You are here
நூல் அறிமுகம் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – மயிலம் இளமுருகு

மறுவாசிப்புகள் என்றால் என்னவென்று விளக்கம் தந்து தமிழிலும், ஆங்கிலத்திலும், பிறமொழிகளிலும் வெளிவந்துள்ள மறுவாசிப்பு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அந்நூல்கள் குறித்தான தன்னுடைய பார்வையினைச்சொல்வதாக ச.சுப்பாராவ் அவர்களால் எழுதப்பட்ட மீண்டெழும் மறுவாசிப்புகள் என்னும் நூல் இருக்கிறது. இதில் 17 கட்டுரைகள் உள்ளன. இதிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் புத்தகம்பேசுது இதழில் வெளிவந்தவையாகும். புராண வியாபாரம் என்ற முதல்கட்டுரை இருவாட்சி இலக்கிய மலரில் வெளிவந்த கட்டுரையாகும்.
நமக்கு ஏற்கனவே தெரிந்த கதையை அதை அப்படியே சொல்லாமல் அந்தக் கதை குறித்து புதிய பார்வையினையும் , தன்னுடைய கருத்தினையும் கூறி – எழுதுகின்ற நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றினைப் படித்து எப்படிப்பட்ட தாக்கத்தை நம்மிடத்து ஏற்படுத்தியுள்ளது என்பதை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலாசிரியர்.

இந்திய மக்களுக்குத் தெரிந்த ராமாயணமும், மகாபாரதமும் பெரும்பாலோனாரால் மறுவாசிப்பு செய்யப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நூல்கள் எவையெவை தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு இம்முறையிலான புத்தகங்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அமேசான் நிறுவனம் புராணக்கதை புத்தகங்களுக்கு கிராக்கி அதிகம் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தாய்மொழியைக் கற்காத ஒரு தலைமுறை வளர்ந்துவிட்டதே என்று வருந்துகின்றார் ஆசிரியர். மறுவாசிப்பாக தமிழுக்கு வந்தநூல்கள் எவையென்றும் இன்னும் மொழிபெயர்க்கப்படாத நூல்கள் எவைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வகையான மறுவாசிப்பு நூல்கள் எழுதப்பட்டு உள்ளன. 1) இதிகாசபுராணங்களை வாசகருக்கு அறிமுகம் செய்வது , அதில் ஒரு கதாபாத்திரத்தின் வீரதீர செயல்களைச் சொல்வது. 2) ஒரு புராணக்கதையைக் கூறிவிட்டு இது அப்படி நடந்திருக்கலாம் , இப்படி நடந்திருக்கலாம் என பின்குறிப்பாக சொல்கின்ற முறையில் எழுதப்பட்டுள்ளன.

ஆனந்த் நீலகண்டன் எழுதியுள்ள அசுரா (ராமாயணம்) அஜயா (மகாபாரதம்) நாவலின் சிறப்பை விரிவாக விளக்கி சொல்லியுள்ளமை அருமை. மறுவாசிப்பு நூல்களில் அதிகமாக எழுதப்பட்டசீதை , திரௌபதி குறித்து கூறி சீதையை உயர்வாக சொல்கின்ற முறையும், திரௌபதி ஐந்து நபர்களுக்கு மனைவி என்ற காரணத்தால் அவரை இழிவாக குறைத்து சொல்லியுள்ள நிலையினையும் நூல் எடுத்துரைக்கின்றது. பெண் படைப்பாளர்கள்கூட ஆண்மனத் திமிர்கொண்டே திரௌபதியை எழுதியுள்ளது வேதனை அளிக்கிறது என பதிவு செய்துள்ளார். இந்தியாவின் டான்பிரவுன் என்று சொல்லப்படுகின்ற அஸ்வின் சாங்கியைக் குறிப்பிட்டு அவருடைய நூல்கள் குறித்தும் சொல்லியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் மின் புத்தகங்கள் விற்பனையும் அமோகமாக வளர்ச்சியடைந்துள்ளது. அவ்வகையில் மின்புத்தக விற்பனை முறையில் மிக அதிகமாக விற்கப்பட்ட இந்திய எழுத்தாளர் அசோக் பாங்கர் ஆவர். இவர் ராமாயணத்தை எட்டு பாகங்களாக எழுதியுள்ளார்.

