You are here

தாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம்

தாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம்

தமிழகஅரசின் கல்விக்கொள்கை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன.மத்தியஅரசு தனது கல்விக்கொள்கையை வெளியிட்டு பல பிரச்சனைகளைக் கிளப்பியிருப்பதையும் காண்கிறோம். கல்வியைக் காவிமயமாக்கல், நாலாம் வகுப்பிலேயே தேர்ச்சி/தோல்வி மூலம் சலித்தெடுத்தல், எட்டாம் வகுப்பில் குடும்பத்தொழிலில் பயிற்சி என பல பிற்போக்கான முரட்டு அம்சங்கள் அதில் இருந்ததால் நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. மத்திய அரசு சமஸ்கிருதமயமாக்கல், இந்திமொழித் திணிப்பு என பல வில்லங்கங்களைச் சத்தமில்லாமல் இன்று செய்து வருகிறது.எல்லா அம்சங்களையும் போலவே கல்வியிலும் ஜனநாயகப் படுகொலையையே அது அரங்கேற்றிவருகிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் தமிழகஅரசு திரு. த.உதயச்சந்திரன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் பள்ளிக்கல்வியில் மாற்றங்களைக் கொண்டுவர பிடிவாதமாகக் களத்தில் இறங்கியது. முற்போக்கான தெளிந்த கல்விசார் சிந்தனைகளுடன் கலைத்திட்ட வடிவமைப்புக்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன; நடைபெற்றும் வருகின்றன.

பொதுவாக, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்போது, நாம் நமக்கென்று ஒரு கல்விக்கொள்கையை வெளியிட வேண்டும்; அதற்கேற்றாற் போல் மாநிலக் கலைத்திட்ட வடிவமைப்பு வெளிவர வேண்டும். அந்தக் கலைத் திட்ட வடிவமைப்பு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு, அதற்கேற்றாற்போல் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதைப்பற்றி கல்வியாளர்களும், வல்லுநர்களும், பல்கலைக்கழகக்குழுக்களும் ஆய்வுசெய்து செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை முன்மொழிந்து செய்தபின்னர், இறுதியாகப் பாடநூல்கள் தயாராக வேண்டும். இவ்வாறுதான் மாற்றங்களை முன்னெடுப்பது வழக்கம்.

கற்றல்செயற்பாடுகளில் இன்னவயதுக் குழந்தையிடம் இன்னின்ன திறன்களை வளர்க்க முடியும் என்கிற வெளிப்பாட்டு நோக்கத்தை முடிவு செய்து, அதை முழுமையாகப் பரிசீலித்தபின், நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படியான பணிகளை மேற்கொள்ளும் வல்லமை வாய்ந்த ஒரு பாடத்திட்டக்குழு மேனாள்துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் செயலாற்றி வருகிறது. ஆயினும் அவசரகதியில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆரம்பப்பள்ளிக்கல்வி மூன்றாம்வகுப்பு வரையிலாவது தாய்மொழியில்தான் இருக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாம் நமது கலைத்திட்டத்தில் சொல்லியிருக்கும் மாற்றங்கள் பாடத்திட்டத்திலும், பாடநூல்களிலும் கட்டாயம் இடம்பெறவேண்டும். தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில், பள்ளிக்கல்விக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மீது பொதுவெளியில் பரவலான கருத்துப்பரிமாற்றங்கள் முதன்முறையாக இப்போதுதான் நடைபெறுகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கும் அம்சம். இவற்றை வெளியிட்டதுமே,இலட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் இவற்றைப் பார்வையிட்டும், பதிவிறக்கம் செய்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.எழுத்துமூலமே ஆயிரக்கணக்கான ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன என்பதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த விழிப்புணர்வு மேலும் விரிவடைந்து வலுப்பெற வேண்டும். நீட் தேர்வையும், மத்திய அரசு பாடத்திட்ட மாதிரியின் நிர்ப்பந்தங்களையும் மட்டுமே கவனத்திற் கொண்டு அவசர அவசரமாகப் பாடங்களை எழுத நிர்ப்பந்திக்காமல் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி கவனமாகப் பரிசீலித்து மாற்றங்களைச் செய்ய வேண்டுமென தமிழக அரசை நாம் வலியுறுத்துவோம்.
– ஆசிரியர்குழு

Related posts

Leave a Comment