You are here
நேர்காணல் 

‘கணிதத்தில் நிரூபணம் என்பது சமூகச் சிந்தனை’

டாக்டர் ஆர். ராமானுஜம்

சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆர். ராமானுஜம் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஒரு பேராசிரியர். தமிழ்நாட்டில் ‘எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும், பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படிச்சு ஆகணும்‘ என்ற முழக்கத்தை எண்பதுகளின் இறுதிப்பகுதியில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுப்பி வருகிற ஒரு களச் செயற்பாட்டாளருங்கூட, குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பாடத் திட்ட வரைவு, மீளாய்வு, தேர்வு முறை குறித்த பரிசீலனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலனைகளையும், பரிந்துரைகளையும் முன் வைத்து வருபவர். பள்ளிக் குழந்தைகளின் பாடச் சுமையைக் குறைக்கவும், புதிய பாடத் திட்டத்தை உருவாக்கவும் தற்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிற குழுவில் ஓர் உறுப்பினர். தனது களப்பயணம் குறித்த மலரும் நினைவுகளைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்:

அறிவியல், அறிவொளி, ஆரம்பக் கல்வி முதல் பணிசார்ந்த கணிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வரை உங்கள் ஈடுபாடுகள் பல துறைகள் சார்ந்து அமைந்திருக்கின்றன. இவற்றுக்கான மூல விதைகள் எப்போது, யாரால் போடப்பட்டன? உங்களின் சொந்த ஊர், இளமைக் கால நினைவுகளிலிருந்தே தொடங்கலாமா?

திருச்சிதான் நான் பிறந்து, வளர்ந்து படித்த ஊர். புத்தூர் என்ற பகுதியிலிருந்த நகராட்சிப் பள்ளியில் படித்தேன். என்னுடன் பிறந்த இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும்கூட நகராட்சிப் பள்ளியில் படித்தவர்களே. ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் வீடு மாற்றினார்கள். திருச்சி நகருக்குள்ளேயே மையத்தை நோக்கி இன்னும் சற்று முன்னேறி ஓர் ஓரமாகக் குடியேறினோம். பள்ளிப்படிப்பு அப்போதைய பதினோராம் வகுப்பு வரை. மாநில அளவில் ரேங்க் எடுத்திருந்தேன். அந்தச் செய்தி மாலைமுரசு, தினத்தந்தி நாளிதழ்களில் வெளியான போது எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் எல்லாருக்கும் அது சற்று அதிர்ச்சியான தகவலாகத்தான் இருந்தது. காரணம், வழக்கமாக நான் தேர்வுகளில் முதலிடம் வகித்தவனல்ல. பத்திரிகைக்காரர்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்? என்று கேட்டார்கள். எனக்கு அது பற்றி அப்போதைக்கு எந்தச் சிந்தனையும் கிடையாது. அப்பாவுக்கோ ‘நான் படித்து ஏதேனும் ஒரு வேலைக்குப் போய் நாலு இலக்கத்தில் சம்பளம் வாங்கினால் சரி’ என்பதுதான் எண்ணம். அவர் ஒருவரின் சம்பாத்தியத்தில்தான் அப்போது மொத்தக் குடும்பமும் வாழ்ந்தது. அப்பா, அம்மா, அப்பாவின் பெற்றோர்கள், அம்மாவைப் பெற்ற பாட்டி, நாங்கள் பிள்ளைகள் 5 பேர் ஆக பத்துப்பேர், போதாக்குறைக்கு எங்கள் ‘கஸின்’கள் இரண்டு பேர் அவர்களின் தந்தை ஒரு விபத்தில் காலமாகி விட்டதை அடுத்து எங்களோடு வசித்தார்கள். ‘சம்சார சாகரம்‘ என்பார்களே, அது மாதிரியான ஒரு நிலைமையில்தான் குடும்பம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

பள்ளிக் காலத்தில் யாராவது ஒருவரோ, இருவரோ நமக்கு மறக்க முடியாத ஆளுமைகளாக இருந்திருப்பார்கள். அப்படி உங்களால் ஆதர்சம் என மதிக்கப்பட்டவர்கள் யார்?

ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஹேமா அவர்கள் அப்படியான ஆசிரியராயிருந்தவர். மிகவும் அன்பானவர். அதேயளவுக்கு கண்டிப்பும் காட்டுவார். எங்கள் குடும்பத்தினர் மொத்தப் பேரையும் தெரிந்து வைத்திருந்தார். தொடர்ந்து எல்லாருடனும் மிக நல்ல தொடர்புடன் இருந்தார். அப்பா அந்தக் காலத்து அக்கவுண்டன்ட். இப்போது அக்கவுண்ட்ஸ் ஆபீசர் என அழைக்கிறோமே. அந்தப் பணி அப்போதைய சூழலில், வருடத்திற்கு இரண்டு செட் காக்கி, வெள்ளை யூனிஃபார்ம் எடுத்துத் தந்து விடுவார். பொங்கல், தீபாவளியின்போது ஒவ்வொரு சட்டை கிடைக்கும். என் பள்ளி அட்மிஷன் கூட அண்ணாதான் வந்து சேர்த்துவிட்டார். அப்பாவைப் பொறுத்தவரை, நான் எழுபது மார்க் வாங்கியிருப்பதை அவரிடம் சொன்னால், ‘‘அப்படியா, சரி அடுத்த தடவை எண்பது மார்க் வாங்கணும்‘’ என்பார்.

