You are here

மே தினத்தில் சூளுரைப்போம்!

நாம் போராட்டக் களத்தில் இறங்குவதற்கு இத்தனை வலுவான காரணங்கள் முன் எப்போதும் இருந்தது இல்லை. – சே குவாரா
முதலாளித்துவ சமூகத்தின் மதம் எப்படி ஒடுக்குமுறைக்கான சாதனமாய்- ஆயுதமாய் உள்ளது என்பதை இதைவிடக் கண்கூடாக நிரூபிக்க முடியாது.சனாதனமும் நுகர்வு மயமும் மூலதன முதலைகளும் ஒன்றிணைந்த பிரமாண்ட சதிக்கும்பல் இன்று நவீன யுக்திகளுடன் பெரும் சுரண்டலில் நமது நாட்டை வீழ்த்தி இருப்பது நம் கண்முன் இருக்கும் சவாலாகும்.ராமருக்கு கோயில், பசுக்களுக்கு ஒரு பட்ஜெட், மத அடிப்படைவாத கலாச்சாரக் காவல்படை,ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நம்ம உள்ளூர்ப் பேரணி என்பதெல்லாம் இதுவரை இந்தியா சமீப காலத்தில் கண்டிராத பாசிசப் பாய்ச்சல்.சமூக வலைத்தளங்கள் முதல் நமது குழந்தைகளின் வகுப்பறை வரை இந்தி மொழியும், அதன் இலவச இணைப்பாக சமஸ்கிருத வேதக்கல்வியும் யோகா வகுப்பும் பெரும் (பிரச்சார)புயலாகச் சுழன்று சுழன்று வீசுகின்றன.இஸ்லாமிய மத எதிர்ப்பு எனும் நஞ்சும் சமூகத்தின் ஆகக்கீழான அடுக்கில் உள்ள தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டு எதிர்ப்பு எனும் விஷமும் காவிக்காற்றில் கலந்து வீசுகின்றன.ஆயிரக்கணக்கில் உயிரை மாய்த்துக் கொண்ட போதும்,தலைநகரில் வீதியில் புரண்டு அழுத போதும்,ஆடைகளைக் களைந்து அலறிய போதும் விவசாயிகளின் அவலக்குரல்கள் கேட்காத செவிக்கு காட்டையும்,காட்டுயிர்களையும் அழித்து ஆக்கிரமித்து ஆதியோகிக்குச் சிலை வைக்கும் நவீன சாமியாரின் கார்ப்பரேட் கடவுள் முன் தத்துவக் கூத்தாட நேரம் இருக்கிறது.விஜய் மல்லையா சும்மா ட்ரைலர்தான் எனுமளவுக்கு ரிலையன்ஸ்-அதானி கும்பல் லாப வெறியேறி கட்டுப்பாடற்ற போட்டியில் நாட்டைச் சுரண்டி ஏப்பம் விட்டுவிட்டது.கொள்ளைலாபச் சந்தைப் பெருச்சாளிகள் கட்டுக்கடங்காத அதிகாரம் பெற்று பத்திரிகை,சமூக ஊடகம்,கல்வி,சுகாதாரம்என அனைத்தையும் நேரடியா கவோ,மறைமுகமாகவோ தம் கைகளில் வைத்திருக்கிறார்கள். இந்த முதலாளிகள்தாம் வெளித்தெரியாத கூட்டணி அமைத்து பிரதமரையே வெற்றிபெற வைத்தார்கள்.உ.பி.உட்பட சட்டமன்ற,நாடாளுமன்ற அரசியல் வேட்பாளர்களுக்கு இந்தப் பணமுதலைகளே தேர்தல் செலவு முழுவதையும் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வெளியே வந்த
வண்னமே உள்ளன.இதன்மூலம் சாதாரண மக்களை தங்களது மக்கள் மன்றங்களில் இருந்தே இவர்கள் பிரித்து விட்டார்கள்.இந்தச்சூழலில் இருந்து நம்மை மீட்கக் கூடியவர்கள் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தினர் மட்டுமே.ஏற்கனவே பெரிய தொழில் கேந்திரங்களைத் தங்களது சொந்த உரிமைகளுக்காக மட்டுமன்றி அந்த நிறுவனங்களையும் காப்பாற்றவும் சேர்ந்தே போராடி வெற்றி கண்டு வருகிறார்கள்.இதன் மூலம் உலகின் வேறு எந்த ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கத்தை விடவும் புதிய பிறவி ஒன்றை நமது போராட்டம் எடுத்தது.நமக்குள்ள சவால்கள் தனித்துவமானவை.ஒருபுறம் தனியார் மயத்திற்கு எதிராகவும்,மறுபுறம் மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும்,இன்னொருபுறம் நமது சொந்த உரிமைகளுக்காகவும் களத்தில் இறங்க வேண்டிய போர்ச்சூழலில் இந்த ஆண்டின் மேதினம் நம்முன் நிற்கிறது.இந்திய விடுதலைக்கே வித்திட்ட நமது இந்தியத் தொழிற்சங்க எழுச்சி வரலாற்றின் பொற்காலத்தை முன்வைத்து போர்க்களம் புகுந்திட இந்த மே தினத்தில் சூளுரைப்போம் காவி—கார்ப்பரேட் கூட்டணியை முறியடித்து நமது நாட்டை மீட்டெடுப்போம்
– ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment