You are here
Uncategorized 

வாய் பேசாதவன் -கவிஞர் புவியரசு

வாய் பேசாதவன்
குவென்டின் ரெயினால்ட்ஸ்
‘ழீ நே செபா’

நள்ளிரவு நேரம். மூடுபனித் திரை.
பக்கத்தில் வரும் ஆளைக் கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது.
அந்த வின்னிபெக் ரயில் நிலைய நடைமேடையில் பதற்றத்துடன் காத்திருக்கிறாள் மிரியல், தன் கணவனது வருகைக்காக.
கம்பளிக் கோட்டுக்குள்ளும், கம்பளிக் குல்லாய்க் குள்ளும் குளிர் ஊடுருவி உடலை உலுக்குகின்றது.
ஒன்பது ஆண்டுக்கால நீண்ட இடைவெளி
போருக்குப் போய்விட்டு உயிரோடு திரும்பிவருகிறானே, அதுவே போதும். ஆபத்தான விமானப் படைப் பிரிவில் பணியாற்றி மீள்வது எவ்வளவு பெரிய கொடுப்பினை.

அதோ ரயிலின் நீண்ட கூவல்.
எஞ்சினின் விளக்கு வெளிச்சம், பனித்திரையை ஊடுருவிக் கசிகிறது.
தடதடத்த பெரிய ஓசை. அவளது நெஞ்சத் துடிப்பு போல. இதோ, வந்துவிட்டது.
ரயில் நீண்ட பெருமூச்சுவிட்டு நின்றது. ஒரு சிலர் மட்டுமே இறங்குவது போலத் தென்பட்டது. ஜார்ஜ் எங்கே? அதோ, அது அவரா?
பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஓடினாள். ஜார்ஜ்தான். பெட்டிகளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து, அவளைத் தழுவிக் கொண்டான். ஒன்பதாண்டுத் தவிப்பு.

திடீரென கணவனின் அலறல் கேட்டு விழித்துக் கொண்டு எழுந்தாள் மிரியஸ். ஜார்ஜ் படுக்கையில் உட்கார்ந்தபடி, தலையை இறுகப் பிடித்தபடி அலறினான்.

மிரியல் அரண்டுபோய், அவனைப் பிடித்து, ‘என்ன, என்ன ஆச்சு?’ என்றாள்.
ஜார்ஜ், ‘டாரிக்னி, டாரிக்னி,’ என்றான்
மிரியல் அவனை உலுக்கினாள்: ‘என்ன சொல்றீங்க? எது என்ன டாரிக்னி?’ என்றாள்.
“அது, அது பிரஞ்சுக் கிராமம். அய்யோ! அந்த நர்ஸ்!” என்று மீண்டும் பதறினான் ஜார்ஜ்.
அவன் நிதானத்திற்கு வர, சற்று நேரம் பிடித்தது. திரு திருவென சுற்று முற்றும் பார்த்த ஜார்ஜுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பது மெல்லப் புலப்பட்டது. அவள் குளிர்ந்த நீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஜார்ஜ், நிமிர்ந்து உட்கார்ந்து சொல்ல ஆரம்பித்தான். அது அவன் கதை. அவள் அறியாத கதை. நடந்த கதை. தனிமனித சாகசக் கதை.
இந்த நிகழ்ச்சிப் பதிவைப் படித்துவிட்டு, இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இத்தகைய சாகச வீரர்களுக்கு, நாடு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இந்தச் சிலரின் தியாகம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஈடு இணையற்றது என்று போற்றினார்.
அந்தப் பதிவுதான், குவென்டின் ரெயினால்ட்ஸ் எழுதிய, ‘the man wouldn’t talk’ என்ற நூல். ஜார்ஜ் இராணுவத்தில் சேர்ந்து, நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வலியச் சென்றவன்தான்.

அவனுக்கு எளிதில் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. அவன் லண்டன் இராணுவ அலுவலகத்திற்குச் சென்றபோது, அவனை விமானப் படைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒருவார காலம் என்ன பிரிவு, என்னவேலை என்று தெரியாமல் ஜார்ஜ் தடுமாறினான். கடைசியாக ஒரு பெரிய அதிகாரி, அவனைத் தன் அறைக்கு அழைத்து அந்தத் திடுக்கிடும் காரியத்தை அவனிடம் சொன்னார்.
பிரான்ஸ் நாட்டு டாரிக்னி என்ற சிற்றூர் ஜெர்மானியர் வசமானபோது, அவர்கள் தேடித் தேடி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.
அது 1934ல். அப்போது அந்த ஊர் இளைஞன் பியேர் ஊரைவிட்டு ஓடிப்போனான். அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியவில்லை.