என்னுடைய பிறப்பு வீட்டிலேயே நடந்ததால் பிறப்பு சான்றிதழ் ஏதும் இல்லை. எனது உண்மையான பிறந்த தேதி நவம்பர் 30. ஆனால் பள்ளியில் சேர்ப்பதற்கு 5 வயது முடிந்திருக்க வேண்டும் என்பதால் ஜூன் 10 என்று பதிவு செய்திருந்தார்கள். சுமார் ஒன்றரை வயது முன்னதாக அட்மிஷன். அப்போது எல்.கே.ஜி.யோ, யூ.கே.ஜியோ கிடையாது. நேரடியாக முதல் வகுப்புதான்.

பதினோராம் வகுப்பு வரை எங்கே படித்தீர்கள்? பிறகு, கல்லூரி…?

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு செயின்ட் ஜோஸப் ஸ்கூலில்தான். என்னுடைய ஸ்கூல்மேட் புதுக்கோட்டை கவனகன் என்று பிற்பாடு அறிவியல் இயக்க நாட்களில் தெரிந்து கொண்டேன். கல்லூரிப் படிப்பு செயின்ட் ஜோஸப் கல்லூரியில். பிட்ஸ் பிலானியில் 5 வருட பொறியியல் கல்வியைப் பெற முடிந்தது ஓர் ஆக்சிடெண்டலாக நடந்தது. அண்ணாவின் நண்பர் பிலானி பற்றிய விவரங்களைச் சொல்லியிருக்கிறார். நான் நன்றாகப் படித்து வந்ததால் ‘பிலானிக்குப் போ’ என்று மிகவும் வற்புறுத்தி அனுப்பினார். விண்ணப்பம், விவரப்படிவம் எல்லாவற்றையும் அவரே வாங்கி வந்து அண்ணா மூலம் எனக்கு உற்சாகம் ஊட்டினார். அப்போது பிட்ஸ் பிலானியில் அனுமதி என்பது முதலாண்டில் Admission to Institute தான்; முதலாண்டுப் படிப்பு எல்லாருக்கும் பொதுவானதே. இரண்டாம் ஆண்டில் அறிவியல், பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்தவர்களை மட்டும் தனிப் பிரிவாகவும், மற்ற அனைவரையும் இன்னொரு பிரிவாகவும் பிரிப்பார்கள். மூன்றாவது ஆண்டின் பிற்பகுதியிலிருந்துதான் அறிவியலையும் பொறியியலையும் தனித்தனியே பிரிப்பார்கள். நான் ட்ரிபிள் இ (EEE) பிரிவில் 5ஆம் ஆண்டு வரை பொறியியல் படிப்பை முடித்தேன்.

வீட்டிலிருந்து என்னைப் பார்க்க அந்த ஐந்து ஆண்டுகளில் வந்தவர் என்னுடைய அண்ணா ஒருவர் மட்டும்தான். அவரும் ஒரே ஒரு முறைதான் வந்தார். அப்பா அம்மாவுக்கு அவ்வளவு தூரம் பயணம் செய்ய விருப்பமோ, வசதியோ கிடையாது.

பிலானி வாழ்க்கை என் ஆளுமையை, தன்னம்பிக்கையை மிகவும் வளர்த்துக் கொள்ள உதவியது. ஏற்கெனவே கல்லூரியில் அப்போதைய புகுமுக வகுப்புக்கு வந்த பிறகுதான் ஆங்கிலத்தில் வாசிப்பு என்பதே அறிமுகமானது. ஆகவே பிலானியில் முதல் ஆண்டு ஆங்கிலம் என்னை மிரட்டியது. மிகவும் சங்கடமாக இருந்தது.

பிலானியில் கல்லூரிக் கட்டணம், மெஸ் பில் போன்ற செலவுகளுக்கு எனக்குக் கிடைத்த அறிவியல் பரிசோதனைக்கான கல்வி உதவித் தொகை ஒரு பகுதியளவுக்கு உதவியது. அந்த சோதனை மிக வெற்றிகரமாக அமைந்தது. அதற்கு நான் தேர்வானதே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு நான் பிலானி பகுதியின் நிருபராகப் பணி செய்தேன். பிட்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பத்திரிகைகளை சுற்றுக்கு விட்டு திரும்பப் பெறும் நடைமுறை உண்டு. அதை நான் விருப்பத்தோடு செய்தேன். அது தவிர வாரம் ஒரு முறை பிலானி திரைப்படக் கழகம் மூலம் நல்ல படங்களைத் திரையிடுவார்கள். அதற்கு டிக்கெட் விற்பனை செய்தேன். இப்படியான பகுதி நேர வேலைகள் மூலம் கொஞ்சம் பணம் சம்பாதித்து என்னுடைய செலவுகளைச் சமாளித்துக் கொண்டேன். மூன்றாவது, நான்காவது ஆண்டுகளில் கணினியில் Programme செய்து கொடுத்ததில் ஓரளவு நன்றாகவே பணம் கிடைத்தது. அப்படித்தான் கம்ப்யூட்டர் சயன்ஸில் அறிமுகம் ஏற்பட்டது. அதற்கான அகாடமிக் ஃபீரிடம் இருந்தது. எத்தனை கோர்ஸஸ் வேண்டுமானாலும் வெவ்வேறு டிஸிப்ளின்களில் பண்ணலாம். கவிதையில் இரண்டு கோர்ஸ், தத்துவத்தில் ஒரு கோர்ஸ், லாஜிக்கில் ஒன்று என்று நான் ஏராளமாகப் படித்தேன். இத்தனை கோர்ஸ்களிலும் நான் படிப்பதற்கு உத்வேகம் தந்த பேராசிரியர் பி.கே. நீமா என்பவர். மிகச் சிறப்பான ஆசிரியர் அவர். பொதுவாகவே அங்கு இருந்த சூழல் ஆரோக்கியமானதாயிருந்தது. மாணவன் தானே என்று இல்லாமல் ஒரு வயது வந்த அடல்ட் போல நடத்துவார்கள்.

