You are here
நேர்காணல் 

இயற்கையின் அழகைப் பிரதிபலிப்பவைதான் அறிவியல் சமன்பாடுகள்

இயற்கையின் அழகைப் பிரதிபலிப்பவைதான்  

அறிவியல் சமன்பாடுகள்

– முனைவர் டி. இந்துமதி

சந்திப்பு: முனைவர் சுபஸ்ரீ தேசிகன்

தமிழில்: ப.கு.ராஜன்,  புகைப்படம்: மணிசுந்தரம்

முனைவர் டி. இந்துமதி: சென்னை, கணிதவியல் கல்விக் கழகத்தின் (Institute of Mathamatical Science) பேராசிரியர். சர்வதேச அளவில் தனது துறையில் புகழ் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் (Theoritical  Physicist) துகள் இயற்பியல் (Partide Physics) ஆய்வில் ஈடுபட்டுள்ள முன்னணி அறிவியலாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர். அதன் அறிவியல் மற்றும் அறிவியல் உணர்வுப் பிரச்சாரங்கள்  தீவிரமான செயல்பட்டாளர். கணவர் முனைவர். ராமானுஜம் அவர்களும் ஒரு முன்னணி விஞ்ஞானி.

முனைவர். சுபஸ்ரீ தேசிகன்: இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற சுபஸ்ரீ, அறிவியலைப் பரந்துபட்ட மக்களிடம் பேசும் ஆர்வத்தில் முழுநேர பத்திரிக்கையாளராகப் பணியாற்றி வருகின்றார். இந்து ஏட்டில் அறிவியல், தொழில் நுட்பம் குறித்து தொடர்ந்து எழுதி வருகின்றார். கணவர் பீர் முஹம்மது அவர்களும் ஒரு பத்திரிக்கையாளர்.

 

நான் சில கேள்விகளை ஏற்கனவே மின்னஞ்சல் செய்துள்ளேன். அதைத் தாண்டி நாம் கொஞ்சம் பேசலாம்.

ஆம். நான் பார்த்தேன்.

உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவை.

நான் ஒரு பயோ டேட்டா அனுப்பியுள்ளேன். சாதாரணமாக நாங்கள் பதவி உயர்வு சமயங்களில் அனுப்புவது போன்ற ஒன்று…

அதில் சில முக்கிய அம்சங்களை நீங்களே கூறினால் நன்றாக இருக்கும்.

அதுவும் சரிதான். அந்த பயோடேட்டாவில் எனது
PhD க்கு முந்தைய செய்திகள் இல்லை. அதைச் சொன்னால் தமிழகத்தோடு என்னுடைய பந்தம் கொஞ்சம் வெளிவரும். நான் இங்கு சென்னையில் குட் ஷெப்பர்ட் பள்ளியில் 10 ஆம் வகுப்புவரை படித்தேன். பின்பு ஆசான் மெமோரியல் பள்ளியில் + 2 வரை படித்தேன். பி.எஸ்ஸி இயற்பியலை WCC எனப்படும் பெண்கள் கிருஸ்துவக் கல்லூரியிலும், எம்மெஸ்ஸியை MCC எனப்படும் சென்னைக் கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்தேன்.

ஓ, அன்றைக்குத் தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய நல்ல கல்வி உங்களுக்கு கிடைத்தது என்று சொல்லலாம் அல்லவா?

ஆம். குறிப்பாக சென்னைக் கிருஸ்துவக் கல்லூரி என்னை மாற்றியது எனலாம்.

சென்னைக் கிருஸ்துவக் கல்லூரியில் உங்களது ஆசிரியர்கள் யார்? நீங்கள் நல்ல ஆசிரியர்களைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

உண்மைதான். சென்னைக் கிருஸ்துவக் கல்லூரியின் பேராசிரியர்களான கெ.எம்.கருணாகரன், பார்க்கவா முதலியோரைக் குறிப்பிட வேண்டும். நீங்களும் சென்னைக் கிருஸ்துவக் கல்லூரியில் படித்தவர்தானே?

இல்லை. நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தேன்.

அப்படியென்றால் உங்களுக்கு பேராசிரியர்.ரகுநாதன் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பேராசிரியர். கே.ரகுநாதன் தானே?

ஆம். அவர் முதலில் எம்சிசி யில் பணியாற்றினார். அவர் எனக்கு  ’கண்டன்ஸ்டு மேட்டர்’ (Condensed Matter) இயற்பியலைக் கற்பித்தார்.

அவர் ஒரு நல்ல ஆசிரியர்.

ஆம் அவர் ’கண்டன்ஸ்டு மேட்டர்’ (Condensed Matter) இயற்பியலை மிக நன்றாகக் கற்பித்தார். வாண்டர் வால் கோட்பாடு (Van der Waal Theory) போன்றவற்றை திறம்படக் கற்பித்தார்.

நீங்கள் ஏன் ’கண்டன்ஸ்டு மேட்டர்’ (Condensed Matter) இயற்பியலை உங்கள் ஆய்வுப் புலமாகத் தொடரவில்லை?

நான் இயற்பியலை என் புலமாக எடுத்துக் கொண்டதே பெரிய கதை. அதை நீங்கள் முதலில் கேட்க வேண்டும்.

ஆமாம் அதனைத்தான் நான் முதலில் கேட்டிருக்க வேண்டும். சொல்லுங்கள்.

அது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. இப்போதும் அதனை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு ஒரு திட்டவட்டமான நோக்கமேதும் இல்லை. எனது சகோதரி பெண்கள் கிருஸ்துவக் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார். அவர் கணிதம் ஒன்றும் சிரமம் இல்லை; ஆனால் வேதியியல் சிரமம். அதனைத் தவிர்ப்பது நல்லது என்றார். இன்று திரும்பிப் பார்க்கும்போது அவர் கூறியது சரிதான் என்றே படுகின்றது. எனது பெற்றோர் நான் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் ஏதும் கூறவில்லை. எனக்கு கிடைத்த ஒரே ஆலோசனை எனது சகோதரியிடமிருந்து கிடைத்ததுதான். சொல்லப்போனால் அவள் என்னவெல்லாம் செய்தாளோ அதனை பின் தொடர்ந்து நானும் செய்தேன். அவள் பெண்கள் கிருஸ்துவக் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்தால். நானும் படித்தேன். அவள் சென்னைக் கிருஸ்துவக் கல்லூரியில் எம்.எஸ்ஸி இயற்பியலைத் தொடர்ந்தார். நானும் தொடர்ந்தேன். அவள் இயற்பியலில் பிஹெச்.டி படித்தாள். நானும் படித்தேன். நான் அவளுக்கு 2 வயது இளையவள். அவள் நன்கு படிக்கும் ஒரு மாணவி. அவள் பெயர் வசுமதி. எனவே கல்லூரி சேரும் தருணங்களில் ‘ஓ, வசுமதியின் தங்கையா?’ என்றவாறு எனக்கு அனுமதி அளித்தார்கள். பி.எஸ்.ஸி படிக்கும் காலத்தில் இயற்பியலைவிட கிரிக்கெட்டில்தான் எனது ஆர்வம் அதிகம் இருந்தது.

ஆக அப்போது கிரிக்கெட்தான் உங்கள் ஆர்வமும் அக்கறையும்…

ஆம்! கிரிக்கெட்தான் உயிர். நான் அப்போது சென்னைப் பல்கலைக் கழகத்தின் அணிக்காக விளையாடினேன். தினசரி 4 அல்லது 5 மணி நேரம் பயிற்சி இருக்கும். காலையிலும் மாலையிலும். கல்லூரியில் ஏனைய பெண்கள் என்னைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். ஏனென்றால் எப்போது வேண்டுமென்றாலும் கல்லூரியை விட்டு வெளியே செல்ல எனக்கு அனுமதி இருந்தது. எப்போது வேண்டுமென்றாலும் பல்கலைக் கழக கிரிக்கெட் அணியின் பயிற்சிக்காக செல்லலாம்.

உங்கள் சிறப்புத் தகுதி என்ன பேட்டிங்கா???

இல்லை பௌலிங்

சுழல் பந்து வீச்சாளர்..??

இல்லை. நான் வேகப் பந்து வீச்சாளர்.

ஓ வாவ்…

சென்னைக் கிருஸ்துவக் கல்லூரிக்குச் சென்றதற்கு ஒரே காரணம் சென்னைப் பல்கலைக் கழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதைத் தொடர முடியும் என்பதுதான். மேலே படிக்க முடிவெடுத்ததே கிரிக்கெட் விளையாடுவதைத் தொடர்வதற்காகத்தான்.

அப்படியென்றால் இயற்பியலை அக்கறையுடன் படிக்க ஆரம்பித்தது எப்போது?

நான் முன்னரே சொன்னதுபோல எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. எம்.எஸ்ஸி படிக்கும்போது எனக்கொரு தோழி இருந்தாள். ரவீனா என்பது அவள் பெயர். மிக நெருக்கமான தோழி. அவளை முப்பது ஆண்டுகாலம் கழித்து சென்ற வாரம்தான் மீண்டும் சந்தித்தேன். அவள் கல்லூரி அறிவிப்புப் பலகையில் பம்பாய் TIFR (Tata Institute of Fundamental Research – அடிப்படை ஆய்வுகளுக்கான டாட்டா கல்விக் கழகம்) குறுகிய கால பயிற்சிக்கு மாணவர்களை எடுப்பதாக ஒரு அறிவிப்பைப் பார்த்துவிட்டு என்னிடம் கூறினாள். எனக்கு அதிலொன்றும் அப்படி ஆர்வம் இல்லை. ஆனால் அவள் போக விரும்பினாள். அப்போது என் சகோதரி மும்பையில் BARC (Baba Atomic Research Centre – பாபா அணு ஆய்வு மையம்) இல் பயிற்சி விஞ்ஞானியாக சேர்ந்திருந்தாள். எனவே ரவீனா பம்பாய் சென்றால் நாம் உன் அக்காவைச் சென்று பார்க்கலாம் என்றாள். எனவே நாங்கள் இரண்டு பேரும் வின்னப்பித்தோம் அவளுக்குக் கிடைக்கவில்லை. எனக்கு கிடைத்துவிட்டது. நான் TIFR க்குச் சென்று அங்குள்ள ஆய்வு வசதிகளைப் பார்த்தேன். அது என்னைக் கவர்ந்து விட்டது. எல்லாம் மிகவும் அதிசயமாகவும் இருந்தது. அந்த அனுபவம் என்னை முற்றிலும் மாற்றி விட்டது. எனவேதான் இப்போதும் நான் மாணவர்களுக்கு அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னால் முடிந்தவரை அதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றேன். ஏனென்றால் அது போன்ற ஆய்வுக்கூடங்களை மாணவர்கள் தாங்களே நேரில் காண்பது ஒரு பெரிய கண் திறப்பாக இருக்கும். ஏனென்றால் பள்ளிகளில் இருக்கும் ஆய்வுக் கூடங்களுக்கும் கல்லூரிகளில் இருக்கும் ஆய்வுக் கூடங்களுக்கும் இடையே இருப்பதே பெரிய வேறுபாடு என்றால் கல்லூரி ஆய்வுக் கூடங்களுக்கும் இது போன்ற ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுக் கூடங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு வானளவானது ஆகும்.

ஆக அது உங்களுக்கு ஒரு கண் திறப்பாக இருந்ததா?

