You are here
Uncategorized 

துறவிநண்டும் கடல்தாமரையும்

திலகம்

கடலின் அடிமட்டத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. பெரிய கடல்மீன் காட்சியகங்களிலோ (Oceanarium), திரைப்படங்களிலோ அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் மிகவும் வியப்படைவீர்கள். கடலின் அடியில் எவ்வளவு அதிசயமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன! பல வகையான கடற்குதிரைகள், நட்சத்திர மீன்கள், கடல் பாசிகள், ஆக்டோபஸ்கள் ஆகியவை அவற்றில் சில.

கடலில், ‘துறவிநண்டு’ எனும் ஒரு வகை நண்டும் இருக்கிறது. இது அரிய வகை நண்டு. ஆயினும் இது பரிதாபத்திற்குரியது. துன்பப்படும் மனிதர்களைப் பார்த்து நாம் இரக்கப்படுவோம்தானே? அவர்களுக்கு நம்மால் முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முயல்வோம், அல்லவா? அந்த வகையில் இந்த நண்டும், தன்னைத் தற்காத்துக்கொள்ளும் திறனற்ற ஓர் அப்பாவி ஜீவன். இந்த நண்டை ஆங்கிலத்தில், ‘ஹெர்மிட் கிராப்’ (Hermit crab) என்று சொல்வார்கள். ‘ஹெர்மிட்’ என்றால், ‘துறவி’ என்று அர்த்தம்.

இந்த நண்டுக்கு, தவ்விச் செல்வதற்கு ஏற்ற வகையில் குறடுபோன்ற கால்கள் உண்டு. இதன் கண்கள் டார்ச் லைட்போன்றவை. ஆனால், இதற்கு மற்ற நண்டுகளுக்கு இருப்பதைப்போல தடித்த மேல் ஓடு கிடையாது. இதன் உடல் மெல்லிய சவ்வால் மூடப்பட்டிருக்கும். ஓடற்று மெல்லிய சவ்வைக் கொண்டிருப்பதால் இதற்கு எதிரிகள் அதிகம். தான் தனியாக வாழ தனக்கென்று ஓடு இல்லாத காரணத்தால், இது தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சங்குகளின் உள்ளே புகுந்துகொண்டு வாழும். எனவேதான் இது துறவிநண்டு என்று அழைக்கப்படுகிறது. இதுதான் நம் கதையின் நாயகன்.

ஒரு நாள் கடலடியில், கடற்குதிரைகள் இரண்டு உலவிக்கொண்டிருந்தன. அவை, துறவிநண்டைப் பார்த்துப் பேசிக்கொண்டன:
“இங்கே பாரு, நண்பா, இந்தப் பையன் புதுசா இருக்கானே. இதுக்கு முன்னால இவன நான் இங்கே பாத்தது இல்லயே. யார் இவன்?”
“அட, ஆமாம். இந்தப் பையன் வித்தியாசமா இருக்கானே! தூரத்துக் கடல்லேர்ந்து வந்துருப்பானோ? பாத்தா நாலு எழுத்துப் படிச்சவன் மாதிரி இருக்கான். ஆனா, நம்மைப் பாத்து வணக்கம்கூடச் சொல்லத் தெரியலையே! இவன் நண்டு மாதிரியும் இல்ல, இறால் மாதிரியும் இல்ல. காலம் கெட்டுப்போச்சி! என்னென்னமோ நடக்குது.”
“ஆமாம், நண்பா. நம்ம காலம் மாதிரியா இப்ப இருக்கு? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், மத்த கடல் பிராணிகள் எல்லாம் இவன சுலபமா கடிச்சித் தின்னுடும்!”
“கடல் பள்ளிக்கூடம் விடுற நேரமாச்சி! என் பேரப் பிள்ளைய அழைச்சிக்கிட்டு வரணும்…” என்று பேசியபடியே அங்கிருந்து அகன்றன கடற்குதிரைகள்.
அப்போதுதான் நம் துறவிநண்டுக்கு கஷ்டகாலம் தொடங்கியது. ஒரு பயங்கரமான கடற்பாம்பு துறவிநண்டை நோக்கிப் பாய்ந்து வந்தது. அதன் பற்கள் கூர்மையாக ரம்பம்போன்றிருந்தன. அது, துறவி நண்டை அப்படியே விழுங்குவதற்காக வாயைப் பிளந்துகொண்டு விரைந்து வந்தது.
அதற்குள் துறவிநண்டு, மின்னல் வேகத்தில் தாவிக் குதித்து ஓடித் தப்பிவிட்டது. ஏமாந்த பாம்பு, ‘அட, அதுக்குள்ள எங்கடா போனான் இவன்? இப்ப இங்கத்தானடா இருந்தான்!’ என்று வளைந்து நெளிந்து அங்கும் இங்கும் தேடியது. ஆனால், துறவிநண்டு ஒளிந்துகொள்வதற்கு, அதிர்ஷ்டவசமாக ஒரு பாறை இடுக்கு கிடைத்துவிட்டது. தேடித் தேடி சலிப்படைந்த பாம்பு, “பய ஜஸ்ட்டு மிஸ்ஸுடா!” என்று முனகிக்கொண்டே திரும்பிச் சென்றது.
பயந்து நடுங்கி, அந்தப் பாறை இடுக்கிலேயே பதுங்கிக் கிடந்தது துறவிநண்டு. “அந்தப் பாம்பு நம்மை வடை திங்கிற மாதிரி ஒரே வாயில முழுங்கியிருக்குமே! நல்ல வேளை, தப்பிச்சோம்!” என்று பெருமூச்சுவிட்டது.
நேரம் ஆகஆக அதற்குப் பசியெடுத்தது. சற்று நேரத்துக்குள், தாங்க முடியாத அளவுக்கு பசி அதிகரித்தது. ‘இப்ப என்ன செய்றது? வெளிய தல காட்டுனா யாராவது புடிச்சுக்குவாங்களே! ஆனா, வயித்துப் பசி தாங்க முடியலியே. சரி, வெளியே போய், திங்கறதுக்கு எதுனா கிடைக்குதா பாக்கலாம்’என்று நினைத்த துறவிநண்டு, அக்கம்பக்கம் பாத்து மெல்ல மெல்ல வெளியே வந்தது. அருகிலேயே ஒரு பாசிப் புதருக்குள் சிறிய மீன் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. மிகவும் கவனமாகப் பதுங்கிச் சென்ற துறவிநண்டு, அந்தச் சிறிய மீனை ‘லபக்’ கென்று பிடித்து விழுங்கிவிட்டது.

