You are here

புத்தகமற்ற வாழ்க்கையை யோசிக்கவே முடியாது!

– தொகுப்பு: எஸ் வி வேணுகோபாலன்

இவ்வாண்டு உலக புத்தக தினத்தை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச – உடன் இணைந்து பாரதி புத்தகாலயம் 1000 இடங்களில் கொண்டாடியது. இதனை முன்னிட்டு சென்னையில் நூல் வெளியீட்டுத் திருவிழாவாகக் கொண்டாடியது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை என்றாலும் கோடையின் வெம்மை மனிதர்களை கூட்டுக்குள்ளிருந்து வெளியேறாது மிரட்டிக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாத புத்தகக் காதலர்கள் அன்று காலையிலேயே, இளங்கோ சாலையில் இருக்கும் பாரதி புத்தகாலயக் கடைக்குள் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தனர். மேலே இரண்டாம் தளத்தில் நூல் வெளியீட்டுக்கான மும்முரம் பரவிக் கொண்டிருந்தது. இந்த முறை மிக இளம் மற்றும் குழந்தை வாசகர்கள் சிலரும் ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்திருந்தனர்.

நூல் வெளியீடுகள் நிறைவு பெற்றதும், புத்தக தின சிறப்புக் கூட்டம் மிகச் சுருக்கமாக, ஆனால் ரசனை மிக்கதாக சொற்பொழிவுகளால் தன்னியல்பாக நடைபெற்றது குறிப்பிட வேண்டியது.

ப கு ராஜன் வரவேற்பை அடுத்து, ரோசா முத்தையா நூலக நிர்வாகி சுந்தர் பேசுகையில், உற்சாகம் அளிக்கவும், சோர்வுற்றிருக்கையில் ஆற்றுப்படுத்தவும், வெற்றியின் ஆணவம் தலைக்கேறிவிடாது பக்குவப்படுத்தவுமாக எல்லாவித உணர்வுகளையும் அளிக்கின்றன புத்தகங்கள், புத்தகமற்ற வாழ்க்கையை யோசிக்க முடியவில்லை என்றார்.

மூத்த பத்திரிகையாளர் இரா ஜவஹர், “அம்பத்தூரில் மார்க்சிஸ்ட் இயக்க பொறுப்பாளராக, சிஐடியூ அரங்கில் வேலை பார்க்கையில் வளர்த்துக் கொண்ட வாசிப்புக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். பின்னர் மதுரைக்குக் குடிபெயர்ந்து செல்கையில், டிவிஎஸ் லாரியில் கொண்டு இறக்கிய பொருள்களில் ஆகப்பெரும் பங்கு புத்தக மூட்டைகளாகவே இருக்க, என் தந்தை, சம்பாதிச்சு என்ன சேர்த்து வச்சிருக்கான் பாரு, புத்தகம் தான் சொத்து, சனியன் சனியன்…என்று கரித்துக் கொட்டியதை மறக்க முடியாது. ஆனால் வாசிப்பே என்னை ஒரு கட்டத்தில் எழுத்தாளராக, ஆய்வு மேற்கொண்டு புத்தகங்கள் எழுதுபவராக ஊக்குவித்திருக்கிறது, வாசிப்பே உயிர் மூச்சு” என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் ச தமிழ்ச்செல்வன், “இன்றைய அமைப்பே புத்தக விரோதிகளை மீறி வாசிப்பைத் தூண்டும் சவாலான வேலையை முன்வைக்கிறது. பள்ளிக்கூடத்தில், வீட்டில், பொதுவெளியில் புத்தகங்களை வாசிக்காத மனிதர்கள் குழந்தைகளை எப்படி வாசிக்க உத்வேகம் வழங்க முடியும்… அறிவொளி இயக்கத்தில் கிராமங்களுக்குச் செல்கையில் படிப்பறிவற்ற மக்களுக்கு நாங்கள் ஏதோ கற்றுத் தருவதைப்போல் திமிரோடு போனோம். படிக்க என்ன கசக்குது என்று அவர்களைக் கேட்டோம், இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் என்று அவர்கள் எங்களைக் கேட்டனர். எங்கள் ஊரில் படித்தவர்கள் யாருமே (புத்தகங்களைப்) படிக்கக் காணோமே, நாங்கள் எங்கே வாசிக்க? என்று கேட்டனர். படிப்பு முடித்ததும் படிப்பே இனி கிடையாது என்று பெரும்பாலானோர் இயங்கும் தன்மையில் மாற்றம் வேண்டும். அடுத்த தலைமுறையை வாசிக்க வைக்க இவர்கள் முதலில் புத்தக வாசிப்பாளராக மாற்றப்பட வேண்டும். குழந்தைகளை வாசிக்க வைத்தால் அவர்களுக்கு புத்தகங்கள் கொண்டு சேர்க்க முடிந்தால் நிச்சயம் அவர்கள் ஆர்வத்தோடு வாசிப்பதைப் பார்க்கிறோம்.. அவர்களுக்கான மொழியில் எழுத வேண்டும்.” என்றார்.
களப்பணியாளரான சுசீலா, “பள்ளிக்கூடங்களில் நிச்சயம் வாசிப்பை நாம் கொண்டு சென்றே ஆகவேண்டும். குழந்தைகளுக்கான நூல்களை நிறைய கொண்டு வரவேண்டும். இயல்பான வளர்ச்சிக்கு, குழந்தைகளின் படைப்பூக்க வளர்ச்சிக்கு வாசிப்பு உதவும்” என்றார்.

நிறைவுரை ஆற்றிய ஆயிஷா இரா நடராசன், “பல ஆண்டுகளுக்குமுன் பாண்டிச்சேரியில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுகொண்டிருந்தேன். வழியில் பேருந்தை நிறுத்தி, மதுபானங்கள் கடத்தப்படுகின்றனவா என்று பரிசோதனை நடத்தினர் காவல் துறையினர். ஒரு சிலர் சிக்கவும் செய்தனர். என்னிடம் வந்த ஒரு காவலர் எனது பையைத் திறந்து துழாவியவர், நிறைய புத்தகங்களாகத் தட்டுப்படவே சட்டென்று, ஏதோ பாம்பு உள்ளிருந்து கொத்தியதைப் போல வெடுக்கென்று கையை வெளியே எடுத்து, என்ன சார் இத்தனை புத்தகமா என்று கேட்டார். அப்படியான தேசத்தில், புத்தக வாசிப்பு உண்மையில் பெருமை கொள்ளும்படியே உள்ளது என்பது முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம். ஏராளமான புத்தகங்களை நாம் கொண்டுவருகிறோம். சமூக மாற்றத்திற்கான தூண்டுதலை அவை நிச்சயம் செய்யும்” என்றார்.

பாரதி புத்தகாலய நூலாக்கப் பணிகளுக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவியும், ஊக்கமும் அளித்துவரும் பல்வேறு மனிதர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

Related posts

Leave a Comment