You are here

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம்
தன் குழந்தையை பெரிய மருத்துவ அறிஞர் ஆக்க வேண்டும். விஞ்ஞானி ஆக்க வேண்டும். அவர் பேரும், புகழும் பெற்று பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வமிக்க பெற்றோர்கள் அவர்களுக்கு கோடி கோடியாய் செலவு செய்ய வேண்டியதே கிடையாது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதை அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கினாலே போதுமானது.
– அமர்த்தியாசென்

குழந்தைகளுக்கு வாசிப்பு அனுபவத்தைத் தரவேண்டிய முறை அவர்களை தகவல் மனப்பாட மிஷின்களாக மாற்றிவிடுவது துரதிர்ஷ்டமானதுதான். முன்புபோல புத்தக வாசிப்பு குழந்தைகளிடம் இல்லை.. அவர்கள் விளையாடுவதும் இல்லை. சதா தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம்… என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

வாசிக்கமாட்டார்கள்.. பேப்பர்கூட படிக்கமாட்டார்கள். பெரியவர்கள் சதா வாட்ஸ் அப் உலகில் அமிழ்ந்தால் பிள்ளைகள் மட்டும் வாசிப்பார்களா என்ன? இப்படி ஒரு எதிர்ப்பாட்டு… ஆனால் சத்தமில்லாமல் பாரதி புத்தகாலயம் தனது வரலாற்றுத் தேவையை, கடமையை உணர்ந்து பிடிவாதமாக ஒரு வேலையில் இறங்கி இருக்கிறது. இதுதான் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்’ எனும் இயக்கம். குழந்தைகளுக்கு எத்தனை விலைபோட்டு எதை வாங்கிக் கொடுத்தாலும் இன்றைய அப்பொருளின் ஆயுள் சொற்ப காலம்தான். ஆனால் இந்தத் திட்டத்தில் இணைந்தால் ஒரு குழந்தையின் வாசிப்பு உலகம் முடிவற்று நீளும் அற்புதம் நாம் சொல்லாமலே விளங்கும். பெரும்பாலான புத்தகங்களை விரும்பி பிடிவாதமாக தேர்வு செய்தவர்கள் குழந்தைகள்தாம். தேசத்தந்தை மகாத்மாகாந்தி முதல் நம் நவீன நாயகன் அப்துல்கலாம் வரை பாரதி, பாரதிதாசன், பகத்சிங், வீரத்துறவி விவேகானந்தர் என எந்தத் திணிப்பும் இன்றி இனிய தேசப்பற்றை விதைக்கிறோம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சிங்காரவேலர், ரஷ்ய மாவீரன் லெனின் என சமூக சிந்தனை ஊற்றெடுக்க உதவுகிறோம். குட்டி இளவரசன் முதல் விஞ்ஞான விக்கிரமாதித்தன் வரை குழந்தைகளின் கற்பனா சக்தியும் படைப்பாக்கமும் சிறகு விரித்து வானில் பறக்க பலவாறு வழிவகை செய்கிறோம்.. மேரி கியூரி, டார்வின், ஐன்ஸ்டீன், சர் சி.வி.ராமன் தொடங்கி ஸ்டீவ் ஜாப்ஸ் வரை அறிவியல் உலகில் குழந்தைகள், இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியே நம் தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் திண்ணை மூலையில் தானே முயன்று அறிவியல் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாய் துளிர்விட ‘ஒவ்வொரு குழந்தைகக்கும் ஒரு நூலகம்’ உதவுகிறது. எனவே இந்தக் குழந்தைகளுக்கான சொந்த நூலகம் வெறும் புத்தக மூட்டையல்ல. ஒரு பிரமாண்ட எதிர்காலத்திற்கான இன்றைய விதை! இது சந்தை போலில்லை. சமூக சிந்தனையோடும் அளவற்ற அக்கறையோடும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் வரலாற்றுக் கடமை.

வெறும் புத்தகம் படிக்க வைக்கும் முயற்சி அல்ல. வாசித்தும் யோசித்தும் பலவாறு செயல்பட்டும், படைப்பாக்கம் செய்தும் சோதனைகளில் ஈடுபட்டும் தனக்காக ஒரு வருங்காலத்தை இவர்களாகவே செதுக்கிச் செல்லவே இந்தப் புதிய உலகம். அவர்களை தங்களது வகுப்பறை மட்டுமின்றி தாங்கள் கல்வியோடு, பேச்சாளராக, வினாடி விடை வெற்றியாளராக படைப்பாக்க வித்தகராகி, ஓவியராய், கதைசொல்லியாய், நாடக சிற்பியாய், இன்னும் விஞ்ஞானிகளாய், அறிஞர்களாய் வாகை சூடி நட்சத்திரமாக்கும் முயற்சி. வீடியோ விளையாட்டு விளையாட அல்ல; வீடியோ விளையாட்டுகளையே உருவாக்கிட, கார்ட்டூன் புனைவுகளைப் பார்த்து ரசிக்கவும் கூடவே கார்ட்டூன் அனிமேஷன் வித்தகராகிட முதல் அடியை நம் குழந்தைகள் எடுத்துவைக்க உதவும் களம்தான் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்.’
– ஆசிரியர் குழு.

Related posts

Leave a Comment