ஆம். அங்கு ஆய்வு செய்ய இருந்த வசதிகள் என்னை கவர்ந்திழுத்தன. அந்த வசதிகளையும் கருவிகளையும் வைத்து உயர்நிலை ஆய்வு செய்பவர்கள் மீது மிகுந்த மதிப்பு உருவானது. முதன் முதலாக முழுநேர ஆய்வாளராக ஆகும் ஆர்வம் வந்தது.

நல்லது. இது குறித்து பிறகு திரும்ப வருவோம். இப்போது வேறு ஒரு தளத்து கேள்வி. நீங்கள் துகள் இயற்பியல் குறித்த கோட்பாட்டு ஆய்வாளராக மாறியது எப்படி? அது குறித்து உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி. ஏனென்றால் பள்ளியில் எல்லாம் அதுபோன்ற அடிப்படை ஆய்வு குறித்து நாம் ஒரு சொல்லையும் கேள்விப்படுவதில்லை அல்லவா? TIFR அனுபவம் ஏதேனும் அது குறித்து உங்களிடம் ஆர்வத்தைத் தூண்டியதா?

மீண்டும் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான். வரிசையாக தற்செயல் நிகழ்வுகள் எனது ஆய்வுப் பணிப் போக்கைத் தீர்மானித்தன. ஆனால் மிகவும் நேர்மறையான தாக்கங்கள்தாம் என்று சொல்லவேண்டும். நான் TIFR க்கு ஒரு மாணவப் பயிற்சியாளராகப் போனது ஒரு அணு இயற்பியல் ஆய்வுக்கூடத்திற்குத்தான். நான் பிறகு எம்.எஸ்ஸி முடித்து Ph.D மாணவியாக TIFR சென்றதும் அணுக்கரு இயற்பியல் ஆய்வு மாணவியாகத்தான். அந்த சமயத்தில் கோட்பாட்டு இயற்பியலில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் என் கரங்களால் பணிசெய்ய விரும்பினேன். அப்போது நான் மின்னணுவியல் குறித்து ஆர்வமும் திறமையும் கொண்டவளாக இருந்தேன். இப்போது அவை எதுவும் எனக்கு நினைவில் இல்லை. அப்போது பல கருவிகளை நான் திறந்து பிரித்துப் பார்க்கவும் மீண்டும் ஒன்றாக்கி வேலை செய்ய வைக்கவும் திறமைகொண்டவளாக இருந்தேன்.

ஆனால் மெல்ல எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அதற்கு நான் எனது வழிகாட்டியாக இருந்த டாக்டர். சி.வி.கே.பாபா அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அன்றைக்கு அங்கிருந்த  கருவிகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புகள். அவற்றில் ஏதேனும் ஒன்றில் பிரச்சனை என்றால் அந்தக் கருவி சரிசெய்யப்பட மீண்டும் அதனைத் தயாரித்த வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். அவை அளவில் மிகப் பெரியவை என்பதால் கப்பலில்தான் சென்று வரவேண்டும். எனவே ஏதும் பிரச்சனை என்றால் சில மாதங்கள் ஒன்றும் செய்ய இயலாது; நாம் காத்திருக்க வேண்டும். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நான் கோட்பாட்டு இயற்பியலுக்குச் செல்ல முடிவு செய்தேன். நான் ஏற்கனவே அணுக்கரு இயற்பியலில் பணி செய்துகொண்டிருந்ததால், பாபா, “சென்னையில் மேத் சயின்ஸ்ஸில் (IMSC – Indian Institute of Mathematical Sciences – இந்திய கணிதவியல் கல்விக் கழகம்)  உள்ள மூர்த்தி (டாக்டர் எம்.வி.என் மூர்த்தி- டாக்டர் இந்துமதியின் பிஹெச்.டி ஆய்வு வழிகாட்டி, நீண்டகால சக ஆய்வாளர்) அது தொடர்பான ஆய்வுகளில் உள்ளவர்; அவரிடம் சென்று சேரலாம்” என்றார். பாபாவிற்கு மூர்த்தியை தெரியும். எனவே அவரிடம் பேசினார். அந்த சமயம் மூர்த்தி சென்னையில் அணுக்கரு இயற்பியல் ஆய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றி வந்தார். எனவே அவரது துறைக்கு வந்து சேர்ந்தேன். நான் மேத்சயின்ஸிற்கு வந்தபோது இங்கு மிகவும் இளம் ஆய்வாளர்கள் மிகுந்த உற்சாகத்தோடும் மிகுந்த உத்வேகத்தோடும் செயலூக்கத்தோடும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். அநேகமாக அது போன்ற ஒரு ஆய்வாளர்களின் அணியும் உற்சாகமும் சூழலும் அதற்கு முன்போ இல்லை பின்போ இந்தியாவில் இருந்திருக்காது என்று நினைக்கின்றேன். 1950 ஆம் ஆண்டுகளில் TIFR இல் அதுபோன்ற சூழல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு தினமும் எல்லா நேரமும் உணவு இடைவேளை, தேநீர் நேரம் என இடைவிடாமல் நாங்கள் இயற்பியல் குறித்து சளைக்காமல் விவாதித்து வந்தோம். இது போன்ற சூழலில் நீங்கள் இருக்கும்போது அதற்குள் நீங்களும் உள்ளிழுக்கப்படுவீர்கள். அதுதான் எனக்கும் நடந்தது. மேலும் அது இணையம், கூகுள் சர்ச் என்பதெல்லாம் இல்லாத காலம். நீங்கள் தற்செயலாக கேள்விப்படும் ஓர் ஆய்வுக்கட்டுரை அல்லது ஆய்வு அறிக்கை ஆகியவற்றை நீங்கள் வேண்டுகோள் விடுத்து கேட்டு வாங்கிப் படிக்க வேண்டும்.

‘Physics Abstract’ (பிசிக்ஸ் அப்ஸ்ட்ராக்ட் – இயற்பியல் ஆய்வுக்கட்டுரைகள் குறித்து சுருக்கமாக அறிவிக்கும் இதழ்) அப்போது வரவில்லையா?

வந்தது. அதுவே வெளியிடப்பட்டு நம் கைக்கு வந்து சேர்வதற்கு காலம் ஆகும்.  ஆனால் அதில் வரும் ஆய்வுக்கட்டுரையைக் கேட்டு அது வந்து சேருவதற்கு இன்னும் காலம் ஆகும். அதற்குள் சமயத்தில் அறிவியல் நகர்ந்து விடும். ஆனால் ஆய்வாளர்கள் மும்முரமாக இருந்ததால் கட்டுரைகள் குறித்து தெரிய வந்துவிடும். மேலும் கோட்பாட்டு ஆய்வாளர்களுக்கும், பரிசோதனை ஆய்வாளர்களுக்கும் இடையே உயிரோட்டமான பரிவர்த்தனை இருந்தது. எனது பிஹெச்.டி பட்டத்திற்கு நான் சமர்ப்பித்த ஆய்வறிக்கை SLAC (Stanford Linear Accelerator Center) ஆய்வுக் கூடத்திலிருந்து அப்போதுதான் கிடைக்கப்பெற்ற தரவுகள் அடிப்படையிலானது. Spin Polarisation of Protons ( புரோட்டான்களின் சுழல் ஒருமுகமாதல்) பற்றிய கோட்பாடுச் சட்டகம். அது அன்றைக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. நல்வாய்ப்பு என்பதும் ஒரு அம்சம்தான். எல்லா அறிவியலுக்கும் அது புதிதாக மலரும் காலம் என்ற ஒன்று உண்டு. நான் அந்த தருணத்தில் சென்னை மேத் சயின்ஸில் இணைந்தேன்.

மேத் சயின்ஸில் அப்போது சில பிரச்சனைகள் இருந்தன. அது ஏற்ற இறக்கங்களை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அல்லவா? நிர்வாக மாற்றம் நடந்தது…

ஆம் ஒரு விநோதமான சூழல் நிலவியது. பெருமளவு அரசியல் பிரச்சனை என்று சொல்ல வேண்டும். அப்போதைய இயக்குநர் குறித்து புகார்கள் இருந்தன. ஆனால் என்ன நடந்தாலும் அது ஆய்வுப் பணிகளை பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். எதாவது நடந்தது என்றால் அது எங்களை இன்னும் கடினமாக உழைக்க வைத்தது என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் உங்களுக்கு அதுபோன்ற சந்தர்ப்பத்தில் இரண்டு தேர்வுச் சாத்தியங்கள்தாம் உள்ளன. ஒன்று, நாம் ஏதும் செய்ய இயலாத விசயம் குறித்து ஆங்காங்கு வம்பு பேசி மாய்ந்து போகலாம். அல்லது அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் வேலையைப் பார்க்கலாம். அந்த சமயத்தில் ஜாம், (டாக்டர்.ராமானுஜம், டாக்டர்.இந்துமதியின் கணவர், கோட்பாட்டு கணினி இயல் ஆய்வாளர், மேத்சயின்ஸ் பேராசிரியர்), மூர்த்தி ஆகியோர் அந்த விவகாரத்தில் முன்கையெடுத்துச் செயல்பட்டனர். அப்போது இந்த கல்வி நிறுவனம் வளர்ச்சி முகத்தில் இருந்தது. இளம் ஆய்வாளர்கள் பலர் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். சூழல் மிகவும் செயலூக்கம் கொண்டதாக இருந்தது. எல்லோரும் மிகவும் இளவயதினர். ஆசிரியர் குழாமும் இளம் வயதினர்தான். ஆசிரியர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இடையேயான வயது வேறுபாடு மிகவும் குறைவு. உங்களுக்கு சங்கர் (டாக்டர்.ஆர்.சங்கர் – டாக்டர் சுபஸ்ரீ இன் பிஹெச்-டிஆய்வு வழிகாட்டி), மூர்த்தி ஆகியோரைத் தெரிந்திருக்கும். வயது வேறுபாடு 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை எனலாம். பெரிய பேராசிரியர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். நாம் மிகவும் தயங்கித் தயங்கி பேச வேண்டும் எனும் நிலை இல்லை. மிகவும் இலகுவான சூழல் நிலவியது. நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பணியாற்றினோம். ஒன்றாக மனத்தடையின்றி விவாதங்களில் ஈடுபட்டோம்.

அது எனது மாணவர்கள் பற்றிய எனது கண்ணோட்டத்தையும் தீர்மானித்தது எனலாம். அவர்களை எப்படி நடத்துவது அவர்களோடு எப்படி உரையாடுவது என்பதில் இது செல்வாக்கு செலுத்தியது. இப்போது எங்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது. வயது வேறுபாடும் இப்போது அதிகம். ஆனாலும் அன்று கற்றுக் கொண்ட கலாச்சாரம் தொடர்கின்றது என்று சொல்லலாம்.

உங்களுக்கு அப்போதுதானே திருமணம் ஆனது?

ஆமாம்.

நான் அது குறித்து கேட்க விரும்புகின்றேன். பெண்கள் குடும்ப பணிகளையும் ஒரு அதிகப்படியான பொறுப்பாக சுமக்க வேண்டியுள்ளது. இந்தக் கேள்வியை ஆண் விஞ்ஞானிகளிடம் கேட்பதில்லையே என நீங்கள் என்னைக் கேட்கலாம். ஆனால் சாதாரணமாக எதார்த்தம் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு என்பதாகத்தானே இருக்கின்றது. உங்கள் விசயத்தில் இது எப்படி இருந்தது? நீங்கள் எப்படி இரண்டையும் சமன் செய்தீர்கள்? குறிப்பாக பிஹெச்.டி படித்தகாலத்தில் எப்படி சமாளித்தீர்கள்?

