You are here
நேர்காணல் 

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார் தத்துவமயமாக்கப்பட வேண்டும்.

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார்
தத்துவமயமாக்கப்பட வேண்டும்.

நேர்காணல்: பசு கவுதமன்

 

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் (பாரதிபுத்தகாலயம்). நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார்.

சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர்.
தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார்.
அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இனி உரையாடலிலிருந்து….

தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…
என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதை இயக்க, திராவிடர்கழகத்தின் வரலாற்றில் அவருக்கென்று ஓர் இடமுண்டு. அப்பாவும் அம்மாவும் அக்காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம்செய்துகொண்டவர்கள்.. அது போலவே நானும், எனது துணைவியாரும் காதல், சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்தான், அதையும் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் 1982-ல் செய்துவைத்தார். தஞ்சையில் உள்ள பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றிவிட்டு பின்னர் பணியை துறந்து எழுத்துப்பணியிலும், தற்போது கொஞ்சம் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறேன்..

எழுத்துலகில் நுழைந்தது எப்போது?
என் எழுத்து என்பது துவக்க காலத்தில் கவிதையில்தான் ஆரம்பித்தது. அதுவும் நான் கோவையில் தொழில்நுட்பக் கல்வி பயில்கின்றபோதுதான். பின்னர் கவியரங்குகளில் பங்கேற்றேன்… சமூக கோபம், அதன் பிணிகள் அதன் தீர்வுக்கான வழிகளில் பகுத்தறிவின் தேவை, பெரியாரின் கொள்கைகள் தான் என் கவிதைகளில் மையக்கருவாக இருக்கும்.

கவிதைகளோடு அவ்வப்போது சிற்றிதழ்களுக்கும், ‘விடுதலை’க்கும் சில கட்டுரைகளை அனுப்புவேன். ஆனாலும் எனக்குள் ஒரு பெரும் வேட்கை இருந்தது. ஏதாவது கூடுதலாக செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சங்கமித்ரா, இரா.இரத்தினகிரி, சின்னப்பா போன்ற தோழர்கள், ஏற்கெனவே என்னிடத்தில் இருந்த வாசிப்பினை அதிலும் குறிப்பாக பெரியாரை ஆழமாக வாசிக்கச் சொன்னார்கள். அது எனக்கு உந்துதலானது. என் தந்தையிடமிருந்தும் என்னுடைய மாமனாரிடமிருந்தும் அவர்கள் சேகரித்திருந்த குடிஅரசு இதழ்கள், துண்டறிக்கைகள், பிரசுரங்கள், புத்தகங்கள், தரவுகள் என நிறைய கிடைத்தன. அவற்றை வாசித்து பார்த்த பிறகு தான் பொதுவெளியில் பெரியார் பற்றி எதிர்மறையாக உலா வரும் கருத்துகளை எதிர்கொள்ள வேண்டுமெனவும், பதில் சொல்ல வேண்டுமென்ற தேவையினையும் உணர்ந்தேன்.

அவர் ஏன் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே, பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டுமே சித்தரிக்கப்படுகிறார் என்பதும், அதையும் தாண்டி இந்தச்சமூகம் மேம்பட அவர் சொல்லிய கருத்துகள் – இன்றும் ஏன் அவர் தேவைப்படுகிறார் என்பதை தமிழ்சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் மேலும் மேலும் ஆழமாக வாசித்தேன் என்பதைவிட அவரை சுவாசித்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். அப்படி பெரியாரை ஆழமாக வாசித்ததின் வெளிப்பாடுதான் இரு பெருந் தொகுப்புகள்.

‘ஈ.வெ. இராமசாமி என்கின்ற நான்’ தொகுப்பைப் பற்றி……
பெரியாரிய தொகுப்பிற்கு தோழர் ஆனைமுத்து அவர்கள்தான் முன்னோடி. ஆனாலும் பெரியாரிய தொகுப்பில் ஒரு போதாமை இருப்பதை உணர்ந்தேன். அந்த இடைவெளியிலிருந்து ஒரு புதிய கோணத்தில் பெரியாரை தொகுக்க வேண்டும் என எண்ணினேன்.

