சிந்தனையால் கவரப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார். மூவருமே வெவ்வேறு விதங்களில் தம் வாழ்வில் தோரோவின் சிந்தனைக்கு செயல்வடிவம் வழங்கியவர்கள் என்றும் சொன்னார். இந்த உரையாடல் வழியாகவே தோரோ என்னும் பெயரை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது எங்கள் ஆசிரியர் எடுத்துரைத்த தோரோவின் வாழ்க்கைச்சித்திரத்தைக் கேட்டு எல்லாருமே உற்சாகம் கொண்டோம்.

அவர் காட்டுக்கு நடுவில் தனக்கென தனியாக ஒரு குடிசை கட்டிக்கொண்டு தனிமையில் வாழ்ந்தவர். காட்டுக்குள் திரிந்தலைவது, குன்றுகளில் ஏறுவது, நடப்பது, படிப்பது, எழுதுவது, தேடிவரும் நண்பர்களுடன் உரையாடுவது என தனக்குப் பிடித்தமான வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். இப்படி எங்கள் தமிழாசிரியர் சொல்லச்சொல்ல ஒரு பெரிய அதிசயக்கதையைக் கேட்பதுபோல நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.

தோரோவைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள நூலகத்தில் எந்தப் புத்தகமும் அந்தக் காலத்தில் கிடைக்கவில்லை. ஆனால் பட்டப்படிப்பை முடித்த பிறகு போட்டித் தேர்வுக்காக நூலகத்தில் அமர்ந்து தயார் செய்துகொண்டிருந்தபோது தற்செயலாக எனக்குக் கிடைத்தது. கம்பராமாயணத்துக்கு உரை எழுதிய தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களுடைய மொழிபெயர்ப்பு. அதை ஒரு புதையல் என்றே சொல்லவேண்டும். ஆங்கிலத்தில் அதை எழுதியிருந்தவர் வில்லியம் காணடா.
12.07.1817 அன்று ஹென்றி தோரோ பிறந்தார். அவருடைய தந்தையார் ஜான் தோரோ ஒரு பென்சில் தொழிற்சாலையை தம் வீட்டிலேயே நடத்தி வந்தார்.

பாஸ்டனில் இருந்த ஒரு பள்ளியில் தோரோ படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கோடைநாளில் பொழுதுபோக்குக்காக அருகிலிருந்த வால்டன் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே நிழல் தரும் பைன் மரக்காடுகளும் பளிங்குபோன்ற ஏரியும் இருந்தன. அந்தக் காட்டின் காட்சி தோரோவின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

காங்கார்டு என்னும் இடத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்தார் தோரோ. தான் பயின்ற துறை சார்ந்த நூல்களைவிட ஜெர்மானிய இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் படிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். இடைவிடாத வாசிப்பின் விளைவாக அவர் எழுத்தாளராக மலர்ந்தார். ஒரு பெரிய சமுதாய மாற்றத்துக்கான அலைகள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வீசத் தொடங்கிவிட்ட காலம் அது.

தொழிலாளர் சமுதாயம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு பெரிய மாறுதலைத் தொடங்கிவைக்கப்\ போகிறது என்னும் நம்பிக்கை எங்கெங்கும் ஆழமாகப் பதிந்திருந்தது. கோல்ட்ரிட்ஜ், வொர்ட்ஸ்வொர்த் போன்றோரின் ரொமாண்டிஸக் கவிதைகள் இன்னும் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. பைரன், கீட்ஸ், ஷெல்லி போன்றோர் இறந்துவிட்ட போதிலும் அவர்களுடைய கவிதைகளும் கருத்துகளும் கல்வியாளர்களிடையே செல்வாக்கோடு இருந்தன.