உங்களுக்கு ஜாம் (டாக்டர்.ராமானுஜம்) பற்றித் தெரியும். இந்த கேள்விக்கு ஒற்றைச் சொல்லாக ‘ஜாம்’ என பதில் சொல்லலாம். ஒன்று எனது கணவர் ஜாமும் நானும் TIFR இல் பிஹெச்.டி படித்தோம். இருவரும் அங்கிருந்து IMSC க்கு பணிக்கு வந்து சேர்ந்தோம். TIFR இல் இருந்தபோது இரு தேர்வுச் சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அங்கேயே தொடர்வது; அல்லது IMSC க்கு வருவது. இரண்டில் எது ஒன்று குறித்தும் விசேஷமான பிடிப்பு இல்லை. ஆனால் ஜாம் IIMSCக்கு வரலாம் என ஆலோசனை கூறினார். எனக்கு அப்போது IMSC குறித்து அதிகம் தெரியாது. அவர் இது போன்ற ஒரு நிறுவனம் இருப்பதாகக் கூறியபோது, நான் அப்படியெல்லாம் ஏதும் சென்னையில் இல்லை; நான் சென்னையில் பல ஆண்டுகள் இருந்திருக்கின்றேன் என்றெல்லாம் சொன்னேன். இந்தக் கல்வி நிறுவனம் அடைந்திருந்த வளர்ச்சி, அதன் நிர்வாகம் ‘அணு ஆற்றல் துறை’ வசம் மாறியது எல்லாம் எனக்குத் தெரியாது. எனவே அவர் அதனை எல்லாம் கூறி என்னை இங்கு வர ஆலோசனை கூறினார். மற்றொன்று நான் பிறந்த குடும்பம். நான் முன்னரே சொன்னபடி எனக்கு ஒரு மூத்த சகோதரி. அவளும் இயற்பியலில் பிஹெச்.டி படித்தவள். எங்கள் பெற்றோர் ஒரு பொழுதும் நாங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை பார்க்க வேண்டும் எனக்கூறியதில்லை. நான் இது குறித்து யாரிடமும் விவாதித்ததில்லை. ஆனால் எனக்கென்று ஒரு உத்தியோகம் இருக்க வேண்டும் என்பது எனது புரிதலாக ஆக்கப்பட்டிருந்தது. எனது பெற்றோர்கள் அந்த சிந்தனையை இயற்கையாக வளர்த்திருந்தனர் என்று சொல்ல வேண்டும். எனவேதான் ஜாம் என் அப்பாவை சந்தித்து ‘நான் உங்கள் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றேன்’ என்று கூறியபோது, அவர், ‘இப்போதுதானே பிஹெச்.டி யில் சேர்ந்திருக்கின்றாள்; நீங்கள் 5 ஆண்டுகாலம் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். (சிரிப்பலை!!)ஏனென்றால் அவரது  எண்ணம்’ ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் பிறகு குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டில் அமர்ந்து விடுவாள், என்பதாகவே இருந்தது. ஏனென்றால் சாதாரணமக அவர்கள் பார்த்ததெல்லாம் அப்படித்தான் இருந்தது. அது அவருக்கு உவப்பானதாக இருந்ததில்லை. எனவே எனது பெற்றோர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் சொந்தமான உத்தியோகத்தோடு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதை ஊட்டியிருந்தனர். எனது கணவரின் புரிதலும் பக்கபலமும் அடுத்த காரணம் எனலாம். பிஹெச்.டி படிக்கும்போது பல சமயம் போதும் போதும் பிஹெச்.டி யை விட்டுவிடலாம் என்று எனக்குத் தோன்றியுள்ளது. அப்படியெல்லாம் தோன்றாமல் யாரும் பிஹெச்.டி முடித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. அந்த நேரத்திலெல்லாம் அவர்தான் நான் விடாது தொடரவும் முடிக்கவும் உத்வேகம் அளித்தார்.

சென்னைக்கு வருவதற்கு வேறு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அது, அப்போதுதான் துவக்கப்பட்டு ஒரு பெரும் இயக்கமாக மாறிக்கொண்டிருந்த  ‘அறிவொளி’ இயக்கம் ஆகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் மற்றும் அறிவியல் உணர்வு ஆகியவற்றை பரப்பப் பணியாற்றிக் கொண்டிருந்தது. அத்தோடு ‘அறிவொளி’ பணிகளும் செய்தது. ஜாம் அதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே சென்னை வந்தபோது அதில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். என்னையும் அதில் பணியாற்ற உற்சாகம் அளித்தார். உண்மையில் ராமனுஜமும் வெளியாள்தான். அவர் ராஜஸ்தான் பிலானியில் பி.டெக் படித்தார். நாங்கள் சென்னைக்குத் திரும்பி வந்த நாட்களில் அவர் அருகே உள்ள சேரிகளுக்கும் குப்பங்களுக்கும் சென்று அவர்களுக்கு எந்தவகையில் உதவமுடியும் என்று பார்ப்பார். 6/7 குப்பங்களில் அவர்களுக்கு கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ‘MLA கட்டித் தருவதாகக் கூறியுள்ளார். அவர் கட்டித் தருவார்’ என்று ஒன்றுபோல் பலரும் கூறினர். அங்கு இடையில் புகுவது சிரமம் என்பதை உணர்ந்தார். கல்வி என்பதுதான் நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று உணர்ந்தார். அறிவியல் இயக்கத்தில் பலரும் எழுத்தறிவே இல்லையென்றால் அறிவியலை பரப்புவது எப்படி என்று அதுபோன்ற முடிவுக்கு வந்து அந்தப் பணியை முழுமூச்சாகச் செய்துவந்தார்கள்.  அப்போது டாக்டர்.சுந்தர்ராமன், பாண்டிச்சேரியில் பணியாற்றி வந்தார். பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் இந்தப் பணியைத் திறம்படச் செய்து வந்தது. அவர்களிடமிருந்து அறிவொளி நூல்களை வாங்கி வந்து ‘தென்சென்னை அறிவொளி இயக்கம்’ எங்கள் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. நான்தான் அதன் முதல் மாணவி; ஆனால் தமிழை அந்த வழியில் கற்பது மிகவும் சிரமமான வேலையாக இருந்து. என்வே நான்தான் கற்பதை நிறுத்தி டிராப் அவுட் ஆன முதல் ஆளும். ஏனென்றால் குழந்தைகள் நூலை வைத்து முதியவர் கற்பது சிரமம் என்பதை உணர்ந்தோம். ஏனெனில் முதியவர்களுக்கு மொழி தெரியும். மொழியைப் புதிதாய்க் கற்பவர்களுக்குத் தேவைப்படும் நூல்கள் வேறு; மொழி தெரிந்தவர்கள் எழுதப் படிக்கக் கற்கத் தேவையான நூல்கள் வேறு; குழந்தைகளுக்கான நூல்கள் வேறு என்பதை உணர்ந்தோம். தினசரி செய்தித் தாள்களும் கூட புதிதாய் எழுதப் படிக்கக் கற்கும் முதியவர்களுக்கு தோதானதாக இல்லை. முதியவர்களுக்குத் தோதான ஆனால் எளிமையான நூல்கள் தேவைப்பட்டன. எனவே நாமே புதிய புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். எனவே அறிவொளி இயக்கம் பல நூல்களைத் தயாரித்தது. கற்பது எனக்குச் சிரமமாக இருந்தாலும் அது ஒரு மகத்தான அனுபவம். பலவகைகளில் அது ஒரு கண் திறப்பாக இருந்தது.

எந்த ஆண்டு இதெல்லாம் நடந்தது?

நாங்கள் 1987 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தோம். இந்த இயக்கம் 1992 ஆம் ஆண்டுவரை நடந்தது. 1988 இல் ஆரம்பம் ஆனது; 1989 ஆம் ஆண்டு வாக்கில் அது பெரிய இயக்கமாக மாறியது. இங்கு தென் சென்னையில் நாங்கள் சுமார் 40 மையங்களை நடத்தினோம். இது அறிவியல் பிரச்சாரம் குறித்தும் பலவிதங்களில் கண் திறப்பாக இருந்தது. வெவ்வேறு வயதுக் குழந்தைகளிடம் வெவ்வேறு விதமாக அறிவியல் பேச வேண்டியிருக்கின்றது. வெவ்வேறு வயதில் வெவ்வேறு உளவியலும் செயல்படுகின்றது. நான் அறிவியல் பிரச்சாரத்திற்காக எழுத ஆரம்பித்தேன்.  ‘ஜந்தர்மந்தர்’ என்ற சிறாருக்கான அறிவியல் இதழ் ஆங்கிலத்தில் நடத்தி வருகின்றோம். அதில் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுவதால் பிரச்சனை இல்லை. அதே போல  ‘துளிர்’ என்ற இதழை தமிழில் நடத்தி வருகின்றோம். அதற்காக நான் ஆங்கிலத்தில் எழுதுவேன். அதனை ராமானுஜமோ அல்லது வேறு நண்பர்கள் யாரேனுமோ தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இப்படி நான் எழுதிய கட்டுரைகள் பல இணைக்கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்து சில கல்லூரிகளில் பாட நூலாகவும் ஆகியுள்ளது. நீங்கள் அறிவியல் பிரச்சாரம் செய்ய விரும்பினால் பேசுபவரிடம் சரியான தளத்தில் பேச வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அவர்களது கவனத்தை இழந்துவிடுவீர்கள்.

நீங்கள் அதனை நிறுத்தவில்லை. ஜந்தர்மந்தர் இப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருகிறது அல்லவா?

ஆம். 25 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறது. இடையில் சில ஆண்டுகள் நின்றுவிட்டது. நானும் 1992 முதல் 1998 வரை சென்னையில் இல்லை. ஓராண்டு நின்றுபோயிருந்த ஜந்தர்மந்தர் பின் மீண்டும் கொண்டுவரப்பட்டது. நான் வந்தபின் மீண்டும் அதற்காக பணியாற்றினேன். பின் சென்னை ஐ.ஐ.டி ஐச் சேர்ந்த சில ஆர்வலர்கள் அதனைப் பொறுப்பேற்று நடத்தினர். பின் சில ஆண்டுகள் கழித்து அவர்கள் வேறு பணிக்கு நகர்ந்தபோது நான் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

அது இப்போதும் வெளிவருகிறது அல்லவா?

ஆம். வந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் இதனையெல்லாம் ஏன் செய்கின்றீர்கள்? ஏனென்றால் ஒரு விஞ்ஞானி என்ற வகையில் நீங்கள் பணியாற்றுவது ஒரு உயர் தளத்தில்… ஜந்தர்மந்தர், துளிர் போன்ற இதழ்களின் அறிவியல் என்பது வேறொரு தளத்தைச் சேர்ந்தது. எப்படி நீங்கள் இந்த இரண்டிலும் பணியாற்றுகின்ரீர்கள்? முதலில் நீங்கள் ஏன் இரண்டிலும் பணியாற்றுகின்றீர்கள்?