பெரியார் எவ்வாறு, எங்கு தன்னை முன் நிறுத்திக் கொண்டார் என்பதும் அவர் இச்சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் எப்படி தன்னுடைய ஆளுமையினை செலுத்தியுள்ளார் என்பதையும் தேடினேன்.

ஓர் ஆளுமையின் எழுத்துகள் அல்லது பேச்சுகள் அந்தச்சூழலுக்கு ஏற்ப பொருத்தப்பாட்டோடு எடுத்துகொள்ளப்படவேண்டும். ஆகவே இந்த தொகுப்பினை எழுதும் போது அய்யா தன்னை எப்படி பொதுவெளியில் காட்டிக் கொண்டாரோ அது முதலில் பதிவாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல தரவுகளைத் தேடித்தேடி எந்த தவறும், விடுபடுதலும் இருக்கக்கூடாது என்பதற்காக உழைத்ததின் விளைவு தான் ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்.

இந்தத் தொகுப்பு மற்ற படைப்புகளிலிருந்து ஏன் வேறுபடுகிறது என்றால் யாரும் பெரியாரை, பெரியாராக படிக்கவில்லை… அம்பேத்கரை அம்பேத்கராக யாரும் படிக்கவில்லை. எல்லாரும் அந்த ஆளுமைகளின் பேச்சை, எழுத்தை மேற்கோள்களாகவே பேசினார்கள், எழுதினார்கள் தங்களுடைய தேவைக்கேற்ப. ஆனால், இந்த தொகுப்பு பெரியார் எனும் ஆளுமையின் தன்நிலைப் பதிவாக- மேற்கோள்களாக சொல்லாடல்களாக இல்லாமல் – அவர் பேசியது எழுத்தாக பதிவு செய்தது. மிக முக்கியமாக பொருள் மாறாமல், சாரம் குறையாமல் அப்படியே வாசகர்களுக்கு மறுபதிவு செய்து கொடுத்தேன்.. ஏனென்றால் பெரியார் பெரியாராகப் படிக்கப்பட வேண்டும் என்பதோடு நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார் தத்துவமயமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில். காரணம் அவரின் பல தத்துவங்கள் தேங்கி நிற்கின்றன. அது இன்றைய அரசியல் சூழலில் பரவலாக்கப்பட வேண்டும். அதைத்தான் இந்த தொகுப்பு செய்தது.

பெரியார் எனும் ஆளுமை முழுவதும் படிக்கப்படவில்லை என எப்படி சொல்லுகிறீர்கள்…?
உண்மை. பெரியாரை முழுதும் வாசித்தால் தான் அவரின் உயரம், நீளம், ஆழம், அகலம் என அனைத்தும் தெரிய வரும்.. உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் இயங்கும் பல தமிழ் தேசிய அமைப்புகள் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று விமர்சனம் செய்தார்கள் இன்னும் செய்கின்றார்கள். அதுவா உண்மை. சங்கராச்சாரியார் தமிழ் மொழியை ‘நீச’ மொழி என்றதற்கும்; பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து ‘உருப்பட மாட்டே’ என்று சொல்வதைப்போல – அக்கறையிலிருந்து வரும் கோப வார்த்தையைப் போலத்தான் பெரியார் சொன்னார். ஆனால் மேலோட்ட மாக பெரியாரை போகிறபோக்கில் படித்து விட்டு அரசியல் செய்வதால் வந்த வினை.

அதைப்போலவே சாதிய கொடுமைகள். தீண்டாமை பிரச்சனைகள் குறித்து அவர் எந்தவொரு எதிர் வினையாற்றவும் இல்லை என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரியாக அவரைக் கட்டமைப்பதில் அன்றிலிருந்து இன்று வரைக்கும் முயற்சித்து பலர் பேசுகின்றனர். அது உண்மையா…. இடைநிலை சாதிகளில் உள்ள மக்களிடத்தில் பேசும்போதுதான் அய்யா சொன்னார், “பறையன் பட்டம் போகாதவரை உன் சூத்திரப்பட்டமும் போகாது” என்று சமூகநிலையை தெளிவாக வரையறுத்தார்.

இப்படி பல விசயங்களைச் சொல்லலாம். அப்படி சொன்னவரின் எழுத்துகள், பேச்சுகளை முழுமையாக உள்வாங்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை மேற்கோளில் காட்டுவது- அவர் பதிவிட்ட விசயங்களில் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பலவற்றை விடுவது நாகரீகமல்லவே. அதனை உடைக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்த முயற்சிகளின் பலன் தான் என் தீவிர வாசிப்பு. அதனின் பயனாக வந்ததுதான் இந்தப் படைப்பு.

அதே போல பெரியார் தமிழின் சங்ககாலப் படைப்புகளை படிக்காதவர் என்றும். தொன்மை வாய்ந்த தமிழின் மேன்மை அறியாதவர் என்றும் கலை, இலக்கியப் படைப்புகளை அவர் தொட்டது கூட கிடையாது என்றும் அவரை விமர்சிப்பவர்கள் உண்டு. ..அது உண்மையா என அவரை ஆழமாக படித்தால் தானே புரியும். என் தொகுப்பின் மூலம் அந்த பொய் பிரச்சாரங்களை எல்லாம் உடைத்துள்ளேன்.. அவர் தொடாத இலக்கியம் இல்லை. உதாரணமாக, ராமாயணத்தின் அனைத்துப் பிரதிகளையும் அவர் வாசித்துள்ளார். அப்படி படித்ததால் மட்டுமே அவரால் அதை தர்க்கம் செய்ய முடிந்தது. அதற்கு எதிராக அறிவியல் பூர்வமான எதிர் கருத்துகளை பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதன் விளைவாகத்தான் இராமயாண ஆராய்ச்சி நூலை எழுதினார் பெரியார். அதே போலத்தான் . சிலப்பதிகாரத்தையும் மேலும் பல இலக்கியங்கள் குறித்தும் அவரால் தீர்மானகரமாக பேச முடிந்தது. அடிப்படையில் அவர் ஓர் இலக்கியவாதியும் கூட. அதற்குச் சான்றாக அவரின் பல பதிவுகளைச் சொல்ல முடியும். ஒரு கட்டுரையில் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரண காரியத்தை எத்தனை அழகியலோடு விளக்குகிறார்.. நான் ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன் என்று சொல்லும்போது, நான் ஏன் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டுமல்லவா என்று ஈ.வெ.ராவுக்கு தோன்றியது என்ற தலைப்பில் எழுதுகின்றார். அதைப் படியுங்கள். அப்போது தெரியும் அவர் யாரென்று? பெரியார் இலக்கியம் என்ற ஒன்றையே வரையறுக்கலாம் என்பது என் திடமான முடிவு. பெரியார் எந்த ‘இலக்கியக் கொம்பர்களுக்கும்’ இளைத்தவரல்ல.

பெரியாரின் அறிவியல் பார்வை குறித்து…?
அவர் தான் சொன்ன அனைத்திற்கும் அறிவியல் பார்வை கொண்டே விளக்கமளித்துள்ளார்… தமிழர்களின் பண்பாட்டு விசயங்களில் அவர் பார்வையே இன்னும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றால் மிகையல்ல. குறிப்பாக தீபாவளி குறித்து அவர் பல சூழலில் பேசியுள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்வு நம் பண்பாட்டின் அடையாளமா என்பதை அறிவியலின் துணை கொண்டே விளக்கினார். அது குறித்த விவாதங்கள் இன்றளவிலும் நடைபெறுவதையும், இக்கால தலைமுறையினர் பலர் அதை எவ்வாறு ஏற்று கொண்டு பல மூடபழக்கங்களை புறந்தள்ளுகின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறதே. அது போலவே பெண்கள் கர்ப்பத்தடை குறித்து அவரின் பதிவுகள், அவரின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை ‘இனி வரும் உலகமாக’ வந்து பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாவதை மறுக்கமுடியாதே. ஆக அவர் முன்மொழிந்த பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, தீண்டாமை, பெண்விடுதலை என அனைத்திலும் அறிவியல் பின்னணி நி்ச்சயம் இருக்கும். அப்படி அறிவியல் பூர்வமாக சொன்னதால் தான் உழைப்பை போற்றும் திருவி்ழா என பொங்கல் திருவிழாவை முன்னிறுத்தி அதை தமிழர் திருநாள் என்று ஒரு பண்பாட்டு விழாவாக பரவலாக்க முடிந்தது.

புராணங்களும், இதிகாசங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்பதைக் காட்டிலும் அவை பார்ப்பனீயத்தை கட்டமைக்கிறது என்ற அடிப்படையில்தான் – அவர் அறிவியல் பார்வையோடுதான் அனைத்தையும் எதிர்கொண்டார்.

உங்களுடைய இரண்டாவது தொகுப்புக்கு ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’ என தலைப்பு வைத்தீர்களே ?
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த திரு.சோ.இராமசாமி ஒரு கட்டத்தில் பல தொடர்களை அவர் பத்திரிக்கையில் பெரியாருக்கு எதிராகவும், அவரின் கருத்துகளுக்கு எதிராகவும் எழுதி வந்தார். பெரியாரின் சிலைகளில் எல்லாம் அவரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டன. இதையே அடிப்படையாகக் கொண்டு பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சித்தரிக்கும் போக்கும் இருந்தது. அப்போது உண்மை இதழில் அவர் எழுதிய தலையங்கக் கட்டுரையின் தலைப்புதான் ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’. பெரியார் கலை, இலக்கியம், பண்பாடு என்று சகல தளங்களிலும் பயணித்தவர். அவை அனைத்தும் குறித்து ஆழமான தன் கருத்துகளை நிர்வாணமாக பொதுவெளியில் பதிவு செய்தவர். அவர் முன்னால் வைக்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவர். எந்தக் கேள்விக்கும் அஞ்சி ஒதுங்கிக் கொள்ளவில்லை. ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’. அது எக்காலத்துக்கும் மிகவும் பொருத்தமான அவருடைய கேள்வி. எனவேதான் அதை தொகுப்பின் தலைப்பாக்கினேன்.

அய்ந்து புத்தகங்களாக வெளிவந்துள்ள அந்த படைப்பு இன்று பலரின் வாயை மூடியுள்ளது. என்னுடைய ஏழு ஆண்டுகால உழைப்பின் விளைவு அது. எனவேதான் இன்றைக்கு கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த தொகுப்பு வெறும் பிரச்சார நெடியுடன் இல்லாமல் அவரின் பன்முக அரசியலை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் தமிழ்நாடு முழுமைக்கும் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் கூட இந்த நூல் தொகுப்பை வாங்கியுள்ளார்கள் என்பதே அதன் வெற்றி. ஆக அவரின் கொள்கைகள் மேலும் பரவலாகி வருகின்றன என்பதும், அவரது தேவை உணரப்படுகின்றது என்பதும் புரிகின்றது.

வாசிப்பு தமிழகத்தில் பரவலானது என்றால் அதில் பெரியாருக்கு ஆகப்பெரிய பங்கு உண்டு? அது பற்றி………
வாசிப்பையும், வாசகசாலைகளையும் தமிழகத்தில் பரவலாக்கியதில் பெரியாருக்கு பெரும் பங்கு உண்டு.. இங்கிலாந்து பகுத்தறிவாளர் கழகம் (ENGLAND RATIONALIST LEAGUE) வெளியிட்ட அனைத்து புத்தகங்களின் அச்சு, மற்றும் விற்பனை உரிமையை அவரின் ஐரோப்பா சுற்றுப் பயணத்தின் போது பெற்று ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் பிரைவேட் லிமிட்டெடை நிறுவி குறைந்த விலையில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்.

இன்றும் விற்பனையில் சாதனை புரிந்து வரும் “பெண் ஏன் அடிமையானாள்” எனும் நூல், 1928-1933 வரை அவர் குடிஅரசில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் அது. அந்த நூல்தான் அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு.

பதிப்புத்துறையில் சில வெற்றிகரமான முயற்சிகளை செய்தவர். தமிழகத்தில் முதன் முறையாக ஏன் இந்தியாவில் என்றுகூடச் சொல்லலாம் பொது மக்களிடம் பங்குத்தொகை பெற்று பதிப்பகம் துவங்கியவர் பெரியார்.