பாடப் புத்தகங்களுக்கு அப்பால், பிற நூல்கள், பத்திரிகைகளை வாசிப்பதும் மற்றவர்களை வாசிக்கத் தூண்டுவதும் அன்றைய தலைமுறைப் பெரியவர்களின் குறிப்பாக, ஆசிரியர்களின் இயல்பான குணமாக இருந்தது. அதற்கு உத்வேகம் யாரிடமிருந்து கிடைத்தது?

இந்த விஷயத்தில் எனக்கு முதல் ஆதர்சம் என் அம்மாதான். அவர் அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர். வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஏதாவது படித்துக் கொண்டே இருப்பார். ஆனந்தவிகடன் பத்திரிகையை அப்பா வாங்கி வருவார். அதில் வந்த தொடர்கதைகள் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தன. கல்கியின் நாவல்கள், அகிலன் தி. ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் நாவல்கள் என்று வீட்டிலும், வெளியிலுமாக கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் படிப்பது எனது பொழுது போக்கு. எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கி.மீ.தூரத்தில் பெரியார் மாளிகை இருந்தது. அந்த வழியாகப் போகும்போது, வரும்போது பெரியார் சில சமயங்களில் திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். திராவிட இயக்கத்தாரின் பிரசுரங்களை அங்கு இலவசமாகப் படிக்கக் கொடுப்பார்கள். லுங்கி மட்டும் கட்டிக் கொண்டு, சட்டை அணியாமல் எளிமையாகத் துலங்கும் பெரியாரும், திராவிட இயக்கமும் அன்றைய சூழலில் வெகுவாக ஈர்த்தனர். பள்ளி நாட்களில் தமிழாசிரியராயிருந்த ஆறுமுகம் பெரியாரின் புத்தகங்களையும், பாரதிதாசன் கவிதைகளையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். பொதுவாக அன்றைய தமிழாசிரியர்கள் எல்லாருமே திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்ததால் இயல்பாகவே மாணவர்கள் மீதும் அதன் தாக்கம் நிறைய இருந்தது.

நான் புத்தகங்களை வாங்கிப் படிக்குமளவுக்கு வீட்டுப் பொருளாதார நிலைமை இருக்கவில்லை. எங்கள் வீட்டு நிலைமை தெரிந்திருந்ததால் நான் நூலகங்களின் மூலம்தான் புத்தகங்கள் படிப்பேன். அந்த வகையில் பிலானி நூலகம் எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எத்தனை புத்தகங்களை, வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அந்த நூலகம் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். நூலகரே எங்களை அழைத்து புதிய புத்தகங்களை அறிமுகம் செய்வார். அங்குதான் உலக அளவில் முக்கியமாகப் பேசப்பட்ட பல எழுத்தாளர்களின் புத்தகங்களை கிளாஸிக்குகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலாம் ஆண்டு மோகன் ரமணன் என்ற ஆசிரியரும் எனக்குள் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிவிட்டார். பிலானி நூலகத்தில்தான் மார்க்சிய அடிப்படை நூல்களை, ஆல்பர்ட் காம்யூவின் நாவல்களை, ழீன்பால் சார்த்தருடைய புத்தகங்களைப் படித்தேன். பெரிய பெரிய ஆங்கில நூல்களைப் படித்ததில் எனது தன்னம்பிக்கை மிகவும் அதிகமாகியது.

பிலானியில் என்ஜினியரிங் படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போனீர்களா?

முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதை நண்பர்களின் வலியுறுத்தலுக்குப் பின் தேர்வு செய்து Ph.Dக்கு விண்ணப்பித்தேன். மும்பை டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிஸர்ச் நிறுவனத்தில் ஒரு புராஜெக்ட் செய்யும் வாய்ப்புக் கிடைத்து அங்கு பணி செய்தபோது இது நடந்தது. TIFRயின் லைஃப் ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. பெரிய பெரிய அறிவியலாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லாரும் அங்கு நம்பமுடியாத அளவுக்கு எளிமையான வாழ்க்கைமுறையுடன் சாதாரணமாக இருந்தார்கள். சயன்டிஸ்ட் என்றால் கோட்_ சூட் போட்டு ஷு அணிந்துதான் இருப்பார்கள் என்று பொதுவாக ஓர் எண்ணம் நிலவுகிறது. ஆனால் அங்கே உறவாய் சப்பல் போட்டுக் கொண்டு சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. சென்னை கணித இயல் நிறுவனத்துக்கு வருமுன் நியூயார்க்கில் இரண்டு வருடம் பணி செய்தேன். இங்கு நான் வரும்போது முன்பக்கம் இருந்த பழைய கட்டடம் ஒன்றுதான் மொத்த நிறுவனம். அப்போதைய இயக்குநர் சுதர்சன் என்னிடம் வேடிக்கையாகச் சொன்னார். ‘‘இது ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்தான். ஆனால் மூன்றாம் வகுப்பு ரயில்வே கம்பார்ட்மெண்ட் மாதிரி இருக்கும்.’’ அதேபோலத் தான் அப்போது காரிடாரில் கூட உட்கார்ந்து ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

பிட்ஸ் பிலானி, ஐ.டி.எம்., டி.ஐ.எஃப்.ஆர், ஐ.ஐ.எம்.எஸ். போன்ற மேற்தட்டு அறிவியல் கல்விப்புலம் சார்ந்த நிறுவனங்களின் சூழல்களில்தான் உங்கள் இளமைப் பருவம் முழுக்கக் கழிந்திருக்கிறது. இந்தக் கல்விப்புலச் சூழலுக்கு வெளியே அவுட்ஸைட் அகாடமிக் சர்க்கிள் போவதற்கு எது உந்துதலாக இருந்தது?

