You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

உலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர்

ஆயிஷா இரா. நடராசன்

லண்டன் ராயல் கல்வியகம் 2006-ஆம் ஆண்டு அதுவரை வெளிவந்த அறிவியல் நூல்களிலேயே சிறந்த பத்து நூல்களை முன்மொழிய முடிவு செய்தது.லட்சக்கணக்கான அறிவியல் நூல்கள், அறிவியல் புனைகதைகள் என பல வகைப்பட்ட புத்தகங்களை வாசிக்கக்கூட முடியாமல் வல்லுநர்கள் திணறினார்கள். ஆனால் கையிலெடுத்த பிறச்னைகளிலிருந்து பின்வாங்காத அந்த கவுரவமிக்க அமைப்பு ஏறத்தாழ ஏழு மாதங்களுக்குப் பிறகு பட்டியலை வெளியிட்ட போது அதில் முதலிடம் பிடித்த அறிவியல் கதை நூலைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
அப்படியான அந்த அறிவியல் நூல் அன்று மட்டும் அல்ல, இந்த 2017-ஆம் ஆண்டின் பட்டியலிலும் முதலிடத்திலேயே உள்ளதுதான் செய்தி.அப்படியென்றால் உலகில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் கதையாடல்களில் சிறந்தது என முன்மொழியப்படும் நூலாக அதை வரலாற்றாளர்கள் அணுகுகிறார்கள்.அந்தப் புத்தகம் எழுதப்பட்ட மொழி இத்தாலிய மொழி.புத்தகத்தின் தலைப்பு வேதி அட்டவணை.அதாவது பீரியாடிக் டேபிள்.(இத்தாலியமொழித் தலைப்பு-சிஸ்டமா பீரியாடிக்கோ). நூலாசிரியர் பிரைமோலெவி.
இத்தாலியை பாசிச முசோலினி ஆட்சிசெய்த போது அங்குவாழ சபிக்கப்பட்ட யூதர் அவர்.ஜெர்மானிய ஹிட்லர் படைகளால் டுரின் நகரம் கைப்பற்றப்பட்டபோது மரண யாத்திரை மேற்கொண்டு அவுஸ்விச் விஷவாயு கொலைக்களத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்.ஒரு வேதியியலாளனாக யுத்தகால இத்தாலியில் யூத ரத்தத்தோடு பதைபதைக்க வாழ்ந்த வாழ்வைத்தான் பிரைமோலெவி வேதி அட்டவணை புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
1975-இல் இத்தாலிமொழியில் வெளிவந்த நூல் அது.நான்காண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்தது.
அறிவியல் புனைவு என்கிற பெயரில் சமூகவாழ்வுக்கு சற்றும் பொருந்தாத பிரம்மதத்த பிரபஞ்ச அபத்தங்களை அமெரிக்க நவரச நாவல் நாயகர்கள் வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.இப்போதும் தொண்ணூறு சதவீத எஸ்.எஃப். ஆங்கில ஜங்க் உலகம் வேற்றுகிரக ராட்சச ஜந்துக்களை நம் அமெரிக்க அறிவியல் சாகசர்கள் சரியான நேரத்தில் வீழ்த்தி புவியைக் காப்பாற்றும் ரட்சகர் அந்தஸ்து பெறும்விதமாகவே எழுதித் தள்ளுகிறார்கள்.அல்லது மிகவும் அச்சுறுத்தலான ஏதாவது ஒரு கிருமியை பழைய சோவியத்காரர்களோ, இசுலாமிய (பயங்கர)வாதிகளோ கண்டுபிடித்து விட அந்தப் பேரழிவிலிருந்து அமெரிக்க அரசு-ஜனாதிபதி உட்பட அனைவருமே தலையிட்டு எப்படி எல்லாம் தங்கள் உயிரையே பணயம் வைத்து புவியைக் காப்பாற்றுகிறார்கள் என்பதைக் குறித்ததாகவும் அவை அமைகின்றன.