பிற மொழிகளில் வந்த நல்ல நூல்களை தமிழ் மக்களுக்குத் தந்தவர் பெரியார். மாவீரன் பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” எனும் பொக்கிசத்தை ஜீவா வழியாக நமக்கு தந்தவர். சமதர்ம அறிக்கையினை வழங்கியவர். அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்க வழியை கொடுத்தவர். ரஸலை, இங்கர்சாலை, ஜீன் மெஸ்லியரை தமிழுக்கு அழைத்து வந்தவர் – இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே போல பல்வேறு புனைபெயர்களில் ஏராளமான கட்டுரைகளை எளிய தமிழில் கொடுத்தவர் அய்யா. தான் படித்து உள்வாங்கியதை எல்லாரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக புத்தகங்களை வெளியிடுவார்.

அவர் ஒரு பிரமிக்கத்தக்க ஆளுமை. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் அவரின் இதழியல் தனித்தன்மை வாய்ந்தது. அவர் எடுத்துக்கொள்ளும் தளங்கள் விளக்குவதற்கு சற்று கடினமானதாக இருக்கும். ஆனால் அதை மிக எளிதாக பதிவு செய்ய கூடியவர். அவரின் பகடி (SATIRE WRITINGS) வகை எழுத்துகள் அலாதியானவை. அப்படி பகடி செய்யும் போது கூட அதில் நாகரீகம் இருக்கும். எது பகை முரண், எது நட்பு முரண் என்பதை பகுப்பாய்ந்து எழுதக்கூடியவர்.

தன் பத்திரிகையில் தோழர் சிங்காரவேலருக்கு தனி இடம் கொடுத்து பல சித்தாந்தக் கட்டுரைகளை நம் மக்களுக்கு கொடுத்தவர். அப்படி அவர் எழுதும் கட்டுரைகளில் பெரியாருக்கு கருத்து முரண்பாடு இருக்குமானால் அடுத்த இதழில் புனைப்பெயரில் அதற்கு மறுப்பு எழுதுவார். அந்த அளவுக்கு நாகரீகம் இருக்கும்… இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்.

உங்களுடைய மற்றுமொரு முக்கிய படைப்பு தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் நினைவுகளும், நிகழ்வுகளும்….அது ஏன்? எதற்காக?
அன்றைய கீழத் தஞ்சை மாவட்டத்தில் , குறிப்பாக இன்றைய நாகை மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளிகளின் போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இணையாகவும், இணைந்தும் பணியாற்றியது பெரியார் உருவாக்கிய திராவிடர் விவசாய தொழிலாளர்கள் சங்கம். அதை அங்கு வழி நடத்தியவர்களில் முன்னோடி தோழர் ஏ. ஜி. கஸ்தூரி ரெங்கன் என்ற முறையில் அவரின் போராட்டங்களை, பங்களிப்பை, அதன் விளைவுகளை பதிவு செய்தேன். அதுனூடே அவரின் போராட்ட நினைவுகளையும் பதிவு செய்யும் போது பல சம்பவங்களை அவர் பதிவிட்டார். அதெல்லாம் சேர்ந்தது தான் அந்த நூல்.

ஆனால் அந்த நூல் எழுதுவதற்கான காரணம் பெரியார் ஒரு தலித் விரோதி என இன்னும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் அல்லவா, அது போலவே வெண்மணி நிகழ்வு பற்றி பெரியார் எதுவுமே பேசவில்லை, பெரியாரியக்கத்தின் பங்களிப்பு என்ன என்றொரு கேள்வி இருக்கின்றதல்லவா அதனுடைய உண்மைத் தன்மை என்ன என்பதற்கான கள ஆய்வாக அந்த பணியினை துவக்கினேன். தோழர் ஏ.ஜி.கே மூலம் அறிந்த பல்வேறு செய்திகளை பதிவாக்கி அதை வெளியிட்டேன்..

தங்களின் அடுத்த படைப்புகள் பற்றி…..
அடுத்ததாக மீண்டும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்’ தொகுப்பினை கொண்டு வரவேண்டும் எனும் வேலையை துவக்கியுள்ளேன். அது சமகாலத்திற்கு தேவைப்படும் மிக முக்கிய பதிவு என கருதுகிறேன்.

அதே போல பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமான உறவு அல்லது சொல்லாடல் எனும் அடிப்படையில் பல அம்சங்களை கொண்ட புரிதலோடு ஒரு தொகுப்பையும் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன்.

