You are here
நூல் அறிமுகம் 

நெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை!

தேனிசீருடையான்

உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு நிகழும். உதாரணமாக ஒருவர் அரிசி சாப்பிடலாம்: வேறொரு பகுதியைச் சேர்ந்தவர் கோதுமை சாப்பிடலாம்: ஒருவர் தரையில் மண்வீடு கட்டி வாழ்வார்: காட்டுப் பகுதி மக்கள் பரண் அமைத்து மரத்தின்மேல் குடி இருப்பர். ஒரு பகுதி பெண்கள் சேலை கட்டும்போது இன்னொரு பகுதியில் வாழ்பவர்கள் முண்டு அணிந்து காட்சியளிப்பர். இந்த மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அந்தந்த மக்களின் வாழ்வியலையும் சமூகக் கட்டமைப்பையும் தீர்மானிக்கின்றன.

மருதம் என்பது தமிழ் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிற ஐவகை நிலப் பாகுபாடுகளில் முக்கியமானது. வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் ஆகும். வயல் என்றால் அங்கு நீர்ச் செழுமை இருக்கும். மனிதனின் முதல் தேவையாகிய உணவு அங்குதான் உபரியாய் உற்பத்தி ஆகிறது. அந்த உபரி உற்பத்திவர்க்க வேறுபாடுகளைத் தோற்றுவிக்கிறது. நிலத்தை உடமையாக்கிக் கொண்டவர்கள் அடிமைகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கினர். நில உடமையாளர்களும் உழைப்பைக் கூலிக்கு விற்றவர்களும் என ஒரே நிலத்தில் மனிதக் குழுமம் இரண்டாகப் பிளவுபட்டது. நிலம் வாழ்க்கைத் தேவையைப் போதுமான அளவுக்குப் பூர்த்தி செய்த போதிலும் ஆதிக்க, அடிமை யதார்த்தத்தின் வழியே சமநிலையற்ற சமூகக் கட்டமைப்புத் தோன்றியது. மருத நிலத்தில் நிகழும் இந்த மனித முரண்பாட்டின் படிநிலைகளை மிகச் சிறப்பாக உள்வாங்கி, அந்த வாழ்க்கைக்கு கவிதையாக்கத்தின் வழியே இலக்கிய வடிவம் தந்திருக்கிறார் கவிஞர் மீனாசுந்தர். மண்சுவர் வைத்து வீடு கட்டுவது சுலபமான காரியம் அல்ல. காங்க்ரிட் கட்டிடம் கட்டுவது எளிதாகிப் போன இந்தக் காலத்தில் மண்மதில் எழுப்புவது எப்படி எனப் பலருக்கும் தெரியாது. கிராவல் என்று சொல்லப் படுகிற செவ்வல் மண்ணை நீரூற்றி மிதித்துக் குழைத்து, பொதும வைத்து ஒருவாரம் ஆறவிட்ட பிறகு மீண்டும் அதைக் குழைத்து வீடு கட்டுவார்கள். பொதும வைத்த மண்
பிசுபிசுப்பாகி இறுக்கம் கொடுக்கும். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களே மண்வீடு கட்டும் பொறியாளர்கள். அந்த மக்கள்தான் கூத்துக் கலையை ஜீவதுடிப்புடன் நிகழ்த்தியது போல இந்த மண்சுவர் கட்டுமானப்பணியையும் நிகழ்த்திக் காட்டினார்கள். ஓரடி ஆழத்துக்கு சரளையும் மண்ணும் கலந்த கலவையால் அஸ்திவாரமிட்டு பூமிக்குமேல் படைபடையாய் மண்சுவர் எழுப்புவர். படைபடையாய் என்பதைப் படிப்படியாய் என்றும் சொல்லலாம். படிப்படியாய் என்பதைவிட படைபடையாய் என்பதுதான் துல்லியமான சொல்லாடல் ஆகும். ஒன்றரையடி அகலத்தில் ஒன்றரையடி உயரத்துக்கு மதில் எழுப்பினால் அது ஒரு படை. ஒரு நாளைக்கு ஒருபடை எழுப்பிவிட்டுக் காயப் போட்டு அடுத்தநாள் அடுத்த படை வைப்பார்கள். இன்றைய நிலையில் ராணுவம் எனப் பொருள் தருகிற அந்தச் சொல் சில பத்தாண்டுகளுக்குமுன் வீடு அல்லது கோட்டைச் சுவர் கட்டுவதற்கான அளவீடுகளில் ஒன்றாக இருந்தது. இனிவரும் காலங்களில் நாம் இந்தச் சொல்லைப் பயன்படுத்தப் போவதில்லை. அகராதிச் சொல்லாக மட்டுமே ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் நாட்டுப்புற சொல்களஞ்சியம் உருவாக்குபவர்கள் மீனாசுந்தரின் கவிதையில் இருந்து அதற்கான கருப் பொருளைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

