You are here
நேர்காணல் 

“குழாயத் தொறந்தா பணம் கொட்டுமே, உங்களுக்கென்னங்க குறை?” என்றார்கள்

– சுந்தர் கணேசன்
இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநரான திரு. சுந்தர் கணேசன், பழமையான தமிழ் நூல்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், வரலாற்று ஆய்வாளர். இயற்பியல் துறையில் தான் பெற்ற நிபுணத்துவத்தை புத்தகங்களைப் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தோடு இணைத்துப் பயன்படுத்துகிறார். உலக அளவிலான நூலகங்கள் குறித்தும், ஆய்ந்தும் பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘யாழ்ப்பாண நூலகத்திற்கு ஓர் இரங்கற்பா’ என்பது இவர் எழுதிய குறுநூல். ரோஜா முத்தையா நூலகம் பற்றிய மாற்றுவெளி சிறப்பிதழ், மற்றும் காப்புரிமைச் சட்டம் குறித்த தொகுப்பு நூல் ஆகியவற்றின் பதிப்பாசிரியர்.

நூலகத்துறை சார்ந்த ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பள்ளிக் காலச் சூழல் போன்ற அம்சங்களிலிருந்து தொடங்கலாமா?
சுந்தர்: ஆமாம். அது சரியாக இருக்கும். நான் படித்த பள்ளி, சென்னை ஐ.ஐ.டி.யினுள் உள்ள வனவாணி ஸ்கூல். அங்கு மிகச் சிறப்பான ஒரு நூலகம் உண்டு. நூலகம் சார்ந்த எனது ஆர்வங்களுக்கு அது தான் அடிப்படையாக அமைந்தது எனலாம். பள்ளி நாட்களில் எனது ஆர்வம் வாசிப்பில் மட்டும்தான் இருந்தது. பள்ளிப் பருவத்தில் பாடப்புத்தகங்களைச் சேகரிப்பது எனது பழக்கமாக ஆனது. +2 வரையிலான பாடநூல்கள் அனைத்தும் என்னிடம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன. அப்போது எழுத்தில் ஆர்வமில்லை. ஆண்டு மலருக்கு அல்லது கட்டுரைப் போட்டிகளுக்கு என்று எழுதியது மட்டும்தான்.

ரோஜா முத்தையா நூலகப் பணிக்குத் தாங்கள் வந்தது எப்போது? எப்படி?

உண்மையைச் சொல்லப்போனால், நான் இந்த நூலகத்தில் பணிக்கு வந்தது ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். இயற்பியல்தான் என்னுடைய அடிப்படை சப்ஜெக்ட். பின்னர் வரலாறும் நூலகவியலும் பயின்றேன். ஆய்வு சம்மந்தப்பட்ட பணிகளில், பொருளியல் சார்ந்த பணிகளில்தான் நான் முன்பு இருந்தேன். பன்னாட்டு நிறுவனங்களுக்காக பணிபுரிந்திருக்கிறேன். இந்த நூலகத்துறைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத துறையில்தான் நான் இருந்தேன். புகைப்படங்களெடுப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1994இல் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அமைந்தது. அப்போது முகப்பேரில் அது இருந்தது. மொழி அறக்கட்டளையுடன் இணைந்த ஓர் அமைப்பு. திரு. சங்கரலிங்கம்தான் அதன் முதல் இயக்குநர். ‘க்ரியா’ இராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஆரம்பகட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த காலம். புத்தகங்களையும், பிற ஆவணங்களையும் நுண்படச்சுருள் பதிவு (MicroFilming) களாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது போன்ற பணிகளுக்காகத்தான் என்னை அழைத்திருந்தார்கள். என்னுடைய இயற்பியல் கல்விப் பின்னணி அதற்கு உதவிகரமாக இருந்தது. நானும் போய்ச் சேர்ந்தேன். 1994 முதல் 97 அக்டோபர் வரை சங்கரலிங்கம் அவர்கள் இயக்குநர். 97 முதல் 2000 வரை தியடோர் பாஸ்கரன் அவர்கள் இயக்குநராக தொடர்ந்தார். அவர்களுடன் பணியாற்றியதும், தொடர்ந்ததுமான பத்தாண்டுகள் மிகவும் அடிப்படையான பணிகள் நடந்த காலகட்டமாக அமைந்தன. அந்த வேலை பிடித்துவிட்டது. ஆகவே தொடர்ந்தேன்.

ஆய்வு, பொருளியல் சார்ந்த பணிகளிலிருந்து இது மிகவும் வேறுபட்டதாக இருந்திருக்குமே? எப்படி சமாளித்தீர்கள்?

நான் முதலில் குறிப்பிட்டது போல, முற்றிலும் வேறுவிதமான பணியாகத்தான் இது இருந்தது. நான் தமிழில் படிக்க ஆரம்பித்தது 9ஆம் வகுப்பிலிருந்துதான். அதற்கு முன் என்னுடைய வாசிப்பெல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்தது. இங்கு முழுவதும் தமிழ்நூல்கள், பத்திரிகைகள் சார்ந்த வாசிப்பு தேவையாயிருந்தது. தாய்மொழியில் அடிப்படைக் கல்வி இருந்தால்தான் நல்லது என்று அனுபவத்தில் உணர முடிந்தது. முதலிலிருந்தே தமிழ்வழியே படித்திருந்தேன் என்றால், என்னுடைய பணியை இன்னும் நன்றாகச் செய்வது என்பது முதலிலிருந்தே சாத்தியமாகியிருக்கும். படிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. சங்கரலிங்கம் சார், தியடோர் பாஸ்கரன் சார் இயக்குநர்களாக இருந்த காலம். சுதந்திரமான முறையில் எங்களைப் பணியாற்ற அனுமதித்த காலம். கட்டுப்பாடுகளோ, இதை இந்தத் தேதிக்குள் செய்தே தீர வேண்டுமென்ற நெருக்கடிகளோ இல்லை. எனவே புதிய சிந்தனைகளை, வேலை முறைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது. சங்கரலிங்கம் சாருடன் மூன்று ஆண்டுகள் பணியாற்றியது எனக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. அதனால் அவர் மறைந்ததும் தொய்வேற்படாமல் பணிகளைத் தொடர்ந்தோம்.

ரோஜா முத்தையா என்ற ஆளுமையின் சேகரிப்புகளைப் பற்றி படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. அவருடைய மொத்த சேகரிப்புகளையும் ஆவணப்படுத்த முற்பட்டபோதும், நிறைவு செய்த போதும் எப்படியான உணர்வுகளை அடைந்தீர்கள்?

ரோஜா முத்தையா சேகரித்து வைத்திருந்தவை மொத்தம் ஓர் இலட்சம் ஆவணங்கள். அவற்றில் 50,000 புத்தகங்கள், எஞ்சிய 50,000 பத்திரிகைகள் பிற வகையானவை. ரோஜா முத்தையா காலமான பிறகு, அவற்றைப் பணம் கொடுத்து வாங்கப்பட்டது. நிதியுதவியின் மூலம் அவற்றை வாங்கவும், பிறகு நுண்படம் (Microfilming) மூலம் பாதுகாக்கவும் சிகாகோ பல்கலைக் கழகம் உள்பட மூன்று அயல்நாட்டு நிறுவனங்கள் உதவி செய்தன. நூற்றுக்கணக்கான பெட்டிகள். பெட்டிகளை ஒவ்வொன்றாகத் திறந்து அவற்றிலிருந்தவற்றை ஆவணப் படுத்திக் கொண்டே வந்தோம். அடிப்படையான ஒரு கருவாக, நியூக்ளியஸாக அமைந்தது ரோஜா முத்தையாவின் சேகரிப்பு. அதை வைத்துக் கொண்டு படிப்படியாக விரிவாக்கம் செய்தோம். 1957க்கு முந்தைய நூல்களை மட்டும் நுண்படம் எடுப்பது என்று அப்போது ஒரு கால நிர்ணயம் செய்து கொண்டோம்.
ரோஜா முத்தையாவின் பங்களிப்பு மகத்தானது. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த போது அவருக்குத் தானும் அது போல நூல்களையும், ஆவணங்களையும் சேகரிக்க வேண்டுமென்கிற உத்வேகம் ஏற்படுகிறது. ஏற்கெனவே அவர் சேகரிக்கத் தொடங்கியிருந்தவற்றைப் பார்த்து விட்டு ஏ.கே. செட்டியாரும் ரோஜா முத்தையாவை உற்சாகப்படுத்துகிறார். நூலக இயக்க வரலாற்றில் இவருடைய பங்களிப்பு மகத்தானது.

1957க்கு முந்தைய நூல்களை முதலில் ஆவணப்படுத்தியதாகச் சொன்னீர்கள். அந்தக் கால வரையறைக்கு குறிப்பான காரணமுண்டா? முதற்பதிப்பாக வந்த நூல்களை மட்டும் எடுத்துக் கொண்டீர்களா?

காரணம், அந்த ஆண்டுதான் காப்பிரைட் (பதிப்புரிமைச்) சட்டம் இங்கு நடைமுறைக்கு வந்தது. முதற்பதிப்புகளை மட்டுமில்லாமல் அவற்றின் தொடர் பதிப்புகள் எத்தனை வந்தாலும் அவற்றையும் சேகரிக்கிறோம். ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் அவற்றில் என்னென்ன வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று ஆராய்வதற்கு அப்போதுதான் முடியும்.

நூல்கள், பத்திரிகைகள் மட்டுமின்றி வேறு வகையான பல்வேறு ஆவணங்களையும் ரோஜா முத்தையா சேகரித்திருந்தார் அல்லவா?

ஆமாம். தபால் தலைகள். துண்டுப் பிரசுரங்கள்… இப்படி ஏராளமானவை. நூல்கள் சாரா ஆவணங்கள் மூலம்தான் விளிம்பு நிலை மனிதர்களின் வரலாற்றைப் பற்றிய தரவுகளைப் பெற முடிகிறது. பிரிடிஷ் அரசு ஆவணங்களைத் தாண்டி இந்த வகையான ஆவணங்களிலிருந்து நாம் அன்றையகால கட்ட வரலாற்றின் விடுபட்ட அம்சங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன், தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பல முன்னோடியான முயற்சிகளைச் செய்தவர். இல்லையா? அவர் எழுதிய நூல்களைப் படிக்கும்போது அவருடைய தொலைநோக்குப் பார்வையை உணர முடிகிறது. அவருடைய சாரதா ரங்கநாதன் அறக்கட்டளை இன்றளவும் இயங்கி வருவதாகப் படிக்க நேர்ந்தது. அவருடைய, ரோஜா முத்தையாவினுடைய வாழ்க்கைப் பதிவுகளெல்லாம் தமிழக நூலக இயக்க வரலாற்றின் பொற்காலத்தைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. அவற்றின் இன்றைய பொருத்தப்பாடு என்ன?

