You are here

வாசிப்புப் புரட்சியே வருக……..!

வாசிப்புப் புரட்சியே வருக……..!
“மனிதகுலம் நீடித்திருக்கவும் மேலும் உயரவும் ஒரு புதுவகையான சிந்தனை தேவை.இளைஞர்களிடம் செல்லுங்கள்.அவர்கள் வாசிக்கட்டும்….”.
­- ஐன்ஸ்டீன் (லியோ ஹீபர்மேனுக்கு எழுதிய கடிதம்.)
சமூக விடுதலை எனும் பிரமாண்ட தொடர்வேட்கையின் தூண்கள் என்று புத்தகங்கள் வர்ணிக்கப்படுகின்றன.காலம் காலமாக மனித இனம் சேமித்த புதையலான நூல்களைத் தேடி வாசித்தலே எந்த சமூக எழுச்சிக்கும் தனிச்சிறப்பான குணாம்சங்களை வழங்க முடியும் என்பதற்கு வரலாற்றில் சாட்சிகள் பல.
மாவீரன் தோழர் சேகுவாரா புரட்சியின் ‘தனிச்சிறப்பு’ குறித்துப் பேசும்போது மக்களைத் தயார்படுத்தும் அரசியல் கொந்தளிப்புகளை உருவாக்கும் சக்தி சரியான ‘வாசிப்பிற்கே’ உண்டு என கருத்துரைத்தார்.
வாசிப்பின் முழுச்சுதந்திரத்தை உணர்ந்து தங்களை நூலகமேசைகளின் பகுதியாகவே நினைத்த, தேடலில் சிறந்த சிந்தனைவேந்தர்கள் பெரிய வழிகாட்டிகளாக ஆசான்களாக மாறி சமூகத்தையே வழிநடத்தினார்கள். வால்டேர், ரூசோ விதைத்த நூல்களே பிரஞ்சுப் புரட்சியைச் சாதித்தன. மார்க்ஸும்,ஏங்கல்ஸும் புத்தகங்களின் வழியேதான் உலகப் பாட்டாளி வர்க்க எழுச்சிகளை சாத்தியமாக்கினார்கள்.
டார்வினும்,கோபர்னிகசும் கலிலியோவும் இன்னபிற அறிவியல் எழுச்சி நூலாசிரியர்களும் இன்றி மானுட விடுதலையும், நவீன சிந்தனைகளும் சாத்தியமாகி இருக்காது.ஆண்டுதோறும் சேக்ஸ்பியர் இறந்த ஏப்ரல் 23 அன்று உலக புத்தகதினத்தை யுனெஸ்கோ உலகம் முழுவதும் அனுசரிக்கிறது.
இந்த ஆண்டு அதை இளைஞர் எழுச்சி நாளாக நாம் அனுசரிக்க இருக்கிறோம். தமிழ்ச்சூழலின் புதிய நம்பிக்கையாய் ’வாடி வாசல்’உடைத்துப்பீறிட்ட எழுச்சியின் நாயகர்களான நமது இளைஞர்களின் கைகளில் புத்தகங்களோடு நம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடிவுசெய்து சென்னையில் மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்வில் நாம் ஒன்றிணைந்து புத்தகதினத்தில் உலகின் கவனத்தை ஈர்க்க இருக்கிறோம்.
பிரமாண்ட புத்தக அரங்குகள்; விவாத அமர்வுகள்;கருத்துப் பரிமாற்ற அமைப்புகள்; மாபெரும் உரையாடல்கள் என பல்வேறுவிதமாக புத்தகதினத்திற்குப் புதிய அர்த்தத்தைத் தரவிருக்கிறோம். புதிய சிந்தனைகள்,புதிய சித்தாந்தங்கள்,அவைகுறித்த உரையாடல்களும்,விவாதங்களும் புத்தகவாசிப்பும், அவற்றின் தேடல் சார்ந்து நடக்கும்போதுதான் சமூகப் பிரக்ஞைக்கு அறிவு வடிவம் கிடைக்கும்.அதற்கான ஒரு மேடையாக நாம் புத்தகதினத்தை மாற்ற இருக்கிறோம்.
லட்சக்கணக்கான இளைஞர்களை அந்த ஆதர்ச எழுச்சியில் இணையுமாறு அழைக்கிறோம். புத்தகம் என்பது அச்சிட்ட காகிதத்தொகுதி அல்ல; ஒரு பிரமாண்ட மாற்றத்திற்கான அக்னிவிதை.வருங்காலம் நோக்கிய இன்றைய எழுச்சிப்பாதை.சத்தமின்றி நடக்கின்ற சமூக யுத்தம். இந்த வாட்ஸ்-அப் யுகத்திலும் வாழ்வாதாரங்களை இழந்தும் எழுத்தறிவும்,அடிப்படை வசதிகளும் இன்றியும் 15 கோடிப்பேர் வாழும் இந்திய அவலச் சூழலை மாற்றிட இளைஞர்கள் எழுச்சியும் அதற்கான பாதையாக வாசிப்பு எனும் அரசியல் நடவடிக்கையுமே சிறந்த வழி என உணர்ந்து உலக புத்தக தினத்தைத் திட்டமிடுவோம்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.
– ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment