You are here
மற்றவை 

நிலைபெற்ற நினைவுகள்

ச.சுப்பாராவ்

ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஐரோப்பா முழுவதும் நடந்தான். கார்க்கி ரஷ்யா முழுவதையும் தன் கால்களால் அளந்தான். முசோலினி நடந்தேதான் ரோம் நகரை அடைந்தான் என்று படித்திருந்த அந்தப் பையன் எழுத்தாளனாகும் பெரும் கனவுடன் சென்னைக்கு நடந்தே போவது என்று தீர்மானித்தான். திருநெல்வேலியிலிருந்து சென்னை சுமார் 400 மைல். தினமும் 30 மைல் நடந்தால் 14 நாட்களில் சென்னையை அடைந்து விடலாம் என்று கணக்கிட்டு 1942 மே மாதம் 25ம் தேதி கிளம்பினான். பையில் 2 வேட்டி, 2 சட்டை, 2 துண்டு, எஸ்எஸ்எல்சி சான்றிதழ், சில புத்தகங்கள், கொஞ்சம் வெற்றுத் தாள்கள், ஒரு பேனா. முதல் நாள் கோவில்பட்டி, அடுத்தநாள் விருதுநகர், அடுத்த நாள் மதுரை. ஆனால், அங்கிருந்து விதி அவனை புதுக்கோட்டைக்கு அனுப்பியது. திருமகள் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தான். இப்படி நடந்து நடந்தே மதுரை வரை வந்தவர், 70 – 80 ஆண்டு காலம் காலை முதல் இரவு வரை எழுதுவது, படிப்பது, நண்பர்களுடன் கலந்துரையாடுவதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டிருந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன்.

அவரது சுயசரிதை ‘நிலைபெற்ற நினைவுகள்’ என்று இரண்டு பாகங்களாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் ‘நான் கண்ட வல்லிக்கண்ணன்’ என்று கழனியூரன் எழுதிய ஓர் அற்புதமான சிறு கட்டுரையும் இருக்கிறது. இதுபோக வல்லிக்கண்ணன் தாமே எழுதிய ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற மற்றொரு சுயசரிதையும் (மேற்கூறிய இரு பாகங்களின் தகவல்களையும் இணைத்தும், சிலவற்றைச் சேர்த்தும், சிலவற்றை நீக்கியும்) வந்துள்ளது. தனது சுயசரிதையை இரண்டு புத்தகங்களாக எழுதிய ஒரே எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஒருவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அவரது வாழ்க்கை வரலாறு ஒரு காலகட்டத்தின் தமிழ் இலக்கியத்தின் வரலாறு என்று சொல்லலாம். அதேபோல மிக இயல்பாக அந்தக் காலத்துத் தமிழகத்தின் பல்வேறு சித்திரங்களைப் பதிவு செய்துள்ள ஒரு தகவல் ஆவணம் என்றும் சொல்லலாம்.
சிறுவயதில் ஒட்டப்பிடாரத்தில் வல்லிக்கண்ணன் ‘வக்கீல் பிள்ளை’ வீட்டில்தான் குடியிருந்திருக்கிறார். நீங்கள் நினைத்தது சரிதான். வக்கீல் பிள்ளை வ.உ.சிதம்பரனார்தான்! அவரின் சிறுவயது நினைவுகளில் காலண்டர் படங்கள் – அவை ஜெர்மனியில் அச்சிடப்பட்டவை! – சுந்தரி சோப், லயன் பிராண்ட் சோப், வினோலியா ஒயிட் ரோஸ் சோப், ஹண்ட்லி பால்மர்ஸ் பிஸ்கட் என்று சகலமும் இடம் பெற்றுள்ளன. . அடுத்து அவர் வசித்த ஊர் பத்மாவதி சரித்திரம் எழுதிய அ.மாதவையாவின் பெருங்குளம். வல்லிக்கண்ணனின் அப்பாவைப் போலவே அ.மாதவையாவும் அந்த ஊரில் சால்ட் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்திருக்கிறார்.

