You are here
நூல் அறிமுகம் 

ஹிபாகுஷா

மயிலம் இளமுருகு

வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை மீட்டு கண்முன் நிறுத்துவதாக அமைகின்றது. அட்டைப்படம் கூறிய ‘நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது ஒரு ஹிபாகுஷாவாக உணர்வீர்கள்’ என்ற கருத்தை நாம் உணரும் வகையில் நகர்த்திச் சென்றுள்ளார் ஆசிரியர். இத்தகைய ஆய்வுகள் / நூல்கள் அரிதாகவே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கியமான நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.

நூலாசிரியர் ம.ஜெகதீஸ்வரன் தன்னுரையில் சில முக்கியமானவற்றைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அணு ஆயுதத்திற்கு எதிரான விஞ்ஞானிகள் அமைப்பு – விஞ்ஞானிகள் அணு ஆயுதத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக ‘சென்னையும் ஹிரோஷிமா ஆகலாம்’ என்ற தலைப்பில் நழுவுபடக்காட்சி தயாரித்தனர். இதன் விரிவாக்கமே இந்தப் புத்தகம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது சென்னையில் நடைபெற்றால் எப்படிப்பட்ட பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை ஹிரோசிமா, நாகசாகியின் சாட்சிகளுடன் கூற முற்பட்டுள்ளதாக இந்நூல் அமைகின்றது.

இந்நூல் 23 பகுதிகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்தியையும் விளக்குவதற்கு தகுந்த புகைப்படத்தைத் தந்து விளக்கியுள்ளமை இந்நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றது. சில புகைப்படங்களைப் பார்க்கும்போது அந்த உணர்வினை நேரடியாகப் பெறுவதுபோல உணர முடிகின்றது.

இரண்டாம் உலக யுத்தம் என்னும் பகுதியில் இப்போர் தோன்ற சூத்ரதாரி ஹிட்லர் என்றும், அந்தச் சூழலை மற்ற நாடுகள் எப்படிப் பார்த்து, தங்களுக்குச் சாதகமாக அறிந்துகொள்ள வழி ஏற்படுத்துகின்றது. உலக சரித்திரத்தில் மிக அதிகமான சேதம் விளைவித்த, மிக அதிக எண்ணிக்கையில் மனித உயிர்களைப் பலி வாங்கிய ஒரு போர் என்றால், அது இரண்டாம் உலகப் போர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி ஹிட்லர் போலந்து நாட்டின் மீது படையெடுத்ததே இரண்டாம் உலகப் போரின் ஆரம்பமாக இருந்ததென பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சு நாடுகள் ஒரு கூட்டணியாகவும், நேச நாடுகள் ஒரு கூட்டணியாகவும் செயல்பட்டுப் போர்செய்தமை விளக்கப்பட்டுள்ளது. சீனாவின் சில பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் இறங்கியதை சில நாடுகள் கண்டித்தன. ஜப்பான் பசிபிக் பகுதியில் தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கும் திட்டத்தில் செயல்பட்டமை விளக்கப்பட்டுள்ளது.

07.12.1941 அன்று இரண்டாம் உலகப்போரின் போக்கையே திசை திருப்பும் வகையில் ஓர் அதிதீவிரத் தாக்குதலை அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தின் மீது செயல்படுத்தியது ஜப்பான். இச்செய்திகளை விளக்க புகைப்படங்கள் துணைசெய்கின்றன.

கணிசமான பகுதியை ஜப்பான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த நேரத்தில்தான் அமெரிக்கா நேசநாடுகளுடன் சேர்ந்து நேரடியாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபடத்தொடங்கியது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத அமெரிக்கா ஏராளமான விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றுடன் அணுகுண்டு கண்டுபிடிக்கவும் ரகசியமாகத் தொடங்கியது. 1942 ஆம் ஆண்டு இரகசியமாகத் தொடங்கிய மான்ஹாட்டன் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது 16.07.1945 ஆம் நாள் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட அணுகுண்டை ‘ட்ரினிடி’ என்ற தீவில் வெடிக்க வைத்தது அமெரிக்கா. உலகில் முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய நாடு என்ற மோசமான பெருமைக்கு அமெரிக்கா சொந்தமானது. மேலும் யுரேனிய அணுவைப் பிளப்பதற்கான சோதனை செய்து வெற்றி பெற்றது, ஆட்டோஹான், ஸ்டிரஸ்மேன், நீல்ஸ்போர் என்ற விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் குறித்தும், லியோ சிலார்டு என்ற இத்தாலிய அறிவியலறிஞர் நாஜி ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிப்பதற்கு முன்னமே நேச நாடுகள் தயாரிக்க வேண்டுமென துரிதமாக செயல்பட உந்துதலை ஏற்படுத்தினார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டின் எழுதிய கடிதச் செய்திகளையும் இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

மன்ஹாட்டன் திட்டம் என்ற பகுதியில் அத்திட்டம் குறித்தும், அறிவியல் அறிஞர்கள், தொழில் நிபுணர்கள், இராணுவப் பொறுப்பாளர்கள் யாவரும் அயராது ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளமை விளக்கப்பட்டுள்ளது.

ஜான்ரே டன்னிங் என்ற அறிவியலறிஞர் இயற்கையிலிருந்து பெறப்படும் யுரேனியத்திலிருந்து யுரேனியம் 235-ஐப் பிரிக்கும் ஒரு முறையைக் கண்டறிந்தார். இத்தொழில்நுட்பம் அணுகுண்டு செய்வதற்குப் பயன்படும் மூலப்பொருளை எளிதில் பெற உதவியாக இருந்தது.(பக் 43). மேலும் இப்பகுதியில் புளுட்டோனியம் குறித்தும் அலமோகார்டோ சோதனைக குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது. நியூமெக்சிகோ மாநிலத்தின் அலமோகார்டோ விமானப்படைத் தளத்திலிருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள பாலைவனப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டது. இச்சூழலில் நாஜி ஜெர்மனி நேச நாடுகளிடம் தோல்வி அடைந்தது. இருந்தாலும் பசிபிக் போர் பகுதியில் ஜப்பான் மட்டுமே நேச நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தது. அந்நாட்டைப் பணியவைக்க புதிய அணுஆயுதத்தை அமெரிக்க ஐக்கிய நாடு முதன் முறையாக பயன்படுத்தியது. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் அணுகுண்டின் தந்தையாகச் செயல்பட்ட விதத்தினையும் இப்பகுதி விளக்குகின்றது.

அணுகுண்டின் ஆற்றலும் அதற்கான அறிவியல் காரணமும் என்ற பகுதியில் அணுகுண்டின் சக்தி, அதன் பின்விளைவுகள், அணுக்கருப்பிளவு மூலம், அணுகுண்டு இரண்டு வகையில் வடிவமைத்த செய்தி, உந்துவகை, வெடிப்புவகை, அணுக்கரு இணைவு அணுகுண்டு, என பல்வேறான செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இதற்கான தக்கபடங்களை அமைத்து விளக்கியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலும் அதற்கான அரசியல் சூழ்நிலைகளும் என்னும் கட்டுரை பலவிதமான கருத்துகளை முன்வைப்பதாக அமைகின்றது. இத்தாலி,ஜெர்மனி நேசநாடுகளிடம் அடிபணிந்தது. எங்கே அணுகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என்றும், ஜூலை 24 இல் திட்டப் பொறுப்பாளர் லெஸ்ஸி குரோவ்ஸ் அனுமதி வழங்கியச் செய்தி, போட்ஸ்டாம் அறிக்கையின் வழி ஜப்பானுக்கு நிபந்தனை விதித்த செய்தி, துண்டுத்தாள்கள் விமானங்கள் மூலம் ஜப்பானில் வெளியிடப்பட்டமை, இறுதி நிபந்தனையை ஜப்பான் ஏற்க மறுத்துவிட்ட சூழல், தாக்குதல் நடத்த தேர்ந்தெடுத்த பின்னணி, 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவின்சூழல்,தாக்குதல் நடத்த பால்டிப்பெட்ஸ் விமானத்தை ஓட்டிச் சென்ற செய்தி,லிட்டில் பாய் என்ற அணுகுண்டு ஏறக்குறைய 22 கிலோ எடையுள்ள யுரேனியம் 235 வெடிபொருளாக இருந்தமை, இதன் மொத்த எடை 4100 கிலோ, தாக்கப்பட்ட விதம் 1,40,000 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட சூழல் என ஒவ்வொன்றையும் படத்துடன் அறிய முடிகிறது.