இன்றைய தலைமுறையினர் தாய்மொழியோடும், தாய்மண்ணோடும் தொடர்புடைய புராணக்கதை இதிகாசங்கள் தெரியாதவர்களாகவே வளர்கின்றனர் என்று வருத்தப்படுகின்றார். இதனை மறுவாசிப்பு நூல்களின்வழி தவறாகவும் விளங்கிக் கொள்வது தவறு என்று குறிப்பிடப்படுகின்றது. உண்மைதான் வலது சாரி சிந்தனைகொண்ட மறுவாசிப்பு நூல்கள் படிப்பவர் அச்சிந்தனையோடு இருப்பது என்பது கவனிக்கத்தக்கது. சமூகப்பிரக்ஞையும் , ஆவலையும் கொண்ட வாசகருக்கு இவை அச்சத்தைத் தருகிறது என்பது எண்ணத்தக்கது
புராதன இந்தியாவில் எல்லாம் இருந்தன என்ற குரல் இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகை என மக்கள் தகவல் தொடர்பு ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட மறுவாசிப்பு நூல்களைக் குறிப்பிட்டு நொந்து கொள்கிறார் ஆசிரியர். அமிஷ்திரிபாதி எழுதிய தி இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலுவா என்ற நூலை ஆய்ந்து விரிவாக கருத்துரைத்துள்ளார்.. நானூறு பக்கம் கதையாக வருகின்ற விதம் , சோமரசம் , பிரம்மா என ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி, மெலுவா என்ற இடம் குறித்தும் ஹரப்பா காலத்தில் அட்டாச்ட் பாத்ரூம் இருந்தது என்று கூறுவதெல்லாம் அபத்தமாகின்றது.

கிறிஸ்டோபர் டாயில் எழுதிய தி மஹாபாரதா சீக்ரெட் நாவல் கூறும் செய்தியை சக்ராயுகத்தில் லேசர் என்னும் கட்டுரையில் அறிய முடிகின்றது. வியாசரின் விமானப்பர்வம் , அசோகர் காலத்தில் நீக்கியமை என அல்கொய்தா இந்த ரகசியத்தைக் கண்டறிகின்றது. இந்த ரகசியத்தைக் காக்கும் குடும்ப வாரிசான கதாநாயகனே ரகசியத்தைக் கண்டுபிடித்து வில்லனை அழிப்பதாக கதை முடிகின்றது. மேலும் இதில் சொல்லப்பட்ட தொழில் நுட்பங்களின் வித்தியாசங்களைக் குறிப்பிட்டு கேள்விக்குள்ளாக்குவது அருமை. ரீல் விடுகின்ற தன்மையை மிகத்தெளிவாக இப்பகுதியில் கிண்டல் தொனியில் விமர்த்து சரியான கருத்தைச் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது.

மறுவாசிப்பு நூலான ஜயாநூல் குறித்து விளக்கமாகவும் ஆய்வு நோக்கிலும் தன்னுடைய தருத்தை முன்வைத்துள்ளார் ஆசிரியர். இப்பகுதியில் பல்வேறு தொகுப்புக் கருத்துக்களைக் கூறியிருப்பது சிறப்பு. கவிதாகானே எழுதிய தி கர்னாஸ் வைஃப் என்ற நூலை ஆய்ந்து அலசி நிறைகுறைகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியின் வழியாக மனைவி துருவிக் கேட்கும் கேள்விகள், கவிதாகானேவை நோக்கிய விதம் , கர்ணனின் செயல்பாடுகள், திரௌபதி குறித்த பார்வை என பலதிறப்பட்ட கருத்துகளை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

தேவதத் பட்நாயக் என்பவர் எழுதிய சிகண்டியும் அவர்கள் சொல்ல மறுக்கும் வேறு கதைகளும் என்ற இதிகாச கதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டதைப் படித்தறிந்து அதனுள் பொதிந்துள்ள கருத்துகளை வாசகர்களுக்கு முன்மொழிந்துள்ளார். யார் யார் இந்நூலைப் படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். அதிகமாக நாம் உன்னித்துப் பார்க்காத கதைகள் இதனுள் இருப்பதையும், ஒரு சிலவற்றைக் கூறவும் செய்து, நூலைப் படிக்கவேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார். மேலும் இப்பகுதியில் விளிம்புநிலை , ஓரினச் சேர்க்கையாளர் , மூன்றாம் பாலினத்தவர் குறித்து குறிப்பிட்டுள்ளது எண்ணத்தக்கது.