சர்வதேச அளவில் அறிவியல் ரீதியிலான உலகப்பேரழிவு குறித்து அச்சுறுத்தல் என்பது அதிக காரீயம் சேர்க்கப்பட்ட (ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்பான) பெட்ரோல், அதிகம் குளோரோ புளோரோ கார்பன் சேர்க்கப்பட்ட, ஒசோன் படலத்தை மொத்தமாகச் சூறையாடும் – ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த குளிர்பதனப் பெட்டி முதல் மறுசுழற்சி செய்யவே முடியாத வகை பிளாஸ்டிக் வரை பல. எல்லாமே அமெரிக்கத் தயாரிப்புகள்.
யூனியன் கார்பைடு(போபால்) போல விஷமருந்து-விவசாயத்திற்குத் தயாரிக்கும் டெள கெமிக்கல்ஸ், மான்சாண்டோ,டூபாண்ட் என பல நிறுவனங்களின் மொத்தப் புகலிடமான அங்கிருந்து வெளிகிரக அச்சுறுத்தல்கள் பற்றியே அறிவியல் புனைவுகள் வெளிவந்து அவற்றில் எப்போதும் உலக காவல்காரனாக அமெரிக்க அரசே ரட்சகர் வேலை பார்ப்பதற்கு எதிராக உண்மைகளை உடைத்து ஓர் அறிவியலின்கதை மனிதவாழ்வுக்குள் அதன் அவலங்களின் ஊடாக மிகத் தந்திரமாக பிரைமோலெவியின் வேதி அட்டவணை நூலுக்குள் நம்மை பாதரசவாதத்தோடு துவைத்து எடுக்கக் காத்திருக்கிறது. பிரமாண்ட கருங்குழி அது.
இந்த உண்மை தெரியாமல் அப்பாவியாக நான் அந்த 1996 டிசம்பரில் வேதி ஆய்வுக்கூட கனவுகளுடன் அதில் விழுந்தேன். மருத்துவக்காப்பீடு என்னும் பகடியான புதைசேற்றின் ஆரம்பகாலமான அன்று முதலுதவி தருவதற்கு முன்பே ரத்தம்-சிறுநீர்-என ஏகப்பட்ட ‘டெஸ்ட்” எழுதிக் கொடுத்த வணிக மருத்துவமனை ஒன்றின் ’வேதி’ மோசடி என் தந்தையை என் கண் எதிரே மாய்த்திருந்த வேளை அது.ஏற்கனவே இரண்டாம் யுத்த கால பிரைமோலெவியின் ‘ இது ஒரு மனிதன் எனில்’ மட்டும் வாசித்திருந்தேன்.பிரபல இத்தாலிய எழுத்தாளர் இடாலோ கால்வினோ அந்த நூல் குறித்து அப்போதைய ஃப்ரண்ட் லைன் இதழில் எழுதியிருந்த விரிவான அறிமுகத்தைக் கண்டதால் அதைப் படித்தேன்.கொடிய மரணமுகாமின் அனுபவங்கள் நம்மைக் கிறங்கடித்து விடும். அவர் ஒரு வேதி அறிஞர் என்பதும்,மூன்றாம் தளத்தில் இருந்து லிஃப்ட் துளை வழியே கீழே விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டு 1987இல் கொடூர மரணத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் எனவும் அறிந்திருந்தேன்….