ஹிரோஷிமாவின் சர்வநாசம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி குண்டினால் ஏற்பட்ட சேதம், (உயிர், பொருள்) மற்ற ஆயுதங்களால் தனிமனிதனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் அணு ஆயுதத்தினால் பல தலைமுறைகளுக்கும் மரபுப்பண்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் குழந்தைகள் பிறப்பிலேயே பல பாதிப்புடனும், குறைகளுடனும் அவதியுற்றமையை அறியலாம். நாகசாகியின் அழிவு ஆகஸ்டு 9 என்னும் கட்டுரையில் ‘குண்டு மனிதன்’ என்று பெயர் கொண்ட புளுட்டோனியம் அணுகுண்டை வெடித்த அமெரிக்காவின் தாக்குதல், 70,000 பேர் உயிரிழந்த செய்தி, இக்குண்டின் எடை 4500கி.கி கொண்டதாகும். படைவீரர் அல்லாத பொதுமக்களையே மிகப்பெரிய அளவில் கொன்றதோடு, எஞ்சியோரின் உடலையும்,உள்ளத்தையும் பல ஆண்டுகள் வதைக்கக்கூடிய ஒரு கொடூரமான ஆயுதத்தை உபயோகிப்பது மனித வரலாற்றில் அதுவே முதல்தடவை என பக்- 83 ன் வழி அறிகின்றோம்.

அணுகுண்டின் விளைவுகள் குறித்து அறிவியல் பூர்வமான செய்திகளை இந்நூலின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. அணுகுண்டு வெடிப்பு, மரபுரீதி குண்டு வெடிப்பிற்குமுள்ள வேறுபாடு படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள் வேலை செய்யாத சூழல், வெப்பம் குறித்து கூறும்போது சூரியனின் வெப்பம் போல் தோன்றி எல்லாவற்றையும் எரித்து விடும் தன்மை, அதாவது 300 மீட்டர் ஆரத்தில் (1000 அடி) உள்ள அத்தனை உயிர்களும், பொருள்களும்,மனிதர்கள்,விலங்குகள, செடிகொடிகள், இரும்புப்பாதைகள், மின்கம்பிகள் எல்லாமே உருகக்கூட நேரமில்லாமல் ஆவியாகிவிடும் என்பதனைக் கூறி, ஹிரோஷிமாவில்அணுகுண்டு வெடித்த சமயம் அமர்ந்திருந்த ஒரு மனிதர் அந்த நொடியிலேயே ஆவி ஆகிவிட்டார் என்பதையும் கூறி அதற்கான படத்தை நூலினுள் அமைத்து விளக்கியுள்ளார் ஆசிரியர். 1000 அடிதூரத்தில் இருந்தவர்கள் இரும்புப்பட்டறையின் வெல்டிங் கருவியின் தீக்கதிர் பட்டதைப் போலத் துடிதுடித்துக் கருகிப்போய் இறந்துள்ள செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 அடிக்கு மேல் தூர இருந்தவர்கள் ஆவியாகாமல் கருகவும் இல்லாமல், உடல் முழுவதும் வெந்து 80 முதல் 90% சதவீதம் கடுமையான தீக்காயங்களுடனும் குற்றுயிரும் குலையுயிருமாக போதிய மருத்துவ வசதியின்றி மரணத்தை எதிர்நோக்கி இருந்தமை சிந்திக்கத் தூண்டுவதாக அமைகின்றது. காற்றழுத்தம், கதிரியக்கம் குறித்தும் நூலின் வழி அறியலாம்.