இப்போது போர் உக்கிரமாக நடக்கும் காலம். அவன் முகச் சாயல் ஜார்ஜின் முகச் சாயல் போல் இருந்ததால், பிரஞ்சு மொழியும் தெரிந்திருந்ததால் இவனை, அவன் இடத்தில் ‘நாட்டுவிட’ விமானப் படை உளவுப் பிரிவு முடிவு செய்திருக்கிறது.
அதற்காக, ஜார்ஜுக்குப் பயிற்சி கொடுக்கப் படும்.
இது தான் அதிகாரி சொன்ன அதிர்ச்சித் தகவல்.
உற்சாகமாகச் சம்மதித்தான் ஜார்ஜ். அது வெளியில் சொல்லக்கூடாத இரகசிய ஏற்பாடு. மனைவிக்கும் கூடத் தெரியக்கூடாது என்பது நிபந்தனை.

இங்கிலாந்தின் ‘ராயல் ஏர்போர்ஸ்’ படையின் உளவுப் பிரிவு அதிகாரி காலனல் பெக்கர்தான் அவனது ஆசிரியர்.
ஆசிரியரா அவர், சர்வாதிகாரி! மிகக் கடுமையானவர். “தம்பி! இது சினிமாவில் நடிப்பதுபோல அல்ல. கொஞ்சம் பிசகிணால் உயிர்போய்விடும். இது மட்டும் அல்ல, நமது உளவுப் பிரிவின் திட்டங்களும் அம்பலமாகி விடும். அதனால், எப்போதும் சாவின் விளிம்பில் இருப்பதுபோல, மிகுந்த எச்சரிக்கையுடன் எப்போதும் செயல்பட வேண்டும்” என்று ஒரு பீடிகை போட்டு விட்டுப் பயிற்சி ஆரம்பித்தார்.
அந்த லண்டன் குளிரில் காலை 6 மணிக்கே எழுந்துவிட வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகள். பேச்சு பிரஞ்சு மட்டும். அது, அந்த டாரிக்னி ஊர் வட்டார வழக்கில்தான் பேச வேண்டும்.
“கையை இப்படி வைத்துக் கொள் வலது கையை சாப்பிடும்போது, கொஞ்சம் நடுக்கம் இருக்க வேண்டும். தடுமாற்றத்தில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் தம்ளரைத் தட்டிவிட வேண்டும். வாயை இப்படிக் கோணலாக வைத்துக் கொள். வலப்பக்கம், கீழுதடு, இப்படி இப்படி… இந்தக் கிராமத்து உடைதான்… உன் அப்பா, அம்மா, இன்னார். மனப்பாடம் செய்து கொள். நீ படித்த பள்ளி. உன் பிறந்த தேதி… உன் விளையாட்டு நண்பர்கள்.. உன் விருப்பமான விளையாட்டு தடுமாறிப் பேசு.. மாட்டிக் கொண்டால், ஒரே வசனம் ‘ழீ நே செபா!’ எனக்குத் தெரியாது என்று பொருள். தெரியும்தானே? அதை இப்படிச் சொல்!”
“இப்படி உட்கார். இப்படி நட…”’
‘திடீரென்று அர்த்தராத்திரியில் அவனை எழுப்பி “யார் நீ? உன் பெயரென்ன?” என்று கேட்பார்கள். ஜார்ஜ் இப்போது டாரிக்னியின் ‘பியேர்’ ஆக மாறிவிட்டதால், அதைத்தான் சொல்ல வேண்டும். அதை இப்படி உச்சரிக்க வேண்டும்‘‘ என்பது இரண்டாம் பாடம்.
“சத்தமில்லாமல், பின்னால் பாய்ந்து, கழுத்தைப் பிடித்து இப்படி – – இப்படி நசுக்கிக் கொல்ல வேண்டும். துப்பாக்கி கூடாது. கத்தி நல்ல மௌன ஆயுதம். அதை இங்கே வைத்திருந்து, இங்கே செருகி, இப்படித் திருகி இப்படிக் கொல்ல வேண்டும்.’ என்பது மூன்றாம் பாடம்.
இரவு பகலாக நடந்தன பாடங்கள். அவன் ஊரை மறந்தான். மனைவியை மறந்தான். பியேர் ஆகிப் போனான். அது ஆகும்வரை அவனது ஆசிரியர் விடவே இல்லை.