நாடு விட்டு நாடு கருத்துகள் பரவியபடி இருந்தன. பிரெஞ்சு நாட்டிலிருந்து ஹ்யுகோவுடைய ரொமாண்டிசக் கருத்துகள் மட்டுமில்லாமல் சார்லஸ் ஃப்ஹார்யெர் என்பவருடைய சோசலிசக் கருத்துகளும் பரவத் தொடங்கின. இதன் பயனாக இங்கிலாந்தில் ஃப்ஹார்யெரைப் பின்பற்றுபவர்கள் தோன்றினர். இவர்கள் தன்னிறைவு கொண்ட சமுதாயம், எளிய வாழ்க்கை நடத்தும் மக்களைக் கொண்ட சமுதாயம் என்பவற்றை நிறுவுவதன் மூலம் சோசலிசத்தை உடனடியாகக் கொண்டுவந்துவிட முடியும் என நம்பினார்கள். இதன் பயனாக இங்கிலாந்தின் மனம் விரிவடைந்தது. இந்த மாற்றம் அமெரிக்காவின் அறிவுக்களஞ்சியமான பாஸ்டன் நகரத்தையும் வந்தடைந்தது. அந்தத் தருணத்தில் தோரோ ஹார்வர்டில் மாணவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மிகப்பெரிய சிந்தனையாளரான எமர்சனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார் தோரோ. எமர்சனுடைய ‘இயற்கை’ நூலைப் படித்த பிறகு தோரோவின் மனத்தில் இயற்கையோடு இணைந்து வாழும் எண்ணம் வேர் பிடிக்கத் தொடங்கியது.

படிப்பை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய தோரோ பொருளீட்டும் பொருட்டு ஆசிரியர் பணியை மேற்கொள்ளவேண்டும் என அவருடைய பெற்றோர் விரும்பினர். அந்த வேண்டுகோளை ஏற்று காங்கார்டு கிராமப் பள்ளியில் ஆசிரியர் பணியை ஏற்றார் தோரோ. ஆனால் இரு வாரங்களுக்கும் மேல் அவரால் அங்கு வேலையைத் தொடரமுடியவில்லை. மாணவர்களை அடித்துத் தண்டிப்பதில் தவறில்லை என்ற நிர்வாகத்தின் முடிவோடு அவரால் ஒத்துப் போகமுடியவில்லை. அதனால் அங்கிருந்து விரைவில் வெளியேறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து தன் சகோதரரோடு இணைந்து ஒரு புதிய பள்ளியைத் தொடங்கினார். தோரோ இளங்குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராக இருந்தார். அவரையொத்த இளைஞர்களோடு பொழுதுபோக்குவதைவிட, பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரிந்து பழங்களைச் சேகரிக்கச் செல்வதை விரும்பினார் அவர். அப்படிப்பட்ட தருணங்களில் கிராமக்கலைகள் பற்றியும் இயற்கையைப்பற்றியும் அவர்களிடம் எடுத்துரைப்பதில் அவர் மிகுந்த மனநிறைவடைந்தார். அதையே கல்வியின் பயன் என அவர் நம்பினார். பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது, மரங்களையும் செடிகொடிகளையும் ஆழ்ந்து ஆராய்வது போன்ற விஷயங்களில் பிள்ளைகளிடம் ஆர்வத்தை உருவாக்கினார்.

ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணியையும் அவர் விட்டுவிடும்படியான சூழல் உருவாகியது. ஆற்றங்கரையோரம் நடப்பதிலும் காட்டில் தனித்துத் திரிந்து நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வதிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினார். இவையனைத்தையும் ஒவ்வொரு நாளும் தம் குறிப்பேட்டில் பதிந்துவைக்கவும் அவர் விரும்பினார். இக்கட்டத்தில் எமர்சனுக்கும் அவருக்கும் இடையில் உருவான தொடர்பு ஆழ்ந்த நட்பாக மலர்ந்தது. டயல் என்னும் இதழுக்குக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதும்படி தோரோவைத் தூண்டினார் எமர்சன். தன்னுடைய தேவைக்கான பணத்தை அக்கட்டுரைகள் வழியாக அவரால் ஈட்டிக்கொள்ள முடிந்தது. குறைவான வருமானத்துக்குத் தக்கபடி தம் தேவைகளைக் குறைத்துக்கொண்டு வாழக்கூடிய முறையில் ஓர் இடத்தைத் தேடியடையவேண்டும் என விரும்பினார் தோரோ.

அப்படிப்பட்ட இடத்தில் அமர்ந்து விருப்பப்படி சிந்தனை செய்யவும் இயற்கையைக் கூர்ந்து கவனிக்கவும் எழுதவும் அவர் ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஒரு வீடு அவருக்குக் கிடைக்கவில்லை. தற்செயலாக அத்தருணத்தில் எமர்சன் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அதனால் தன் வீட்டிலேயே தங்கி சுதந்திரமாக எழுதிக்கொண்டிருக்கலாம் என தோரோவுக்கு அழைப்பு விடுத்தார் எமர்சன். உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார் தோரோ. அங்கிருந்த தோட்டத்தையும் கோழிப்பண்ணையையும் பரமாரித்தபடி தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் தன் எழுத்துவேலைகளில் மூழ்கியிருந்தார் தோரோ.