தமிழ்நாட்டுக்கே நூலக வழிகாட்டியானவர் ரங்கநாதன். அது மட்டுமன்றி டெல்லி, யாழ்ப்பாண நூலகங்களுக்கும் மிகப்பெரிய வழிகாட்டி அவர். யாழ்ப்பாண நூலகத்தின் வடிவமைப்பைப் பற்றிய ஆலோசனைகள் தந்தவரே எஸ்.ஆர். ரங்கநாதன்தான்.

கோலன் பகுப்புமுறையைக் கண்டுபிடித்து வளர்த்தெடுத்ததன் மூலம், உலக நூலக இயக்கத்துக்கும் ஒரு கணிசமான பங்களிப்பைச் செய்தவர் அவர். ஒரு கால கட்டம் வரையிலும் உலக நூலகங்கள் பெரும்பாலானவற்றில் அந்த கோலன் பகுப்பு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த்து. அது வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பகுப்பு முறை. தொழில் நுட்ப ரீதியான மாற்றங்கள் வரவர, நாம் கோலன் பகுப்பு முறையில் அந்த மாற்றங்களை எப்படி உள்வாங்கி வளர்த்தெடுப்பது என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டு அதை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டோம். இன்றைக்கு எங்களால் கூட அதைப் பயன்படுத்த முடியவில்லை. உலகு தழுவியதாக யூனிவர்சலாக உள்ள (DDC) டிடிசி பகுப்பு முறையைத் தான் பின்பற்றியாக வேண்டியிருக்கிறது. மேலும் நாங்கள் இடப்பற்றாக்குறை காரணமாக நூல்கள் வரவர நாங்கள் அவற்றைப் பதிவு செய்தாக வேண்டும். பகுப்பு முறைகளையெல்லாம் கனிணியில் மட்டுமே செய்யப்படுகிறது.

இன்றைக்கும் நாம் பின்பற்ற வேண்டிய பல அம்சங்கள் கோலன் பகுப்பு முறையிலும், ரங்கநாதனின் நூலக இயல்சார்ந்த சிந்தனைகளிலும் உள்ளன. வளர்த்தெடுத்திருக்க வேண்டிய ஒன்றை, தவற விட்டு விட்டோம்.

சுதந்திரத்துக்கு முந்தைய, பிந்தைய கால கட்டத்து நூலக இயக்க வரலாற்றில் ஒற்றுமைகள் வேற்றுமைகள் இருக்கக்கூடும். தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் உங்களுடைய கண்ணோட்டத்தில் வரலாற்று ரீதியான முக்கிய அம்சங்களாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?