கடைசியில் ஒரு நாள் இரவு அவனை நல்ல தூக்கத்தில் எழுப்பிக் கேட்டபோது, அவன் பியேர் ஆக மாறிப் போனது தெரிந்தது.
அப்புறம் அவனை வெளியே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சோதித்தார்கள். பேச்சு, நடைமுறை எல்லாம் கச்சிதமாக அமைந்த பிறகு, ஜார்ஜைக் களத்தில் இறக்கினார்கள்.
களம் அந்த பிரஞ்சு நாட்டு சிற்றூர் டாரிக்னி. அவன் பியேர். அந்த ஊரில் செத்துப் போனவர்களும், ஓடிப் போனவர்களும் போக மிச்சமிருக்கும் சிலரும் அவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களைப் பற்றி ஜார்ஜுக்குத் தெரியும். பியேர் பற்றி அவர்களுக்கும் தெரியும். உடல் மெலிந்த பியேர் எடுத்துச் செல்ல ஒரு கனத்த பை. உடம்பெல்லாம் எஞ்சின் ஆயில் பூசப்பட்டு ஓர் அழுக்குச் சட்டை…
இப்படி வேடம் மாற்றப்பட்டு தயாராக்கப்பட்டான் ஜார்ஜ்.
ஒரு நாள் அவனிடம் சொன்னார் ஆசிரியர். “தம்பி, நாளை இரவு நீ புறப்படத் தயாராக இரு”’ என்று சொல்லி, அவன் செயல்படப் போகும் இடம் பற்றித் துல்லியமாகச் சில விவரங்களை எடுத்துச் சொன்னார். அது நான்காம் பாடம்.

அப்புறம் அவன் களமிறக்கப்பட்டான்.
விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் “குதி!” என்றார் ஆசிரியர்.
அவன் குதித்தான் பாராசூட்டில்.
விழுந்த இடம் புதிதாக உழப்பட்ட ஒரு நிலம்.