இரண்டு காரணங்களை நான் சொல்லலாம். ஒன்று என் சொந்த வாழ்க்கைக்கதையோடு ஒட்டியது. முன்னர் நான் கூறியபடி நான் தற்செயலாக ஒரு விபத்தாக விஞ்ஞானி ஆகியுள்ளேன். மிகவும் யோசித்து காத்திரமான திட்டத்தின் அடிப்படையில் விஞ்ஞானி ஆகவில்லை. நான் அறிவியல் கல்வியை மிகுந்த அக்கறையோடு ஆரம்பிக்கவில்லை. அறிவியல் ஆய்வுக்கும் பல தொடர்ச்சியான விபத்தான நிகழ்வுகளால் வந்து சேர்ந்தேன். எனவே நான் எழுதுவதால் சிலருக்கு சிறுவயதிலேயே அறிவியல் அறிமுகம் ஆகும் எனக் கருதுகின்றேன். மறுபுறம் வயதாக ஆக அறிவியல் மீதான என் பிணைப்பு அதிகம் ஆகியுள்ளது. வயதாக ஆக நான் மேலும் மேலும் அடிப்படைகளை நோக்கிச் செல்லச் செல்ல நான் அதிகம் கற்கின்றேன், புரிந்துகொள்கின்றேன். அப்போது அடையும் வியப்பும் மகிழ்ச்சியும் இந்த முயற்சிகள் அனைத்திற்கும் அளிக்கும் விலை சரியானதென்று காட்டுகின்றது.

நாம் இந்த பேரண்டத்தைப் பார்க்கும்போது அதன் நுட்பமும் சிக்கலும் நம்மை மலைக்க வைக்கின்றது. ஆனால் அதன் ஒரு சிறுபகுதியையாவது நம்மால் ஆழமாகப் புரிந்துகொள்வது சாத்தியம் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக புளகாங்கிதம் அளிப்பதாக உள்ளது. எனது துறையான துகள் இயற்பியல் என்பதன் சிறப்பு, அது சில சமன்பாடுகளின் மூலம் இந்த இயற்கையின் பேரழகையும் அதன் நுட்பத்தையும் சிக்கலையும் நாம் காத்திரமாக உணர வழிவகுக்கின்றது என்பதுதான். எந்தவொரு விஞ்ஞானியும் இந்த பேரண்டமே ஒரு சமன்பாடு மட்டுமே எனச் சொல்வதில்லை. ஆனால் நாம் ஒன்றை உணர்ந்துகொள்கின்றோம். இந்தச் சமன்பாடுகளின் அழகு என்பது நமது இயற்கையின் உள்ளார்ந்த அழகை அது பிரதிபலிக்கின்றது என்பதுதான்.

விஞ்ஞானிகள் இயற்கை குறித்துப் பேசுப்போதெல்லாம் சீர்மைக் கொள்கை ( Symmetry Principle) பற்றிப் பேசுகின்றனர். நாம் இயற்கையின் சீர்மை குறித்து நம்புகின்றோம். விஞ்ஞானிகள் இயற்கையின் இந்த அழகை கணிதத்தின் மூலம் எடுத்துக்கூற முயற்சிக்கின்றனர்.

இது குறித்து சிந்திக்கும்போது நமக்கு அறிவியல் என்ற பெயரில் கற்பிக்கப்படுவது மிகவும் அலுப்பும் சலிப்பும் ஊட்டுவதாக உள்ளது என்பது உணர்கின்றேன்

நான் ஒரு எடுத்துக்காட்டைக் கூறமுடியும். நாம் நமது தொடக்கப்பளி வகுப்பில் இருக்கும்போது அணுக்களை மேலும் பிளக்க முடியாது அதனை பகுதிகளாக வெட்டிப் பிரிக்க முடியாது எனக் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் சில வகுப்புகளுக்குப் பின்னர் அணுவிற்குள் ஒரு அணுக்கரு உள்ளது; மின்னணுக்கள் அதனைச் சுற்றி வருகின்றன; அணுக்கரு புரோட்டான்கள் நியூட்ரான்களால் ஆனது எனக் கற்பிக்கப்படுகின்றது. ஆனால் நாம் யாரும் அப்படியென்றால் முதலில் அணுக்களைப் பிரிக்க முடியாது என்று ஏன் கூறினீர்கள்? எனக் கேட்பது இல்லை. இப்போது எப்படி அணுக்களை புரோட்டான், நியூட்ரான், மின்ணணு எனப் பிரிக்கலாம்; புரோட்டான் நியூட்ரான் ஆகியவை குவார்க்குகளால் ஆனது என்று கூறுகின்றீர்கள் என்று கேட்பது இல்லை. எல்லாம் மாறிப்போகின்றது. அதுபோல நமக்கு நியூட்டனின் விதிகள் கற்பிக்கப்படுகின்றன. அப்போது அவை சகல இயக்கங்களுக்கும் பொருந்தக் கூடிய உலகப் பொதுவிதிகள் எனக் கூறப்படுகின்றன. பிறகு குவாண்டம் இயங்கியல் ஆகியவை வருகின்றன. ஒவ்வொரு முறையும் இதுதான் இறுதி, இதுதான் அறுதி உண்மை என்ற விதமாகக் கூறப்படுகின்றது. ஆனால் எந்த நிலையிலும் கேள்வி கேட்பது வளர்த்தெடுக்கப்படுவதில்லை. அறிவியல் என்பது ஒரு முடிவற்ற உண்மை குறித்த தேடல். நியூட்டனின் விதிகள் தவறல்ல. அது ஒரு தளத்தின் உண்மை; ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அளவுகளிலான உலகத்திற்கு அது பொருந்தக் கூடிய உண்மை. ஆற்றல் அளவுகள் மேலும் அதிகம் ஆகும் போது அந்த ஆற்றல் அளவுகளில் வேறு விதிகள் அமலாகின்றன. இந்த புதிய விதிகளும் மேலும் அதிக ஆற்றல் அளவுகளில் நியூட்டன் விதிகள் மாற்றீடு செய்யப்பட்டது போல் புதிய விதிகளால் மாற்றீடு செய்யப்படுகின்றன. அந்தத் தளத்திலும் அதுதான் இறுதி என்றோ அது அறுதி உண்மை என்றோ நாம் கூற இயலாது. நாம் தேடலைத் தொடர்வதுதான் செய்யக்கூடியது. நாம் ஒரு நாளும் அறுதி உண்மை என எதிலும் சென்று நிற்கப்போவதில்லை. நமக்கு எப்போதும் வினாக்கள் மிச்சம் இருக்கும். அந்த வியப்பும் விகசிப்பும் நமது பாடநூல்களில் அளிக்கப்படுவதில்லை. எல்லாவற்றையும் ஒரே வகுப்பில் விளக்க முயற்சித்தால் அது மாணவர்களைக் குழப்பிவிடும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் தனியாக ஒரு அத்தியாயம் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் அணு குறித்துப் பேசும்போது இது அடைப்புக்குறிக்குள் கூறப்பட வேண்டும் என கருதுகின்றேன். ஆனால் இது எந்த வகையிலும் கூறப்படுவதில்லை.  ஜந்தர்மந்தர், துளிர் போன்ற இதழ்கள் இந்த இடைவெளியை சிறிது இட்டு நிரப்ப முயற்சிக்கின்றன.

நாங்கள் அறிவியலில் புதிதாக என்ன நிகழ்கின்றது என்பதையும் விளக்கிக் கட்டுரைகள் பிரசுரிக்கின்றோம். ஏனென்றால் பள்ளிகளில் அறிவியலில் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு மூடுண்ட உலகம் குறித்த சித்திரமே அளிக்கப்படுகின்றது. நாங்கள் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் குறித்தும் அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்கின்றோம். இன்னும் விடைகாணப்படாத வினாக்கள் குறித்து அறிமுகமும் செய்கின்றோம்.

நீங்கள் +2 இயற்பியல் நூலைப் பார்க்க வேண்டும். நான் எனது மகளின் நூலைத்தான் பார்த்தேன். ஆனால் எல்லா நூல்களும் அப்படித்தான் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற E = mC2 சமன்பாட்டை அறிமுகம் செய்யும் ஒரு பாடம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட m1 க்கு ஆற்றல் அளவை அளித்து m2 க்கு ஆற்றல் அளவைக் கணக்கிடச் சொல்வார்கள். ஆக அந்த சமன்பாடு ஒரு இரண்டு மார்க் கேள்வியாக மாற்றப்பட்டுவிடும். அவ்வளவுதான். அதன் பின்னே உள்ள கோட்பாடு குறித்தோ அந்த சமன்பாட்டின் அழகு குறித்தோ மாணவர்கள் எந்த விளக்கமும் பெறமாட்டார்கள். அந்த சமன்பாட்டின் தாக்கம் குறித்தோ அதன் பொருள் குறித்தோகூட எந்த விளக்கமும் இருக்காது. அந்தப் பாடம் ஒரு புரிதலுக்கும் வழிவகுக்காது. நான் பல +2 மாணவர்களோடு உரையாடுவது வழக்கம். என்னிடம் உரையாடும் மாணவர்கள்,  ‘அறிவியல் என்றால் ஏதோ என்று நினைத்து அறிவியல் பாடத்தை எடுத்தோம் நாங்கள் இப்போது படிப்பதுதான் அறிவியல் என்றால் நிச்சயமாக +2 க்கு மேல் அறிவியல் படிக்கமாட்டோம்’ என்பார்கள்.

அது ஒரு அவலம் அல்லவா?

ஆமாம். அது ஒரு பெரிய இழப்பு அல்லவா? அறிவியலில் ஆர்வம் கொள்ளும் இளம் மாணவர்கள் அறிவியலில் இருந்து வெளியே தள்ளப்படும் விதமாகத்தான் நமது அறிவியல் கல்வி உள்ளது. எனவே நாங்கள் ஒரு சிறு அளவில் ஒரு மாற்று அல்லது ஒரு கூடுதல் உள்ளீடு அளிக்க முயற்சிக்கின்றோம்.

சிலர், இப்போது எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. பல கட்டுரைகள் அசைவு ஓவியங்களோடு (Animation) கிடைக்கின்றன எனக் கூறலாம் அல்லவா?

இல்லை. இங்கு இந்தியாவில் ஒரு பெரும் பகுதியினருக்கு இப்போதும் அச்சு ஊடகம்தான் அவர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை வழங்க முடியும் எனக் கருதுகின்றேன். ஏனென்றால் இந்த இதழ்கள் எல்லாம் மலிவான விலையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாங்கள் அனைவரும் ஊதியம் ஏதுமில்லாமல்தான் எழுதுகின்றோம். அச்சுச் செலவு மட்டுமே இதழின் விலையாக வாசகர்களால் அளிப்பதாக உள்ளது. எனவே இதனை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதென நாங்கள் கருதுகின்றோம். மேலும் இணைய வசதி இன்னும் முழுமையாய் எளிதாய்க் கிடைக்காத கிராமப்புறங்கள் இருக்கின்றன. எனவே அச்சு ஊடகம் இன்னும் அதன் தேவையை இழக்கவில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் ஜந்தர்மந்தர், துளிர் போன்ற இதழ்கள்  வருவது பொதுவாக எல்லோருக்கும் தெரியவில்லை. பொதுவான சந்தையில் அது இருப்பது வெளியில் தெரியவில்லையே? சந்தைப் படுத்தலில் போதாமை இருப்பதாக நீங்கள் கருதவில்லையா?