வெண்மணி பற்றிய என்னுடைய கள ஆய்வுகள் மூலம் அச்சம்பவம் குறித்து வெளிவராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை பச்சைத் தீ என்ற தலைப்பில் ஆவணப் படுத்தும் இறுதிகட்டப் பணிகளில் இருக்கிறேன்..

பெரியாரை பற்றிய பல பிம்பங்கள் இன்று கட்டமைக்கப்படுகின்றன. அதில் எதிர்மறையான சில குளறுபடிகள் நடக்கின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் அவரின் எழுத்துகளை மீள் வாசிப்பு செய்கிறேன். அப்படி செய்யும் போது இன்றைய சூழலுக்கு தீர்வு நிச்சயம் அவரிடமிருந்தே பெறமுடியும் உதாரணமாக, அவர் ஆரம்பத்திலிருந்தே இந்துக் கடவுள்களான பிள்ளையாரையும், இராமனையும்தான் பிரச்சனைகளின் ஆணி வேராக கருதி எதிர்த்தார். அதனால் மற்ற கடவுள் சின்னங்களை புறந்தள்ளினார் என்பது பொருளல்ல.. மாறாக ராமனும், பிள்ளையாரும் கடவுள் சின்னங்கள் என்பதையும் தாண்டிய குறியீடுகள். இந்த குறியீடுகளால்தான் சனாதன மத வெறியர்கள் சகல அரசியலையும் செய்வார்கள் என்பதைக் கொண்டு தொலை நோக்குப் பார்வையோடு எதிர்த்தார். சமர் புரிந்தார். இப்போது பாருங்கள். பிள்ளையாரையும் இராமரையும் வைத்துதான் மதவெறி காவிக் கூட்டம் அரசியல் செய்கிறது. ஆக இது போல பல தரவுகள் அவரிடமிருந்து கி்டைக்கும். சமூக மேன்மைக்கும், சமூக நீதிக்கும் பயன்படுத்திடலாம்.

இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயம் தனக்கெதிரான ஆளுமைகளனைவரையும் செரித்துக்கொள்ள எத்தனித்துக் கொண்டிருக்கின்றதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் பெரியாரிடத்தில் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்க முடியவில்லை தானே..
இது பெரியாரோடு திராவிட இயக்க அரசியலையும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூக அரசியல் மனோநிலையினையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் என்பது வாக்குகளை மட்டுமே சார்ந்தது இல்லை, அது சித்தாந்தங்களோடு – குறிப்பாக பெரியாரியத்தோடு பின்னப்பட்ட வலை என்ற தெளிவான புரிதலை அவர்கள் பல படிப்பினைகள் மூலமாகக் கற்றுக்கொண்டவர்கள். அவர்களால் நேரடியாக கலந்து பவுத்தத்தைப் போல அல்லது தற்போது அறிஞர் அம்பேத்கருக்கு நிகழ்வதைப்போல தனதாக்கிக் கொள்ள அவ்வளவு ‘சல்லிசாக’ பெரியாருக்குள் புகுந்துவிடமுடியாது. அந்தப் புரிதலோடு இருப்பவர்களின் அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கு மிகச்சரியான, மிகச்சிறந்த ‘கூலிகள்’, ‘அடிமைகள்’ இப்போதுதான் கிடைத்திருக்கின்றார்கள். இது அவர்களுக்கான கடைசி வாய்ப்பு, எனவே அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடமாட்டார்கள். அது வேறு செய்தி. இந்த முன்னுரையோடு உங்கள் கேள்விக்கு வந்துவிடுகின்றேன்.
இது பெரியாரால் – அவருக்கு முன்னால் அயோத்திதாசர் தொடக்கி அய்யங்காளி உள்ளிட்ட பலரால் சன்னம்சன்னமாக பதப்படுத்தப்பட்டு – பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். இங்கே அவரவர்கள் தங்களின் சமூகச் சூழலுக்கேற்ப பெரியாரை பாகம் பிரித்து உள்வாங்கிக்கொண்ட மனோபாவம் உடைய மனிதர்களைக் கொண்ட மண். எப்படியென்றால், கடவுளை வைத்துக்கொண்டு மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் – ஜாதியை ஏற்றுக்கொண்டு தீண்டாமை வேண்டாம் என்பவர்கள் – கடவுளை, மதத்தை, சாதியை எல்லாவற்றையும் ஒத்துக்கொள்வார்கள் ஆனால் பார்ப்பனர்களைப் புறந்தள்ளுபவர்கள் – நாத்திகத் தையும் பகுத்தறிவையும் கலந்து, கடவுளை ஒதுக்கிவிட்டு, “ஏங்க, பார்ப்பான் எங்க போவான், அவனும் இங்கேதானே பொறந்து வளந்து தமிழனாவே” இருக்கிறான் என்று சொல்பவர்கள் – எல்லாவற்றையும் விட்டுவிட்டு இடஒதுக்கீட்டை மட்டும் போதும் என்று கொள்பவர்கள் – எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆண், பெண் சமத்துவம் மட்டும் கூடாது என்பவர்கள் இப்படி பெரியாரை, பெரியாரின் கருத்துருவாக்கத்தினை பகுதிபகுதியாக உள்வாங்கிக்கொண்டவர்கள்தான் மிகமிக அதிகம். பெரியாரின் ஒட்டுமொத்த – சுயமரியாதையோடு கூடிய பகுத்தறிவுத் தத்துவத்தை, சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டவர்கள் குறைவு. ஆனால் எல்லாருக்குள்ளும் பெரியாரின் தாக்கம் கண்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் வினையாற்றிக் கொண்டுதான் இருக்கிறது – இருக்கும்.