சித்ராபானர்ஜியால் எழுதப்பட்ட திவாகருணியின் தி பாலஸ் ஆஃப் இல்யூஷன்ஸ் என்ற மறுவாசிப்பு நூலைப் படித்துவிட்டு அந்நூல்குறித்து விளக்கி நிறைகளை பேசும் அவர் இறுதியில் குறைகளையும் சுட்டியுள்ளார். காண்டவ காட்டை அழித்து பாண்டவர்கள் கட்டிய கனவு மாளிகை குறித்து பேசுவதாக அந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. திரௌபதி கர்ணன் மீது காதல் கொண்டவளாக காட்டுவது ஏன் என்றும், அனைவருக்கும் இருக்கும் ஆணாதிக்க மனநிலையைக் குறித்துக் கூறிக் வேதனைப்படுகின்றார் ஆசிரியர்.

அஸ்வின் சாங்கி எழுதிய தி கிருஷ்ணாகீ என்ற நாவலை எவ்வளவு பொறுமையாக படித்தேன் என்றும் அதனை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு வாசகருக்கு புரியும் வண்ணம் பக்கம் 56 இல் விளக்கியுள்ளார். இந்துத்துவாக் கருத்துக்களை இளைய தலைமுறைக்குப் பரப்ப இலக்கியச் சேவை என்று கூறி, பணம் சம்பாதித்துக் கொண்டு நடந்தேறியுள்ள கூத்தினைத் தெளிவாக்குவது ஆகச்சிறப்பு.

அஸ்வின் சாங்கியின் கற்பனை மிகக் கேவலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இப்படிச் செய்வது ஏனென்றே புரியவில்லை. குறிப்பாக அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹீமர் பகவத் கீதையைப் படிக்க சமஸ்கிருதம் கற்றார் என்று தொடங்கி ஒவ்வாத கருத்துகளைச் சொல்லியிருப்பது வியப்பிற்குரியது. மேலும் இந்நூலை மொழி பெயர்த்த அகிலா சிவராமனின் மொழிபெயர்ப்பு எப்படி உள்ளது என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். ஏன் இப்படி மட்டமாக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமென்பது கேள்விக்குரியது.

ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’ நூல் குறித்துக் குறிப்பிட்டு தன்னுடைய பார்வையினை மிகத் தெளிவாக கூறியுள்ளார். காலம், ஜனமேஜெயன், சோமபானம் , கதைமாந்தர் ஓப்பீடு , ராமாயணம், பாரதம் என பல்வேறு செய்திகளையும் அறியலாம். ஒரு த்ரில்லர் நாவல் போன்று எழுதப்பட்ட ஆய்வு நூல் என்றும் குறிப்பிடுகிறார்.

கங்கை, சத்யவதி கதைமாந்தர் குறித்து மறுவாசிப்பு செய்யப்பட்டு சரத் கொமாரரா ஜீவியால் எழுதப்பட்ட தி விண்டஸ் ஆஃப் ஹஸ்தினான் என்ற நாவல் தரும் செய்திகளைச் சத்யவதியின் கேள்விகள் , வியாசன் , பீஷ்மர் என பல்வேறுபட்ட குறிப்புகளை நூலாசிரியர் தந்துள்ளார். மேலும் நாவலின் தனிச் சிறப்பும் விளக்கப்பட்டுள்ளது.

பீமன் பற்றிய எண்ணம், பீமனின் காதல் கதை , வீரம் என்பதினைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட மறுவாசிப்பு நாவலான பீமாதி மேன் இன் தி ஷேடோஸ் என்பதை விகாஸ் சிங் எழுதியுள்ளார். இந்நூல் குறித்த அறிமுகத்தையும், நாவலின் தனிச்சிறப்பு , பாஞ்சாலிக்காக பீமன் ஏங்குவது, பாஞ்சாலியின் பீமன் பற்றிய எண்ணம், இறுதியில் பீமன் மட்டுமே இமயமலையில் துணையாக இருப்பது, இருவரும் இறப்பது என கதையின் கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுவாசிப்பு என்று சொல்லி ஒரு இதிகாசத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவரவர் இஷ்டத்திற்கு எழுதி வருகின்ற நிலைகுறித்து ஆதங்கப்பட்டதை நூலின் வழி அறிகின்றோம். அவ்வகையில் அமிஷ் திரிபாதியின் நாவலான ஷ்யான் ஆஃப் இஷ்வாகு என்ற நாவல் தருகின்ற செய்தியை மிகத்தெளிவாக விமர்சனம் செய்தமை நன்று. இடையில் நிர்பயா கதை வருவது , ராவணன், கும்பகர்ணன் கதை , ஜடாயு, சீதை என மாறுபட்ட விதத்தில் உயர்த்தி செல்வது, திரித்துக் கூறுவது என்பது தேவையற்றதாகவே உள்ளது. மேலும் முதல் பாகம் இதுவென்றும் இன்னும் 5 அல்லது 6 பாகம் பாக்கி உள்ளது, வரும் என்றும் குறிப்பும் தந்து அதிர்ச்சி அடையச் செய்கின்றதை குறித்துள்ளார் ஆசிரியர். ஆனால் இப்படிப்பட்ட நாவல் விற்பனையில் சக்கைப்போடு போடுவது ஏனென்றும் கேள்வி எழுப்பியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

