You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியம்

என்.குணசேகரன்

மார்க்சியம், இரண்டு நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஓர் அற்புதமான கருத்து சரியானது என்பதனை உணருவார்கள்.லெனின் எழுதினார்:

“மார்க்சிய கருத்தாக்கங்கள் சர்வ வல்லமை கொண்டவை; ஏனென்றால், அவை உண்மையானவை’ (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்,மூன்று மூலக்கூறுகளும்.)
மார்க்சிற்கு முந்தைய காலங்களில் உருவான மேன்மையான சிந்தனைகளை உள்வாங்கி,அவற்றை ‘இரக்கமற்ற விமர்சனம்” என்ற உரைகல்லில் உரசி, மார்க்ஸ், எங்கெல்ஸ் கட்டியமைத்த மகத்தான தத்துவம்தான் மார்க்சியம்.
இதனை இன்னும் நுட்பமாக லெனின் விளக்கினார்:
“ஜெர்மானிய தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனித சிந்தனை உருவாக்கிய அனைத்து மேன்மையான படைப்பாக்கங்களுக்கெல்லாம் வாரிசாகத் திகழ்வது, மார்க்சியம்.”19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்திற்கு, வளமையான பங்களிப்புக்கள் 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்களிப்பு செலுத்தியது மட்டுமல்ல;ஆசிய,ஆப்பிரிக்க கண்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்கள் மற்றும்,ஒவ்வொரு நாடு, பகுதிசார் பங்களிப்புக்களையும் மார்க்சியம் கண்டுள்ளது.
ஒவ்வொரு துறை சார்ந்த வளர்ச்சியும் பிரம்மாண்டமானது. பொருளாதாரம்,வரலாறு, சமூகவியல் மட்டுமல்லாது,மானுடவியல்,உளவியல்,சுற்றுச்சூழல் என துறைசார் வளர்ச்சியின் தளங்கள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.

2007-ம் ஆண்டில் “இருபதாம் நூற்றாண்டு மார்க்சியம்: ஓர் உலக அறிமுகம்”எனும் நூல் வெளிவந்தது. டேரில் கிளேசர்,டேவிட். எம்.வால்கர் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் தொகுத்த கட்டுரைத் தொகுப்பு நூல் இது. பலர் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
நூலின் முன்னுரையில் வால்கர் குறிப்பிடுகிறார்:

“கடந்த நூற்றாண்டில்,…அரசியல் மற்றும் அறிவுத் தளப் பரப்பில், வேறு எந்த அரசியல் சித்தாந்தத்தை விட மார்க்சியமே அதிகப் பங்களிப்பை செலுத்தியுள்ளது என்று வலுவாக வாதிட முடியும்..” நூலின் உள்ளடக்கம் முழுவதும் இந்தக் கூற்று உண்மையானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சோவியத் யூனியன் தகர்ந்து பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் கவிழ்ந்த பிறகு’ மார்க்சியம் இறந்து போய்விட்டது’ என்ற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது. இதனை குறிப்பிடும் வால்கர், மார்க்சிய இறப்பு வாதம் பொருத்தமற்றது என பேசுகிறார். மார்க்சியம் உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு பாரம்பர்யம் எனவும், அதன் பல்துறை வளர்ச்சி அழிக்க முடியாத உயரத்திற்குச் சென்று வளர்ந்து வருவதையும் சுட்டிக் கட்டுகிறார்.

நிலப்பரப்பு முழுவதும்….
லெனின் சிந்தனையைத் தவறுதலாக சித்தரிக்கும் போக்கினை விமர்சித்து,ஒரு கட்டுரையை பேராசிரியர் ஷுன்றோ எழுதியுள்ளார். “என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலின் வாதங்களையும், ஏகாதிபத்தியம் பற்றிய லெனின் சிந்தனைகளையும் அவர் கட்டுரையில் அலசுகிறார். ரோசா லக்சம்பர்க், ட்ராட்ஸ்கியின் கருத்துக்கள், லெனினுடன் லக்சம்பர்க் முரண்பட்ட நிலைபாடுகள் போன்றவை மற்றொரு கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

“வலதுசாரி மார்க்சியம்” என்ற தலைப்பில் காவுத்ஸ்கி, திருத்தல்வாதி என அறியப்பட்ட பெர்ன்ஸ்டைன் ஆகியோரின் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.
அன்றைய ஜெர்மானிய நிலைமைகளை கருத்தில்கொண்டு காவுத்ஸ்கி சோசலிசம் கட்டும் திட்டத்தை உருவாக்கினார்.ஜெர்மனியில் பாராளுமன்ற ஜனநாயகம் இருந்ததும்,வலுவான முதலாளித்துவம் நிலைத்திருந்த சூழலில் மார்க்சிய இலக்கை அடையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வரலாறு முக்கியமானது.ஆனால் மார்க்சிய புரட்சிகர நிலையிலிருந்து விலகும்போது, மேற்கண்ட இருவரையும், லெனினும் ரோசா லக்சம்பர்க்கும் விமர்சித்தனர்.அன்றைய ஜெர்மானிய சமுக ஜனநாயக கட்சியில் நடந்த விவாதங்களை அறிய இக்கட்டுரை உதவிடும்.

