You are here
அந்தோன் மகரெங்கோவை மற்றவை 

அறிந்து கொள்வோம் அந்தோன் மகரெங்கோவை – அன்வர்

“நீங்கள் வியப்பூட்டும் மனிதர்” அந்தோன் மகரெங்கோவுக்கு மனம் திறந்து எழுதினார் மக்சீம் கார்க்கி. மகரெங்கோ சிறந்த போதனை இயல் நிபுணர். போர், வறுமை போன்ற இடிபாடுகளுக்கிடையே புதிய சோவியத் ருஷ்யாவை நிர்மாணித்தவர்களில் ஒருவராக விளங்கினார். மிக மிகக் கடினமான காலகட்டத்தில் மனத்தெளிவுடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான அகதிச் சிறுவர் சிறுமியரின் உள்ளங்களில் அவர்கள் இழந்துவிட்ட மனித நம்பிக்கையை மீண்டும் தளிர்க்கச் செய்தார். அவர் அற்புதமான எழுத்தாளர், ‘வாழ்க்கைப் பாதை’ என்ற அனுபவநயம் சொட்டும் கல்விக் காவியத்தை இயற்றியவர். புது மனிதனை உருவாக்கும் முயற்சியின் மாண்பைத் தெளிவாக்கியவர்.
1905-1907ல் நடந்த முதலாவது ருஷ்யப் புரட்சியின் பாதிப்பினால் இளைஞர் மகரெங்கோவின் உலகக் கண்ணோட்டமும், போதனை இயல் கருத்துகளும் மிக விரிவடைந்திருந்தன. தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இந்த இளைஞரை மக்சீம் கார்க்கியின் எழுத்துகள் வெகுவாகப் பாதித்திருந்தன. மார்க்சீயப் பிரபஞ்ச உணர்வுடனும் தெளிந்த போதனை இயல் கண்ணோட்டத்துடனும் வளர்ந்து வந்தார் மகரெங்கோ.
மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சி மக்களின் பண்பாட்டுக்காகப் போராட முன் ஒரு போதும் இல்லாத வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு புதிய சமூகத்தைக் கட்டி நிறுத்தும் பொறுப்பு மிக்க பணிக்கு கல்வி, கலை, இலக்கிய, கலாச்சார நிபுணர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மகரெங்கோ இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தமது வட்டாரத்தில் பொதுக் கல்வி முறையை மாற்றி அமைப்பதில் பெரும் பங்கு வகித்தார்.
நாட்டுக்கு மிகவும் துன்பம் நிறைந்த நாட்கள் தொடங்கின. உள்நாட்டுப் போர் பல குடும்பங்களின் முறையான வாழ்க்கைப் போக்கைக் குலைத்தது. பல ஆயிரம் சிறுவர் சிறுமியர் அகதிகள் ஆகிவிட்டார்கள். குழந்தைகள் நாதியற்றுத் திரிவது பொதுவழக்கு ஆகிவிட்டது. இந்த எதிர்காலத் தலைமுறையைக்
கருத்துடன் காக்கும் பொருட்டு போல்ஷிவிக் கட்சியும் சோவியத் அரசும் தங்களின் மிகச் சிறந்த ஊழியர்களை அனுப்பி வைத்தன.
மக்கள் கல்வித்துறையின் அழைப்பை ஏற்றுச் சென்ற மகரெங்கோ இளம் குற்றவாளிகளுக்கான குடியேற்றம் (கோர்க்கி குடியேற்றம்) ஒன்றை 1920ல் அமைத்தார்.
