You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

பெண்மை எனும் கற்பிதத்திலிருந்து, புரட்சிக்கு…

என்.குணசேகரன்

மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாக சுயசரிதை எழுதுவதில்லைஇயல்பாகவே கம்யூனிச இலட்சியப் பிடிப்பு கொண்ட ஒருவருக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வது சிரமமானது.சாதனைகள் என மதிப்பிடத்தக்க பல செயல்களைச் சாதித்த கம்யூனிஸ்டுகள் அவற்றைத் தங்களது சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதில்லை.கூட்டுச் செயல்பாடுகள் என்றே அவற்றைக் கூறுவார்கள்.
மற்றொன்று,மார்க்சிய இயக்கத்தில் தனிநபர் வழிபாடு,சுயபுராணம் போன்ற பழக்கங்கள் கம்யூனிச இலட்சிய நோக்கில் இயக்கம் நடைபோடுவதைப் பாதிக்கும்.
ஆனால்,இதற்கு எதிர்மறையான ஒரு விளைவும் உண்டு.முதலாளித்துவ பிரச்சார இயந்திரம்,கம்யூனிச இயக்கத்தின் சாதனைகளை மறைப்பது,திசை திருப்புவது,அவதூறு செய்வது என இடையறாது இயங்குவதற்கும் மேற்கண்ட அடக்க
மான அணுகுமுறை இடமளித்து விடுகிறது.இது ஒரு தொடர் பிரச்சனை.
பல மார்க்சியர்கள் சுயசரிதைகளும் எழுதியதுண்டு.இ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் வாழ்க்கை பற்றிய அவரின் எழுத்துகள்,சொந்தப்புராணமாக இல்லாமல்,கேரள சமூகத்தில் கம்யூனிச இயக்கம் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.சமூக முரண்களின் இயக்கத்தில் தாங்களும் ஓர் அங்கமாகச் செயல்பட்டதை இது போன்ற சுயசரிதைகள் விளக்குகின்றன.கம்யூனிச நெறி சார்ந்த அடக்கம் என்ற எல்லை மீறாமலும் இந்த எழுத்துகள் அமைந்துள்ளன.

இந்த வரிசையில் ஒரு முக்கியமான நூல், ரஷியப் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டிரா கொலந்தாய் எழுதிய “ பாலியல் விடுதலையடைந்த ஒரு பெண் கம்யூனிஸ்டின் சுயசரிதை ( The Autobiography of a Sexually Emancipated Communist Woman ) ஆகும்.”சுயசரிதை எழுதுவதைவிட சிரமமான பணி வேறு எதுவுமில்லை” என்ற வரிகளோடு தொடங்கும் இந்தச் சுருக்கமான நூல்,1926—ஆம் ஆண்டு வெளியானது.சமீபத்தில் இடதுசாரி எழுத்தாளர் தாரிக் அலி, இந்நூலை ரஷியப்புரட்சி பற்றிய முதல் பத்து நூல்கள் வரிசையில் சேர்த்து ’கார்டியன்’ பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

தன் சிறுவயது வாழ்க்கையையும்,பிறகு,குடும்ப வாழ்வையும் விவரிக்கும் கொலந்தாய்,குடும்பம் என்பது ஒரு ”சிறை”யாக மாறியதையும்,ரஷியாவின் புரட்சிகரத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தான் முழுமையாக ஈர்க்கப்பட்டதையும் விளக்குகிறார்.1899-ஆம் ஆண்டு, சட்டவிரோதமாகச் செயற்பட்டு வந்த ரஷிய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து,தீவிர பிரச்சாரப்பணியிலும் எழுத்துப்பணியிலும் ஈடுபட்டார்.1905-ஆம் ஆண்டு நடந்த எழுச்சியில் முக்கியப் பேச்சாளராகவும், அமைப்பாளராகவும் திகழ்ந்தார்.

பெண்விடுதலை இலட்சியத்தில் கட்சியின் கவனத்தைக் கொண்டுவர இடையறாத முயற்சிகள் மேற்கொண்டவர் கொலந்தாய்.1907-ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய உழைக்கும் பெண்களின் மன்றம் பிந்தைய காலங்களில் ரஷியப்புரட்சியிலும் சோவியத் சோஷலிசத்தைக் கட்டுவதிலும் முக்கியப் பங்காற்றிய பல பெண் போராளிகளை உருவாக்கியது.

முதலாம் உலகப்போர் 1914-ஆம் ஆண்டு மூண்டபோது,போருக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டார். போலியான தேசபக்தியின் பெயரால்.போரில் ஈடுபட்ட தங்களது அரசாங்கங்களை ஆதரித்து பல சமூக ஜனநாயகக் கட்சிகள் போர் ஆதரவு நிலை எடுத்தன.ரஷ்யாவில் லெனினும்,ஜெர்மனியில் ரோசா லக்சம்பர்க்கும் போர் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு எதிரானது என்று கூறி,சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தனர்.இந்த நிலைப்பாடுகளைப் பற்றி தன் சுயமான சிந்தனையின் அடிப்படையில் ஆய்வு செய்து போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அதற்காகக் கைதுசெய்யவும் பட்டார்.ஐரோப்பாவில்,போரெதிர்ப்புப் பிரச்சாரத்திற்காகச் சிறை சென்ற முதல் பெண்போராளியும் அவர்தான்.

