You are here
நூல் அறிமுகம் 

பயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு

சி.திருவேட்டை

அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள்
ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ இருபது; ஆனால்குழந்தைத்தனமாக. கராச்சிக்கு சென்று தனது அக்காவை காணும் ஆசை. ஒருமுஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொலை செய்யும் நாட்டில் என் கால்படாதென இறக்கும் வரை உறுதி காத்த தந்தையிடம் அனுமதி பெற்று,பாஸ்போர்ட் விசாவுடன் கராச்சி பயணத்தோடு வாழ்க்கை பயணம் துவங்குகிறது.
பதினான்கு ஆண்டுகள் சிறை, இருபத்தினான்கு குண்டு வெடிப்புவழக்குகள். காவல்துறையின் வித விதமான (சகிக்க முடியாத)சித்திரவதைகள். காட்டிய இடத்தில் கையெழுத்து போடுயென விரல் நகத்தைபிடுங்குவது. மதத்தை சம்மந்தப் படுத்தி ஆபாசமான அர்ச்சனைகள்.இதையெல்லாம் தாண்டி தாய், தந்தை, அக்கா குடும்பத்தையே அழித்துவிடுவோமென மிரட்டுவது. சித்திரவதைகளோடு இது பொய் வழக்கு, நீவெளியே வந்து விடலாமென நம்பிக்கையூட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளவைப்பது. இக்காவல்துறை கனவான்களுக்கு அரசின் பாராட்டு, பரிசுமழை,பதவிஉயர்வுகள்…

அரசியலுக்காக மத வெறி தூண்டப்படும் போதும் பெரும் பகுதி மக்கள்அதற்கு ஆட்படாமல் நேயத்துடன்இணக்கமாகவே வாழ்கிறார்கள். செப் 11, 2001அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல், டிச 13 இந்திய நாடாளுமன்றம் தாக்கப் பட்ட நிகழ்வு இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளென்ற கருதுகோள்கள் சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக ஊன்றப்பட்டன. முன்பிருந்த மன நிலையில் சிறைஅதிகாரிகள், சிறைக் கைதிகள் இன்றில்லை.

அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதெல்லாம் வெடிகுண்டுவழக்கில் கைது செய்யப்பட்டவன் என போலீஸ் சொல்வதை கேட்டுமருத்துவர்கள் சரிவர சிகிச்சை செய்வதில்லை. ஒரு மருத்துவர் இவனைஎவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள், நான் பொய் சான்றிதழ் தருகிறேன்’ என்று கூறுவது சமூகம் மதமயமாவதின் உச்சம்.

பைலட் ஆகவேண்டும் என்ற முயற்சியில் ஓர் ஏழை இளைஞன். அவன்உயர்ந்த லட்சியத்துக்காக ஊரே மதிக்கிறது. சிரமப்பட்டு படித்து தேர்வெழுதவேண்டிய நாளும் வந்தது. அன்று ஊரடங்கு உத்தரவு, தேர்வுக்கான நுழைவுசீட்டு, அடையாள அட்டை எதைக்காட்டினாலும் போலீஸ் பரீட்சைக்கு செல்லஅனுமதிக்கவில்லை. ஏனெனில் அவன் ஒரு முஸ்லிம். அவன் இப்போதுசாந்தினிசவுக், சண்டே மார்க்கெட்டில் சில்லறை சாமான் விற்கிறான். வேலையின்மை, வறுமை,சமூக ஒடுக்குமுறைகள், ஆட்சியாளர் மீது உள்ளகோபம் இவற்றை பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்கள் அப்பாவிகளைஉள்ளிழுத்துக் கொள்கின்றன. அவர்களுக்கு பயிற்சியளித்துபயன்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்திய அரசாங்கமேஇதைச் செய்கிறபோது, அதுவும் எந்த பயிற்சியையும் அளிக்காமல்,தானென்ன செய்கிறோம் என்பதே தெரியாத அப்பாவிகளை பலிகடாவாக்கும்போது.. மனது வலிக்கிறது.

