You are here
நூல் அறிமுகம் 

சர்வதேச மகளிர் தினம் – உண்மை வரலாறு

கமலாலயன்

புத்தக தேவைக்கு

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…உங்கள் இல்லம் தேடி…..

https://thamizhbooks.com/magalirthinam-unmai-varalaru.html

வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; புகழ்பெற்ற பத்திரிகையாளர். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீதும், இடது சாரி கருத்தியல்கள் மீதும் தொடர்ந்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும், திட்டமிட்ட அவதூறுகளையும் எதிர்த்து உண்மைகளை நிறுவுவதில் இடையறாது முனைப்புக் காட்டி வருபவர். அவர் எழுதிய ‘கம்யூனிசம்: நேற்று, இன்று, நாளை’ என்ற ஒரு நூல் போதும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாற்றை எப்படி முன் வைக்க வேண்டும் என முன்னத்தி ஏர் பிடித்துச் செல்வதற்கு! பல புத்தகங்களின் ஆசிரியரான ஜவஹர், காலத்தின் தேவையறிந்து கூவும் செங்குயில். இப்போது அவர் வெளிக் கொணர்ந்திருப்பது சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8_இல் ஏன், எப்போதிருந்து, யாரால் கொண்டாடத் தொடங்கப்பட்டது என்பது குறித்த உண்மை வரலாற்றை.

‘உலக மகளிர் தினம், பெண்களுக்கு சமையல் போட்டிகளையும், கோலப் போட்டிகளையும், நடத்துவதற்கோ, நகைகள் – சேலைகள் – ஏனைய நுகர் பொருட்களைத் தள்ளுபடி விலைகளில் விற்க உருவாக்கப்பட்ட வணிகத் திருவிழாவுக்கோ உரிய நாள் அல்ல’ – என்ற திட்டவட்டமான முன்மொழிவுடன் துவங்குகிற இந்த நூல், கால வரிசைப்படி மகளிர் தின வரலாற்றுக் குறிப்புகளுடன் நிறைவடைகிறது.

1863-ஜூன் கடைசி வாரத்தில் லண்டன் பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, கார்ல் மார்க்ஸ் ‘மூலதனம்’ நூலில் குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். பணக்காரச் சீமாட்டிகளுக்கான அலங்காரத் தொப்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், இருபது வயதேயான மேரியும், சக ஊழியர்களான 60 இளம்பெண்களும் தொடர்ச்சியாக 26 1/2 மணி நேரம் வேலை செய்யுமாறு நிர்வாகத்தின் கெடுபிடி நிர்ப்பந்தித்தது. வெள்ளிக்கிழமை உடல் நலமில்லாமல் வந்து படுத்த மேரி, ஞாயிறன்று இறந்து போகிறார். விசாரணைக் குழுவினரிடம் டாக்டர் அளித்த சாட்சியப்படி, ‘அதிக நெருக்கடி மிக்க பணியிடத்தில் நீண்ட நேரம் வேலை பார்த்ததாலும், காற்றோட்டமில்லாத குறுகிய நெரிசலான படுக்கை அறையில் தூங்கியதாலும் மேரி இறந்துபோனார்’ என்பதே உண்மை. நிர்வாகமோ, ‘பக்கவாதத்தால் மேரி இறந்தார்; மற்ற காரணங்கள் அவரது மரணத்தைத் துரிதப்படுத்தினவோ என்று அஞ்சுவதற்குக் காரணமிருக்கிறது’ என்றொரு விளக்கெண்ணெய்த் தீர்ப்பை விசாரணைக் குழு வழங்குமாறு செய்தது. இதைக் குறிப்பிட்டு ‘மார்னிங் ஸ்டார்’ பத்திரிகை எழுதிய வரிகளை உள்ளடக்கி எழுதுகிறார் மார்க்ஸ். ‘‘நமது வெள்ளை நிற அடிமைகள் சத்தமில்லாமல் வேதனையில் துடிக்கிறார்கள், சத்தமில்லாமல் செத்துப் போகிறார்கள்.’’

– 1863 ஆம் ஆண்டு நடந்தது இது. சுமார் 154 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. பழங்கதையா இது? இன்றைக்கும் பீடித் தொழிற்சாலைகள், பட்டாசு – தீப்பெட்டி பாக்டரிகள், நூற்பாலைகள், பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பணியாற்றும் இளம் வயதுப் பெண்களும் – ஆண்களும் அனுபவிக்கும் வேதனைக் கதைதானே?
முதல் (உலகத் தொழிலாளர்கள் சங்கம்) அகிலம் தொடங்கி, இரண்டாவது அகிலம், சோஷலிஸ்ட் பெண்கள் அமைவது இயக்கம், அகிலத்தின் ஏழாவது மாநாட்டின் போது, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ம் முதன் முறையாக நடைபெற்றது, அதில் லெனின் பங்கேற்றது போன்ற வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறார் ஜவஹர். கிளாரா ஜெட்கின் உலகப் பெண்கள் செயற்குழுவின் செயலாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்.

இரண்டாவது அகிலத்தின் மாநாட்டில், ‘‘எட்டு மணி நேர வேலைநாள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து நாடுகளிலும் மே_1 அன்று தொழிலாளர் போராட்டங்களை நடத்த வேண்டும்’’ என்ற புகழ் பெற்ற மே தினத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்ற முக்கியமான தகவலை ஜவஹர் கவனப்படுத்துகிறார்.

மெரிக்காவின் சிகாகோ நகர காரிக் தியேட்டரில் 1908 மே -3 ஞாயிறன்று, சோஷலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு, மகளிர் தினக் கூட்டத்தை (Women’s Day) வெற்றிகரமாக நடத்தியது. இது ஒரு நகரத்தில் மட்டும் என்பதாக நிகழ்ந்தது. பின் தேசிய, சர்வதேசிய அளவில் எப்படி பிரம்மாண்டமாக விரிவடைந்தது என்பதை எண்ணற்ற தரவுகளின் துணையோடு விவரிக்கிறார் ஆசிரியர். இந்த நூலில் சுவாரசியமான உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை வாசிப்பது மிகவும் அவசியம்.

Related posts

Leave a Comment