சுதந்திரத்துக்கு முன்பு, 1867ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு புத்தகங்கள், பத்திரிகைகள் பதிவு சட்டத்தைக் கொண்டு வந்தது. அரசுக்கு எதிராக, ஸெடிசன், ராஜத்துரோக சிந்தனைகள் புத்தகங்கள், பத்திரிகைகளில் இடம் பெறுகின்றனவா என்று பார்த்து தணிக்கை செய்வதுதான் அவர்களின் நோக்கம். வேறு ஏதோ ஒரு நோக்கத்தில், வேறு எதற்காகவோ கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் தான் அச்சாகி வெளிவருகிற நூல்களைப் பற்றிய விவரங்கள் பதிவாகத் தொடங்கின. பதிவான நூல்களின் குறைந்தபட்ச விவரங்கள் அடங்கிய நூற்றொகைப் பட்டியல் காலாண்டிற்கு ஒரு முறை அரசிதழில் வெளியாகின. இதைத் தொகுத்து பின்னர் தமிழக அரசு ஏழு தொகுதிகளைக் கொண்ட நூற்றொகையை தமிழ்நூல் விவரண அட்டவனை என்ற பெயரில் பதிப்பித்தது. பிறகு, தேசிய நூலகங்களாக உள்ள நான்கு பெரிய நூலகங்களுக்கும் அச்சில் வருகிற ஒவ்வொரு புதிய நூலையும், பத்திரிகையையும் அனுப்பி வைத்தாக வேண்டுமென்ற சட்டம் வந்தது. ஆனால் நடைமுறையில் யாரும் அதைச் செய்வதில்லை. அப்படியே அனுப்பினாலும் நூற்றொகைகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுவதுமில்லை. இதை யார் சரி செய்ய முடியும்? அரசு தான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படியான அன்றாடப் பிரச்சனைகளால் வாசகர்களுக்கும்,. பதிப்பாளர்களுக்கும் பல சிரமங்கள் இருக்கின்றன. எல்லா வகையான புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் தேசிய நூலகங்கள் நான்குக்கும் அனுப்பியாக வேண்டுமென்பதை இன்றைய சூழலுக்கேற்ப மாற்றியமைக்கலாம். நூற்பொருள் அடிப்படையில் அச்சுப் பிரதிகளை நான்காகப் பிரித்து, தென்னிந்தியாவில் சென்னை, வட இந்தியாவில் டெல்லி இப்படியாக நான்கு தேசிய நூலகங்களும் வெவ்வேறு விதமான அச்சுப் பிரதிகளைப் பெற்று ஆவணப்படுத்துமாறு செய்யலாம். இதை நூலகவியல் படித்த ஆய்வு வல்லுநர்களின் பொறுப்பில் ஒப்படைத்து பட்டியல் தயாரிக்குமாறு செய்யலாம். அதை விட்டு விட்டு டெண்டர் விட்டுத்தான் எதையும் செய்வோம் என்றால் அதில் என்ன நடக்கும்? சுதந்திரத்துக்குப் பின், புதிய முயற்சிகள் குறைந்து கொண்டே வருகின்றன. அரசு நூலகங்களைக் காட்டிலும் ரோஜா முத்தையா, பல்லடம் மாணிக்கம், ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி போன்றோர் தனிநபர்களாக முயன்று உருவாக்கிய நூலகங்கள் இல்லாமற்போயிருந்தால், ஆய்வாளர்கள் எங்கே போய் ஆய்வு செய்வார்கள்? சுதந்திரத்துக்குப்பின் அரசுகளின் கவனம் இதில் பெரிதாக இல்லை. பல்கலைக் கழகங்கள் செய்யலாம். ஆனால் இது போன்ற விஷயங்களை அவை சட்டையே செய்வதில்லை. அரசு, பல்கலைக்கழக நிர்வாகிகள், செனெட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பதிப்பாளர்கள் போன்று அத்தனை பேரும் சேர்ந்து ஒருமனதான ஆர்வத்துடன் நன்கு இணைக்கப்பட்ட ஒரு பெரும் நெட்வர்க்கை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இன்றைய நிலைமையில் பெரிய அளவில் எதாவது செய்ய முடியும். நூல்களின் காப்புரிமை, அனுமதியே இல்லாமல் தனிநபர் ஆய்வுகளை வேறுநபர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது போன்ற பிரச்சனைகளைக் கண்டுபிடித்து மூலநூல்களைப் பாதுகாக்க அப்போதுதான் முடியும். நாம் இதை எந்த பின்புலத்தலிருந்து இதைப் பார்க்க வேண்டும் என்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முன்னோடியாக நூலகச் சட்டம் வந்தது. மற்ற மாநிலங்களைவிட நாம் பல வழிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தாலும் சுய விமர்சனத்தோடு அனுகினால் மட்டுமே முன்னேற முடியும்.

பொது நூலகத்துறையுடன், ரோஜாமுத்தையா நூலகப் பணிகள் ஏதேனும் ஒரு புள்ளியிலாவது இணைய வாய்ப்புக் கிடைக்கிறதா? உங்களுடைய நிபுணத்துவத்தை அரசு பயன்படுத்திக் கொள்கிறதா?

இணைவதற்கான் பல வாய்ப்புகள் உண்டு. எந்த குழுக்களிலும் நாங்கள் இல்லை. ஆலோசனைகள் கேட்கப்படும்போது நாங்களும் தயங்காமல் தந்திருக்கிறோம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறிதான். நல்ல உத்வேகமும், தொலைநோக்குப் பார்வையும் உடைய அதிகாரிகள் பொறுப்புக்கு வரும்போது, பல புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டு நூலகத்துறை சார்ந்து மட்டும் 10 அறிவிப்புகள் சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்டன. இம்மாதிரி அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்குள் எத்தனையோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. அதுதான் பெரிய சோகம். இம்மாதிரி சிறப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை சிறந்த ஓர் அதிகாரி குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அப்பொறுப்பில் நீடிக்குமாறு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், அதிகாரியாலும் நீடிக்க முடிவதில்லை. அறிவிப்புகளும் நடைமுறைக்கு முழுமையாக வருவதில்லை. நல்ல தனியார் ஆய்வு நூலகங்களுடன் பொது நூலகத்துறை இணைந்து செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்.

ரோஜா முத்தையா, ஞானாலயா, பல்லடம் மாணிக்கம் போன்ற தனி நபர் நூலகங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளனவா? இது போன்ற முயற்சிகளில் சிறப்பானவை பற்றி சொல்ல முடியுமா?