இப்படியானவர்களைக் கொண்ட நீட்சிதான் திராவிட இயக்க அரசியல் சூழலும், தமிழ்ச்சமூக வாழ்வியல் சூழலும். இப்படியான தமிழ்நாட்டு வாழ்வியல் சூழலில் உணர்ச்சிமிகுந்த பக்திக்கு உச்சபட்ச இடமுண்டு. ஆனால் அது இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளாது, அதோடு உடன்படாது. எனவேதான் ஜெயலலிதாவால் ‘பீடாதிபதி, ஜகத்குரு’ சங்கராச்சாரியை கைது செய்யமுடிகிறது.. கரசேவைக்குக் கல் அனுப்பிக் கொண்டே அடல்பிகாரி வாஜ்பாயியையும் வீட்டுக்கு அனுப்பிவிடமுடிகிறது. ஜெயலலிதாவின் இந்துத்துவம் என்பது வேறொரு விலாசத்தில் இருக்கிறது.
கலைஞரவர்களால் இராமன் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்கமுடிகிறது. இராமகோபாலனிடம் கீதையின் மறுபக்கத்தைக் கொடுக்க முடிகிறது. வாஜ்பாய் நல்லவர்தான் என்று சொல்லிக்கொண்டே இந்துத்துவ பேரணிகளுக்கு அனுமதி மறுக்க முடிகிறது.

பி.ஜே.பியில் தலித் பிரிவு என்ற அவலநிலையினை ஏற்படுத்திக் கொண்டாலுங் கூட அது உதிரியாகத்தான் இருக்கமுடியுமே தவிர ஒட்டுமொத்த இந்து என்ற ‘வகையறா’வுக்குள் இவர்கள், அவர்களை இணைத்துவிடமாட்டார்கள் என்ற உண்மை புரிதலால், அண்மை எடுத்துக்காட்டாக கேரள கோவில்களில் உறுதியாகிவிட்டது.

சாதிகளாக, உட்பிரிவுகளாகப் பிரிந்து நின்றுகூச்சலிட்டுக் குத்திக் கொண்டாலும், தங்களின் மொழிக்கு – இனத்திற்கு – அது சார்ந்த ஏதோ ஒன்றுக்கு பிரச்சனை என்றால் எல்லாம் கடந்து ஒன்றுகூடிவிட முடிகிறது ஜல்லிக்கட்டு வரை.