வேதி அட்டவணை நூலை வாசித்து முடித்தபின் ஒரு வாசகன் எனும் முறையில் நான் பல வகையான வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு போராட்ட மக்களது மனவலிகளின் ரணங்களை எல்லாம் ஒரே மடக்கில் பருகி சாம்பலாகி விட்டிருந்தேன்..மொத்தம் 21 கதைகள்.அர்கான் தொடங்கி ஹைட்ரஜன்,துத்தநாகம்,காரீயம்,கந்தகம் எனத் தொடரும் கதைத் தலைப்புகள் கார்பனில் முடிகின்றன.நீர் ஆழம் பார்ப்பதற்கான தூக்குநூல் குண்டு செய்யும் ஈயத் தகடு கதையில் அந்தக் கயிற்றில் கழுத்து இறுக்கி தொங்குவது பாதிரியார் சைமன்(சிமோன்)அல்ல… அது நான்தான் என மனம் வலித்த அந்த இரவை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வேதி அட்டவணையின் தனிமங்கள் வெறும் வேதிப்பண்பு கொண்ட தாதுப்பொருட்கள் அல்ல.பிரைமோ லெவியின் வேதித் தனிமங்கள் மனித அடையாளங்கள். பாசிச ஒடுக்குமுறைக்கும் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கும் எதிராக மனித உழைப்புச் சக்திகளின் ஆதார மூச்சுக்காற்று பெரும் புயல் போராட்டமாக வெடித்துச் சிதறும் ஆய்வுகளின் வேதி ஊக்கிகளாக சொற்களை அடுக்கிச் செல்ல அவரது துயரவாழ்வே அவரைத் தனித்தெடுத்திருக்க முடியும். மரண பயத்தோடு வரிசையாக நிற்கவைக்கப்பட்ட அப்பாவிகளை ஒருவர் மாற்றி ஒருவராகக் கொல்லும் அந்தப் பனிக்கால ராணுவ வெறிவேட்டையின் ஊடாக தன் காதலனின் மனம் பற்றிய அபிப்ராயம் கேட்கும் க்யூலியா எனும் சக ஊழிய பெண்ணுக்கு ஒரே சொல்லில் பிரைமொ லெவி பதில் தருவார்: பாஸ்வரம் (பாஸ்பரஸ்) என்று. பகடை வீசப்படுகிறது. அடுத்தடுத்த வேட்டுச் சப்தங்கள் -அந்த ரவைகளை முன்னிரவு வரை வேதித்தொழிற்கூடத்தில் செய்துகொடுத்த அனுபவங்களை அவளோடு அவள் உயிர்விட்ட பின்னாலும் பகிர்ந்தபடியே மரணவிளிம்பில் நிற்கும் பிரைமோலெவி. பின்தொடரும் பாஸ்பரஸ் பற்றிய பண்புகளை அடுக்கிச்செல்லும் அந்தப் பக்கங்கள் முழுதும் மரணித்த அப்பாவிகளின் ஓலங்கள் பொசுங்கி நம் நாசிகளைத் துளைக்கின்றன. இந்த நூலின் ஒவ்வொரு தனிமமாகவும் நாமே வாழ்கிறோம்.
பிரைமோலெவி 1919-இல் இத்தாலியில் டுரின் நகரில் உம்பர்தோ எனும் யூத வாழிடத்தில் பிறந்தார். 1934-இல் கல்லூரியில் வேதி இயல் கற்கப் புகுந்த போது பாசிச அரசு முழுமைபெற்று பாதியில் கல்லூரிப் படிப்பின்போது யூதர் என்பதால் பலமுறை வெளியேற்றப்பட்டு பேராசிரியர்களின் கடும் போராட்டத்தால் திரும்பத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். மலைஏற்றத்தைத் தனது ஆத்மார்த்த விருப்பமாக சுவீகரித்த அவருக்கு பாஸிச-ஆரிய கொலைகளில் அரசுப்படைகளுக்குச் சிக்காமல் தப்பிட தன்னைப்போலவே சபிக்கப்பட்ட பலரது பதுங்கிடமாக மலைகள் உள்ளன என்பதை இந்த நூலில் உள்ள இரும்பு எஃகு எனும் கதையில் விவரிக்கிறார். 1929-இல் முசோலினி கத்தோலிக்கத் திருச்சபையோடு ஓர் ஒப்பந்தம் செய்கிறான். கிருத்துவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இறுதியாகத் தங்கியவர்கள் யூதமக்களே ஆவர்.