பல மாநிலங்களிலும் இது போன்ற முக்கியமான முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதில் முக்கியமான ஒரு மாடல், பஞ்சாப் மாநிலத்தினுடையது. இந்திராகாந்தி கொல்லப்பட்டவுடன், சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன. பஞ்சாப் முழுவதிலுமிருந்த பல நல்ல நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எனவே, அவர்கள் ஓர் அடையாளச் சிக்கலை உணர்ந்தார்கள். புத்தகங்கள், அச்சுப் பிரதிகளாக மட்டும் இருப்பதால்தானே எரித்து விடுகிறார்கள்? அவற்றை Online இல் பாதுகாப்பதன் மூலம் அறிவுச் செல்வத்தைப் பாதுகாக்க முடியுமே? ஆகவே அவர்கள் தீவிரமாக முயன்று நூல்களைச் சேகரித்துப் பாதுகாக்க முயன்றதில் உருவானவைதாம் Punjab Digital Library மற்றும் இலங்கையின் நூலகம் ஃபவுண்டேஷனும். இவை இரண்டும் மிக முக்கியமான மாதிரிகள். வங்கத்தில் Centre For Studies in Social Science இன்னொரு சிறந்த முயற்சி. வடகிழக்கு மாநிலங்கள் சார்ந்த நூல்களெல்லாம் இங்கே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மராட்டிய மொழி நூல்கள் பூனாவிலும், தெலுங்கு மொழி நூல்கள் ஆந்திராவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யாவின் நினைவாக அமைந்த ‘சுந்தரய்யா விக்யான் கேந்திரா’ விலும் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகின்றன. உருது மொழியில் அப்துல் சமதுகான் என்பவர் மிக அரிய சேகரிப்புகளைக் கொண்ட நூல் நிலையத்தை அமைத்துள்ளார். இப்படி இன்னும் பலரும் பல்வேறு இடங்களில் செய்து வருவதையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.

ரோஜா முத்தையா நூலகம் தரமணிக்கு இடம் பெயர்ந்த பிறகு, நீங்கள் இயக்குநரானபின் சமீபகாலங்களில் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்? இங்கு இன்றைய நிலையில் என்னென்ன ஆவணங்கள் இருக்கின்றன? எண்ணிக்கையளவிலும், நூற்பொருள் அளவிலும் அடைந்த விரிவாக்கம் பற்றிய செய்திகளைச் சொல்லுங்கள்.

ரோஜாமுத்தையாவின் சேகரிப்புகளின் நூற்பட்டியலை முதலில் டிஜிட்டலைஸ் செய்து வந்தோம். ஒரு சிறிய நூற்றொகைப் பட்டியல் ஒன்றை 1994-95 ஆம் ஆண்டுகளில் முதலில் உருவாக்கினோம். ஆசிரியர், நூற்பொருள். பதிப்பகம், வெளியான ஆண்டு போன்ற குறைந்தபட்ச விவரங்கள் மட்டும் அதில் இடம் பெற்றிருந்தன.
முன்பு மொழி அறக்கட்டளை நிர்வாகத்தில் சில கோட்பாடுகள் இருந்தன. உதாரணமாக, ஒரு ஸ்காலர் என்பவர்தான் இங்கு ஆய்வு மேற்கொள்ள முடியும். 2004ஆம் ஆண்டுக்குப் பின், யார் வேண்டுமானாலும் ஆர்வமிருந்தால் வந்து பயன்படுத்தலாம் என்ற முடிவை நடைமுறைப்படுத்தினோம். பல மாவட்டங்களிலும் ஊர் ஊராகச் சென்று தனிநபர்களிடமிருந்த நூல்களையும், பிற ஆவணங்களையும் தீவிரமாகச் சேகரிக்கத் தொடங்கினோம். 1994இல் அச்சுப் பிரதிகள் மட்டுமே நூலகத்தில் முதன்மையிடம் வகித்தன. பின் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள், கிராமபோன் ரிக்கார்டுகள், போன்ற பல்வேறு விதமான ஆவணங்களையும் சேகரித்துப் பாதுகாக்கத் தொடங்கினோம். புகைப்படங்கள், காலண்டர் ஓவியங்கள், திருமணம் போன்ற குடும்ப விசேஷங்களுக்கான அழைப்பிதழ்கள் என எல்லாவற்றையும் பெறத் தொடங்கினோம். விசேஷங்களுக்கான அழைப்பிதழ்கள் மட்டுமே 1 இலட்சம் உள்ளன. கொங்கு வட்டார அழைப்பிதழ்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையிலிருந்தன. இப்போது அவை நிறைய வர ஆரம்பித்துள்ளன. சமூக வரலாற்றை, குறிப்பாக ‘subaltern studies’ எனப்படும் விளிம்பு நிலை மக்களின் வரலாற்றை எழுதுவதற்கு இவையெல்லாம் முக்கியமான தரவுகளாக அமையும். மேலும் சமூகவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு இவை உதவும். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒருவர், மராத்தியமொழி அழைப்பிதழ்களை பம்பாயிலிருந்து அனுப்பி வருகிறார்.
புத்தகங்கள் மட்டும் 1 1/2 லட்சம் உள்ளன. ஆடியோ ஆர்க்கைவில் கிராமபோன் ரிக்கார்டுகள், ஒலி நாடாக்களைப் பாதுகாக்கிறோம். அசல் புத்தக பாதுகாப்புக்காக, பாதுகாப்புக் கூடம் (conservation laboratory) ஒன்றை அமைத்திருக்கிறோம். ரோஜா முத்தையா 1992-இல் மறைந்தார். வருகிற 2019 ஆம் ஆண்டு இந்த நூலகத்தின் வெள்ளிவிழா வருகிறது. அப்போது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை வெளியிடலாமென எண்ணியிருக்கிறோம்.

