You are here
நிகழ்வு 

40ம் ஆண்டில் கவிதா பதிப்பகம்

சந்திப்பு: சூரியசந்திரன்

தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘கவிதா பப்ளிகேஷன்’ தனது 40ஆவது ஆண்டு விழாவை வியக்கத்தக்க வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆளுமைகள், தலைவர்கள் என ஏராளமானோரின் புத்தகங்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பதிப்பக நூல்கள் மத்திய, மாநில அரசுகளின் முக்கியமாமனப் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பதிப்பகத்தின் நிறுவனர் திரு. சேது.சொக்கலிங்கம், தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகள் பலரை ஈன்றளித்த தேவகோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை சேதுராமன், பொதுவுடைமைச் சிந்தனைகளால் கவரப்பட்டவர், ‘பாரதி தமிழ்ச் சங்க” த்தின் நிறுவனச் செயலாளர். (56 ஆண்டுகளாக இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது ) அந்த இலக்கியச் சங்க நிகழ்ச்சிக்கு ஜீவா போன்ற தோழர்கள் கலந்து கொள்வார்கள். தோழர் தா.பாண்டியனுக்கு முதல் மேடையாக அமைந்தது அந்தச் சங்கம்தான் என்ற சிறப்பிற்குரியது.

தந்தை சேதுராமனின் நண்பர் ‘வணங்காமுடி’ சொக்கலிக்கம், சென்னை, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் ‘பாரதம் அச்சகம்’ நடத்திக் கொண்டிருந்தார். அந்த அச்சகத்தில்தான் சேது. சொக்கலிங்கம் தனது பதிப்புலக வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு 18 வயதிருக்கலாம். அந்த அச்சகத்திற்கு சாண்டில்யன், தாமரைமணாளன் போன்ற சில எழுத்தாளர்களும், தோழர் சி.ஏ.பாலன் போன்ற சில தலைவர்களும் வருவார்களாம். அவர்களைப் பார்ப்பது, பழகுவது அந்த சிறு வயதில் இவருக்குப் பிரமிப்பான விசயமாக இருந்திருக்கிறது. அந்த அச்சகம் இருந்த தெருவில் குடியிருந்த தோழர் கே.பாலதண்டாயுதம் அந்த வழியாக நடந்து போய்வருவதை வியப்பாக பார்த்து ரசிப்பாராம். இந்த அச்சகம் இவருக்கு அச்சுத் தொழிலைக் கற்பதற்கான கல்விச்சாலையாக அமைந்திருக்கிறது. எழுத்தாளர் தாமரைமணாளனின் முதல் புத்தகம் அந்த அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டதாம். அப்புத்தகத்திற்கு இவர்தான் முழுமையாக பிழைதிருத்தம் செய்திருக்கிறார்.

சில வருடங்களில் அந்த அச்சகத்தை விற்பது போன்ற சூழல் ஏற்பட்டபோது, பாண்டி பஜாரில் இருந்த ‘ராதா பதிப்பகம்’ இவரை மேலாளராக அமர்த்திக்கொண்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பகம் அது. இப்பதிப்பகத்தின் மூலமாக பதிப்பக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட இவர், 1974ல் தனது நண்பர் சாமிநாதனுடன் இணைந்து ‘தமிழ்த்தாய்ப் பதிப்பக’த்தைத் தொடங்கியிருக்கிறார்.

இருவரும், வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு, சில பதிப்பகங்களில் 20 சதவிகித கழிவுக்கு புத்தகங்களை வாங்கி, 10 சதவிகித கழிவுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விற்பது, கிடைக்கும் 10 சதவிகித லாபத்தை இருவரும் பிரித்துக் கொள்வார்களாம்.

1975ல் ஜானகியைத் திருமணம் செய்துகொண்டார் சொக்கலிங்கம். அடுத்த ஆண்டு (1976) கவிதா எனும் குழந்தையை திருமதி. ஜானகி சொக்கலிங்கம் பெற்றெடுத்தார் என்றால், அதே வருடத்தில் சேது.சொக்கலிங்கத்தால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை என்றுதான் ‘கவிதா பப்ளிகேஷ’னைச் சொல்லவேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இப்பதிப்பகத்தை அவர் மிகுந்த ஈடுபாட்டோடும், இனம்புரியாத ஈர்ப்போடும், நெகிழ்ச்சியோடும், கடமையுணர்ச்சியோடும் வளர்த்து வந்திருக்கிறார். இப்போது 40ஆண்டுக்கான விழாவெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அனுபவங்கள் இனி அவரின் வாய்மொழியிலேயே…

“கவிதா பதிப்பகத்தின் முதல் நூலாக ‘”வரலாற்று நாயகன்’ என்ற எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூலை” வெளியிட்டேன். திருமூலர் என்ற புனைபெயரில் லட்சுமி நாராயணன் எழுதிய புத்தகம் அது. அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ‘மன்றம்’ பத்திரிகை ஆசிரியர் இராம.வெள்ளையன் மூலமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்துக் கொடுத்தேன். அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்.

தொடக்கத்தில், முத்துக்கிருஷ்ணன் தெருவில் சின்ன அறையில் இருந்தோம். அப்போது பள்ளிக்கூடம், நூலகம் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல புத்தகங்களை வெளியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. பிறகு, நவீன இலக்கியங்கள் சார்ந்து எங்கள் பயணம் அமைந்தது. அப்போது பிரபல எழுத்தாளர்களுடன் நட்பு ரீதியான அணுகுமுறை ஏற்பட்டிருந்தது. அதன் மூலமாக சில எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டோம்.

