You are here
Uncategorized 

சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள் – ஆர். செம்மலர்

சீத்தாராம் யெச்சூரி  நாடாளுமன்ற உரைகள் – ஆர். செம்மலர்

 

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்ற ஜனநாயகத்தை உள்ளும் புறமும் போராடப் பயன்படுத்துவது எனும் வகையில்தான் தேர்தல்களைப் பயன்படுத்துகிறது. அந்த வகையில் மாநிலங்களவையில் தோழர் யெச்சூரி ஆற்றிய 20 உரைகளின் தொகுப்பு இது.
குருசேவ் சூயென்லாயைச் சந்தித்தபோது, ’பிரபு குலத்தில் பிறந்த நீயும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நானும் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறோம்’ என்று கூறியதற்கு, ‘இருந்தாலும் இருவருமே பிறந்த வர்க்கத்திற்குத் தானே துரோகம் செய்கிறோம் என்று திருப்பிக் கொடுத்திருப்பார் சூயென்லாய். 11 வயதில் வேதங்கள்/பூணூல் போன்றவை சூட்டப்பெற்று, பார்ப்பனிய பிண்ணனியிலிருந்து வந்தபோதும், சூயென்லாயின் கூற்றின் தன்மையில் பார்ப்பனியச் சிந்தனைக்குச் செய்யும்/செய்யப்படவேண்டிய துரோகத்திற்கு அடையாளமாக இருக்கின்றன யெச்சூரியின் உரைகள்.

பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி , ஊக வாணிபம் , புதிய தனியார் மற்றும் தாராளமயக் கொள்கைகள் போன்ற பலவும் மக்களின் மீது தொடுத்த தாக்குதல்களை விமர்சிக்கும் இவரது உரை , காஷ்மீர் பிரச்னை உள்ளிட்டு விமர்சிக்கிறது. ஜே என் யூ முதல் சென்னை ஐ ஐ டி வரையுள்ள, நாடாளுமன்றம் பொறுப்பெடுக்க வேண்டிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் நடந்த தற்கொலைகள் உள்ளிட்ட மாணவர் பிரச்னைகளை உரைகளில் பொறுப்புடன் பதிந்து தீர்வு கோருகிறார்.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மிருகபல பெரும்பான்மை கொண்ட பிஜேபி மக்களவையில் நிறைவேற்றாததை கேள்விக்குள்ளாக்குகிறார்.

நிர்வாகம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற சட்டமன்றங்கள் தனித்தனியேயும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டிருப்பது நம் அரசமைப்புச் சட்டத்தின் முத்திரைச் சின்னங்களாகும். இதன் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற தன்மைகள் சிதைக்கப்படுவதை விமர்சித்தும் வேதனை பகிர்ந்தும் எச்சரித்தும் நிகழ்த்திய உரைகள் பிரமிப்பூட்டுகின்றன. இவை வெறும் சொற்கள் அல்ல. வரலாற்று ரீதியான ஆவண பொக்கிஷங்கள்.

அண்டை நாடுகளுடன் சுமுக உறவு தேவைப்படும் நேரத்தில் இந்தியா இந்த மூன்றாண்டுகளில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றப்பட்டிருப்பது நமக்கும் நம் கூட்டாளி நாடுகளுக்கும் பயனளிக்காது என எச்சரிக்கிறார்.
இந்துராஷ்டிரம் அமைக்கும் நோக்குடன் பசுக்காவலர்கள் தலித்துகளையும் முஸ்லீம்களையும் பசுக்களைக் கொல்கிறார்கள் என காரணம் கற்பித்து கொல்வதை எடுத்துக் கூறி அரசியலில் உள்ள ஒரு மனிதன் ஒரு மதிப்பு சமூக பொருளாதார வாழ்வில் மறுக்கப்படுவதை பதிவு செய்கிறார்.

பிஜேபி ஆளும் ஹரியானாவில் 86% பேருக்கு வாக்குரிமை , தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள். இவ்வாறு பெருமிதம் மிக்க மிகப் பழமையான ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மறுக்கப்படுவதை பதிவு செய்கிறார்.

அரசின் செயல்பாடு கோல்வால்கரின் நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் எனும் புத்தகத்தின் அடிப்படையில் செயல்பட்டு நாட்டை விட இனத்தை மேம்பட்டதாக கருதினால் நாட்டின் சுதந்திரம் மீண்டும் ஆபத்துக்குள்ளாகும். சமத்துவம் இன்றி சுதந்திரம் இல்லை. சகோதரத்துவம் இல்லையேல் சமத்துவம் சுதந்திரம் இரண்டும் இல்லை. சகோதரத்துவம் சமத்துவம் இரண்டும் இன்றி சுதந்திரம் இல்லை எனும் அம்பேத்கரின் வாசகங்களை கூறி உண்மையான அஞ்சலி எதில் உள்ளது என தன் உரையில் தெளிவுபடுத்துகிறார்.

மதச்சார்பின்மை எனும் சொல்லாடலை முதன்முதல் பயன்படுத்தியவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உபி முதல்வர் அறைகூவல் விடும் நிலையில் இவரின் நாடாளுமன்ற உரைகள் மிக முக்கியத்துவமானவை.

நாட்டின் நலனுக்காக தியாகம் செய்யக்கூடிய நேர்மையான வலுவான மனிதர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய மனிதர்களே இன்றைய தேவை எனும் ராஜேந்திர பிரசாதின் வார்த்தைகளை வலியுறுத்தும் இவரின் உரைகள் இளைய தலைமுறை கவனிக்க வேண்டிய உரைகள்.
கம்யூனிஸ்ட்களின் தேர்தல் பங்கெடுப்பு , கூட்டணி, சீட்டு என பலவும் விமர்சனம் மற்றும் கேலி கிண்டலுக்கு உட்படுப்படும் இன்றைய, சூழலில் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடும் கம்யூனிஸ்ட் வெல்லும் ஒரு சீட் எத்தனை முக்கியத்துவமானது என்பதை இவரது அழுத்தமான உண்மை உரைக்கும் உரைகள் உணர்த்தி மிகச் சிறந்த உதாரணமாகியுள்ளன.

இறுதியாய் ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரைகள் இன்னும் தொகுத்து வராத சூழலில் அவ்வப்போது தமிழாக்கம் செய்து அதை தொகுத்து நூலாக நம் கைகளில் தவழ விட்டுள்ள தோழர் வீரமணிக்கும், வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோர் மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ப்பது அழுத்தமான நம்பிக்கை உருவாக்க உதவும். வாசிப்போம் பரவலாக்குவோம்.

Related posts

Leave a Comment