நீங்கள் வெளியிட்டு வந்த ரோஜா செய்தி இதழ் இப்போது வருகிறதா? அதில் ஒரு முறை இசையறிஞர் மு. அருணாசலம் அவர்களின் நூல்கள் சேகரிப்பு இந்த நூலகத்தில் இடம் பெற்றது பற்றிய பேரா. அரசுவின் கட்டுரை சிறப்பான பதிவு. இப்போது ‘ரோஜா’ மலர்வதில்லையா?

பதினோரு இதழ்கள் வெளியிட்டோம். அந்த செய்தி மடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறைதான் காரணம். 30 பேர் பணியாற்றி வந்த இந்த நூலகத்தில் பதினோரு பேர்தான் இருக்கிறோம். ஊதியம் தர வேண்டுமல்லவா? நிதியுதவி கேட்டு யாரை அணுகினாலும் இரண்டு விதமான பதில்கள்தாம் கிடைக்கின்றன. ஒன்று, இந்திய அளவில் டாட்டா நிறுவனத்தை அணுகுமாறுதான் சொல்கிறார்கள். கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி (CSR) என்பது மிக சமீபத்திய கான்செப்ட். ஆனால், டாட்டா நிறுவனத்தினர் மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஏராளமான பல நிறுவனங்களை ஆராய்ச்சிப் பணிகளுக்காக உருவாக்கி, தொடர்ந்து உதவிவருகிறார்கள். இங்கே கன்ஸர்வேஷன் சோதனைக்கூடம் அமைக்க அவர்கள்தான் உதவினார்கள்.
இன்னொரு பதில் என்னவென்றால், ‘‘உங்களுக்கு என்னங்க குறை? சிகாகோ யூனிவர்சிடிகிட்ட கேட்டா அவங்க டேப்பத் (குழாயை) திறந்து விட மாட்டாங்களா? பணம் குழாயில தண்ணி மாதிரிக் கொட்டுமே? என்பதுதான். ரோஜா முத்தையாவின் சேகரிப்புகளை வாங்கவும், பாதுகாக்கவும் சிகாகோ பல்கலைக் கழகம் உள்பட மூன்று நிறுவனங்கள் உதவியதென்னவோ உண்மைதான். ஒரு வகையில் நல்லதாக பெருமையாகத்தான் உள்ளது. ஆனால், இன்னொரு வகையில் அதுவே ஒரு சுமையாக மாறிவிட்டது. இதுவரை வந்துள்ள நன்கொடை விவரங்களையெல்லாம் நாங்கள் வெளிப்படையாக வருடாவருடம் அறிவிக்கிறோம். அதையெல்லாம் பார்த்தாலே உண்மை நிலவரம் தெரியும்.

இங்கு நடைபெற்று வரும் பணிகளில் மிகவும் முக்கியமான சிறப்பானவை என நீங்கள் கருதுகிறவற்றைப் பற்றி சொல்ல முடியுமா?

கணிதமேதை ராமானுஜன் அவர்களின் கணித ஆய்வுக் குறிப்புகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களைப் பதிப்பித்தது ஓர் உலக சாதனை. அது ஒரு புதுமையான செயல்முறை. நுண்படம் எடுத்து, அதை டிஜிட்டைஸ் செய்து பதிப்பித்த இந்த புராசஸை உலகிலேயே முதன்முறையாக நாம் தான் செய்திருக்கிறோம். ‘திருக்குறள்’ நூலின் முதல் பதிப்பையும் இதே செயல் முறையின் மூலம் மீளவும் மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறோம். உலக அளவில் இந்த இரண்டு முயற்சிகளும் மிகவும் நல்ல முறையில் வரவேற்கப்பட்டன. This is your Passport for Fund rising attempts என்று பாராட்டினார்கள். நூல்களையும், பிற அறிவியல் ஆவணங்களையும் பாதுகாப்பதற்கான எதிர்காலச் செயல்முறை இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.
2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாதாந்தரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் ரூபாய் ஐந்து லட்சம் நன்கொடையளித்து அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்துள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்துவெளி நாகரிக ஆய்வு மையம் அமைய உதவியுள்ளார். கிப்ட் சிரோமணி அறக்கட்டளை, பேரா. வீ. அரசு அறக்கட்டளை ஆகிய சொற்பொழிவுகளுக்கான நல்கைகள் முக்கியமானது. சமூகவியல், கலாச்சார இயல் ஆய்வுகளுக்கு இந்த நூலகம் ஒரு வைரச்சுரங்கம். இதில் வருத்தமானது என்னவென்றால் இங்குள்ள தரவுகளில் இதுவரை பயன்படுத்தப்பட்ட தரவுகளின் சதவீதம் வெறும் 5% மட்டுமே. ‘ரோஜா இதழ்’ செய்தி மடல் நிறுத்தப்பட்ட பின் இன்றுவரை ஒருவர்கூட ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள் என்ற கேள்வியை எழுப்பவில்லை. பின்னூட்டம் வரப் பெறுவது மிக முக்கியம். ஆனால் அதில் பெரும் இடைவெளி நிலவுகிறது.