அந்த நாட்கள் முதல் பதினாறு ஆண்டுக் காலம் கோர்க்கி குடியேற்றத்திலும், செர்லீன்ஸ்கி கம்யூனிலும் போதனைப் பயிற்சி சோதனைகள் நடத்தினார் மகரெங்கோ. போதனை இயல்பற்றி மகரெங்கோவின் கருத்துகள் படைப்புத் தன்மையுடன் மலர்வதற்கு இந்தக் காலம்தான் அடிகோலியது. உலகெங்குமுள்ள பள்ளி ஆசிரியர்கள் இன்றும் மகரெங்கோவின் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள். போதிக்கும் நடைமுறை குறித்த பல உடனடிப் பிரச்சனைகளுக்கு விடைகள் மகரெங்கோவின் சிந்தனைகளில் அவர்களுக்குக் கிடைக்கின்றன. புதிய தலைமுறைக்கு உயிர்கொடுத்து எழுப்புகிற ஆற்றல் அந்த எழுத்துகளில் அடங்கியிருக்கிறது.
குழந்தைகட்குக் கற்றுத் தர வேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். அப்போதுதான் உழைப்புதரும் மகிழ்ச்சி, நட்புணர்ச்சி, மனிதநேயம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு ஆசிரியர் போதிக்க முடியும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். அப்போதுதான் தமது குடும்பத்தை, பள்ளியை, உழைப்பை, அறிவை, தமது தாய்நாட்டை நேசிப்பதற்குக் குழந்தைகட்கு அவர் கற்றுத்தர முடியும். இதுவே மகரெங்கோவின் போதனா நடவடிக்கைகள் அனைத்துக்கும் அடிப்படை ஆயிற்று.
“சிறுவன் வாழவிரும்புகிற, அவன் பெருமிதப்படக்கூடிய சமு தாயம் வெளிப்புறத்தில் அழகு அற்றதாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ்க்கையின் அழகியல் அம்சத்தை அசட்டை செய்துவிடக் கூடாது. உடை, அறை, படிக்கட்டு, கடைசல் இயந்திரம் ஆகியவற்றின் அழகியல், பழகுமுறையின் அழகியலை விட முக்கியத்துவத்தில் சற்றும் குறைந்ததல்ல.’’ என்று அழகியலின் முக்கியத்துவம் பற்றித் தன் துணை போதனாசிரியர்களுக்குச் சொல்கிறார் மகரங்கோ.
குழந்தை அக உலகை அவ்வளவு துல்லியமாக அறிந்தவர் மகரெங்கோவைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது. கட்டுப்பாடு, தண்டனை, ஊக்கம் ஊட்டுதல், சமூக அங்கீகாரம், கலையுணர்வு, உழைப்பு போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். மோசமான பழக்கங்கள் கொண்ட குழந்தைகளையும் மிகக் குறைந்த காலத்தில் சரி செய்து தனது இலக்கை நோக்கி அவரால் கொண்டு செல்ல முடிந்தது.
ஸ்தாபன வடிவில் அமைந்த கூட்டு சமுதாயத்தின் போதனை செல்வாக்கை முதன் முதலில் கண்டவர்களில் ஒருவர் என்பதே அவரது மாபெரும் வெற்றி.
மாணவனின் தனித் தன்மை ஆசிரியரால் மட்டும் இன்றி, குழந்தைகளின் கூட்டு சமுதாயத்தாலும் உருவாக்கப்படுகிறது. இது சிறப்பாக முக்கியமானது என்பதை அவர் கவனித்தார். குழந்தைகளின் கூட்டு சமுதாயத்தைப் பற்றித் தனி அக்கறை காட்டியது போலவே போதனை ஆசிரியர்களின் கூட்டு முயற்சியையும் வலியுறுத்தினார். கூட்டு சமுதாய போதனை பற்றிய வழிகள் தத்துவங்கள் உருவாக்கப்பட்டது மார்க்சிய போதனை இயல், நடைமுறை ஆகியவற்றின் அபார சாதனையாகும்.