ஏறத்தாழ இரண்டாண்டுக் காலத்தை அங்கு கழித்தார் அவர். கட்டுப்பாடற்ற காட்டு வாழ்க்கையையே அவர் மனம் நாடியது. தமக்கென ஒரு தனிவாழ்வை வகுத்துக்கொண்டு பிறரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கினார். அமைதியும் விருப்பம்போல வாழும் இயல்புடைய ஆசிய மக்களைப்போல தானும் வாழ்வதாகக் கூறிக்கொண்டார். காங்கார்டைச் சுற்றி அலைந்து ஆராய்வதிலும் அதனுடைய இயற்கை வரலாற்றை எழுதுவதிலும் அவர் ஈடுபட்டார். இயற்கை வல்லுநராக இருப்பதே தம் வாழ்வின் இலட்சியம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஒருநாள் தம் நண்பர் ஆல்காட் என்பவரிடம் ஒரு கோடரியைக் கடன் வாங்கிக்கொண்டு வால்டன் ஏரிக்கு அருகில் ஒரு மரவீட்டை அமைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் காட்டுக்குள் சென்றார். தம் மனநிலையைச் சோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன் எங்காவது சென்று சில காலம் தனித்து வாழ விரும்பினார். அவருடைய நோக்கம், மற்றவர்களையெல்லாம் மறந்துவாழ வேண்டும் என்பதல்ல. மாறாக, அங்கே தனித்திருந்தபடி அவர்களைப் புறத்தே இருந்து காணவேண்டும் என்ற எண்ணமே காரணம். ஒருபுறம் சமுதாய சீர்திருத்த விவாதங்கள், மறுபுறம் உலகியல் கடந்த உரையாடல்கள் ஆகியற்றைக் கேட்டுக்கேட்டு அப்பேச்சுகளின் சுவை மங்கிவிட்டது. எனவே, அவர் மெளனமாக தனியே எங்காவது தங்கியிருந்து சிந்தித்து எழுதுவதில் பொழுதைக் கழிக்க விரும்பினார். வாழ்க்கையின் வலிமையை அதன் தனிமையில் அறிய ஆவல் கொண்டார்.

தோரோவின் விருப்பத்தை அறிந்த எமர்சன் அவருக்காக தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு காட்டுப்பகுதியை அளித்தார். அங்குதான் தோரோ தனக்குரிய மரக்குடிலை அமைத்துக்கொண்டார். தற்செயலாக ஒருநாள் அவர் மறதியாக அடுப்புநெருப்பை அணைக்காமல் கவனக்குறைவாக இருந்ததால், ஆற்றை அடுத்துள்ள காட்டுப்பகுதி தீக்கிரையாகிவிட, அக்கம்பக்கத்து காட்டுப்பகுதியினர் அவரை வசைபாடித் தீர்த்தனர்.

தம் குடிசையைச் சுற்றி இரண்டு ஏக்கர் பரப்பில் பீன்ஸ் பண்ணையை அவர் அமைத்து பராமரிக்கத் தொடங்கினார். தமக்குத் தேவையான மாவு, வெல்லம் போன்றவற்றை அவர் விலைக்கு வாங்கிக்கொண்டார். தமக்குத் தேவையான ரொட்டிகளை அவரே தயாரித்துக்கொண்டார். எளிய சிக்கனமான வாழ்க்கையை வாழ்வதற்காக டீ, காப்பி போன்றவற்றை அவர் விட்டுவிட்டார். என்றாவது ஒருநாள் வால்டனில் கிடைக்கும் மீனைத் தவிர மற்ற நாட்களில் புலால் உண்பதையும் விட்டுவிட்டார்.

தனிமையைப்போன்ற உற்ற துணைவன் வேறு யாருமில்லை என்று நினைத்தார் அவர். அவருடைய குடிசையால் கவரப்பட்டு பலர் அவரைக் காண அங்கே வந்து செல்லத் தொடங்கினார்கள். நகரத்திலிருப்பவர்கள் அரைமணி நேர நடையில் அந்தக் குடிசையை நினைத்த நேரத்தில் அடைந்துவிடமுடியும். உரையாடி முடித்த பிறகு திரும்பிச் சென்றுவிடுவார்கள். அவருக்கும் மற்றவர்களைப் பார்க்க வேண்டிய விருப்பமெழும் நேரத்தில் காங்கார்டுக்குச் சென்றுவிடுவார். குளிர்காலத்தின் மாலை நேரங்களில் கணப்புச் சட்டிக்கு அருகில் குழல் வாசித்தபடியும் சிந்தித்தபடியும் பொழுதைப் போக்குவார். ஆயினும் தோரோ அங்கு நீண்டகாலம் வசிக்கவில்லை. அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் இல்லாத காலத்தில் அக்கம்பக்கம் வசித்தவர்கள் அவருடைய குடிசையைச் சூறையாடிவிட்டார்கள்.