இந்த உரையாடல் தொடங்கியது முதல், எல்லா முயற்சிகள் பற்றிய தகவல்களும் ‘நிதிப் பற்றாக்குறை’ என்ற ஒரு புள்ளியிலேயே குவிகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமளவில் நன்கொடைகள் வழங்குவதாகப் பத்திரிகைச் செய்திகள் வருகின்றன. சி.எஸ்.ஆர்.நிதி பெறவும் அரசு, தனியாரிடமிருந்து நிதி பெறவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வில்லையா?

அந்த முயற்சிகளின் போது யாரை அணுகினாலும் கிடைக்கிற பதில்களை நான் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? தமிழக அரசு சார்பில், இந்த நூலகத்துக்கென்று ஒரு தனி இடம் கொடுத்தார்கள். அது ஒரு முக்கியமான அங்கீகாரம். இங்கு வந்து பார்வையிட்டபின் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் வேளாண் அறிவியலாளர்
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், ரூபாய் 25 லட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் தந்தார். இந்தக் கட்டிடத்தை மாடிப் பகுதியில் புதிய விரிவாக்கப் பகுதிகளைக் கட்டுவதன் மூலம் கூடுதலாகப் பணிகளை மேற்கொள்ள முடியுமென்பதால் அரசிடம் இத்தொகையைப் பயன்படுத்த அனுமதி கேட்டோம் இன்று வரையிலும் அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏன் என்பது ஒரு புரியாத புதிர். செம்மொழி ஆய்வு நிறுவனம் ரூபாய் பத்துலட்சம் உதவியது. ஆனால் 2 வருடத்தில் எத்தனை புத்தகம் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஆய்வு என்றால், தடிதடியாகப் புத்தகங்கள் போடுவதுதான் என்று இருக்கிறது. நம்முடைய அடிப்படையான ‘மனோபாவம்’ இதுதான். தேசிய ஆவணக் காப்பகம் தரக்கூடிய அதிகபட்ச பணம் ரூ.10 லட்சம்தான். அதிலும் 75% தொகைதான் அவர்கள் தருவார்கள். மீதி 25% நமது பங்களிப்பாக இருக்கவேண்டும். தொடர்ந்து பதினைந்து வருடமாக நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பித்து வந்தோம். இந்த வருடம்தான் முதன்முறையாக நிதி வரப்பெற்றுள்ளது.
இதே வேண்டுகோளுடன், பிரிட்டிஷ் நூலகம் போன்ற அயல்நாட்டு அமைப்புகளை அணுகுகிறோம் என்றால் அவர்கள், ‘உங்கள் வேண்டுகோளை வெப்சைட் மூலம் ஒரு முன்மொழிவாக நீங்களே எழுதி அனுப்புங்கள்’ என்று நமக்குச் சொல்கிறார்கள். நாம் அனுப்புகிற வரைவைப் படித்துப் பார்த்தபின் கூடுதல் விளக்கங்களோ, ஐயங்களோ தேவைப்பட்டால் அவற்றைப் பற்றி நம்மிடம் விவரம் கேட்டு திருத்தங்கள் செய்து அனுப்புமாறு கேட்கிறார்கள். இறுதி வரைவை, குறிப்பிட்ட துறை வல்லுநர்கள் சிலரின் பார்வைக்கு அனுப்பி அவர்களுடைய குறிப்புரையைக் கேட்கிறார்கள். கடைசியாக திட்ட வரைவை அவர்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் பிரிட்டிஷ் நாணய மதிப்பில் 50,000 பவுண்ட்ஸ் வரை கூட உடனடியாகக் கிடைக்கிறது. நாம் நமது பணிகளை மேற்கொள்ளலாம். இத்தகைய நடைமுறைகளை நமது அரசுகள் பின்பற்றினால் ஒழிய நாம் ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியாது. தனிநபர்களில் பொள்ளாச்சி மகாலிங்கம் உதவியது குறிப்பிடத்தக்கது. அவரே புத்தகம் எழுதுவதிலும், ஆய்வு செய்வதிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். ஆனால் பெரும்பாலான தனிநபர்களும் சரி. அயல்நாடு வாழ் இந்தியர்களும் NRIs சரி, பள்ளி, கல்லூரிகளுக்குச் செய்கிறார்கள்; திருவிழாக்கள், கோயில் குட முழுக்குகளுக்குச் செய்கிறார்கள். நூலகங்களுக்குச் செய்வதும் ஒரு சமூகப் பணிதான் என்று அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. என்.ஆர்.ஐ.கள் மனம் வைத்து உதவினால் ரோஜா முத்தையா நூலகம் மூலம் இன்னும் எவ்வளவோ செய்ய முடியும்.

மு. அருணாசலம் போன்ற தமிழறிஞர்களுடைய வாழ்நாள் சேகரிப்புகளைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களுடைய பணிகளுக்கு உதவ, வாசகர்களும் தமிழறிஞர்களும் என்னென்ன செய்யலாம்?