பலகீனம் உள்ளது. ஆனால் சாதாரணமான பத்திரிக்கை முகவர்கள் 40 % தள்ளுபடி கேட்கின்றனர். அது இந்த இதழ்களை கடைகளில் தொங்கவிடுவதற்கு மட்டுமே. இப்போது நாங்கள் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவே விலை வைத்துள்ளோம். முகவர்களுக்கு 40% கொடுக்க வேண்டுமென்றால் இதழின் விலையை ஏற்ற வேண்டும். அது எங்கள் இதழ்களின் வாசகர்களான சாதாரண குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களால் அளிக்க இயலாது. எனவே இப்போது உள்ள முறையைத்தான் தொடர வேண்டும் என்பது எங்கள் முடிவு. உங்களைப்போன்றவர்கள் இந்தப் பத்திரிக்கைகள் குறித்து எடுத்துச் சொல்லவேண்டும்.

சரி. இப்போதும் அறிவியல் புலம் என்பது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைதான். ஆனால் அதில் நீங்கள் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளீர்கள். ஆய்வுப் பணிகள் என்றவிதத்திலும் சரி உத்தியோகப் பதவி என்ற வகையிலும் ஆய்வாளர், பேராசிரியர் என சாதித்துள்ளீர்கள். இது உங்களுக்கு எப்படி சாத்தியமாகியது? ஒரு பெண் இதுபோன்ற ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் களத்தில் பணியாற்றுவது குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்?

எனக்கு எல்லாம் அதிர்ஷ்ட்ட வசமாக நடந்தது என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் ஆதரவு பக்க பலங்கள் முக்கியமானவை. நான் பணியாற்றிய நிறுவனங்களில் எனக்குப் பெண் என்பதால் எந்தப் பிரச்சனையும் எந்த ஒதுக்கலும் பாகுபாடும் இருந்ததில்லை என்று 100% நிச்சயத்துடன் நான் கூற முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது விண்ணப்பங்கள் நான் பெண் என்ற காரணத்தால் தயக்கத்தை உருவாக்கிடவில்லை. ஆனால் இதில் எனக்கு சற்று மாறுபட்ட கருத்து உள்ளது.

இந்தியாவில் இரண்டு வகையான பாலினப்பாகுபாடுகள் செயல்படுகின்றன என்று சொல்வேன். நிறுவனங்களின் பாகுபாட்டை நான் என் சொந்த வாழ்வில் சந்திக்கவில்லை என்றாலும் அது நிச்சயம் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குடும்பத்தில் இருக்கும் பாலினப் பாகுபாடு, நிறுவனங்களிலுள்ள பாகுபாடு ஆகியவற்றைக் காட்டிலும் முக்கியமானது, நான் ’சமூகப் பாலியல் பாகுபாடு’ என்று நான் கருதுகின்றேன். ஒரு பெண் அலுவலகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ பணிபுரிந்தாலும் குடும்பப் பொறுப்பை முழுவதுமாக அவளே சுமக்க வேண்டியிருக்கின்றது. கணவன்மார்கள் நீ வேலைக்கு வேண்டுமென்றால் செல்லலாம்; ஆனால் 4 மணிக்குக் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது வீட்டில் இருக்க வேண்டும்; அவர்கள் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பது வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது சொல்லாமலோ திணிக்கப்படும். உத்தியோகமா அல்லது வீடா என ஆண் தீர்மானிப்பதுபோல எல்லாப் பெண்களும் தீர்மானிக்க இயலாது என்பதுதான் எதார்த்தம்.

நீங்கள் பிஹெச்.டி படித்தால் அதை முடிப்பதற்கு காலம் ஆகும். அதை முடிக்கும்போது வயது 27, 28 அல்லது 30 கூட ஆகிவிடும். எனவே குடும்பங்களில் ஒரு எச்சரிக்கை சிகப்பு விளக்கு எரிய ஆரம்பித்துவிடும். குடும்பத்தினர் பெண்ணின் திருமணம் குறித்து கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். பெண்ணுக்கு வயதானால் யார் திருமணம் செய்துகொள்வார்கள் எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். பெண் திருமணம் செய்துவிட்டாலோ உயிரியல் கடிகாரம் ஓட ஆரம்பித்துவிடும்.  ‘இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையென்றால் பிறகு எப்போது குழந்தை பெற்றுக்கொள்வாய்?’ என்ற கேள்விகள் வந்துவிடும். அழுத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அதனால் பல பெண்கள் பி.எஸ்ஸிக்குப் பின் காணாமல் போய்விடுகின்றனர். இன்னும் சிலர் எம்.எஸ்ஸிக்குப்பின் காணாமல் போய்விடுவார்கள். சிலர் பிஹெச்.டிக்குப் பின்னும் சிலர் முதல் குழந்தை பிறந்ததும் காணாமல் போவர்.

இது நிறுவனங்களில் பணியிடத்தில் உள்ள பாகுபாட்டிற்கு மேலாக உள்ளது. இதனைத்தான் நான் ‘சமூகப் பாலியல் பாகுபாடு’ என்று கூறுகின்றேன். நான் மத்தியதர வர்க்கச் சூழல் குறித்துப் பேசுகின்றேன். உழைக்கும் வர்க்கப் பெண்களின் நிலை வேறு என்பதை நான் அறிவேன். அங்கு சம உழைப்பிற்கு சமகூலி என்பது இல்லாத நிலைதானே தொடர்கின்றது. செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பெண் தொழிலாளி அதே செங்கல் அறுக்கும் ஆண் தொழிலாளியைவிட கூலி குறைவாகப் பெறும் நிலைதான் உள்ளது என்பதை நான் மறக்கவில்லை. ஆனால் மத்தியதர வர்க்கப் பெண்களுக்கு  ‘சமூகப் பாலியல் பாகுபாடு’ தான் முக்கியப் பிரச்சனை என்று கருதுகின்றேன். ஒரு பெண் பிரசவகால விடுப்பு எடுத்தால் அவர் மீண்டும் வருவாரா என்பது நிச்சயமில்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அவர் அப்படியே வந்தாலும் அவர் பலவற்றை இழந்திருப்பார். ஏனென்றால் உலகம் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மிகவும் சிரமமானதுதான். நான் இன்று இருக்கும் இந்த நிலையில் இருக்கும் பெண்களைப் பார்த்தால் அவர்களில் பெரும்பான்மையோர் திருமணம் செய்து கொள்ளாதவர்களாகவோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்களாகவோ இருக்கின்றார்கள். திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொண்டு தீவிரமாக அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இந்தப் பாலியல் பாகுபாடுகள் உள்ளிருந்தல்ல வெளியில் இருந்து வருவதாகும்.

பதவி உயர்வு போன்றவற்றில் நிறுவனங்களில் பாலியல் பாகுபாடு இல்லையென்று சொல்லமுடியுமா?

அப்படிச்சொல்ல முடியாது. அது எல்லா இடங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என் சொந்த வாழ்வில் நான் அதனால் பாதிக்கப்படவில்லை என்று மட்டும்தான் சொல்கின்றேன். ஆனால் அது நடைபெற்றுக்கொண்டு இருப்பதை நான் எல்லா இடங்களிலும் பார்க்கின்றேன். எடுத்துக்காட்டாக ‘துகள் இயற்பியல்’ குறித்த ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றால் கருத்தரங்கில் பங்கு பெறும் மாணவர்கள் ஆய்வாளர்களில் பாதிக்கு மேல் பெண்கள் இருக்கின்றார்கள். ஆனால் ’துகள் அறிவியல்’ துறைகளின் ஆசிரியர்கள் மட்டத்தில் பார்த்தால் பெண்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றார்கள். அது பெரும்பாலும் ஆண்களின் உலகமாகவே இருக்கின்றது. எங்கே சென்றார்கள் பெண்கள் எல்லாம்? நாம் ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டியுள்ளது. ஏனென்றால் நாம் பேசுவதெல்லாம் நாம் கண்ணால் பார்த்ததை (anecdotal)

வைத்துக் கூறுகிறோம். இது குறித்து நானும் நீண்டகாலமாக யோசித்துகொண்டிருக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமல்லவா? ரோஹினி (ரோஹினி காட்போல், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகத்தில் – IISC, Bangaluru – மூத்த துகள் இயற்பியலாளர்) பெண்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தார். ஆனாலும் அதிலும் எல்லாம் சொந்த அனுபவங்களின் அடிப்படையிலானவைதான். அப்படி நாம் கண்ணால் பார்த்ததை வைத்து (anecdotal) பொதுமைப்படுத்துதல் சரியாக இருக்காது. ஏனெனில் நாம் கண்ணால் பார்க்கும் உலகம் முழுமையின் சிறுபகுதிதான். நமது பார்வைகளும் எப்போதும் நிறப்பிழைகள் கொண்டவைதான். எனவே சமூகவியல் பின்புலம் கொண்டவர்கள் இதனைக் காத்திரமான ஓர் ஆய்வாகச் செய்யவேண்டும். அவர்கள் வெறுமனே கணக்கெடுப்பதோடு நிற்காமல் கொஞ்சம் பின் தொடர்ந்து பணியாற்றவேண்டும். அப்படி உயர் கல்வியில் இருந்து ஆய்வுப்பணியில் இருந்து விலகிய பெண்களைச் சந்தித்து காரணங்களைக் கேட்டுக் கணக்கெடுப்பு நடந்தவேண்டும். நான் ஜெர்மனியில் பணியாற்றியபோது அந்த ஆய்வாளர் குழுவில் இருந்த ஒரே பெண் நான்மட்டும்தான். அங்கு நிலை இன்னும் மோசமாக உள்ளது. வியப்பூட்டும் வகையில் இந்தியாவில் நிலமை ஒப்பீட்டளவில் மேல். மற்ற துறைகளில் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆனால் காத்திரமான அறிவியல் ஆய்வுத்துறைகளில்  இந்திய நிமைமை அமெரிக்க, ஐரோப்பிய நிலமைகளைவிட மேல் என்றுதான் சொல்வேன். நான் நினைப்பது சமூகரீதியிலான பாலினப் பாகுபாடுதான் இந்தியாவில் இந்தப் பகுதியினரின் பெரும் பிரச்சனை.

நீங்கள் இப்போது INO ( India Based Neutrino Observatory – இந்திய நியூட்ரினோ கூர்நோக்குநிலையம்) விவகாரத்தில் முழுகிப்போயுள்ளீர்கள். நீங்கள் இப்போது அதில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் ஈடுபாடு குறித்து சொல்ல முடியுமா? அது எப்படி துவங்கியது? எவ்வாறு இன்றைய நிலைக்கு வந்தது? இன்று என்ன நிலையில் உள்ளது?