அப்புறம், ஆசிரியர் அவன் மூளைக்குள்ளிருந்து பேச ஆரம்பித்தார். நான்காம் பாடத்தை! “நீ நிற்கும் இடம் புதிதாக உழப்பட்ட ஒரு நிலம். உன் பாரா சூட்டை நன்றாகச் சுருட்டிக் கொண்டு, வடக்கே போ?”
போனான்.
“ஒரு வேலி தெரிகிறதா? அங்கே பாராசூட்டைப் புதை. அப்புறம் அதைக் கடந்து 100 அடி போ!”
போனான்.
“அங்கே இரண்டு பண்ணை வீட்டு ஷெட்டுகள் இருக்கும். பெரிய ஷெட்டின் பின்பக்கம் போ.”
போனான்! இருந்தது ஒரு கதவு.
“கதவைத் தள்ளு. உள்ளே பதினைந்து படி ஏணி. அதில் ஏறு.”
ஏறினான்.
“அங்கே ஒரு படுக்கை உள்ளதா? அதில் ஏறிப் படுத்துக் கொள். தூங்கு!”
தூங்கினான்! அப்படியோர் அசதி.
விடியற்காலை 6 மணி. சட்டென விழிப்பு வந்தது. உடலில் ஒரு நடுக்கம்.
இனி என்ன?
ஆசான், மூளைக்குள் விழித்துக் கொண்டு பேசினார்.
“ஒரு விசில் சத்தம் கேட்கும் வரை அப்படியே படுத்திரு! அந்த விசில், ‘‘லா மார்சலீஸ்!’’ என்ற பிரஞ்சு தேசிய கீதம். அது கேட்டதும் எழுந்து கீழே போ. ஒரு தடித்த பெண் மணிதான் விசிலடித்ததும்! அவளைக் கட்டிப் பிடித்துக் கொள். மதாம், திபா! என்று உற்சாகமாகச் சொல்! அவள் உன் நண்பனின் தாய்.”
செய்தான்.
“அட பயலே, எங்கடா போயிருந்தே இத்தனை நாளா! வா, வா! இந்த அடையாளக் கார்டை வச்சுக்க… வா, என் பின்னால..”’ என்றாள் அந்த அம்மா.
அந்த அம்மையார் வீடுதான் அவனுடைய அடைக்கல மையம். அன்றே, கார்கள் பழுது பார்க்கும் ஷெட்டில் வேலை கிடைத்துவிட்டது. உரிமையாளர் லாவெல், வாடா என்று சாதாரணமாகச் சொல்லி அவனைச் சேர்த்துக் கொண்டார்.
அங்கு வேலையே இல்லை. எந்த வாகனமும் பழுது பார்க்க வரவில்லை. ஊர் பிரதான சாலையோரம் இருந்தும் போக்குவரத்தே இல்லை. ஊரும் வெறிச்சோடிக் கிடந்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. கோயில் மணி மெல்ல ஒலித்தது. பயந்து போனது போல, ஜார்ஜ் கோயிலுக்குப் போனான். அங்கே மொத்தம் எட்டுப் பேர்தான் இருந்தார்கள், பாதிரியாரைச் சேர்த்து.
ஊரார் அவன் திரும்பி வந்ததற்குத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். எல்லாம் சிக்கனமாக, இரண்டொரு வார்த்தைகளில்.
ஓர் அசாதாரண மௌனம் அங்கே நிலவியது.
அன்று ஒரே ஒரு ஜீப் வந்தது. ரிப்பேர் ஷெட் முன் நின்றது. அது ராணுவ ஜீப். உரிமையாளர் லாவெல் பவ்வியமாகச் சென்று என்ன உதவி வேண்டும் என்று பவ்வியமாகக் கேட்டார். அதற்கு அந்த ஜீப்பில் வந்த அதிகாரி, ஜார்ஜை சுட்டிக் காட்டி, “யார் அவன்? புதுசா இருக்கே!” என்று அதட்டலுடன் கேட்டான்.
“அய்யா, அவன் இந்த ஊர்க்காரப் பயதான். ஓடிப் போயிட்டு இப்ப திரும்பி வந்திருக்கிறார். பேரு ‘பியேர்’ கொஞ்சம் லூசு” என்று சமாளித்தார்.
அதிகாரி அவனை உற்றுப் பார்த்துவிட்டு நகர்ந்தான். ஜார்ஜ் கீழ் உதட்டில் ஜொள் ஒழுக்கியபடி கிறுக்கன் மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்து, தன் பாத்திரத்தை ஒப்பேற்றினான்.
அந்த ஊரில் உள்ள சிலரில் ஓரிருவர் தன்னைப்போல தலைமறைவு உளவாளிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஜார்ஜுக்குத் தோன்றியது.
அது விரைவில் உண்மையாயிற்று. பலர் மறைமுகமாக அவனுக்கு உதவினார்கள்.
மாதாகோயில் பாதிரியார்கூட, இயேசுவின் சிலுவைக்குப் பின்னால், ஒரு இரகசிய ரேடியோ தொடர்புக் கருவி வைத்திருந்தார்.