பசி போனாலும் அந்தத் துறவி நண்டுக்கு பயம் போகவில்லை. ‘என்னோட நெலம இப்டி ஆயிடுச்சே! எப்போதும் பயந்து பயந்து வாழவேண்டியிருக்கே! இந்தக் கடல்ல எப்டி உயிர் பிழைச்சி வாழப்போறேன்னு தெரியலையே’ என்று வருந்திப் புலம்பியது.
அப்போது, அது ஒரு கடற்சிப்பியைப் பார்த்தது. மிகவும் அழகாக இருந்தது அந்தச் சிப்பி. அது தன் மஞ்சள் நிற ஓடுகளை மெதுவாகத் திறந்து மூடியபடி நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் ஓடுகள் மிகவும் கடினமாகவும் வரிவரியான அமைப்புடனும் இருந்தன. சிப்பியின் அழகு துறவி நண்டைக் கவர்ந்தது. திடீரென்று அதற்கு, ‘இந்தச் சிப்பியை என் வீடாக மாற்றிக்கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் எழுந்தது. ‘இந்தக் கடல் சிப்பி பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. அதோட ஓடும் உறுதியா இருக்கு. அந்தச் சிப்பிக்குள்ள நாம பூந்துக்கிட்டா யார் கண்ணுலேயும் படாம பாதுகாப்பா இருக்கலாமே!’ என்று நினைத்தது.

உடனே துறவிநண்டு, சிப்பியை நோக்கித் தாவிச் சென்றது. அப்போது, பக்கத்திலேயே ஒரு கடல்சங்கு கிடப்பதைப் பார்த்தது. அந்த நொடியே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டது: ‘அட, அந்தச் சிப்பியைவிட இந்தச் சங்கு நல்லாருக்கே! சங்கோட மேல் ஓடும் நல்ல உறுதியா இருக்கு. நாம நுழையிற அளவுக்கு வாய்ப் பகுதியும் பெரிசா இருக்கு! இதையே நம்ம வீடா வச்சிக்கிட்டா ரொம்ப அருமையா இருக்குமே!’ என்று நினைத்தது.
தனக்கு ஒரு பாதுகாப்பான வீடு கிடைத்ததில் துறவிநண்டுக்கு மகிழ்ச்சி. உடனே அது அந்தச் சங்கின் உள்ளே நுழைந்துகொண்டது. பிறகு, “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!?” என்று உரத்த குரலில் பாட்டுப் பாடியது. தன் பாட்டைக் கேட்டு எதிரிகள் யாரும் வந்துவிடப்போகிறார்களோ என்று நினைத்துப் பயந்து, பாட்டை சட்டென்று நிறுத்திக்கொண்டது.