வல்லிக்கண்ணனின் சிறுவயதில் பகத்சிங் தூக்கிலிடப் படுகிறார். அப்போது பள்ளிகளின் வாசல்களில் பகத்சிங் படம் போட்ட பேட்ஜ் விற்கிறார்கள். பகத்சிங் சட்டைக் காலர் போல் காலர் வைத்து தைத்துக் கொள்வது ஃபேஷனாக இருந்திருக்கிறது. விதவிதமான ஆங்கிலேயர் எதிர்ப்பு. பிரிட்டிஷ் அரசர் தலை படம் போட்ட நாணயத்தில் ஓட்டை போட்டு சாவிக்கொத்தில் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அந்த ராஜா தலைக் காசை வைத்து தக்ளி செய்து நூல் நூற்கும் போது ராஜாவைப் பழி வாங்கிய திருப்தி மக்களுக்கு. அக்காலத்தில் மணியார்டர் பாரம் இலவசம். அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்துகிறேன் என்று ஒரு தேச பக்தர் தினமும் 30- 40 பாரங்களை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டுச் செல்வாராம்! நெல்லையப்பர் கோவில் தேரை இழுக்க ஆட்களே வரமாட்டார்களாம். தேர் நிலைக்கு வர 7-8 நாட்களாகுமாம். ஒரே நாளில் தேரை நிலைக்குக் கொண்டுவர கோவில் நிர்வாகி ஒரு ஐடியா செய்தாராம். தேரில் காந்தி படத்தையும் வைத்து, சில காங்கிரஸ் கொடிகளையும் கட்டினாராம். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாகமாக தேர் இழுக்க தேர் ஒரே நாளில் நிலைக்கு வந்தது. உண்மையிலேயே நிலைபெற்ற நினைவுகள்தான் இவை…

அதுமட்டுமல்ல.. 30களிலிருந்து தமிழ்ப் பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள், சினிமா, படைப்பாளிகள் பற்றிய அரிய தகவல்களும், சின்னச் சின்ன சம்பவங்களும் பின்னிப் பின்னி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு. 1930களில் சுதந்திரச் சங்கு, காந்தி, மணிக்கொடி எல்லாம் காலணாவிற்கு விற்கப்பட்டிருக்கின்றன. பாரதிதாசன் சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் என்று ஒரு கவிதை இதழ் நடத்தியிருக்கிறார். இதுதான் தமிழின் முதல் கவிதை இதழ். விளம்பரங்கள், மதிப்புரைகள் எல்லாம் கூட கவிதையாக வந்த புதுமையான இதழ். அக்காலத்தில் நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி என்று பத்திரிகைகளின் பெயரில் ஒரு சக்தியைச் சேர்க்கும் பேஷன் இருந்தது என்கிறார் வல்லிக்கண்ணன். விகடன் எஸ்.எஸ். வாசன் ‘மெரி மேகசின்’ என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை நடத்தினாராம். கதைகளின் தலைப்புகள் ‘தேவி தி டான்சர்,’ ‘பாலா தி பேட் உமன்’ என்றெல்லாம் இருக்குமாம்.

1937ல் விவசாய அதிகாரியாக சிறிது காலம் பணியாற்றவும் செய்திருக்கிறார் வல்லிக்கண்ணன். அப்போது மாதம் 19 ரூபாய் சம்பளம். தங்கும் செலவும், சாப்பாடும் 9 ரூபாயில் முடிந்துவிடும். வீட்டுக்கு 5 ரூபாய். சில்லரைச் செலவுகளுக்கு 1 ரூபாய். பாக்கி நான்கு ரூபாய்க்கு புத்தகங்கள். முதன்முதலாக கல்கியின் கணையாழியின் கனவைத்தான் வாங்குகிறார் வல்லிக்கண்ணன். 1940ல் புன்னகையும் புதுநிலவும் என்ற கதை விகடனில் வெளியாக சன்மானம் 15 ரூபாய்! அன்று அவரது வீட்டு வாடகை 3 ரூபாய்! அரசு அதிகாரி எழுதக் கூடாது என்று மேலதிகாரி பிரச்னை செய்ய வேலையை ராஜினாமா செய்தவர் இறுதிவரை எந்த வேலைக்கும் போகாமல் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்துவிட்டார்.
கிராம ஊழியன் என்ற சிறுபத்திரிகையில் நீண்ட நாட்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தப் பத்திரிகையில் எழுதாத தமிழ் இலக்கியத்தின் பெரிய படைப்பாளிகளே இல்லை என்று சொல்லலாம். புதுமைப்பித்தனின் வேளூர் கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரிலான புகழ்பெற்ற கவிதை அதில்தான் வந்தது. தி.ஜானகிராமனின் முதல் நாவலான அமிர்தம் அதில்தான் தொடராக வந்தது. பின்னாளில் மிகப் பிரபலமான ஓவியர்கள் கோபுலுவும், சாரதியும் கிராம ஊழியனில் படம் வரைந்தார்கள். பெரிய பெரிய படைப்பாளிகளின் படைப்புகள் போக, வல்லிக்கண்ணனும் அதில் எழுதிக் குவித்திருக்கிறார். நையாண்டி பாரதி, ரா.சு.கி, (அவரது இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி), கோரநாதன், மிவாஸ்கி, பிள்ளையார், சொக்கலிங்கம், வேதாந்தி, சோனாமூனா, கெண்டையன் பிள்ளை, கீராவதாரன், நடுத்தெரு நாராயணன், இளவல், ரா.சு.கிருஷ்ணசாமி என்று பல பெயர்களில் கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதித் தள்ளினார்.

வல்லிக்கண்ணனுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. அவரது சுயசரிதை முழுவதுமே தமிழ் எழுத்துலகு, பத்திரிகை உலகு, அது சார்ந்த மனிதர்களின் பதிவாகவே இருக்கிறதேயன்றி, சிறுவயது நினைவுகளைத் தாண்டி, குடும்ப விஷயங்கள் எதுவுமே இல்லை. சுயசரிதையின் இணைப்பாக கழனியூரன் எழுதியிருக்கும் ‘நான் கண்ட வல்லிக்கண்ணன்’ என்ற சிறு கட்டுரைதான் அவரைப் பற்றிய ஒரு கோட்டுச் சித்திரத்தைத் தருகிறது. அவர் நம் காலத்தில் காந்தி போல் வாழ்ந்தார் என்கிறார் கழனியூரன். டூத்பேஸ்ட், பிரஷ், சோப், பவுடர் எதுவும் பயன்படுத்த மாட்டாராம். கோபால் பல்பொடிதான். அவர் ஜட்டி கூட பயன்படுத்தாமல், 20ம் நூற்றாண்டின் இறுதியிலும் கோவணம் தான் கட்டிக் கொண்டிருந்தார் என்பது வியப்பாக இருக்கிறது. அவருக்கு தமிழகம் முழுவதும் நண்பர்கள். தாம் படித்து முடித்த துறை சார்ந்த புத்தகங்களை, அத்துறை சார்ந்த நண்பர்களுக்கு அனுப்புவாராம். கூடவே அந்த நூலைப் பற்றி ஓர் அறிமுகக் கட்டுரையும். உறையில் சிவப்பு மையில் அச்சிட்ட நூல் மட்டும் என்று எழுதி அனுப்புவாராம். நம் காலத்தில் இப்படியொருவரும் இருந்திருக்கிறாரே என்று ஆச்சரியப் படுத்தும் எளிய வாசகனாக, எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார். எனக்கு அவரது படைப்புகளிலேயே சிறந்தது அவரது சுயசரிதைதான் என்று தோன்றுகிறது.

Related posts

Leave a Comment