ஜார்ஜுக்கு வேலைகள் நிறைய இருந்தன. பகலில் ஒர்க் ஷாப் எடு பிடி. இரவுகளில், வானத்திலிருந்து இறங்கும் தேவர்கள்போல, பாரசூட் வழி வரும் வீரர்களை வரவேற்று, உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது. அப்படி 70 ஆண்களை வான்வழி வரவேற்று வழியனுப்பி வைத்தான் ஜார்ஜ்.
ஒரு நாள் அவனுக்கு ஓர் இரவுப் பணி ஒதுக்கப்பட்டது. இன்னொருவர் வழிகாட்ட 7 மைல் தொலைவிலிருந்த, ஜெர்மனியின் ராணுவக் கிடங்கைத் தகர்ப்பது. அங்கே, விமான எதிர்ப்பு பீரங்கள் பொருத்தப்பட்ட 70 பெரிய டிரக்குகள் இருந்தன. மற்றூம் பெட்ரோல், டீசல் டாங்குகள், எண்ணெய்ப் பீப்பாய்கள், ஏராளமான வெடிகுண்டுகள், ஒரு வட்டவடிவ பாதுகாப்பு அடைப்புக்குள் வைக்கப்பட்டிருந்தன.
அதைத் தான் அவன் தகர்க்க வேண்டும்.
நள்ளிரவில் ஒரு பாலத்தருகே அவன் காத்திருந்தான். மிதி வண்டியில், இருளில் வந்தார் ஒருவர். இவனது அருகில் வந்ததும் ‘ஏறு பின்னால்’ என்றார் கரகரத்த குரலில்.
ஜார்ஜை ஏற்றிக் கொண்டு, வெடி குண்டுகளுடன் சென்றது மதாம் பவோ என்று 60 வயது மூதாட்டி.
அவர்களின் சைக்கிள் வெடி மருந்துக் கிடங்கிற்கு சற்று முன்பே நிறுத்தப்பட்டது. “நீ இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு, வெடிப் பொருள்கள், டைம்பாம் முதலியவை அடங்கிய கனமான பையுடன் இருளில் மறைந்தார் அம்மையார். 15 நிமிடத்தில் காலிப் பையுடன் திரும்பி வந்தார்.
‘உட்கார்!’ என்று ஜார்ஜை ஏற்றிக் கொண்டு அழுத்தினார் அவர். 5 கி.மீ. தூரம் வந்த பிறகு, வெடிச்சத்தம் கேட்டது. சுற்றுப் புறங்களை எல்லாம் கிடுகிடுக்க வைத்து இந்தக் கிடங்கு முழுவதும் நாசமாயிற்று.
டாரிக்னிக்கு அருகே, பாலத்தருகில் இறக்கி விட்டுவிட்டு, சைக்கிளில் இருளில் மறைந்தார் அந்த மூதாட்டி.
சத்தமில்லாமல் வீட்டில்போய்ப் படுத்துக் கொண்டான், ஜார்ஜ்.
மறுநாள் வேட்டை தொடங்கியது. சுற்றுப் பக்கத்து கிராமங்களின் ஆட்களை எல்லாம் லாரிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள் ஜெர்மானியர்கள்.
ஆனால், அந்த மூதாட்டி பிடிபட்டபோது, ‘என்ன, வயிற்றில் கட்டி வைத்திருக்கிறாய்?’ என்று ஜெர்மன் சார்ஜென்ட் கேட்டபோது, அம்மையார் சிரித்துக் கொண்டே பாவாடையைத் தூக்கிக் காட்டி ஒரு பின்னை அழுத்தினார். அடுத்த கணம், அவளும் அந்த நான்கு சார்ஜென்ட்டுகளும் துண்டு துண்டாகச் சிதறிப் போனார்கள்.
ஒட்டு மொத்தமாக அனைவரையும் அள்ளிக் கொண்டு போய் விசாரணை செய்ததில் ஜார்ஜ் நிலைகுலையாமல் இருந்தான்.
‘‘யார் குண்டு வைத்தது?’’ என்ற கேள்விக்கு, ழீ நே செபா! என்ற ஒரே பதில் தான் அவனிடமிருந்து வந்தது. எந்தக் கேள்விக்கும் அதுவே அவன் பதில்.
அப்புறம் தான் சித்ரவதை ஆரம்பமாயிற்று. கொடூரமான முறைகள்… விதவிதமான முறைகள்…
அட, பன்றிப் பயலே, என்னடா உன் பெயர்.
ழீ நே செபா
யார் வெடிவைத்தது நாயே?
ழீ நே செபா
அடிதடியெல்லாம் கிடையாது. அதெல்லாம் சாதாரணக் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்டவை.
இவன் ஸ்பெஷல். லூஸ்மாதிரி நடிக்கிறான். இவனை லேசில விடக்கூடாது என்று, கட்டி வைத்து, நகக் கண்களில் ஊசிகளை ஏற்றினார்கள். ஒவ்வொன்றாக நிதானமாக!
நினைத்தால் உடல் பதறும். விரல்கள் அலறும்.
ஆனால், ஒவ்வொரு சோதனையின்போதும் அவன் ‘பியேர் ஆக இறுகிக் கொண்டிருந்தான்…