அப்பாவின் மரணம், கை கால் விழுந்த அம்மாவுக்கு காதலி துணை. நீதிக்கான போராட்டத்தில் பதினான்கு ஆண்டுகள் கழிந்து சிறையிலிருந்து விடுதலை. புகழ்பெற்ற மருத்துவர்களின் துணையோடு தன் தாயைகாப்பாற்றுதல். தனக்காக வாதாடிய வக்கீல்கள், ஊடகத்தினர், அரசியல்மற்றும் சமூகவியலாளர்களென மிகப் பெரிய பிரபலங்கள் கலந்து கொண்டுகாதலித்த பெண்ணை கைப் பிடிப்பது நம்பிக்கையளிக்கிறது. தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி தொடர்ந்துபாடுபடுதல் என்பதாக கதை போகிறது. இந்தியாவிலிருந்துபாகிஸ்தானுக்குள் நுழையும் ரயில் பயணகாட்சிகள் அற்புதம். மலைகளும் பள்ளத்தாக்குகளும், பச்சை பசேலென இயற்கை காட்டும் மாயாஜாலம் நீண்டநேரம் நிலைத்திருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே குளம்பொலி சத்தம், துப்பாக்கி முனையை ரயிலை நோக்கி திருப்பியபடி பாதுகாப்புப் படை குதிரைவீரர்களின் அணிவகுப்பு, பாதுகாப்பு கோபுரங்களில் துப்பாக்கியேந்தியவீரர்கள் பயணிகளின் தலைகள் ஜன்னலுக்கு வெளியே என்ன நடக்குமெனதெரியாத அச்சத்தோடு மௌனமாக நகர்ந்து சர்வதேச எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்தது ரயில். வாஜ்பாய் காலத்து சம்சவுதாஎக்ஸ்பிரஸில் பயணிகளோடு பயணியாய் பயணித்த அனுபவம் நம்மைபற்றிக்கொள்கிறது. தேசம் பிரிந்து இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் கராச்சியில் பல தெருக்கள், மஹால்கள், பெரிய கட்டங்கள் இந்துபெயர்களிலேயே இருக்கின்றன என்பது இயல்பாக மக்களிடம் மதவெறியில்லைஎன்பதை தெரிவிக்கிறது.

முலாகட், கசூரி, திகார் சிறைகளின் வெவ்வேறு நடைமுறைகள், பிறர் மதஉணர்வை மதிக்கும் நற்பண்பும், மனிதநேயமும் கொண்ட சிறைக்கைதிகள், ஊழல் சிறை அதிகாரிகள் என எல்லாம் தத்ரூபமாக… சரி.. இவ்வளவுகொடுமைகள் செய்த காவலர்களை கதாநாயகன் பலி வாங்கினானா? எனநீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பலிவாங்கவில்லை. ஏனென்றால் இது கதையல்ல நிஜம். இந்திய அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலில் மக்களின் நிஜவாழ்க்கை. இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்டின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் இந்திய சிறைகளில் விசாரணையின்றி அடைபட்டு கிடக்கும்அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் எனஜனாதிபதியை சந்தித்து பேசிய குழுவில் ஒருவரான மொகம்மது அமீர்கான்என்பாரின் பயங்கர வாதி என புனையப் பட்டேன் என்கிற தன் வரலாற்றுநூலின் பதிவுகள் இவை.

தன்வரலாற்று நூல்கள் தமிழில் ஏராளம். இந்நூல்கள் பெரும்பாலும் எழுதப்படுபவரின் அறிவாற்றல், ஆளுமை, சமூகத்திற்கு அவர் ஆற்றியதொண்டு என பெருமைபேசும். ஆனால் இந்நூல் அப்படியல்ல. தன்னைப் பற்றிபேசுவதை விட தன் வாழ்க்கையில் சந்தித்த சக மனிதர்களைப் பற்றி, அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்களை பற்றி விருப்பு வெறுப்பின்றி உள்ளதுஉள்ளபடியே பேசுகிறது. வெறுப்பு அரசியல் சமூகத்தில் செலுத்தும் தாக்கத்தை அப்பட்டமாக தோலுரிக்கிறது இந்நூல். ஜனநாயகத்தை நேசிக்கும்அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. திரு. அப்பணசாமி மொழிபெயர்த்து எதிர்வெளியீடு பதிப்பகத்தின் மிகச்சிறந்த வரவு.

“இந்திய போலீஸ்படை என்ற ஒரே ஓர் அமைப்புரீதியான பிரிவு புரிந்துள்ள குற்றங்களுக்கு இணையாக நாட்டில் எந்த ஒரு சட்ட விரோத அமைப்பும் குற்றங்கள் புரிந்துள்ளதாக கூற முடியாது.” அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆனந்த் நாராயண்முல்லா அளித்த புகழ்பெற்ற தீர்ப்பின்பொருளை உணர்ந்தறிய அற்புதமான நூல். இதனை வாசிப்பது இன்றையகாலத்தின் தேவை

Related posts

Leave a Comment