You are here
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள் ச.மாடசாமி

கல்வி குறித்த பதிநான்கு கட்டுரைகளடங்கிய ஒரு சிறு தொகுப்பு இந்நூல்.

பா.ப்ரீத்தி

அவரவர் இயல்பு மாறாமல் எதார்த்தமாய்ச் சிரிக்கிற குழந்தைகளின் முகம் பதித்த அட்டைப்படமே நிச்சயமாக குழந்தைப் பிரியர்களை வசீகரிக்கும்.

குழந்தைகளின் நூறு மொழிகள் என்று பெயரிட்டு ஆயிரம் மொழிகளைப் பேசியிருக்கிறார் ஆசிரியர்.
“கேட்பது நல்லது என்றறிவோம்.ஆனால் பேசத்தான் விரும்புவோம் -வகுப்பறையில்” என்ற வாசகத்தை வாசித்துவிட்டு அத்தனை சுலபமாய்க் கடந்துவிட முடியவில்லை.

‘Say Yes or No’ என்ற நமது ஒற்றைப் பதில் கேள்விக்குள் அடங்கிட முடியாத குழந்தைகளின் பதில்கள் எத்தனை எத்தனை… நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசிரியரைப் பல்வேறு கண்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் கவனித்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் கண்கள் அந்த இளங்கண்கள்- எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் நம்மை மட்டுமே கவனிக்கின்றன என்பதை அழுத்தமாய் மனதில் ஊன்றிச் செல்கிறது ஒரு கட்டுரை.

Yes or No வில் – yes சொல்வதைப்போல No சொல்வதொன்றும் அத்தனை சுலபமில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நம் மாணவர்களுக்கும் ‘மறுப்புத்திறன்’ பயிற்சியை மறவாமல் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது மற்றொரு கட்டுரை.
அத்தனை கட்டுரைகளுக்கிடையில் மிகப்பிடித்த கட்டுரை ஒன்று இருக்குமே. அது ‘நாற்றம் அடிக்கும் வகுப்பறை’ என்பதுதான். ஆசிரியர்களின் வகுப்பறை வன்முறைகளையும் அதிகாரங்களையும் ஆசிரியத் தனங்களையும் அப்பட்டமாய்த் தோலுரிக்கிற கட்டுரை அது. அதுவும் மாணவர் குரல்களில்.

வகுப்பறை அதிகாரம் பற்றிய விவாதமொன்றில் மாணவர்கள் பேசியபோது “ஒவ்வொருத்தரா… ஒவ்வொருத்தரா” என மிச்சமிருந்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. தன்னிச்சையாக மட்டுமின்றி அனிச்சையாகவே ஆசிரியத்தனங்கள் ஊறிப்போயிருக்கும் நம்மை… உள்ளபடியே நமக்கு அடையாளம் காட்டுவதாய் அமைகின்றன அச்சொற்கள். ‘சில வகுப்பறையில் பிரம்பு இருக்கிறது; பிரம்பு இல்லாத வகுப்பறையில் பிரம்பு மனப்பான்மை இருக்கிறது’ என்பது எத்தனை உண்மை.
“மாணவர்களின் பன்முகங்களை அழித்து பள்ளிக்குப் பொருந்தக்கூடிய ஒற்றை முகத்தைப் பிசைந்து வடித்தல்” – கல்விமுறையின் நெகிழ்வற்ற திடத்தன்மை பற்றிய எத்தனை அழுத்தமான சொற்களிவை.

கடினமாக இருப்பதே பாடப்புத்தகத்தின் தரம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு எதிரான அநீதியல்லவா. படிக்கப்படிக்க மனசு கனக்கிறது. நம்மைச்சுற்றி நிகழ்கிற அத்தனை ஓசையும் அடங்கி இதயத்துடிப்பு மட்டும் செவிகளுக்குக் கேட்கிறது. இந்நிலையை மாற்ற ஏதாவது செய்தே தீர வேண்டுமென்று உள்ளிருந்து ஒருகுரல் ஓங்கிக் கேட்கிறது.

இறுக்கம் தளர்த்திட ஆங்காங்கே நம்மை நமட்டுச் சிரிப்பு சிரிக்க வைக்கவும் ஆசிரியர் தவறவில்லை. உதாரணமாக ,பெண் ஆசிரியர்கள் பலரது பேச்சிற்கு இடையில் அவரது வீட்டு ‘சார்’ வந்துபோவதை எள்ளிநகையாடுவதாய் சில வரிகள் இருந்தன. சிரிக்காமல் கடக்கமுடியவில்லைதான்.
நான் ரெக்கியோ எமிலியா பற்றி அறிந்திருக்கவில்லை. பாலோ பிரேயரையும், ஜான் ஹோல்ட்டையும் இருபது மதிப்பெண் விடைக்குள்ளாகவே அடக்கிப் படித்திருக்கிறேன். அவர்களது பெயரையும் கோட்பாடுகளையும் இருநூறு வரிகளுக்குக் குறைவின்றி எழுதப் பழகியிருந்தேன்.
ஆனால் ஆசிரியப் பயிற்சிப் புத்தகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டத் தவறிய இவர்களது உன்னதங்களையும் கல்விக்கான இவர்களது தியாகங்களையும் நேற்றிரவுதான் உணர்ந்தேன்.

“தப்பு, கிடையாது, அப்படி இல்லை” போன்ற சொல்லாடல்களைக்கூட குழந்தைகளிடமிருந்து தவிர்த்திருக்கிறார் ஜீன் பியாஜெட்.
காற்று எப்படி உண்டாகிறது என்கிற கேள்விக்கு மரத்திலிருந்து என்று பதிலளித்த குழந்தையிடம் மணிக்கணக்கின்றி பியாஜெட் உரையாடியிருக்கிறார்.

இதனையல்லவா ஆசிரியப் பயிற்சியில் கற்பிக்க வேண்டும்.
முக்கோணப் படிநிலையில் அவர் விட்டுச்சென்ற கோட்பாட்டை பத்துமுறையேனும் படித்திருப்பேன். அப்போதெல்லாம் என் மனதை அசைக்காத பியாஜெட்டின் கோட்பாடு இப்போது மனதை அசைக்கிறதே.

எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் உரையாடல் நிகழ்த்தி மக்களை விழிப்புறச் செய்ததற்காக நாடு கடத்தப்பட்டிருக்கிறார் பாலோ பிரேயர்.
இதுகுறித்து பிரேயரிடம் கேட்டபோது ,”இழப்பு எதுவுமின்றி வரலாற்றை மாற்ற முடியாது” என்று சொல்லிக் கடந்திருக்கிறார். இந்த மனோதிடத்தை அல்லவா உளவியல் நூல்கள் வழி ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஊட்ட வேண்டும்.
‘கற்கும் கல்வியில் சரிபாதி வகுப்பறைக்கு வெளியே இருக்கிறது’ என்ற வாக்கியத்தைக்கூட வகுப்பறைக்கு உள்ளேயே அமர்ந்து படிக்கும் அவலம்தானே இன்றும் தொடர்கிறது.

எல்லாவற்றையும் நானே எழுதிவிட்டால் அது உங்களது வாசிப்புக்கு எதிரான அநீதியாகிவிடுமே. அதனால் முடிக்கிறேன்.
சுருங்கக் கூறின் பதிநான்கு கட்டுரைகளும் பதிநான்கு தீக்குச்சிகள்.

Related posts

Leave a Comment