“நான்கு படை வைத்த
மண்சுவர்க் குடிசையில்”
என்பது “குடித்தனம்” என்ற கவிதையின் முதல் வரிகள். பெரும்பாலும் ஏழைகளின் குடிசைகள் நான்கு படைக்குமேல் அதாவது ஆறடிக்குமேல் இருக்காது. ரெம்பவும் ஏழ்மையில் இருப்பவர்கள் மூன்று படைவைத்துக் கட்டுவதே பெரும்பேறு குனிந்து குடிசைக்குள் நுழைகிற பழக்கம் வாழ்வில் மட்டுமில்லாமல் இலக்கியங்களிலும் பதிவாகி இருக்கிறது. கம்பன் அயோத்தி நகர வீதியைக் காட்டுவதுபோல மீனாசுந்தர் மருதநில வீதியைப் படம் பிடிக்கிறார்.
கிளுவை போத்து,
முள்ளு படல்மேல்
வடும்பு வைத்து
நேர்த்தியாய்க் கட்டிய
உயிர்வேலிச் செழிப்பில்
அழகு கொழிக்கும்
மண்குடிசைத் தெருக்கள்!
கற்பனைக் கண்கொண்டு நோக்குவோர்க்கு இயற்கைமணம் மாறாத அந்த மண்குடிசை வீதி புலனாகும்.
மருதத்திணை மக்கள் தாங்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்திய பொருட்கள் இந்தத் தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன. தாழ்வாரம், திண்ணை, ஏர்க்கலப்பை, மண்வெட்டி, பரம்புப் பலகை, கருக்கருவாள், தார்க்குச்சி, தோண்டிக் குச்சி, தடிக் கம்பு, கொட்டுக் கூடை! இவையெல்லாம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த அன்யோன்யமான பொருட்களின் சொல்வடிவங்கள். இப்போது அவை அந்த மக்களை விட்டு ஓடிவிட்டன. வாழ்வியல் தன்மை மாறும் போது சொல்லும் பொருளும் மாறுவது இயல்புதான் என்றாலும் அதனால் இந்த சமுதாயம் அடைந்த தாக்கம் சிதைவதுதான் மனசை அலைக்கழிக்கிறது.
எல்லாவற்றிற்கும்
இயந்திரமே ஆதாரமென
உழுகருவிகள் உருக்குலைய
அருகிப் போய்விட்டன
வீடுகளில் தாழ்வாரங்கள்
தாத்தாக்களும் கூட.
பட்டாசாலைகள் உள்பயன்பாட்டுக்கும் திண்ணைகள் வெளிப் பயன்பாட்டுக்குமாய் இருந்தன. வெளிப்பயன்பாடு என்றால் நடந்துசெல்லும் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்ல, அடுத்தவீட்டு மனிதர்கள் வந்து அமர்ந்து உரையாடிச் செல்ல என்று பொருள். இன்று அன்னிய மனிதர்கள் நம் வீட்டருகே நின்றால் சந்தேகப் பார்வையோடு நோக்குவதுதான் நடக்கிறது. அன்று மனிதம் காத்த திண்ணையும் தாழ்வாரமும் இன்று இல்லாமலே போய்விட்டன. அதைக் கட்டிப் பாதுகாத்து வளர்த்த தாத்தாக்களும்கூட. “சோழநாடு சோறுடைத்து” என்று பழந்தமிழ் இலக்கியம் சரியாகவே பதிவு செய்து வைத்திருக்கிறது. தஞ்சைத் தரணிதான் சோழநாட்டின் மிக முக்கிய நிலப் பகுதி.
1956 வரை அது நிஜமாகிக் கொண்டிருந்தது. காவேரித் தண்ணீர் பிறந்தகத்திலேயே தடுக்கப் பட்டபின் மருதநிலம் பாலைப் பரப்பாய் மாறத் தொடங்கிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மட்டும்தான் காரணமா? இல்லை என்கிறார் கவிஞர்.

