You are here
மற்றவை 

‘கனவு’ சுப்ரபாரதி மணியன்

தமிழில் நாளிதழ்கள், வார _ மாத இதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து இரண்டு வகையாக அவை வெளியாகின்றன. பொழுதுபோக்க உதவும் பிரபலமான பத்திரிகைகள் ஒரு வகை. குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் போன்ற லட்சக்கணக்கில் விற்பனையாகும் இதழ்கள் இவ்வகையில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட இலட்சிய நோக்குடன், ஆழ்ந்த சிந்தனைகளையும், தீவிரமான இலக்கியப் படைப்புகளையும் தாங்கி வெளியாகிற பத்திரிகைகள் இவை. ‘சிற்றிதழ்கள்’ (Little Megazines) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகிற இவற்றைப் பெரும்பாலும் எழுத்தாளர்களே தனிநபர்களாக தமது சொந்தப் பொறுப்பில் நடத்தி வருவது வழக்கம். தமிழில் மிகத் தொடக்க காலத்திலிருந்தே இத்தகைய சிற்றிதழ்கள் வந்து கொண்டுள்ளன. மணிக்கொடி, சரஸ்வதி, சாந்தி, மனிதன், எழுத்து, நடை, கசடதபற, தீபம், கண்ணதாசன், கொல்லிப்பாவை, சதங்கை, சாரதா இப்படி ஒரு நீண்ட பட்டியலிடலாம். இப்போதும் வந்து கொண்டிருக்கும் ஒரு சில இதழ்களில் கணையாழி, கனவு, நவீன விருட்சம், தளம் போன்றவை அடங்கும். அரசியல் கட்சிகள் – அமைப்புகள் சார்ந்து வருகிற இதழ்களும் உண்டு. தாமரை, செம்மலர், சிகரம், மன ஓசை போன்றவை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுகள்.

இவ்வகையான இதழ்கள், காத்திரமான இலக்கியப் படைப்புகளை வாசகர்களுக்கு வழங்குகின்றன; அறிமுகம் செய்கின்றன. நாம் முன்பின் அறியாத சமூக, நிலப்பரப்புகள் சார்ந்த இலக்கியங்களையும், படைப்பாளிகளையும் நம் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன. பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான், லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வெளிவரும் முக்கியப் படைப்புகளை நாம் அறியவும், வாசிக்கவும் மொழி பெயர்ப்புகளை வழங்குகின்றன. ‘‘சாளரத்தைத் திறந்து வை; வெளிக்காற்று உள்ளே வரட்டும்” என்பது இத்தகைய சிற்றிதழ்களின் பொதுவான அணுகுமுறை எனலாம். ‘புத்தகம் பேசுது’ இதழில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிற்றிதழை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விழைகிறோம்.

தலாவதாக ‘கனவு’ இதழ். தமிழ்நாட்டில், திருப்பூர் நகரில் வாழும் சுப்ரபாரதி மணியன் ஒரு புகழ் பெற்ற படைப்பாளி. இவர் தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். பணியின் நிமித்தம் ஹைதராபாத், செகந்தராபாத், திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வாழ நேர்ந்தவர். இவருடைய படைப்புகள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. இவரது ‘சாயத்திரை’ நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னடம், ஹங்கேரி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 14 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர் இவர்.

வர் 1987ஆம் ஆண்டிலிருந்து ‘கனவு’ இதழைத் தன் சொந்தப் பொறுப்பில் நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரியில் 83வது இதழ் வெளிவந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளாக அயராமல் நடைபோடுகிற இதழ் இது. ஆரம்ப காலங்களில் அதிகப் பக்கங்களுடன் கனமான சிறப்பிதழ்களை ‘கனவு’ வெளியிட்டது. அசோகமித்திரன் குறித்த சிறப்பிதழ் அவற்றுள் முக்கியமானது. சுப்ரபாரதி மணியன் எழுதுகிற சிறுகதைகள், அனுபவப் பகிர்வுகள், திரைப்பட விமரிசனங்கள், சூழலியல் கட்டுரைகள், இவற்றுடன் ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள், புத்தக விமரிசனங்களே ‘கனவு’ இதழின் பக்கங்களில் இடம் பெறுகின்றன. கடந்த முப்பதாண்டு கால தமிழிலக்கியச் சூழலின் ஏற்ற இறக்கங்களை ‘கனவு’ இதழ் தன்னளவில் பிரதிபலித்து வந்திருக்கிறது. ஆரவாரமற்ற, அடங்கிய தொனியில் ‘கனவு’ இதழ் பேசி வருவது பாராட்டுக்குரியது.

Related posts

Leave a Comment