எனது பணியின் ஆரம்பநாட்களிலேயே இது துவங்கிவிட்டது. நான் முன்னர் கூறியபடி நான் பரிசோதனை அடிப்படையிலான இயற்பியல் ஆய்வுகள் செய்துகொண்டிருந்த காலம். நான் முன்னரே சொன்னவாறு TIFR க்கு நான் மாணவப் பயிற்சியாளராகச் சென்றிருந்தபோது இந்த ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது அங்கு நான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட Made in India ஆய்வுக் கருவிகள் எதனையும் காணவில்லை.பிறகு இந்தியாவில் சில ஆய்வுக்கூடங்கள் தமக்கு தேவையான ஆய்வுக் கருவிகளைத் தாமே உருவாக்கி ஆய்வுகள் செய்வதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய ஈடுபாடு அடிப்படையில் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் என்ற வகையில்தான். ஆனால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளைக்கொண்டு சில தரமான ஆய்வுகள் செய்வது சாத்தியம் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தியக் கருவிகள் கொண்டு உலகத் தரத்திலான ஆய்வுகளின் சாத்தியம் அந்த திசையில் என்னைப் பயணிக்கச் செய்தது. இங்கு இரண்டு விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் துகள் இயற்பியலிலும் மானுடப் புரிதலியலிலும் (Phenomenology – பினாமினாலஜி – துகள் இயற்பியல் புரிதலியல் என்பது உயர் இயற்பியலில் ஒரு துறை. அது ஐரோப்பாவில் உள்ள செர்ன் – CERN  அல்லது ஏனைய துகள் முடுக்கி நிலையங்களில் நடக்கும் ஆய்வுகளோடு இணைந்து செயல்படுகின்றது. அங்கு நடக்கும் பரிசோதனைகளில் கிடைக்கும் தரவுகள் குறித்த விளக்கங்களை அளிக்கும் கோட்பாடுகளைக் கட்டியமைப்பது அதன் பணி. அத்தோடு சிலசமயம் அந்த பரிசோதனைகளிலிருந்து ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள மாதிரி – Model – களில் பொருந்தக் கூடிய வழிமுறைகளை வகுத்தெடுப்பது என்ற பணியையும் கொண்டது) குறித்தும் ஆய்வு செய்யும் விஞ்ஞானி. அதன் பொருள் வெறும் கோட்பாடுகளை உருவக்குவது மட்டுமல்ல. ஏற்கனவே கிடைத்துள்ள பரிசோதனை முடிவுத் தரவுகளை விளக்குவது என்பதும், கோட்பாடு சரியென்றால் என்னவிதமான ப்ரிசோதனையில் என்ன தரவுகளை எதிர்பார்க்கலாம் என்பதும் அடக்கம். நாங்கள் வெறுமனே சூட்சுமமான (abstract) கோட்பாடுகளோடு மட்டும் நிற்காமல் எதார்த்தத்தில் காலூன்றி நிற்க விரும்பினோம். எங்கள் பணி பரிசோதனை முடிவுகளில் கிடைக்கும் தரவுகளிலிருந்து கோட்பாடுகளை உருவாக்கி இயற்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி ஆகும். பரிசோதனைகள் என்று சொல்லும்போது சாதாரணமாக அவை உலகில் எங்கெங்கோ நடப்பவை ஆகும். அந்தப் பரிசோதனைகள் நாம் வடிவமைத்த பரிசோதனைகள் அல்ல. என்னவிதமான பரிசோதனை நடக்க வேண்டும் என நீங்கள் கூறமுடியாது. நீங்கள் அந்தப் பரிசோதனையில் ஒரு அங்கமாக ஈடுபடுவது இல்லை. நீங்கள் ஒரு பார்வையாளர் அல்லது வழிப்போக்கர் மட்டுமே. அப்போது உங்கள் கவனத்திற்கு வருவதை வைத்து நீங்கள் உங்கள் கோட்பாட்டைக் கட்டி அமைக்க வேண்டும். ஐ.என்.ஓ உங்களுக்கு ஒரு உலகத் தரத்திலான ஆய்வுக் கூடத்தை அமைக்க வாய்ப்பளிக்கின்றது. அங்கு நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிசோதனைகளை வடிவமைத்து உலகத் தரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். உங்கள் பரிசோதனையின் வரம்புகள், வழிமுறைகள் (parameters) உங்களால் தீர்மானிக்கப்படும். இயற்கை நிகழ்வுகளை உங்களது முன்னுரிமையின் அடிப்படையில் பரிசோதனை செய்து முடிவுகளுக்கு வந்து சேரலாம். எல்லாம் நீங்களாக செய்யலாம். இது ஒரு சிறப்பும் பலமும் ஆகும். மற்றொன்று எல்லாம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட இருக்கின்றது என்பது எங்கள் சகாக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியது. ஏனென்றால் இது பெரிய அளவில் இந்திய தொழில் அரங்கத்திற்கு தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவும். இன்று ஐ.என்.ஓ திட்டத்தில் கிட்டத்தட்ட 100 இந்திய நிறுவனங்கள் பணியாற்றிக்கொண்டுள்ளன.

ஆய்வுக் கூடத்திற்கு தேவையான ஒவ்வொரு கட்டுப்பொருளும் (Component) கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. பின் அவை இங்கேயே உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக RPC எனப்படும் மைய அமைப்பிற்கு கண்ணாடிப் பலகைகள் தேவை. ஆனால் அந்தக் கண்ணாடிப் பலகைகள் குறிப்பிட்ட பண்புகளோடு இருக்க வேண்டும். சாதாரணமான பயன்பாட்டிற்கு உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிப் பலகைகளில் இந்த அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுவது கிடையாது. அவசியமுமில்லை. உதாரணமாக இந்த கண்ணாடித் தகடுகள் குறிப்பிட்ட மின்தடைத் திறன் (Resistance) கொண்டவையாக இருக்க வேண்டும். வணிகரீதியாக உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிப் பலகைகளில் அதுபோன்ற தேவைகள் கூறப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இந்தப் பண்புடன் கூடிய கண்ணாடி தயாரிக்கும் திறனை வளர்த்துக்கொள்கின்றன. மறுபுறம் தமிழகத்தில் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு இது பல திறப்புகளையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது. அவர்களுக்கு ஒரு உலகத் தரமான ஆய்வுக்கூடத்தை பார்வையிடவும் அங்கு நடக்கும் ஆய்வுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது. நான் அவர்களது உற்சாகத்தை நேரடியாகக் கண்டேன். மதுரை போன்ற இடங்களில் நாங்கள் Open House திறந்த கூட்டங்களை நடத்தினோம். காஸ்மிக் கதிர்கள் போன்றவற்றில் நடக்கும் ஆய்வுகளை மாணவர்கள் நேரடியாகக் கண்டு அறிந்துகொள்வதற்கு மாற்று என்பதே இல்லை.

RPC என்பது என்ன?

RPC என்பது Resistance Plate Chamber. அதுதான் முதன்மையான detector இன் இதயம். இரும்பால் ஆன பல அடுக்குகள் இருக்கும்; அவற்றுக்கிடையில் காண்பொறிகள் எனப்படும் Detectors வைக்கப்படும். அவை கண்ணாடியால் ஆனவை. இந்த காண்பொறிகள் இந்தியாவிலேயே பல ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்படுகின்றன. அந்த ஆய்வுக் கூடங்கள் திறந்த நாட்களைஅனுஷ்டிக்கும்போது மும்பை, கல்கத்தா, மதுரை என அந்த ஆய்வுக்கூடங்களுக்கு நாங்கள் மாணவர்களை அழைத்துச் செல்கின்றோம். அவர்கள் நேரடியாக தாங்களே என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கலாம். இல்லையென்றால் அந்த மாணவர்களுக்கு எல்லாம் அரூபமாகவே (abstract) இருக்கும்.

அது அடுத்த கேள்விக்கு இட்டுச் செல்கின்றது. அது பேரளவிலான அறிவியலுக்கு மாற்றாக சிறிய அளவிலான அறிவியல் (Big Science Vs Small Science) குறித்த கேள்வி. இந்த விவாதம் குறித்து நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். சிலர், இந்தியாவிற்குத் தேவை ‘மக்கள் அறிவியல்’ ‘சிறிய அறிவியல்’ தான். பேரளவு அறிவியல் ‘Big Science’ தேவையில்லை என்று வாதிடுகிறார்கள் அல்லவா?

முதலில் மக்கள் அறிவியல் என்றாலே அது சிறிய அறிவியலாக இருக்க வேண்டும் என்பதில்லை. மக்கள் அறிவியலும் ‘பேரளவு அறிவியலாக’ இருக்கலாம். உடனடிப் பயன்பாடு அற்ற அடிப்படை அறிவியலும் (Basic Science) ’சிறிய அறிவியலாக’ இருக்கவியலும். இரண்டு வகையான அறிவியலும் தேவை என்றுதான் நான் கூறுவேன். மக்களின் வாழ்க்கையை உடனடியாக இலகுவாக்கும் அறிவியல் தேவைதான். உலகைப் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை அறிவியலும் தேவைதான். துகள் இயற்பியல் ஆய்வுகளால் என்ன பயன் என்று கேட்டால் என்னிடம் ஒரு வழக்கமான பதிலுள்ளது. அதைத்தான் சொல்வேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு மின்ணணு கண்டுபிடிக்கப்பட்டபோது அதனால் என்ன பயன் என்பது அன்றைக்கு யாருக்கும் தெரியாது. மின்ணணு என்று ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவ்வளவுதான். ஆனால் இன்றைக்கு மின்ணணுவியல் இல்லாமல் நீங்கள் வாழமுடியாது எனும் நிலை. இந்த உரையாடலை நீங்கள் ஒரு மின்ணணுக் கருவி கொண்டுதான் பதிவு செய்துகொண்டிருக்கின்றீர்கள். எனவே எல்லாக் கண்டுபிடிப்புகளும் தமது பயன்பாட்டை ஒரு நாள் அடையும். அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்பு ஒவ்வொன்றையும் பயன்படுத்த தொழில்நுட்பமும் பொறியியலும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

சிலசமயம் நல்ல அறிவியலில் இருந்து மோசமான தொழில்நுட்பம் உருவாகலாம். நாம் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் அறிவியல் என்ற பதத்தால் தொழில்நுட்பத்தையும் சேர்த்து நீங்கள் பேசுகின்றீர்கள் என்றால் உண்மைதான். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ’சிறிய அறிவியல்’, ‘சிறிய தொழில்நுட்பம்’ ஆகியவற்றைப் பிரபலமாக்க பெரும்பணியாற்றியுள்ளது. உதாரணமாக கைப்பம்பு (HandPump). கிராமப்புறங்களில் வீட்டின் தேவைக்கு நீர் கொண்டுவருவது பெண்களின் வேலையாகத்தானே உள்ளது. ஒரு கைப்பம்பு அவர்களது வேலைப்பளுவை எந்த அளவுக்குச் சுலபமாக்கும்? இதுபோன்ற பயன்பாட்டு அறிவியலும் தேவை என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை விட அந்நியோன்னியமாக உணர்ந்தவர்கள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை அறிவியல் ஆய்வு செய்யும் ஒருவரை நீ ஏன் அந்தவகை அறிவியலில் ஆய்வு செய்யவில்லை என்று கேட்பது, ஒரு நெசவாளரை, நீ ஏன் காலணிகளைச் செய்யவில்லை என்றோ அல்லது காலணிகள் செய்பவரை நீ ஏன் நெசவு செய்யவில்லை என்றோ கேட்பது போன்றது. ஒரு அறிவியல் புலத்தில் பயிற்சி பெற்றவர்கள் அந்த அறிவியல் புலத்தில் ஆய்வு செய்வது என்பதுதான் நடைமுறை சாத்தியம். ஆனால் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்ன? அது எதற்கு எந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விவாதிக்கலாம். என்னைப் பொறுத்தவரை எந்தவொரு புலத்தில் நடக்கும் ஆய்வும் நாம் இந்த உலகைப் புரித்துகொள்ள உதவுவதுதான். அந்தப் புரிதல் சரியான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வழிசெய்யும். இதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. புதிய அறிவியல் இல்லாமல் புதிய தொழில்நுட்பம் இல்லை.