குழி, நூறுக்குப் போகா நிலம்
சதுர அடி ஐநூறாம்.
மனைவிற்க அலையும்
மந்திரத் தரகர்கள்!
வேலிக் கணக்கில் பயிரிட்டு
வாழ்ந்தவர் கூட
அநியாய விலைக்கு
அரை பிளாட் வாங்கி
ஆனந்தம் கொள்ள
நெற்களஞ்சியம் போனாலென்ன?
இனி அழைக்கலாம் தஞ்சையைக்
கற்களஞ்சியம்.”
நீரின்மையைப் பயன்படுத்தி மனைவிற்பனைத் தரகர்கள் உள்ளே நுழைந்து ஆட்டம்போடத் தொடங்கிவிட்டனர். ஆசை வார்த்தைகூறி நிலங்களை அபகரிக்கத் தொடங்கினர். பிசுபிசுப்பும் பசபசப்பும் விரவிய வண்டல் பூமி கற்களஞ்சிய’மாய் சுயமிழந்து போனது. இதைத்தான் கவிஞர் ஆழ்ந்த வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். நிலமிருந்தால் போதும். இன்று இல்லாவிட்டாலும் வேறொரு நாளில் வேறு வழிகளில் நீரைத் தேடி தான்ய உற்பத்தி செய்ய முடியும்: காங்க்ரிட் பூமியை என்ன செய்வது? சடங்கு என்பது வாழ்விலிருந்து தோன்றி மனிதனை சந்தோஷப் படுத்துகிற கலை.

உழவுக்குச் செல்லும் நாளில் மேழியை எப்படி அலங்கரிப்பார்கள் எனச் சொல்கிறார் கவிஞர்.
‘வரிச்சிக் கம்பில் தொங்கும்
கலப்பையை அவிழ்த்துக் கட்டி
குங்குமம் சந்தனம்
இட்டு வைப்பார் அப்பா.
தேங்காய்ச் சில் உடைத்துச்
சட்டியில் வதக்கி
வெல்லப் பாகுடன்
பச்சரிசி கிளறி
ஏலக்காய் தூவி
எடுத்து வைப்பாள் அம்மா.
பத்தி வாசனை கமழ
தூவக்கால் நெருப்பில்
சாம்புராணிப் புகை காட்சியளிக்கும்
வெண்பூதக் கோலமாய்.
பிள்ளைகளுக்குக் கலவை அரிசி
பெண்டுகளுக்குப் பூச்சரமென
மேழியை அலங்கரித்து
ஏர்மங்கலம் பாடி
பொன்னேர் பூட்டுவோம்
வயல் தாயை வணங்கி.’
மருதம் செயலிழந்து போனபின் இந்தச் சடங்குகளும் அழிந்து போயின. ஏர்ப்பாட்டுப் பாடும் அந்த ரம்யமான காலம் இனி வருமா என வாசகரை ஏங்கவைக்கிறது இந்தக் கவிதை.
புதுக் கவிதை என்பது வார்த்தைகளை மடக்கிப் போட்டு விதவிதமாய்ச் சொல்லாடுவது என்ற நிலையை மாற்றி அமைத்திருக்கிறார் மீனாசுந்தர். எல்லாக் கவிதைகளும் ஓசைநயத்தோடு ஒலிக்கின்றன. பழமையின் அஸ்திவாரத்தின்மேல் புதுமையை நிர்மாணிப்பது அவரின் கவிதைச் செயல்பாடாய் அமைந்திருக்கிறது.
நான்கு நூல்கள் வழியே ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் அவர் இந்தத் தொகுப்புமூலம் மேலும் ஒருபடி முன்னேறி இருக்கிறார். பழமையை நினைவு கூர்ந்து புதுவாழ்வை வடிவமைக்க இதுபோன்ற இலக்கியப் படைப்புகள் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

Related posts

Leave a Comment