ஜப்பானின் சர்வாதிகாரம் குறித்தும், குறிப்பாக சீனாவின் நான்சிங்கைக் கைப்பற்றி ஜப்பான் செய்த குரூரச் செயல்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாதவை. பெண்கள்,குழந்தைகள் என பாலியல் வன்புணர்ச்சி செய்தமை, போர்னியோ தீவைக் கைப்பற்றிய ஜப்பான் அங்கிருந்த பழங்குடி மக்களைக் கொன்று குவித்தமை, சீனர்களைப் பிடித்து, தந்தையரைவிட்டு மகளைப் பலாத்காரம், மகனைவிட்டு தாயை பலாத்காரம் செய்தமை என சித்ரவதைகளை பக் – 99 விளக்குவதாக அமைந்துள்ளது. அணுகுண்டு வீச்சு காலத்தின் கட்டாயம் என நியாயப்படுத்திய அமெரிக்கா, அணுகுண்டு வீசப்படப்போவது உறுதி என்ற நிலையில் அணுகுண்டைக் கட்டமைத்த விஞ்ஞானிகளில் 88 பேர் அதைத்தடுத்து நிறுத்தக் கோரி விண்ணப்பம் கொடுத்ததையும், பின்
நிராகரிப்பட்டமையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.
அணு ஆயுத வல்லரசுகள், உலகின் முதல் அணு ஆயுத நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு சிறப்படைந்தமை, இதனைத் தொடர்ந்து ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய வல்லரசு நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய வளரும் நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக தோன்றிய சூழலையும் குறிப்பிடுகின்றது இந்நூல். ஒவ்வொரு நாடும் அணு ஆயுத நாடாக எப்படித் தோன்றியது என வரலாற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.