குடிசையில் தங்கியிருந்த காலத்தில் ஒருநாள் மாலை தம் காலணியைப் பழுது பார்க்க காங்கார்டு கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தார் தோரோ. அப்போது அவர் செலுத்தவேண்டிய தலைவரியைக் கட்டவில்லை என்று காரணம் சொல்லி, அவரைப் பிடித்து கிராமச்சிறையில் அடைத்துவிட்டார் கிராம ஊழியர். அன்று இரவு முழுதும் அவர் சிறையில் கழிக்க நேர்ந்தது. மறுநாள் காலை உணவுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருக்கும் தகவல் கிடைத்ததும் அவர் குடும்பத்தினர் யாரோ வந்து தொகையைச் செலுத்தி அவரை மீட்டனர்.

இது அவருக்குப் பிடிக்கவே இல்லை. மிகச் சாதாரணமான இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் அசைபோட்டபடி சிந்தனையில் மூழ்கினார் தோரோ. தனிப்பட்ட மனிதன் மீது அரசாங்கம் எத்தகைய அதிகாரம் செலுத்த முடியும் என்பதை அவர் நேரிடையாகவே உணர்ந்துகொண்டார். சமுதாய நலங்களாகிய சாலை போடுதல், கல்விநிலையங்கள் நிறுவதல் போன்றவற்றுக்கு வரி போடப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அடக்குமுறை நீடித்திருக்கவும் அரசாங்கத்தை விரிவாக்கவும் தலைவரி விதிப்பதை அவரும் அவருடைய நண்பர்களும் வெறுத்தனர். இதற்காக மீண்டும்மீண்டும் அவருடைய நண்பர்கள் சிறைசென்று திரும்பினார்கள்.

அங்கு நிலவிய அடிமைமுறைப் பழக்கத்தையும் தோரோ வெறுத்தார். தமது சிந்தனைகளையெல்லாம் தொகுத்து தோரோ ‘சிவில் ஒத்துழையாமை’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். அந்த நூலில் அடிமை வணிகம், படை, போர், அரசாங்கம், அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய பல கருத்துகளை ஒட்டி தன் மறுப்பை தோரோ பதிவு செய்தார். நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளும் அரசாங்கத்துடன் தனிப்பட்ட மனிதன் மனச்சான்றுடன் செய்யும் போராட்டம் இது. எல்லா அரசாங்கங்களும் நேர்மையற்ற முறையிலேயே நடந்துகொள்ளும் நிலையில் தனிப்பட்ட மனிதன் தன் எதிர்ப்பை முன்வைக்க இதைவிட வேறு வழியில்லை என்று அவர் பதிவு செய்தார்.

தொட்டாற்சுருங்கிச் செடி எவ்வாறு மனிதர்களுடைய விரல்கள் பட்டவுடன் உடனே சுருங்கிவிடுகின்றதோ, அதே போல நேர்மையற்ற சட்டங்களைக் கண்டவுடனே தோரோ மனம் மாறுபட்டார். பிறரால் கட்டுப்படுத்தப்பட நான் பிறக்கவில்லை, என் விருப்பம் போலவே நான் மூச்சுவிடுவேன். ஒரு செடி தன் விருப்பம் போல வளரமுடியவில்லையென்றால் வாடி இறந்துவிடுவதைப்போலவே மனிதர்களும் மறைந்துபோவார்கள் என்றார் அவர். 1849 ஆம் ஆண்டில் ‘சிவில் ஒத்துழையாமை’ புத்தகம் ஹார்வர்டில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் வழியாகவே உலகச் சிந்தனையாளர்களின் கவனம் அவர் மீது குவிந்தது.