விரக்தியுற்றிருந்த, பின் தங்கியிருந்த அநாதைக் குழந்தைகளெல்லாம் இந்தப் புதிய அணுகு முறையால் உற்சாகம் பெற்று தங்கள் ஆளுமையை உணர்ந்தனர். பிற்காலத்தில் சிறந்த தேசபக்தர்களாக உழைப்பாளர்களாகி விளங்கினர்.
மகரெங்கோ நிறுவிய குடியிருப்பின் குழந்தைகளோடு நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்தார் கார்க்கி. அவர் எழுதுகிறார். “இந்தக் குடியிருப்பின் குழந்தைகளுடன் நான் நான்கு ஆண்டு காலமாகக் கடிதத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர்களுடைய இலக்கண அறிவு, வாக்கிய அமைப்பு, சமூக உணர்வு, உலகைப் பற்றிய பிரக்ஞை எல்லாமே வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்கிறேன். இந்தச் சிறிய கலகக்காரர்களும், தெருப் பொறுக்கிகளும், ஊர்சுற்றிகளும், திருடர்களும், இளம் வேசிகளும் கௌரவமான உழைக்கும் மக்களாக வளர்வதை கவனித்து வருகிறேன்.’’
“இவ்வளவு கடுமையாகவும், மோசமாகவும் வாழ்க்கை நடத்திய இந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மறுகல்வி அளித்து, அதிசயிக்கத்தக்க மாற்றம் ஏற்படுத்தியவர் யார்? அந்தோன் மகரெங்கோவே அவர். அவர் ஒரு திறமை மிக்க கல்வியாளர். குடியிருப்பின் குழந்தைகள் அவரை உண்மையிலே நேசிக்கிறார்கள். தாங்கள்தான் அவரை உருவாக்கியவர்கள்போல் ஒரு நெருக்கமான தொனியில் அவரைப் பற்றி பேசுகிறார்கள்.”
மகரெங்கோவின் இந்தப் புது அணுகுமுறை அவரைப் பின்பற்றி பல போதனை இயல் நிபுணர்களும் செயல்படத் துணை புரிந்தது. அப்படி உருவான ஒரு போதனையாளர்தான் வசீலிசுகம்லீனஸ்கி. இவரது ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ நூல் மகரெங்கோவின் ‘வாழ்க்கைப் பாதை’போல் இன்னொரு சுவைமிக்க கல்விக் காவியமாகும். சுகம்லீன்ஸ்கி எழுதுகிறார்.
“தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த மகனின் தாயாருடைய துக்கம் தாங்க முடியாத ஒன்று. இந்தத் துக்கத்தை நமது குழந்தைகள் உணர்ந்து, அனுபவித்துப் பகிர்ந்து கொள்ளட்டும். மன்னித்தற்கரிய பாசிசம் கொண்டுவந்த பேரழிவுகளை எல்லாம் உணர்ந்து பார்க்காத குழந்தை தனது இதயத்தை நல்லியல்பு கொண்டதாக்கிக் கொள்ள முடியாது.”
“எல்லா விஷயங்களும் எழுதப்பட்டுள்ள மிகப் பெரிய புத்தகமே மக்களின் நினைவு ஆகும்.”’ எவ்வளவு அருமையான கூற்று! புதிய தலைமுறையை வளர்த்துச் செல்வதில் அக்கறை காட்டினார்கள். இந்த போதனை ஆசிரியர்கள். மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள சிறந்தவை அனைத்தையும் தமது மாணவர்களிடம் கண்டுபிடிப்பது, அவனது ஒழுக்கப் பண்புகளை உணர்வது, கம்யூனிஸ்டுக் குறிக்கோள்களுக்கு விசுவாசமான நேர்மையான மனிதனாக வளர்ப்பது ஆகியவையே தமது பணியின் நோக்கமாகக் கொண்டனர். இளைய சமூகத்துக்குப் புதிய சக்தியைக் கொடுத்தனர்.
இந்த செயல்முறைக்கு வித்திட்டு வழிகாட்டிய அந்தோன் மகரெங்கோவை இளைய தலைமுறை என்றும் போற்றிக் கொண்டாடும்.
நன்றி: (மணிஓசை, டிசம்பர் – 1985)

Related posts

Leave a Comment