‘சென்னையும் ஹிரோஷிமா ஆகலாம்’ என்ற பகுதியில் பாகிஸ்தானின் பகிரங்க மிரட்டல், சென்னை சென்ட்ரலின் மேல் ஒரு குண்டு வெடித்தால் என்ன நேரிடும் என்பது விவரிக்கப்படுள்ளது.ஹிபாகுஷாக்களின் பதிவுகள் என்னும் பகுதியில் ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வெடிப்பில் தீக்காயங்களுடன் ஆச்சரியமாக உயிர் பிழைத்தவர்கள் 3 இலட்சம் பேர்; இவர்களே ஹிபாகுஷா என தனி சமூகத்தினராக அழைக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் தங்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளதைத் தருகிறது இந்நூல். யாசுகோ யாமாகாடா என்பவர் தனக்கு ஏற்பட்ட துயரத்தை விவரித்துள்ளார். தண்ணீரில் மிதந்து சென்ற பிணங்கள், கடுமையான வெப்பம் மற்றும் தீக்காயங்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் ஆறுகளில் இறங்கி உயிரிழந்த செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருப்பு மழையும், சடாகோ சஸாகியும் என்னும் பகுதியின் வாயிலாக கதிரியக்கத்துகள் நிறைந்த கருமழை, அதில் நனைந்த பலருக்குத் தோன்றிய புற்றுநோய் குறித்தும் கூறப்பட்டுள்ளது. சடகோ என்ற பெண்ணிற்கு வந்த புற்றுநோய் குறித்தும், இறந்துவிடுவாள் எனத் தெரிந்து அவர்களுடைய தோழிகள் வந்து பார்த்துச் சென்ற செய்திகள், ஜப்பான் நம்பிக்கைகளில் ஒன்றான ஓரிகாமி (காகிதங்கள் மூலமாக பொம்மைகளை உருவாக்கும் கலை) முறையில் கொக்கு ஒன்று செய்து கொடுத்தமை, 1000 கொக்குகளை நீ செய்தால் நீ மரணத்திலிருந்து தப்பிப்பாய் என கூறிய செய்தி, அதனால் நம்பிக்கையுடன் சடகோ செய்தமை, ஆனால் அவளால் 644 கொக்குகளை மட்டுமே செய்ய முடிந்தது, அவளது நண்பர்களும் பெற்றோரும் சடகோவின் ஆசையை நிறைவேற்ற மீதமுள்ள 356 கொக்குகளைச் செய்து சடகோவோடு சேர்த்துப் புதைத்த செய்தியும் கூறப்பட்டுள்ளன. மேலும் இக்கதை தமிழக ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஹிரோஷிமா, நாகசாகி ஒரு சாட்சியின் வாக்குமூலம் என்ற பகுதி, ட்சுடோமு யாமகுச்சி என்பவரின் அனுபவப் பதிவாக அமைந்துள்ளது. இவரின் சொந்த ஊர் நாகசாகி,வேலை செய்தது ஹிரோஷிமா, வேலைக்குச் சென்று அணுகுண்டுத்தாக்கம் பெற்றுத் திரும்பி தன் சொந்த ஊரான நாகசாகிக்கு வந்தமை, ஆகஸ்ட் 9 ஆம் தேதி அணுகுண்டு வெடித்தமை அதனால் அவர் அடைந்த துயரங்கள் என பலவற்றை நூலின் வழி அறியலாம். அணுவியலின் ஆபத்தான அரசியலின் தீவிர எதிர்ப்பாளராக 04.01.2010 அன்று தம் 94 ஆம் வயதில் நாகசாகியில் இறந்துபோனார்.

சுனாவோ சுபோய், என்ற பள்ளித் தலைமையாசிரியரின் அனுபவமும் நூலில் கூறப்பட்டுள்ளது. 84 வயதான பெண்ணின் உரையாடல், ஹிரோகோ ஹடாகேயமாவின் கருத்து போன்றவற்றை எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். ஹிரோஷிமா, நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த யோஷிட்டோ மட்கஷிக், யோசுக்கே யமஹாட்டா என்ற இரண்டு புகைப்படக்காரர்களின் அனுபவம், புகைப்படம் எடுத்து வெளியிட்ட சூழல் என்பது தக்க புகைப்படத்துடன் அறிந்துகொள்ள இயலுகின்றது. இப்பகுதியில் உள்ள புகைப்படங்கள் நம் நெஞ்சை உருகச் செய்வதாக உள்ளன.

‘ஒரு வீரனின் வெற்றியும் தோல்வியும்’ என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படையின் படைத்தலைவன் கிளவ்டி ஈதெர்லி என்பவரின் செயல்பாடு,அதாவது அமெரிக்கா புகழ்ந்த விதம் ஆனால் தன் மனைவியாலும், மற்ற நாட்டு மக்களாலும் தூற்றப்பட்ட செய்திகள் என சிந்திக்கத் தூண்டுகிறார் ஆசிரியர்.