பிட்ஸ் பிலானியில் பேராசிரியராயிருந்த ஹெச்.எல். குன்டூதான் இந்தத் திசை வழிக்கு எங்களை நெறிப்படுத்தியவர். பொறியியல் படிக்கும் மாணவர்களை சுற்று வட்டார கிராமங்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கு கிராம வாழ்க்கை நிலைமைகளின் மேம்பாட்டிற்குப் பொருந்தும் விதத்தில் ஏதாவது பொறியியல் சார்ந்த புராஜெக்ட் செய்யச் சொல்லுவார். இந்திய அரசின் பிளானிங் கமிஷனுக்கு இந்த வடிவமைப்புகளை பிளானிங் ஃபோரம் மூலம் அனுப்புவோம். இப்படியாக கிராமங்களுக்குப் போனது, அந்த மூன்று வருட காலத்தின் மிக முக்கியமான ஓர் அனுபவம். இன்னொரு முக்கியமான நிகழ்வு _ பிவாண்டி பகுதியில் நடைபெற்ற மதக் கலவரம். இந்து மக்களும், முஸ்லீம் மக்களும் மோதிக் கொண்டதில் இரு தரப்புமே மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. இக்பால் மசூது என்ற ஒரு பத்திரிகையாளர் எங்களைப் போன்ற மாணவர்குழுவுடன் பிவாண்டிக்குப் போய் களப்பணியாற்றுவதென்று திட்டமிட்டார். அது பியூசிஎல் அமைப்பின் செயற்பாடு. அங்கு போய்ப் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி விவரங்கள் சேகரித்தது மனதை உலுக்கிய அனுபவம். மக்கள் குழு அமைக்கப்பட்டது. அடுத்த ஒன்றரை வருட காலத்துக்கு இந்திய மாணவர் சங்கம் உட்பட பல இடதுசாரி அமைப்புகள் கடுமையான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டன. அப்போது செய்த அயராத பணியின் விளைவாக அங்கு மதக் கலவரம் என்ற நிகழ்வே பிற்பாடு ஏற்படவில்லை; இன்று வரையிலும் கூட.

நான் சென்னைக்கு வந்த பின் திருவல்லிக்கேணியில் இதேபோன்ற மதக் கலவரம் ஏற்பட்டது. பி.யூ.சி.எல். அமைப்பின் வழக்கறிஞர் சுரேஷ் மற்றும் பலருடன் சேர்ந்து குழுவாகச் செயல்பட்டோம். சுரேசும், நானும் இணைந்து அது பற்றி ஒரு புத்தகத்தையும் அப்போது எழுதினோம். ‘அழுது புலம்பி கதறுகிறாள் அன்னை பாரதம்‘ போன்ற அறிவியல் இயக்கப் பாடல்கள் அந்தச் சூழலில் பிறந்து பிரபலமானவை. அப்போதுதான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TamilNadu Science Forum TNSF) ஆரம்பகாலச் செயல்பாடுகளில் வளரத் தொடங்கியிருந்தது. அப்போது டி.ஆர். கோவிந்தராஜன், லயோலா கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர். ஓர் அறிவியல் தலைப்பில் பேசும் பொருட்டு நான் போனபோது 6 பேர் அங்கு இருந்தார்கள். ‘பெரிய பாலாஜி’ என நாங்கள் அழைக்கும் பதிப்பாளர், ‘சவுத் விஷன்’பாலாஜி, த.வி. வெங்கடேஸ்வரன், சி.ராமலிங்கம், இவர்கள் அறிவியல் கட்டுரைகளைத் ‘துளிர்’ இதழுக்கு எழுதுமாறு என்னிடம் கேட்டார்கள். 1987 நவம்பரில் ‘துளிர்’ இதழை எனக்கு அறிமுகம் செய்தவர் ‘சி.ஆர். ‘ என்கிற சி.ராமலிங்கம்தான். மத அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கு அத்வானியின் ரதயாத்திரை அடித்தளமிட்ட காலம் அது.

யோத்தியில் கோயில் கட்ட ஊர் ஊராக செங்கற்களை சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அறிவியல் இயக்கச் செயற்பாடுகளிலிருந்து உருவானதுதானே அறிவொளி இயக்கம்? ‘ஒரு பேரழகு பிறந்தது’ என நாம் கொண்டாடினோம். அதில் தென்சென்னை அறிவொளியை நீங்கள் தன்னார்வமாகத் தொடங்கினீர்கள். இல்லையா? அதைப் பற்றிச் சொல்லுங்கள்…
ஆமாம்! அப்போது இரண்டு முயற்சிகளை தென்சென்னையில் நாங்கள் மேற்கொண்டோம். ஆசிரியர்களுக்கான ஒரு பணிப்பட்டறையில் கிடைத்த உத்வேகத்தின் விளைவாக எங்கள் வீடே லாபரட்டரி ஆகிவிட்டது. வீணாகப் போடப்படும் பல பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான பரிசோதனைகள் செய்தோம். நழுவுபடக் காட்சிகள் (slide show lecture) என்ற ஒரு வடிவத்தில் அறிவியல் விளக்க உரைகள் தமிழ்நாடு முழுக்க நடைபெறத் தொடங்கின. இரண்டு மூங்கில் கம்புகளும், ஒரு வெள்ளை வேட்டியும் கொண்டு போய் அவற்றையே மேடையாகக் கொண்டோம்.