தோரோ எப்போதும் எளிய வாழ்க்கையையே விரும்பினார். எங்கு சென்றாலும் நடந்துசெல்வதையே அவர் விரும்பினார். ரயில் வழியாக கனடாவுக்கு அவர் செல்லும்போதுகூட ஒரு சிறு மூட்டையாகக் கட்டப்பட்ட சாமான்களோடும் தொப்பியோடும் மட்டுமே சென்றார். சிக்கனமாகப் பயணம் செய்வதற்கு உகந்த வழி நடை மட்டுமே என்னும் கருத்தில் அவர் உறுதியாக இருந்தார். வழியில் கிடைக்கும் உணவை உண்டு பயணத்தைத் தொடர ஒருபோதும் தயங்கவே கூடாது என்று அவர் நினைத்தார்.

அடிமைகள் வைத்திருக்கும் பழக்கத்தை ஒழிப்பதுபற்றிய இயக்கம் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. தென்பகுதித் தோட்டங்களிலிருந்து ஏராளமான அடிமைகள் வடபகுதித் தோட்டங்களை நோக்கி ஓடிவந்தனர். அவர்களை முறையான வழியில் குடியமர்த்தவும் கனடாவுக்கு அனுப்பிவைக்கவும் பலர் உதவி செய்தார்கள். தம் கிராமம் வழியாகச் செல்லும் அத்தகையோருக்கும் தோரோ எல்லா வகையான உதவிகளையும் செய்தார்.

அரசு கொண்டுவந்த அடிமைகள் சட்டத்தை ஒவ்வொரு தருணத்திலும் எதிர்த்தார் தோரோ. ஒருமுறை எங்கிருந்தோ தப்பி வந்து தன் வீட்டில் அடைக்கலமாகிவிட்ட நீக்ரோ ஒருவரை தோரோ காப்பாற்றினார். அவனிடம் பரிவோடு பேசி, உணவளித்து ஓய்வு வழங்கி மன அமைதி பெறும்படி செய்தார். அவர் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த அடிமையை அரசாங்கம் கண்டுபிடித்து மீண்டும் அடிமை வாழ்க்கைக்கே அனுப்பிவைத்தது. இதனை எதிர்த்து பல இடங்களில் கூட்டங்கள் நிகழ்ந்தன.

உணர்ச்சிவேகத்தில் தோரோ ஒரு நிகழ்ச்சியில் ‘மெஸ்சூஸிட்சில் அடிமை வாழ்வு’ என்னும் தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் அது நூல்வடிவம் பெற்றது. இத்தகைய அநீதிகளுக்கு இடம் கொடுக்கும் ஓர் அரசாங்கம், அரசாங்கம் என்னும் பெயருக்கே தகுதியானதல்ல என்றும் தம்மைப் பொறுத்தவரையில் அரசாங்கம் இருப்பதாகவே கருதவில்லை என்றும் கூறினார்.

ஒருமுறை கன்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஜான் ப்ரெளன் என்பவர் அவரிடம் வந்து சேர்ந்தார். கன்ஸாஸ் மாகாணத்துக்கும் மிஸ்லோரி மாகாணத்துக்கும் இடையில் நிகழ்ந்த எல்லைச் சண்டையிலிருந்து உயிர் பிழைப்பதற்காகத் தப்பித்து வந்தவர் அவர். அடிமை வியாபார எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும்பொருட்டே அவர் அந்த ஊரை வந்தடைந்தார். ஆனால் கங்கார்டில் இருந்த பொதுமக்கள் அவரை ஒரு புரட்சியாளர் என நம்பி அவரை வரவேற்கவில்லை. தோரோவைச் சந்தித்த ப்ரெளன் தமக்கு ஆதரவளிக்கும்படி வேண்டினார். ப்ரெளன் ஒரு குறிக்கோள் வீரராகவும் நேர்மையும் நியாயமும் அற்ற ஒரு நிறுவனத்துடன் ஒற்றையாக நின்று போர் புரிபவராகவும் தோரோவுக்குக் காட்சியளித்தார்.

மாகாணங்களில் பரவிய கிளர்ச்சியைக் கண்ட தோரோ நியாயமான சட்ட மறுப்பு இயக்கத்தின் அடையாளமாகவே ப்ரெளனைக் கருதினர். எதிர்பாராத கணமொன்றில் ப்ரெளனை அரசாங்கம் கைது செய்து அழைத்துச் சென்றது. இதனால் மனம் வெகுண்ட தோரோ ‘காப்டன் ப்ரெளனுக்கு ஒரு வேண்டுகோள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். நியாயமற்ற நிறுவனத்துடன் நியாயமுடையவன் போராட வேண்டுமாயின் என்ன முறையில் செயலாற்றவேண்டும் என பலவிதமான கருத்துகளைத் தொகுத்து அக்கட்டுரையில் தெரிவித்தார் தோரோ.