அடுத்த சித்ரவதை, அவன் கையை ஒரு கிடுக்கியில் வைத்து ஒரே நசுக்கு.
ஐந்து விரல்களும் உடையும் சத்தம் கேட்டது.
அவன் அலறவில்லை. கை ஏற்கெனவே மரத்துப் போயிருந்தது.
சோதனைகளில் சலித்துப் போன சார்ஜென்ட் ‘அடுத்தது என்ன?’
என்று கேட்டான். அதற்கு இன்னொரு அதிகாரி அடுத்த அறைக்கு அழைத்துப் போ!’’ என்றான்.
அடுத்த அறையில் கிட்டத்தட்ட கடைசிச் சோதனை! ஒரு கெட்டிலில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் வாயை ஓர் இடுக்கியால் பிளந்து, வாயில் கொதிக்கும் நீரை ஊற்றினார்கள்.
ஒரே ஓர் அலறலில் அவன் மயங்கினான். கிடந்தான் பியேர். வாய் வெந்து, குடல் வெந்து மயங்கிக் கிடந்த அவனைத் தூக்கிப் போய் ஓர் அறையில் போட்டுவிட்டார்கள். இரண்டுநாள் அப்படிக் கிடந்த பிறகு கடைசியிலும் கடைசியாக ஓர் அறைக்குத் தூக்கிச் சென்று ஒரு கட்டிலில் குப்புறப் படுக்க வைத்தார்கள்.
அப்புறம்தான் வந்தாள் அழகான நர்ஸ். அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு சார்ஜென்ட் அவன் கால்களைப் பிரித்துக் கட்டி அவனது ஆசன வாயில் சூடாக ஏதோ செலுத்தப்பட்டது. வாசனையில் தெரிந்தது. அது கந்தக அமிலம் கலந்த வெந்நீர்! அவன் பயங்கரமாக அலறினான்.
அவள் சிரித்தபடியே கேட்டாள்: “அந்தப் பாலங்களையெல்லாம் குண்டு வைத்துத் தகர்த்தது நீ தானே? உன்கூட இருந்தது யார்?”
அவன் பதில் அதே தான். ‘ழீ நே செபா!’
உடல் முழுவதும் தகதகவென எரிந்தது.
இயற்கை ஓர் அற்புதத்தைச் செய்கிறது…
தாங்க முடியாத வேதனை வரும்போது மயக்கத்தை உருவாக்கி விடுகிறது. உடல் செய்யும் அற்புத நிவாரணம் அது.
அவன் மயங்கினான். “கிறுக்குப் பிடித்த பன்றிப் பயல்!” என்று திட்டிவிட்டு, அவனைத் தூக்கிக் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார்கள்.
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த அவனை பிரஞ்சு உளவுப் பிரிவினர் தூக்கிச் சென்றார்கள். ஒரு மருத்துவர் சிகிச்சையும் கொடுத்து உயிர் காத்தார். ஆனால் உடல் உள்ளே வெந்துபோயிருந்தது.
கடைசியில் ஒரு நாள் இரவு விடுதலை கிடைத்தது. ஒரு ஹெலிகாப்டர் வந்து அவனைத் தூக்கிச் சென்றது.
அவனுடைய மன உறுதி, வைராக்கியம் கண்டு, இராணுவத் தலைவர்கள் வியந்தார்கள். எப்படியும் காப்பாற்றிவிட பெரிய மருந்து நிபுணர்கள் சிகிச்சை அளித்தார்கள்.
பல நாட்கள் அவன் பேசவே இல்லை.
கடைசியாக அவன் விழிப்பு நிலைக்கு
வந்துவிட்டான் என்று கருதி, “எப்படி இருக்கிறது?”
என்று கேட்டார் டாக்டர்.
அவன் பதில்: ழீ நே செபா!’’
உனக்கும் ‘பே பே! உங்க அப்பனுக்கும் பே, பே!’ என்பது போல ஆயிற்று.
ஜார்ஜ், இன்னும் ‘பியேர்’ ஆகவே இருந்தான்.
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
இனி என்ன செய்வது? அவனைப் பின்னுக்கு எப்படித் திருப்புவது?
கடைசியில், அதே பழைய முறைதான்.
‘பிரஞ்சில் பேசாதே! ஆங்கிலத்தில் மட்டும் பேசு! ஏன் கையை அப்படி ஆட்டுகிறாய்?’ என்று அவனை பழைய ஜார்ஜ் நிலைக்குக் கொண்டுவர பிரிட்டன் விமானப்படையின் உளவுப் பிரிவு படாதபாடு பட்டது.
இதற்கு ஆறுமாதம் பிடித்தது. அப்புறம்தான் அவன் நடந்த கதையைச் சொன்னான், இராணுவ அதிகாரிகளிடம். இப்போது மனைவியிடம் இங்கே.

Related posts

Leave a Comment