You are here
Uncategorized 

சுவையான செய்திகள் -மாலதி

மூக்கு அடையாளம்

OLYMPUS DIGITAL CAMERA

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகை வித்தியாசப்பட்டிருப்பதுபோல, ஒவ்வொரு நாயின் மூக்கில் உள்ள அடையாளங்களும் வித்தியாசமாக இருக்கும். நாய்களின் மூக்கை நுட்பமாகக் கவனித்தால், நம் விரல் அடையாளங்கள்போல பல வடிவங்களைப் பார்க்கலாம். அப்படியென்றால் நாய்களை அடையாளம் காண்பது சுலபம்தானே என்று நினைக்கிறீர்களா? ஆமாம்! அமெரிக்காவில் சில இடங்களில் நாய்களை அடையாளம் காண்பதற்கு, நாய்களின் மூக்கு அடையாளத்தைப் (Nose Print) பயன்படுத்துவது உண்டாம். கனடா நாட்டு நாய் வளர்ப்புச் சங்கங்கள் (Canadian Kennel clubs) 1938 முதல், நாய்களின் அடையாளப் பதிவாக மூக்கு அடையாளத்தை அங்கீரித்திருக்கின்றன. காணாமல்போன தங்கள் அன்புக்குரிய நாய்களைக் கண்டுபிடிப்பதற்கு, உரிமையாளர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஜி.பி.எஸ்


ஜி.பி.எஸ்.ஸின் முழு வடிவம், ‘Global positioning system’ என்பது. பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்களைப் பயன்படுத்தித்தான் ஜி.பி.எஸ். செயல்படுகிறது. கைப்பேசியில் நாம் ஒரு இடத்தின் பெயரைத் தேடும்போது உடனே ஜி.பி.எஸ்ஸிலிருந்து வரும் சமிக்ஞைகளை (Signals) நாம் நிற்கும் இடத்துக்கு மேலே உள்ள துணைக்கோள்கள் ஏற்கின்றன. உடனே இந்தத் துணைக்கோள்கள், நாம் போகவேண்டிய இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது; சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று கணக்கிட்டு திரும்பக் கைப்பேசிக்கு விவரம் அனுப்புகின்றன. குறைந்தபட்சம் மூன்று துணைக்கோள்களாவது சேர்ந்துதான், இந்த விவரங்களைக் கண்டுபிடித்துத் தருகின்றன.

மரங்கொத்திகளும் விண்கலமும்

மரங்கொத்திகளும் விண்கலமும்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்தான், ‘நாசா’ (National Aeronautics and Space Administration). இது, 1995, ஜூன் 22ல் ‘டிஸ்கவரி’ எனும் விண்கலத்தை வானில் செலுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை. என்ன காரணம்? மரங்கொத்திகள்தான்! மரங்கொத்திகள் கூட்டமாக வந்தன. டிஸ்கவரியின் எரிபொருள் தொட்டியின் (Tank), மூடப்பட்ட பகுதியில் கொத்திக் கொத்தி நிறையத் துளைகள் இட்டுவிட்டன. அதனால், முடிவு செய்ததுபோல டிஸ்கவரியை விண்ணில் ஏவ முடியவில்லை. துளைகளான பகுதியை சரி செய்தால் மட்டும் போதாது; மறுபடியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவேண்டுமே! அதற்காக நாசா, பறவை நிபுணர்கள் சிலரை வரவழைத்தது. அவர்களின் ஆலோசனைப்படி, ஏவுதளத்தின் அருகே பல இடங்களில் ஆந்தைகளின் உருவப் பொம்மைகள் வைக்கப்பட்டன. மரங்கொத்திகளைத் தாக்கும் ஆந்தைகளின் குரல் ஒலியைப் பதிவு செய்து அந்த இடத்தில் ஒலிபரப்பினார்கள். இந்த நடவடிக்கை பயனளித்தது. பிறகு, மரங்கொத்திகளின் தொந்தரவு இல்லாமல் டிஸ்கவரி ஜூலை 13ல் விண்ணில் செலுத்தப்பட்டது.

கலங்கரை விளக்கங்கள் (Lighthouses)

கப்பலிலும் படகிலும் செல்பவர்களுக்கு தூரத்தில் தெரியும் கரை எந்த இடத்தின் கரை என்று தெரிந்துகொள்வதற்கு கலங்கரை விளக்கங்கள் உதவுகின்றன. கலங்கரை விளக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான நிறங்களும் வடிவமைப்புகளும் இருக்கும். சிவப்பும் வெள்ளையும் விட்டு விட்டு வரும் வகையிலோ, சிவப்பு மட்டுமாகவோ நிறம் கொடுக்கப்பட்ட கலங்கரை விளக்கங்கள் இதற்கு உதாரணம்.
இரவு நேரத்தில் இந்த நிறங்களைப் பார்க்க முடியாது அல்லவா. அப்போது வேறொரு வழிமுறை உதவுகிறது. கங்கரை விளக்கத்திலிருந்து வெளிச்சம் வருவதைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? ஒரு இடத்திலிருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து 10 வினாடிக்குள் மூன்று முறை வெளிச்சம் வந்தால், மற்றொரு கலங்கரை விளக்கத்தில் 10 வினாடியில் நான்கு முறை வெளிச்சம் வரும். ஒவ்வொரு கலங்கரை விளக்கமும் இப்படி வித்தியாசப்பட்டிருக்கும். இதன் மூலம் இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

 

 

 

Related posts

Leave a Comment