இவை எல்லாவற்றையும்விட பொதுவெளியில் – யதார்த்தத்தில், ‘கடைசில உன்னோட ஜாதி புத்திய காமிச்சிட்டில்லே’ என்று ஒருவனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பூணூல் போட்டவனிடம் கேட்கமுடிகிறது. இதுவெல்லாம் முடிகின்றபோதுதான் இங்கே இந்திக்கு ஆதரவாகவோ, வகுப்புரிமைக்கு எதிராகவோ, தமிழ் இனத்திற்கு எதிராகவோ இந்துத்துவா சக்திகளால் இரண்டடி கூட நகரமுடியால் போகிறது. திராவிட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி போட்டுக்கொண்டாலும், அமைச்சர் நாற்காலிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டாலும் இங்கே இவர்கள் மனநிலையில் மாபெரும் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடுவதில்லையே ஏன் ? தமிழ்ச் சமூகம் கடந்தகாலங்களில் மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு பெரியாரால் – திராவிடர் இயக்கத்தால் வடிவமைக் கப்பட்டதன் விளைவு.

இந்த கருத்தாக்கங்கள் திராவிட இயக்கங்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற அரசியல் கட்சிகளால் சமரசத்திற்குட்பட்டு குறுக்கப்பட்டாலுங்கூட பொதுப்புத்தியில் – அதன் மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. எனவேதான் இந்துத்துவ சக்திகளால் பெரியார் நெருங்கமுடியாத நெருப்பாக இருக்கின்றார் இன்றுவரை; ஏன் நாளையுங்கூட அதேநிலைதான்.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குப் போய்விட்டு வந்த தோழர் களப்பிரன் சொன்னார், ‘இந்தியாவில் உள்ள செத்துப்போன, இருக்கிற எல்லா தலைவர்களின் படங்களும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இல்லாத ஒரேஒரு படம் தந்தை பெரியாரின் படம் மட்டும்தான்’ என்று பெருமையுடன் சொன்னார். உண்மைதான், அவர்களால் படமாகக்கூட பெரியாரை பக்கத்தில் வைத்துக் கொள்ளமுடியாது. எனவேதான் இன்றைக்கு கூலி அடிமைகளை நமக்குள்ளேயே உண்டாக்கி பெரியார் என்ற அரணை தகர்த்திட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். நான் முன்னே சொன்னதுபோல பல தளங்களில் கூலிக்கு நல்ல அடிமைகளும் கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் வேலையும் செய்கின்றார்கள். வாங்கிய இரட்டைஇலை கூலி வரைக்கும் வேலையும் செய்வார்கள். இது ஒன்றும் புதிதல்ல, பெரியார் வாழ்ந்த காலத்திலேயே துவக்கப்பட்டதுதான். இன்றைக்கு, வடிவங்கள் மாறி இருக்கின்றன அவ்வளவுதான்.

நெருப்பின் மீது ஈக்களும், கொசுக்களும் மொய்க்க முயல்கின்றன, பாவம். ஆனாலும் பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரி சிந்தனையாளர் களும், செயற்பாட்டாளர்களும் விழிப்புடனிருப்பதுவே விவேகம்.

தங்களின் பெரும்பாலான படைப்புகள் இடது சாரி அமைப்புகள் நடத்திடும் பதிப்பகங்கள் மூலமே வந்துள்ளன. வரவும் இருக்கிறதே..
இன்றைய இந்தியச் சூழலுக்கு பொதுவுடைமை சிந்தனை, பெரியாரிய சிந்தனை, மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகள்தான் இந்த மூன்று சித்தாந்தங்களும் ஒரு புள்ளியில் இணைந்து மதவெறி சக்திகளை எதிர் கொள்ள வேண்டும். புறந்தள்ளி பொதுச் சமூகத்திலிருந்து முற்றிலுமாகத் தூக்கி எறிய வேண்டும்.

பொதுவுடமை கருத்துகளை மறுவாசிப்பு செய்வது போல் பெரியாரை மீள் வாசிப்பு செய்வது காலத்தின் தேவை.. அது அவசியம் என்பதை உணர்ந்ததால் தான் இடதுசாரி இயக்கங்களின் பதிப்பகங்கள் பெரியாரை மீண்டும் புத்துயிர்ப்பூட்டுகின்றன. அதன் வழியே நானும் பயணிக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அதே போல இந்த பெரியாரிய எழுத்தாளனை மதித்து ஒரு நேர்காணலின் மூலமாக பெரியாரை மேலும் பரவலாக்கும் வேலையை செய்தமைக்கும் -படியுங்கள், பெரியாரைப் படியுங்கள் – பெரியாரிடமிருந்தே படியுங்கள்.
நன்றி.

Related posts

Leave a Comment