“மேற்கத்திய மார்க்சியம்” எனும் தலைப்பில் லுகாக்ஸ்,கிராம்சி,அல்தூசர் உள்ளிட்டோரின் பங்களிப்பு அலசப்படுகிறது. “உலகத்தை மாற்றுவதுதான் மார்க்சிய தத்துவத்தின் நோக்கம் என்றால்,மேற்கத்திய மார்க்சியம் ஒரு தோல்வி என்றே கருதலாம்” என்று கட்டுரையாசிரியர் கூறுவது விவாதத்திற்கு உரியது.மார்க்சிய லெனினிய அடிப்படைகளை நீர்த்துப் போகிற கருத்தாக்கங்கள் எதுவும் புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்தாது.

நூலின் மூன்றாவது பாகத்தில் லெனின்,ஸ்டாலின் தலைமுறைக்குப் பிறகு சோவியத்தில் எழுந்த மார்க்சிய சிந்தனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.ஆப்பிரிக்க மார்க்சியம்,ஆசிய மார்க்சியம் என நிலபரப்பை மையப்படுத்திய தலைப்புகளில் மார்க்சிய வளர்ச்சி விவாதிக்கப்படுகின்றது.

ஆப்பிரிக்க சிந்தனையாளர்களில் அமில்கர் காப்ரல் பங்களிப்பு பேசப்பட்டுள்ளது. அவரது மைய சிந்தனை புரட்சியில் விவசாயிகள் வகிக்கும் பங்கு பற்றியது.,கிராமப்புற கலாச்சாரத்தை முற்போக்கானதாக மாற்ற வேண்டிய பிரச்னைக்கு காப்ரல் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பொருத்தி,புரட்சிகள் நடந்த நிகழ்வுகளும் விளக்கப்படுகின்றன.லெனினியம் வழிகாட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பு காலனிய நாடுகளின் புரட்சி இயக்கங்களை கவர்ந்தது.மாசேதுங் சீனாவின் தனித்தன்மைகளைக் கருத்திற்கொண்டு புரட்சி நடைமுறைகளை உருவாக்கிய விதம் விளக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் மார்க்சியம் தழைத்த வரலாற்றினை ரொனால்டோ முன்க் விரிவாக விளக்கியுள்ளார். கியூப புரட்சியும், பிறகு சிலியில் நடந்த புரட்சியும் மார்க்சியம் மக்கள் இயக்கமாக வளர வாய்ப்புகளை ஏற்படுத்தின. காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்டவர்கள் மார்க்சியத்தை இலத்தின் அமெரிக்க நிலைமைகளில் பொருத்தி வளர்த்த வரலாறு விளக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தி இது போன்ற நூல்கள் வந்துள்ள நிலையில் “இருபதாம் நூற்றாண்டு மார்க்சியம்” நூல் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கீழை நாடுகளில் எழுந்த மார்க்சிய சிந்தனைகளையும் விளக்குகிறது. இது,இந்நூலின் சிறப்பு.
ஆனால்,இது போன்ற பல நூல்களில் காணப்படும் ஸ்டாலின் மீதான வெறுப்பு இந்த நூலிலும் உள்ளது.குறிப்பாக “சோவியத் மார்க்சியம் எனும் தலைப்பில் சொல்லப்படும் கருத்துகள் பல விமர்சனத்துக்குரியவை.கட்டுரையாசிரியர்கள் பலரின் பல வரையறுப்புகள் ஏற்றுக் கொள்ள இயலாதவையாக இருந்தாலும் இந்த நூல் மார்க்சியத்தின் இருபதாம் நூற்றாண்டு வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.இன்னும் இந்த பரப்பில் அதிக படைப்பாக்கங்கள் தேவை என்ற எண்ணத்தை இந்நூல் வலுப்படுத்துகிறது.

புதிய சுரண்டலற்ற சமுகம் உருவாக்க வேண்டுமென்ற மனித இனத்தின் தேவை இருக்கும் வரை மார்க்சியம் மேலும்மேலும் வல்லமை பெற்று வளர்ந்திடும்.
(தொடரும்)

Related posts

Leave a Comment