1938-இல் இனப்பாகுபாட்டு அறிக்கை வெளிவந்தபோது யூதர் என்பதால் ராணுவ முகாமிற்கு அழைக்கப்படுகிறார். ஹிட்லரின் பழுப்புச்சட்டைக் கூட்டமும்,முசோலினியின் கருப்புச் சட்டைக்கூட்டமும் இருமுனை ஆயுதமாக ஒன்றிணையும் வரலாற்றுப் பிழையை படைக்கலன் செய்யும் வேதி நஞ்சான ஆர்சனிக் தனிமத்தின் தலைப்பின் கீழ் எழுதுகிறார் பிரைமோலெவி. பாசிச அரசுக்கு எதிரான ஆயுதப்புரட்சி அமைப்பான குயிஸ்டிசா-கி-லிபர்ட்டா அமைப்பில் இணைந்த ஆண்டுகள் குறித்து பி-41(சல்ஃபர்) கந்தகம் கதை விவரிக்கிறது. கருப்புச்சட்டை அரசியல் அணிக்குள் ஒளிந்து பல யூதர்கள் தஞ்சமடைந்து போலிப்பெயர்களோடு வாழ்நாட்களை சற்றே கூட்டிக் கொள்கிறார்கள்.மைக்கேல் ஜோஸப் மொழிபெயர்ப்பின் 33-ஆம் பக்கம் அது. காப்பர்-சல்பேட்-சல்பியூரிக் அமிலத்தோடு ஒரு சொட்டு கலந்தாலும் வேதிவினை வேறுமாதிரி விளைவுகளைத் தருகிறது ‘நம் இனத்தைத் தூய்மைப்படுத்துவோம்’ என்று ஹிட்லரும் முசோலினியும்
கூட்டாக அறிவிக்கிறார்கள்.ஆனால் யுத்தகால வேதிவினைகள் வித்தியாசமானவை.தூய்மை இயல்பு.பாதுகாப்பானது.ஆனால் தூய்மைக்கேடு மட்டுமே வேதிவினைகளை சமூகத்தில் விதைக்க முடியும். தான் இனவெறியாளன் அல்ல என்பதை அவர் எப்படி விவரிக்கிறார் என்பது தத்துவார்த்த அற்புதம்.பிரைமோ லெவி வேதி இயலின் தனிமங்களது மகா சக்ரவர்த்தியான கார்பன் கொண்டு நூலை முடிக்கிறார். மக்கள் எழுச்சிக்கு அழிவு கிடையாது.பேரழிவிலிருந்து மானுட மீட்பு -சகோதரத்துவம், தோழமை, மனிதநேயம் இவற்றை இளஞ்சிவப்பு உலோகம்-செரியம் வழியே எஃகிற்கே வலிமை சேர்க்கும் சாம்பல்நிற வனதியம் தனிமம் வழியே சுட்டும் அந்த இடத்தில்-யாருமே கைக்கொள்ள பரிதவிக்கும் அதிகாரத்தின் அடையாளமான யுரேனியம் தோற்றுப் போகிறது. சோவியத் செஞ்சேனை குறித்த வெள்ளீயம் சிவப்பெய்தும் மெருகு எண்ணெய் குறித்த அத்தியாயம் அற்புதம்.
பி.பி.சி.வானொலியில் 2014-இல் இந்த நூல் முதல் முறையாக 12 பகுதிகளாக வானலைகளை அடைந்தது. உலகின் தலைசிறந்த அறிவியல் விமர்சன அறிஞர்களான பெர்னார்ட் டிக்சன், டிமோத்தி ஃபெரிஸ், ரிச்சர்ட் டாகின்ஸ், ஜான் காரி உட்பட எல்லா அறிவியல் சித்தாந்தவாதிகளின் தொகுதிகளிலும் இதுநாள் வரை இடம்பிடித்த ஒரே அறிவியல் நூல் பீரியாடிக் டேபிள்தான்.
ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களில் வழிந்தோடும் அடிமைகளின் குருதியில் ஒருபுறமும்-கோழிப்பண்ணை தரையில் வழிந்து ஓடும் அவற்றின் நரகலில் இருந்து தயாரான அமெரிக்க யுவதிகளின் உதட்டுச் சாயம் வரை பிரைமோலெவியின் எழுத்து நம் இருபத்தோராம் நூற்றாண்டு உட்பட உலக மக்கள் போராட்டங்களின் ரஸவாதத்தை எழுதிக்கொண்டே இருக்கும் முடிவற்ற வேதிவினையில் தொடர்கிறது.

Related posts

Leave a Comment