மு. அருணாசலம் அவர்களுடைய நூல்களை நாங்கள் கேட்டுப் பெறுவதற்கு மொத்தம் பத்தாண்டுகள் ஆயின. பலமுறை அவருடைய புதல்வரை அணுகினோம். ஒரு மகிழ்ச்சியான தகவலை நினைவிலிருந்து கூறுகிறேன். அவர் கடித மூலம் கேட்குமாறு சொன்னார். கடிதம் எழுதியபோது அந்தக் கடித வரைவு பற்றி எங்களிடம் ஒரு யோசனை சொன்னார். காந்தி எழுதும் கடிதங்கள்போல ரத்தினச்சுருக்கமாக எழுதுங்கள் என்றார். இந்தப் பாடத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். கடைசியாக, ‘‘ஒரு முறை நேரில் வந்து பாருங்கள்’ என்றார். ‘‘ஏன் இவற்றை உங்களுக்குத் தர வேண்டுமென்கிறீர்கள்? சரியான காரணம் சொல்லி நான் ஏற்றுக் கொள்கிற மாதிரி கன்வின்ஸ் பண்ணுங்கள்’’ என்று சொன்னார். அங்குள்ள புத்தகங்களைப் பார்த்து தோராயமாக எத்தனை இருக்கும். அவற்றை எடுத்துவர எத்தனை பெட்டிகள் தேவைப்படும் என்று கேட்டார். சுமார் எட்டு முதல் பத்தாயிரம் வரை இருக்கும் என்றும், சுமார் 100 பெட்டிகள் தேவைப்படுமென்றும் நான் என் மதிப்பீட்டைச் சொன்னேன். அவர் ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக இருந்தார். ‘‘உங்கள் அப்பாவின் நூல்கள் காலத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும்; அதிகம் பேர் வந்து அவற்றைப் பார்த்து, படித்து பயன் பெறுவார்கள்’’ என்றேன். ‘‘சரி எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ஆக, நூல்கள், பத்திரிகைகள், அரிய ஆவணங்களை வைத்திருப்போர் அவற்றை மனமுவந்து எங்களுக்கு வழங்கலாம்; அவை எண்ணிமப்படுத்தி பாதுகாக்கப்பட ஏற்பாடு செய்கிறோம். பெரு நிறுவனங்களும், அறக்கட்டளை அமைப்புகளும் இங்கு வந்து பார்வையிட்டு, இந்தப் பணிகள் குறித்து நிறைவடைந்தால் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியுதவி வழங்கலாம்.

உங்கள் தனிப்பட்ட வாசிப்பு, எழுத்து, ஆய்வு முயற்சிகள் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: Text book Culture in Colonial Tamilnadu என்பது. இது பாதியில் நிற்கிறது. தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு நிறைவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். பல்வேறு பணிகளால் அது தள்ளிக் கொண்டே போகிறது. வழிகாட்டியாக இருந்த அறிஞர் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மறைவு தனிபட்டமுறையில் ஒரு பெரிய இழப்பு. மற்றபடி வாசிப்பது அன்றாடப் பணி. ‘குட்டி இளவரசன்’ எழுதிய பிரெஞ்சு நாவலாசிரியர் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர். ‘யாழ்ப்பாண நூலகத்திற்கு ஓர் இரங்கற்பா’ என்ற குறுநூல் நான் யாழ்ப்பாண நூலகத்தைப் பார்வையிட்டு வந்தபின் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம். ‘ஹிமால்’(Himal) என்ற மிகச் சிறந்த ஓர் ஆய்விதழில் வெளியான கட்டுரை அது. ப்ரண்ட்லைன், ஹிமால் போல கிழக்காசிய நாடுகளில் அந்தத் தரத்தில் வெளியாகும் ஆய்விதழ்கள் மிக அரிதானவை. இலங்கை இனக் கலவரத்தின் போது நடந்த வேறு பல கொடுமைகள் பற்றி ஏராளமான பதிவுகள் உள்ளன. ஆனால், இந்த நூலக எரிப்புச் சம்பவங்கள் நடைபெற்றபோது தமிழ்நாட்டு ஊடகங்களில் குறிப்பிடும்படியான எந்தப் பதிவும் இல்லை. ‘ஹிந்து’வில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் ஒரு வாசகர் எழுதியது வெளிவந்தது. நான் நேரில் போய்ப் பார்த்தபோது அதிர்ந்து போனேன். அவ்வளவு சோகம் தரும் காட்சி! இதையொட்டி இன்னொரு நினைவு. ஏ.கே. செட்டியார் யாழ்ப்பாணத்திற்குப் போயிருந்தபோது நூலகத்தைப் பார்த்திருக்கிறார். ஆனால் அவருடைய பயணக்குறிப்புகளில் அது பற்றி எழுதவில்லை. ‘நூலகம்‘என்பதை சமூகம் தனது முன்னுரிமைப் பட்டியலில் வைக்கவேயில்லை. இந்த ஆதங்கத்தில் எழுதிய கட்டுரையைத்தான் ‘ஹிமால்’ இதழ் வெளியிட்டது. ரோஜாமுத்தையா நூலகச் சிறப்பிதழ் ஒன்றை பேரா. வீ. அரசு அவர்களின் முயற்சியில் ‘மாற்றுவெளி’ கொணர்ந்தபோது நான் அதன் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று எழுதியிருக்கிறேன். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எவ்வளவோ புத்தகங்கள், ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாப்பதுதான் நம் முன்புள்ள சவால்.

Related posts

Leave a Comment