இந்த ஸ்லைட் ஷோ லெக்சர்களில் சி.ராமலிங்கம் நிபுணராகி விட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் லெக்சருக்காகப் போக நேர்ந்தது. புதுவை டிஎன்எஸ்எப். சார்பில் அப்போதுதான் அறிவொளி இயக்கம் என்ற வயது வந்தோர் எழுத்தறிவு முனைப்பு இயக்கம் தொடங்கப்பட்டிருந்தது. வாழ்க்கையே மாற்றியமைத்த அனுபவம் அது. ஜே.கே. என்கிற ஆளுமை அங்கே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. அரியாங்குப்பம் உட்பட புதுவைக் கடற்கரை மீனவர் கிராமங்களில் அறிவொளி வகுப்புகளைப் பார்வையிட்டு பரவசமடைந்தேன்.

சென்னை வந்ததும் ‘பி.ஜே.வி.ஜே.’ என்ற மக்கள் கலை அறிவியல் பயணம்‘ வர இருப்பதையொட்டி அமைப்புக்குழுவை உருவாக்கினோம். அப்பயணக்குழு வந்தபோது ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம் உட்பட பன்னிரண்டு மீனவர் குப்பங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். ‘கண்ணுக்கு மை அழகு; கட்டை விரலுக்கு மை அழகா?’ என்று கைநாட்டு வைப்பவர்களின் மனங்களை உலுக்கினோம். “எழுதப்படிக்கத் தெரிந்து கொள்” என்று சொன்னோம். ‘படிக்காதவர்கள் படிக்க வாருங்கள், படிக்கத் தெரிந்தவர்கள் சொல்லிக் கொடுக்க வாருங்கள்’ என அறைகூவி அழைத்தோம். மக்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முன்வந்தார்கள். தன்னார்வ ஆசிரியர்களும் தயாரானார்கள். ஆனால், இந்திய அரசின் அனுமதியும் நிதியும் வந்த பிறகு அதாவது புராஜெக்ட் அப்ரூவல் கிடைத்த பிறகுதான் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று TNSF சொன்னது. ‘சயன்ஸ் எஜுகேஷன்தான் உன் ஏரியா. இதெல்லாம் இப்போது எதற்கு?’ என்று கேட்டார் பேரா. முருகன். கடுமையான விவாதங்களுக்குப் பின், முழுக்க முழுக்கத் தன்னார்வமாக, அந்தந்தப் பகுதி மக்களின் சொந்தச் செலவில், உழைப்பில் வகுப்புகளைத் தொடங்கி நடத்தினோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் தென் சென்னை ஒரு மாடல்.

அதைத் தொடர்ந்துதானே தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் அரசே அறிவொளி இயக்கத்தை மத்திய அரசு மாநில அரசுத் திட்டமாகத் தொடங்கியது?

புதுக்கோட்டையிலும், சிவகங்கையிலும் புராஜெக்டுகள் தொடங்கின. பிறகு விருதுநகரில் ஆரம்பித்தார்கள். நான் பள்ளிக்கல்வி சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டியதே மேலே சொன்ன அறிவியல் கலை – அறிவியல் பயணம் நடத்தியதன் மூலம்தான். இந்தப் பணிகளில், திலீப் வீரராகவன் ஐஐடி மாணவர்களை ஈடுபடுத்த உதவி செய்தார். தரமணி, காந்திநகர் பகுதிகளில் இந்த மாணவர்களைக் கொண்டு நிறைய முயற்சிகள் நடைபெற்றன. அறிவொளி வகுப்புகளில் எழுதப்படிக்க வந்த வயது வந்தவர்கள் எங்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? ‘‘நாங்க படிக்கறது இருக்கட்டுங்க. எங்க குழந்தைங்க படிக்கறதுக்கு ஏதாச்சும் செய்யுங்க’’ என்பதுதான் பள்ளிகளிலிருந்து இடை விலகிய குழந்தைகளுக்கு என முறைசாராக் கல்வி வகுப்புகளுக்குத் திட்டமிட்டோம். இந்தச் சமயத்தில்தான் TNSF தலைவர்களுள் ஒருவரான, கோவை பாரதியார் பல்கலைக் கழகப் பேராசிரியர் கே.ராமகிருஷ்ணன் “குழந்தைகள் ஏன் பள்ளிகளிலிருந்து இடை நிற்கிறார்கள்?’’ என்ற தனது ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். ஆக, இந்த அம்சங்களையெல்லாம் தொகுத்து சில முன்னோடி முயற்சிகளை ஒரு பரிசோதனை அடிப்படையில் மேற்கொண்டோம். இதற்காக மக்களை அணுகியபோது மகத்தான பல அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அவற்றுள் ஓர் அனுபவம் என்னை உலுக்கியது. ஒரு குழந்தையின் அம்மா சொன்னார்.’’என் பையனும் ஒங்கள மாதிரி ஜிப்பா போடணும் சார்…’’
கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் பள்ளிகளை விட்டு இடைவிலகிய குழந்தைகளுக்காக அறிவியல் இயக்கம் சில முயற்சிகளை மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது. ‘அனைவருக்கும் ஆரம்பக் கல்வி’ என்ற பெயரில் அதுவும் ஒரு புராஜெக்டாக முன்னெடுக்கப்பட்டது. ‘பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்‘ போன்ற கையேடுகளை நீங்கள் எழுதினீர்கள்… அது பற்றி…

அறிவொளி இயக்கமும் சரி, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முயற்சிகளும் சரி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு ஏராளமான புதிய அனுபவங்களை வழங்கின. குழந்தைத் தொழிலாளர்களுக்கென்று இரவு நேர வகுப்புகளுக்குத் திட்டமிட நேர்ந்ததும் அப்போதுதான். பெருங்குடி பகுதியில் அப்போது வரிசையாகத் தோல் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு வேலைசெய்வதற்கு தரமணி, கொட்டிவாக்கத்திலிருந்து சிறுவர்கள் போவார்கள். அவர்களைப் பள்ளிகளில் சேர்க்க முடியுமானால் சேர்ப்பது, முடியாவிட்டால் இரவு நேர வகுப்புகளை நடத்துவது என்று நாங்கள் போனோம். பல அதிர்ச்சிகரமான அனுபவங்கள் காத்திருந்தன. நமது பொதுப்புத்தியிலுள்ள கருத்துகளுக்கும், எதார்த்தத்திலுள்ள நடைமுறைகளுக்கும் இடையே நிலவிய பெரும் இடைவெளி திகைக்கச் செய்வதாக இருந்தது. நான் பணி செய்வது உலகத்தரம் வாய்ந்த ஒரு கணித ஆராய்ச்சி நிலையம். ஐ.ஐ,.டி.மாணவர்களில் பி.டெக் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்குப் போனபோது, எனக்கு இப்படியான பணிகளில் ஈடுபாடும், அனுபவமும் கிடைத்தது. அறிவொளி தொண்டர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடக்கும்போது, ஒரு பகுதி ஊழியர்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்விக்கான தனித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்த முயன்றார்கள். முதல் இரண்டு முயற்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையிலும், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியிலும் மேற்கொள்ளப்பட்டன. பிறகு விருதுநகர் மாவட்டம் சிவகாசிபோன்ற ஊர்களில் தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை செய்த சிறுவர்களுக்கான கல்வித் திட்டமும், வேலூரில் அன்றைய எஸ்எஸ்.ஏ. திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமாரின் முயற்சியில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளான குழந்தை உழைப்பாளிகளுக்கான கல்வித் திட்டமும் பெரிய அளவிலான முயற்சிகள். இந்தக் காலகட்டம் முழுவதிலும் அறிவொளி, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இரண்டிற்குமே புதுவை ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜேகே என்று நாங்கள் அன்புடன் அழைப்போம்)ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. பயிற்சி முகாம்களில் அவர் ஆற்றும் உரைகளும், பொறுமையாக ஊழியர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய விதமும் மறக்கவே முடியாதவை.
களப்பணிகளில் இப்படி நீங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டுதானே கற்றலின் இனிமை, அறிவியல் ஆனந்தம் போன்ற கையேடுகள் உருவாகின? பாடத் திட்டக் குறைகள் பற்றிய குழுக்கள் பலவற்றில் நீங்களும் இடம் பெற்று பங்களித்திருந்தீர்கள். இப்போதும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ள பாடத் திட்டக்குழுவில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி உங்கள் கருத்துகளைக் கூறலாமா?

தேசிய கலைத் திட்டம் – மாநில பாடத் திட்டம் – பாடப்புத்தகம் – மாணவர்களுக்கு ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவது – மாணவர்கள் கற்றுக் கொள்வது அவர்கள் நோட்டுகளில், தேர்வுகளில் எழுதுவது ஒவ்வொன்றுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளிகள் நிலவுகின்றன. ஏழெட்டுப் பள்ளிகளைத் தேர்வு செய்து, அங்கு மூன்று குறிப்பிட்ட பாடப் பகுதிகளை ஆய்வு செய்தோம். அப்பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து கலைத் திட்டத்தின் எதிர்பார்ப்பு பாடப்புத்தகம் என்ன சொல்கிறது – மாணவர்கள் அடைந்துள்ள புரிதல் என்ன என்பது பற்றிய ஆய்வு அது. நாங்கள் தேர்ந்தெடுத்த பாடப் பகுதிகள் – அறிவியலில் ‘நியூட்டன் விதிகள்’ வரலாற்றில் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது; கணக்கில் _ஸ்கொயர் ரூட் _ ஆகியவை, மகாத்மாகாந்தியைக் கொன்றது யார், ஏன் என்று ஆசிரியர்கள், மாணவர்களைக் கேட்டபோது அவர்களுள் பலருக்கு விடை தெரியவில்லை. கோட்சேதான் கொன்றவன் என்று சொன்னவர்களிடம் அவன் ஏன் அதைச் செய்தான் எனக் கேட்டபோது அவன் ஒரு வெறியன், ஃபனட்டிக் என்ற பதில் வந்தது. ‘வெறியன் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? எத்தனை பேரை அப்படி அவன் கொன்றுவிட்டான்?’ என்று கேட்கையில் பதில் இல்லை. யோசிக்கிறார்கள். ஸ்கொயர் ரூட் _ மகாத்மாகாந்தி கொலை _நியூட்டனின் விதிகள் மூன்றையுமே ஒரே மாதிரியாகத்தான் அணுகுகிறார்கள். மூன்று வெவ்வேறு அம்சங்களுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. தேர்வுக் கேள்விகள் படுமோசமானவையாயிருந்தன. மகாத்மா காந்தி என்ற மகத்தான மனிதரைக் கொலை செய்தது பற்றி வகுப்பறையில் எந்தவிதமான எமோட்டிவ் ரியாக்க்ஷனும் எழவில்லை. இந்த அம்சம் பற்றி கிருஷ்ணகுமாரின் முரண்பாடுகளிலிருந்து கற்றல்’ புத்தகம் (Learning From Conflicts)பேசியிருக்கிறது. அதேபோல நியூட்டனின் விதிகள் பற்றி மாணவர்களிடையே கேட்டபோது அவற்றை மீறவே முடியாது என்றார்கள். ஏன் மீற முடியாது. மீறினால் என்ன நடக்கும் என்று கேட்டேன். அவர்களால் பதில் சொல்ல முடியாமல் போகிறது. ஒரே ஒரு மாணவன் சொல்கிறான்: ‘நியூட்டனின் விதிகள் உயிர் உள்ள இனங்களுக்கானவையல்ல; அவை உயிரற்ற பொருட்களுக்கே பொருந்தும்.’ என்பது அவன் பதில்.