கவிதா பதிப்பகத்தின் வெள்ளி விழாவில், குறிப்பிடும்படியாக ஒரு பதிவை ஏற்படுத்த விரும்பினேன். எழுத்தாளர் சா.கந்தசாமியிடம் ஆலோசனை கேட்டேன். ஜெயகாந்தனின் சிறுகதைகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடலாம் என அவர் ஆலோசனை வழங்கினார். ஜெயகாந்தனைச் சந்தித்தோம். அப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான முனைப்பில் இருந்தார். சென்றுவந்தபின் இதுபற்றிப் பேசலாம் என்று கூறிச் சென்றார். அவர் வந்தபிறகு மீண்டும் சந்தித்தோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் அனுமதி வழங்கினார்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் அனைத்தும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு, 800 ரூபாய் விலையுள்ள இரண்டு தொகுப்புகளை 600 ரூபாய்க்கு முன்பதிவுத் திட்டத்தில் வெளியிட்டோம். வாசகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. பிலிம் சேம்பரில் நடைபெற்ற அதற்கான விழாவிலேயே சுமார் 400 பிரதிகளுக்கு மேல் பதிவாகிவிட்டன.

இன்றைக்கு பெரும்பாலான பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு, தொகுதிகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றால், அதற்கு முதற்காரணமாக அமைந்தது எங்களின் இந்த நூல்கள்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

ஜெயகாந்தன் ஞானபீடம் விருது வாங்கும்போதும், பத்மபூஷன் விருது வாங்கும்போதும் அவருடன் டெல்லிக்குச் சென்று வந்தேன். குடியரசுத் தலைவர் மாளிகையில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தோம்.

ஜெயகாந்தனைத் தொடர்ந்து பிரபஞ்சன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, மாலன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறோம்.

கடந்த 40 ஆண்டுகளில் ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறோம். சமூகத்துக்கு விரோதமான எந்தப் புத்தகத்தையும் நாங்கள் வெளியிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிறோம்.

2013ல் உலகப் ‘புத்தக தினம்’ எங்கள் அலுவலகத்திலேயே நடத்தினோம். முதல் விற்பனையை இளையராஜா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகளெல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சந்தித்து மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பாக அவ்விழா அமைந்ததாக அவர்களே குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஜெயகாந்தன் கலந்துகொண்டு பேசிய கடைசி நிகழ்ச்சி அதுதான். மூன்று நாட்கள் அந்த விழாவை நடத்தினோம். 25 சதவிகிதம் கழிவு வழங்கினோம்.

புத்தகத் தொழிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பதிப்பாளர்கள் நிறைய போராட வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சியும், கணினியும், இணையமும் வந்தபோது புத்தகத் தொழில் நசிந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கும் வந்தது உண்மைதான். ஆனால், உண்மையில் இவையெல்லாம் இப்போது புத்தகத் தொழிலுக்கு உதவிசெய்வதாகவே அமைந்திருக்கிறது. எங்களின் பெரும்பான்மையான விற்பனை இணையம் மூலமாகவே நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் வாங்கி விருப்பமுடன் படிக்கிறார்கள். படித்துக் கருத்து சொல்கிறார்கள்.

வாசகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதை புத்தகக் கண்காட்சிகள் மெய்ப்பித்து வருகின்றன. வாசகர்களிடம் இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் உள்ள விசயங்களைப் பற்றி பேசுவார்கள். இப்போது புத்தகத் தயாரிப்பு, காகிதம், அச்சு, கட்டுமானம் பற்றியெல்லாம் கருத்து சொல்கிற அளவுக்கு வாசகத் தரம் வளர்ந்திருக்கிறது.

பதிப்புத் தொழிலை, மற்ற தொழில்களோடு ஒப்பிடுகையில் லாபம் குறைவான தொழில்தான். ஆனால், மரியாதைகரமான தொழில். எனக்கு குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றால், ஒரு பதிப்பாளராக கிடைத்ததுதான். கவிஞர் சிற்பி மூலமாக அப்துல் கலாமிடம் திருக்குறளுக்கு உரை எழுதித் தருமாறு கேட்டோம். ஆனால், காமத்துப் பாலுக்கு என்னால் எப்படி எழுதமுடியும் என்று அவர் யோசித்தார். அந்த முயற்சி நின்றுவிட்டது. பிறகு ஓலைச்சுவடி வடிவில் ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அதை அவருக்கு அனுப்பி வைத்தோம். உடனே அந்த முயற்சியைப் பாராட்டி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதையும் அந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

எங்களின் முன்னோடிகளான சின்ன அண்ணாமலை, வை.கோவிந்தன் போன்றவர்கள் இந்தப் பதிப்புத் தொழிலில் மிகவும் நஷ்டப்பட்டார்கள். மலிவுப் பதிப்பு என்பதைக் கொண்டுவந்தவரே வை.கோவிந்தன்தான். அவரின் மகன் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “எங்கள் அப்பா பதிப்புத் தொழில் செய்யாமல் அந்தப் பணத்தை வைத்திருந்தாலே நாங்கள் நல்லவிதமாக வாழ்ந்திருப்போம்’’ என்பது போல கூறியிருந்தார். நாங்கள் எல்லாம் சேர்ந்து அவர் பெயரில் ஒரு பெரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். எங்களின் முன்னோடிகளின் வாரிசுகளுக்கு நாங்கள் உதவி செய்கிற நிலைமைக்கு இப்போது பதிப்புத் தொழில் வளர்ந்திருக்கிறது. எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இது.

எனது பதிப்புப்பணிக்கு உதவியாக எனது மகள் கவிதா இருக்கிறார் என்பதையும் முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும்.

Related posts

Leave a Comment