இரண்டாம் தலைமுறை அணு ஆயுதங்கள் என ஹைட்ரஜன் குண்டு பெயர் பெற்றது. அமெரிக்கா 1952 ஆம் ஆண்டு கண்டுபிடித்தமை, டியூட்ரியம், டிரிசியம், ஹீலியம், நியூட்ரான் துகள் என பல இங்கு விளக்கம் பெறுகின்றன. ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடிப்பிற்கு ஹங்கேரி அறிவியல் அறிஞர் எட்வர்டு டெல்லரே முக்கிய காரணமாக அமைந்தார். 1953-இல் சோவியத் ரஷ்யாவும், 1957-இல் பிரிட்டனும், 1967-இல் சீனாவும், 1968 – இல் பிரான்ஸ் நாடும் அணுகுண்டையும், ஹைட்ரஜன் குண்டையும் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றன. அணு உலைக் கழிவுகளில் இருந்து யுரேனியக் குண்டுகள், ஈராக் மீது அமெரிக்கா வீசி நாசம் செய்தமை, யுரேனிய குண்டுகள், அதன் வீரியம், யுரேனிய யுத்தத்தின் மர்மம் என பல்வேறான செய்திகளை இப்புத்தகம் விவரிக்கின்றது.

அமெரிக்க – ரஷ்யாவின் அணு ஆயுதப்போட்டி, முதல், இரண்டாம் உலகப் போர், ஐரோப்பா தோன்றிய விதம், அப்போது உலகில் இருந்த அணுகுண்டுகளின் எண்ணிக்கை 7000-ஐ எட்டியது. இப்போது 20000 அணுகுண்டுகள் இருப்பதாக கணக்கெடுப்பு, அணுகுண்டு தயாரிக்க, பராமரிப்பு செய்ய நாடுகள் எப்படி செலவு செய்கின்றனர், அமெரிக்கா – ரஷ்யாவின் பனிப்போர், பின் இந்நாடுகளுடன் இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா என ஐந்து நாடுகள் இணைந்து அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வழி செய்யும் ஓர் ஒப்பந்தத்தை (NPT). உருவாக்கி மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பி.61-12 அணுகுண்டுகள் தயாரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் எப் – 16 ரக விமானத்தில் பி.61-12 அணுகுண்டின் மாதிரி எடுத்துச்செல்லப்பட்டு நிவேடா பாலைவனத்தில் வீசப்பட்டு, முழு வெற்றி பெற்றிருப்பதான செய்திகளும் விளக்கப்பட்டுள்ளன.

வடகொரியாவில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு சவால் விடுவதாக அமைந்துள்ளன. வடகொரியா அமெரிக்காவின் பல தளங்களை ஏவுகணை வீச்சு எல்லைக்குள் கொண்டு வந்தது. அதனால் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடகொரியக் கடற்பகுதிக்குள் அனுப்பி வைத்தமை, என இவ்வாறான செயல்களால் மீண்டும் ஓர் அணு ஆயுத அழிவை இந்த உலகம் சந்திக்க நேரிடுமோ என்று கொரியத் தீபகற்ப நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் அஞ்சுகின்றன.

இன்னுமோர் உலகப்போர் ஏற்படாது காக்க வேண்டியது புவியில் உள்ள அனைவரின் கடமையாக உள்ளது. அணுகுண்டால் ஏற்பட்ட பாதிப்பைக் காண எங்கள் நாட்டிற்கு வாருங்கள் என ஜப்பான் மற்றஅணு ஆயுத நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத் தலைவர்களின் கண்டனங்களும் உலக அமைதி இயக்கங்களும் கூறியுள்ள செய்திகள் குறிப்பிடத்தக்கவை.

விழிப்புணர்வு, ஆர்ப்பாட்டம் என அணு ஆயுத ஒழிப்பிற்கு மேலும் பலவற்றைச் செய்ய வேண்டியது கடமையாகும். அவ்வகையில் இந்நூல் அணு ஆயுத ஒழிப்பிற்கான ஒரு பிரச்சார நூல் என்றும்,அதன் விளைவுகள், உலக அமைதி என பலவற்றை பேசும் நூலாக கவனம் பெறுகின்றது. இப்படிப்பட்ட நூலை ஆக்கிய ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும், பதிப்பித்த JSR பதிப்பகத்திற்கும் நன்றியும் வாழ்த்துகளும்…

Related posts

Leave a Comment