துரதிருஷ்டவசமாக ராஜதுரோகக் குற்றம், கொலைக்குற்றம் என பல குற்றப்பழிகளை ப்ரெளன் மீது சுமத்திய அரசாங்கம் அவருக்கு இரக்கமில்லாமல் தூக்குத்தண்டனை வழங்கியது. அடிமை இயக்கத்தின் கோட்டை என கூறப்பட்ட மெஸ்சூஸிட்ஸில் ப்ரெளனைப்பற்றி ஒரே ஒரு சொல் கூட சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது. அதைக் கண்டு மனம் பொறுக்கமுடியாத தோரோ ஒற்றைக்குரலாக அச்சூழலைக் கண்டு கொதித்தெழுந்தார். தமக்கு நேரக்கூடிய அவமானங்களையோ, ஆபத்துகளையோ பொருட்படுத்தாமல் ப்ரெளன் சார்பாகப் பேசினார். ப்ரெளன் இருந்தால் என்ன பேசியிருப்பாரோ, அதை தோரோ அன்று பேசினார்.

தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரத்தை நிலைநாட்ட பலியானவர் ப்ரெளன் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் தோரோ. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பாக கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தனர். இன்று காலை ப்ரெளன் தூக்கில் இடப்பட்டார். ஒரு சங்கிலியின் இருமுனைகள் இந்த மரணங்கள் என்றும் கூறினார். ‘அடிமைகளை வைத்துக்கொள்ளும் பழக்கத்தை எதிர்த்து விடாப்பிடியாக ப்ரெளன் நிகழ்த்திய போராட்டம் ஒருபோதும் புகழின்றி மாயாது என்றார். சிறிது காலத்துக்குப் பிறகு, எந்தத் தெற்குப்பகுதியை எதிர்த்து தனியாளாக ப்ரெளன் நின்றாரோ, அதைநோக்கி வடபகுதிப்படைகள் வந்து குவிந்தன.

நாற்பதுகளையொட்டிய வயதிலேயே அவரை காசநோய் படாத பாடு படுத்தியது. குளிர்காலம் அவருக்கு சொல்லொணா வேதனை மிக்கதாக இருந்தது. ஒரு நோயாளி மேற்கொள்ளக்கூடாத பயணத்தை மேற்கொண்டு புராதானச் சிவப்பிந்தியர்களையும் விதவிதமான பறவைகளையும் புதிய புதிய தாவரங்களையும் நயாக்ரா நீர்வீழ்ச்சியையும் மிஸிஸிபியையும் கண்டு வந்தார். அவருடைய இறுதி ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கூட அவர் வீணாக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதிக் குவித்தார்.

தலைவரி செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி அவமானப்படுத்தி தோரோவைச் சிறையிலடைத்த கிராமச்சிறைச்சாலைக் காவலாளி அவருடைய இறுதிக்காலத்தில் அவரைச் சந்தித்த காட்சி மிகமுக்கியமானது. அவர் மீது துளியும் வெறுப்பின்றி அன்போடு வரவேற்று உரையாடினார் தோரோ. சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த காவலர் இவ்வளவு மகிழ்ச்சியோடும் அமைதியோடும் இறந்துகொண்டிருக்கும் ஒருவரை தாம் இதுவரையில் கண்டதில்லை என்று கூறிய கூற்று முக்கியமானது. குளிர்காலத்தை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் தோரோ வசந்தகாலத்தின் தொடக்கத்தில் 06.05.1862 அன்று உயிர்நீத்தார்.

மிக இளம்வயதிலேயே என் மனத்தில் பதிந்துவிட்ட மகத்தான ஆளுமை தோரோ. அவரை அயல்நாட்டினர் என்றே என் மனம் கருதவில்லை. நம் நாட்டில் வாழ்ந்த துறவியைப்போலவே அவரை நான் உணர்ந்தேன். எளிய வசதிகளோடு ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ்ந்து தேசத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த காந்தியின் வாழ்க்கையைப் படிக்கும்போதெல்லாம், அவருக்குள் கலந்திருக்கும் தோரோவை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எளிமையும் தியாகமும் தோரோவின் வழிமுறைகள். தன்னையே உருக்கி எண்ணெயாக்கி எரிந்து சுடர்விட்டு மறைந்த தீபம் அவர்.

Related posts

Leave a Comment