1917—ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்ற காலங்களிலும், கொலந்தாய் ஆலைத் தொழிலாளர்கள்,ராணுவத்தில் இருந்த பெண்கள் மத்தியில் பணியாற்றி அவர்களைத்
திரட்டினார்.புரட்சிக்குப் பிறகு,1918-ஆம் ஆண்டு,முதல் பெண்தொழிலாளர் மாநாட்டை நடத்தி,தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்தொழிலாளர்கள்,விவசாயப் பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கான சட்டங்களையும் நலத்திட்டங்களையும் உருவாக்கினார்.

பாலின சமத்துவத்திற்காக…..
புரட்சிக்கு முந்தைய அவரின் செயற்பாடுகளிலும்,சோவியத் அரசின் பொறுப்புகளை வகித்தபோதும் பெண்விடுதலை பற்றிய பிரச்சனைகள் மீது தனிக்கவனம் கொண்டிருந்த்தார்.பெண்களின் சமூகப்பாத்திரம் குறித்த முதலாளித்துவ சிந்தனைகளோடு வாதப்போர் நடத்துகிற நூலாக,” பெண்கள் பிரச்சனையின் சமூக வேர்கள்” என்ற நூல் அமைந்திருந்தது.

அதேபோன்று புரட்சிக்கு முந்தைய பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியினர் பெண்கள் பிரச்சனைகளையொட்டிய சட்ட நகல்களை முன்வைக்க முனைந்தபோது,அந்த நகல்களை உருவாக்கும் பொறுப்பினைக் கொலந்தாய் ஏற்றார். இதையொட்டி ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் பேறுகாலப் பிரச்சனைகளையும், சட்டங்களையும் ஆழமாக ஆய்வு செய்து 600 பக்க நூல் ஒன்றினை எழுதினார்.
இதைப்பற்றி, தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்:” இந்தத்துறையில் அடிப்படையான ஒழுங்குமுறைகள்,கோரிக்கைகளை எனது நூலின் இறுதியில் தொகுப்புரையாக எழுதியிருந்தேன்.அவையனைத்தும் 1917-ஆம் ஆண்டு சோவியத் அரசு அமைந்தவுடன் கொண்டுவரப்பட்ட முதல் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களிலேயே இடம்பெற்றன.” சமூக நலத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று அவர் ஆற்றிய பணிகளைத் தனது நூலில் கொலந்தாய் பதிவு செய்துள்ளார்.அனாதைக்குழந்தைகள் நலத்திலிருந்து,பொதுசுகாதார முறை ஏற்படுத்துவது உள்ளிட்டு நுணுக்கமான பல பிரச்சனைகளுக்கு சட்ட அரசாங்கப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.இதனால் தான் எதிர்கொண்ட எதிர்ப்புகளையும் அவர் பதிவு செய்துள்ளார்.இம்முயற்சிகள் அனைத்துக்கும் லெனின் பக்கபலமாக இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

நார்வே நாட்டிற்கான சோவியத் தூதராகப் பணியாற்றியபோதும் அவர் தனிமுத்திரை பதித்து பணியாற்றினார்.ராஜதந்திரப் பணிகள் என்று சொல்லப்படும் பணிகளிலும் பெண்கள் சிறப்பாகப் பணியாற்ற இயலும் என்பதை முதன்முறையாக கொலந்தாய் மூலமாக சோவியத் அரசு உலகுக்கு எடுத்துக்காட்டியது.
பாலியல்,பாலின சமத்துவம் பற்றிய அவரது கருத்துகள் இன்றளவும் சர்ச்சைக்குரியவையாகக் கருதப்படுகின்றன.அவரது பல கருத்துகள் திரித்து,தவறாக விளக்கப்படுகின்றன.

காதல்,பாலியல் உறவுகள் பற்றிய ஆய்வு,இந்த உறவுகளுக்கு அடிப்படையாக உள்ள வர்க்க உறவுகளில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதில் கொலந்தாய் உறுதியாக இருந்தார்.இந்த உறவுகள் பற்றிய ஆய்வு வரலாற்று ரீதியானதாக இருக்க வேண்டும் என்பதுடன்,மார்க்சியப் பொருள்முதல்வாத அடிப்படையிலும் இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.ஏற்றத்தாழ்வான,ஆணாதிக்கம் மேலோங்கும் பாலியல் உறவுகளை
சமத்துவமான,ஒடுக்குமுறை இல்லாத நிலைக்குக் கொண்டுவர வேண்டுமெனில்,அது பாட்டாளி வர்க்க கூட்டு சமுதாயத்தில்தான் சாத்தியம் என்பதும் அவரது கருத்து.
தனது வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும்போது,”பெண்களும்,அவர்களது எதிர்காலமும்தான் எனது வாழ்க்கை முழுவதிலும் ஆக்கிரமித்திருந்தது;அவர்கள் மீதான அக்கறைதான்,என்னை சோசலிச இலட்சியத்திற்கு இட்டுச்சென்றது” என்று எழுதினார்.பெண்விடுதலைக்கான போராட்டம்,சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்பது,கொலந்தாயின் வாழ்க்கை,நமக்கு அளிக்கும் பாடம்.!

Related posts

Leave a Comment