கவிதா கார்னே எழுதிய சீதாஸ் சிஸ்டர் என்ற நூல் குறித்தக் கதையினைக் குறிப்பிட்டு, அந்த நூல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊர்மிளா கேட்கும் கேள்விகளை அடுக்கிச் சொல்லியுள்ளார். சீதையின் நிலை, தன் கணவர் இலட்சுமணன் செய்த செயல், இராமனின் செயல் என எல்லோரிடத்தும் கேட்டுள்ளதைத் தொகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நாவலின் சிறப்பு எது என்றும் கூறியுள்ளார்.
துரியோதனின் பார்வையை , அவனுடைய கூற்றாக வைத்து எழுதப்பட்ட ரகுநாதனின் ‘துர்யோதனா’ என்ற ஆங்கில நாவல் குறித்து பல்வேறு விடயங்களை இந்நூலின் வழி அறியலாம். கௌரவர்களின் செயல்களைக் கேள்விக்குள்ளாக்கி நாவல் தருகின்ற வித்தியாசமான பகுதியினை மிக அழகாகச் சொல்லி படிப்பவருக்கு இன்பம் தந்துள்ளார் ஆசிரியர்.

வினீத் அகர்வாலின் ‘விஸ்வாமித்திரா’ நாவல் குறித்தும் அதன் நிறைகுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்நூலின் மறுவாசிப்புப் புரட்டல் கவனிக்கத்தக்கது. நாவலின் அபத்தங்களைப் பட்டியலிட்டு ஏன் இதனைப் படித்தோம் என்றும் கூறுவதை நாம் அறிகிறோம்.
ஒரு அரசர் இரு மனைவிகள் , இரு புதல்வர்கள் என்ற இறுதிக் கட்டுரையில் கிருஷ்ணன், அவருடைய மனைவியான ருக்மணி, ஜாம்பவதி, குழந்தை பிரத்யுமன், சாம்பன் என கதையினை விவரித்து கூறப்பட்டுள்ளது. உஷா நாராயணனின் பிரத்யும்னாசன் ஆஃப் கிருஷ்ணன் என்ற நாவல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அட்டைப்படம் , கதை என பலவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்தி கூறியுள்ளார். மேலும் ஜீவகாருண்யன் எழுதிய ‘கிருஷ்ணன் என்றொரு மானுடன்’ என்ற நூலை ஒப்பிட்டு தமிழ்ப்படைப்பாளருக்குப் பெருமை சேர்ப்பதை அறிய முடிகின்றது. ஆனால் இந்த நாவல் அந்தளவு விற்பனை ஆகாதது குறித்து ஆதங்கப்பட்டதையும் அறிய முடிகின்றது.

உண்மையில் மறுவாசிப்பு நூல் குறித்த சிறந்த புத்தமாக இந்நூல் உள்ளது. பல்வேறு மொழி இலக்கியங்களை நம் தமிழ்மொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டுக்கூறியதில் அவருடைய நேர்மையைப் பார்க்க முடிகிறது. பிறமொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளமை அருமை. எந்த நூலைப் படித்து நம் நேரத்தை வீணாக்கக்கூடாது என ஆலோசனையையும் இந்நூல் தருகின்றது. இப்படிப்பட்ட நல்ல நூலை வெளியிட்டு நூலாசிரியரையும், வாசகரையும் ஆர்வப்படுத்திய பாரதி புத்தகாலயத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இது மேலும் ஆசிரியர் சுப்பாராவ் அவர்களை எழுதத்தூண்டும் என்பது எள்ளளவும் ஐயமில்லை. இந்நூல் போன்று புதிய கோணத்தில் சிந்தித்து நூலாக்கித் தருவீர்கள் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது, விரைவில் எதிர்பார்க்கிறோம்…

Related posts

Leave a Comment