முன்பெல்லாம் துறவிநண்டுக்கு, ‘இங்க்ஃபிஷ்’ (Inkfish) எனும் சிறிய ஜெல்லிமீன் தொல்லை கொடுத்துவந்தது. அதன் தூரிகைபோன்ற (Paint brush) மூக்கையும் கொழகொழப்பான உடலையும் அச்சுறுத்தும் கண்களையும் பார்த்து துறவிநண்டு கதிகலங்கிப்போய்விடும். ஆனால், அதெல்லாம் பழைய கதை. இப்போதுதான் துறவிநண்டு, கடல்சங்கு எனும் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டதே!
‘கடல்தாமரை’ எனும் உயிரினமும் கடலில் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் ‘அனிமோன்’ (Anemone) என்பார்கள். இது மிகவும் அழகாக இருக்கும். அதன் உடலே ஒரு அழகான பூச்செடிபோன்றிருக்கும். அந்தக் கடல்தாமரை நல்ல மனம்கொண்டது. அது கடலில் தனியாக வாழ்ந்து சலிப்புற்றிருந்தது. எனவே அது துறவிநண்டுடன் நட்புக்கொள்ள நினைத்தது. அது மிகவும் கனிவுடன் துறவிநண்டிடம் பேசியது:
“வணக்கம், நண்பா, என் பெயர் கடல்தாமரை. உன் பெயர் என்ன?”
“வணக்கம். என் பெயர் துறவிநண்டு.”
“நாம் நண்பர்களாக இருக்கலாமா?”
துறவிநண்டு “ஹி… ஹி… ஹி…” என்று சிரித்தபடிச் சொன்னது:
“ஆமாம்! கட்டாயம் நாம் நண்பர்களாகிவிட வேண்டியதுதான்! நல்லவர்கள் எல்லாம் பிறருடன் நட்புக்கொள்ள விரும்புவார்கள் என்று நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.”
துறவிநண்டும் கடல்தாமரையும் நண்பர்களாயின. கடல் நீருக்குள் கடல்தாமரையின் இதழ்கள் ஆடி அசைவது, பார்ப்பதற்குப் பேரழகாக இருந்தது. துறவிநண்டுக்காக கடல்தாமரை, சில குட்டிக்கரணங்கள் போட்டுக் காட்டியது. அதையெல்லாம் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழ்ந்தது துறவிநண்டு. “சபாஷ்! பலே! அப்படிப் போடு!” என்றெல்லாம் கூவி கடல்தாமரையை உற்சாகப்படுத்தியது.
துறவிநண்டும் கடல்தாமரையும் ஒன்றின் மீது ஒன்று மிகவும் அன்பு செலுத்தின. உதவிசெய்துகொண்டன. மிகவும் நெருங்கிப் பழகின. மிகவும் நெருங்கிப் பழகியவர்களை நாம் எப்போதுமே பிரிய விரும்பமாட்டோம் அல்லவா! அதுபோலத்தான் துறவிநண்டும் கடல்தாமரையும் இணைபிரியாமல் ஒன்றாக வாழ விரும்பின.

கடல்சங்குக்கு உள்ளே துறவிநண்டும் சங்கின் மேல் ஓட்டைப் பற்றிப் பிடித்தபடி கடல்தாமரையும் வசிக்கத் தொடங்கின.
இப்போதெல்லாம் துறவிநண்டு எங்கே சென்றாலும் தன் நண்பன் கடல்தாமரையையும் அழைத்துச் சென்றது. தனியாக வாழ்ந்தபோது பயத்துடனும் சலிப்புடனும் இருந்த அவை, இப்போது ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கடலுக்குள் உலவின. துறவிநண்டின் வீடு, கடல்தாமரையின் வாகனம்போன்றே மாறிவிட்டது.
கடல்தாமரையின் அழகான நீண்ட இதழ்கள் உருவாக்கும் திரவம் மிகவும் நச்சுத் தன்மை கொண்டது. இதனால், துறவிநண்டை அச்சுறுக்கும் கடல்பாம்பு, இங்க்ஃபிஷ்போன்றவை பயந்து விலகிச் சென்றன. கடல்தாமரை, துறவிநண்டிடம் சொல்லும்: “இப்போது எவனாவது உன்னைத் தொந்தரவு செய்ய வரட்டும், அவனை ஒருகை பார்த்துவிடுகிறேன்!” இதைக் கேட்டு துறவிநண்டு மிகவும் நம்பிக்கை கொள்ளும். அதன் மனதில் தைரியம் வளர்ந்தது.

பிறகு எப்போதும் துறவிநண்டும் கடல்தாமரையும் பிரிந்ததே இல்லை. இப்போதும் அவை கடலில் ஒன்றாகத்தான் வாழ்கின்றன. மிகவும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றன. நீங்கள் எப்போதாவது கடற்கரைப் பக்கம் போனால் சற்று காதுகொடுத்துக் கேளுங்கள். அலையோசைக்கிடையில் ஒரு பாட்டுச் சத்தம் கேட்கலாம்:
“அன்பு செய்யும் உள்ளத்திலே
அச்சமென்பதில்லையே!
இணைந்து வாழும் காலம்தான்
இன்பமான வாழ்க்கையே!
ஒன்று சேர்ந்து உதவி செய்து
உயர்ந்திடுவோம் நண்பர்களே!”
இது யார் பாடும் பாட்டு தெரியுமா? அந்தத் துறவிநண்டும் கடல்தாமரையும் கைகோர்த்து ஆடிப் பாடும் பாடல்தான்!

Related posts

Leave a Comment