ஐ.என்.ஓ க்கு செல்லும் நிதி என்பது அறிவியலுக்கு ஒதுக்கப்படும் நிதிதானே.

உண்மை. அது குறித்து நானே பேச விரும்புகின்றேன். நமது நாட்டில் அறிவியல் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி சற்றும் போதாதது. நாம் இன்னும் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும்; ஒதுக்க முடியும். கல்வியும் அறிவியலும் அக்கம் பக்கமாக கைகோர்த்துத்தான் வளர முடியும். ஏனென்றால் நல்ல கல்வி வளர்ச்சி இல்லாத இடத்தில் நல்ல அறிவியல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. நல்ல அறிவியல் இல்லாத இடத்தில் நல்ல தொழில்நுட்பம் சாத்தியம் இல்லை; இன்னும் சொல்லப்போனால் எந்த நல்ல விசயமும் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆய்வுத் தளத்தில் ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் கல்லூரி, பல்கலைக் கழகக் கல்வித் தளத்திற்கு அதிகம் நிதி ஒதுக்க வேண்டும்; கல்லூரி, பல்கலைக் கழக தளத்தில் ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் ஆரம்பப் பள்ளித் தளத்தில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு எனச் சொல்லும்போது நான் எல்லா ஆய்வுகளையும் சேர்த்துத்தான் சொல்லுகின்றேன். நான் துகள் இயற்பியல் ஆய்வை மட்டும் அல்லது அடிப்படை அறிவியல் ஆய்வை மட்டும் சொல்லவில்லை. துகள் அறிவியல் ஆய்வு கண்டென்ஸ்டு மேட்டர் ஆய்வைக் காட்டிலும் உயர்வானது என்றோ அல்லது வேறு எந்த ஆய்வைக் காட்டிலும் உயர்வானது என்றோ நான் சொல்லமாட்டேன். எல்லா ஆய்வுகளுக்கும் தேவையும் இடமும் இருக்கின்றது. அரசாங்கம் வெவ்வேறு துறைகளுக்கு மிகுந்த கவனத்துடன் சீர்தூக்கி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால் A க்கு எதிராக B என்பது சரியல்ல. ஐ.என். ஓ க்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அளித்தால் அது ஊரகத் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அளிக்கப்படும் என்பதற்கெல்லாம் உத்தரவாதமில்லை. அரசாங்கம் அந்த வகையில் இயங்கவில்லை. அறிவியலின் வேறு வேறு புலங்கள் ஒன்றுக்கொன்று எதிரிகள் அல்ல. நாம் அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனல் பலர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தமான எதார்த்தம். நாம் இன்று வசதியான இருக்கையில் அமர்ந்திருப்பதற்கு அந்தத் துறையில் நடைபெற்ற ஆய்வுகள்தான் காரணம். மக்களுக்கு வெவ்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. அவர்களது ஆர்வத்தை ஒட்டிய புலங்களில் அவர்களது ஆய்வுகளை நடத்த அனுமதிக்கவேண்டும். சில கண்டுபிடிப்புகளுக்கு உடனடியான பயன்பாடு இருக்கும். சில கண்டுபிடிப்புகளுக்கான பயன்பாடு எதார்த்தமாக கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் இரண்டும் அவசியமானவைதான். கடந்த சில ஆண்டுகளாக நான் அதிகம் பேசிவரும் விசயங்களில் இதுவும் ஒன்று. ஐ.என்.ஓ குறித்து அச்சம் கொண்டிருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம். மக்கள் தொழில்நுட்பம் குறித்து அச்சம்கொள்வதில்லை; ஆனால் அறிவியல் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

ஏனென்றால் சாதாரணமாக விஞ்ஞானிகள் தந்தக் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கின்றனர். பொது மக்களிடம் அவர்கள் பேசுவது என்பது இப்போது பல காலமாக நடைபெறவில்லை. மக்கள் செல்போன் குறித்து அச்சம் கொள்வதில்லை ஆனால் நியூட்ரினோ குறித்து அச்சம் கொள்கின்றனர். ஆனால் அவை சதாசர்வ காலமும் அவர்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் பல தூய சூழலியல்வாதிகள் அறிவியலுக்கு எதிரானவர்களாக மாறியுள்ளனர். நாம் பாதுகாக்க வேண்டியது குறித்து ஆழமான ஞானம் இல்லாது இருந்தால் நாம் முன்னுரிமைகள் குறித்து எப்படி சரியாக முடிவெடுக்க இயலும். அறிவியல்தான் எதைப் பாதுகாக்க வேண்டும்? எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதைக் கூற முடியும். அறிவியல் மட்டுமே எந்த தாவரங்களை எந்த விலங்குகளை பாதுகாக்க வேண்டும்? எப்படிப் பாதுகாக்க வேண்டும்? என்பதைக் கூறமுடியும். ஏனென்றால் எந்தவகையான வாழ்விடம் (Habitat) ஓர் அருகிவரும் விலங்கினத்திற்கு பாதுகாப்பிற்கு அவசியம் என்பதை அறிவியல்தான் சரியாகக் கூறமுடியும். பொதுவாக மக்கள் அதிகம் மரம் நடுவது பற்றிப் பேசுகின்றனர். அது பொதுவாகச் சரிதான். ஆனால் சில உயிரினங்களுக்கு பரந்த திறந்த புல்வெளிப்பரப்பு (Savana – Open Grass Land) அவசியம். அந்த உயிரினங்களுக்கு அடர்ந்த மரங்கள் ஏற்ற சூழல் இல்லை. மரங்களை நடுவது அவை அருகி ஒழிவதைத் துரிதப்படுத்திவிடும். சரியான அறிவியல் புரிதல் இல்லையென்றால் சரியான உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கமுடியாது. ஆக உங்களுக்குச் சூழல் குறித்த அக்கறை இருந்தால் நீங்கள் அறிவியல் குறித்து அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும். உங்கள் தகவலும் தரவுகளும் அறிவியலில் இருந்து வரவேண்டும். ஒரு சூழலியல் செயல்பாட்டாளர் அறிவியல் எதிர்ப்பாளராக இருக்க இயலாது. அது நீண்டகால நோக்கில் நல்லதல்ல. அறிவியல் பிரச்சாரம் என்பது பெருமளவில் நடைபெறவேண்டிய தேவை உள்ளது. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் நாங்கள் வெகுகாலமாக உணர்ந்தவர்களாகவே உள்ளோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீண்டகாலமாக அறிவியலை பரந்துபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்யும் பெரும்பணியை செய்துவருகின்றது. அறிவியல் சமூகத்திலிருந்து தனித்திருக்க முடியாது. நமது அறிவியல் பணி என்பது சமூகத்தால் கொண்டுசெலுத்தப்படுவதாகவே உள்ளது. அறிவியலாளர்கள் தங்கள் அறிவியலைப் பரந்துபட்ட மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்தப் பணிக்கு தேவையான மேடையை அறிவியல் வல்லுனர்களுக்கு வழங்குகின்றது.

ஒரு கடைசி கேள்வி. ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வு என்பது என்ன? அவர் தனது அறிவியல் ஆய்வைத் திறம்படச் செய்தால் அவர்கள் தங்கள் சமூகக் கடமையைச் செய்தவர்களாக ஆகமாட்டார்களா?

சமூகப் பொறுப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான். ஒருவர் விஞ்ஞானியோ இல்லையோ சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது அவசியம்தான். பெரும்பாலான நேரங்களில் நான் எனது அறிவியல் பணி குறித்துப் பேசுவதில்லை. நம் நாட்டில் மக்கள் மத்தியில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் அறிவியல் பதில் கூற முடியும் எனக் கருதுகின்றேன். மக்கள் இன்னும் அதிசயங்களில்(miracles) நம்பிக்கை உள்ளவர்களாகத்தானே இருக்கின்றனர். மறுபுறம் அறிவியலின் வியத்தகு வளர்ச்சி, வீச்சு காரணமாக அறிவியலால் எல்லாம் முடியும் எதுவும் சாத்தியம் எனும் நம்பிக்கையும் இருக்கின்றது. எனது வீட்டு வேலைகளுக்கு உதவிக்கிருக்கும் பெண்மணி புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் வசதி இருப்பதாக நம்புகின்றார். எனவே இன்றைய அறிவியலுக்கு எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதையும் விஞ்ஞானிகள் பொதுமக்களிடம் விளக்க வேண்டும். இது போன்ற பணிகளில் கல்விப்புலங்களில் பணியாற்றுவோருக்கு கடமையுள்ளது. அவர்கள் சிறப்பாக எடுத்துரைக்க முடியும் எனக் கருதுகின்றேன். பொது மக்களின் நம்பிக்கையைப்பெற்ற விஞ்ஞானிகளின் தேவை இருக்கின்றது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்களுக்கு அந்த ஆளுமையும் ஏற்பும் இருந்தது. அவர் கூறினால் அது சரியாக இருக்கும் என மக்கள் நம்பினர். அவரது மறைவிற்குப் பிறகு அவர் போன்ற ஆளுமை நம் மத்தியில் இல்லை. அவர் போன்ற ஆளுமைகளின் தேவை உள்ளது. பொது மக்களுக்கு அறிவியல் குறித்து சில அவநம்பிக்கை உள்ளது. விஞ்ஞானிகள் அது குறித்து அவர்களிடம் உரையாட வேண்டும். அவர்களது சந்தேகங்களைப் போக்க வேண்டும். அவர்களது அச்சத்திற்குப் பதில் கூற வேண்டும். இன்றைக்கு மரபணுவியல் குறித்து, செயற்கை ஞானம் (Artificial Intelligence) குறித்து, அறிவியலின் அறம் குறித்து இன்னும் பல்வேறு அறிவியல் விசயங்கள் குறித்து கேள்விகள் இருக்கின்றன. இனி வரும் காலத்தில் அறிவியல் சூழலை மட்டுமல்லாமல் மானுட சமூகத்தின் தினசரி வாழ்க்கையையும் அதிகம் பாதிக்கப் போகின்றது. விஞ்ஞானிகள் பொது மக்களோடு தொடர்ச்சியாக உரையாட வேண்டும் பதில் சொல்ல வேண்டும். இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் பொதுமக்களிடம் உரையாட முன்வரவேண்டும்.

II

செந்தர மாதிரி (Standard Model) மற்றும்
டாக்டர் இந்துமதி அவர்களது ஆய்வுகள் குறித்து

 

டாக்டர். சுபஸ்ரீ தேசிகன் : செந்தரமாதிரி என்றால் என்ன? துகள் இயற்பியல் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?

மின்ணணு எனப்படும் எலக்ட்ரான் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குவார்க்குகள் போன்ற பல அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குவார்க்குகள் தாம் புரோட்டான், நியூட்ரான், மியூவான் (மின்னணுவின் நிறை மிகுந்த பங்காளி) ஆகியவற்றின் கட்டுப் பொருள். இந்த அடிப்படைத் துகள்கள் மின்காந்த இடையாடல், வன் இடையாடல், மென் இடையாடல் ஆகியவற்றில் வெவ்வேறுவிதமாக இடையாடுகின்றன. மின்காந்த விசை என்பதை நாம் வெகுகாலம் முன்பிருந்தே அறிவோம். வன்விசை என்பதே அணுக்கருவிற்குள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒன்றாகப் பிணைத்து வைக்கின்றது. மென்விசையை எல்லா துகள்களும் எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக சூரியன் தகிப்பது மென்விசை காரணமாகத்தான்.

குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைக்கு நமக்கு இருக்கும் புரிதல் இந்த இடையீடுகள் குவார்க்குகள் அல்லாத வேறுவகை  துகள்களால் கொண்டுசெலுத்தப்படுகின்றன. போட்டான், குளுவான், W, Z போசான்கள் ஆகியவை இந்தத் துகள்கள். இதை நாம் ஒருவிதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்றோடொன்று மோதும் துகள்கள் ஆற்றலோடும் உந்தத்தோடும் (momentum)  மோதுகின்றன என்று கூறுகின்றது. குவாண்டம் கோட்பாடுகளின்படி துகள்கள் உண்மையில் ஒன்றோடொன்று மோதுவதில்லை. அவை ஊடாளும் (mediating)  துகள்களை பரிமாறிக்கொள்கின்றன. அதன் மூலம் ஈர்ப்பையோ விலக்கலையோ எதிர்கொள்கின்றன. துகள்களின் பண்புகளையும் அவற்றின் இடையாடல்களையும் விளக்கும் கோட்பாட்டிற்குத்தான் செந்தர மாதிரி (Standarad Model) என்பது பெயர். இது நாம் இன்றுவரை அறிந்தது அனைத்தையும் அடக்கி எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இதில் ஈர்ப்புவிசை மட்டும் அடங்கவில்லை. ஏனென்றால் அணு உட்துகள்களின் அளவில் ஈர்ப்புவிசை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மெல்லிய அளவுகளில் உள்ளது. மேலும் ஈர்ப்புவிசை குறித்த குவாண்டம் கோட்பாடு இன்னமும் உருவாக்கப்படவில்லை.

உங்களது பணி எந்தவகையில் செந்தர மாதிரியோடு சம்பந்தப்பட்டது?

நான் பெரும்பாலும் நியூட்ரினோக்கள் மற்றும் அவற்றின்பண்புகள் குறித்து ஆய்வு செய்கின்றேன். நியூட்ரினோக்களின் பிரத்யேகப் பண்பு அவை மின்காந்த விசையோடோ அல்லது வன்விசையோடோ ஊடாடுவது இல்லை. ஏனென்றால் அவற்றின் மின்னேற்றம் பூஜ்யம் மற்றும் அவை அணுக்கருவின் பகுதி அல்ல. அவை மென்விசையோடு மட்டுமே ஊடாடுகின்றன. அதனால் நாம் இன்னும் அதிகம் புரிந்துகொள்ளாத மென்விசை குறித்த புரிதலுக்கு உதவக்கூடிய நுட்ப உணரிகளாக (Sensitive Probes)  இருக்கின்றன. நியூட்ரினோக்களைப் பற்றி ஆய்வுசெய்துள்ள விஞ்ஞானிகள் அவை பல தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்து கூறியுள்ளனர். எனவே அவை குறித்த ஆய்வுப் புலம் மிகவும் உத்வேகமடைந்துள்ளது. இந்த பண்புகளில் சிலவற்றைக் குறித்துத்தான் நாம் ஐ.என்.ஓ வில் ஆய்வு செய்யவிருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கையைக் கூறவேண்டும். பலரும் நியூட்ரான்களையும் நியூட்ரினோக்களையும் போட்டுக் குழப்பிக்கொள்கின்றனர். என்வே அவர்கள் நியூட்ரினோவையும் கதிர்வீச்சையும் சம்பந்தப்படுத்தி அச்சம் கொள்கின்றனர். ஆனல் இதில் உண்மையில்லை.

நான் வன்விசை குறித்தும் சில ஆய்வுகள் செய்துள்ளேன். தொடர்ந்தும் செய்து வருகின்றேன். நான் முன்னரே கூறியபடி புரோட்டான்கள் குவார்க்குகளால் ஆனவை. குவார்க்குகள் ஏதேனும் ஒரு இடையாடலில் உருவானால் அவை குவார்க்குகளாக தொடர்வது இல்லை. அவை புரோட்டான்களாக, நியூட்ரான்களாக அல்லது அவை போன்ற மற்றொரு துகளான ஹாட்ரானாக இணைந்து விடுகின்றன. ஹாட்ரானின் பண்புகளுக்கும் குவார்க்குகளின் பண்புகளுக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பதை ஆய்வு செய்வதும் நான் பணியாற்றும் ஒரு தளமாகும்.

உங்களது இந்த ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன? அவை பெரிய வினாக்களில் எப்படிப் பொருந்துகின்றன? உங்கள் ஆய்வுகளில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் என்ன எனச் சொல்ல முடியுமா?

மீண்டும் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நான் ஒரு கோட்பாட்டு இயற்பியல் ஆய்வாளர். ஆனால் நான் பரிசோதனை அடிப்படையிலான இயற்பியல் வல்லுனர்களோடு இணைந்து பணியாற்றுகின்றேன். புதிய கோட்பாடுகள் பரிசோதனையின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை சரியென ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் பரிசோதனைகள் பல புதிய முடிவுகளையும் தரவுகளையும் தரும். அவற்றை கோட்பாடுகளோடு ஒப்பிடுவது புதிய புரிதலைத் தரும். நியூட்ரினோ இயற்பியல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

புரோட்டான், நியூட்ரான் இவற்றின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் நான் எப்போதும் ஆர்வத்துடன் இருந்துள்ளேன். நமது உடல் உட்பட எல்லாம் புரோட்டான், நியூட்ரான், மின்னணுக்களால் ஆனதுதானே? எனவே அப்படி ஓர் ஆர்வம் இருப்பது இயல்புதானே? நியூட்ரினோக்களைப் பொருத்தவரை அவைதான் இந்த பேரண்டத்தில் இருக்கும் துகள்களில் போட்டானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருப்பவை. அவை இந்தப் பேரண்டம் எப்படி உருவானது? எப்படிப் பரிணமித்தது? என்பதைப் புரிந்துகொள்வதற்கான சாளரம் எனக் கருதப்படுகின்றன. நான் நியூட்ரினோவின் ஒரு சிறு அம்சம் குறித்துதான் ஆய்வுசெய்கின்றேன். ஆனால் இந்த புரிந்துகொள்ளச் சிரமம் அளிப்பதாய் எளிதில் வழுவிச் செல்லும் பண்புகொண்ட துகளைப் பற்றிப் புரிந்துகொள்ள நமதுநாட்டையும் தாண்டி சர்வதேச அளவில் மானுடம் நடத்தும் முயற்சியில் நானும் ஒர் அங்கம் என்பது எனக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக உள்ளது. இந்தப் பேரண்டத்தில் பல பண்புகள் நியூட்ரினோக்களால் உருவாக்கப்படுபவை என்பதை நாம் ஏற்கனவே யூகித்துள்ளோம். எனவே அவை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு உலகம் தழுவிய பெருமுயற்சி நடைபெற்று வருகின்றது. நியூட்ரினோவின் பண்புகளை அறிந்துகொள்ளும் முயற்சியில் நாங்கள் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். முக்கியமாக டாக்டர். எம்.வி.என் மூர்த்தி அவர்களோடு இணைந்து நியூட்ரினோவின் ஒரு முக்கியப் பண்பை (Mass Hierarchy – நிறைப் படிநிலை) அறிந்துகொள்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு சில வழிமுறைகளை வகுத்து அளித்துள்ளேன். ஐ.என்.ஓ ஆய்வுக்கூடத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று இந்தப் பண்பை பரிசோதனைகள் மூலம் அறிவது. எனவேதான் இந்தியாவிலேயே இது போன்ற பரிசோதனை இயற்பியல் நடத்தப்படுவதில் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது.

நாம் நம்முடைய ஆய்வுக்கூடங்களை நாமே கட்டி அமைத்தால் நமது பரிசோதனைகளை நாமே வடிவமைத்து நடத்தினால் நமது அறிவியல் நோக்கை, போக்கை நாமே தீர்மானிக்கலாம். நாம் நமது எண்ணங்களுக்கும் தரவுகளுக்கும் பிற நாட்டு விஞ்ஞானிகளின் நல்லுள்ளங்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அப்படிக் கூறும் அதே நேரத்தில் எல்லா அறிவியலும் உலகம் தழுவியதுதான். கொண்டும் கொடுத்தும்தான் அறிவியல் முன்னேற்றங்கள் சாத்தியமாகின்றன. ஆனால் அது நடைபெற நம்மிடம் நமது ஆய்வுக்கூடங்களும் நமது பரிசோதனைகளை நடத்தும் வலுவும் இருக்க வேண்டும். அது நம்மை தனிமைப் படுத்திக்கொள்வதற்கு இல்லை.

கடைசியாக நான் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகின்றேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகளின் உண்மையை அறியும் ஆவலால் மட்டுமே மின்ணணு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைக்கு அதற்கு எந்தப் பயன்பாடும் இல்லை. ஆனால் இன்று மின்னணுவியல் இல்லாமல் நாம் வாழமுடியாது. எனவே பயன்பாட்டுத் தொழில்நுட்பம் உருவாக காலம் ஆகலாம். ஆனால் அடிப்படை அறிவியல் ஆய்வு தொடர்ந்து நடக்க வேண்டும். எனென்றால் எந்தவொரு தொழில்நுட்பமும் அதன் அடிப்படையான அறிவியலில் புரிதலும் முன்னேற்றமும் இல்லாமல் வளர முடியாது. இன்றைக்குப் பலரும் மிக ஆர்வத்துடன் தொழில்நுட்பத்தை ஆரத்தழுவுகின்றனர்; ஆனால் அறிவியல் குறித்து அச்சம் கொள்கின்றனர்.

முந்தைய கேள்விக்கு ஒரு பின்னிணைப்பு. உங்கள் பணியின் உச்சம் என எதைச் சொல்வீர்கள். உங்கள் துறையின் பெரும் வினாக்களுக்கு அருகில் நீங்கள் வந்தது எப்போது?

நான் ஒரு சாதாரணமான இயற்பியல் ஆய்வாளர்தான். அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. நான் தனித்துத் தெரிவதற்கு காரணம் என்று எதையேனும் கூறவேண்டுமென்றால் அது முன்னரே நான் கூறியபடி சூழல் எனக்கு அளித்த வாய்ப்புகளால்தான். பரந்துபட்ட மக்களிடமும் குறிப்பாக மாணவர்களிடமும் அறிவியல் குறித்தும் அறிவியல் சிந்தனை குறித்தும் பேசுவதற்கு எனக்கு இருக்கும் ஆர்வமும் அதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளும்தான் என்பேன். ஒரு விசயத்தை நான் தயக்கமில்லாமல் சொல்ல முடியும். நான் ஒரு புதிய கணக்கீடு செய்யும்போது ஒரு புதிய விடையை அடையும்போது அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது அளிக்கும் படைப்பு உணர்வும் மகிழ்ச்சியும் ஈடு இணையற்றது. அதுதான் ஒரு விஞ்ஞானியாக இருப்பதில் கிடைக்கும் உச்சபட்ச சாதனை உணர்வு என்பதை என் சக விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகின்றேன்.

=

 

Related posts

Leave a Comment