(Learning without Burdon) ஆவணத்தில் யஷ்பால் இதேபோல சில எடுத்துக் காட்டுகளைத் தந்திருக்கிறார். “A Lot is taught, but little is learnt or Understood” ஏராளமானவை கற்றுத் தரப்பட்டுள்ளன; ஆனால் புரிந்து கொள்ளப்பட்டவையோ அல்லது கற்றலடைவு பெற்றவையோ மிக சொற்பம் என்று ஒரு குறிப்பு வருகிறது. இப்போதைய கற்றல் திறன்கள் குறித்த மதிப்பீடுகள் கவலையளிக்கின்றன. இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவீர்கள்?
சமூகத்தின், பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கும், வகுப்பறையின் எதார்த்தத்திற்கும் இடையே நிலவுகிற வேறுபாடு கவலை தருவதாகத்தான் இருக்கிறது. யஷ்பால் குழுவின் அறிக்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஏற்கெனவே ‘பாடச்சுமை’ பற்றி ஆராய்ந்த சிவஞானம் குழுவும் இதே கவலையைத்தான் பதிவு செய்திருக்கிறது. தான் புரிந்து கொள்ளாத ஒன்றைச் சொல்லவும் எழுதவும் வேண்டும் என்றால், அதுதான் பெரிய சுமை. பள்ளிக் கல்வியில் உள்ள மையமான பிரச்சனைகள், சமூகம் அவற்றைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் – இரண்டும் வெவ்வேறு முனைகள். இதற்கு என்ன செய்வது? சி.பி.எஸ்.இ., – எதிர் – தமிழ்நாடு பாடத் திட்டம் என்பது போன்று கருதுவது முழுவதும் சரியல்ல. சிபிஎஸ்இ _ பாடத் திட்டம் சில இடங்களில் கடினமானதாக உள்ளது. மாநிலக் கல்வித் திட்டம் _ சில இடங்களில் கடினமானதாகவும் உள்ளது. தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் ‘புக்பேக்‘ என்று கடைசியில் சில பக்கங்கள் உள்ளன. புக் பேக் என்றால் என்ன? அப்படியொரு வார்த்தை அகராதியிலேயே கிடையாது. கடைசிப் பக்கங்களில் தரப்பட்டுள்ள கேள்விகள் மட்டுமே தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. அவற்றைப் படித்து, பதில்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதினால் போதும் என்று ஒரு நிலைமை உள்ளது.

தேர்வுமுறையை அடியோடு மாற்றாமல் இதை மாற்றுவதற்கு வழியே இல்லை. ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி – பி.எட். தேர்வுக்கு வைக்கப்படும் பாடத் திட்டம். அதை எப்படி சொல்லித் தருவது. கற்பித்தல் திட்டம் இவையெல்லாம் ஆராயப்பட வேண்டியவையாக உள்ளன. தொடக்கக் கல்வியிலாவது பரவாயில்லை. ஏபிஎல் போன்ற முயற்சிகளில் நிலைமைகள் கொஞ்சம் மாறியிருக்கின்றன. இன்னொரு முக்கியமான அம்சத்தைப் பலரும் கவனத்தில் கொள்ளாமல் குறை சொல்லிக் கொண்டிருப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். விடுதலைக்கு முன்பும், பிறகும் இருந்த பொதுப்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றில் படித்து வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றில் முதல் தலைமுறை மாணவர்கள் எத்தனை சதவீதம்? இன்றைய நிலையில் மொத்தப் பள்ளிகள் – பயில்கிற மானவர்களுள் முதல் தலைமுறை மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர்? நம்முடைய இன்றைய பள்ளிக்கல்வித்துறை ஒரு பெருந்திரள் கல்விமுறை அமைப்பு Mass Education System மிகப் பெரிய நடுத்தர வர்க்க மக்கள் திரளின் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருகின்றனர். அன்று நான் பள்ளிக்கு வந்தபோது எனக்குக் கிடைத்த கவனிப்பும், அங்கீகாரமும் இன்று ஒரு பின்தங்கிய வகுப்புக் குழந்தைக்குக் கிடைக்குமா?
தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது பற்றி உங்கள் கருத்தென்ன?

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவை முதலிடம் பெற்றது எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில்தான். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் முன்பு ஓர் அம்சம் வலிமையான சங்கிலித் தொடரமைப்பைக் கொண்டிருந்தது. இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அமைப்பு அது. ‘அரசு உதவி பெறும் பள்ளிகள்’ (Aided School) எம்மாநிலத்திலும் இல்லாத அமைப்பு அது. ‘அரசு உதவி பெறும் பள்ளிகள்’ இம்மாநிலங்களில் அதிகம். பள்ளிக் கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் தனியார் பொறுப்பேற்றுச் செய்வார்கள். ஆ.சிரியர் பணியிடங்களுக்கு அனுமதியும், அவர்களுக்கான சம்பளமும் மட்டும் தனியாருக்கு அரசினால் வழங்கப்படும். இந்த முறையில் மிக வலிமையான ஒரு வலைப்பின்னல் அமைப்பு உருவாகியிருந்தது. இவை Different Kinds of Schools. மற்ற மாநிலங்களில் அப்படியில்லை. ஆரோக்கியமான Private public Partnership PPP என்றால் அது இந்த எய்டட் ஸ்கூல்ஸ்தாம் என்பது என் கருத்து. ஆனால் உலகமயமாக்கல், கல்வியை வணிகமயமாக்கல் எல்லாம் வந்த பிறகு இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. அரசு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டு விட்டது. முந்தைய வகை மாதிரிக்கு இது எதிரானது. நேர்மாறானது.

கணிதவியல் நிபுணர் நீங்கள். பொதுவாக கணக்கு என்றால் பலரும் சிரமப்படுகிறார்கள். கணிதம் கற்பித்தலில் இன்றைய முறை சரியானதுதானா?

கணிதம்_ தேசிய அளவில் கலைத்திட்ட வடிவமைப்பில் முன்பிருந்ததை விட சில தெளிவுபடுத்தல்களைச் செய்ய முடிந்தது. தொடக்க நிலையில் 38 என்ற எண்ணை 54ஆல் பெருக்கும்போது என்ன விடை வரும் என்ற கேள்விக்கு துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்பதல்ல. தோராயமாக 2000 ப்ளஸ் என்று சொல்லத் தெரிவது. ஒரு வாழைப் பழத்தின் எடை, முட்டையின் எடை, தங்க மோதிரத்தின் எடை – ஒவ்வொன்றின் எடைக்கும் உள்ள வேறுபாடு, ஒவ்வோர் எடைக்கும் அதன் பின்ன அளவில் மதிப்புக் கூடுவது, குறைவது பற்றிய புரிதல்தான் முக்கியம்.

கணிதத்தில் சில செயல்முறைகள் உள்ளன. தேசிய கலைத்திட்ட வரையறைச் சட்டகம் (NCF2005) முன்னெடுத்த கவனக்குவிப்பு, பாடத்தின் உள்ளடக்கத்திலிருந்து செயல்முறைகள் பக்கம் திரும்பியது. குறிப்பான ஒரு பிரச்சனை முன்னுக்கு வருகிறது என்றால் அதைப் பொதுமைப்படுத்தி அணுகுமாறி கூறியது. Searching for Counter Example – முரண் எடுத்துக் காட்டு என்ன என்று தேடுதல்.

நிரூபணம் – ஒன்றை நிறுவுவது – சமூகச் சிந்தனை. சிந்தனைகளைக் கணிதமயமாக்கும் ஒரு செயல்முறைதான் கணக்கு. ஏபிஎல் வந்த பிறகு தொடக்கக் கல்வியிலும், அப்பர் பிரைமரியிலும் கொஞ்சம் மாறுதல் வந்தது. இடைநிலைக் கல்வியிலும், மேல்நிலைக் கல்வியிலும் மிக இறுக்கமான நிலைமைதான் தொடர்கிறது. பள்ளிகளில் கற்பித்தலுக்குத் தரும் முக்கியத்துவம் இல்லாமற்போய், தனிப் பயிற்சிகளுக்கு – டியூஷன்களுக்கு – முக்கியத்துவம் தருவதே அதிகம். ட்யூஷன் கற்றுத் தருவது மிகப் பெரிய தொழிலாக, பணம் பண்ணுகிற இண்டஸ்ட்ரியாக மாறிவிட்டது. கல்லூரி கணிதத்திற்கும், பள்ளிகளில் கணிதத்திற்குமிடையே வேறுபாடுகள் அதிகம். கல்வியியல் ஆராய்ச்சி நிலையங்களில் கணிதமோ, அறிவியலோ கற்றுக்கொண்டு பட்டம் பெற்று பணியாற்ற வருபவர்கள் மிகவும் குறைவு. கணிதம், அறிவியல் என்றாலே ஓர் அச்சம் நிலவுகிறது. இந்தத் தகுதிகளைக் கட்டாயப்படுத்தினால் நடக்காது.

சமகாலத் தொழிள்நுட்பங்களைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்சனை ஓரளவு தீருமென்று தோன்றுகிறது. ஜியோ _ஜீப்ரா என்று ஒரு நுட்பத்தை கேரளாவில் இப்போது பயன்படுத்தி பாடப் பொருள்களை விஷுவலைஸ் பண்ணுகிறார்கள். தொழில்நுட்பவியல் மாற்றங்கள் என்றால் ஆடியோ காஸெட்டுகள், வீடியோ விஷுவல்ஸ் இல்லை. மொபைல் ஆப் _ மூலம் பழம் ஒன்றின் எடை, ஃபேன் சுற்றும் வேகம் போன்றவற்றைப் புரிந்து கொள்வது.

இறுதியாக, நீங்கள் பரிந்துரைப்பது எதை?
இன்றைய சூழலில், பல புதிய சாத்தியக்கூறுகள் முன்னுக்கு வந்துள்ளன. ஆசிரியரும், புத்தகமும் இதுவரை அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர். அந்த அதிகாரத்தை உடைக்கப் பல தொழில்நுட்ப வசதிகள் இன்று வந்துவிட்டன. ஆசிரியர்கள் தமது அதிகாரங்களை இழக்கத் தயாராக வேண்டும். புதிய முதல் தலைமுறை மாணவர்களுக்குப் பல நுழைவுத் தடைகள் (Entry Baarriers) உள்ளன. அவற்றை உடைத்தே தீர வேண்டியிருக்கிறது. கற்றலில் Three ‘R’S, Five ‘C’s இவையெல்லாம் காலாவதியாகிக் கொண்டு வருகின்றன. ‘G’ திருவாளர் கூகுள் – தான் இருக்கிறார். இன்று முதல் வகுப்பில் சேரும் குழந்தை 2023 இல் படிப்பை முடித்து வெளிவரும். அதற்குள் கூகுள், மொபைல் செயலி போன்றவற்றில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை. அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு, கல்வித்துறை மாறியே தீர வேண்டும்; ஆசிரியர்களும்தான்!

Related posts

Leave a Comment